Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கட்டுரை

ஆஸ்திரேலியா: நிறவெறியால் ஒடுக்கப்படும் ஆதிக்க சாதியினர்
முருகசிவகுமார்

ஆஸ்திரேலியாவில் ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் படிக்கிறார்கள். அங்கு விக்டோரியா மாகாணத்தில் தங்கி படித்துவரும் இந்திய மாணவர்கள் மீது அந்நாட்டு மாணவர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த வாரம் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சரவன் குமார் என்ற மாணவர் உள்பட 4 இந்திய மாணவர்கள் தாக்கப்பட்டனர். இவர்கள் தாக்கப்பட்ட இடம் ஓர் விருந்து நடைபெற்ற இடம்.

Indian students அங்கு ஸ்குரூடிரைவரால் குத்தப்பட்ட குமார் என்ற மாணவர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது அவர் அபாய கட்டத்தை தாண்டி விட்டதாக மருத்துவர்கள் அறிவித்து உள்ளனர். இராஜேஷ் குமார் என்ற மாணவர் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. பல்விந்தர் சிங் என்ற மாணவர் கத்தியால் குத்தப்பட்டார். நிறவெறி காரணமாக இந்த தாக்குதல்கள் நடந்ததாக இந்திய மாணவர்கள் சார்பில் கூறப்படுகிறது.

அப்படியானால், இந்தியாவில் தங்களை உயர்ந்தவர்களாக கற்பிதம் கொண்டுள்ள பார்ப்பன, பனியா, சாதி இந்து மாணவர்கள், ஆஸ்திரேலியர்கள் பார்வையில் கறுப்பர்கள். அதாவது, தாழ்ந்தவர்கள் - தீண்டத்தகாதவர்கள் - தங்களைவிட கீழானவர்கள்.

மேட்டுக் குடியினர் மீதான இத்தாக்குதல் குறித்து அறிந்த இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா மற்றும் இந்திய பிரதமர் மன்மோகன் ஆகிய இருவரும் பதற்றமடைந்து ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் ஸ்டீபன் ஸ்மித் மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ஆகியோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள், கீழ் நிலை சமூகத்தை சேர்ந்தவர்களாக இருந்திருந்தால் இவ்வளவு விரைவில் பேசியிருப்பார்களா என்று சின்னபுள்ளதனமா கேட்காதீங்க. தமிழக சமூக படிநிலையில் அடித்தளத்தில் இருக்கிற மீனவர்களில் 400 க்கும் மேற்பட்டவர்களை இலங்கை இராணுவத்தினர் துப்பாக்கியால் சுட்டு கொன்றபோது தமிழ்நாட்டை சேர்ந்த ப.சிதம்பரம் உயர் பதவியில் இருந்தும் இந்தியப் பிரதமரோ, வெளியுறவுத் துறை அமைச்சரோ ஒரு வார்த்தை கூட பேசவில்லையே!

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிடம், பேசிய கெவின் "ஆஸ்திரேலியாவில் இருக்கும் 90,000க்கும் அதிகமான இந்திய மாணவர்களும் எங்கள் நாட்டின் விருந்தினர்கள்" என்று தெரிவித்தார். மேலும், இதுகுறித்து ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் பேசிய அவர், "இந்தியர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் அறிவுகெட்டத்தனமானது" என்று கூறி வருத்தமும், கண்டனமும் தெரிவித்தார்.

Indian house "ஆஸ்திரேலியாவில் படிக்கும் இந்திய மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை அறிந்து வேதனை அடைந்தேன். ஆஸ்திரேலியாவில் நடந்த நிறவெறித் தாக்குதல் மனித சமுதாயத்துக்கு ஏற்பட்ட மிகப் பெரிய களங்கம்" என்று பா.ஜ. தலைவர் எல்.கே.அத்வானி கூறியுள்ளார்.

இந்நிலையில் இந்த தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரியும் எதிர்காலத்தில் இது போன்ற தாக்குதல்கள் நடக்காமல் தடுக்க கோரியும் கடந்த ஒன்றாம் தேதி அன்று ஆஸ்திரேலியா வாழ் இந்திய மாணவர்கள் சம்மேளனம், தேசிய மாணவர்கள் சங்கம் ஆகியவை சார்பில் அமைதி பேரணி நடத்தப்பட்டது. மெல்போர்ன் நகரில் ஷரவன் குமார் சிகிச்சை பெற்று வரும் மெல்போர்ன் ராயல் மருத்துவமனை முன்பு தொடங்கி இந்திய மாணவர்கள் சம்மேளன தலைவர் குப்தா தலைமையில் விக்டோரியா நாடாளுமன்றம் நோக்கி மாணவர்கள் ஊர்வலமாக புறப்பட்டனர். அப்போது, “நிறவெறி தாக்குதலை நிறுத்து. எங்களுக்கு நீதி வேண்டும். பாரத மாதா வாழ்க’’ என்று முழக்கமிட்டபடி சென்றனர்.

சரி, இதையெல்லாம் யாவரும் அறிந்திருப்பீர்கள். ஆயினும் இது குறித்து நான் எழுதுவதற்கான காரணம், "நிறவெறியால் தாக்கப்பட்ட இந்திய மாணவர்கள்" என்ற சொற்கள் என்னை இந்தியாவில் நடந்துவரும் பல நிகழ்வுகளை யோசித்து பார்க்க வைக்கிறது.

தாக்குதலுக்கு எதிரான பேரணியில் கலந்து கொண்ட இந்திய மாணவர்களை நிழற்படத்தில் பாருங்கள். இவர்கள் எல்லோரும் வெள்ளைத் தோல் மனிதர்கள். இன்னும் நல்ல சொற்களில் சொல்ல வேண்டுமானால், இங்கு தங்களை உயர்வாக கருதும் மேட்டுக்குடிகள். இந்தியாவில் ஒடுக்கப்பட்ட மக்களை இந்த மேட்டுக்குடிகள் என்ன செய்கிறார்களோ, அது இப்போது நடக்கிறது. (அதற்காக மாணவர் மீதான தாக்குதலை நியாயப்படுத்துகிறேன் என்று நினைக்காதீர்கள். மனித உரிமை என்ற வகையில் நிச்சயமாக கண்டிக்கத் தக்கது.)

இந்திய ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உயர் கல்வியில் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை கொண்டு வந்தபோது, "இவர்களெல்லாம் உயர்கல்வி படிக்க வந்துவிட்டால், நாங்கள் தெரு பெருக்க போக வேண்டும்" என்று கூறி இந்த மேட்டுக்குடிகளும் இவர்களின் உறவுகளும்... துடைப்பத்துடன் போராட்டம் நடத்தினார்கள். இந்தப் போராட்டங்களில் துளியளவும் நியாயம் இல்லையென்றாலும், இதனை வட இந்திய ஆங்கில ஊடகங்கள் பெரிதாக்கி வெளியிட்டன. இந்த சாதிய மனநிலை மாற்றம் பெறாமலே பல மட்டங்களில் தொடர்கிறது.

காலம் காலமாக மேட்டுக்குடிகளின் உழைப்பு சுரண்டலுக்கு ஆளாகி ஒடுக்கப்பட்ட தலித் மக்கள், சாதி ரீதியாக பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள்.

தெருவில் நடந்தால் தீட்டு, பொது கிணற்றை பயன்படுத்த தடை, தலித் இனத்தை சேர்ந்தவர் படித்து உயந்த பதவியில் இருந்தாலும் கீழானவர்தான். ஆடு, பன்றி, நாய் உள்ளிட்ட விலங்குகள் புழங்கும் இடங்களை கூட தலித் மக்கள் பயன்படுத்த எதிர்ப்பு, சமூக நீதி கொள்கையில் தலித் மக்களுக்கு வழங்கப்படும் உரிமைகளை ‘சலுகைகள்’ என்று தவறாக நினைத்து கொண்டு அதனை கேவலப்படுத்தி முழுப்பயன் கிடைக்காமல் செய்யும் சாதி இந்து அதிகாரிகள். குறிப்பாக ஒரு அடித்தள சமூகம் வாழ்வில் உயர வேண்டும் என்ற நோக்கில் அரசால் உருவாக்கப்பட்ட விடுதி என்னும் அமைப்பு சரியாக இயங்காமல் அலட்சியத்தால் முட்டுக்கட்டை போடும் உயர்சாதி அதிகாரிகள். சாதி இந்துக்கள் செய்யும் கொடுமைகளை எதிர்த்து பேசினால், மலம் தின்ன வைப்பது, வாயில் சிறுநீர் கழிப்பது. தலித் பெண்தானே என்ற கேடு கேட்ட எண்ணத்தால் வல்லுறவுக்கு ஆட்படுத்துதல். இத்தகைய சாதி கொடுமைகள், நிறவெறியை விட கொடுமையானவை.

Students இப்போது, நிறவெறியால் பாதிக்கப்பட்ட கறுப்பின மக்களை நான் குறைத்து மதிப்பிடுவதாக சிலர் எண்ணலாம். இல்லவே இல்லை. ஐரோப்பிய வெள்ளை இனத்தால் கொடுமைக்கு ஆளான ஆப்பிரிக்க மக்களில் துன்பம் , அடிமை வாழ்வு மிகக் கொடியது. ஆனாலும், நிறவெறியால் பாதிக்கப்பட்டோம் என்று கூக்குரலிடும் இந்திய பார்ப்பனர்களின் வாழ்வையும் ஆப்பிரிக்க கறுப்பின மக்களின் வாழ்வையும் ஒரு அளவுகோளில் வைக்க முடியாது; கூடாது. அவ்வாறு ஒருநிலையில் வைத்து பேசினால் அதைவிட முட்டாள்தனம் இருக்கவே முடியாது.

நிறவெறியால் பாதிக்கப்பட்ட அந்த மேட்டுக்குடிகள்தான், இந்தியாவில் இத்தகைய சாதி தொடருவதற்கு காரணமானவர்கள். வெள்ளை இனத்தவர்கள் இவர்கள் மீது தாக்குதல் நடத்தியது தவறென்று கூக்குரலிடும் இவர்களும் இவர்களின் உறவினர்களும் இந்திய ஒடுக்கப்பட்டவர்கள் மீது நடத்திவரும் அல்லது நடந்து வரும் தாக்குதல்களும் தவறென்று ஒப்புக்கொள்ள வேண்டும். இத்தகைய சாதிவெறி கொண்ட இவர்கள் இனியாவது மனம் திருந்த வேண்டும். இன்னும் ஒருபடி போய்கூட முன்னோர்கள் செய்த குற்றத்திற்காக ஒடுக்கப்பட்டவர்கள் முன் மன்னிப்பும் கேட்க வேண்டும்.

"நிறவெறி தாக்குதலை நிறுத்து. எங்களுக்கு நீதி வேண்டும்" என்று பேரணியில் முழக்கமிட்ட இந்த மேட்டுக்குடிகள் - சாதியை பேணுபவர்கள், இந்திய தலித் மக்களுக்கும் நியதி கிடைக்காமல் முட்டுக்கட்டை போடுவதை கைவிட வேண்டும்.

உயர்வு - தாழ்வு, கருப்பு - வெள்ளை, இனம், பால் போன்றவற்றில் வேறுபாடு பார்த்து ஒரு பிரிவு மக்கள் இன்னொரு பிரிவு மககளை ஒடுக்குமுறைக்கு ஆளாக்கி துன்பத்தை கொடுக்கும் மனநிலையில் மாற்றம் வர வேண்டும். மனித உரிமைக்கு பங்கம் விளையும்போது பாதிக்கப்பட்டவர் பக்கம் நின்று நியாயம் கிடைக்க போராட வேண்டியது நல்ல மனிதர்களின் தலையாய கடமை என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும். தனக்கு ஏற்படும் வலியும் - துன்பமும் போன்றதுதான் பிறருக்கு ஏற்படும் வலியும் - துன்பமும் என்று மனதார உணர வேண்டும்.

ஆஸ்திரேலியாவில் நிறவெறியால் பாதிக்கப்பட்ட இவர்கள், நிறவெறி போன்றதே சாதிவெறியும் மத வெறியும் என்பதை உணர்ந்து சாதி - மதம் அற்ற சமூகத்தை உருவாக முனைய வேண்டும். நிறவெறியால் பாதிக்கப்பட்டபோது துடித்து கண்டித்த ஆட்சியாளர்களும் அரசியல்வாதிகளும் இந்தியாவில் சாதிவெறி தாக்குதல் நடக்கும்போது கண்டிக்க வேண்டும் அல்லது சாதிவெறி இல்லாமல் தடுக்க வேண்டும்.இதுவே என் எண்ணம்; சமூக ஆர்வலர்களின் எண்ணம்.

- முருகசிவகுமார் [email protected]


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com