Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கட்டுரை

மலத்தில் தோய்ந்த மானுடம்
அ. முத்துக்கிருஷ்ணன்


உன்னால் முடியும் தம்பி படத்தில் கமலம் என்று பெயருடைய தன் காதலியை (படத்தில் அவள் ஒரு தலித் பெண்) க மலம் என்று பிரித்து உச்சரித்து அழைப்பார் படத்தின் நாயகன் கமலஹாசன். பொது புத்தியின் மட்டமும் இதுவே. மலம் என்றவுடன் பெரும் அசூயை வந்து மனதைக் கவ்விக் கொள்கிறது. சுத்தம்-அசுத்தம் குறித்த நம்முள் படிந்துள்ள கருத்தாக்கங்களின் துணையுடன் அந்த வார்த்தையே அவ்வாறு அகத்துள் கிளைகிறது என்றால் என்றாவது நாம் தினமும் பாதாள சாக்கடைகளுக்குள் முத்து எடுப்பவர்களைப் போல் நுழைந்து கேசம் எல்லாம் மலத்துடன் வெளிவரும் மாந்தர்களின் மனநிலை குறித்து சிந்தித்திருக்கிறோமா? மனித மலத்தை மனிதர்களே கையால் அள்ளும், சுத்தம் செய்யும் இத்தகைய நடைமுறைகள் நம் காலத்திலும் நீடிப்பது சரியா.

Old man நம் கரங்களையே வலது - இடது எனப் பிரித்து அவைகளின் பயன்பாடுகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. மலம் கழுவ இடது கரம், உண்ண வலது கரம் என்கிற இந்த வகைப்பாடுகள் வட இந்தியாவில் இத்தனை அழுத்தமாக இல்லை. (வட இந்தியர்கள் உண்ணும் பொழுது மிக சகஜமாக இடது கையை பாவிக்கிறார்கள்) உடலில் உள்ள உறுப்புகளைப் பிரிப்பதில் தொடங்கிய ஒழுக்க விதிமுறைகள் மெல்ல மெல்ல மனிதர்களையும் அவர்களின் வேலையின் அடிப்படையில் கூறுகூறாய்ப் பிரித்தது. இன்றும் ஜாதியின் பெயரால், அவர்கள் செய்யும் வேலையின் பெயரால் இந்த தேசத்தில் மனிதர்களை இந்து மதம் பிரித்து வைத்துள்ளது. உலகமே நிறவெறிக்கு எதிராக அணி திரளும் நேரம், நம் தேசத்தில் தினந்தோறும் தலித்துகள் பல விதமான அடக்குமுறைகளுக்கு இன்னல்களுக்கு ஆளாகிறார்கள். மதத்தின் நடைமுறைகளுக்கு எதிராக இயற்றப்பட்ட சட்டங்கள் பல ஏட்டுச் சுரைக்காயாய் நம் சட்ட அலமாரிகளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. அதனை நடைமுறைப்படுத்த வேண்டியவர்களே அதனை மீறுபவர்களாக உள்ளார்கள் என்பதற்குச் சான்றுகள் ஏதும் தேவையில்லை. நம் உடலின் ரத்தமும் சதையுமாம் சதா தங்கிக் கிடக்கும் 200 கிராம் மலத்தை நினைவில் கொன்டு பயணத்தைத் தொடருவோம்.

இந்திய நாகரிகங்களைப் பற்றிப் பேசுகையில் 5000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சிந்து, ஹரப்பா நாகரிகத்தைப் பற்றிப் பெருமை பொங்க நம் வரலாற்று அறிஞர்கள், அகழ்வாய்வாளர்கள் பேசுவார்கள். அந்த நாகரிகத்தின் குடியிருப்புகள் சுட்ட செங்கற்களால் கட்டப்பட்டிருந்தன, தண்ணீர் வசதியுடன் கூடிய கழிவறைகள், கழிவுநீர் வடிந்தோட வாய்க்கால்கள் இருந்தன என ஒரு மிகப்பெரிய பட்டியல் பாடத்திட்டம் வரை எட்டியிருக்கிறது. அத்தகைய ஒரு சமூகம், அதன் கட்டமைப்புகளின் தொடர்ச்சி எப்பொழுது மறைந்து போனது. ஜாதியின் பெயரால் இந்தியாவில் தலித்துகள் மீது இன்று நடக்கும் கொடூரங்கள் குறித்து நாம் பெருமை கொள்ள இயலுமா?

சுத்தம், சுகாதாரம், தூய்மை, மாசுபாடு, தலைவிதி குறித்த பார்ப்பனிய விழுமியங்களின் அடிப்படையில்தான் இன்று நடைமுறையில் உள்ள இழிவான ஜாதியப் படிநிலை உருவானது. அந்தப் படிநிலையின் கீழ்த் தளத்தில் தலித்துகள் மொத்த ஜாதிய கட்டுமானத்தின் சுமையைத் தாங்குபவர்களாக வடிவமைக்கப் பெற்றது. தெருக்களைச் சுத்தம் செய்வது, குப்பைகளைப் பெறுக்குவது, தோல் பயன்பாட்டுடைய தொழில், மனித-மிருக சடலங்களை அப்புறப்படுத்துவது/ எரியூட்டுவது, பன்றிகள் வளர்ப்பது/ மேய்ப்பது, மனித மலத்தை அள்ளுவது /அப்புறப்படுத்துவது என இந்தப் பணிகள் மட்டுமே குறிப்பிட்ட ஜாதிகளுக்கு உரியதாகப் பட்டியலிடப்பட்டது. 2000 ஆண்டுகளாக அது தொடர்ந்து நடைமுறையிலும் கச்சிதமாக இருந்தும் வருகிறது. பார்ப்னியர்கள் மட்டுமின்றி இந்தக் கட்டுமானத் திட்டத்தை அப்படியே இடைநிலை ஜாதிகளும் அப்படியே சுவிகரித்துக் கொண்டனர்.

ஹன், ஹாதி, பால்மிகி, தணுக், மேத்தார், பங்கீ, பாகீ, மிரா, லல்பெகி, பாலாஷ்ஹி, சுகுறா, மாதீகா, மாலா, தொட்டி, நீர்தொட்டி, சக்கிலியர்கள், அருந்ததியர் என விதவிதமான பெயர்களால் இவர்கள் அழைக்கப்படுகிறார்கள். பெயர்கள் வேறுவேறாக இருப்பினும் இவர்களின் சமூக மதிப்பு ஒன்றாகவே உள்ளது. எல்லா நிலப்பரப்புகளிலும் பொதுவாக நிலமற்றவர்கள்தான் இந்தத் தொழிலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். பல மாநிலங்களில் வேற்று மாநிலத்தவர்கள் கட்டாயமாகக் குடியமர்த்தப்பட்டுள்ளனர். ஆந்திராவில் மலம் அள்ளுதலில் ஈடுபட்டுள்ள மேத்தார்கள் ஹரியானாவைச் சேர்ந்தவர்கள், மாதீகாக்கள் ஆந்திராவிலிருந்து வட தமிழகத்திற்குக் கொணரப்பட்டனர். ஒரிசாவைச் சேர்ந்தவர்கள் வட ஆந்திராவில் குடியமர்த்தப்பட்டனர். ஆந்திராவைச் சேர்ந்தவர்கள்தான் இலங்கை மற்றும் பங்களாதேஷில் மலம் அள்ளுகிறார்கள். மியான்மர் மற்றும் பல தெற்காசிய நாடுகள் வரை நம் பெருமிதங்கள் விரவிக் கிடக்கிறது.

நம் தேசத்தின் தலை நகரத்தில் பீ அள்ளுபவர்கள் பெரும்பகுதி தமிழர்கள் மற்றும் தெலுங்கர்களே. இந்திய - பாகிஸ்தான் பிரிவினையின் பொழுது பாகிஸ்தான் அனைத்து இந்துக்களையும் இந்தியாவிற்கு அனுப்பியது, ஆனால் அதுகாறும் அங்கு மலம் அள்ளும் பணியில் ஈடுபட்டிருந்த தலித்துகளை அனுப்ப மறுத்தது. அத்தியாவசிய சேவைகள் என அவர்களைத் தலைப்பிட்டுப் பாதுகாத்துக் கொண்டது. 1947 டிசம்பரில் அம்பேத்கார் இது குறித்துப் பல முறை கேள்விகளை எழுப்பினார், நேருவுக்குக் கடிதம் எழுதினார். இந்திய அரசோ காங்கிரஸ் கட்சியோ இதனைக் கண்டுகொள்ளவேயில்லை.

பார்ப்பனியர்கள் வசிக்கும் அக்கிரகாரத்தின் வீடுகளில் உள்ள கொல்லைக்குச் சென்று பீயை அள்ளுவது என்கிற நடைமுறையோடுதான் இந்த இழிவு தொடங்கியது. கிராமங்களின் தொழில்நுட்பவல்லுனர்களாக விளங்கிய தலித்துகளை மிகுந்த அடக்குமுறையின் பெயரில் கட்டாயப்படுத்தித்தான் இத்தகைய பணியில் ஈடுபடுத்தினார்கள். விவசாயம்சார் தோல் கருவிகளை அதுகாறும் தயாரித்து வழங்கிய தலித்துகளின் மீது திணிக்கப்பட்டதே இந்த இழிவு. சொந்த நிலத்தில் விவசாயம் செய்த தலித்துகள் மீதும் பல அடக்குமுறைகள் ஏவப்பட்டன. விவசாயம் மும்முரமாய் நடைபெற்று அறுவடையின் தறுவாயில் வயலின் விளைச்சலை ஆதிக்க சாதியினர் கொள்ளையடித்துச் செல்லுவது என்கிற நடைமுறை பல பகுதிகளில் காணப்பட்டது. ஓரிரு முறை விளைச்சலைப் பறிகொடுத்த பின் ஊரைவிட்டு வெளியேறி வேறு பிழைப்புத் தேடிச் செல்லும் தலித்துகளை இத்தகைய பணிகளில் தந்திரமாக ஈடுபடுத்தினார்கள். இவர்களின் நிலங்கள் ஆதிக்க ஜாதியினரால் பங்கிடப்பட்டது.

காலனியகாலத்தில் வெள்ளையர்கள் இங்கு நிலவிய கட்டுமானத்தை அப்படியே தங்கள் சௌகரியத்திற்கு பாவித்துக்கொண்டனர். வெள்ளையர்களின் நிர்வாக வளாகங்கள், குடியிருப்புகள், நீதிமன்றங்கள், ராணுவ கண்டோன்மெண்டுகள் என எங்கும் உலர் கழிப்பிடங்கள் கட்டப்பட்டன. பார்ப்பனியம் ஏற்படுத்தி வைத்திருந்த நடைமுறையை வெள்ளையர்கள் ஸ்தாபனப்படுத்தினார்கள், நிர்வாகக் கட்டுமானமாக உருமாற்றினார்கள். இங்கு வந்த மிஷனரிகள் தலித்துகளின் வாழ்நிலையில் பெரும் மாற்றம் எதனையும் கொணரவில்லை. வெள்ளையர்கள் துவங்கிய ரயில்வே துறையில் ஆயிரக்கணக்கான தலித்துகள் மலம் அள்ளும் வேலையில் ஈடுபடுத்தப்பட்டனர். இன்றும் உலகத்திலேயே அதிகப்படியான மலம் அள்ளும் தொழிலாளர்களைப் பணியில் அமர்த்தியுள்ளது இந்திய ரயில்வே துறையே. சாலைகள் போடுவதற்கென கிராமங்களில் இருந்து வெளியேறி சாலையோரம் மெல்ல மெல்ல பயணித்து நகரங்கள் வந்தடைந்த தலித்துகளை அந்த அந்த நகரமே விழுங்கிக் கொண்டது. எல்லா நகரங்களையும் சுகாதாரத்துடன் பேணுவதற்குக் குறைந்த கூலியில் பெரும் எண்ணிக்கையில் ஆட்கள் தேவை. சுகாதாரம் சார்ந்த பணிகளுக்குத் தொடர்ந்து மிகக் குறைந்த தொகையைத் தான் அரசாங்கங்கள் ஒதுக்கி வருகின்றன. சுகாதாரம் என்றும் அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் இடம் பெற்றதில்லை.
1989ல் அரசாங்கம் வெளியிட்ட புள்ளி விபரத்தின்படி இந்தியாவில் 6 லட்சம் பேர் மனித மலத்தை அப்புறப்படுத்தும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். ஆனால் இந்த விபரங்கள் தவறானவை என்கிறது சபாயி கர்மசாரி ஆந்தொலன் (Safai Karamchari Andolan). அவர்களின் கணக்குப்படி அது 13 லட்சம் ஆக உயர்ந்து கிடக்கிறது. 1996ல் விஜயவாடாவில் இந்த அமைப்பு தொடங்கப்பட்டது. ஆந்திராவில் மிகப் பெரிய வீச்சுடன் இந்த அமைப்பு இயங்கி வருகிறது. தற்பொழுது தில்லியைத் தலைமையாகக் கொண்டு பல மாநிலங்களில் இந்த அமைப்பின் செயல்பாடுகள் விரவிக்கிடக்கிறது. இந்த அமைப்புத் தொடங்க முக்கிய காரணமாய் இருந்தவர்களில் ஒருவர் பெசவாடா வில்சன். கர்நாடக மாநிலத்தில் ஒரு மாதிகா குடும்பத்தில் பிறந்தவர் பெசவாடா வில்சன்.

பெசவாடா வில்சனின் பெற்றோர், உறவினர்கள் கோலார் தங்கவயலில் வசிக்கும் 76,000 (1960-70ல்) தொழிலாளர்களின் குடியிருப்புகளில் உள்ள திறந்தவெளி உலர் கழிப்பிடங்களில் கையால் மலம் அள்ளும் தொழிலாளர்களே. ஆந்திராவின் குப்பத்தில் தொடக்கக் கல்வி, பெங்களூரில் முதுகலைப் பட்டம் மற்றும் இறையியல் இளநிலை பட்டப்படிப்பும் அதன் பின்னர் சமூகப்பணியென அவரது பயணம் தொடங்கியது. பின்னர் கையால் மலம் அள்ளும் தொழிலாளர்களின் பிரச்சினைகளை ஆராயத் துவங்கினார், அவர்களில் பெரும் பகுதி குடிகாரர்களாக இருந்தனர். அவர்களின் பணியிடங்களுக்குச் சென்று சூழ்நிலையை விழுங்க முற்பட்டார் வில்சன். அந்த வீச்சம், நாற்றம்தான் அவர்களைக் குடியின் பால் இட்டுச் சென்றது. நாள்தோறும் கழிவறைகளிலிருந்து வெளியேறும் கழிவுகளைப் பெரிய தொட்டிகளில் கொட்டி, பின்னர் அதை வேறு ஒரு இடத்திற்குச் சென்று அப்புறப்படுத்த வேண்டும். மல வாளியைத் தூக்கி ட்ராக்டரில் ஏற்ற வேண்டும். இந்த வேலையைச் செய்யும் பொழுது அவர்களின் உடலில் மலம் வடிந்துவிடுவதைப் பார்த்த வில்சன் கதறக்கதற வெடித்து அழுதார்.

வில்சன் அதனை இவ்வாறு தனது வார்த்தைகளில் கூறுகிறார், "நான் அந்தக்குழிக்குப் பக்கத்திலேயே விழுந்து அழுது புரண்டேன். நான் பார்த்த அந்தக் காட்சிக்கு எனக்கு விடை கிடைக்கவில்லை. நான் சாக விரும்பினேன். நான் தொடர்ந்து அழுதேன். முதலில் அந்தத் தொழிலாளர்களுக்கு நான் ஆறுதல் சொன்னேன். இப்பொழுது அவர்கள் எனக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தனர். அவர்கள் மிகவும் வருத்தப்பட்டு, எனக்கு என்ன ஆனது? ஏன் அழுகிறாய்? என்று கேட்டுக் கொண்டே இருந்தார்கள். அவர்களின் கேள்விகள் என்னை மேலும் மேலும் அழ வைத்தது. நான் அந்தக் காட்சியைப் பார்த்த பின்பு, எனக்கு உலகமே தலைகீழாக மாறிப்போனது. நான் செத்துவிட வேண்டும் என்று சொன்னேன். அவர்கள் இந்த வேலையைச் செய்யக் கூடாது; நிறுத்திவிட வேண்டும் என்று சொன்னேன். என்னுடைய துயரம் அவர்களை பாதித்துவிட்டதாக நினைக்கிறேன். முதல் முறையாக, இந்த வேலை தங்களை பாதிப்பதாகச் சொன்னார்கள். ஆனால், அவர்களால் என்ன செய்ய இயலும்? அவர்கள் இந்த வேலையைச் செய்ய மறுத்தால், வேலையில் இருந்து தூக்கியெறியப்படுவார்கள். அவர்களின் வீட்டில் எப்படி உலைவேகும்?

என்னால் சாப்பிட முடியவில்லை; தூங்க முடியவில்லை. எனக்கு இரண்டு வழிகள் இருந்தன: ஒன்று, நான் சாக வேண்டும் அல்லது இந்தக் கொடிய வழக்கத்தை நிறுத்த நான் ஏதாவது செய்தாக வேண்டும். முதலில் சொன்னது எளிதானது. இரண்டாவது கடினமானது. நான் செத்துப் போவதால் எதுவும் மாறிவிடப் போவதில்லை என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன். 1982 முதல் இயங்கத்துவங்கிய வில்சன் 1996ல் தீவிரமான மனித உரிமை ஆர்வலர்களான தனது நண்பர்களுடன் இணைந்து அமைப்பைத் தொடங்கினார். சமீபத்தில் அவுட்லுக் இதழ் 25 நபர்களை கொண்ட பட்டியல் ஒன்றை வெளியிட்டது. அது இந்தியாவில் எக்காலத்திலும் அதிகாரத்திற்குச் செல்ல முடியாத வர்களின் பட்டியல். மகத்தான போராளிகள், மனித உரிமை செயல்பாட்டாளர்கள், அதிகாரத்திற்கு எதிரான அறிவுஜீவிகள், சமூகங்சார் களப்பனியாளர்கள் என நிண்டு சென்றது. அதில் பெசவாடா வில்சன் இடம் பெற்றிருந்தார். இது அவரது பணிக்குக் கிடைத்த பெரும் அங்கீகாரம்.

1982 முதல் தொடர்ந்து பல வடிவங்களில் தன் போராட்டத்தை முன்னெடுத்தார். 1993ல் நாடாளுமன்றம் இத்தொழிலைத் தடை செய்து சட்டம் இயற்றியது (கையால் மலம் அள்ளுவோர் பணி நியமனம் மற்றும் திறந்தவெளி கழிப்பிடங்கள் (தடுப்பு) சட்டம்). இது வில்சனின் போராட்டத்திற்குக் கிடைத்த சட்டபூர்வமான வெற்றி. பின்பு இந்தச்சட்ட நகலை அரசாங்க அதிகாரிகளுக்குத் தொடர்ந்து அனுப்பத் துவங்கினார். மகஜர்கள் தினமும் திசைகள் எங்கும் பறந்தது. பத்திரிகைகள் கொஞ்சம் கருணை காட்டின. 1994ல் பெங்களூரூவில் இருந்த திறந்தவெளி கழிப்பிடங்கள் அனைத்தும் தண்ணீர் விட்டுக்கழுவும் வகையில் மாற்றம் செய்யப்பட்டன. அந்தத் தொழிலாளர்கள் அனைவரையும் வேறு பணியில் மாநகராட்சி அமர்த்திக்கொண்டது. ஆரம்பம் முதலே வில்சன் தனது பார்வையில் தீர்க்கமாக இருந்தார்.

கட்டாயமாகக் கூலி உயர்வு, புதிய கருவிகள் எனப் பேரங்கள் எதிலும் ஈடுபடுவதில்லை. இந்தியாவில் எந்தப் பகுதியிலும், ஒரேயொரு திறந்தவெளி கழிப்பிடம் கூட இருக்கக்கூடாது. அப்படி இருந்தால், இந்த ஜாதி அமைப்பு உடனடியாக மலம் அள்ளும் ஜாதியைத் தோற்றுவித்துவிடும். இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் சவாலைத் தனது தோள்களில் ஏற்றுக்கொண்டு தேசமெங்கும் பயணம் செய்து வருகிறார். 1993ல் இந்தச் சட்டம் இயற்றப்பட்ட பொழுதும்கூட, அது 1997வரை இந்திய அரசிதழில் (Gazetter of India) அறிவிக்கப்படவில்லை. 2000வரை எந்த மாநில அரசும் இதுகுறித்து மக்களுக்குத் தெரிவிக்கவில்லை.

தொழில்மயம் ஏற்படுத்திய பெரும் இடப்பெயர்வுகளில் நகரங்கள் வளரத் துவங்கின. அவை இன்று வரை தடையற்று வீங்கிப் பெருத்து வருகின்றன. எந்த நகரத்திற்கும் இத்தனை லட்சம் மனிதர்களை அடைக்கலம் கொடுக்கும் விஸ்தாரம், தண்ணீர், சுகாதாரம் என அடிப்படை வசதிகள் உள்ளனவா என்பது போன்று நம் அரசுகளிடம் எந்தப் புள்ளிவிபரங்களும் கிடையாது. மேம்பாடு, வளர்ச்சி, தொழில் எனச் சகல துறைகள் சார்ந்தும் நம் இயங்கு மாதிரிகள் மேற்கிலிருந்து பெறப்பட்டவை போன்ற கருத்தாக்கங்கள் நம்மிடையே புழங்குகிறது. அவைகளை கூட நாம் முறையே பெறவில்லை மாறாக அனைத்தையும் பாவனை செய்தே வருகிறோம். நம் பிரதமர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என வருடம் தோறும் வெளிநாட்டுப் பயணங்களை சதா மேற்கொள்கிறார்கள், இத்தனை லட்சம் கோடிகளை செலவழித்து, வர்த்தக-கலாச்சார- தொழில்நுட்ப-அறிவு சார் பகிர்வுகளைப் பரிமாற்றங்களை நடத்தியும் ஏன் நம்மால் உருப்படியாக ஒரு பாதாள சாக்கடையை, கக்கூஸை கட்ட இயலவில்லை. நாடெங்கிலும் உள்ள பேருந்து நிலையங்களில் எப்படி ஒரே மாதிரியாக நாறுகிறது. ஒரு வேளை இது நம் தேசத்து நிலைமையைப் பறைசாற்றும் வீச்சமோ.

கடந்த பத்தாண்டுகளில் சுகாதார நிலைமைகள் மோசமாக படுபாதாளம் நோக்கியே பயணித்துள்ளன. தண்ணீர்ப் பற்றாக்குறை ஒரு புறமும், மறுபுறம் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நேரடியாக நம் நீர் நிலைகளைப் பாழ்படுத்தி வருகிறது. பல கிராமங்களின், நகரங்களின் குடிநீர்த் தேவைகளைப் பூர்த்தி செய்த ஆறுகள், கண்மாய்கள், குளங்கள் இன்று மாசுபடிந்து மனித உபயோகங்களுக்கு லாயக்கற்றதாக உருமாறிக்கிடக்கிறது. கழிவு நீர்க் குட்டைகளாக அவை இன்று கொசுக்களின் நாற்றங்காலாய் விளங்குகின்றன. பலவிதத் தொற்று நோய்களின் தொகுப்பாக அவை விளங்குகின்றன. இந்தக் கழிவுநீரைக் கடக்கும் பொழுது நம் மத்தியத் தரவர்க்கம் முகம் சுழிக்கும், கை லேஞ்சால் மூக்கை மூடிக்கொள்ளும். ஆனால் இந்தியாவெங்கும் சொல்லி வைத்தார் போல் தலித்துகளுக்கு எப்படி அரசாங்கங்கள் இந்தக் கழிவுநீர்க் குட்டைகளுக்கு அருகிலேயே வீடுகளை அமைத்துத் தருகிறது.

குப்பை மேடுகளில்தான் சேரிகள் அமைக்க அரசுகள் அனுமதியளிக்கிறது. நகரத்தின் கழிவுகளை நாளெல்லாம் சுமப்பவர்களுக்கு அதன் மீதே குடியிருக்க அனுமதிக்கும் அரசுகள், உயர் ஜாதி மனோபாவம் கொண்ட இந்து அரசுகள்தானே. சென்னை கூவம் நதிக்கரையில் வசிப்பவர்கள் அந்த நகரத்தை அழுக்காக்குகிறார்கள், நகரம் வழியே பயணிக்கும் பொழுது அவர்களின் இருப்பு பார்வையை உறுத்துகிறது ஆதலால் அவர்களை அப்புறப்படுத்திவிட்டு அங்கு பூங்காக்கள் அமைக்கும் திட்டம் துவங்கி உள்ளது. வெளியேற்றாவிட்டால் வெளிநாட்டு மூலதனம் நின்றுவிடும் அல்லவா.

மலம் அள்ளுபவர்கள் தங்கள் வாழ்விடங்கள் சார்ந்தும், பணி சார்ந்தும் பலவித நோய்களுக்கு ஆளாகிறார்கள். டெங்கு, மலேரியா, வயிற்றுப் போக்கு, சத்துக் குறைபாடுகள், சுவாசக் கோளாறுகள் என ரகம் ரகமான நோய்களுக்குப் பஞ்சமில்லை. குழந்தைப் பருவத்திலேயே பல சிசுக்கள் இறப்பிற்கு இவர்களின் வாழ்விடங்களே காரணம் எனப்பல ஆய்வுகள் உரத்துத் தெரிவிக்கின்றன. மறுபுறம் இத்தகைய கழிவுகளை தங்களின் புதிய வாழ்க்கை முறையின் பயனாய், நுகர்வு மயத்தின் விளைவாய்க் குற்ற உணர்வின்றி பணத்திமிரின் அடையாளமாய் வெளியேற்றும் மத்திய தரவர்க்கத்திற்கு சுகதார வசதிகள் அனைத்தும் அரசு மானியத்துடன் வழங்குகிறது. இன்றும் கூட தண்ணீர் வசதியுடன் கூடிய கழிவறைகள் இந்திய ஜனத்தொகையில் 33% பேருக்குத்தான் எட்டியிருக்கிறது.

2003ல் சமூக நீதி மற்றும் மேம்பாட்டிற்கான அமைச்சகம் 6.7 லட்சம் மலம் அள்ளுபவர்கள் இருப்பதாக அறிவித்தது. 2010 க்குள் உலர் கழிப்பிடங்களை இல்லாமல் ஆக்க வேண்டும், கையால் மலம் அள்ளும் நடைமுறை ஒழிய வேண்டும் என்கிற வில்சனின் கனவை நடை முறைப்படுத்தும் பணிகள் தொடர்கிறது. ஆந்திராவில் வில்சன் தனது அமைப்பின் விஸ்தாரத்துடன் தீவிரமான போராட்டங்களை நடத்தினார். அந்த அமைப்பு, போராட்டம், வில்சன் ஆகிய முப்பரிமாணங்களுடன் வெளிவந்துள்ள கீதா ராமசாமியின் India Stinking மற்றும் மாரி மார்சல் தக்கக்காராவின் Endless Filth நமக்கு விரிவான பார்வைகளைப் புரிதல்களை முன்வைக்கிறது.

சபாயி கர்மசாரி ஆந்தொலன் தனது அமைப்பின் உறுப்பினர்களுடன் ஆந்திராவெங்கும் சென்று கெடு வைத்து உலர் கழிப்பிடங்களைத் தகர்த்து. அந்தத் தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு, மாற்றுப்பணி வழங்கும் திட்டங்களை நடை முறைப்படுத்த அரசை வற்புறுத்தியது. யெல்லா ரெட்டி மாவட்ட நீதிமன்றத்தில் இருந்த உலர் கழிப்பிடத்தைத் தகர்க்கச் சென்ற பொழுது நீதிபதி அனுமதி வழங்க மறுத்துவிட்டார். இது அரசாங்கத்தின் சொத்து என்றார் நீதிபதி. காவல் துறையிடம் சென்று 1993 சட்டத்தின் நகல்களை வழங்கி ஒரு வழியாக அனுமதி கிடைத்தது. பல ஆண்டுகள் அங்கு பணியாற்றியவர் தான் சம்மட்டியை எடுத்து முதல் அடியை வைத்து அன்றைய உடைப்பைத் தொடங்கினார். இது ஏதோ ஒரு காலத்தில் அல்ல மார்ச் 2005ல் நடந்த சம்பவமே.

சபாயி கர்மச்சாரிகளின் தேசிய ஆணையம் தனது விரிவான ஆய்வை மேற்கொண்டது. ராணுவம், பொதுத் துறை நிறுவனங்கள், மாநகராட்சிகள் எனப் பல துறைகளில் இன்றும் இழிவான நடைமுறைகள் உள்ளதை அது சுட்டிக்காட்டியது. ராணுவத்தின் பல முகாம்களில் இன்றளவும் கையால் மலம் அள்ளும் வழக்கம் உள்ளது. இதில் இந்திய ரயில்வே துறைதான் அதிகப்படியான ஆட்களை இத்தகைய பணியில் ஈடுபடுத்தி வருகிறது. ஏறக்குறைய பெரு நகரங்களில் உள்ள ரயில் நிலையங்களின் சுத்திகரிப்பு சார்ந்த பணிகள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. ரயில்வேயிடம் ரூ.6500 கூலி கிடைத்தது, யுரெகா ஃபொர்ப்ஸ் போன்ற நிறுவனம் தன் தொழிலாளிக்கு வழங்குவது வெறும் ரூ.2500 மட்டுமே. ரயில்வே நிர்வாகம் எத்தனை வாசகங்களை எழுதிப் போட்டாலும் நாங்கள் ரயில் நின்ற பின்புதான் மலம் கழிப்போம் என்கிற ஒரு பெரும் வர்க்கமே நம்முடன் வாழ்ந்து வருகிறது. இவர்களின் விளைவாய் ரயில்வேயில் உள்ள 40,000 பெட்டிகளிலிருந்து தினந்தோறும் 2.74 லட்சம் லிட்டர் மலம் வெளியேறுகிறது.

உச்ச நீதிமன்றம் தொடர்ந்து கண்டித்தும் ரயில்வே நிர்வாகம் செவிசாய்ப்பதாக இல்லை. 40,000 பெட்டிகளில் இதுவரை 261 பெட்டிகளில் மட்டுமே கலன்கள் பொறுத்தப்பட்டுள்ளன. 5 ரயில் நிலையங்களில் மட்டுமே முற்றிலும் நீராலான கழுவும் (Aprons) வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அடுத்த கட்டமாக 145 ரயில் நிலையங்களில் தண்ணீரைப் பீச்சி அடித்து மலத்தை அகற்றி சாக்கடையில் தள்ளும் நடைமுறை உள்ளது. நாடெங்கிலும் 6856 ரயில் நிலையங்கள் உள்ளன என்பது இங்கு குறிப்பிட்டாக வேண்டும். நிறைய செலவு ஆகும், ரயில்வேயிடம் அவ்வளவு பணம் இல்லை எனக் கைவிரிக்கிற மனோபாவம் தான் ரயில்வே அதிகாரிகள் மத்தியில் நிலவுகிறது. 2010ல் நடைபெறவிருக்கும் காமன் வெல்த்து போட்டிகளை முன்னிட்டு தில்லியைச் சுற்றியுள்ள 18 ரயில் நிலையங்களை அழகுப்படுத்த 4000 கோடி ரூபாயை அரசு ஒதுக்கியிருக்கிறது. மனம் இருந்தால் . . . மனம் இல்லையெனில் . . .

சென்னையில் மட்டும் 2800 கிமீ நீளத்திற்கு பாதாள சாக்கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. பயிற்சி, கருவிகள் என எதுவும் இங்கு வழங்கப்படுவதில்லை. இந்தியாவில் மட்டும் பாதாள சாக்கடைகளில் இறங்கி விஷ வாயுக்கள் தாக்கி இறப்பவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் தொழில் சார் நோய்வாய்ப்பட்டு இறப்பவர்களின் எண்ணிக்கை வருடத்திற்கு 22,000. காஷ்மீர், வட கிழக்கு, ராணுவம் என எத்தனை சொற்றொடர்களை அடுக்கினாலும் இந்த எண்ணிக்கையை சமன் செய்ய இயலாது.

1912ல் காலனிய முனிசிபாலிட்டி திட்டக் கூட்டம் நடைபெற்றது. அதில் ஒரு வெள்ளைய அதிகாரி கூறினார், நமக்கு தேவை மிகவும் அருமையான சுகாதார நடைமுறைகள் அல்ல, மாறாக குறைந்த செலவிலான திட்டங்களே. அந்த மனநிலைதான் இன்றும் நம் மத்தியில் புழங்குகிறது. மனித மான்புகளுக்கு மதிப்புடைய வழிமுறைகளைவிட, மலிவான நடைமுறைகளையே நாம் தேர்வுச் செய்கிறோம். மலம் அள்ளுவதைவிடக் கொடுமையானது நிலத்தடி மலத்தொட்டிகளை (Septic Tank) அப்புறப்படுத்தும் பணி. நம் சுற்றத்தில் மிக சகஜமாக இந்தப் பணி நடைபெறுகிறது. விஷ வாயுக்கள் நிரம்பிய தொட்டிகளில் இறங்கி வாளியால் அள்ளி ட்ரம்களில் நிரப்பி ஊருக்கு வெளியே அப்புறப்படுத்தி வருவார்கள்.

மலம் மக்கத் துவங்கியதும் அங்குள்ள ஆக்சிஜனை மீதேன் வாயுவால் இடம் மாற்றம் பெறுகிறது. ஹைட்ரஜன் சல்பைடும் அத்துடன் இணைகிறது. இந்த வாயுவை சுவாசித்தால் உடன் மூளைக்குச் செல்லும் ரத்தம் தடைபடும், மயக்கம் வந்துவிடும். மீதேன்வாயு உடன் தீப்பற்றக்கூடியது. இந்த வாயுக்களின் அடர்த்தியை அறியும் கருவிகள்கூட நம்மிடம் கிடையாது. தற்சமயம் புதிய எந்திரங்கள் பொறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் மலத்தொட்டிகள் சுத்தம் செய்யும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளன. அவைகளில் மூலதனத் தொகை மிகவும் அதிகமாக இருப்பதால் தலித்துகளின் கையிற்கு அது எட்டாக் கனியாக உள்ளது. ஹாங்காங்கில் பாதாள சாக்கடையில் இறங்கு பவருக்கு விண்வெளிக்கு செல்பவருக்கு ஒப்பான உடைகள் வழங்கப்படுகிறது. பாதாள சாக்கடை நன்கு ஒளியேற்றப்பட்டுள்ளன. காற்றோட்டம் முறைப்படுத்தப்பட்டுள்ளது. பாதாள சாக்கடைக்குள் இறங்குபவர் 15 உரிமங்கள் பெற்றிருக்க வேண்டும்.

Cleaning மலம் அள்ளுபவர்களைப் புனரமைக்கும் திட்டங்களை ஆராய குழுக்களை அமைக்க நம் அரசுகள் தவறவில்லை. 1949 முதல் 1976வரை ஐந்து குழுக்கள் அமைக்கப்பட்டன. 1949ல் அமைக்கப்பட்ட பார்வே கமிஷன் (Barve Commission) மலம் அள்ளுபவர்கள் இந்தப் பணியினைச் செய்ய மறுக்கவில்லையே என்றார். மலம் அள்ளுபவர்கள் தொடர்புடைய பிரச்சினையை ஆராய பார்ப்பனியரை அமர்த்தினால் வேறு என்ன நடக்கும். 10வது ஐந்தாண்டுத் திட்டத்தில் இத்தொழில்சார் தலித்துகள் வாழ்க்கைப் புனரமைப்புக்கு 460 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால் அதில் 146.04 கோடிகள் மட்டுமே வந்து சேர்ந்தது. தமிழகத்திலும் அந்தத் தொகை செலவிடப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டது. தொடர்ந்து பல மாநில அரசுகளும், ரயில்வே நிர்வாகமும் உச்சநீதிமன்றத்திடம் மனிதர்கள் மனித மலத்தை அள்ளும் நடைமுறை ஒழிக்கப்பட்டுவிட்டதாகப் பொய் சொல்கிறது. தமிழக அரசு அவ்வாறு பொய்யான கூற்றுகளையே நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. இப்படியான எல்லா வாசகங்களையும் சபாயிகர்மசாரி ஆந்தொலனின் தொண்டர்கள் புகைப்பட மற்றும் வீடியோ ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தினர்.

மலம் அள்ளுதலை யாரும் விருப்பத்துடன் செய்ய இயலாது. சமீபத்தில் நரேந்திர மோடி மலம் அள்ளுதல் ஒரு ஆன்மீகத் தொண்டைப் போன்றது என்றார். ஏறக் குறைய காந்தியும் இதை ஒத்த கருத்தையே முன்வைத்தார். சுத்தம் செய்யும் பணி தெய்வீகமானது, ஒரு தாய் தன் குழந்தைக்குச் செய்யும் சேவையைப் போன்றது என்றார். சுழற்சிமுறையில் இங்குள்ள ஜாதிகள் அனைவரும் இந்த ஆன்மீகப் பணியைச் செய்யலாம் என ஏனோ எவரும் முன்வைக்கவில்லை. திண்ணியங்கள்தான் இன்றைய எதார்த்தங்களாக இருக்கும் பட்சத்தில் இந்த ஜாதியப் படிநிலையை ஒழிக்காமல் இங்குள்ள இழிவுகளைப் போக்கிக்கொள்ள இயலுமா?

இவைகளை எல்லாம் கடந்து ஒரு மலம் அள்ளும் தொழிலாளியின் மகன்/மகள் கல்வி பெற்று மேற்படிப்பிற்கோ, வேலை கிடைத்தோ உயர் கல்வி நிறுவனங்களில்/ பொதுத் துறையில் நுழைந்து விட்டால் அல்லது முயன்றால் என்ன நடக்கும் என்பதனை நாம் கடந்த ஓர் ஆண்டாகக் கண்கூடாகப் பார்த்தோம். இந்தியாவின் நேசக் கரங்கள், ஊடகங்களின் குணமளிக்கும் தொடுதல் என இட ஒதுக்கீட்டு அறிவிப்பிற்குக் கிடைத்த எதிர் வினைகளை இந்தத் தேசம் கண்டது. மொத்தக் கட்டுமானத்தின் தரமும் கெட்டுப் போச்சு என இவர்கள் மாரடித்து அழுவது ஆபாசங்களின் உச்சம் அல்லவா. இந்து மதத்தின் சகல கரங்களும் அரசை, அதிகாரத்தைத் தன் பிடியில் வைத்திருக்க விழிப்புடன் இருக்கிறது.

திருவிழாக்கள் வந்துவிட்டால் இவர்களுக்குப் பெரும் பிரச்சினையே. சித்திரைத் திருவிழா, மகா மகம், கந்த சஷ்டி, அரசியல் மாநாடு அல்லது லட்சக்கணக்கில் மக்கள் கூடும் எந்த நிகழ்வாக இருந்தாலும் அந்த ஒரு வாரகாலம் சோறுதிங்க இயலாது என்பது அவர்களுடன் உரையாடுகையில் புலப்படுகிறது. பெரும் திருவிழாக்களின் பொழுது நகரமே பீயால் மொழுகப்படுகிறது. ஆறுகள், தெருக்கள், சந்துகள், மறைவிடங்கள் என நகரமே கழிப்பிடமாக உருமாறுகிறது. இந்தப் பீயை அள்ளி அப்புறப்படுத்தும் வரை உறக்கம் இல்லை, சோறு தண்ணீர் இல்லை. அய்யப்பசாமி, பழனி சீசன் வந்துவிட்டால் ஊரை விட்டு ஓடிவிடலாம் போல் உள்ளது தான் ஆனால் குடும்பத்தை மனதில் வைத்துத்தான் இந்தக் கருமத்தைச் செய்து தொலைக்க வேண்டியுள்ளது என்பதே அவர்களின் மன வேதனையாக உள்ளது.

ஹரியானாவில் ப்ரின்ஸ் என்கிற சிறுவன் ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த பொழுது அதை நேரடி ஒளிபரப்பாகவே ஊடகங்கள் ஒளி பரப்பின. அப்படியிருக்க ஏன் பாதாள சாக்கடையில் வருடந்தோறும் இறக்கும் 22,000 பேரில் எவரையும் ஊடகங்கள் காட்டுவதில்லை. விவசாயிகள் தற்கொலையைப் போல் இதனையும் இந்தத் தேசம் சௌகர்யமாய் மறந்திடவே விரும்புகிறது. மொழியியலும் தன் பங்கிற்கு உதவிகள் செய்தது. Manual Scavengers என்கிற பதம் Sanitary Workers ஆக உருமாறியது. Human Excreta உருமாறி Night Soil ஆனது. Night Soil Cleaners என்றுதான் இவர்கள் ரயில்வேயில் அழைக்கப்படுகிறார்கள். நவதாராளவாத அரசுகள் பண்பட்ட மொழியில் தான் பேசும். நவதாராளவாத அரசுகளின் பண்பட்ட மொழி இது.

அரசியல் செயல்பாடுகளில் மிகுந்த ஈடுபாடுடைய தலித்துக்கள் மற்றும் விளிம்புநிலை மக்களுக்கு அரசியல், அரசு சார்ந்த சலுகைகள் கிடைப்பதில்லை. ஆனால் அரசியல் ஒரு சாக்கடையென கூறும் மத்தியத்தர வர்க்கம்தான் அரசாங்கத்தின், அரசியலின் சகல பலன்களையும் அனுபவிக்கிறது. சுதந்திரம் பெற்று 62 ஆண்டுகள் ஆகும் தருவாயில் தன் குடிமக்களுக்குக் கக்கூஸ்கூட கட்டிக் கொடுக்க வக்கற்ற தேசமாகவே நம் தேசம் விளங்குகிறது. கழிவறையைக் கட்டத் தெரியாத தேசம் மறுபுறம் வல்லரசாகத் துடிக்கிறது. நல்ல சுகாதாரமான கழிவறைகள், பாதாள சாக்கடைகள், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் எனச் சுகாதாரம் சார்ந்து இயங்கும் விஞ்ஞானிகளை நாம் உருவாக்கத் தவறிவிட்டோமா, அல்லது இனம் காணத் தவறிவிட்டோமா? சுகாதாரம் சார்ந்த, மக்கள் சார்ந்த இயங்கும் விஞ்ஞானி எவரையும் இந்தத் தேசத்தின் ஜனாதிபதியாக நாம் கற்பனை செய்து பார்க்கும் காலம் வருமா . . .

நாடெங்கும் இந்த இழிவை போக்க பயணமாக வரும் பெசவாடா வில்சனுடன் உரையாடும் பொழுது பல விதமான அனுபவங்களை அவர் பகிர்ந்து கொண்டார். மொத்தம் உள்ள 602 மாவட்டங்களில் தற்சமயம் 140 மாவட்டங்களில் கையால் மலம் அள்ளும் முறை ஒழிக்கப்பட்டுள்ளது. இந்த இழிவைப் போக்குவதற்கும் சற்றும் சளைத்ததல்ல அவர்களுக்கு சுயமரியதையுடன் கூடிய மாற்று வாழ்வுரிமைகளை பெற்றுத் தருவது. தில்லியில் 60கிமி மெட்ரோ ரயிலுக்கு 10,570 கோடி ரூபாய் செலவிடும் அரசு, மலம் அள்ளும் சக மனிதர்களின் வேதனையை புரிந்துகொள்ள மறுக்கிறது. வாழ்வுரிமை திட்டங்களுக்கு பணம் ஒதுக்க மறுக்கிறது.

நம் சுற்றுப்புறத்தில் மாந்தர்கள் இத்தகைய இழிவுகளுடன் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கும் சம காலத்தில்; சுயமரியாதையுடன் கூடிய நிறைவான வாழ்வு நம் சமூகத்திற்கு சாத்தியமா. நாம் ஆரோக்கியமான சூழலில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோமா, இதற்கும் நமக்கும் தொடர்பில்லை எனக் கூறி நாம் ஒதுங்கி வாழ்தல் தகுமா. தமிழகத்தின் ஜனத்தொகை 20% பேர் தலித்துக்கள், அவர்களை ஜாதி எனும் கொடிய அமைப்பின் மேலாதிக்கத்தின் கீழ்தான் மலத்தை கையால் அள்ளும் வழக்கம் நிலைப் பெற்றுள்ளது.

அடுத்து நம் வசிப்பிடத்தில் யாரேனும் ஒருவர் பாதாள சாக்கடையிலிருந்து வெளியேறி வரக் கூடும், அவரின் முகத்திலும் கேசத்திலும் அப்பியிருக்கும் மலம் நம்முடையதாகக்கூட இருக்கக்கூடும்.
நன்றி- Endless Filth, India Stinking, Tehelka
--
Until lions have their own historians,
histories of the hunt will glorify the hunter.

- அ. முத்துக்கிருஷ்ணன் ([email protected])

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com