Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கட்டுரை

‘தேயம் வைத்து இழந்தார், சீச்சீ! சிறியர் செய்கை செய்தார்!’
நா.முத்துநிலவன்

அவன் பெயர் தர்மராஜன். தருமத்துக்கே ராஜன் என்றால், அவனிடம் எந்த அளவுக்கு தர்மம் குடிகொண்டிருக்க வேண்டும்! அவனே தவறு செய்கிறபோது, எவ்வளவு ஏமாற்றம் வரும்? அதனால்தான் பாரதிக்கு அவ்வளவு கோபம் வந்தது! மற்றவர் செய்யும் தவறுகளையே பொங்கி எழுந்து கண்டிக்கிற பாரதிக்கு, ஒரு நாட்டின் தலைமகன் - அதுவும் தர்மத்துக்கே ராஜன் எனும் பெயர் வேறு! அவனே தவறுசெய்வதைப் பார்த்த கவிஞனுக்கு வந்த கோபத்தில் மனம்வெந்து விழுந்த வார்த்தைகள்தான் “சீச்சீ! சிறியர் செய்கை செய்தான்” எனும் அனல்தெறிக்க விழுந்த வார்த்தைகள்!

அந்தக் கவிதையை முழுவதுமாகப் பாருங்களேன்:

“கோயில் பூசை செய்வோன் - சிலையைக்
கொண்டு விற்றல் போலும்,
வாயில் காத்து நிற்போன் - வீட்டை
வைத்து இழத்தல் போலும்,
ஆயி ரங்கள் ஆன - நீதி
அவை உணர்ந்த தருமன்,
தேயம் வைத்து இழந்தான் - சீச்சீ!
சிறியர் செய்கை செய்தான்” - இது, வீட்டு மானத்தை மட்டுமல்ல, நாட்டு மானத்தையும் சேர்த்து சூதாட்டத்தில் வைத்துத் தொலைத்த தருமனைப் பற்றிப் பாஞ்சாலி சபதத்தில் பாரதி பாடிவைத்த வரிகள்!

பாரதிதான் ‘தீர்க்கதரிசி’ ஆயிற்றே! அவன் அன்று பாடிய பாஞ்சாலி சபத ‘பாரதக்கதை’ மீண்டும் இன்று நடந்திருக்கிறது! அவன் ஒன்றும் வீட்டுச் சொந்தக்காரன்கூட இல்லையாம்! வெறும் ‘வாயில்காப்போன்’தானாம்! அவன் எப்படி வீட்டை சூதாட்டத்தில் வைத்து ஆட முடியும்? என்று, ‘தலைமைப் பொறுப்பில் இருப்போனின் தகுதி’ பற்றிய சிந்தனையோடும் அந்த வரிகளைப் படைத்துக் காட்டினான் பாரதி. மகாகவின்னா சும்மாவா?

எதிர்க்கட்சித் தலைவர் அத்வானிகூட, ‘நாங்கள் வந்தாலும் அணு ஆயுத ஒப்பந்தத்தைச் சில திருத்தங்களுடன் தொடர்வோம்’ என்று நேர்மையாகச் சொல்லிவிட்டார்! ஆனால், அதுபற்றிய கருத்தில் தெளிவே இல்லாத -அல்லது கருத்தே இல்லாத- சிபுசோரன் (தமிழில் சொல்ல, பொருத்தமான பெயர்தான்), முலாயம்சிங், மற்றும் இந்த விஷயங்கள் பற்றியெல்லாம் எண்ணிப் பார்க்கத் தெரியாத - ஆனால் பணத்தை மட்டும் சரியாக எண்ணிப் பார்க்கத் தெரிந்த- ஆதரவாளர்களால் ஆட்சியில் தொடர்கிறார் மன்மோகன்சிங்! இதைவிட வெட்கக் கேடான ஒரு பிரதமரை இந்திய வரலாற்றிலேயே பார்க்க முடியாது!

“வாள்போல் பகைவரை அஞ்சற்க, அஞ்சுக
கேள்போல் பகைவர் தொடர்பு” எனும் குறள்(எண்:882)தான் நினைவுக்கு வருகிறது! அரசுக்கு ஆதரவு தெரிவிக்க, பதவியேதும் கேட்காமல் தமது கோரிக்கைகளை மட்டுமே வைத்த இடதுசாரிகளின் ஆதரவுக்குப் பதிலாக இந்த ‘வாயில் காப்போர்’ திரட்டிய ஆதரவாளர்கள், ‘பிராயச்சித்தமாக’ இவர்களிடம் கேட்டது என்ன, (‘பிரதி உபகாரம்’ என்ன?) என்பது இனி ஒவ்வொன்றாக வெளியில் வரும் பாருங்களேன்!

சிபுசோரன் கேட்டது பகிரங்கமான பதவி என்றால், முலாயம் கேட்டது மறைமுகமான உதவி! ‘பதவி வேண்டுமா? என் உதவி வேண்டுமா? பருவநாடகம் ஆடவேண்டுமா? கேட்டது கிடைக்கும், நினைத்தது நடக்கும்’ என்று ‘நமீதா’ லெவலுக்கு நமை ஆளும் தலைவர்களும் ஆடிப் பாடாத குறைதான் போங்கள்! எண்ணிக்கைக்காக நடந்துவிட்ட எண்ணிப் பார்க்க முடியாத கேவலங்களல்லவா இவை?

ஜெயித்தது ‘ஜனநாயக எண்’ணாக இருக்கலாம், உள்ளே பணநாயகம் இருந்தது உண்மைதானே? கணக்கிற்கான விடை மட்டுமல்ல, கணக்குப் போடும் வழியும் சரியாக இருக்கவேண்டும் தானே? எங்கே போகிறோம் என்பது மட்டுமல்ல எந்த வழியாகப் போகிறோம் என்பதும் முக்கியம் தானே? இவர்கள் ‘நம்பிக்கை’யைக் காட்டுவதற்காக நடந்த வழியின் நாற்றம் குடலைப் புரட்டுகிறதே! ‘கோடிகளைக் காட்டி எங்களை பேரம் பேசினார்கள்’ என்று பா.ஜ.க. உறுப்பினர்கள் நாடாளுமன்ற நடுவில் வீசியெறிந்தது, பணத்தை அல்ல! இந்த தேசத்தின் வெட்கத்தையும், மானத்தையும் அல்லவா?

“நீயும் நானும் செத்துப்போனா நெத்தியில ஒத்த ரூவா,- நம்ம
ஜனநாயகம் செத்துப்போச்சே - அது நெத்திக்குத்தான் இந்த கத்தை ரூவா” என்று கவிஞர் ஆரா எழுதியது எவ்வளவு உண்மை! அதுமட்டும் தனியார் தொலைக்காட்சியின் சாட்சிப்படி உண்மையென்று தெரிந்தால், ‘ராவோடு ராவாக’ நாடகமாடி அசிங்கப்பட்ட நரசிம்மராவை விட இவர்கள் கேவலப்படப் போகிறார்கள்! (கிட்டத்தட்ட ஆளுங்கட்சியின் ஊதுகுழலாகவே ஆகிவிட்ட‘அவைத் தலைவர்’ சோமநாதபாகவதர் என்ன பின்பாட்டுப் பாடுவார் என்பது இன்னும் சிலநாள்களில் தெரியத்தானே போகிறது!)

எவ்வளவோ பிரச்சினை - கருத்துவேறுபாடுகள் இருந்தும், உடல்நிலை சரியில்லாத நிலையிலும், நாடாளுமன்ற ‘லாபி’க்கு வந்து, இந்த அரசை எதிர்த்து தன் முத்திரையைப் பதித்துவிட்டுப் போன வாஜ்பாயியைக் காட்டிலும், இன்னொருவர் வந்ததுதான் எல்லாருடைய கவனத்தையும் கவர்ந்ததாமே! சமாஜ்வாதி உறுப்பினரும் ஊரறிந்த ‘தாதா’வுமான பப்புயாதவ், நம்பிக்கை வாக்கெடுப்பி;ல் கலந்துகொள்ள சிறப்பு அனுமதி பெற்று நாடாளுமன்றம் வந்ததுகூடப் பெரிதல்ல, அவரது பேச்சுக்கு ஆளும்கட்சி உறுப்பினர்களின் ஆரவார ஆதரவும், வாழ்த்துப் பரிமாற்றமும்தான் புதுமை! இனி அவருக்கு சிறப்பு அனுமதி தேவையிருக்காது! விடுதலையே ஆகிவிடக்கூடியவருக்கு இனி அது தேவைப்படாதுதானே?

மகாபாரதத்தில் வரும் ஒரு தவளைக் கதையைத்தான் நாடாளுமன்றத்தின் 22-07-2008 நிகழ்வுகள் நினைவுபடுத்துகின்றன: ஒருமுறை, தாகம் மேலிட்ட ராமன், கையில் இருந்த வில் ஆயுதத்தை ஓடைக்கரை மணலில் ஊன்றி நிறுத்திவிட்டு நீர்பருகச் சென்றானாம். கரைக்குத் திரும்பி, ஊன்றி வைத்திருந்த வில்லை மீண்டும் எடுத்தபோது, அந்த வில் முனையில் குத்துப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஒரு தவளை, “ராமா!, ராமா!”- என்று கதறியதாம். பதறிப்போன ராமன், ‘அடப் பாவித் தவளையே, நான் வில்லை மணலில் ஊன்றியபோதே சொல்லியிருக்கக் கூடாதா?’ என்று பரிதாபமாகக் கேட்டானாம்! அதற்கு அந்தத் தவளை சொன்னதாம்- “ராமா, வேறு யாராவது என்னைக் குத்தியிருந்தால் நான் உன்னைக் கூப்பிட்டு என்னைக் காப்பாற்றிக் கொண்டிருப்பேன். காப்பாற்ற வேண்டிய ராமனே, என்னைக் குத்தும்போது, நான் என்ன சொல்லிக் கத்துவது என்று புரியாமல் திகைத்துப்போய் இருந்துவிட்டேன் ராமா?” என்றதாம்!

இப்படித்தான் ஜனநாயகத்தின் நுனிமுனைக் கொழுந்தாக இருக்கும் நாடாளுமன்றமே ‘பணநாயகர்’களால் இப்படிக் குத்துப்பட்டுக் கிடக்கிறபோது, மக்கள்தான் இனித் தீர்ப்பு எழுத வேண்டும்! எழுதுவார்கள்!

(கட்டுரை ஆசிரியர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநிலத் துணைப் பொதுச்செயலாளர்)


- நா.முத்துநிலவன் ([email protected])


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com