Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle

தமிழகத்தில் மூன்றாண்டு வசித்துள்ள ஈழத்தமிழ் ஏதிலியருக்குக் குடியுரிமை வழங்க வேண்டும்
“தமிழ்த் தேசியம்” - சிறப்பு மாநாட்டுத் தீர்மானங்கள்

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் சார்பில் 12.07.09 அன்று திருச்சியில் நடத்தப்பட்ட “தமிழ்த் தேசியம்” - சிறப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் :

தீர்மானம் 1: தமிழ்த்தேசிய எழுச்சி நாள் போராட்டம்

தமிழர்களுக்கு நவீன கால அடிமைத்தளை ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களின் வன்கவர்தல் வழி முந்நூறு ஆண்டுகளுக்கு முன் பூட்டப்பட்டது. அதற்கு முன் பிற்காலப் பாண்டிய அரசு, பிற்காலச்சோழப்பேரரசு ஆகியவை வீழ்ச்சியடைந்ததையொட்டி, அயல் இனப்படைத் தளபதிகள் தமிழ்நாட்டை ஆக்கிரமித்திருந்தனர். இந்த அயலார் தமிழ் இன அடையாளங்களை அழித்தது ஒரு பக்கம் இருக்க,ஆங்கிலேய ஆக்கிரமிப்பாளர்கள், தமிழர்களைத் தங்களுக்கு வரலாற்றுவழி உறவு எதுவுமில்லாத வட நாட்டினங்களோடு பிணைத்தனர்.

நீண்ட நெடுங்காலத்திற்கு நிலைக்கும்படியான அடிமை நுகத்தடியைத் தமிழர்கள் கழுத்தில் ஆங்கிலேயர் பூட்டினர். தில்லி அதிகார நடுவத்தின் அடிமை உறுப்பாக தமிழர் தாயகத்தை முதல் முதலாகப் பிணைத்தனர். அதன்வழி பூட்டப்பட்ட அரசியல், பொருளியல், பண்பியல் விலங்குகளை இன்று வரைச் சுமந்து தமிழினம் துன்புறுகிறது. 1947ஆகஸ்ட் 15-இல் ஆங்கிலேய ஏகாதிபத்தியம் இந்தியாவிற்கு அரசியல் விடுதலை தந்தது. ஆனால் இந்தியாவுக்குள் அடிமைப்பட்டுக் கிடந்த தமிழ்நாட்டிற்கு அரசியல் விடுதலை கிடைக்கவில்லை. இதை அப்போதே தந்தை பெரியார் சுட்டிக் காட்டினார். 1947ஆகஸ்ட் 15-க்குப் பிறகு இந்தியாவில் தமிழர்கள் இழந்துள்ள உரிமைகளைப்; பட்டியல் இட்டால் ஏட்டில் அடங்காது. மொழிவாரி மாநிலப் பிரிப்பின்போது திருப்பதி, சித்தூர், புத்தூர், காளத்தி, பலமநேரி உள்ளிட்ட தமிழக நிலப் பகுதிகள் ஆந்திரப்பிரதேசத்தில் சேர்க்கப்பட்டன. கோலார் தங்கவயல், கொள்ளே காலம் போன்ற தமிழகப்பகுதிகள் கர்நாடகத்துடன் சேர்க்கப்பட்டன. மூணாறு, தேவிகுளம், பீர்மேடு, நெய்யாற்றங்கரை, கொச்சின் சித்தூர், செங்கோடை வனப்பகுதி போன்ற தமிழர் தாயகப்பகுதிகள் கேரளத்துடன் இணைக்கப்பட்டன. காவிரி , முல்லைப்பெரியாறு, பாலாறு ஆகியவற்றின் உரிமைகள் அண்டை மாநிலங்களால் பறிக்கப்பட்டன.

இந்திராகாந்தி தமிழகத்திற்குச் சொந்தமான கச்சத்தீவைப் பிடுங்கி சிங்கள அரசிடம் கொடுத்தார்.சிங்களப்படை அன்றாடம் தமிழக மீனவர்களைச் சுட்டுக்கொல்கிறது. உலகமயம் என்ற பெயரில் பன்னாட்டு முதலாளிகளின் கொள்ளைக்குத் தமிழ்நாட்டைத் திறந்துவிட்டுள்ளது இந்தியா. ஏற்கெனவே, மார்வாரி, குசராத்தி சேட்டு முதலாளிகளின் ஆதிக்கத்தில் தமிழகப் பொருளியல் சீரழிகிறது. தமிழக வேலைவாய்ப்புகளை மலையாளிகளும் வடநாட்டாரும் கைப்பற்றிக்கொண்டுள்ளனர்.

“இந்திய தேசியம்” என்ற இல்லாத தேசியம் இதற்கெல்லாம் கதவு திறந்துவிடுகிறது.மனித அழிப்பு ஆபத்து நிறைந்த அணுமின் உலைகளை மிகுதியாகத் தமிழ் நாட்டில் திறக்கிறது இந்தியா .எடுத்துக்காட்டு கூடங்குளம்! எல்லாக்கொடுமைக்கும் சிகரம் வைத்ததுபோல் இந்திய அரசு இலங்கை இனவெறி அரசுடன் கூட்டுச் சேர்ந்து ஈழத்தில் தமிழினத்தை அழித்தது. தொடர்ந்து தமிழின அழிப்பில் அங்கு ஈட்டுபட்டும் வருகிறது.

எல்லா உரிமைகளையும் இழந்து இன அழிப்புக்கும் உள்ளான தமிழர்கள், வெள்ளை அரசின் கொடுமையைவிட அதிகமான கொடுமைகளையே இந்திய அரசின் கீழ் சுமக்கிறார்கள். இந்தி மற்றும் ஆங்கில ஆதிக்கத்திற்கு சட்ட ஏற்பு இருக்கிறது. தமிழ்மொழிக்கு அரசமைப்புச் சட்டப்படி ஆட்சி மொழி உரிமை இல்லை. தமிழர்களின் அரசுரிமையைப் பறித்துக்கொண்டு ஒரு கங்காணிச் சட்டபேரவையை “ஆட்சிமன்றம்” என்ற பெயரில் தமிழ்த்தேசிய இனத்தி;ற்கு இந்தியா கொடுத்துள்ளது.

தில்லியின் விசுவாச ஊழியராக விளங்கும் தமிழக முதல்வர் , கலைஞர் கருணாநிதி கூட “நானே ஒரு அடிமை, நான் இன்னொரு அடிமையான ஈழத்தமிழனுக்கு எப்படி உதவ முடியும்” என்று அண்மையில கேட்டார். தமிழ்த்தேசிய இனம் சுமக்கும் அடிமை நிலையின் அளவைப் புரிந்துகொள்ள இவர் கூற்றும் ஒரு சான்று. தமிழ்த்தேசிய இனத்தின் அரசியல் இறையாண்மையை மீட்டுத் தமிழ்தேசக் குடியரசு நிறுவப்பட்டால்தான், தமிழ்மக்கள் தங்களின் பறிபோன உரிமைகளை முழுமையாகவும் இறுதியாகவும் மீட்கமுடியும். காவிரி, முல்லைப்பெரியாறு, பாலாறு, பவானி, மேற்கு தொடர்ச்சி மலையில் தமிழக எல்லைப் பகுதியில் உற்பத்தியாகும். ஆறுகள், கச்சத்தீவு முதலியவற்றில் நாம் பறிகொடுத்துள்ள உரிமைகளை மீட்க, தமிழகமெங்கும் முதற்கட்டமாக தமிழ்த்தேசிய எழுச்சி நாள் ஒன்றைக் கடைபிடிக்கவேண்டும் என்று இம்மாநாடு தமிழ் மக்களைக் கேட்டுக்கொள்கிறது.

தமிழ்த்தேசிய எழுச்சி நாளில் ஆர்ப்பாட்டங்கள், பொதுக்கூட்டங்கள், தெரு முனைக்கூட்டங்கள், கலை நிகழ்வுகள் ,பல்வேறு வடிவங்களில் பரப்புரைகள் எனச் செயல்படுமாறு மாநாடு கேட்டுக்கொள்கிறது. தோழமை இயக்கங்கள், தமிழ் அமைப்புகள், தமிழ் இன உணர்வாளர்கள் ஆகிய அனைவரும் கூட்டாக இவ்வெழுச்சி நாளைக் கடைபிடிக்க முன்முயற்சிகள் எடுக்க வேண்டும். திருவள்ளுவராண்டு ஆவணிமாதம் நான்காம் நாள், அதாவது 2009ஆகஸ்டு மாதம் 20-ஆம் நாள் வியாழக்கிழமை தமிழ்த்தேசிய எழுச்சி நாள் கடைபிடிக்கப்படும் என்று தமிழ்த்தேசியம் - சிறப்பு மாநாடு தீர்மானிக்கிறது. ஏற்கெனவே நம்முன்னோர்கள் - அரசியல் தலைவர்கள், தமிழறிஞர்கள், விடுதலைப் போராளிகள், இன உணர்வுமிக்க இளைஞர்கள் தமிழ்த்தேசிய உரிமைகளுக்காக பலவாறு போராடியிருக்கிறார்கள். உயிர் ஈகம் செய்துள்ளார்கள். கடந்த காலச் சாதனைகளிலிருந்து வீரம்பெற்று, கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் கற்று, திசையைத் தீர்மானித்துக்கொண்ட, தமிழ்த்தேசியத்தின் புதிய தொடக்கமாக தமிழ்த்தேசிய எழுச்சி நாள் அமையட்டும்! வெல்வோம!

தீர்மானம் 2: ஈழத்தமிழர் துயர் துடைப்புப் பணிகளில் இருந்து இலங்கை அரசை நீக்க வேண்டும் ஐ.நா.மன்றமே அப்பணிகளைச் செய்யவேண்டும்!

தமிழீழ மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை நசுக்கிட ஈழத் தமிழ் இன அழிப்புப் போரை நடத்திய சிங்கள இனவெறி அரசுக்கு, படை, பணம், அரசியல் வழிப்பட்ட அனைத்து உதவிகளையும் செய்து மனித அழிப்புப்போரில் பங்குகொண்ட இந்திய அரசை தமிழ்த் தேசியம் - சிறப்பு மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது. கடந்த மே 16,17,18 நாட்களில் மட்டும் 45ஆயிரம் தமிழர்களும் விடுதலைப் போராளிகளும் சிங்களப்படை ஏவிய பாஸ்பரஸ் குண்டு வீச்சிலும், கொத்துக் குண்டு வீச்சிலும் கொல்லப்பட்டனர். இவ்விருவகைக் குண்டுகளும் ஐ.நா.மன்றத்தாலும் பன்னாட்டுச் சமூகத்தாலும் தடைசெய்யப்பட்டவை. மூன்றரை இலட்சம் தமிழர்களைச் சிங்கள அரசு முள் கம்பிவேலி வதை முகாம்களில் அடைத்து வைத்துள்ளது.

ஒரு தேசத்தையே அழிக்கும் குருதி வெறிகொண்டு அலையும் சிங்கள நாஜி அரசுக்கு இந்திய ஏகாதிபத்தியம் மட்டுமின்றி சீனா, ரசியா, பாகிஸ்தான், இஸ்ரேல் போன்ற நாடுகள் போர்க்கருவிகளை வாரி வாரி வழங்கின. போர் விதிமுறைகளைப் புறந்தள்ளி, தமிழ் மக்களைக் கூட்டங்கூட்டமாக இனப்படுகொலை செய்த இலங்கையின் குடியரசுத்தலைவர் இராசபட்சேயும் அவரது அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளும் போர்க்குற்றவாளிகள் ஆவர். ஈழத்தமிழின அழிப்புப்போரில், அரசுப்படைகளோ, விடுதலைப்புலிகளோ, யார் போர் விதிமுறைகளை மீறியிருந்தாலும் அவர்களை விசாரிக்க இலங்கை அரசு ஒரு குழு நியமிக்கவேண்டும் என்று சுவிட்லார்ந்து முன் மொழிந்த தீர்மானத்தைக்கூட ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் எதிர்த்து வாக்களித்தது இந்தியா.

கம்யூனிஸ்ட் கியுபாவும், இடதுசாரி அரசுகளைக் கொண்டுள்ள பொலிவியா, நிகரகுவா ஆகிய நாடுகளும், கம்யூனிச முகமூடி போட்டுக்கொண்டுள்ள புதிய ஏகாதிபத்தியமான சீனாவும் கூட அந்தத் தீர்மானத்தை எதிர்த்தன. வியட்நாம் சிங்கள அரசை ஆதரித்து வருகிறது. நிலக் கோளத்தில் பத்து கோடித் தமிழர்கள் வாழ்ந்தும் நமக்கென்று ஒரு நாடு இல்லாததால் பன்னாட்டு அரசியலில் தமிழர்கள் அனாதைகளாகவே உள்ளனர். தமிழகத்தில் 6.1ஃ2 கோடி மக்கள் வாழ்ந்தும் தமிழகத்திற்கென்று இறையாண்மையோ, தேசமோ இல்லை. தமிழர்களுக்கு இறையாண்மையுள்ள நாடு வேண்டும்.

சிங்கள அரசு தமிழர்களை அடைத்து வைத்துள்ள வதை முகாம்களில் ஒரு வாரத்திற்கு 1400 தமிழர்கள் சாகிறார்கள் என்று இலண்டனிலிருந்து வெளிவரும் ‘டைம்ஸ்’ ஏடு கணக்கிட்டுள்ளது. நோயினால், பட்டினியால் சாவோரும், சிங்களப் படையாட்களால் சுட்டுக் கொல்லப்படுவோரும் இவ்வெண்ணிக்கையில் அடக்கம். இப்படியே போனால் எஞ்சியுள்ள ஈழத்தமிழர்களும் அழிந்துபோவார்கள். சிங்கள -இந்திய அரசுகளின் விருப்பம்போல் ஈழத்தமிழினம் முற்றாக ஒழிக்கப்பட்டு விடும். இந்த மனித அழிவைத் தடுத்து நிறுத்தக்கோரி ஐ.நா. மன்றத்தையும்,பன்னாட்டுச் சமூகத்தையும் தலையிட வைப்பதே இப்பொழுது நம்முன் உள்ள உடனடிக் கடமை. மனிதப் பேரழிவைத் தடுக்கும் மனச்சான்றுடன், தமிழ்நாடெங்கும் போராட்டங்கள் பெருவீச்சில் நடைபெற வேண்டும்.

போராட்டக் கோரிக்கைகள்:-

1.போர்க் குற்றவாளிகளான மகிந்த இராசபட்சே - கோத்தபய- பொன்சேகா ஆகியோரை பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்தவேண்டும். அவர்களோடு கூட்டுச் சேர்ந்து போர்க்குற்றத்தில் ஈடுபட்ட மன்மோகன்சிங், ஏ.கே. அந்தோணி ஆகியோரையும் பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும்.

2. ஈழத்தமிழர் துயர் துடைப்புப் பணிகளிலிருந்து இலங்கை அரசை முற்றிலும் விலக்கிவிட்டு, ஐ.நா.மன்றமும், பன்னாட்டுச் சமூகமும் மட்டுமே அப்பணிகளைச் செய்யவேண்டும்.

3. வதை முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் அனைவரையும் விடுவித்து அவரவர் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கவேண்டும்.

4. ஈழத்தமிழர் தாயகப்பகுதிகளான வடக்கு, கிழக்கு மாநிலங்களில் சிங்களர்களைக் குடியேற்றுவதை ஐ.நா.மன்றமும் பன்னாட்டுச் சமூகமும் தடுக்க வேண்டும்.

5. ‘வடக்கில் வசந்தம்’ என்ற பெயரில் இந்தியாவின் ஆரிய நாஜிகளான என்.ராம் - எம்.எஸ்.சாமிநாதன் குழுவினர்; ஈழத் தமிழர் வேளாண்மை, தொழில் மற்றும் வணிகத்தில் தலையிடுவதைத் தடுத்து நிறுத்தவேண்டும்.

தீர்மானம்: 3 தமிழகத்தில் மூன்றாண்டு வசித்துள்ள ஈழத்தமிழ் ஏதிலியருக்குக் குடியுரிமை வழங்க வேண்டும்.

தமிழ்நாட்டில் உள்ள ஈழத்தமிழ் ஏதிலியர் முகாம்கள், சிறைச்சாலைகளை விடவும் மோசமானவை. சிறைச்சாலைகளில் உள்ள துப்புரவு, குடிநீர், கட்டடப்பாதுகாப்பு, மருத்துவம், உணவு போன்ற உறுதிப்பாடுகள் எதுவும் இந்த முகாம்களில் இல்லை. இவர்களுக்கான உதவித்தொகை மிகமிகக் குறைவாக உள்ளது. இவர்கள் சுதந்திரமாக வெளியே போய் வர அனுமதிப்பதில்லை. இவர்களை மற்றவர்கள் முகாம்களில் போய் எளிதில் சந்திக்க முடியாது. காவல் கெடுபிடிகள் அதிகம். முகாம்களுக்கு வெளியே வாடகை வீடுகளில் தங்கியிருக்கும் ஈழத்தமிழர் அவலம் அதிகம். அவர்கள் காவல்நிலையத்தில் பதிவு செய்ய வேண்டும். வீடு மாறினால் அதற்குரிய காவல்நிலையத்தில் பதிவு செய்ய வேண்டும் .

இவ்வாறான பதிவுக்கும் ஏதாவது சான்றிதழ் வாங்க வேண்டுமெனில் அதற்கும் காவல்நிலையத்தில் கையூட்டு கொடுக்க வேண்டியுள்ளது. இந்திய அரசும், தமிழக அரசும் திபேத்திய ஏதிலியரை நடத்துவதுபோல் ஈழத்தமிழ் ஏதிலியரையும் கண்ணியமாகவும், நாகரிகமாகவும் நடத்த வேண்டும். ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களுக்குக் கிடைக்கும் உரிமைகள் அனைத்தையும் இவர்களுக்கு வழங்கவேண்டும். ஐ.நா. அமைப்பு ஏதிலிகளுக்கு அறிவித்துள்ள உரிமைகளை ஈழத்தமிழர்களுக்கு கிடைக்க வேண்டும். மூன்றாண்டுகளுக்கு மேல் தமிழகத்தில் தங்கியுள்ள ஈழத்தமிழ் ஏதிலியர் விரும்பினால் அவர்களுக்கு இங்கு குடியுரிமை வழங்கவேண்டும். வெளிநாடுகளில் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் குடியுரிமை பெற்றுள்ளனர் என்பது இங்கு கவனிக்கத்தக்கது.

இப்பொழுது, ஏதிலியர் முகாம்களில் குடும்பத் தலைவராக உள்ள ஆணுக்கு 1 மாதத்திற்கு ரூ.400 என்றுள்ள உதவித்தொகையை ரூபாய் ஆயிரமாக உயர்த்த வேண்டும். குடும்பத்தலைவிக்கு இப்பொழுதுள்ள ரூ.288 மாத உதவித்தொகை ஆயிரமாக உயர்த்த வேண்டும். 13 வயதுக்குள் உள்ள பிள்ளைகளுக்குத் தலைக்கு ரூ.180 என்றுள்ள மாத உதவித்தொகையை ரூ.500 ஆக்க வேண்டும். 13-வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகள் அனைவர்க்கும் ரூ.288 ஆக உள்ள மாத உதவித்தொகையை ரூபாய 800 ஆக உயர்த்தவேண்டும். அவர்கள் அனைவர்க்கும் புதிய கான்கிரீட் - வீடுகள் கட்டித்தர வேண்டும்;. தட்டுப்பாடில்லாத குடிநீர் வசதி, துப்புரவு வசதி ஆகியவை செய்துதர வேண்டும. ஏதிலியர் முகாம் ஒவ்வொன்றிலும் அவர்களுக்கென்று தனி மருத்துவமனை இருக்க வேண்டும். சிறப்பு முகாம் என்று பெயரிட்டுள்ள சிறைச்சாலைகள் அனைத்தையும் கலைக்க வேண்டும். அவற்றில் உள்ளவர்களை அவரவர் விரும்பும் நாட்டிற்கோ அல்லது தமிழ்நாட்டில் உள்ள ஏதிலியர் முகாமுக்கோ அனுப்பி வைக்கவேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமாறு இந்திய அரசையும்,தமிழக அரசையும் இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் : 4 : ஈழத்தமிழர்களைப் பாதுகாக்கப் போராடியோர் - பேசியோர் மீது போட்ட அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும்.

தமிழ்நாட்டில் தமிழ் இன உணர்வாளர்களுக்கெதிரான ஒரு சார் நெருக்கடி நிலை (Selective Emaergency) உள்ளது என்றே கருதவேண்டியுள்ளது. ஈழத்தமிழர்களைப் பாதுகாக்கக் குரல் கொடுப்போரையும் தமிழ் இன உணர்வு அடிப்படையில் பேசுவோரையும் - ஈழத்தமிழர்களைப் பாதுகாக்கப் போராடுவோரையும் தமிழக அரசு, ஆள் தூக்கிச் சட்டங்கள் பயன்படுத்தியும,; காலனி ஆட்சியாளர்கள் தங்கள் ஆதிக்கத்தைக் காப்பாற்றிக் கொள்ள போட்ட பழைய சட்டப்பிரிவுகளைப்; பயன்படுத்தியும் சிறையில் அடைக்கின்றது. பொதுக்கூட்டங்களில் பேசியதற்காக பலரைச்சிறையில் அடைத்ததும், சிலருக்குத் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை ஏவியதும் நாடறியும். போர்நிறுத்தம் கோரி போராடிய பலரைக் குண்டர் சட்டத்தில் தமிழக அரசு அடைத்தது.

ஈழத்தமிழர்களை அழிக்கும் போருக்காக இந்திய அரசு தமிழகத்தின் வழியாக ஆயுதங்கள் அனுப்பி வருகிறது. ஒரு தடவை கோவை நீலாம்பூர் அருகே அவ்வாகனங்கள் செல்வதை எதிர்த்து சாலை மறியலில் உணர்வாளர்களும், பொதுமக்களும் ஈடுபட்டனர். இதற்காக தோழர் கோவை இராம கிருட்டிணன் (பெரியார் தி.க. பொதுச்செயலாளர்) உள்ளிட்ட தோழர்களை ஆள் தூக்கி சட்டமான தேசியப்பாதுகாப்புச் சட்டத்தில் சிறைவைத்துள்ளனர.; மற்றும் 40 பேர்க்கு மேற்பட்டோரை, மிக மோசமான சட்டப்பிரிவுகளில் சிறை வைத்துள்ளனர்.

இந்திய அரசு - இலங்கையுடன் இணைந்து ஈழத்தமிழர்களுக்கெதிரான இன அழிப்புப்போர் நடத்துவதைக் கண்டித்து தமிழ்த் தேசப் பொதுவுடைமைக்கட்சி, தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம் ஆகியவை இந்திய - இலங்கை அரசுக்கொடிகளை எரிக்கும் போராட்டம் நடத்தின. போராட்டத்தில் கலந்துகொண்டோர் பிணை மறுப்பு வழக்கில் சிறைப்படுத்தப்பட்டனர். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இரகுபதி, பிணை வழங்குவதற்கு, இந்திய அரசுக்கொடியை அவரவர் வீட்டில் ஏற்ற வேண்டும் என்று நிபந்தனை விதித்தார். அத்துடன் அனாதை இல்லத்தில் சேவை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

அடிப்படை மதவாதிகளும், சில நாட்டாண்மைகளும் வழங்கும் தீர்ப்பு போல் இது உள்ளது. தமிழ்த் தேசப்பொதுவுடைமைக்கட்சி தோழர் தமிழரசன் அவர்களும், தமிழ்த்தேசிய விடுதலை இயக்கத் தோழர் பாரதி அவர்களும், மேற்கண்ட மனித உரிமைக்கு எதிரான நிபத்தனைகளை ஏற்க மறுத்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். அவர்கள் இருவரும் இன்னும் கோவை நடுவண் சிறையில் உள்ளனர்.

இவையெல்லாம், தமிழ்நாட்டில் தமிழ் இன உரிமைக்கும் உணர்வுக்கும் எதிராக நிலவும் சனநாயக மறுப்புச் சூழலைக் காட்டுகின்றன. தமிழ் இன உணர்வாளர்கள்- இந்த அடக்கு முறைகளுக்கு அஞ்சாமல் போராடவேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது. தமிழக அரசு, தனது தமிழின எதிர்ப்புப் போக்கைக் கைவிட வேண்டும் என்றும், தமிழின உணர்வாளர்களின் கருத்துரிமை மற்றும் போராட்ட உரிமை ஆகியவற்றைத் தடை செய்யக்கூடாது என்றும் இம்மாநாடு வலியுறுத்துகிறது. ஈழத்தமிழர்களைப் பாதுகாப்பதற்காக போராடியோர், பேசியோர் மீது போட்டுள்ள அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும் என்றும் இது தொடர்பாக சிறையில் உள்ள அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும் தமிழ்த்தேசியம் - சிறப்பு மாநாடு தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

- [email protected]


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com