Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கட்டுரை

இயலாமையின் வெளிப்பாடே இணைப்பு பேச்சு!
பழ. நெடுமாறன்


கடந்த 30 ஆம் தேதியன்று டில்லியில் நடைபெற்ற தேசிய வளர்ச்சிக்குழுவின் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் திரு. மு. கருணாநிதி அவர்கள் பேசும்போது "மாநிலங்களுக்கிடையிலான நதிகளை நிர்வகிப்பதற்கான தற்போதைய நிறுவன நடைமுறை செயலிழந்து விட்டது. புதிய நிறுவன நடைமுறையை ஏற்படுத்தாவிடில் நதிநீர் பங்கீட்டுப் பிரச்சினை என்பது தேசிய ஒருமைப்பாட்டிற்கு அச்சுறுத்தலாக அமைந்துவிடக்கூடும். எனவே நதிகளை தேசிய மயமாக்குவது மட்டுமே இச்சிக்கலுக்கு நீண்ட காலத் தீர்வாக அமையும். மேலும் தென்னக நதிகளில் இருந்து தொடங்கி நதிநீர் இணைப்புகளுக்கான திட்டத்தினை கால தாமதம் இன்றி உடனடியாக நிறைவேற்றவேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.

Pazha.Nedumaran ஜூன் 3ம் தேதி அவருடைய பிறந்தநாளையொட்டிய செய்தியிலும் நதிகளின் இணைப்புத் திட்டத்தை வலியுறுத்தியிருக்கிறார். இந்தியாவிலுள்ள நதிகளை இணைப்பது குறிப்பாக தென்னிந்தியாவில் உள்ள நதிகளை இணைப்பதால் மிகப்பெரிய அளவுக்கு வேளாண்மைத் துறையில் மட்டுமல்ல ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சி என்பது விரைவாக இருக்கும் என்பதில் யாருக்கும் அய்யமில்லை. ஆனால் நதிகள் இணைப்புப் பற்றிய கடந்த கால வரலாறு என்பது நமக்கு நம்பிக்கை அளிப்பதாக அறவேயில்லை.

இந்தியாவிலுள்ள நதிகளை இணைப்பது குறித்து கடந்த 163 ஆண்டுகாலமாக தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் இதற்கான திட்டம் ஏட்டளவில் உருவாக்கப்பட்டது.

1834ஆம் ஆண்டு ஆங்கிலேயப் பொறியாளரான சர். ஆர்தர் காட்டன் கங்கை-காவிரி இணைப்புத் திட்டத்தைத் தயாரித்தார். மேட்டூர் அணை உட்பட பல பெரிய அணைகளை இந்தியாவில் எழுப்பியவர் இவரே. ஆனாலும் வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் இத்திட்டம் செயல்வடிவம் பெறவேயில்லை.

நாடு சுதந்திரம் பெற்ற பிறகு இதற்கான திட்டவட்டமான முழுமையான முயற்சி என்பது - 1971-72ஆம் ஆண்டில் பிரதமர் இந்திராவின் அமைச்சரவையில் மத்திய நீர்வளத்துறை அமைச்சராக இருந்த டாக்டர் கே.எல். இராவ் அவர்கள் காலத்தில் செயல்திட்டத்திற்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டது. உலகின் மிகச்சிறந்த நீரியல் அறிஞரான அவர் இத்திட்டத்தை ஐ.நா. பேரவையின் வளர்ச்சிக் கழகத்திற்கு அனுப்பினார். இத்திட்டம் மிகச்சிறந்த திட்டம் என்று அவர்களும் இதற்குப் பாராட்டுத் தெரிவித்தனர். ஆனாலும் அவரின் பதவிக் காலத்தில் இத்திட்டம் நிறைவேற்றப்படுவதற்கான அறிகுறியே இல்லாமல் போயிற்று.

1982ஆம் ஆண்டு தேசிய நீர்வள மேம்பாட்டு ஆய்வு நிலையம் என்ற பெயரில் இந்திய அரசு ஓர் அமைப்பை ஏற்படுத்திற்று. இந்தியாவில் உள்ள பல்வேறு நதிகளை இணைப்பதற்கான வரைவுத் திட்டத்தை இந்த அமைப்பு தீவிர ஆய்வுக்குப் பின் உருவாக்கிற்று.

1. மகாநதி-கோதாவரி இணைப்பு
2. பார்-தப்தி இணைப்பு
3. கேன்-பேட்லா இணைப்பு
4. கோதாவரி-கிருஷ்ணா இணைப்பு
5. மேற்கு நதிகள்-கிழக்கு நதிகள் இணைப்பு

திட்டங்கள் தயாரிக்கப்பட்டனவே தவிர அவைகளை நிறைவேற்றுவதற்கான எத்தகைய முயற்சியையும் மத்திய அரசு மேற்கொள்ளவில்லை.

2001ஆம் ஆண்டில் பிரதமர் வாஜ்பாய் கங்கை-காவிரி இணைப்புப் பற்றி ஆய்வு செய்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஒரு குழுவை நியமித்தார். இக்குழுவின் தலைவராக முன்னாள் மத்திய அமைச்சர் சுரேஷ் பாபு நியமிக்கப்பட்டார். இந்தியா பூராவும் இந்தக் குழு சுற்றுப்பயணம் செய்து மாநில அரசுகள், தனியார் அமைப்புகள், பொதுமக்கள் ஆகியோரைக் கலந்து திட்டமொன்றைத் தயாரித்தது.

ஆனால் வாஜ்பாய் அரசு பதவி விலகியபோது இத்திட்டமும் கிடப்பில் போடப்பட்டது. 1980ஆம் ஆண்டு வாக்கில் கங்கை-காவிரி இணைப்புத் திட்டத்திற்கு சுமார் 60 ஆயிரம் கோடி செலவு ஆகும் என்று மதிப்பிடப்பட்டது. இப்போது இந்த மதிப்பீடு இரு மடங்குக்கு மேல் உயர்ந்துவிட்டது.

இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கான நிதி ஆதாரம் இல்லை என்று கூறுவதைவிட அதற்கான மனத்திட்பம் மத்திய அரசுக்கு இல்லை என்றுதான் கூறவேண்டும்.

நீர் வளம் நிறைந்த மாநிலங்கள் தங்களின் மிகைநீரை நீர்ப்பற்றாக்குறை மாநிலங்களுக்குப் பகிர்ந்து கொடுக்க முன்வர மறுக்கிறார்கள். நதிகள் இணைப்புத் திட்டத்திற்கு இந்த மனப்போக்கு பெரும் எதிராக உள்ளது. ஒவ்வொரு மாநிலமும் தனது மாநிலத்தில் உற்பத்தியாகும் நீர் தனக்கு மட்டுமே சொந்தமானது. தனக்குப் போக எஞ்சிய நீரைத்தான் மற்ற மாநிலங்களுக்கு அளிக்க முடியும் என நினைக்கின்றது. அதைச் செயல்படுத்தவும் முனைகின்றன. பன்மாநிலங்களுக்கிடையே ஓடும் நதிகளின் நீரில் சம்பந்தப்பட்ட மாநிலங்கள் அத்தனைக்கும் உரிமை உண்டு. குறிப்பாக அந்நதிகளின் கீழ்ப்பகுதியில் உள்ள மாநிலங்களுக்கு அதிக உரிமைகள் உண்டு என்கிற இயற்கை நியதியையோ அல்லது சர்வதேச நடைமுறைகளையோ ஏற்றுக்கொள்வதற்கு இந்த மாநிலங்கள் கொஞ்சமும் தயாராக இல்லை. ஒருவகையான சுயநல இறையாண்மைக் கொள்கையை இம்மாநிலங்கள் கடைப்பிடிக்கின்றன. கூட்டாட்சி அரசியலுக்கு இந்த மனப்போக்கு முற்றிலும் எதிரானது என்பதை உணரவோ அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து கவலைப்படவோ இந்த மாநிலங்கள் தயாராக இல்லை.

இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களுக்கிடையே நதிநீர் சிக்கல்கள் இன்னமும் முழுமையாகத் தீர்க்கப்படாமல் உள்ளன.
தண்ணீர்ப் பற்றாக்குறை மாநிலமான தமிழகத்தில் ஓடிவரும் நதிகளான காவிரி, பாலாறு போன்றவை கர்நாடக மாநிலத்தில் உற்பத்தியாகின்றன. தென் மாவட்டங்களில் ஓடும் வைகை, கேரளத்தில் உள்ள முல்லைப் பெரியாறு அணை நீரை நம்பி உள்ளது.


காவிரி நதிநீர்ப் பிரச்சினை 40 ஆண்டுகாலமாக நீடிக்கிறது. உச்சநீதி மன்றம், நடுவர் மன்றம் ஆகியவை அளித்த தீர்ப்புகளை மதித்து நிறைவேற்றுவதற்குக் கர்நாடகம் பிடிவாதமாக மறுக்கிறது. இவ்வாறு மறுக்கும் கர்நாடகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுத்து தமிழகத்திற்கு நியாயம் வழங்க மத்திய அரசு தயங்குகிறது.

முல்லைப் பெரியாறு அணை நீரை 142 அடி உயர்த்தலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகுகூட அந்தத் தீர்ப்பை ஏற்கவோ மதிக்கவோ கேரளம் பிடிவாதமாக மறுக்கிறது. இப்பிரச்சினையில் மத்திய அரசின் போக்கு என்பது வேடிக்கை பார்ப்பதாக உள்ளது.

உச்சநீதிமன்றம், நடுவர்மன்றம் ஆகியவற்றின் தீர்ப்புகள் அரசியலமைப்புச் சட்டம் ஆகியவற்றை மதிக்க மறுக்கும் மாநிலங்கள் மீது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வழியே இல்லையா என்ற கேள்வி எழுகிறது. நமது அரசியல் சட்டத்தை உருவாக்கிய அறிஞர்களும் அச்சட்டத்தின் அடிப்படையில் பல்வேறு சட்டங்களை உருவாக்கியவர்களும் தொலைநோக்குப் பார்வையற்றவர்கள் அல்லர்.

இந்தியாவின் பிரதமராக ஜவஹர்லால் நேரு இருந்தபோது, பல மாநிலங்களுக்கிடையே ஓடும் நதிகளின் நீரைப் பகிர்ந்துகொள்வதில் சிக்கல் ஏற்படலாம் என்பதை உணர்ந்து 1956ஆம் ஆண்டு இரு சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றினார்கள்.

1. நதிநீர் தாவா சட்டம்.
2. நதிநீர் வாரியச் சட்டம்

மாநிலங்களுக்கிடையே எழும் நதிநீர்ப் பிரச்சினைகளை பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்ப்பதற்கு முடியாமல் போனால் நடுவர் மன்றத்தை அமைத்து அதன் தீர்ப்பைப் பெறுவதற்கு நதிநீர் தாவா சட்டம் வழிசெய்கிறது. நடுவர் மன்றத்தின் தீர்ப்பு மதிக்கப்படாமல் போனால் சம்பந்தப்பட்ட நதிநீரை ஆளுமை செய்வதற்காக நதிவாரியம் அமைப்பதற்கு இரண்டாவது சட்டம் வழிவகுக்கிறது.

இந்திய அரசியல் சட்டத்தின் 262ஆவது பிரிவுக்கு இணங்க இந்த நதிநீர் வாரியச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இச்சட்டத்தின் கீழ் பிரச்சினைக்குரிய நதிநீர் நிர்வாகத்தை ஏற்று நடத்த நதிநீர் வாரியம் ஒன்று அமைக்கப்படவேண்டும். ஆனால் இந்தச் சட்டத்தின் கீழ் கடந்த 51 ஆண்டுகாலமாக எந்த நதிநீர்ப் பிரச்சினையிலும் நதிநீர் வாரியம் அமைக்கப்படவில்லை. இதுவரை பதவியில் இருந்த மத்திய அரசுகள் எதுவும் இச்சட்டப்பிரிவைப் பயன்படுத்தத் துணியவில்லை. 1971ஆம் ஆண்டு முதல் மத்திய ஆட்சியில் எந்தக் கட்சி பதவியில் இருந்தாலும் அந்தக் கட்சியுடன் தி.மு.க.வோ, அல்லது அ.தி.மு.க.வோ தொடர்ந்து கூட்டணி வைத்துள்ளன. 1987ஆம் ஆண்டுக்குப்பிறகு மத்திய ஆட்சியில் தி.மு.க. அல்லது அ.தி.மு.க.வின் பிரதிநிதிகள் தொடர்ந்து அமைச்சர்களாகப் பதவி வகித்து வந்துள்ளனர். ஆனாலும் 1956ஆம் ஆண்டு நதிநீர் வாரிய சட்டத்தைப் பயன்படுத்தி காவிரிப் பிரச்சினையில் நதிநீர் வாரியம் அமைக்கவேண்டும் என்று வற்புறுத்திப் பெற இரு கழகங்களும் முற்றிலுமாகத் தவறிவிட்டன.

முல்லைப் பெரியாறு பிரச்சினையில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதிக்க கேரளம் மறுத்தபோது, அதை மத்திய அரசு கண்டிக்கவோ அல்லது வேறு நடவடிக்கை எடுக்கவோ முன்வரவில்லை. பாலாற்றில் சட்டவிரோதமான முறை யிலும் தமிழகத்தின் நலனுக்கு ஊறு விளை விக்கும் வகையிலும் அணைகட்டுவதற்கு ஆந்திர அரசு செய்யும் முயற்சிகளைத் தடுக்க மத்திய அரசு முன்வரவில்லை.

மேலே கண்ட 3 நதிநீர்ப் பிரச்சினைகளும் தமிழகத்தின் எதிர்காலத்தை மிகப்பெரிய அளவில் பாதிக்கப்போகும் பிரச்சினைகளாகும். இதற்காக மத்திய அரசை வற்புறுத்தியோ அல்லது போராடியோ நமது உரிமைகளை நிலைநாட்டவேண்டிய தமிழக அரசு பிரச்சினையைத் திசை திருப்பும் வகையில் திட்டமிட்டுச் செயல்பட்டு வருகிறது.

நதிகள் இணைப்புத் திட்டத்தை உடனடியாக எடுத்துக்கொள்ளவேண்டும் என்று அண்மையில் தில்லி சென்ற நமது முதலமைச்சர் பிரதமரிடம் வலியுறுத்தி இருக்கிறார். முற்றிலும் பொருத்தமற்ற வேளையில், பொருத்தமற்ற கோரிக்கையை வலியுறுத்துவது திட்டமிட்டுப் பிரச்சினையைத் திசை திருப்புவதாகும்.

நதிகள் இணைப்பு என்பது 163 ஆண்டுகாலமாக தொடர்ந்து பேசப்பட்டு வரும் ஒரு பிரச்சினையாகும். இது நிறைவேறுவதற்கான அறிகுறி நமது கண்களில் தென்படவேயில்லை. இன்னும் 100 ஆண்டுகள் கழித்தாலும் இத்திட்டம் நிறைவேறுமா என்பது ஐயத்திற்குரியது. அப்படியே நிறைவேற்றுவதற்கு முயற்சி செய்யப்பட்டாலும் அதற்குத் தேவையான நிதி வசதியோ ஒருமைப்பாட்டுணர்வோ நம்மிடம் இல்லை. சரி. அது வருகிறபோது வரட்டும்.

இப்போது நமது உடனடித் தேவை காவிரி, பாலாறு, முல்லைப்பெரியாறு பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு விரைவில் காணப்படவேண்டும் என்பதுதான். அதை வலியுறுத்தாமல் நதி இணைப்பை நமது முதலமைச்சர் வலியுறுத்தியிருப்பது என்பது இயலாமையின் வெளிப்பாடே ஆகும்.

காவிரி, பாலாறு, முல்லைப் பெரியாறு பிரச்சினைகள் இப்போது தமிழகத்தின் முன் உள்ள தலையாய பிரச்சினைகள் ஆகும். தமிழ்நாட்டில் உள்ள மூன்றில் இரு பங்கு மாவட்டங்கள் அதாவது 20 மாவட்டங்கள் இந்த மூன்று ஆறுகளின் மூலம் பாசன வசதி பெறுகின்றன. இந்த ஆறுகளின் பிரச்சினை உடனடியாகத் தீர்க்கப்படாவிட்டால் இந்த மாவட்டங்கள் வறட்சிப் பகுதிகளாக மாறும் அபாயம் உள்ளது.

நீருக்காக பிற மாநிலங்களை எதிர்பார்த்து நிற்கும் தமிழகம் உணவுக்காகவும் பிற மாநிலங்களிடம் கையேந்தி நிற்கவேண்டிய அவல நிலை உருவாகும். உடனடியாகத் தீர்க்கவேண்டிய ஆற்று நீர்ப் பிரச்சினைகளைத் தீர்க்கமுடி யாமல் போகுமானால் பெரும் நெருக்கடியை தமிழகம் சந்திக்க நேரிடும். ஆனால் இதற்கான உடனடி நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய முதலமைச்சர் நதிகளின் இணைப்புப் பற்றிய கனவுத் திட்டத்தைப் பற்றிப் பேசி தனது பொறுப்பைத் தட்டிக்கழித்திருக்கிறார்.

கூரையேறி கோழி பிடிக்க முடியாதவர் வானத்தைக் கீறி வைகுந்தத்துக்கு வழிகாட்டப் புறப்பட்டிருக்கிறார்.

நன்றி: தென்செய்தி

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com