Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கட்டுரை

விதவை நிலம்
பீகாரில் பார்பனிய - நிலப்பிரபுத்துவ வன்முறையின் கோர முகம்
அ. முத்துக்கிருஷ்ணன்


மனித வாழ்நிலை கேள்விக் குறியதாக உள்ள மாநிலங்களில் முதலிடம் வகிக்கிறது பீகார். நம் நாட்டின் மிக பின்தங்கிய நிலப்பரப்பாக வளர்ச்சியும், நாகரிகமும் ஒருசேர கடந்த 50 ஆண்டுகளாக எட்டிப் பார்க்காத மாநிலமும் இதுவே. அங்கே அரசாங்கமும் ஜனநாயகமும் காட்சி பொருள்களாகத்தான் உள்ளது. நிலப்பிரபுத்துவத்தின் தொட்டிலாக திகழ்கிறது பீகார். முற்றிலும் செயலிழந்த நிலையில் கடந்த அறை நூற்றாண்டாக அரசு நிர்வாகம் ஸ்தம்பித்தே கிடக்கிறது. கடந்த 50 ஆண்டுகளாக சாதிய அரசியல்வாதிகளின் வாக்குறுதிகள் எல்லாம் கருத்த மேகங்கள் போல நம்பிக்கையளித்த, பின்னர் தேர்தல் முடிந்தவுடன் பொய்த்த மழையாக பறந்துவிட்டன. சமூக ஆய்வியல் நோக்கில் அந்த மாநிலத்துக்குள் பயணித்து வந்ததாலோ அல்லது தேசிய அளவிலான பல நாளிதழ்களை நாம் கூர்ந்து வாசித்து வந்தால் சாமானியர்களுக்கு கூட ஒரு விஷயம் மிக எளிதாக புலப்படும், அது பீகாரின் ஜனநாயகம் பற்றியது - “நிலப்பிரபுக்களுடையது, நிலபிரபுக்களுக்கானது, நிலப்பிரபுக்களாலானது,” இது தான் அங்கு எதார்த்தத்தில் உள்ள நாகரிக சமூகம்.

Farmer சாதியம் தன் கோரதாண்டவத்தின் உக்கிரத்தோடு இருக்கும் சூழலில் தலித்துகளின் வாழ்வியல் நிலைகள், உரிமைகள் எப்படித்தான் இருக்கும் என்பது நம் கற்பனையில் அடங்காது சித்திரம் கொள்ள முடியாத விஷயமாக உள்ளது. பீகாரில் பலசாதிகள் அடங்கிய அல்லது பலசாதியினர் பங்கேற்புள்ள இயக்கங்கள், கட்சிகள் மிகவும் அறிதாகி விட்டது, அப்படி இருக்கும் சில இயக்கங்கள் வழுப்பெற்ற அமைப்புகளாக - தீர்மானிக்கும் பலம் உடையவர்களாக இல்லை. பீகாரின் சமூக வாழ்வு சாதியரீதியாக பிளவுபட்டு கிடக்கிறது. ரன்வீர் சேனா, பீகாரிலுள்ள சாதிய இந்து நிலப்பிரபுக்களின் ஆயுதம் தாங்கிய கூலிப்படை. 1995ல் அவர்கள பகிரங்கமாக தீர்மானம் ஒன்றை நிறைவேற்றினார்கள். சாதிய இந்துக்கள் ஒருவர் கொல்லப்பட்டால் பத்து தலித்துகளை பதிலுக்கு கொள்ளப்படுவார்கள் என, இப்படி அங்கு தலித்துகளின் வீடுகள், குடியிருப்புகள் நரவேட்டைக்குள்ளாவது வாடிக்கையாகி விட்டது. தேசிய பத்திரிகைகளில் சில பத்தி பரபரப்பு செய்திகளாக அவை மாறிப்போனது. காலப்போக்கில் இன்று பெரும்பகுதியான பத்திரிகை வாசகர்கள், அல்லது இந்தியா முழுமையிலுமான பொதுமனம் எப்படி வடகிழக்கிலோ, காஷ்மீரின் மலைகளிலோ நடக்கும் சம்பவங்களுக்கும் தங்களுக்கும் தொடர்பில்லாமல் இருப்பது போல, அவை கடந்து போகும் நிகழ்வுகளாக மாறிப்போகும்.

கிராமங்களின் மொத்த நிலமும், (புறம்போக்கு உள்பட) உயர்சாதியினரின் கைகளில் உள்ளது. பல பத்திரபதிவு அலுவலகங்களில் தலித்துகள் பெயரில் எந்த சொத்தும் சுதந்திரம் பெற்று இந்த 57 ஆண்டுகள் ஆகியும் கூட பதியப்படவில்லை. பீகார் ஜனநாயகத்தில் தலித்துகளின் பாதங்களை ஸ்பரிசிக்காத ஏராளமான அரசு அலுவலகங்களும் உள்ளன. நிலமற்ற விவசாயிகளின் கூலியைக் கூட ரன்வீர் சேனாதான் நிர்ணயித்து அறிவிக்கிறது. தற்சமயம் அது நாள் ஒன்றுக்கு ரூபாய் 25 ஆக உள்ளது. கூலி உயர்வு கேட்டு ஆயிரக் கணக்கில் தலித் உயிர்கள் பலியானது தான் மிச்சம். வேறு வழியின்றி செத்துவிடக் கூடாதென்றே வயிற்றுக்காக, தங்கள் குடும்பங்களுக்காக பணிக்கு செல்வதாக அவர்கள் கூறுகிறார்கள். அங்கே அரசாங்கம் திறம்பட செய்யும் ஒரே வேலை நரபலிக்குள்ளான தலித்துகளின் சடலங்களை பிரேத பரிசோதனை செய்வது மட்டுமே.

முற்றிலும் தலித்துகள் வாழக்கூடிய பல கிராமங்கள் உள்ள இடங்களில் அந்த கிராமங்களின் வயல்களுக்கு வந்து சேர வேண்டிய தண்ணீர் கூட தடுத்து நிறுத்தப்படுகிறது. இந்த பொருளாதார தடைகளை அகற்றுவதாக கூறி, கட்டப்பஞ்சாயத்துக்களில் ஈடுபடும் பல அரசியல் கட்சி தலைவர்கள் பெரும் தொகைகளை பெற்றுக் கொள்கிறார்கள். பல கிராமங்கள் தங்களின் சமூக சேமிப்பான ஊர்ப் பொதுப்பணத்தை அங்குள்ள முதலாளித்துவ கட்சிகளிடம் கொடுத்து ஏமாந்து கதியற்று நிற்கின்றனர்.

மண்டல் கமிஷனுக்குப் பிறகு பல தலித்துகள் கல்வி பெற்று அரசாங்க வேலைகளுக்குச் சென்று பல பதவிகள் பெற்றும் தங்கள் சொந்த கிராமங்களுக்கு வர இயலாமல், எங்கோ தங்கள் பணியிடங்களில் வாழ்ந்து வருகிறார்கள். சொந்த மண்ணில் அகதிகளாக. நிலப்பிரபுத்துவ இந்து மனம் இவர்களை ஏற்க மறுக்கிறது. இந்திய சமூகத்தின் மீதான தன் மேலாதிக்கத்தை பார்ப்பனியம் சிறிதும் இழக்க மனமில்லாமல் தன் வன்மத்தை நிலைநிறுத்துகிறது.

தலித் வீடுகள் அங்கு விதவைகள் நிறைந்து காணப்படுகிறது. “தலித்துகள் எங்களை எதிர்த்துப் போராடி, என்னப் புரட்சி செய்துவிடப் போகிறார்கள். அவர்களின் புரட்சி, விதவைகளை உற்பத்தி செய்யவே பயன்படும்” என்று நகைப்போடு வெளிப்படையாக அறிவிக்கிறார் ரன்வீர் சேனாவைச் சேர்ந்த முக்கியஸ்தர். ரன்வீர் சேனா கிராமங்களில் இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சியும், இந்து மதவெறியும், பழி வாங்கும் க்ரோத உணர்வுகளையும் பயிற்றுவிக்கிறது. சாதிய கோஷங்களை முன்வைத்து தான் எல்லா பிரச்சனைகளிலும் ஊரைத் திரட்டுகிறது. ரன்வீர் சேனாவின் எந்த அங்கத்தினரும் தன்னை காவல்துறையினர் புகைப்படம் எடுக்க அனுமதிக்கக் கூடாது என்று பலவித துணை பயிற்சிகளும் அறிவுரைகளும் அளிக்கப்படுகிறது. ரன்வீர் சேனா தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கிராமங்களில் ஓட்டு அளிப்பது வீண் வேலை என்று பிரச்சாரம் செய்து வருகிறது. ஆர்.எஸ்.எஸ்.காரர்களும் ஓட்டளிப்பதில்லை என்பது இங்கு குறிப்பிட வேண்டிய விஷயம். ஒத்தக் கருத்துடைய மனிதர்கள் தானே.

தலித்துக்கள் மனதில் நம்பிக்கையின் வெளிச்சக் கீற்றுகள் படர்ந்து, போராடும் குணமும் வளர அங்குள்ள பல இடதுசாரி அமைப்புகள் காரணமாக இருந்து வருகின்றனர். ரன்வீர் சேனாவிற்குத் துணையாய் காவல்துறை அங்கு போராடும் குணமுடைய பல தலித் தோழர்களின் மீது தொடர்ந்து பல பொய் வழக்குகள் பதிவு செய்கிறது. அவர்களின் போராடும் குணத்தை மலுங்கடித்து அவர்களை பீதியுறச் செய்யும் வஞ்சகமான செயல் இது. தலித்துகள் தங்களை பாதுகாத்துக்கொள்ள ஆயுதங்களை வைத்துக் கொள்ளும் நிலைக்கு அந்த சமூகத்தால் நிர்பந்திக்கப்பட்டுள்ளார்கள். ஏற்கனவே அங்குள்ள நிலப்பிரபுக்கள் ஏராளமான ஆயுதங்களையும், துப்பாக்கிகளையும் உரிமத்துடன் வைத்துள்ளார்கள். குழந்தை ஒன்று கூரையின் மீதுள்ளது, ஆடு கீழே நிற்கிறது. குழந்தை தவறி விழுந்ததில் ஆட்டின் கொம்பு குத்தி இறந்து விடுகிறது. இதற்கு ஆடு எப்படி பொறுப்பாக முடியும் - இது ரன்வீர் சேனா என்ற ஆடு ஒவ்வொரு படுகொலையைச் செய்து விட்டு கூறும் வம்பளப்பு.

தலித்துகளுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டுவிடக் கூடாது என்பதிலும் அவர்கள் கவனமாக உள்ளனர். ரன்வீர் சேனா கூறுகிறது, “எங்களிடம் சொத்துக்கள் உள்ளதால் அவைகளை பாதுகாக்க ஆயுதங்களை உரிமத்துடன் வைத்துள்¼ளாம். தலித்துகளிடம் எந்த சொத்துள்ளது அவர்களுக்கு ஆயுத உரிமங்கள் வழங்க.” இன்னும் கொஞ்சம் மேலே சென்று, தலித்துகளுக்கு ஆயுத உரிமங்களில் கூட இட ஒதுக்கீடு அளித்து விடாதீர்கள் என்று ரன்வீர் சேனா அரசு அதிகாரத்தை எதிர்த்துப் பாய்கிறது. நிலப்பிரபுக்களின் ஆயுத உரிமங்கள் ரத்து செய்யப்பட வேண்டும் என்றும் தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு இலவச உரிமங்களை வழங்க போராட்டங்கள் பீகாரில் நடந்து வருகிறது.

Ranvir sena தலித் மக்கள் தங்கள் குடியிருப்புகளை ஆயுதம் தாங்கிய சிறு குழுக்களால் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபடுத்தி பாதுகாத்து வருகிறார்கள். 1968ல் வெண்மணி படுகொலைச் சம்பவத்திற்கு முன்னதாக அங்கு தலித்துகளுக்கு நிலவிய அபாயகரமான சூழ்நிலைக் காரணமாக அங்கும் பல கிராமங்களில் இது போன்ற பாதுகாப்பு குழுக்கள் தங்கள் காலனிகளை பாதுகாத்து வந்தனர். ரன்வீர் சேனாவைப் போல தஞ்சாவூர் மாவட்டத்தில் நெல் உற்பத்தியாளர் சங்க அடியாட்களிடமிருந்து தங்களை தலித்துகள் பாதுகாத்துக் கொள்ள தற்காப்பு நடவடிக்கைகளை திட்டமிட நேர்ந்தது.

கடவுள் கண்ணீர் வடிக்கும்படி உங்களை அழித்தொழிப்போம் என்று வெளிப்படையாக பீகார் சமூகத்திற்கு அறிவிக்கிறது ரன்வீர் சேனா கூறுகிறது. வேலையின்றி, தன்மானமுமின்றி ஏராளமான தலித்துகள் வறுமையின் பிடியில் சிக்கி தவித்து இறந்து மடிகிறார்கள். பீகாரின் நீதித்துறை பாரபட்சத்துடன் நிலப்பிரபுக்களின் ஆதரவாகவே செயல்பட்டு வருகிறது. சாலை வசதி, சுகாதார வசதி, மின்சாரம் என்று எந்த அடிப்படை கட்டமைப்புகள் உருவாகாத கிராமத்தில் இருபத்தியோராம் நூற்றாண்டின் பொழுது புலர்கிறது. ரன்வீர் சேனா அடிப்படையில் ஆர்.எஸ்.எஸ்.ன் வெகுஜன இயக்கமாக இருந்து வருவது நாம் அறிந்ததே, என்றாலும் பீகார் காங்கிரஸ் கூட அதனுடன் சமயங்களில் சூழ்நிலைக்கேற்ப நிழல் உறவு கொள்கிறது. ஆர்.எஸ்.எஸ்.ன் கனவுகளை இந்தியாவில் அமல்படுத்த ஏராளமான அதன் துணை அமைப்புகள் வன்மத்துடன் செயல்பட்டு வருகின்றன. பி.ஜே.பி., பஜ்ரங்தள், வி.ஹெச்.பி., இந்து முன்னணி என்று கலவரங்களை விளைவித்து அதில் அறுவடை செய்யத்துடிக்கும் அமைப்புகள் இவை. லட்சக்கணக்கான இந்தியர்களின் ரத்தத்தை குடித்தும் இவர்களின் தாகம் இன்னும் அடங்கவில்லை.

கடந்த தேர்தலில் கூட நம் வீட்டு தொலைக்காட்சி பெட்டிகளில் பீகார் மாநிலத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்திற்காக ஆளுக்கொரு ஹெலிகாப்டரில் பறந்த வண்ணம் இருந்தார்கள். (தமிழ் சினிமாவில் வில்லன்கள் தான் படம் முடியும் பொழுது இதில் வருவார்கள் கதாநாயகனைக் கொல்ல) சாலைகளே இல்லாத ஊருக்குப் பறந்து தானே வரவேண்டும். (பீகாரின் வில்லன்கள் தலித்துகளின் வாழ்வை சூறையாட பறந்து வருகிறார்கள்)

ஒவ்வொரு ஊரிலும் புறம்போக்கு நிலங்கள் அரசாங்கத்தால் மீட்கப்பட்டு அங்குள்ள தலித் சமூகத்திடம் ஒப்படைக்கப்பட்டு, நிலமற்றோரிடம் வழங்கப்பட வேண்டியது காலத்தின் கோரிக்கை. கூட்டு விவசாயப் பண்ணைகள் சமூகத்தை ஒற்றுமைப்படுத்தவும், பாதுகாப்பு உணர்வும், நம்பிக்கையையும் அளிக்கும். வயல்கள் தரிசாய் கிடக்க, நகரங்கள் நோக்கி சொந்த மண்ணில், சொந்த நாட்டில் அகதிகளாய் தினமும் ஆயிரக்கணக்கில் பிறந்த கிராமங்களிலிருந்து........

- அ. முத்துக்கிருஷ்ணன் ([email protected])

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com