Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கட்டுரை

ஓட்டுப் போட்ட சனங்களும் ஒட்டுப் போட்ட சாலைகளும்
மு.குருமூர்த்தி


சாலையில் இடதுபக்க ஓரமாக போகவேண்டும் என்று ஆசிரியர் சொல்லிக் கொடுத்ததும் மறுப்பு சொல்லாமல் நாம் கேட்டுக்கொண்டதும் அந்தக் காலம். ''இடதுபக்கத்தில் பள்ளம் தோண்டியிருந்தால் என்ன செய்யவேண்டும்'' என்ற நியாயமான கேள்வியை சிறுவர்கள் கேட்பது இந்தக் காலம்.

India Road சாலை பாதுகாப்பு வாரம் என்பதெல்லாம் பம்மாத்து வேலை. ''சாலைகளுக்கு பாதுகாப்புவாரம்'' கொண்டாடுவோம் என்று சொன்னால் நாமும் அதில் சேர்ந்து கொள்ளலாம். நம்முடைய ஊர்களில் உள்ள சாலைகளின் அவலநிலையைப்பற்றி வெளிநாட்டுக்காரர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அவர்கள் வாய்விட்டுச்சொல்லிக் கேட்க நமக்கு வாய்ப்பு இல்லை.

ஆனால் அவர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பிப்போனபிறகு அங்குள்ள ஊடகங்களில் நம்முடைய பிச்சைக்காரர்களின் பெருமைகளையும், குப்பைக் கூளங்களின் சிறப்பையும், அரசு இயந்திரம் சோம்பல் முறிக்கும் சுறுசுறுப்பையும், கண்ட கண்ட இடங்களில் காறித் துப்பும் கலாசாரத்தையும் கிழிகிழி என்று கிழித்தவுடன் நம்முடைய ஊர்ப் பத்திரிக்கைகாரர்கள் அதையெல்லாம் பொறுக்கியெடுத்து அச்சடித்து காசாக்கும் திறமையை நாம் தெரிந்துகொள்ள நிறைய வாய்ப்பு இருக்கிறது.

நம்முடைய ஊரில் உள்ள சாலைகள் மோசமான நிலையில் இருப்பதாகவும் அதை நாம் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டுவர விருப்பப்படுவதாகவும் வைத்துக் கொள்வோம். மனுவாக எழுதி அதிகாரிகள் கையில் கொடுத்து பைல் மூட்டைக்குள் அதற்கு சமாதி கட்டுவது ஒரு வழி. ஊடகங்களில் வெளிச்சம் போட்டுக் காட்டி ஓட்டுப் பொறுக்கும் அரசியல் பிரதிவாதிகளின் அடிவயிற்றில் கலக்கத்தை ஏற்படுத்துவது மற்றொருவழி.

இந்த இரண்டாவது வழியை கையிலெடுத்துக் கொள்ள எத்தனை ஊடகங்கள் பிரதிபலனை எதிர்பார்க்காமல் இன்று சம்மதிக்கும் என்பதில்தான் இந்த சனநாயகத் தூணின் வலிமை கேள்விக்குறியாக்கப்பட்டிருக்கிறது.

கிராமத்தில் உள்ள சாலையை சீரமைக்க வேண்டுமா? அதற்கென ஒரு அதிகாரி இருக்கிறார். நகரத்தில் உள்ள ஒரு சாலையை சரிசெய்ய வேண்டுமானால் அதற்கு வேறு ஒரு அதிகாரி இருக்கிறார். மாநகரத்தில் உள்ள ஒரு சாலைக்கு இன்னும் பெரிய அதிகாரியும் மாநிலங்களை இணைக்கும் சாலைக்கு மிகமிக பெரிய அதிகாரியும் இருக்கிறார். இப்படி பல அதிகாரிகளை உண்டாக்கினால் பல அலுவலகங்களை உண்டாக்கலாம். பிரச்சினைகளை சிக்கலாக்கலாம். மக்களைக் குழப்பலாம். நாலு காசு பார்க்கலாம். இதில் வேடிக்கை என்னவென்றால் அதிகாரிகள் வேறுவேறு என்றாலும் அவர்களை இயக்கும் அரசியல் பிரதிவாதி ஒருவராகவும் அவருடைய கையாட்கள் பலகிளைகளாக பிரிந்து இருப்பதும்தான்.

நம்முடைய நிதியமைச்சர்கள் புதுப்புதுவரிகளை கண்டுபிடிப்பதில் நிபுணர்கள். ஒருவர் விற்பனை வரி கண்டுபிடித்தார். வேறொருவர் நூலக வரி கண்டுபிடித்தார். அப்புறம் ஒருவர் கல்வி வரி கண்டுபிடித்தார். அதற்கப்புறமாக சர்சார்ஜ் என்ற ஒன்றை கண்டுபிடித்தார்கள். இப்போது சேவை வரி கண்டுபிடித்திருக்கிறார்கள். நூலக வரி நம்முடைய நூலகங்களில் எந்த அளவிற்கு வெளிச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது? எல்லா விற்பனைகளும் விற்பனை ரசீதுப் புத்தகத்திற்குள் அடங்கியிருக்கிறதா? கல்வி வரியால் ஓட்டல்களில் மேசை துடைக்கும் பையன்களுக்கு கல்வி கொடுக்க முடிந்திருக்கிறதா? ஓராசிரியர் ஈராசிரியர் பள்ளிக்கூடங்கள் மறைந்துபோய்விட்டனவா? சேவைவரி குவிந்துபோய் அதை என்னசெய்வது என்று திகைக்கும் காலம் வரப்போகிறது.

இந்த நிதியமைச்சர்கள் சாலை மேம்பாட்டிற்கென ஒவ்வொரு ஆண்டும் பெரும் தொகையை ஒதுக்குவது உண்மைதான். ஒதுக்கப்பட்ட தொகை முழுமையாகவும் முறையாகவும் செலவு செய்யப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிய ஒரு தணிக்கைத் துறையும் உண்டு. இந்த நடவடிக்கைகளில் ஓட்டையும் உண்டு. நிதியமைச்சர்கள் ஒதுக்கும் தொகையில் ஒரு பகுதி ஆர்ப்பாட்ட அரசியல் நடத்தவும் அதிகாரிகளின் ஆடம்பர செலவுகளுக்கும் பயன்படுகிறது. கட்சி வேறுபாடெல்லாம் இந்த விஷயத்தில் கிடையாது.

இந்தப் பணம் முறையாக செலவிடப்பட வேண்டும் என்பதும் முழுமையான பலன் மக்களைச் சென்றடைய வேண்டும் என்பதுதான் நம்முடைய கவலை. அதைத் தூண்டுவதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கம்.

ஒரு கிராமத்தில் ஐந்து கிலோ மீட்டருக்கு சாலை போட வேண்டியிருப்பதாக வைத்துக் கொள்வோம். இந்த ஐந்துகிலோமீட்டர் சாலையை போடும் காண்ட்ராக்ட் ஐந்து நபர்களுக்கு பிரித்துக் கொடுக்கப்படவேண்டிய அவசியம் என்ன? சம்பந்தப்பட்ட நபர்கள் அந்தந்த கிராமத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கும்படியும் கட்சியின் ஆரவாரங்களுக்கு தோள் கொடுப்பவர்களாகவும் இருக்கவேண்டிய அவசியம் என்ன?

இதனுடைய விளைவாகத்தான் சாதாரண மழைக்குக் கூட பல்லை இளிக்கும் சாலைகள், அப்புறம் சிறுகுழிகளாகி, பெரும்பள்ளங்களாகி, பலரின் எலும்பை நொறுக்கி, சிலரின் உயிரைப் பறித்து, மனுகொடுத்து, தோற்று, சாலை மறியல் செய்து, சாலையில் நாற்று நட்டு அப்புறமாக எஸ்டிமேட்போட்டு காண்ட்ராக்ட் விட்டு மீண்டும் அதே கதை மறுபடியும் தொடருகிறது.

இப்படி ஒரு கட்டுரை எழுதவேண்டும் என்று உந்துதல் ஏற்பட்டவுடன் கண்காணிப்புப் பொறியாளராக இருந்து ஓய்வுபெற்ற என் பால்யகால நண்பரை அணுகினேன். அவருக்கு என் கவலை புரிய வேண்டுமென்பதற்காக மாவட்ட ஆட்சித்தலைவர் வரிசையில் உள்ள அதிகாரிகள் குடியிருக்கும் ஒரு பிரதான சாலை வழியாக பேசிக்கொண்டே நடந்தோம்.

பாதாளசாக்கடை மூடிகள் அரைஅடி உயரத்திற்கு விம்மி நின்ற அந்த சாலையின் ஒட்டு வேலைகளில் எத்தனையோ இருசக்கரவாகனங்கள் நிச்சயமாக தடம் புரண்டிருக்கும். எத்தனை புதுமணத் தம்பதிகளோ! எத்தனை பள்ளிக்குழந்தைகளோ! இதற்கெல்லாம் அரசின் புள்ளிவிவரம் உண்டா என்ன?

''என்ன ராஜா! ஏன் இப்படியெல்லாம் இருக்கிறது?''

ராஜா-அவர்தான் என் நண்பர் சொன்னார்....

''நாங்கள் எஸ்டிமேட் போட்டு அரசுக்கு நிதிகேட்டு அறிக்கை அனுப்புவோம். அரசாங்கத்தில் இருந்து நிதி கிடைக்கும்போது கட்டுமானப் பொருட்கள் விலை உயர்ந்துவிடும். எந்த ஒரு ஒப்பந்தக்காரரும் வேலையை எடுத்துச் செய்ய முன்வராதபோது நாங்களே ஒப்பந்தக்காரர்களின் கையை காலைப் பிடித்து மார்ச் மாதத்திற்குள் வேலையை முடித்துவிடுவோம்.''

''ஒப்பந்தத் தொகையில் ஒரு பகுதி அரசியல் பிரதிவாதிகளின் தலையீட்டால் கையிலே காசு வாயிலே தோசை என்ற எழுதப்படாத கொள்கை அடிப்படையில் பிடித்தம் செய்து கொள்ளப்படும்.''

''அந்தத் தொகைதான் அலங்கார வளைவுகள், ஆடம்பர மேடைகள், செயல்வீரர் கூட்டங்கள், மாட்டுக்கறி பிரியாணி, பேரணிகள் என்ற போர்வையில் மீண்டும் மக்களுக்கே சென்றுசேரும்.''

''எங்களைப் போன்ற அதிகாரிகள் ஆடம்பர ஓட்டல்களில் தங்குவதற்கும் அரசியல்பிரதிவாதிகளுக்கு தேவையான சப்ளை சர்வீஸ் செய்வதற்கும் கொஞ்சம் பணம் போய்ச்சேரும்.''

''அதெல்லாம் தெரிந்ததுதான் நண்பரே! இந்த சாலை இப்படி இப்படி இருக்கிறதே! பள்ளிக்கூட பிள்ளைகள் போய்வரும் சாலையாயிற்றே! இதற்கு என்ன வழி?''

''இதோ பாருங்கள்.....மாவட்டத்தின் பெரிய அதிகாரிகள் போகும் ஜீப்புகளே இந்த பள்ளத்தில் விழுந்து நொடித்துக்கொண்டு போகும்போது உங்களுக்கு என்ன? நம்முடைய ஆசிரியர் சொன்னபடி சாலையில் இடது பக்க ஓரமாக போங்கள். பள்ளம் இருந்தால் தாண்டிப்போங்கள். தாண்டமுடியாவிட்டால் இறங்கிப்போங்கள்.

அதற்கப்புறம் நான் பேசவில்லை.

- மு.குருமூர்த்தி -ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ([email protected])

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com