Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கட்டுரை

பிணம் தேடும் கழுகுகள்
பழ. நெடுமாறன்


சூலை 5ஆம் நாள் ஆக்ரமிப்பு இராமர் கோவிலின் மீது தாக்குதல் நடத்த முயன்ற முஸ்லீம் தீவிரவாதிகளைக் காவல்படையினர் சுட்டு வீழ்த்தினர். ஆக்ரமிப்பு இராமருக்கோ, கோவிலுக்கோ எத்தகைய சேதமும் இல்லை.
ஆனாலும் வெறும் வாயையே மெல்லுகிற சங்கப் பரிவாரம் அவல் கிடைத்தால் விடுமா?

துள்ளியெழுந்து கண்டன அறிக்கைக் கணைகளைத் தொடுத்தனர். மத்திய உள்துறையமைச்சர் சிவராஜ் படீல், உ.பி. முதலமைச்சர் முலாயம் சிங் யாதவ் ஆகியோர் இதற்குப் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என வற்புறுத்தினர். உடனடியாக நாடு தழுவிய "பந்த்” போராட்டத்திற்கும் அழைப்பு விடுத்தனர். எல்லாமே நீரில் நனைந்த வெடி போல பிசுபிசுத்து விட்டது. இவர்களின் கூப்பாட்டிற்கு மக்கள் செவிசாய்க்கவில்லை.

ஆனால் பா.ஜ.க. ஆட்சியிலிருந்தபோது இரண்டு முக்கிய தாக்குதல்கள் நடத்தப்பட்டன. 13.12.2001 அன்று இந்திய நாடாளுமன்றத்தின் மீது தீவிரவாதிகள் துணிகரத் தாக்குதல் நடத்தி தேசத்தைக் கிடுகிடுக்க வைத்தார்கள்.
குசராத் மாநிலம் காந்தி நகரில் உள்ள அக்ஷர்தம் கோவிலின் மீது 26.9.2002 அன்று தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். பல பக்தர்கள் உயிரிழந்தனர்.

இந்த இரு தாக்குதல்களும் நடைபெற்ற வேளையில் இந்திய உள்துறை அமைச்சராக அத்வானிதான் இருந்தார். ஆனால் அவர் பதவி விலகிவிடவில்லை. இப்போது வேறுமாதிரி கூக்குரல் இடுகிறார்கள். நடக்கக்கூடாதது நடந்து விட்டதைப் போல அங்கலாய்க்கிறார்கள். இராமர் கோவில் மீது நடத்தப்பட்ட தாக்குதல் இந்துக்களின் தன்மானத்திற்கு விடப்பட்ட அறைகூவலாகச் சித்தரிக்கிறார்கள்.

எது தன்மானம்? இந்துக்களுக்கு மட்டும்தான் தன்மானமா? முஸ்லீம்களுக்கு இல்லையா? 13 ஆண்டுகளுக்கு முன்பாக காவி காலிக்கும்பல் பாபர் மசூதிக்குள் புகுந்து அதை இடித்துத் தகர்த்ததே அப்போது முஸ்லீம்களின் உள்ளங்கள் எந்த அளவு கொதித்திருக்கும்? பாபர் மசூதியில் காவலுக்கு நின்ற காவலர்படை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் ஊமை சாட்சியாக நின்றதால் அல்லவா காலிக்கும்பல் தப்பியது!
.
பொது இடங்களை ஆக்ரமித்துக் கட்டப்பட்ட கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் ஆகியவற்றை இடித்து அப்புறப்படுத்துமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதற்கிணங்க மதுரையிலும் மற்ற இடங்களிலும் ஏராளமான கோவில்கள் அப்புறப்படுத்தப்பட்டன. பொது இடத்தை ஆக்ரமித்து கோயில் கட்டுவது குற்றம் என்றால், இருக்கும் மசூதியை இடித்து அந்த இடத்தில் கோயில் கட்டுவது இரட்டைக் குற்றமாகும். எனவே இரட்டைக் குற்றம் புரிந்து கட்டப்பட்டிருக்கும் கோயிலை அப்புறப்படுத்துவதுதான் நீதியாகும். ஆனாலும் நீதிமன்றத்தின் பரிசீலனையில் இப்பிரச்னை இருப்பதால் அதன் தீர்வு வருகிறவரை பொறுத்திருப்பதே முறையாகும். இந்து பாசிஸ்டுகள் நீதி மன்றத்தையோ சட்டத்தையோ மதிக்கத் தயாராக இல்லை.

17.10.2001 அன்று விசுவ இந்து பரிசத் தலைவர்களை அசோக் சிங்கால், பிரவீண் தொகாடியா ஆகியோர் வாள் ஏந்திய தொண்டர்கள் புடைசூழ ஆக்ரமிப்புக் கோவிலுக்குள் அத்துமீறி நுழைந்தனர். தடுத்த காவலர்களை மிரட்டிவிட்டு பூசை செய்தனர். "இராமர் கோவிலுக்குள் நுழைய எத்தகைய கட்டுப்பாடும் இருக்கக்கூடாது. அவற்றை நாங்கள் மதிக்க மாட்டோம்'' என அசோக் சிங்கால் அறிவித்தார். அப்போதைய பிரதமர் வாஜ்பாய் "இத்தகைய நடவடிக்கைகள் பாதுகாப்பிற்கு பெரும் இடையூறு'' எனக் கண்டனம் செய்தார். ஆனாலும் சங்கப்பரிவாரம் செவி சாய்க்கவில்லை. 15.3.2002 ஆம் நாள் பிரச்னையற்ற இடத்தில் கோயில் கட்டுமான வேலைகளைத் தொடங்கப் போவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் படைகளின் கடுமையான காவலின் காரணமாக அவ்வாறு செய்ய இயலவில்லை.

உள்துறை அமைச்சராக இருந்த அத்வானி வெளியிட்ட அறிக்கையில் "அயோத்தியில் விசுவ இந்து பரிசத் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தும்'' என எச்சரித்தார். ஆனாலும் சங்கப் பரிவாரக் கும்பல் தொடர்ந்து சட்டத்தை மீறும் நடவடிக்கையில் ஈடுபட்டது. இராம ஜென்மபூமி நவாசின் தலைவரான இராமச்சந்திர பரமஹம்சர் "கோயிலுக்குள் நுழைய அனுமதிக்காவிட்டால் துப்பாக்கிக் குண்டுகளைச் சந்திக்க தயாராக இருக்கிறேன்'' எனப் பேசி வெறியேற்றினார். இராமர் கோவிலைச் சுற்றிப் போடப்பட்டிருக்கும் காவல்படைகளை அகற்ற வேண்டும் என சங்கப்பரிவாரம் வற்புறுத்தியது. அப்படி அகற்றியிருந்தால் தீவிரவாதிகள் உள்ளே புகுவது எளிதாக இருந்திருக்கும்.

காவல்படைகளே கூடாது என்று கூறியவர்கள் இப்போது போதுமான காவல் இல்லை என்று கூறுகிறார்கள்.
இவர்களின் உள்நோக்கம் வேறு. தீவிரவாதிகள் உள்புகுந்து இராமர் சிலைக்குச் சேதம் ஏற்படுத்தினால் அதை வைத்து மதக் கலவரங்களை உருவாக்கி ஆட்சியைக் கவிழ்க்கலாம்.

பிணங்களின் மீதேறி ஆட்சியைப் பிடிக்கலாம் எனக் கனவு காண்கிறார்கள்.
இவர்கள் பிணம் தேடும் கழுகுகள்.

(தென்செய்தி ஜூலை16 மடலில் வெளியான கட்டுரை)


இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com