Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கட்டுரை

ஜாய் ஸ்டிக் போர் - குருதியில் தோய்ந்த வரலாறு
அ. முத்துக்கிருஷ்ணன்


I

முதல் உலகப் போர் முடியும் தறுவாயில் தான் ஈராக்கின் முதல் தேசிய எழுச்சி துவங்கியது. அந்தப் போரில் தோல்வியுற்ற ஓட்டோமன் சாம்ராஜ்யத்திடமிருந்து ஈராக்கை பங்கு போட்டுக் கொள்ள பிரிட்டனும், பிரான்ஸூம் துடித்துக் கொண்டிருந்தன. அமீர் பைசல்-ஐ ஈராக்கின் மன்னராக முடிசூடும் முயற்சியில் இறங்கியது பிரிட்டன். 1920 இல் மீண்டும் எழுச்சி ஏற்பட்டது. ஆனால் சர்வதேச சங்கம் பிரிட்டிஷ் ஆட்சியை பிரகடனப்படுத்த பரிந்துரைத்தது.

ஈராக் முழுவதிலும் பிரிட்டிஷார் கடுமையான எதிர்ப்பை சந்திக்க நேர்ந்தது. ஈராக்கில் உள்ள பல குழுக்கள் ஒன்றிணைந்து புனிதப் போருக்கான அறைகூவலை விடுத்தனர். புதிய மன்னர் பொறுப்பேற்பது சுலபமானதாக் இல்லை என பிரிட்டிஷ் அதிகாரிகள் லண்டனுக்கு பல தடிதங்கள் எழுதினார்கள். லஞ்சம், மிரட்டல், அரசியல் தந்திரங்கள் என சகலத்தையும் பிரயோகித்து 1921 ஆகஸ்டில் அமீர் பைசல், ஈராக்கின் மன்னரானார். ஈராக் சமூகம் பலவித உருமாற்றங்களை சந்தித்தது. நிலப்பிரபுக்கள் தான் 20ஆம் நூற்றாண்டின் முற்பாதியில் அரசியலில் ஆதிக்கம் செலுத்தினார்கள். சிறு விவசாயிகள் நிலங்களை விட்டு விரட்டி, அவர்களை கொடிய பட்டினியல் ஆழ்த்தினார்கள். 1932ல் இயற்றப்பட்ட நில உரிமை தொடர்புடைய சட்டங்கள் நிலப்பிரபுக்களை மேலும் பலம் பொருந்தியவர்களாக மாற்றியது. நிலங்களின் மீது முழு ஆதிக்கம் செலுத்துகிற புதிய வர்க்கம் உருவாகியது. நாடோடிகளான ஷேக்கள் நில உரிமையாளர்களாக மாறினார்கள். முதலீடுகளுக்கான புதிய வாய்ப்புகள் பெற்ற நகர்புற வியாபாரிகளுக்கும் இந்த மாற்றங்கள் பயனளித்தது.

1958 புரட்சி நிகழ்ந்த காலத்தில் ஈராக்கின் மிகப்பெரிய நிலப்பிரபுக்கள் இருவர், அகமத் அஜில் அல்-வாயர், ஷாம்மார் பழங்குடியினரின் தலைவர். அவரிடம் 1,60,000 ஏக்கர் நிலம் இருந்தது. மற்றவர் 64,000 ஏக்கர் மானாவாரி நிலத்தின் உரிமையாளர் அப்துல் ஹதி அல் சலாபி. இவர் பாக்தாதில் வசித்த ஷீயா வியாபாரி. ஜுன் 2004ல் ஈராக்கில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட காஜீ அஜீல் அல் வாயரின் தாத்தா தான் அகமத் அஜீல் அல்-வாயர். அதே சமயம் அப்துல் ஹதி அல்-சலாபியின் மகன் அகமத் அல்-சலாபி ஈராக்கில் சதாம் ஆட்சியை தூக்கி எறிய நியமிக்கப்பட்ட ஆட்சிக் குழு உறுப்பினர்களில் பலம் பொருந்தியவர்.

1945 முதல் 1958 வரை, இந்த இடைப்பட்ட காலத்தின் மாபெரும் மக்கள் எழுசசி ஈராக் முழுவதும் காணப்பட்டது. அந்த எழுச்சி பிரிட்டிஷாரை எதிர்த்து மட்டுமல்ல. அங்கு நிலவிய நிலப்பிரப்புக்களின் சுரண்டல் மற்றும் வியாபாரிகளின் சூழ்ச்சிகளுக்கு எதிராகவும் அந்த எழுச்சி உருப்பெற்றது. நகரத்து மக்கள் ஆயிரக்கணக்கில் தெருக்களில் கோபாவேசத்துடன் கலமிறங்கினர். ரயில்வே தொழிலாளர்கள், துறைமுக பணியாளர்கள், எண்ணெய் கிணறுகளில் பணியாற்றியவர்கள் என ஒருங்கிணைக்கப்பட்ட தொழிலாளர்களும் தங்கள் ஆதரவை தெரிவித்து வேலை நிறுத்தங்களை துவங்கினார்கள். பாக்தாதை சுற்றி உருவாகிய சிறு நகரங்கள், குடியிருப்புகள் புவியியலாக இந்த போராட்டத்தை வலுவானதாக மாற்றியது. மத்திய தர வர்க்கத்தின் ஒரு சிறிய பகுதியும், இடதுசாரி இயக்கங்களும் சரியான நேரத்தில் போராட்டத்திற்கு வலுசேர்க்கும் விதமாக வந்து சேர்ந்தார்கள்.

லட்சக்கணக்கான மக்களின் கருவிழியில் ஈராக் கம்யூனிஸ்ட் கட்சிதான் தெரிந்தது. கம்யூனிஸ்ட் கட்சிக்கு மட்டும்தான் எல்லா இனக்குழுக்களை சேர்ந்தவர்கள், நிலமற்றவர்கள், தொழிலாளர்கள் என பன்முகத்தன்மை கொண்ட முகம் இருந்தது. 1955களில் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர் பதவிகளில் ஷியாக்கள் பெரும்பாலும் இருந்தார்கள். பின்பு குர்து இனத்தவர்கள் அவர்களது பலத்தால், அணிதிரட்டலால் மெதுவாக கம்யூனிஸ்ட் கட்சியின் பால் ஈர்க்கப்பட்டார்கள்.

1958ல் ராணுவ அதிகாரிகள் நிகழ்த்திய எதிர் புரட்சியால் மன்னரின் கதை முடிவுக்கு வந்தது. மன்னரும், பிரிட்டிஷ் ஆதரவு பிரதமரும் கொல்லப்பட்டார்கள். அப்துல் காசிம் ஈராக்கை குடியரசாக அறிவித்தார். கம்யூனிஸ்ட் கட்சி மிக வேகமாக மக்கள் கட்சியானது. அப்துல் காசிம் கம்யூனிஸட்களின் வளர்ச்சியை கண்டு பயங்கொண்டார். கம்யூனிச எதிர்ப்பு நிலைப்பாட்டுக்கு சென்றார். கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவாளர்களை ராணுவத்திலிருந்தும், அரசாங்க உத்யோகங்களிலிருந்து அப்புறப்படுத்தினார். வளைகுடா நிலையை கணக்கில் கொண்டு மாஸ்கோவிலிருந்து கம்யூனிஸ்ட்களுக்கு ஆலோசனைகள் வந்தது. கம்யூனிஸ்ட்கள் காசிமுக்கு எதிராக கிளர்ச்சியை துவங்கினால் அதில் அமெரிக்கா குளிர்காய வாய்ப்புள்ளது என்பதால் தற்சமயம் தங்கள் செயல்பாடுகளை நிறுத்தி வைத்தார்கள்.

1963ல் பாத் கட்சி காசிமுக்கு எதிராக தனது புரட்சியை துவக்கிய பொழுது, அதை சமாளிப்பதற்கு காசிமிடம் வலுவான மக்கள் ஆதரவு இல்லை. பாத் கட்சி அப்பொழுது வெகுஜன ஆதரவு பெற்ற கட்சியாக இல்லை. காசிம் ஆட்சி அகற்றப்பட்ட சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பாத் கட்சியினர் ஆயிரக்கணக்கான கம்யூனிஸ்ட்களை, தொழிற்சங்க வாதிகளை கொன்று குவித்தனர்.

பாத் ஆட்சி சிறிது காலம் கூட நிலைக்கவில்லை. மீண்டும் காசிமின் முன்னால் தளபதி அப்துல் சலாம் அரிப் அட்சியை தொடர்ந்தார். அரிப் 1966ல் ஹேலிகாப்டர் விபத்தில் மரணமடைந்ததும் அப்துல் ரகுமான் பதவிக்கு வந்தார். மீண்டும் 1968ல் பாத் கட்சி வந்தமர்ந்தது. 1970ல் பாத் கட்சி பலவிதமான புதிய அணுகுமுறைகளுடன் தனது பலத்தை ஸ்திரப்படுத்தியது. எண்ணெய் கிணறுகள் அனைத்தும் தேசியமயமாக்கப்பட்டதும் எண்ணெய் மூலமான வருவாய் அரசாங்கத்தை வந்தடைந்தது. உள்கூட்டமைப்பு, ராணுவம், கல்வி, சுகாதாரம் என பல துறைகளின் மீது அரசாங்கத்தின் பார்வை பட்டது. கம்யூனிஸ்ட் கட்சியுடன் சுமூகமான உறவு ஏற்பட்டு, அவர்களும் அரசியலில் பங்கேற்றார்கள். பாத் கட்சியுடன் உடன்படிக்கைக்கு வராதவர்கள் கொல்லப்பட்டார்கள். எண்ணெய் கிணறுகள் தேசியமயமானதில் அமெரிக்க, பிரிட்டிஷ், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஏராளமான நிறுவனங்கள் தங்கள் வருவாயையும் சொத்துக்களையும் இழந்தனர்.

எண்ணெய் வளங்களை தேசியமயமாக்கியது பலவித வேலை வாய்ப்புகளை உருவாக்கி, உழைக்கும் மக்கள் மத்தியில் பணப்பழக்கத்தை ஏற்படுத்தியது. மற்றபடி அங்கு எந்த தொழிலும் உருவாக்கப்படவில்லை. 1972ல் எண்ணெயின் மூலம் அரசு வருவாய் 575மந$ மில்லியன், 1973ல் $1840 மில்லியன், 1974ல் $5700 மில்லியன். 1973ல் நடந்த அரபு-இஸ்ரேல் யுத்தம் எண்ணெய் விலையை உயர்த்தியது. 1980ல் தொடர்ந்து சர்வதேச சந்தையில் விலை ஸ்திரமாக இல்லாமல் நிதி நிலைமை மோசமானதும் 47 எண்ணெய் நிறுவனங்கள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சிறிய தாராளமய முயற்சிகளை 1991 வளைகுடா யுத்தம் நிறுத்தியது. ஜனாதிபதி அஹமத் ஹாசன அல்-பக்ர் க்கு எதிராக துணை ஜனாதிபதி சதாம் ஹுசேன் 1979ல் எதிர் கிளர்ச்சியில் இறங்கினார். பாத் கட்சியை முற்றிலும் தன் வசப்படுத்தி அதன் முக்கிய பொறுப்புகளில் தனது ஆதரளவாளர்கள் மற்றும் தனது சொந்த ஊரான திர்கித் ஐ சேர்ந்த உறவினர்களையும் அமர்த்தினார். ஜனாதிபதி பொறுப்பேற்ற ஓராண்டுக்குள் ஈரான் மீது தாக்குதல் தொடுத்தார். ஷீயாக்கள் ஈராக்கிலும் தனது கட்டுப்பாட்டுக்குள் வருவார்கள் என எத்தனித்தார். எட்டு ஆண்டுகள் தொடர்ந்த போரில் 10 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் மாண்டனர். சதாம் கணக்கிட்டது போல் அமெரிக்க ஆதரவு கிடைத்தது. ஈராக் தப்பித்தாலும் அதன் பொருளாதாரம் நசிந்து, கடன் வலையில் சிக்கியது.

இரண்டாண்டுகளுக்குள் மீண்டும் ஈராக் படைகள் குவைத்துக்குள் நுழைந்தது. ஆனால் இந்த முறை அவருடைய கணக்கு பொய்த்தது. அமெரிக்கா வளைகுடாவில் தனது மேலாதிக்கத்தை நிறுவுவதற்கான துவக்க புள்ளியாக இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தியது. 1991 பிப்ரவரியில் அமெரிக்க ஆதரவு பெற்ற படைகள் ஈராக் படைகளை விரட்டியடித்தது. ஆனால் ஜார்ஜ் புஷ் சதாமின் ஆட்சியை அப்படியே விட்டு விட்டார். அடுத்த பத்தாண்டுகள் அமெரிக்கா விதித்த வர்த்தக பொருளாதார தடைகளால் அங்குலட்சக்கணக்கான குழந்தைகள் உள்பட மக்கள் பலியானார்கள். 1995ல் தடைகள் இருந்தபோதும் எண்ணெய் உணவு திட்டம் மட்டும் அமெரிக்காவால் அனுமதிக்கப்பட்டது. உணவு மற்றும் அடிப்படை தேவைகளை பெற்றுக்கொள்ள துவங்கியது ஈராக் அரசு. செப்டம்பர் 11, 2001 தாக்குதலுக்கு பின்பு மீண்டும் அப்கானிஸ்தான் மீது தனது தாக்குதலை தொடுத்த படைகள், அங்கிருந்து அப்படியே தனது போர் விமானங்களை, டாங்கிகளை ஈராக் நோக்கி திசை திருப்பியது.

II

2004 நவம்பரில் ஃபளுஜா நகரம் அமெரிக்க படைகளால் சூறையாடப்பட்டது. ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் கொள்ளப்பட்டார்கள். இந்த முறை ஈராக் முழுவதிலும் எதிர்ப்பு பலமாக இருந்தது. மசூதிகள், பள்ளிகூடங்கள் என இடிபாடுகளுக்குள் அமெரிக்க-பிரிட்டிஷ் படைகளின் கனவுகளும் புதைந்தது. அமெரிக்க சிப்பாய்களுக்கு பல சுற்றறிக்கைகள் அனுப்பப்பட்டது. நாம் நினைத்தது போல் இல்லை. இந்த முறை ஈராக் அமெரிக்காவுக்கு வியட்நாமாக காட்சியளிக்கிறது. 10,000 பேர் சதாமின் உருவச்சிலை தகர்ந்ததை கொண்டாடினாலும், லட்சக்கணக்கான மக்கள் தங்கள் எதிர்ப்பை ஈராக் முழுவதிலும் வன்மையாக போரில் தெரிவித்தார்கள். ஃபளுஜா நகரமும் பணிய மறுத்தது. பொதுவாகவே அமெரிக்க படைகள் நெருங்கி வரும் பொழுது நகரத்திற்கு முன் இரண்டு கேள்விகள் பணிந்து செல்வது - உதவிகள் பெறுவது, அல்லது எதிர்தெழுவது - நகரம் அழிக்கப்படுவது. ஃபளுஜாவின் எதிர்ப்பு குழுக்கள் தொடர்ந்து தங்கள் போராட்டத்தை கைவிடவில்லை. 120 அமெரிக்க படையினர் ஒரே நாளில் இறந்தனர். இந்த தகவல்கள் மீடியாக்களில் இடம் பெறாதவாறு பார்த்துக் கொண்டது அமெரிக்கா.

டெல் அபர் நகரம், சிரியாவின் எல்லை அருகில் அமைந்துள்ளதால் அமெரிக்க படைகளால் அங்குள்ள எதிர்ப்பு இயக்கங்களை கட்டுப்படுத்த இயலவில்லை. அவர்களுக்கு தடையற்ற ஆயுதங்கள் கிரடக்க சிரியா வகை செல்கிறது. அந்த நகரம் அமெரிக்க படைகளுக்கு தலைவலியாய் மாறும் பொழுதெல்லாம், சிரியா தான் அடுத்த இல்க்கு என் அறிக்கைகளை வெளியிடும் பென்டகன் டெல் அபர் நகரம் அழித்தொழிக்கப்பட்டது. அதன் ஜனத்தை 3,500,000 அதில் 2,50,000 மக்கள் முகாம்களுக்கு துரத்தப்பட்டார்கள்.

அமெரிக்க படையெடுப்பு துவங்கிய ஒரு மாதத்தில் அதன் கமாண்டர் ஜெனரல் பாமிஸபராங்ஸ் அவரது தளபதிகளுக்கான கூட்டத்தை ஒழுங்கு செய்தார். அதில் அவர் தற்சமயம் ஈராக்கில் உள்ள 1,40,000 அமெரிக்க வீரர்களின் எண்ணிக்கையை அடுத்த 60 நாட்களில் 30,000 ஆக குறைக்க வேண்டும் என்றார். ஆனால் எதிர்ப்பு வலுக்க வலுக்க பின்பு 4,80,000 படைவீரர்களின்றி சமாளிக்க இயலாது என்ற அமெரிக்க படைகளின் நிலை வீழ்ச்சியடைந்தது. அமெரிக்க படைகள் எல்லா நகரங்களிலும், மருத்துவமனைகள், பள்ளிகூடங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள் என அனைத்தையும் தீயிட்டு கொழுத்தியது. தரை மட்டம் ஆக்கியது. மின்சார கம்பிகள் அறுத்தெறியப்பட்டது. ஈராக் சமூகம் கால சக்கரம் பின் நோக்கி சுழன்றது.

புதிய ஆட்சி பொறுப்பேற்ற சமயம் ஃபளுஜா நகரில் ஒரு பெருங்கூட்டம் அமெரிக்க படைகளின் முகாம் முன்பு கூடியது. அவர்கள் திடமாக தெரிவித்தார்கள். எங்கள் பள்ளிகூடத்தை எங்கள் வசம் ஒப்படையுங்கள், இந்த ஊரை விட்டு வெளியேறுங்கள். 13 பேரை துப்பாக்கி சூட்டில் அமெரிக்க படை கொன்று குவித்தது. மெதுவாக இந்த அலை ஈராக் முழுவதிலும் தேசிய இயக்கமாக உருப்பெற்று வருகிறது.

கலவரங்கள் ஓய்ந்த பகுதிகளில் இன்றளவிலும் மின்சார தட்டுப்பாடு வாழ்க்கையை சகஜ நிலைக்கு திரும்ப விடாது அச்சுறுத்துகிறது. சில இடங்களில் மசூதிகளில் பொறுத்தப்பட்டள்ள ஜெனரேட்டர்கள் அருகாமையில் உள்ள 100 வீடுகளுக்கு மின்சாரம் வழங்குகிறது. போருக்கு முந்தைய நிலையில் இன்றும் 30% கூட மின்சாரம் வழங்க இயலாது தவிக்கிறது பொம்மை அரசு.

மீடியாக்களும் அமெரிக்காவுக்கு தொடர் தலைவலி. பல ஒளிபரப்பு கோபுரங்கள் தகர்க்கப்பட்டாலும், பல உள்ளூர் அளவிலான கேபிள் ஆபரேட்டர்கள் தங்கள் சேனல்களை இயக்கி வருகிறார்கள். பென்டகன்நிதியுதவியல் இயங்கும் ஈராக்கி மீடியா நெட்வொர்க் மட்டுமே இயங்க வேண்டும் என்பது அரசின் கனவு. ஆனால் அப்படி நிலையை கட்டுப்பாட்டுக்குள் கொணர இயலவில்லை. அல்-ஜசீரா, அல்-அரேபியா போன்ற அரேபிய ஒளிபரப்பாளர்கள் லட்சக்கணக்கான பார்வையாளர்களை தினமும் பெற்று வருகிறார்கள். இந்த மாற்று ஊடகங்கள் அமெரிக்க எதிர்ப்பு அலையை தொகுப்பதில் பெரும் பங்காற்றுகிறது.

அமெரிக்க, பிரிட்டிஷ் நிறுவனங்களுக்கிடையில் அங்கு பங்காளிச் சண்டை உச்சகட்டத்தில் உள்ளது. புஷ் - டொனிஃபளேர் உலகை அடிமைத்தனத்திலிருந்து மீட்க வந்த தேவ தூதர்கள். ஆனால் இந்த தேவதூதர்கள் அப்பத்தை பங்கிடுவதில் ஈராக் தெருக்களில் கட்டி உருள்வதை பார்த்து உலகை கை கொட்டி சிரிக்கிறது. ஏ.பி.டி. அசோசியேட்ஸ் - அமெரிக்க நிறுவனத்துக்கு மட்டும் மருத்துவம் தொடர்புடைய 42 பில்லியனுக்கான ஒப்பந்தம். 100% வெளிநாட்ட மூலதனத்துடன் அந்நிய நிறுவனங்கள் அங்கு தொழில், வங்கி என சகல துறைகளிலும் நுழைவதற்கான பல சட்டங்கள் இயற்றியுள்ளார்கள். இங்க நிகழும் பல விஷயங்கள் சர்வதேச சட்டங்களின் படி முறையற்றவை, தண்டனைக்குரியவை. கட்டுமான ஒப்பந்தங்களில் பெரும் பகுதியானவை பெக்டல், ஹாலிபர்டன் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டன. அந்த ஒப்பந்தங்களுக்கான ஏலத்தில் ஈராக்கை சேர்ந்த குழுமங்கள் கலந்து கொள்ள அனுமதியளிக்கப்படவில்லை. ராணுவ மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகங்கள் மே 23, 2003 அன்று இயற்றப்பட்ட சட்டத்தின் மூலம் கலைக்கப்பட்டது.

III

உலகம் முழுவதிலும் விரவிக்கிடக்கிற ஏகாதிபத்தியத்தின் ஆன்மாவான கிறித்துவ மதத்தின் தலைமை செயலாகமாக திகழ்கிறது வாடிக்கன் நகரம். போப்பாண்டவரும் அவரது சீடர்களும் இங்கிருந்து கொண்டு தான் இந்த உலகின் மீது நிழல் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். இந்த வாடிகன் நகரத்து பரப்பளவு 109 ஏக்கர். ஈராக்கின் தலைநகரம் பாக்தாத்தில் அமெரிக்க தூதரகம் புதிதாக கட்டப்பட்டு வருகிறது. அந்த தூதரக வளாகத்தின் பரப்பளவை உங்களால் முடிந்தால் மனதில் யூகித்துப் பாருங்கள்?

பாக்தாத் நகரத்திலிருந்து வடக்கில் 69 கி.மீ. பயணித்தால் பலாத் சென்றடையலாம். பலாத்தில் 104 ஏக்கர் (24 சதுர கி.மீ) பரப்பளவில் மிகப் பெரிய நகரம் உருவாகி வருகிறது. அமெரிக்க எல்லைக்கு அப்பால் உலகில் மிகப் பெரிய தூதரகமாக இந்த வளாகம் உருவாகி வருகிறது. பலாத் நகரத்திற்கென அமெரிக்க அரசாங்கம் ஒதுக்கி உள்ள தொகை ரூ. 3000 கோடிக்குமேல். அமெரிக்கா ஈராக் மண்ணைவிட்டு வெளியேற வேண்டும் என உலகம் முழுவதிலும் பல அரசாங்கங்கள், இயக்கங்கள் பலத்த குரல் எழுப்பும் நேரமிது.

வானத்தை தொடும் 21 கட்டிடங்கள், அதில் இரண்டு அலுவலக வளாகங்கள், ஆறு குடியிருப்பு அடுக்கங்கள், உடற்பயிற்சி கூடம் என அது விரிந்து செல்கிறது. மின்சார உற்பத்தி, தண்ணீர் சுத்திகரிப்பு என சகலமும் அவர்களின் வளாகத்துக்குள்ளேயே நிர்மானிக்கப்படுகிறது. வழக்கமான கான்கிரீட் கலவையை விட இங்கு பயன்படுத்தப்படுவது இரண்டரை மடங்கு கூடுதல் பலமானவை. குவைத்திலிருந்து வந்திறங்கிய 900 ஊழியர்கள் அங்கு இரவும் பகலும் பணியாற்றி வருகிறார்கள். அந்த வளாகத்தில் மூன்றில் ஒரு பகுதி ஜுன் 2007ல் முடிவடையும்.

24 மணி நேர இண்டர்நெட் மையங்கள், கோல்ப் மைதானங்கள், நீச்சல் குளங்கள், தூதரக கட்டிடங்கள், ஏராளமான விமான ஓடு தளங்கள் பல திசைகளில் கிளைத்து கிடக்க, பலாத் பலம்பொருந்திய கட்டுப்பாட்டு மையமாக திகழ்கிறது. பலாத்திலிருந்து பழைய விமான ஓடு தளங்கள் தோண்டப்பட்டு புதிய ஓடு தளங்கள் இன்றைய நவீன விமானங்கள் இறங்குவதற்கு தோதாக அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் மட்டும் அங்கு விமானங்கள் 27, 50 முறை இறங்கியுள்ளன. உலகின் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கும் லண்டனின் ஹீத்ரு விமான நிலையத்திற்கு அடுத்த இடத்தை பலாத் பிடித்துள்ளது. இந்த விமானத்தை ஈராக் விமானங்கள் எட்டி பார்த்தது கூட கிடையாது.

பாக்தாத் நகரத்தின் மீது சதா இரண்டு ப்ரிடேடர் விமானங்கள் சுற்றிய வண்ணம் உள்ளது. இது புதிய கண்காணிப்பு விமானம். நகரத்தின் சிறு அசைவை கூட உலவு பார்க்கு ஆற்றல் படைத்த இந்த விமானம் ஆயுதம் தாங்கியதும் கூட. இது ஆளில்லா விமானம்.இந்த விமானத்தை இயக்குபவர் 7000 மைல்களுக்கு அப்பால் அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் உள்ளார். அவர் விமானத்தை சிறிது நேரம் ஈராக்கில் உள்ள பலாத் கட்டுப்பாட்டு அறைக்க செயற்கை கோள் மூலம் மாற்றிவிட்டு, நீச்சலடிக்க செல்கிறார்.பொழுது போகவில்லை என்றால அந்த ஏவுகணைகளை நீங்கள் இயக்கலாம். சமீபத்தில் திருமண ஊர்வகத்தின் மீது ஏவுகணை தாக்குதல் தொகுக்கப்பட்டு 250 பேர் கொல்லப்பட்டனர். இது சிறுவர்கள் நம் வீடுகளில் வீடியோ கேமில் ஜாய்ஸ்டிக்கை கைகளில் வைத்து விளையாடிக் கொண்டே நொறுக்குத்தீணி திண்பது போல் உள்ளது. அமெரிக்காவிற்கு மூன்றாம் உலக நாடுகள் விளையாட்ட மைதானம் போல் ஆகிவிட்டது.

அமெரிக்க ராணுவத்தினர் தெருக்களில் இறங்கி அப்பாவி மக்களை சூரையாடிய பொழுது அவர் அணிந்திருந்த தலை கவசங்களில் ராக் இசையை கேட்டுக் கொண்டே இருந்தார்கள். பகலில் ராக் இசை இரவில் அதிபர் புஷ் பல நடிகைகள், பாடகர்களுடன் போர் கப்பல்களில் வந்திறங்கி சகல புலன்களையும் குஷிபடுத்தினார். இதைவிட வேறு எப்படித்தான் ஒரு நாட்டு ஜனாதிபதி சேவை புரிய முடியும்.

போலீஸ் மற்றும் ராணுவத்தையும் அமெரிக்க நிதியுதவியுடன் தான் ஈராக் நிர்மானித்து வருகிறது. ஆனால் அவர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சியும் திட்டமும் சூழ்ச்சி நிறைந்தவை. அவர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சி பற்றி பேட்டி அளித்த ராணுவ அதிகாரி வெளிப்படையாகவே கூறுகிறார் - ஈராக் ராணுவம் அந்த நாட்டில் எழும் சிறு கிளர்ச்சிகளை சமாளிக்கும் அளவிலிருந்தால் போதும், தற்சமய சூழ்நிலையை அவர்கள் எதிர்கொல்லட்டும். எதிர்கால போர்களையும் அந்நிய தாக்குதல்களையும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். சமீபத்தில் தான் அமெரிக்காவிலிருந்து பல கப்பல்களில் பலகீனமான ஆயுதங்கள் பாக்தாத் வந்து சேர்ந்தது. அவை தான் இனி ஈராக்கியர்கள் கையில் வழங்கப்படும்.

அந்த நாட்டு மக்களின் மனங்களில் ஊடகங்களின் துணையுடன் திட்டமிட்டு ஒரு உலவியல் சார்பு நிலை உருவாக்கப்பட்டு வருகிறது. அமெரிக்கா வெளியேறிளால், ஈராக்கி அமைதி குலைத்து உள்நாட்டு போர் துவங்கிவிடும். ஈராக்கில் அமைதி நிலைக்க அமெரிக்காவின் இருப்பு அவசியம். விஷமத்தனமான இந்த பிரச்சாரத்திற்கு அங்குள்ள வர்த்தக சமூகம் ஏற்கெனவே பலியாகிவிட்டது. போர் கிரிமினல் புஷ் மறுபுறம், அமெரிக்க படையின் அளவை வருங்கால அமெரிக்க ஜனாதிபதிகளும், ஈராக் அரசாங்கமும் முடிவு செய்யும் என்கிறார். அமெரிக்க அங்கிருப்பது அந்த நாட்டுக்கு காப்பீடு வழங்கியது போல் என்கிறார் மேலும். போதாக்குறைக்கு புதிய பிரதமர் ஜவாத் அல் மலிக், நீங்கள் நீண்ட நாட்கள் இங்கே இருக்க வேண்டும் என புஷ் காலடியில் கிடந்து மன்றாடுகிறார்.

2003ல் அமெரிக்கா ஈராக்கை ஆக்கிரமிக்க தூங்கிய நேரம், ஈராக்கில் உள்ள மிகப்பெரிய அணு தளமான துவைதாவில் குண்டு மழை மொழிந்ததில் அங்கிருந்து வெளியேறிய அணு கழிவுகளால் ஆயிரக்கணக்கான ஆண்டுகள், பெண்கள், குழந்தைகள் தினமும் செதது மடிகிறார்கள். இது சர்வதேச அணு ஆயுத கட்டுப்பாட்டு கழகத்தின் அறிக்கை கூறுகிறது.

காத்ரினா தாக்கிய நகரங்களுக்கு அமெரிக்க படைகள் நான்கு நாட்கள் கழித்து செல்கிறது. சொந்த மக்களை காக்க வக்கற்ற புஷ் உலக மக்களின் சுதந்திர காவலராக தன்னை முன்னிருத்திக் கொள்கிறார். இந்த போரில் பங்கேற்றதால் வரும் தேர்தலில் தோல்வி அடைவதற்கான சகல வாய்ப்புகளையும் பெற்றுள்ளது லேபர் கட்சி. அமெரிக்க படைகள் வெளியேறினால், ஈராக்கில் அமெரிக்க நிறுவனங்கள் வசமுள்ள எண்ணெய் கிணறுகள் தாக்கப்படலாம். எண்ணெயை குடிக்கத்தான் இந்த போரை அமெரிக்கா துவங்கியது. வந்த வேலையை திறம்பட முடிக்க, ஈராக்கின் நிலத்தடி எண்ணெயின் கடைசி சொட்டை உறிஞ்சி எடுக்கும் வரை அமெரிக்க ராணுவம் அங்கு காத்து கிடக்கும்.

1920களில் நிகழ்ந்த மக்களின் தேசிய அளவிலான எழுச்சி போல் நடப்பில் மக்கள் அணிதிரண்டால் ஒழிய இந்த அமெரிக்க ஆக்கிரமிப்பை ஒழிக்க இயலாது.

- அ. முத்துக்கிருஷ்ணன் ([email protected])

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com