Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கட்டுரை

குஜ்ஜர் போராட்டம் - உரிமைப் போரின் அணையா நெருப்பு
அ. முத்துக்கிருஷ்ணன்


ராஜஸ்தான் மாநிலத்தில் வெப்பம் அலை அலையாய் வெளி எங்கும் நடனமாடிக்கொண்டிருந்தது. பாலை நிலப்பரப்பெங்கும் ஏறுமுகத்தில் இருந்த மே மாத வெப்பம் அந்த நிலத்தில் வாழ்பவர்களுக்கு சகஜமான ஒன்றே என்றாலும் இந்த மே மாதம் வரலாறு கண்டிராத புதிய அனுபவத்தை அளித்தது. அரசாங்கம் தன் மொத்த புஜபலத்தை, தந்திரத்தைப் பிரயோகித்தும் எதுவும் அவர்களின் மனம்போல் நிகழவில்லை. அரசு எந்திரத்தைக் கண்டு மிரண்டு ஓடாது துணிவுடன் தங்களின் பாதங்கள் நிலத்தில் பாவ, கையில் பெரும் தடிகளுடன் ஒரு மக்கள் சமூகம் அணிதிரண்டு நின்றது.

Gujjar குஜ்ஜர் இன மக்களின் நூற்றாண்டுக் காலக் கோரிக்கையை அந்த மாநிலத்தை இதுகாறும் ஆட்சி செய்தவர்களும் சரி, மத்திய அரசை அலங்கரித்தவர்களும் சரி, செவிமடுக்காததன் விளைவாகத்தான் இந்த முறை கோரிக்கையை நிறைவேற்றும் திண்மம் முகத்தில் ரேகைகளாய்ப் படர்ந்தோட அவர்கள் அணிவகுத்தனர். வெள்ளைத் தலைப்பாகைகள் மேகங்களைப் போல தேசிய நெடுஞ்சாலை - ரயில் தண்டவாளம் என திக்கெல்லாம் மிதந்தது.

ராஜஸ்தான் மாநிலத்தில் வாழும் குஜ்ஜர் இன மக்கள் தங்களின் கோரிக்கையைத் தொடர்ந்து பல வடிவங்களில் போராடி எந்தப் பயனும் கிட்டவில்லை. மாநிலத்தில் மற்றும் மத்தியில் ஆட்சி செய்தவர்கள் இந்தக் கோரிக்கையின் நியாயத்தைக்கூட விளங்கிக்கொள்ள முயற்சிக்கவில்லை. 1965-ல் குஜ்ஜர் மகாசபை எனும் அவர்களது அமைப்பின் மாநாடு டோல்பூரில் நடந்தது. அந்த மாநாட்டில் குஜ்ஜர் சமூகம் தன்னைப் பழங்குடி இனமாக அறிவிக்கக் கோரி மிக அழுத்தமாய் கோரிக்கையை முன்வைத்தது. அதன் தொடர்ச்சியாய் 1967ல் அமைக்கப்பட்ட 'சந்த் குழு' பழங்குடி இனமாக ஒரு சமூகத்தை அறிவிப்பதற்கான அடிப்படைத் தகுதிநிலைகள் என்னென்ன என்பதனைப் பட்டியலிட்டது. பல இனக்குழுக்கள் பெரும் பரிசீலனைக்குப் பின் பழங்குடியினராக அறிவிக்கப்பட்டனர். இந்தக் குழுவின் அறிவிப்பையொட்டி தங்களின் வாழ்நிலையை மாற்றி அமைக்கும் செய்திகள் கிட்டும் என்கிற ஏக்கம் நிராசையாய்ப் போனது.

குஜ்ஜர் மகாசபை தனது நூற்றாண்டு விழாவை 1986-ல் கொண்டாடியது. நூற்றாண்டு விழாவையொட்டி அந்த அமைப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடுத்தது. அந்த வழக்கை நீதிபதி ஆர்.என்.வர்மா விசாரித்து பிப், 8-1998 அன்று தீர்ப்பை வழங்கினார். அந்தத் தீர்ப்பில் குஜ்ஜர் இனத்திற்குப் பழங்குடியினத் தகுதிநிலை வழங்கும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்திற்கு இல்லை என்றும், இந்தப் பிரச்சினை இந்திய ஜனாதிபதியின் அதிகாரத்திற்கு உட்பட்டது என எடுத்துரைத்தார். வழக்குகள், மனுக்கள், சுவரொட்டிகள், விளம்பரப் பலகைகள், துண்டறிக்கைகள் எனப் பல வடிவங்களை- கருவிகளை ஊக்கமிழக்கச் செய்த பின்தான் அந்தச் சமூகம் நவீனக்காலக் கருவிகள் நோக்கிப் பயணப்பட்டது.

குஜ்ஜர் மக்கள் ராஜஸ்தான் மற்றும் அதன் அண்டை மாநிலங்களில் வாழ்ந்து வருகிறார்கள். வரலாறு நெடுகிலும் ஏராளமான ஆட்சி மாற்றங்களைச் சந்தித்து வந்த சமூகம் இது. காலனிய காலத்தில் களவை தொழிலாகக் கொண்டவர்கள் என இவர்களின் மீது குற்றப்பரம்பரைச் சட்டம் பாய்ந்து கிடந்தது. பல குறுநிலப் பகுதிகளை குஜ்ஜர்கள் ஆண்டதற்கான சாட்சியங்கள் வரலாறு நெடுகிலும் சிதறிக் கிடக்கிறது. பாபர், அலாவுதீன் கில்ஜி எனப் பல படையெடுப்புகளை இந்தக் சமூகம் எதிர்கொண்டுள்ளது. தக்காண குஜ்ராத் வரை இவர்களின் ஆட்சி நீண்டு கிடந்தது. வரலாறு நெடுகிலும் இவர்கள் அடர் வனங்களை இருப்பிடங்களாகக் கொண்டு மேய்ச்சலை தங்கள் அடிப்படை வாழ்வியலாகக் கொண்டுள்ளனர். வனம் சார்ந்த விவசாயத்திலும் இச்சமூகம் ஈடுபட்டுள்ளது. ஏராளமான மானுடவியலாளர்கள் மற்றும் வரலாற்று அறிஞர்கள் குஜ்ஜர்களைப் பழங்குடியினராகவே குறிப்பிட்டுள்ளனர்.

குஜ்ஜர்களின் மீது தொடர்ந்து அரசமைப்பு அலட்சியம் கொள்ளக் காரணம் அவர்களது ஜனத்தொகையே. அது 60-65 லட்சங்களே. அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை இவர்களது ஜனத்தொகை ஏறத்தாழ 20 லட்சங்களை எட்டுகிறது. 20 லட்சம் வாக்குகள் தேர்தல் ஜனநாயகத்தில் பொருட்படுத்தத்தக்கதில்லையா? இத்தனை குறைந்த ஜனத்தொகை உள்ள இனக்குழுவுக்கு உரிமைகளுடன் வாழும் தகுதி இல்லையா? இல்லை ஒரு பெரிய அணையைக் கட்டி வளர்ச்சியின் பெயரால் இவர்களை மூழ்கடித்துவிட்டால் நவீன அரசுகளுக்குத் தொல்லை ஓய்ந்துவிடும்.

குஜ்ஜர்களை ஒத்த வாழ்நிலை கொண்ட சமூகம்தான் 'மீனா.' இந்த இரு சமூகங்களும் கிராமங்களில் ஒன்றாய்த்தான் சமூக அந்தஸ்து கொண்டுள்ளனர். தொழில், வீடு, உடை, என அனைத்தில் இரு சமூகங்களையும் வேறுபடுத்திட இயலாது. வணங்கும் தளங்களில் செய்யப்படும் சடங்குகள் தொடர்புடைய உரிமையில்கூட வேறுபாடுகள் கிடையாது. ஆனால் மீனா இன மக்களின் ஜனத்தொகை அரசியலாகப் பொருட்படுத்தத்தக்கதாக, விளைவைத் தருவதாக உள்ளதால் 1956-ல் அவர்களுக்குப் பழங்குடியினத் தகுதிநிலை வழங்கப்பட்டது. 1956க்குப் பின் மீனாக்களின் சமூகநிலை பெரும் மாற்றங்களைக் கண்டது. அந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ராஜஸ்தான் சட்டமன்றத்தில் 26 இருக்கைகளைக் கைவசம் வைத்துள்ளனர். மறுபுறம் குஜ்ஜர்கள் 8 பேர் மட்டுமே சட்டமன்றத்துள் நுழைந்துள்ளனர்.

அமைச்சரவையிலும், அரசியல் ஆதிக்கம் செலுத்தக்கூடிய பல தளங்களில் உள்ள மீனாக்கள்தான் குஜ்ஜர்களுக்குப் பழங்குடியினத் தகுதி நிலை வழங்கப்படாமல் பார்த்துக்கொண்டதில் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். 1956 முதல் அவர்கள் அனுபவித்து வரும் சலுகைகளைப் பகிர்ந்திட நேரும் என்பதே அவர்களின் அச்சம், ஏறக்குறைய 100க்கும் மேற்பட்ட மீனா சமூகத்தைச் சேர்ந்தவர்கள் I.A.S அதிகாரிகளாக உள்ளனர்.

குஜ்ஜர்கள் ஒரு காலத்தில் களவை தொழிலாக கொண்டிருந்தார்கள். மழை காலத்தில் விவசாயம், மேய்ச்சலும் ஏனைய நாட்களில் களவுதான் நடைமுறை. தில்லியை சுற்றிலும் உள்ள பகுதிகள் இவர்களின் கைவசமே. வெள்ளையர்கள் கூட இவர்களின் பிடியிலிருந்து தப்பவில்லை. வெள்ளையர்கள் குஜ்ஜர்களை தில்லியின் சொகிதார்களாக நியமித்திருந்தனர். 1857 எழுச்சியின் போது தில்லிக்குள் நுழைந்த படைகளுக்கு முக்கிய சாலைகளை அடையாளம் காட்டியது குஜ்ஜர்களே. பல காலம் அடக்குமுறையையும் கண்காணிப்பையும் அனுபவித்த சமூகம் இது. இவர்களைப் பற்றி ஏராளமான ஆய்வுகள் வெளிவந்துள்ளன. Imperial Gazetter of India மற்றும் Rajputana Gazetter குஜ்ஜர்களை பற்றிய குறிப்புகள் அடங்கிய முக்கிய நூல்கள். பல மானுடவியலாளர்கள் மற்றும் வரலாற்று அறிஞர்கள் குஜ்ஜர்கள் குறித்து காத்திரமான பதிவுகளை எழுதியுள்ளனர். ரசல், ஹிராலால், ஜெம்ஸ் டோட், வில்லியம் க்ருக், வில்லியம் டால்ரிம்பில் ஆகியோர் அதில் குறுப்பிடத்தக்கவர்கள்.

விவசாய பழங்குடிகள், இயற்கை கோட்பாட்டாளர்கள், வனம்சார் பழங்குடி, மெய்ப்பர்கள் என பல அடைமொழிகளை கொண்டு குஜ்ஜர்கள் அழைக்கப்படுகிறார்கள். இன்றுகூட குஜ்ஜர்கள் வனங்களில் மற்றும் தொலைதூர வசிப்பிடங்களில் தான் வசிக்கிறார்கள். அவர்களின் உடம்பில் இருக்கும் பல நோய்க் கிருமிகள் கூட மிருகங்களிடமிருந்து தொற்றியவையே. மிருக பலியை வழக்கமாக அவர்கள் கொண்டுள்ளனர். தங்கள் சமூகத்து பெரியவர்கள் முன்னிலையில் தான் எல்லாத் தகராறுகளும் முடிவுக்கு வரும். குஜ்ஜர்கள் தங்கள் உடலில் விருட்சங்கள், மிருகங்கள் ஆகிய உருவங்களையே பச்சை குத்திக்கொள்கின்றனர்.

குஜ்ஜர்கள் ஹிந்து கடவுள்களை வணங்குவதில்லை. அவர்களின் ஒவ்வொரு பிரிவும் தனக்கான தெய்வத்தை கொண்டுள்ளது. எருமை மாட்டுத்தோலால் செய்யப்பட்ட பல கருவிகளைக் கொண்டே விவசாயம் செய்கிறார்கள். கோஜ்ரி இவர்களுக்கான தனித்த மொழி. ரசியா, கனாஹியா போன்ற பல மரபான நாட்டுப்புற பாடல்கள், நடனங்களை இவர்கள் வாழ்வின் பிரிக்க முடியாத அங்கமாகவே உள்ளன. உடை, தலைப்பாகை, செருப்பு என இவர்களின் வாழ்வியல் கூறுகள் அனைத்தும் மேய்ச்சலை பிரதிபலிப்பவையாகவே உள்ளன.

நகர வாழ்கையின் சாயல் படியாதவர்களாக இதுவரை வாழ்ந்து வருகிறார்கள். குஜ்ஜர்கள் வெளி ஆட்களுடன் அதிகம் உறையாடுவதோ கிடையாது. மிகுந்த கூச்ச சுபாவம் கொண்டவர்களாகவே உள்ளனர். இவர்களுக்கு தங்கள் இனக் குழுவுக்கு வெளியே திருமண உறவுகள் (Endogamous) கிடையாது. மரணத்திற்கு விருந்து கொடுப்பதை பழக்கமாக கொண்டுள்ளவர்கள் குஜ்ஜர் மக்கள். இவை இவர்களின் கோரிக்கைக்கு நம்மிடம் உள்ள சில சான்றுகள். அவர்களின் வாழ்வியல் இன்று வரை நவீனத்தின் சாயல் படியாது உள்ளது, ராஜஸ்தான் அரசுக்கு ஏனோ இவை எதுவும் விளங்கவில்லை.

குஜ்ஜர் சமூகத்தின் ரௌத்திரம் இன்று திடீரெனப் பெருக்கெடுத்து ஓடக் காரணங்கள் எவை எனப் பார்க்கலாம். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் பொழுது பி.ஜே.பி தோல்வியின் ஜுரத்தில் கைக்குக் கிடைத்த அஸ்திரத்தை எல்லாம் மனநோயாளியைப் போல் பாவித்தது. ராஜஸ்தானின் பெரும் வாக்கு வங்கியான 'ஜாட்'களை காங்கிரஸ் கைப்பற்றிவிட்ட சூழ்நிலையில் விடுபட்ட சாதியினரை எல்லாம் வென்றெடுக்க முயன்றார் வசுந்திரா ராஜே. வசுந்திரா ராஜேயின் மகன் ஜால்வர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர், அவர் ஒரு குஜ்ஜர் இனப் பெண்ணைத் திருமணம் செய்துள்ளார். இந்தப் பின்புலத்தை வாக்குகளாகத் தனக்குச் சாதகமாக மாற்ற முயன்ற ராஜே பிரச்சாரத்தின் பொழுது குஜ்ஜர்களை சம்பந்தி என்றே அழைத்தார். தன் சம்பந்தியின் நீண்ட நாள் கோரிக்கையான பழங்குடியினத் தகுதிநிலையைத் தேர்தல் வாக்குறுதியாக பின் விளைவுகளைக் கணக்கில் எடுக்காது வழங்கினார். இந்த அறிவிப்பை இறுகப்பற்றிய குஜ்ஜர் சமூகம் மெல்ல மெல்ல தனது பிடியை இறுக்கியது.

குஜ்ஜர் சமூகத்தின் போராட்டத்தைத் தலைமையேற்க, புதிதாக ஒருவர் வந்து சேர்ந்தார். கரண்கி மாவட்டத்தின் முண்டியா கிராமத்தில் பிறந்த கிரோரி சிங் பைன்ஸ்லாதான் அவர். அவரது தந்தை பிரிதானியப் படையில் பணியாற்றியவர். ராணுவப் பின்புலம் கொண்ட குடும்பம் என்பதால் பைன்ஸ்லாவும் 1965-ல் இந்திய ராணுவதில் இணைந்தார். பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் உடனான போர்களில் முன்னணியில் பணியாற்றினார். வடகிழக்கு, காஷ்மீர் தொடங்கி இந்தியாவின் பல பகுதிகளில் பணியாற்றிய பைன்ஸ்லா கமாண்டராகப் பதவி உயர்வு பெற்றார். ராணுவத்திலிருந்து பதவி ஓய்வு பெற்று, தன் கிராமம் திரும்பிய பைன்ஸ்லா தன் சமூக மக்களின் வாழ்நிலை மேம்பட களப்பணி செய்ய முடிவு செய்தார். தன் சமூகம் கல்வி அறிவு பெற்றாலொழிய அது சாத்தியம் இல்லை என்பதை நன்கு உணர்ந்தவர் பைன்ஸ்லா. மெல்ல மெல்ல குஜ்ஜர் சமூகத்தை அணிதிரட்டத் தொடங்கினார்.

தேர்தல் வாக்குறுதியை ராஜே நிறைவேற்றாவிட்டால் கடும் விளைவுகளை, நெருக்கடிகளைச் சந்திக்க நேரும் என பைன்ஸ்லா வெளிப்படையாகவே அறிவித்தார். ஏற்கனவே 2005-ல் அமைக்கப்பட்ட 'கதாரியா' கமிட்டி தனது முடிவு எதையும் சமர்ப்பிக்காத சூழலில் குஜ்ஜர்கள் தங்களைத் தீவிரமான போராட்டத்திற்குத் தகவமைத்துக் கொள்ளத் துவங்கினர்.

2007 மே மாதம் 29ஆம் தேதி படொலி நகரத்தில் குஜ்ஜர்கள் பைன்ஸ்லாவின் தலைமையில் அணிதிரண்டனர். போராட்டம் காலை 11 மணிக்கு என அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் காலை 7 மணி அளவில் அங்கு குழுமியிருந்தவர்களை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்தினார் எஸ்.பி கல்யான் மல்மீனா. ஆறு குஜ்ஜர்களின் உடல் மண்ணில் சரிந்தது. மீனா சமூகத்தைச் சேர்ந்த காவல்துறை ஏட்டு ஒருவரை போராட்டக்காரர்கள் கொன்றுவிட்டதாகவும் அதனால்தான் காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியதாக மாநிலம் எங்கும் தகவல் பரப்பப்பட்டது. அடுத்த நான்கு நாட்கள் 26 குஜ்ஜர்களின் உடல்களை அரசு துவம்சம் செய்தது. குஜ்ஜர்கள் அந்த வழியாகச் செல்லும் தேசிய நெடுஞ்சாலையைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொணர்ந்தனர். சாலை எங்கும் பெரும் தடுப்புகளை ஏற்படுத்தி போக்குவரத்தை ஸ்தம்பிக்கச் செய்தனர்.

இவைகளைக் கண்டு அரசு எந்திரம் கதிகலங்கிப் போய் நிற்கும் சூழலில், அரசை விடத் துரிதமாய் மீனா சமூக மக்கள் இந்தப் போராட்டத்தை ஒடுக்கக் களமிறங்கினர். காவல்துறை சாலை எங்கும் சிதறிக் கிடந்த தடுப்புகளை அப்புறப்படுத்தியது. காவல்துறையுடன் இணைந்து மீனா சமூக மக்கள் குஜ்ஜர்கள் மீது பல இடங்களில் கொலை வெறித் தாக்குதல் தொடுத்தனர். குஜ்ஜர் - மீனா சமூகத்தினரிடையே நேரடிக் கலவரத்தை ஏற்படுத்திடுவதுதன் அரசாங்கத்தின் நோக்கமே. படோலி நோக்கிச் செல்ல முயன்ற பத்திரிகையாளர்களைக் கூட மீனாக்கள் தடுத்து நிறுத்தினர். அரசாங்கத்திற்கு ஆதரவாக மீனாக்கள் களமிறங்கியதால் அவர்கள் ஆசிர்வதிக்கப்பட்டார்கள். குஜ்ஜர்களின் மீது பல செக்சன்களில் தினமும் வழக்குகள் பாய்ந்தது. சாவு எண்ணிக்கை 40- ஐத் தாண்டிய பின்புதான் மாநில பி.ஜே.பி அரசு, முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி ஜஸ் ராஜ் சோப்ரா தலைமையில் குழு அமைத்தது (8 ஜுன்- 2007). அந்தக் குழு தீவிரமாய் ராஜஸ்தான் முழுவதும் வாழும் குஜ்ஜர்களின் வாழ்நிலையை ஆய்வு செய்தது. அதன் 300 பக்க அறிக்கை டிசம்பர் 2007ல் வெளியிடப்பட்டது.

சோப்ரா கமிட்டியின் ஆய்வு விரிவாகச் செய்யப்பட்டது, 20 மாவட்டங்களில் வசிக்கும் 29,747 குடும்பங்களின் வாழ்நிலையை அவர்கள் ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர். 33% கிராமங்களில் சாலை வசதிகள் இல்லை. குஜ்ஜர்கள் வசித்து வந்த 20 மாவட்டங்களில் மொத்தம் 6 கிராமங்களில்தான் மின்சார வசதி இருந்தது. 83% அவர்களின் வசிப்பிடங்களில் மின்சார வசதி இல்லை, 73.3% அவர்களின் வசிப்பிடங்களில் தபால் வசதி இல்லை, 99% குஜ்ஜர் பெண்களுக்கு எழுத்தறிவு இல்லை, 30% ஆண்கள் அடிப்படைக் கல்வி அறிவு பெற்றிருந்தனர். 11.5% கிராமங்களில் ஆரம்பக்கல்விக் கூடங்கள் இல்லை, 71% கிராமங்களில் நடுநிலைப் பள்ளிகள் இல்லை, 77% குஜ்ஜர் குடும்பங்கள் தங்களின் மரபான தொழில்களான மேய்ச்சல் மற்றும் ஈடுபட்டுள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தின் மொத்தப் பணியிடங்களில் குஜ்ஜர்களின் பங்கு வெறும் 2% மட்டுமே. ராஜஸ்தான் மாநிலத்தில் பதிவு பெற்ற வாகனங்களில் 3.07% மட்டுமே குஜ்ஜர்கள் வசம் உள்ளது.

Dead bodies இவை எல்லாம் நமக்கு அந்தச் சமூகத்தின் வாழ்நிலையைப் படம்பிடித்துக் காட்டுகிறது. ஆனால் இத்தனை விபரங்களை வெளியிட்ட சோப்ரா குழு தன் அறிக்கையின் இறுதியில் குஜ்ஜர்களுக்குப் பழங்குடியினத் தகுதிநிலை வழங்க இயலாது என்றது. 1967 சந்த் குழுவின் பரிந்துரைகளின்படி குஜ்ஜர்கள் பழங்குடியினத் தகுதி நிலைக்குத் தகுதி அற்றவர்கள் என்றது. அதன் பின் குஜ்ஜர் சமூகம் பின் தங்கியுள்ளது ஆகையால் அரசு பல வளர்ச்சிப் பணிகளை அவர்களுக்காக மேற்கொள்ள வேண்டும் எனப் பரிந்துரைத்தது. இந்த அறிக்கையை ஏற்பதில்லை என அந்தச் சமூகம் அறிவித்தது. பல கிராமங்களில் அந்தச் சமூகம் மேற்கொள்ள வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கையைப் பற்றிய உரையாடல்கள் துவங்கியது.

இந்த ஆண்டு தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி மீண்டும் குஜ்ஜர்கள் மே இறுதியில் போராட்டத்தில் குதித்தனர். கடந்த ஆண்டைவிட அணிதிரள்வு பலமாகவே இருந்தது. மும்பை - தில்லி இடையேயான பிரதான ரயில் தண்டவாளங்களை குஜ்ஜர்கள் கைப்பற்றினர். முதலில் போராட்டம் பயானா மற்றும் சிக்கந்திராவில் மட்டுமே திட்டமிடப்பட்டது, ஆனால் அது மெல்ல வேறு பகுதிகளுக்குப் பரவியது. 2000 துணை ராணுவத் துருப்புகள், 200 துரித நடவடிக்கைப் படை, 300 மத்திய ரிசர்வு படை எனப் புதிய புதிய சீருடையில் படைகள் நகரங்களுள் நுழைந்தது. வண்ண உடைகளைப் பார்த்ததும் மனதளவில் மிரண்டு போய் இடத்தைக் காலி செய்யும் நகரத்து மாந்தர்கள் அல்லர் இவர்கள்.

போராட்டத்தை ஒடுக்க அரசு பல தந்திரங்களைக் கையாண்டது, காலனிய காலத்தில் பழங்குடியினரை எவ்வாறு அணுகினார்கள் என ஒரு குழு பழைய புத்தகங்களின் துணையை நாடியது. பயானாவில் போராட்டத்தின் முதல் நாளில் மட்டும் 15 குஜ்ஜர்கள் மற்றும் ஒரு காவல்துறையைச் சேர்ந்தவர் கொல்லப்பட்டார். இந்த ஆண்டு பெண்கள் பெரும் எண்ணிக்கையில் வீதியில் இறங்கினர். மெல்ல அண்டை மாநில குஜ்ஜர்கள் ஆதரவு தெரிவிக்கும் வகையில் குரல் எழுப்பினர். உத்தரபிரதேசம், ஹரியானா, தில்லி எனத் திசையெல்லாம் கோபத்தின் அலைகள். தேசிய தலைமைப் பகுதியின் (National Capital Region) போக்குவரத்து முற்றாய் பாதிக்கப்பட்டது.

தில்லிப் போராட்டக்காரர்களைக் கட்டுக்குள் கொணர மட்டும் 45,000 துணை ராணுவத் துருப்புகள் வலம் வந்தன. மத்திய பிரதேசம், காஷ்மீர் ஆகிய பகுதிகளுக்குப் பதற்றம் பரவியது. வடக்கு ரயில்வே 10 க்கும் மேற்பட்ட ரயில்களை ரத்து செய்தது. தேசிய நெடுஞ்சாலை 11ல் போக்குவரத்து 10 நாட்களாய் ஸ்தம்பித்துப் போனது. ராஜஸ்தானை ஆளும் பி.ஜே.பி அரசு, சூழ்நிலை நாளுக்கு நாள் மோசமாவதை வேடிக்கை பார்த்தது. இத்தனை நடந்த பின்னும்கூட குஜ்ஜர் ஆரக்ஷன் சங்கர்ஷ் சமிதியுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட முதல்வர் ராஜேவுக்கு மனம் வரவில்லை.

ஒரு வாரம் முன்னர் குஜ்ஜர்கள் பெரும்பகுதியாக வசிக்கும் ஆறு மாவட்டங்களான ஆல்வர், ஜால்வர், டோல்பூர், சவாய், மதோபூர்க்கு 282 கோடி ரூபாய்க்கான வளர்ச்சித் திட்டங்களை ராம் தாஸ் அகர்வால் குழு அறிவித்தது. இந்த உதவிகளை, கண் துடைப்பு என குஜ்ஜர்கள் புறம் தள்ளினர். போராட்டத்தில் சாவுகளின் எண்ணிக்கை 50ஐ எட்டியது.

முதல்வர் ராஜே மற்றும் உள்துறை அமைச்சரின் அறிக்கைகள் மேலும் சூழலை மோசமாக்கியது. சூழ்நிலையை சரிவரக் கையாளவில்லை என டிஜிபி A.S.கில் அந்தப் பதவியிலிருந்து மாற்றப்பட்டார். 14 மாவட்டங்களில் உரிமத்துடன் ஆயுதங்கள் வைத்திருந்த அனைவரையும் காவல் நிலையத்தில் ஆயுதங்களை ஒப்படைக்கும்படி அரசு உத்தரவிட்டது. 15 மாவட்டங்களில் தேசிய பாதுகாப்புச் சட்டம் (National Security Act) அமலுக்கு வந்தது. பத்திரிகையாளர்களை வெளியேறிடும்படி அறிவுறுத்தியது அரசு. குஜ்ஜர்களைச் சந்திக்க முயன்ற முலாயம் சிங், அமர் சிங்-ஐ அரசு திருப்பி அனுப்பியது. முதல்வர், பிரதமருக்குக் கடிதம் எழுதினார். மத்திய அரசு, இது மாநில அரசின் பிரச்சினை எனக் கை கழுவியது. போராட்டத்தில் இறந்தவர்களின் உடல்கள் அரசு மருத்துவமனைகளில் கேட்பாரற்றுக் கிடந்தன. ஏராளமான குஜ்ஜர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

காவல்துறை நாளிதழ்களில் அரசு மருத்துவமனையில் கிடக்கும் சடலங்களைப் பெற்றுக் கொல்லும்படி உறவினர்களுக்கு விளம்பரங்கள் மூலம் அழைப்பு விடுத்தது. மாநில அரசின் மருத்துவர்கள் மூலம் பிரேதப் பரிசோதனை நடத்தப்படக் கூடாது எனப் போராட்டக் குழு அறிவிப்பு வெளியிட்டது. தில்லி AIIMல் இருந்து மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டனர். தற்காலிக டெண்ட்கள் அமைக்கப்பட்டு அங்கு பிரேதப் பரிசோதனை நடந்தது. சிக்கந்தராவில் - 6, பில்பூரா - 12, குஸாலிப்பூரில் - 2 என பிரேதப் பரிசோதனை நடந்தது. ஏராளமான சடலங்களின் முதுகில் தான் குண்டுகள் பாய்ந்துள்ளதாக அறிக்கைகள் தெரிவித்தனர். கூட்டத்தைக் கலைத்ததும் தப்பியோடிய குஜ்ஜர்களை, காவல் துறை முதுகில் சுட்டது இதில் புலப்பட்டது.

ஏறக்குறைய 2007 மேக்கு பிறகு சாவு எண்ணிக்கை 100ஐ தொட்ட பிறகே மாநில அரசு பேச்சுவார்த்தை நோக்கி நகர்ந்தது. சச்சின் பைலட் வந்த பிறகு தான் பல சடலங்களை குஜ்ஜர்கள் அடக்கம் செய்ய சம்மதித்தனர். குஜ்ஜர் இன மக்கள் பெரிய பெட்டிகளில் பனிக்கட்டியின் மீது பிணங்களை வைத்து அருகில் பத்து நாட்களுக்கு மேல் போராட்டத்தை நடத்திய காட்சி ஊடகங்களுக்கு பெரும் தீனியாய் அமைந்தது. தில்லியில் மருத்துவ மாணவர்கள் கடந்த இரு ஆண்டுகளாக இட ஒதுக்கிடை எதிர்த்து நடத்திய போராட்டத்தை தேசபக்தி செயல்பாடு போல் சித்தரித்த பல ஆங்கில ஊடகங்களின் அணுகுமுறை இந்த விஷயத்தில் கொஞ்சம் மாறித்தான் போனது. அவர்களின் காமிரா கோணங்கள், வர்ணனைகள் என எல்லாவற்றிலும் ஒரு வன்முறையின் சித்தரிப்பு வெளிப்படையாய் குடிபுகுந்தது. இவை மீண்டும் மீண்டும் இருபத்தி நான்கு மணி நேர ஆங்கில சேனல்களின் சார்பை வெளிப்படுத்துகிறது.

இறுதியாக பைன்சிலா தலைமையிலான போராட்டக் குழுவினருடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார் முதல்வர் ராஜே. நீண்டு சென்ற பேச்சுவார்த்தை இறுதியில் உடன்பாடு நோக்கி நகர்ந்தது. 5% சிறப்பு இட ஒதுக்கீட்டை அரசு அறிவித்தது. இத்துடன் ராஜஸ்தானில் இடஒதுக்கிடு 68%ஐ எட்டியது. பழங்குடியினரை தொடர்ந்து சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவது பி.ஜே.பியின் மோஸ்தராகவே உள்ளது. குஜ்ராத், ஒரிசா என பல மாநிலங்களில் அதை செயல்படுத்தியும் வருகிறார்கள். அப்படி தங்கள் வன்மம் நிறைந்த செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்துபவர்களுக்கு கூட எந்த உரிமைகளையும் பெற்று தந்ததில்லை பி.ஜே.பியினர் என்பதற்கு இது ஒரு சான்று.

சுதந்திர இந்தியாவில் பின்தங்கிய சமூகங்கள் தங்களை மேம்படுத்திக்கொள்ள இத்தனை உயிர்த் தியாகங்களைச் செய்தாக வேண்டிய அவலநிலைதான் இன்றும் நீடிக்கிறது. குஜ்ஜர்களுக்குப் பழங்குடியினத் தகுதிநிலை வழங்கினால் நாங்கள் ராஜினாமா செய்திடுவோம் என தொடர்ந்து மிரட்டி வந்த பி.ஜே.பி எம்.எல்.ஏ,க்கள் அமைச்சர்கள் எப்படி மக்கள் பிரதிநிதிகளாகக் கருதப்படுகிறார்கள்? சாதியப் பாகுபாடுகள், ஜனநாயகத்தின் செயலற்ற நிலைகள் என இவை எல்லாம் இச் சமூகத்தை நவீனக் காலம் நோக்கி அழைத்துச் செல்பவைதானா?

போராட்டம் முடியும் தருவாயில் மிகுந்த துணிச்சலுடன் ஒரு குஜ்ஜர் இளைஞன் கூறினான், "அரசாங்கம் ஜெனரல் டயராக மாறினால், நாங்கள் குதிராம் போஸாக மாறுவோம்."

- அ. முத்துக்கிருஷ்ணன் ([email protected])

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com