Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கட்டுரை

அதிகார உரையாடலை உடைப்போம்
முத்துக்குமரன்


''அரசு என்பது துப்பாக்கிகளினால் நிலை நிறுத்தப்படவில்லை, வார்த்தைகளினால் ஆன பிரதிகளினால்''

violence உலகில் காலகாலமாக அதிகாரமும் அடக்குமுறையும் நிகழ்ந்துகொண்டே வருகிறது. இதில் கவனிக்க வேண்டியது அடக்குமுறையை நிகழ்த்தும் சமூகம் எண்ணிக்கையளவில் மிகக்குறைவானதாக இருப்பதும் அடக்குமுறைக்கு உட்படும் சமூகம் பெரியதாக இருப்பதும். எப்படி இது சாத்தியமாயிற்று. அதன் விடைதான் முதல் வரிகளில்.

நமக்குள் மூன்றுவிதமான சமூக அமைப்புகளை நிலவி வருகிறது. முதலாவது அடக்குமுறைக்கு உட்படும் அடிமைச் சமூகம், இரண்டாவது அடக்கும் அதிகார சமூகம், மூன்றாவது அதிகார வர்க்கத்தை ஆதரிக்கும் தரகு சமூகம்.

வரலாறு என்பது ஒரு சமூகத்தை பற்றிய அடிப்படைச் செய்தியாக, ஆவணமாக, செல்வமாக உணரப்படுகிறது. இதன் மீது எழும்பும் நம்பிக்கைகளே அடுத்தடுத்த தலைமுறைகளை வழிநடத்திச் செல்கிறது. வரலாறுகள் உண்மைகள் என பெருவாரியாக நம்பப்படுகிறது. ஆனால் உள்தேடி பயணிக்கும் போது அவ்வாறாக இருப்பதில்லை என்பதுதான் நடைமுறை எதார்த்தம்.

தனக்கான உரையாடல்களை கட்டமைப்பதே வரலாறு என்றாகியிருக்கிறது. அதனால் ஒவ்வொரு இனத்திற்கும் தங்களுக்கான உரையாடல்களை கட்டமைப்பதே உண்மையான யுத்தக்களமாக இருக்கிறது. இது அடிப்படையான விசயம். ஆனால் இங்குதான் அதிகார, ஆதிக்க சமூகம் தன் கோரக்கரங்களை நுழைக்கிறது. அந்தந்த மண்ணுக்குரிய பெருவாரியான மக்களின் உரையாடலை அறவே அழித்தொழித்து தனது ஆதிக்க உரையாடலை திணிக்கிறது. அதை அங்கு வாழும் அனைத்து சமூகங்களுக்கும் பொதுவானதாக கற்பிக்கிறது. இப்படி கற்பிக்கப்பட்டவையே இயற்கையானது என்று பெரும்பான்மையான மக்கள் கூட்டத்தினை நம்ப வைத்து அவர்களை மனரீதியாகவே அடிமைதனத்தை ஏற்கச் செய்கிறது. தாங்கள் அடிமைகள், ஆதிக்க சமூகத்தினருக்கு அடங்கிப் போவதே தனக்கு விதிக்கப்பட்ட விதி, அதை ஏற்றுக்கொண்டு வாழ்வதே ஒரே தொடர்ந்து இவ்வுலகில் வாழ வழி என்ற மனோநிலையை வளர்த்து அவர்களை மனரீதியாகவே அடிமை பட வைத்து விடுகிறது. இத்தகையதொரு கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதில் வெற்றி பெறும் போது அவர்களால் எதிர்ப்புகளற்ற அதிகார சமூகத்தை மிக எளிதாக கட்டமைக்க முடிகிறது. இவ்வாறு ஏற்படுத்திய கருத்துருவாக்கத்தை பாதுகாக்க எண்ணற்ற புராணக் கதைகள், நீதி சம்பவங்கள், இலக்கியங்கள் எனத் தொடர்ச்சியாக அதை வலுவூட்டி வருகிறது. பெண்ணடிமைத்தனமும் இதே முறையில்தான் இயங்குகிறது. பெண்ணுக்கு பெண்தான் எதிரி என்பதாக உருவாகியிருக்கும் கருத்தாக்கம் இதற்கு ஒரு நடைமுறை எடுத்துகாட்டு.

எனவே எந்த வகையான விடுதலை என்பதும் நமக்கான உரையாடலை, உருவாக்குவதில்தான் இருக்கிறது. மொழியின் தேவை என்பது எந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது இதிலிருந்து விளங்கும். அடிமை கொள்ள நினைப்பவன் முதலில் தாக்குவது மொழியாகத்தான் இருக்கும். மொழியை சிதைத்தால் அந்த இனத்தை சிதைப்பது என்பது மிக எளிதான காரியம்.

இந்தியாவின் வரலாறும் இப்படித்தான் எழுதப்பட்டிருக்கிறது. அதிகார சமூகத்தின் உரையாடல்களே பொதுவானதாகி இருக்கிறது. பெரும்பான்மையினரது குரல்கள் நசித்தொழிக்கபட்டிருக்கின்றன. மனிதனை பிறப்பின் ரீதியாக பாகுபடுத்தி, அந்த பாகுபாட்டை புராண இதிகாசங்கள், நீதி நூல்கள் தொடர்ச்சியாக ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் பேணிக்காத்து வந்திருக்கிறது. தங்களை அறியாமலே பெரும்பான்மையான மக்களும் அந்த கருத்துருவாக்கங்களை ஏற்று வாழ்கிறார்கள்.

இன்றைய பல நிகழ்வுகளுக்கு இந்த கூற்றுகளோடு தொடர்பு இருக்கிறது.

ஆமாம்.

இந்தியாவை எடுத்து கொள்ளுங்கள். கிராமங்கள் நிறைந்த நாடு, விவாசாயதை ஜீவாதராமாக கொண்ட நாடு. ஆனால் இன்றைய இந்தியாவாக பிரதிநிதுதுவப்படுத்துவது வேறோன்று. போலியானது. இது அனைத்து தளங்களிலும் நிகழ்கிறது. மக்களின் மரபு, பண்பாடு, வாழ்வியல் முறை, கலாச்சாரம், மொழி, என் அனைத்திலும் பெரும்பான்மை சமூகத்தின் குரல்கள் புறக்கணிக்கப்பட்டு அதிகார சமூகத்தின் குரல்கள் திணிக்கப்பட்டு பொதுச்சமூகத்தின் குரலாக பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டிருக்கிறது.

நமது மண், அது சார்ந்த விசயங்களை பிரதிநிதித்துவப்படுத்தாமல், தொடர்ந்து ஒவ்வாத ஒன்றை பிரதிநிதித்துவப்படுத்தி வருகிறோம். எல்லாத் துறைகளிலலும் நமது சுயத்தன்மை இழந்து முகமற்று நடமாடுகிறோம். அது பற்றிய பிரக்ஞைகூட இல்லாமலே தலைமுறை தலைமுறையாக வாழப்பழகியும் விட்டோம். நமது சுயம் என்னவென்பதே மறந்து போகும் அளவிற்கு நம்மீது திணித்தல்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டுவிட்டன.

காலணி ஆதிக்கத்தில் இருந்து பெரும்போராட்டம் நடத்தி விடுதலை பெற்றோம் என்று கூறிக்கொள்கிறோம். ஆனால் இன்று நவீன காலணியாதிக்கத்தை எந்த வித எதிர்ப்பும் இன்றி ஏற்றுக் கொண்டுவிட்டோம்.

இன்றைய நவகாலணியாதிக்கம் பொருளாதார ஏற்றம் என்னும் பெயரில் உள்நுழைகிறது. திறந்த வெளி வணிகம் என்னும் பெயரில் நமக்கு உரிமையான நமது வளங்கள் சுரண்டப்பட்டு நமக்கே விற்கப்படுகின்றன. அதுவும் அபரிமிதமான லாபத்தில்.

இந்த சுரண்டலுக்கு தரகு சமூகம் துணை போகின்றது. இந்த நாட்டு மக்களின் நலன்களை புறந்தள்ளி ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தின் நலனுக்காக உழைக்கும் இந்த கூட்டம்தான் இன்று வேகமாக முன்னேறி இருக்கிறது. எல்லாத் துறைகளிலும் தனது மேலாண்மையை வலுவாக நிறுவியுள்ளது. இன்றைய அதிகாரத்தின் மொழி இந்த தரகு சமூகத்தின் மொழியாக இருக்கிறது. இவை மிகத் தெளிவாக பொருளாதார நலன்களை முன்னிறித்தி இயங்குகின்றனர். ஆனால் இந்த வளர்ச்சி பலரை, குறிப்பாக சக மனிதனின் பொருளாதாரத்தை நசுக்கி, அழிப்பதால் வருவது என்பதை மறந்து விடுகின்றனர். மறைத்து விடுகின்றனர். பயனடைபவர்களை, வளமான சூழலை வெளிச்சப்புள்ளிக்கு கொண்டு வரும் இவர்கள் அதன் பின்னால் இருண்டு கிடக்கும் நிகழ்வுகளை, அவலங்களை புறக்கணிக்கிறார்கள். நிராகரிக்கிறார்கள்

இந்த அடக்குமுறையை மிக வீரியமாக அரசுகளின் வாயிலாகவும், நீதிமன்றங்கள் வாயிலாகவும், அச்சு, மின் ஊடகங்கள் வாயிலாகவும் செய்து வருகின்றனர். இன்று அரசாங்கங்களும் ஊடகங்களும் இந்த மக்களை, மக்களின் நலன்களை பிரதிநிதுத்துவப்படுத்துவதாக இயங்கவில்லை. தொழில் முதலைகளின் பிரதிநிதிகளாகவே இயங்குகின்றனர். இந்த அடக்குமுறையை எதிர்ப்பவர்களையே ஒருவருக்கொருவர் எதிராக நிறுத்தும் உத்திகளை மிக நுணுக்கமாக கையாள்கிறது.

அடக்குமுறைக்குள்ளானவர்கள் குரல்கள் நசுக்கப்பட்டு அவை இந்த பொதுச் சமுதாய அமைப்பின் நலனுக்கு உகந்ததல்ல என்று நிறுவும் முயற்ச்சியின் வாயிலாக, அந்த குரல்களை சமுக நலனுக்கெதிரான குரல்களாக திரிப்பதிலும், முனைப்போடு செயல்படுவதோடு மட்டுமன்றி அவற்றை பொதுக்கருத்தாக்கி உண்மையென நம்ப வைக்கும் அதிகார அடக்குமுறையையும் தொடர்ந்து செய்து வருகிறார்கள். அதுதான் அடக்குமுறைக்குட்பட்ட மக்களின் அவலங்கள் பொதுவில் தெரிய வரும் போது நம்ப முடியாததாக ஏற்க முடியாததாக இருக்கிறது. அவர்களின் வலிகள் கவனிக்கப்படாமலும் புரிந்து கொள்ளாது ஒதுக்கி வைக்கும் நிலையும் தொடர்ந்து வருகிறது.

இந்த தரகு சமூகத்தின் அதிகார கருத்துருவாக்கம்தான் சமூகத்தில் பின் தங்கியவர்களின் முன்னேற்றத்திற்காக கொண்டுவரப்பட்ட இடஒதுக்கீடு போன்ற நடவடிக்கைகளை மூர்க்கத்தனமாக எதிர்க்க வைத்திருக்கிறது.

நாட்டின் முன்னேற்றம் என்பது ஒரு சாராரை மற்றும் வளப்படுத்துவதாக இருத்தல் கூடாது. அது அனைத்து மக்களின் நலன்களை உள்ளடக்கிய வளமாக முன்னேற்றமாக இருக்க வேண்டும். எனவே இந்த அதிகார கருத்துருவாக்கத்தை உடைத்து, பெரும்பான்மை மக்களின் கருத்துருவாக்கத்தை நிலைபெறச்செய்ய நாம் இன்னும் அதிகமாக போராட வேண்டும். இந்த போராட்டம் கால எல்லைகளற்று நமக்கான உரையாடலை உருவாக்கி நிலை பெறச்செய்யும் வரை தொடர வேண்டும். இடையிடையே ஏற்படும் தற்காலிகத் தொய்வுகளால் சோர்வடையாது தொடர்ந்து செல்ல வேண்டும்.

- முத்துக்குமரன், துபாய் ([email protected])

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com