Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கட்டுரை

பாரதி+ ஜீவா = ஜெயகாந்தன்
வே.மதிமாறன்


Jayakandhan அது ஒரு நகரம், அந்த நகரத்தின் சிறப்பே அந்த சிவன் கோயில்தான். அது ஒரு பாடல் பெற்ற ஸ்தலம். நகரின் பெரிய கோயில், பாடல் பெற்ற ஸ்தலம் என்றால், கர்ப்பகிரகத்திற்குள் நின்று கொண்டு பக்தர்களுக்கும் - கடவுளுக்கும் இடையில் தரகர்களாக இருக்கிற பார்ப்பனர்கள்தான் அந்தக் கோயிலிலும் கடவுளுக்கான தகவல் தொடர்பு கருவியாக இருந்தார்கள்.

16.5.2005 தேதியிட்ட குமுதம் இதழில் ஜெயகாந்தனுக்கு நெல்லை கண்ணன் எழுதிய கடிதத்தை மறுத்த ஒரு கடிதம்.

23.4.2005 அன்று மாலை மயிலாப்பூர் ஆர்.கே.சபாவில் ‘சமஸ்கிருத ஸேவ ஸமிதி’ சார்பாக ஜெயகாந்தனுக்கு நடந்த பாராட்டு விழாவில், ஜெயகாந்தன் பேசி, அந்த அநாகரிகமானப் பேச்சை நான்தான் வெளி உலகத்திற்கு அம்பலப்படுத்தினேன்.

குமுதத்தில் ஜெயகாந்தன் பேசியதாக நெல்லை கண்ணன் குறிப்பிட்டிருக்கிற அந்த வாக்கியங்கள் அப்படியே, ‘மக்கள் கலை இலக்கிய கழகத்தினர்’ தங்களின் துண்டு பிரசுரத்தில் குறிப்பிட்டு, ஜெயகாந்தனுகுக் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்து 28.4.2005 அன்று ராணி சீதை அரங்கத்தில் அவருக்கு நடந்த மற்றொரு பாராட்டு விழாவில் அவர்கள் விநியோகத்ததில் இருந்தது.

அடுத்து, ‘ஸம்ஸ் கிருத ஸேவா ஸமிதி ’யில் ஜெயகாந்தன் பேசிய மக்கள் விரோதப் பேச்சை, அம்பலப்படுத்தியவன் என்கிற முறையிலும், அதே மேடையில் நிகழ்ச்சி முடிந்தபிறகு, ஜெயகாந்தனிடம், ‘‘உங்களுக்க இங்கு நடந்த பாராட்டு விழா, உங்கள் திறமைக்குக் கிடைத்த பாராட்டல்ல. உங்களின் இந்தச் செயலுக்கு கிடைத்ததுதான்’’ என்று சொன்வன் என்ற முறையிலும், (‘‘ஆமாம், அதற்காகதான் இந்தப் பாராட்டு’’ என்றார் ஜெயகாந்தன். அருகில் முனைவர் பொற்கோ இருந்தார்.) நெல்லை கண்ணன் கடிதத்தில் உள்ள அபத்தங்களைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

ஜெயகாந்தனின் தமிழ், தமிழர் விரோதப் போக்கை கண்டிக்கிறார் நெல்லை கண்ணன். சரிதான். ஆனால், ‘உங்களின் ஞானத் தந்தை பாரதியும், ஜீவாவும் போல் நீங்கள் இல்லை’ என்று கண்ணன் சொல்லியிருப்பது, ‘பா.ஜ.க மதவெறி கட்சி’ என்று சொல்லுகிற ஒருவர், ‘ஆர் எஸ்.எஸ், அற்புதமான கட்சி’ என்று சொல்லுவது போல் இருக்கிறது.

பாரதி + ஜீவா = ஜெயகாந்தன்

பாரதியின் ஜெராக்ஸ் காப்பிதான் ஜெயகாந்தன். ‘ஸமஸ் கிருத ஸேவ ஸமிதியில்’ ஜெயகாந்தன் சொன்ன கருத்து, கருத்தென்ன ஒவ்வொரு வார்த்தையும் பாரதிக்குச் சொந்தமானது.

‘‘வர்ண வேறுபாடுகள் இருக்க வேண்டும். ஏற்றத் தாழ்வுகள் இருந்தால்தான் வாழ்க்கை சுவாரஸ்யமாக இருக்கும்’’ - ஜெயகாந்தன்.

‘வேத மறிந்தவன் பார்ப்பான் - பல
விந்தை தெரிந்தவன் பார்ப்பான்
நீதி நிலை தவறாமல் - தண்ட
நேமங்கள் செய்பவன் நாய்க்கன்
பண்டங்கள் விற்பவன் செட்டி - பிறர்
பட்டினி தீர்ப்பவன் செட்டி
...................................................
...................................................
நாலு வகுப்பும் இங்கொன்றே - இந்த நான்கினில் ஒன்று குறைந்தால்
வேலை தவறிச் சிதைந்தே - செத்து
வீழ்ந்திடும் மானிடச் சாதி
- பாரதியார்

‘‘தமிழை விட சமஸ்கிருதம் உயர்வானது. சமஸ்கிருதம் இங்கே ஆதரித்து வளர்க்கப்பட்டிருந்தால் ஆங்கிலம் இப்படி நுழைந்திருக்காது’’ - ஜெயகாந்தன்

‘இந்தியாவில் பெரும்பான்மையான பாஷைகள் ஸமஸ்கிருதத்தின் திரிபுகளேயன்றி வேறல்ல. அங்ஙனம் திரிபுகளல்லாததுவும் ஸமஸ்கிருதக் கலப்புக்குப் பிந்தியே மேன்மை பெற்றனவாம்.’

‘நமது முன்னோர்களும் அவர்களைப் பின்பற்றி நாமுங் கூட புண்ணிய பாஷையாக கொண்டாடி வரும் ஸமஸ்கிருத பாஷை மிகவும் அற்புதமானது. அதை தெய்வபாஷை என்று சொல்வது விளையாட்டன்று. மற்ற ஸாதாரண பாஷைகளையெல்லாம் மனித பாஷையென்று சொல்லுவோமானால், இவை அனைத்திலும் சிறப்புடைய பாஷைக்கு தனிப் பெயர் ஒன்று வேண்டுமல்லவா? அதன் பொருட்டே அதைத் தெய்வபாஷையென்கிறோம்.’

‘எந்த நாட்டினரைக் காட்டிலும் அதிகமாக யதார்த்தங்களைப் பரிசோதனை செய்து பார்த்த மாஹான்கள் வழங்கிய பாஷை’

‘தமிழர்களாகிய நாம் ஹிந்தி பாஷையிலே பயிற்சி பெறுதல் அவசியமாகும்’

‘இங்கிலிஷ் பாஷை அன்னியருடையது, நமது நாட்டிற்குச் சொந்தமானதன்று. நமது நாட்டில் எல்லா வகுப்பினர்களுக்கும் ஸ்திரமாகப் பதிந்துவிடும் இயற்கை உடையதன்று. ஹிந்தியோ அங்ஙனமன்று’ - பாரதியார் (பாரதியார் கட்டுரைகள் தொகுப்பு)

ஆகா என்று பேசுகிற வாய் ஜெயகாந்தனுடையதாக இருக்கலாம். அதிலிருந்து வருகிற வார்த்தைகள் பாரதியுடையது. ஜெயகாந்தனை விமர்சிக்கற ஒருவர் பாரதி ஆதரவாளராக இருக்க முடியாது. இருக்க கூடாது.

அடுத்து ப.ஜீவானந்தம்

Jeeva தந்தை பெரியரை எவ்வளவோ பேர் அவதூறாக, கேவலமாக எழுதியும் பேசியும் இருக்கிறார்கள். ஆனாலும் ப. ஜீவானந்தம் பெரியாரை கேவலப்படுத்தியது போல்,. இதுவரை யாரும் செய்ததில்லை. இதோ பெரியார் மீது ஜீவா அடித்துச் சேற்றில் இருந்து சில துளிகள்:

‘சுயமரியாதைத் தந்தை’, ‘சிந்தனை சிற்பி’, ‘புரட்சிப் பெரியார்’ என்ற பெரிய பட்டங்களைச் சூடி, சமதர்ம இயக்கத்தை - பொதுமக்கள் புரட்சி எழுச்சியை காட்டிக் கொடுத்திருக்கிறார். அழுகிப் போன ஜமீன்தாரி, நிலச் சுவான்தாரி வர்க்கத்தின் பாதை. பிற்போக்குப் பணமூட்டைகளின் பாதை, ஈரோட்டுப் பாதை.

1935 மார்ச் 10 ஆம் நாள் ‘குடி அரசு’ மூலம் மானங்கெட்டத்தனமான ஒரு அறிக்கையை வெளியிட்டார். பொய்புளுகுகளோடு. கனமான பாஷைப் பிரயோகத்தில் டாட்டன் ஹாமையும் மிஞ்சினார் ஈ வெ.ரா என்பது உறுதி. (பா.ஜீவானந்தம் எழுதிய ஈரோட்டுப் பாதை சரியா? என்ற நூலிலிருந்து)

இதுதான் ஜீவாவின் ‘நேர்மை’. இந்த ஜீவாவிடம் இருந்து ஜெயகாந்தன் கற்றுக்கொண்டது, மார்க்சியத்தை அல்ல. பெரியார் மீதான காழ்ப்புணர்ச்சியை, திராவிட இயக்கத்தின் மீதான வெறுப்பை.

அதனால்தான் ‘ஜெயந்திரன்’ போன்ற எவ்வளவு மோசமான விஷயத்தையும் ஆதரிக்கிற ஜெயகாந்தன், தன்னுடைய சந்தர்ப்பவாதத்திற்காகக் கூட திராவிட இயக்கங்களை ஆதரிப்பதில்லை என்பது மட்டுமல்ல, அவைகளை தொடர்ச்சியாக எதிர்த்துக் கொண்டே வந்திருக்கிறார். சமீபத்தில் ஞானபீட விருது பெற்றமைக்காக வாழ்த்துச் சொல்ல முயற்சித்த கலைஞரைத் திட்டமிட்டு அவமானப்படுத்தியது வரை.

ஆக, தமிழைத் தாண்டி சமஸ்கிருத மதிப்பும், வேதம், பகவத்கீதை, இந்து, இந்தி இவைகள்தான் இந்தியா என்கிற பாரதியின் துடிப்பும்- பெரியார் மீதான காழ்ப்புணர்ச்சி, திராவிட இயக்க எதிர்ப்பு என்கிற ஜீவாவின் வெறுப்பும் கலந்து செய்த கலவைதான் ஜெயகாந்தன்.

இந்த ‘தத்துவ’ பின்னணியே ஜெயகாந்தனுக்கு ‘ஞான பீட விருது’ வரை பெரிய அங்கீகாரத்தைப் பெற்று தந்திருக்கிறது. இதற்குப் பெயர்தான் ஜெயகாந்தனிசம். இப்படியாக உண்மை இருக்க, நெல்லை கண்ணனோ அசலைப் புகழ்ந்து, நகலை நக்கல் செய்கிறார். இதுவும் ஒருவகையில் ஜெயகாந்தனிசமே.

குமுதம் இந்தக் கடிதத்தைப் பிரசுரிக்கவில்லை. பாரதி குறித்த விமர்சனம் இடம் பெற்றிருப்பதே அதற்குக் காரணம். எல்லோரையும் கேலி செய்கிற குமுதம், இதுவரை பாரதி பற்றிய சின்னக்‘கீறலை’க் கூட வெளியிட்டதில்லை என்பதே என் ஞாபகம். ‘ஜெயேந்திரன் கொலை செய்தார்’ என்று அரசு ஆதாரங்களைச் சொல்லி கைது செய்த போதிலும், ‘இல்லை அவர் கொலை செய்து இருக்கமாட்டார்’ என்று நம்ப மறுக்கிற அவரின் பார்ப்பனப் பக்தர்களைப் போல், ‘பாரதி இந்து மத, பார்ப்பனச் சிந்தனையாளர்கள்தான்’ என்பதை அவரின் எழுத்து உதாரணங்களோடு நான் நிருபித்த போதும், (‘பாரதி’ய ஜனதா பார்ட்டி நூலில்) பாரதி பக்தர்கள் அதை நம்ப மறுக்கிறார்கள்.

இருக்கட்டும். மூடநம்பிக்கைகள் ‘முற்போக்காளர்களிடம்’ (அறிஞர்கள்) இருக்க முடியாது என்று நினைப்பது கூட ஒருவகையான மூட நம்பிக்கைதானே. அதற்காக குமுதத்தை ‘முற்போக்கு’ என்று சொல்வதாக அர்த்தமில்லை.

குமுதம் - முற்போக்காளர்களும் - மதவாதிகளும் உள்ளார்ந்த உணர்வோடு, சந்தித்துக் கொள்கிற மையப்புள்ளி பாரதி என்பதற்காகச் சொன்னேன். இந்த கடிதத்தை பிரசுரித்த சிந்தனையாளன், கவிதாச்சரண், நாளைவிடியும் இதழ்களுக்கு நன்றி.

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com