Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கட்டுரை

தேர்தல் 2006
மதிவாணன்


ஏப்ரல் மாதத்தின் துவக்கத்தில் கதவு சிற்றிதழ் ஓர் கட்டுரை வேண்டும் என்று கேட்டிருந்தது. தேர்தல் 2006 என்ற இதே தலைப்பில் எழுதினேன். ஏப்ரல் 26ல் இக்கட்டுரை எழுதப்படும்போது நிலைமை மிகவும் மாறிப்போயிருக்கிறது என்று தோன்றுகிறது. தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கட்சி ஜெயிக்க அதிக வாய்ப்பிருப்பதாக அந்தக் கட்டுரையில் மதிப்பிட்டிருந்தேன். அதற்கு மிக முக்கியமான காரணங்கள் இருக்கின்றன. அவற்றைப் பின்வருமாறு பட்டியலிடலாம்.

Karunanidhi 1. உலகமயத்தின் உண்மையான பிரதிநிதியான ஜெ, சமீப கால அறிவிப்புகளின் மூலம் தனது செல்வாக்கைக் கூட்டிக்கொண்டிருந்தார்.

2. அவரின் உண்மை சொரூபத்தை, உலகமய ஆதரவு தேச-மக்கள் விரோத நிலைபாட்டை அம்பலப்படுத்தும் நிலையில் யாரும் இல்லை. அதற்கான அரசியல் இயக்கம் இல்லை. அரசியலில் மந்த நிலை ஜெவுக்குச் சாதகமானது.

3. ஜெ'வுக்கு மாற்றைத் தேடுபவர்கள் மு.கவை மாற்றாக எடுத்துக்கொள்வதில்லை.

இவற்றின் அடிப்படையில் நான் செய்த மதிப்பீட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டியது அவசியம் என்று எனக்குப் படுகிறது. ஆனாலும், எதிர்வரும் தேர்தலின் அடிப்படை நிலைமைகளில் பெரிய மாற்றம் ஏதுவும் இல்லை.

இந்தத் தேர்தலில் அலை ஏதும் இல்லை. கடந்த தேர்தலில் இருந்தது போன்ற மதவெறி எதிர்ப்பு என்ற மையப்பிரச்சனையும் இத்தேர்தலில் இல்லை. எனவே, சமூகம் எதிர்கொள்ளும் உண்மையான பிரச்சனைகள்தான் இந்தத் தேர்தலின் மையமான விஷயமாக மாறிவிட்டிருக்கின்றன. இதனை மிகச்சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறார் கருணாநிதி. இரண்டு ரூபாய் அரிசி, இரண்டு ஏக்கர் நிலம் என்ற அவரின் தேர்தல் வாக்குறுதியை துவக்கத்தில் பலரும் கிண்டல் செய்தனர். ஆனால், மிகவும் திட்டமிட்டு பாய்ச்சப்பட்ட ஆயுதம் என்பதை சில நாட்களில் அனைவரும் புரிந்துகொண்டனர்.

சில தகவல்களைப் பகிர்ந்துகொள்வோம். தமிழகம் நம்பர் 1 இடத்தில் இருக்கிறது என்று சமீபத்திய செய்தியொன்று சொன்னது. கேரளாவைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு தமிழகம் முதல் இடத்துக்கு வந்துவிட்டதை அந்த செய்தி சொன்னது. உழைப்பை விற்பதற்காக அயல்நாடுகளுக்குச் செல்லுவதில் இந்த ஆண்டு தமிழர்கள் முதல் இடத்தைக் கைப்பற்றியிருக்கின்றனர். எந்தவித கூடுதல் திறமையும் இல்லாத, ஒரு லட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் தங்கள் கடனை அடைப்பதற்காக வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர்.அது மட்டுமல்ல, கிராமங்களில் விவசாயத்தில் ஈடுபடும் ஆண்களின் எண்ணிக்கைக் குறைந்துவிட்டது. சிறுநகரங்கள் நோக்கியும், திருப்பூர் போன்ற தொழில் நகரங்கள் நோக்கியும் வெளிமாநிலங்களுக்கும் தமிழர்கள் படையெடுக்கின்றனர். திருச்சி நகரின் சில பகுதிகள் அதிகாலையில் சந்தைக் கடைபோல கூட்டமாகிவிடும். கிராமங்களில் இருந்து பஞ்சை பராரிகள் போன்ற உழைப்பாளர்கள் திரண்டிருப்பர். நகரின் கட்டுமான வேலைகள்தான் அவர்களின் இலக்கு. ஆடுகளை மாடுகளை மதிப்பிடுவதைப்போல உழைப்பாளிகளின் உடல் மதிப்பிடப்பட்டு அழைத்துச் சென்றுவிட, மிச்சமிருக்கும் எலும்புத் தோலான ஆண்களின், பெண்களின் பார்வை என் மனதைக் குடையும் ஒன்றாக பதிந்துபோனது.

ஓரு ஆளுக்கு மாதம் ஒன்றுக்கு 8 கிலோ அரிசி தேவையாம். தமிழகத்தில் சராசரி குடும்பத்தின் அளவு 5 என்று அரசு சொல்கிறது. அப்படியானால், மாதம் ஒன்றுக்கு 40 கிலோ அரிசி ரேஷன் கடையில் வழங்கப்பட வேண்டும். ஆனால், அரசு வழங்குவதோ வெறும் 20 கிலோ. ஆனால், அதில் சராசரியாக மக்கள் வாங்குவதோ மாதத்திற்கு 10 கிலோ. மீதமுள்ள அரிசியையும் வாங்க அவர்கள் கையில் பணம் இல்லை என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். அப்படியானால் அவர்கள் எப்படி வாழ்கிறார்கள். தமிழர்களின் இந்தத் திறமையை என்னால் இன்னும் புரிந்துகொள்ள முடியவில்லை.

கிராமப்புறங்களில் பெரும்பாலும் பெண்கள்தான் விவசாய வேலைகளைப் பார்க்கிறார்கள். அவர்களுக்குக் கிடைக்கும் கூலி 25 முதல் 35 ரூபாயாக இருக்கிறது. விடியலில் வேலைக்குச் சென்று அந்தி முடிந்தபின்னர் திரும்பினார்கள் என்றால், 50-60 ரூபாய் கிடைக்கலாம். ஆனால், அவ்வாறான வேலை தினமும் கிடைக்காது. 5 மணி நேரத்திற்கு 70 ரூபாய் குறைந்தபட்ச விவசாய (பெண்களுக்கான) கூலி என்ற ஜெவின் அறிவிப்பு மூளையற்ற எம்எல்ஏக்கள் மேஜையைத் தட்டுவதற்கு ஒரு காரணமாயிற்று என்பதைத் தவிர வேறு எதற்கும் பயன்படவில்லை.

கிராமப்புறங்களில் கூட இப்பொழுதெல்லாம் தொழிலகங்கள் வந்துவிட்டன. ஆனால், 8 மணி நேர வேலை உள்ளிட்ட அனைத்து சட்ட வாசகங்களும் அங்கே அமுலாவதில்லை. அங்கேயும் பெருமளவில் பெண்கள்தான் வேலை செய்கிறார்கள். திருமணத் திட்டம் என்ற பெயரில் 14 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் சிறையில் அடைக்கப்பட்ட அடிமைகள் போல வியர்வை சிந்தி உழைக்க தமிழகத்தின் வருமானம் உயர்கிறது. அந்தத் தொழிலாளி பெண்கள்/சிறுமிகள் இழந்தது எதையெல்லாம் என்பதைப் பற்றி யாருக்கும் தெரியாது.
இதுதான் இன்றைய தமிழகம். இந்தத் தமிழகத்தை உலகமயமாக்கப்பட்டு வரும் தமிழகம் என்று சொல்லவேண்டும். ஜெ ஆட்சிக் கட்டிலில் ஏறிய புதிதில் எடுத்த கடுமையான நடவடிக்கைகளுக்கு அவர் அளித்த விளக்கங்களில் ஒன்று உலக வங்கி ஒப்புக்கொள்ளாது என்பது. அவர் தேர்தல் சமயத்தில் பெருமைப்படும் விஷயங்களில் ஒன்று பன்னாட்டு முதலாளிகள் இங்கே தொழில் துவங்கியிருக்கிறார்கள் என்பது.

ஊரான் ஊரான் வூட்டுத் தோட்டத்திலே ஒருத்தன் போட்டான் வெள்ளரிக்காய் பாட்டை யாரையேனும் விட்டு ரீமிக்ஸ் செய்ய வேண்டிய அவசியத்தில் நாம் இருக்கிறோம். (அந்தப்பொறுப்பை வந்தேமாதரப் புகழ் இரகுமானிடம் மட்டும் விட்டுவிடக்கூடாது.) தமிழகம் உலக முதலாளிகளின் வேட்டைக்காடானதற்கு கோக் கம்பெனிக்கு தாமிரபரணியைத் தாரை வார்த்தது ஓர் உதாரணம். சிவகங்கையில் ஒரு அரசியல் மேடையில் உரையாற்றிய சிபிஐ (எம்எல்) தோழர் ஒருவருக்கு காவல்துறை ஆய்வாளர் விடுத்த எச்சரிக்கை 'கோக் பற்றி பேசக்ககூடாது' என்பது. தாமிரபரணி பற்றி குறும்படம் எடுத்த நெல்லையைச் சேர்ந்த முற்போக்கு எழுத்தாளர் சங்க தோழர் ஒருவர் போலீசிடம் படாதபாடு பட்டார்.

Jayalalitha உலக முதலாளிகள் ஆதரவு பொருளாதாரக் கொள்கையில் ஜெ மிகவும் சிறப்பாகச் செயல்பட்டார். அதாவது, சீர்திருத்தங்களை வேகமாக அமுல்படுத்தியது மட்டுமல்ல, அதற்கு வெகுஜனக் கவர்ச்சியையும் அவரால் அளிக்க முடிந்தது. ஆட்சியின் பின்பகுதியில் மக்களுக்குச் சலுகைகள் என்று அறிவித்தாலும் அவையெல்லாம் கூட உலக வர்த்தக முதலைகளின் நிபந்தனைகளின் எல்லைக்குள் இருந்தது. அதன்காரணமாக உலகமய ஆதரவளார்களின் மிகவும் விரும்பப்படும் தலைவராகக் ஜெ ஆகிவிட்டார். மற்றொரு புறம், சலுகை அறிவிப்புகளின் மூலம் மக்களின் ஆதரவைத் திரட்டுவதில் வெற்றிபெற்றிருந்தார். இந்த நிலைதான் க பயந்துபோய் கூட்டணி ஆட்சிக்கு வழிவகுக்கும் வகையில் தனது சீட்டுகளைக் குறைத்துக்கொண்டது.

சமநிலையைத் தன் பக்கம் திருப்பும் நோக்கத்தில் மக்களின் அடிப்படைத் தேவையான அரிசியையும் நிலத்தையும் க கையிலெடுத்துக்கொண்டார். கூடுதலாக, திவாலான சிறுகுறு விவசாயிகளின் (இவர்கள் கணிசமான எண்ணிக்கையில் வாக்கு வங்கியாக இருக்கின்றனர்) கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றார். அப்படியே தன் தொழிற்சாம்ராஜ்யம் மற்றும் தகவல் தொடர்பு ஆதிக்கத்தை வலுப்படுத்தும் இலவச தொலைக்காட்சி அறிவிப்பையும் விட்டார். இவற்றுக்கு நல்ல பலன் கிடைக்க ஆரம்பித்திருக்கிறது. ஜெவுக்கு வாய்ப்பாக இருந்த நிலையில் மாற்றம் தென்படுகிறது. மிகக்கடுமையான போட்டியின் முடிவு எப்படியிருக்கும் என்பதைச் சொல்வது கடினமானதாக இருக்கிறது. ஒருவேளை திமுக தலைமையிலான கூட்டணி மந்திரிசபை கூட அமையலாம்.

ஆனால், முடிவு என்னவாக இருந்தபோதும் ஜெயிக்கப்போவது மக்கள் என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை. க வும் ஜெவும் அள்ளிவிடும் அறிவிப்புகளை அவர்கள் நிறைவேற்றியாக வேண்டும். ஆனால், உலகமய நெருக்கடியில் அதற்கான வாய்ப்புகள் குறைவு. விளைவாக, வரவிருக்கும் ஆட்சியாளர்கள் மக்களின் கடும் எதிர்ப்பைச் சந்திக்க வேண்டிவரும்.

நாம் முன்பு பேசிய அரிசிப் பிரச்சனையை எடுத்துக்கொள்ளுங்கள். உலகமய நிர்ப்பந்தத்தின் காரணமாக, பொது வினியோக முறை வெட்டிச்சுருக்கப்பட்டு வருகிறது. அதன்காரணமாக 40 கிலோ அரிசி வழங்கப்பட வேண்டிய இடத்தில் வெறும் 20 கிலோ மட்டுமே வழங்கப்படுகிறது. அதில் மக்களின் வாங்கும் சக்திக்கு ஏற்ப 10 கிலோ மட்டுமே வாங்கப்படுகிறது. இந்த நிலையை மாற்ற வேண்டுமானால், வழங்கப்படும் அரிசியின் அளவு அதிகரிக்கப்படவேண்டும். மக்களின் வாங்கும் சக்தியை அதிகப்படுத்த அவர்களின் கூலி மற்றும் வேலைவாய்ப்புக்கு உத்திரவாதம் அளிக்க வேண்டும். இரண்டு கழகங்களும் இந்த அடிப்படை விஷயத்தைக் கண்டு கொள்ளவில்லை. இரண்டுபேரும் உலகமயக் கொள்கைக்கு உண்மையானவர்களாகவும் மக்களை ஏமாற்றும் போலி வாக்குறுதிகளின் மாய வலைக்குச் சொந்தக்காரர்களாகவும் இருக்கிறார்கள் என்பதற்கு வேறு உதாரணம் தேவையில்லை.

திமுக, அதிமுக காங்கிரஸ் போன்ற மக்கள் விரோத, உலக முதலாளிய ஆதரவு, தேச விரோதக் கட்சிகள் மேலும் தனிமைப்படுவது நடக்கும். ஆனால், மரபு கம்யூனிஸ்டுக் கட்சிகள் இன்னமும் ஆளும் வர்க்கக் கட்சிகளின் தூக்குத் தூக்கியாக இருப்பதுதான் மிகப்பெரிய பிரச்சனை. இந்தத் தேர்தலின் முடிவில் இடதுசாரிகள் கூடுதல் இடங்களில் ஜெயிக்க வாய்ப்பிருக்கிறது. இரண்டு கழகங்களையும் விரும்பாதவர்களுக்கு உள்ள ஒரே வாய்ப்பில் கம்யூனிஸ்டுகள் கூடுதல் இடங்களில் ஜெயிப்பார்கள். ஆனால், அதனால் எந்தப் பலனும் இருக்காது. மக்களின் வாழ்க்கைப் போராட்டம் இந்தக் கட்சிகளின் திட்டத்திற்கு வெளியேதான் நடக்கும். ஆனால், தேவதூதர்களின் வருகைக்குக் காத்திருக்காமல் தமிழக மக்கள் உலகமய எதிர்ப்புப் பாதையில் பயணப்படுவார்கள். அந்தப்போக்கில் அதற்கான அரசியல் இயக்கமும் வடிவெடுக்கும். அந்த வகையில் நடைபெறும் தேர்தல் மிக முக்கியமானதாக ஆகியிருக்கிறது.


- மதிவாணன் ([email protected])

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com