Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கட்டுரை

தண்ணீர் - தாகத்துக்கா? லாபத்துக்கா?


தண்ணீர் பஞ்சத்தின் பிடியில் சிக்கித் தவிக்கிறது தமிழகம். சென்னையின் பல பகுதிகளில் குடம் தண்ணீர் 5 ரூபாய் விலை விற்கிறது. தண்ணீருக்கே மாதம் ஆயிரம் ரூபாய் செலவிட வேண்டியிருப்பதாகக் கூறிக் குமுறுகிறார்கள் பெண்கள். தமிழகத்தின் பல நகராட்சிகள் 4, 5 நாட்களுக்கு ஒரு முறைதான் குடிநீர் விநியோகம் செய்கின்றன. குழாயடிச் சண்டை முற்றி திருச்சியில் ஒரு கொலையே விழுந்திருக்கிறது.

குடிநீருக்காக மக்கள் இப்படித் தவிக்கும் சூழ்நிலையில் ஒரு அரசு என்ன செய்ய வேண்டும்? தண்ணீர் பஞ்சத்தைப் பயன்படுத்தித் தனியார் முதலாளிகள் கொள்ளையடிப்பதைத் தடுக்க வேண்டும். நீர்வளத்தைப் கையகப்படுத்தி இலவசமாகவோ குறைந்த கட்டணத்திலோ மக்கள் அனைவருக்கும் குடிநீர் வழங்க வேண்டும். தாகத்தைக் காசாக்கும் தண்ணீர் வியாபாரத்தைத் தடை செய்ய வேண்டும்.

ஆனால் அரசு என்ன செய்கிறது? தண்ணீருக்காகப் போராடும் மக்கள் மீது தடியடி நடத்துகிறது. நெல்லை அருகே கங்கை கொண்டான் எனும் கிராமத்தில் அமையவிருக்கும் கொக்கோ கோலா ஆலைக்கோ, தாமிரவருணி ஆற்றிலிருந்து குழாய் போட்டுக் கொண்டு வந்து, லிட்டர் ஒண்ணரை பைசா விலைக்கு தண்ணீர் விற்க ஒப்பந்தம் போடுகிறது. கோயில்பட்டி, சாத்தூர் மக்களுக்குக் கிடைக்காத தாமிரவருணித் தண்ணீரை கொக்கோ கோலாவுக்கு வழங்கிறது. அதை பாட்டிலில் அடைத்து லிட்டர் 13 ரூபாய் விலைக்கு விற்று தமிழக மக்களைக் கொள்ளையடிக்கப் போகிறது கொக்கோ கோலா.

அமெரிக்கக் கம்பெனிக்கு வாரி வழங்குமளவுக்கு இங்கே நீர்வளம் கொழிக்கிறதா? “தமிழகத்தின் நிலத்தடி நீரில் 72 சதவீதம் குடிக்க லாயக்கற்றது” என்று கூறுகிறது பொதுப்பணித் துறை. மீதமுள்ள 28 சதவீகித நீர்வளத்தை போட்டி போட்டுக் கொண்டு உறிஞ்சிக் காசாக்குகிறார்கள் தனியார் முதலாளிகள். 600 தனியார் நிறுவனங்கள் தமிழகத்தின் ஏரிகளையும் நிலத்தடி நீரையும் உறிஞ்சுகின்றன. சென்னை நகரில் மட்டும் இவர்களது தண்ணீர் வியாபாரம் மாதமொன்றுக்கு 50 கோடி ரூபாய் என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கிறது பொதுப்பணித்துறை.

Indian women fetching water அதாவது, ‘தாகத்தால் தவிக்கும் மக்களைக் கொள்ளையடித்துக் கொள்ளுங்கள்’ என்று தனியார் முதலாளிக்களுக்குத் கண்ணைக் காட்டிவிட்டுருக்கிறது இந்த அரசு. ‘அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் ஊழல் பேர்வழிகள். பொதுச் சொத்தைச் சூறையாடும் திருடர்கள், இவர்களிடமிருந்து வேறென்ன எதிர்பார்க்க முடியும்?” என்று நீங்கள் கேட்கலாம். உண்மைதான். ஆனால் இவர்கள் திருடர்கள் மட்டுமல்ல, பன்னாட்டு முதலாளிகளின் கைக்கூலிகள், உலக வங்கியின் அடிமைகள். அ.தி.மு.க, தி.மு.க, பா.ஜா.க, தெலுங்கு தேசம் என எந்தக் கட்சியும் இதற்கு விதிவிலக்கில்லை. இந்த அடிமைகளின் நடவடிக்கைகளைப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் இவர்களுக்கு ஆண்டையான உலக வங்கியைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்.

உலக வங்கிக்காரன் என்பவன் யார்? ‘குடிநீர் முதல் கக்கூசு வரை எல்லா நலத்திட்டங்களுக்கும் உதவி வழங்கும் வள்ளல் என்று பலர் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் அது அமெரிக்க வல்லரசின் தலைமையிலான ஒரு கந்துவட்டிக் கும்பல்; ஏழை நாடுகளுக்கு வலியக்கடன் கொடுத்து வலையில் வீழ்த்தி அந்த நாடுகளின் வளங்களையும் சொத்துக்களையும் வளைத்துப் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு வழங்குவதுதான் உலகவங்கியின் பணி.

‘உலக வங்கி ரேசன் அரசி விலையை உயர்த்தச் சொல்கிறது, மின் கட்டணம்-பேருந்துக்கட்டணத்தைக் கூட்டச் சொல்கிறது’, என்று கருணாநிதியும் ஜெயலலிதாவும் சட்ட சபையிலேயே பேசுவதை நீங்கள் எத்தனை முறை கேட்டிருப்பீர்கள்! மத்திய அரசு முதல், மாவட்ட ஆட்சியர், நகராட்சி ஆணையர் வரை அனைத்து மட்டங்களிலும் உலக வங்கி நேரடியாக அதிகாரம் செலுத்துகிறது; கண்காணிக்கிறது.

அந்த உலக வங்கிதான் தண்ணீரைத் தனியார் மயமாக்கச் சொல்லி ஆணையிடுகிறது. பொதுத்துறைகளைத் தனியாருக்கு விற்பதைப் போலவே ஆறு, குளம், ஏரிகளையும் தனியார் முதலாளிகளுக்குத் தாரை வார்க்கச் சொல்கிறது ‘மக்களுக்கு இலவசக் குடிநீர் வழங்குவது என்ற கொள்கையையே ஒழித்துக் கட்ட வேண்டும்’ என்று வெளிப்படையாக அறிவிக்கிறது.

இயற்கையின் கொடையான தண்ணீரை, உயிரின் மூலமான தண்ணீரை, உயிரினங்கள் அனைத்தின் உரிமையான தண்ணீரை ஒரு விற்பனைச் சரக்கென்று சொல்கிறது. ஆறுகளும் குளங்களும் மக்களின் பொதுச்சொத்தல்ல. முதலாளிகள் தொழில் செய்வதற்கான முதலீடு என்கிறது. காற்றைப் போலத் தண்ணீரும் மனிதனின் இயற்கையான தேவை என்பதை மறுத்து, அது காசு கொடுப்பவனுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டிய சேவை என்கிறது.

‘தண்ணீரைத் தனியார் மயமாக்கினால்தான் கடன் தருவேன்’ என்று மிரட்டிய பல ஏழை நாடுகளின் நீர் வளத்தைப் பன்னாட்டு முதலாளிகளின் உடைமையாக மாற்றியிருக்கிறது உலக வங்கி.

நிர்பந்தங்கள் மூலம் ரகசியமாக இது நாள் வரை உலக வங்கி திணித்து வந்த தண்ணீர் தனியார் மயத்தை சட்ட பூர்வமாகவும் வெளிப்படையாகவும் செய்கிறது ‘காட்ஸ்’ ஒப்பந்தம். ‘காட்ஸ்’ ஒப்பந்தத்தின் படி கல்வி, மருத்துவம், வங்கி, காப்பீடு போன்ற தனியார் மயமாக்கப்பட வேண்டிய சேவைத்துறைகளின் பட்டியலில் தண்ணீரும் ஒரு சேவைத் துறை. இந்த ‘காட்ஸ்’ ஒப்பந்தத்திலும் இதற்கு முந்தைய ‘காட்’ ஒப்பந்தத்திலும் தெரியாமல் ஒரு அதிகார வர்க்கக் கும்பல் கையெழுத்திட்டிருக்கிறது. இந்த ஒப்பந்தத்திற்கு எல்லா ஓட்டுக் கட்சி ஒப்புதல் அளித்து விட்டன.

‘உலக வங்கி - ஐ.எம்.எப் - காட்ஸ் - உலக வர்த்தகக் கழகம்’ என்ற இந்த ஏகாதிபத்திய நிறுவனங்கள் சொல்வதுதான் இனி இந்தியாவின் சட்டம், நிர்வாகம், அரசியல், பொருளாதாரம். சட்டத்துறைகளில் உலக வர்த்தகக் கழகம் என்ன ஆணையிடுகிறதோ அதற்கேற்ப இந்தியாவின் சட்டங்கள் திருத்தப்பட வேண்டும். இறையாண்மையற்ற இந்த அடிமைத்தனத்தைத் தான் மறு காலனியாக்கம் என்று சொல்கிறோம். தண்ணீர் தனியார் மயம் என்பது மறு காலனியாக்கத்தின் ஒரு குரூரமான வெளிப்பாடு.

தண்ணீர் தனியார் மயமாக்கப் பட்டால் என்ன நடக்கும்? அது ஏழைகளுக்கு எட்டாக்கனியாகும், மாதந்தோறும் எண்ணெய் விலை ஏறுவது போல தண்ணீர் விலையும் ஏறக் கூடும். லாப வெறி பிடித்த முதலாளிகள் நீர் வளத்தைப் போட்டி போட்டுக் கொண்டு உறிஞ்சி இயற்கையை நாசமாக்குவார்கள். நம் கண் முன்னே ஒரத்துப் பாளையம் நீர்த்தேக்கத்தைத் தமது கழிவு நீர் தொட்டியாக மாற்றி எட்டு மாவட்டத்து மக்களின் குடிநீரையும் பாசன நீரையும் நஞ்சாக்கியிருக்கிறார்கள் திருப்பூர் முதலாளிகள்.

பன்னாட்டு முதலாளிகளைப் பற்றி சொல்லவா வேண்டும்? நீர் வளத்தை அழித்து புல், பூண்டுகள், தாவரங்கள், கால்நடைகள் என எல்லா உயிரினங்களையும் அழித்த அந்தப் பேரழிவை இயற்கையே கூட மீண்டும் சரி செய்து கொள்ள முடியாத நிலைக்குத் தள்ளி விடுவார்கள்.

இவையெல்லாம் நாளை வரவிருக்கின்ற அபாயங்கள் அல்ல. இன்று நம் கண் முன்னே தென்னாப்பிரிக்காவில் தண்ணீர் அளிக்கும் ‘கிராமப்புற கூட்டுக் குடிநீர்த் திட்டம்’ இத்தகையது தான். ஏரி, குளங்களை இனி அரசாங்கம் பராமரிக்காது. பயனாளிகளே பராமரித்துக் கொள்வது என்ற பெயரில் நீர் வளங்கள் அனைத்தும் கிராமப் புற ஆதிக்க சக்திகளிடம் ஒப்படைக்கப்படும். சந்தைக்கும் கக்கூசுக்கும் டெண்டர் எடுத்த சமூக விரோதிகளைப் போல பாசன நீருக்கு இவர்கள் விவசாயிகளிடம் விருப்பம் போல பணம் பிடுங்குவார்கள். தமிழகத்திற்கு உலக வங்கி வழங்கியிருக்கும் இந்த திட்டத்தை மராட்டிய காங்கிரசு அரசு சட்டமாகவே நிறைவேற்றியிருக்கிறது. இச்சட்டத்தின் படி ஒரு ஏக்கருக்கு ஒரு போகத்துக்கு விவசாயி கட்ட வேண்டிய தண்ணீர் வரி ரூ.8000. ஏழை நடுத்தர விவசாயிகளை விவசாயத்தை விட்டே துரத்துவதுதான் உலக வங்கியின் தண்ணீர் தனியார்மயத் திட்டம்.

தண்ணீர் தனியார்மயமென்பது தண்ணீர்ப் பிரச்சனை மட்டுமல்ல. தண்ணீரை இழந்தால் நாம் சோற்றையும் இழப்போம். விதைகளின் மீது நமது விவசாயிகள் கொண்டிருக்கும் பாரம்பரிய உரிமையை ரத்து செய்து அவற்றைப் பன்னாட்டு நிறுவனங்களின் உடைமையாக்குகிறது மத்திய அரசின் புதிய விதைச் சட்டம். உரமும், பூச்சி மருந்தும் தான் ஏற்கனவே அவர்களது கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. அரசு கொள்முதல் ஒழிக்கப் பட்டு நாடெங்கும் ஐ.டி.சி போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் தானியக் கொள்முதலைத் தொடங்கி விட்டன. ஆயிரம், இரண்டாயிரம் ஏக்கர் பரப்பில் பன்னாட்டுக் கம்பெனிகள் ஏற்றுமதிக்கான விவசாயம் செய்வதற்காகவே ‘தரிசு நில மேம்பாட்டுத் திட்டம்’ நாடெங்கும் கொண்டு வரப்படுகிறது. தற்போது தண்ணீர் விற்பனையில் இறங்கியிருக்கும் அமெரிக்க மான்சாண்டோ நிறுவனம் ‘மொத்த உணவுச் சங்கிலியையும் கைப்பற்றுவது தான் எங்கள் திட்டம்’ என்று பகிரங்கமாகவே அறிவித்திருக்கிறது.

தண்ணீர் தனியார் மயமாக்கப் பட்டால் நாம் சுய சார்பை இழந்து உணவுக்கும் தண்ணீருக்கும் கப்பலை எதிர்பார்த்துக் கையேந்தி நிற்போம். தண்ணீரைக் கட்டுப்படுத்துபவன் எல்லா ஆதாரங்களையும் கட்டுப்படுத்த முடியும். தண்ணீரை இழந்தால் பெயரளவிலான இறையாண்மையையும் நாம் இழப்போம். பிளச்சிமாடாவின் கதை நமக்கு ஒரு பாடம்.

முப்போகம் விளைந்த கேரளத்தின் பிளாச்சிமடா கிராமத்தில் கொக்கோ கோலா நிறுவனம் ஆலை அமைத்தது. கோடிக்கணக்கான லிட்டர் நீரை நிலத்திலிருந்து உறிஞ்சி எடுத்தது. ஒரு லிட்டர் கோக்கிற்கு எட்டு லிட்டர் ரசாயனக் கழிவு நீரை வெளியேற்றியது. பிளாச்சிமடா கிராமத்தின் நிலம் அழிந்தது. கோக் நிறுவனம் அனுப்பும் தண்ணீர் லாரிக்காக மக்கள் கையேந்தி நிற்கும் நிலை ஏற்பட்டது. இரண்டே ஆண்டுகளில் பிளச்சிமடாவை சுடுகாடாக்கிய கோக் தனக்கு சாதகமாக நீதிமன்ற உத்திரவும் பெற்று விட்டது. இப்போது தாமிரவருணியைக் குறி வைத்திருக்கிறது.

கோக் ஒரு குறியீடு. ‘உலகின் நீர் வளங்கள் அனைத்தும் எம் தனி உடைமை’ என்று கூறும் பன்னாட்டு தண்ணீர்க் கொள்ளையர்களுக்கு கோக் ஒரு பிரதிநிதி. நமது ஆறு குளங்களூம் நிலத்தடி நீர் வளமும் நமக்கு சொந்தமா, பன்னாட்டு நிறுவனங்களுக்குச் சொந்தமா என்பதுதான் நாம் எழுப்பும் கேள்வி.

- திருநெல்வேலி கங்கைகொண்டானில் செப்டம்பர் 12,2005 அன்று ‘கோக்’ ஆலைக்கு எதிராக நடத்தவிருக்கும் மறியல் போராட்டம் தொடர்பாக மக்கள் கலை இலக்கியக் கழகம், விவசாயிகள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆகியவை வெளியிட்டுள்ள துண்டறிக்கையிலிருந்து.

நன்றி - தீம்தரிகிட 
நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com