Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கட்டுரை

உலக பாட்டாளிகளே ஒன்று சேருங்கள்!
சா.இலாகுபாரதி

1907 ஏப்ரல் 14-ம் நாள், இந்திய ராணுவத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த மெட்ராஸ் ராஜகோபால் நாயுடுவுக்கும் ராஜம்மாளுக்கும் இரண்டாவது பிள்ளை பிறந்தது. ராஜகோபால் தன் தந்தை மீது கொண்டிருந்த அன்பின் காரணமாக, தனக்கு இரண்டாவதாகப் பிறந்த ஆண் பிள்ளைக்கு தந்தையின் பெயரான ராதாகிருஷ்ணன் என்பதையே சூட்டி மகிழ்ந்தார். ராதாகிருஷ்ணன் ரொம்பவும் சூட்டிகையான பையன். படிப்பைக் காட்டிலும் விளையாட்டின் மீதே அவனுக்கு அதிக ஆர்வம் இருந்தது. அதற்கு ஒரு காரணம் உண்டு. குழந்தை ராதாகிருஷ்ணன் பள்ளிக்குச் செல்லும் வயது வந்ததும் பெற்றோர் அவனை பள்ளியில் சேர்த்தனர். ஆனால், பள்ளிக்குச் சென்றால் வாத்தியார் பிரம்பால் அடிக்கிறார்... என்ன செய்வது என்று யோசித்த ராதா... 'இனி, பள்ளிக்குச் செல்வதாக வீட்டிலிருந்து கிளம்பிவிட்டு தனக்குப் பிடித்த பில் தோட்டத்தைச் சுற்றித்திரிவது என்று முடிவு செய்கிறான்.

M.R.Radha and Sivaji ஒரு சைக்கிளையும் வாடகைக்கு எடுத்துக்கொண்டு ஜாலியாக சுற்றுகிறான். தோட்டத்தில் குஸ்தி கற்றுக் கொள்கிறான். ஒரு நாள் வீட்டை விட்டு ஓடி எழும்பூர் ரயில் நிலையத்தில் சுற்றிக் கொண்டிருக்கிறான் ராதா. ரயில் நிலையத்தில் அங்கும் இங்கும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த அவனை, பெரியவர் ஒருவர் அழைத்து, தனது பெட்டிப் படுக்கையை ரயிலில் கொண்டுவந்து வைக்கும்படி கேட்கிறார். பெரியவர் ஏதோ முடியாமல்தான் கேட்கிறார் என்று நினைத்த ராதா அவற்றைக் கொண்டுபோய் ரயில் பெட்டியில் வைத்துவிட்டு திரும்பும்போது, 'இந்தாப்பா...' என்று பெரியவர் ராதாவின் கையில் காலணாவைத் திணிக்கிறார். கையில் நயா பைசா இல்லாதிருந்த ராதாவுக்கு காலணாவைப் பார்த்ததும் முகத்தில் ரொம்பவும் பொலிவு... ராதா அப்போது நினைத்துக்கூட பார்த்திருக்கவில்லை; பின்நாட்களில் தாம் லட்சக் கணக்கில் சம்பாதிக்கப் போகிறோம் என்று.

சிறு பிராயத்தில் இருந்த ராதாவுக்கு நாடக உலகம் அறிமுகமாகிறது. ஜெகந்நாத ஐயர் நாடகக் கம்பெனியில் சேர்கிறான் ராதா. 1924ல் ஐயரின் நாடகக் குழு 'கதரின் வெற்றி' என்ற நாடகத்தை நடத்துகிறது. அந்த நாடகத்தைப் பார்ப்பதற்காக காந்திஜி தம்பதியரும், சீனிவாச ஐயங்கார், ராஜாஜி போன்றோரும் வருகின்றனர். நாடகத்தில் சிறுவன் ராதா, 'பாயசம்' என்ற நகைச்சுவைப் பாத்திரமேற்று நடிக்கிறான். நாடகத்தைப் பார்த்த ராஜாஜி, ''பாயசமாக நடித்த பையனைக் கூப்பிடுங்கள், நான் பார்க்க வேண்டும்'' என்றார். சிறுவன் ராதா வந்ததும் முதுகில் தட்டிக் கொடுத்து, ''பாயசம் மிகவும் நன்றாக இருந்தது'' என்று பாராட்டினார். அப்போது ராதாவுக்கு பன்னிரெண்டு வயது இருக்கும்.

ஒருமுறை ஐயரின் கம்பெனி இலங்கைக்குச் சென்றிருந்தது. அங்கு நாடகத்துக்கான நோட்டீஸ் அச்சடிக்க வேண்டியிருந்ததால் ஓர் அச்சகத்தில் நோட்டீஸுக்கு ஆர்டர் கொடுத்தனர். ஆனால், நோட்டீஸ் அச்சடிக்கும் பிரஸ்ஸில் திடீரென்று மிஷின் பழுதாகிவிட்டது. அச்சக உரிமையாளர் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தார். தகவலை அறிந்ததும் கம்பெனி வாத்தியார் பொன்னுசாமிபிள்ளை ராதாவை அழைத்தார். விஷயத்தைச் சொன்னதும் ராதா அச்சகத்துக்கு விரைந்தார். பழுது சரி செய்யப்பட்டது. அச்சக உரிமையாளர் திகைத்துப்போய் நூறு ரூபாய் தாளை எடுத்து ராதாவிடம் நீட்டினார். அதுதான் ராதா பார்த்த முதல் நூறு ரூபாய்.

ராதா மெக்கானிக்காவும், எலக்ட்ரீஷியனாவும் டிரைவராகவும்கூட பணியாற்றியிருக்கிறார். 1932ம் ஆண்டு சென்னை பெரம்பூரில் யதார்த்தம் பொன்னுசாமி பிள்ளை, 'மதுரை ஸ்ரீபாலகான சபா' என்ற நாடகக் குழுவைத் தொடங்கினார். பால்ய கால நட்பின் காரணமாக ராதா அந்தக் குழுவிலும் தனது திறமைகளை வெளிப்படுத்தினார். 1937-ம் ஆண்டு 'ராஜசேகரன்' என்ற சமூகப் படத்தில் வில்லனாக நடிக்க ராதாவுக்கு வாய்ப்பு வந்தது. அதுதான் அவரது முதல் படம். அதே ஆண்டு 'சேலம் மார்டன் தியேட்டர்ஸ்' கம்பெனியாரால் தயாரிக்கப்பட்ட 'சந்தனத் தேவன்' என்ற திரைப்படத்தில் வில்லனாக நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால், அப்படம் சரியாக ஓடவில்லை.

ராதாவின் நடிப்பைப் பார்த்து வியந்துபோன 'மார்டன் தியேட்டர்ஸ்' உரிமையாளர் டி.ஆர். சுந்தரம் ராதாவுக்காக ஆங்கிலப் படத்தின் கதையை மையப்படுத்தி 'சத்தியவாணி' என்ற படத்தை எடுத்தார். அதில் ராதாதான் கதாநாயகன். 1940-ல் வெளிவந்த அப்படமும் எதிர்பார்த்த அளவில் ஓடவில்லை. பார்த்தார் ராதா, தனக்கு திரைப்படம் சரிப்பட்டு வராது என்று நினைத்து மீண்டும் நாடக உலகிற்கே திரும்பினார். மெட்ராஸ் ராஜகோபால் நாயுடுவின் மகன் ராதாகிருஷ்ணனான எம்.ஆர்.ராதா, பெரியார் மீதும் திராவிட இயக்கத்தின் மீதும் மிகுந்த மரியாதை வைத்திருந்தார். அதன் காரணமாக 1943ம் ஆண்டு 'திராவிட மறுமலர்ச்சி நாடக மன்றம்' என்ற நாடகக் கம்பெனியைத் தொடங்கினார்.

நாடக அரங்கில் வண்ணத் திரைச் சீலைகளையும் ஓவியத் திரைகளையும் தொங்கவிட்டால்தான் பார்வையாளர்களை வசீகரிக்க முடியும் என்ற நம்பிக்கை கொண்டிருந்தவர்கள் இருந்த காலகட்டத்தில், தனது நாடகக் கம்பெனி சார்பாக நடத்தப்பட்ட நாடகங்களில் கருப்பு, வெள்ளை திரையை தொங்கவிட்டு அந்த மூடநம்பிக்கையை உடைத்தவர் எம்.ஆர்.ராதா. அன்றைக்கு, பொதுவுடமை இயக்கம் என்றாலே தெறித்து ஓடியவர்கள் மத்தியில் ராதா, 'உலக பாட்டாளிகளே ஒன்று சேருங்கள்' என்ற வாசகத்தைத் தாங்கிய திரையைத் தொங்கவிட்டு நாடகங்களை நடத்தி வந்தார். அப்போது பெரியார் கம்யூனிசத்தை ஆதரித்துவந்த காலகட்டம்.

பெரியார் என்ன செய்கிறாரோ அதையே தானும் பின்பற்றுவார் ராதா. அதேபோல ராதாவுக்கும் பொதுவுடமைத் தலைவர் ஜீவாவுக்கும் நெருங்கிய நட்பு இருந்தது. அது ஜீவா தலைமறைவாக இருந்த சமயம். ஜீவாவுக்கு ராதாதான் அடைக்கலம் கொடுத்துவந்தார். அப்போது, ஜீவா ராதாவிடம் தொடர்ந்து கடிதங்கள் கொடுத்து, அதைக் கொண்டுபோய் ஒரு பெண்ணிடம் கொடுத்துவிட்டு வரும்படி கேட்டுக்கொள்வாராம். அதேபோல் அந்தப் பெண் கொடுக்கும் கடிதங்களையும் தன்னிடம் கொடுக்கும்படி சொல்வாராம். ராதாவும் எந்தத் தயக்கமும் இல்லாது அதைச் செய்துவந்தார். இந்தக் கடிதப் போக்குவரத்து ஏதோ புரட்சிக்கு வழிவகுக்கப் போகிறது என்று நினைத்திருந்த ராதா, அது குறித்து ஜீவாவிடம் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. ஆனால், தொடர்ந்து கேள்விகேட்காமல் இருக்கமுடியவில்லை.

ஒரு நாள் ஜீவாவைப் பார்த்து, ''புரட்சி எப்போது வெடிக்கும்'' என்று ராதா கேட்க, அதற்கு ஜீவா ''பொறுத்திருந்து பார்'' என்று பதில் சொன்னார். கம்யூனிஸ்ட் கட்சி மீதிருந்த தடை நீங்கிய பின், ராதா ஜீவாவிடம் அந்த சம்பவத்தை நினைவுப்படுத்தி ''அந்தக் கடிதங்களினால், புரட்சி வெடித்ததா?'' என்று கேட்டிருக்கிறார். அதற்கு ஜீவா, ''ஆம் ஏற்பட்டது'' என்றாராம். ராதாவின் வியப்பு கலைவதற்குள்... ''ஆனால், நீங்கள் நினைப்பது போல் அது கட்சி சம்பந்தப்பட்ட கடிதங்களல்ல... அனைத்தும் காதல் கடிதங்கள். அதனால், எனக்கும் பத்மாவதி என்ற அந்தப் பெண்ணுக்கும் 'காதல் புரட்சி' ஏற்பட்டது'' என்றாராம். அப்போது ராதா, தன் ஆரவாரமிக்க சிரிப்பால் பொங்கிவழிந்தாராம்.
'கலை கலைக்காக; கலை மக்களுக்காக' என்று இரண்டு கோஷங்கள் எழுந்தபோது, கலை மக்களுக்காகத்தான் என்று தன் நாடகங்களின் வழி உரக்கச் சொன்னவர் எம்.ஆர்.ராதா. அதேபோல், ''நாடகம், சினிமா போன்றவை சிறந்த பிரச்சார சாதனங்கள். எனவே, என் எண்ணங்கள், கொள்கைகள், லட்சியங்கள் ஆகியவற்றை அவற்றின் வாயிலாக வெளியிட்டு வருகிறேன்'' என்று சொன்னார் ராதா. அவர், தரகு கலைஞர்களிடமிருந்து வேறுபட்டு இருந்தார். காசுக்காக கலையை அடகு வைப்பதை ஒருபோதும் அவர் செய்தது கிடையாது.

ராதாவின் நாடகங்களுக்கு கூட்டம் அதிகரிக்க அதிகரிக்க, நாடகத்தில் சமூக சீர்திருத்தக் கருத்துக்கள் சொல்வதை அவர் அதிகரித்தார். இதனால், நாடகம் நடக்கவிடாமல் சில விஷமிகள் கலவரத்தில் ஈடுபடுவர். அப்படி யாராவது கலவரத்தில் ஈடுபட்டால் ராதா மேடைக்கு வருவார்.''யார் கலாட்டா செய்றது..? நாடகம் உங்களுக்கு பிடிக்கலைன்னா உங்கள் பணத்தை திரும்ப வாங்கிக் கொண்டு போய்விடுங்கள். அனாவசியமாக மற்றவர்களுக்குத் தொல்லை கொடுக்காதீர்கள். டைம் வேஸ்ட் பண்ணாதீர்கள். உங்கள் பயமுறுத்தல்களுக்கெல்லாம் நான் பயப்படமாட்டேன். என் உயிருள்ள வரை நான் என் கருத்தைச் சொல்லிக்கொண்டே இருப்பேன்'' என்று முழங்குவார். ராதா கொள்கையை விற்றவரல்லர் என்பதற்கு இதுபோன்ற நிகழ்வுகளைச் சொல்லலாம்.

ராதா நடத்திய பன்னிரெண்டு நாடகங்களிலேயே 'ரத்தக் கண்ணீர்'தான் உலக நாடக வரலாற்றில் 60 ஆண்டுகாலமாக (இன்றும் ராதவின் மகன் ராதாரவி, பேரன் வாசு விக்ரம் போன்றவர்களால் நடத்தப்படுகிறது) நடந்துவருகிறது. அது நாடகங்களிலேயே உச்சத்தின் உச்சம். ராதாவாலேயே 'ரத்தக் கண்ணீர்' 3021 நாட்கள் அரங்கேற்றப்பட்டது. அதேபோல், 'தூக்குமேடை' 800 நாட்களும், 'லட்சுமி காந்தன்' 760 நாட்களும், 'போர்வாள்' 410 நாட்களும், 'இழந்த காதல்' 190 நாட்களும், 'ராமாயணம்' 170 நாட்களும், 'தசாவதாரம்' 110 நாட்களும் அரங்கேறி சாதனை படைத்தன. 'தூக்கு மேடை' நாடகம் மு.கருணாநிதியால் எழுதப்பட்டது. 'போர்வாள்' சிந்தனைச் சிற்பி சிற்றரசுவால் உருவாக்கப்பட்ட நாடகமாகும். ராதாவின் நாடகங்களில் கலகக்குரல் ஓங்கி ஒலித்ததால் ஏறக்குறைய அவரது பல நாடகங்கள் தடை செய்யப்பட்டன. அதற்கெல்லாம் ராதா அஞ்சியதே இல்லை.

'ரத்தக்கண்ணீர்' தடை செய்யப்பட்டபோது 'மேல் நாட்டுப் படிப்பு' என்ற பெயரில் அந்த நாடகத்தை அரங்கேற்றினார். 'தூக்கு மேடை' தடை செய்யப்பட்டபோது, 'பேப்பர் நியூஸ்', 'காதல் பலி', 'நல்ல முடிவு' என பல பெயர்களைக் கொண்டு அந்த நாடகம் அரங்கேறியது. 'போர்வாள்' நாடகம் 'சர்வாதிகாரி', 'நண்பன்', 'சுந்தர லீலா', 'மகாத்மா தொண்டன்' போன்ற பெயர்களில் அரங்கேற்றப்பட்டது. எதிர்ப்புகள்தான் ராதாவை உச்சத்தை நோக்கி நகர வைத்தன. திராவிடர் கழக மாநாடு என்றால் கட்சியின் கொடியேந்தி வெள்ளைக் குதிரையில் மாநாட்டு திடல் வரைக்கும் ராதா கம்பீரமாக பவனி வருவாராம். ஒரு முறை அப்படி அவர் குதிரை மீது வந்தபோது, விஷமிகள் அவரைத் தாக்கினார்கள். அடிமொத்தம் வாங்கிக்கொண்ட ராதா அந்த விஷமிகளைப் பார்த்து, ''போதுமா, திருப்தியா..? இப்போ போறியா..?'' என்று கேட்டாராம்.

சீர்திருத்தத்தைப் பற்றி பேசவே பயந்த அன்றைய நிலையில் 'விதவையின் கண்ணீர்' என்ற சீர்திருத்த நாடகத்தை நடத்தினார் ராதா. பல எதிர்ப்புகளுக்கு உள்ளானது அந்த நாடகம். ''அது சாஸ்திர சம்பிரதாயத்துக்கு விரோதமானது. அதை நடத்தினால் சமூகத்தின் அமைதி கெட்டுவிடும்'' என்று பிற்போக்குவாதிகள் நாகப்பட்டினம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அப்போது அந்த மன்றத்தின் நீதிபதி கணேசய்யர். ஆசாரமாக வாழ்ந்து வந்த நீதிபதி, நாடகத்தைப் பார்க்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார். 'இதோடு ராதாவின் ஆட்டம் அவ்வளவுதான்' என்று பேச்சுகள் எழுந்தன. நீதிபதி நாடகத்தை தடை செய்துவிடுவார் என்று எதிர்பார்த்தனர். நாடகத்தை முழுவதுமாக பார்த்த நீதிபதி மேடை நோக்கி விரைந்தார்... ஒரு நிமிடம் ராதாவைப் பார்த்தார்; கை நீட்டினார்... ராதாவும் கை கொடுத்தார்... குலுக்கினார் நீதிபதி. அவருக்கு நாடகம் பிடித்துவிட்டது.

ராதாவைப் பார்த்துச் சொன்னார், ''சாட்சாத் மார்க்கண்டேயன் மாதிரி என்னிக்கும் நீங்க சிரஞ்சீவியா இருக்கணும். இந்த மாதிரி நாடகம் இங்கே மட்டும் நடந்தால் போதாது; இந்தியா முழுக்க நடக்கணும். நீங்களும் உங்கள் நாடகமும் வெற்றிபெற நான் வாழ்த்துகிறேன்'' என்று கூறினார். வழக்கு தொடுத்தவர்கள் பேச முடியாமல் போயினர். ராதா எதிர் கருத்து உடையவர்களையும் தனது ஆழமான கருத்தால் கவர்ந்துவிடுவார் என்பதற்கு இது ஒரு சான்று. பெரியார், ஜீவாவைப் போல் ராதாவுக்கு காமராஜர் மீதும் கருணாநிதி மீதும் மிகுந்த அன்பு உண்டு. கருணாநிதியின் 'தூக்கு மேடை' நாடகம் பெரிய வெற்றிபெற்ற போது, ராதாவின் பெயர் பெரும் புகழ் அடைந்தது. கலைஞன் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நினைத்திருந்த ராதா, அந்தப் புகழுக்குக் காரணமான கருணாநிதிக்கு, கலைஞர் என்று பட்டம் சூட்டி மகிழ்ந்தார். அதுவே இன்றுவரை நிலைத்து நிற்கிறது.

ஒரு கூட்டத்தில் பெரியார் பேசும்போது, ''நாட்டில் எல்லாக் கலைஞர்களும் ரசிகர்கள் பின் செல்கிறார்கள். அவர்கள் மனம் திருப்திப்படும்படி எல்லாம் நடந்துகொள்கிறார்கள். நண்பர் ராதா அப்படிப்பட்டவர் அல்ல. தாம் ரசிகர் பின் செல்லாமல் ரசிகர் தம் பின்னால் வரவேண்டும். தன் பேச்சைக் கேட்க வேண்டும் என்று விரும்புபவர். மக்கள் தமது கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முற்பட்டாலும், முற்படாவிட்டாலும் நமது கருத்தை வலியுறுத்தி எடுத்துச் சொல்லத் தவறுவதே இல்லை'' என்று பேசினார். தனது 85வது பிறந்தநாள் விழாவில் பேசிய அதே பெரியார், ''அறிவு அற்றவர்கள் புராணக்கதைகளில் நடித்துக்கொண்டு அசிங்கத்தையே சொல்லி வருகிறார்கள். சிரிப்பின் மூலம் சிந்திக்கும்படி சட்டென்று சொல்லிவிடுகிறார் ராதா. மற்ற மடையர்கள் சொல்லவில்லை. ராதாதான் தைரியமாகச் சொல்கிறார். அதற்காக அவர் மிகவும் கஷ்டப்பட்டார். வண்ணான் துறையிலேயே படுத்துக்கொண்டு அங்கேயே வண்ணான் துணிகளை வாங்கி நாடகம் நடத்தினார். ரயில் கட்டணம்கூட இல்லாமல் திண்டாடினார். அதையெல்லாம் பொறுத்துக்கொண்டு கொள்கையை மறக்காமல் எடுத்துக்கூறி திருப்பத்தை உண்டாக்கினார். சுயமரியாதைக் கருத்துக்களை எடுத்துச் சொன்னதால் ராதா ஒழிந்துவிடவில்லை. வாழ முடியாமல் போனதுமில்லை. ஆகவே, மற்றவர்கள் திருந்தி அவரைப் பாராட்ட வேண்டும். ராதா வாழ்க. ராதாதாவைப் போல் மற்றவர்களுக்கும் புத்தி வரட்டும்'' என்று சமூக சிந்தனையற்றவர்களைப் பார்த்து கடிந்துகொண்டார்.

ராதா, பெரியார் பேச்சை தட்டாதவர். அவர் கம்யூனிஸ்டுகளை ஆதரிக்கிறார் என்றால் அதை செய்வார். காங்கிரஸ்காரர்களை ஆதரிக்கிறார் என்று தெரிந்தால் அவரும் காங்கிரஸை ஆதரிப்பார். நடிகவேள் எம்.ஆர்.ராதா 1952&ம் ஆண்டு திருச்சி தேவர் மன்றத்தில் 'போர்வாள்' என்ற நாடகத்தை நடத்தினார். அப்போதுதான் பட்டுக்கோட்டை அழகிரிசாமி அவருக்கு நடிகவேள் என்ற பட்டத்தைச் சூட்டினார். சினிமாவில் நடித்து புகழடைந்துவந்த காலகட்டத்தில்கூட நடிகவேள் நாடகத்தை மறந்துவிடவில்லை. அவருக்கு சினிமா உடல் என்றால், நாடகம்தான் உயிர். உயிர் இன்றி உடல் அசையாது என்பதை உணர்ந்திருந்தார் ராதா. சிறந்த நடிகன் என்பவன் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு ஒரு முறை ராதா சொன்ன பதில், ''நேராக சினிமாவில் சேர்ந்த எவனும் நடிகனாக மாட்டான். சிறந்த நடிகன் சினிமாவிலிருந்து வெளிவர முடியாது. ஒரு ரீடேக் இல்லாமல் மூன்று மணி நேரம் நாடகத்தில் நடித்து எவன் மக்களை தன்வசப்படுத்துகிறானோ அவனே சிறந்த நடிகன்.அதல்லாமல் ஒருவனுக்கு வசனத்தைக் கொடுத்து அதே காட்சியை இரண்டாயிரம் மூவாயிரம் அடிகள் வரை பல கோணங்களில் எடுத்து எந்தக் கோணத்தில் எடுத்தக் காட்சி நான்றாக இருக்கிறது என்று பார்த்து சேர்க்கிறார்களோ அவனெல்லாம் சிறந்த நடிகனாக மாட்டான்'' என்று நடிகனுக்கான வரையறையைச் தெளிவாகச் சொன்னார்.

சொல்வது ஒன்று செய்வது ஒன்று என்றில்லாமல், அதை தானே செயல்படுத்தவும் செய்தார். அதுதான் ராதா. ராதாவின் நடிப்பு ஆங்கில நடிகர் டக்ளஸ் பேர்பாங்ஸுக்கு இணையாக இருந்ததால் அவர் நடித்து வெளிவரும் படங்களின் போஸ்டர்களில் 'இண்டியன் டக்ளஸ்' என்று விளம்பரப்படுத்தப்பட்டது. 'ரத்தக்கண்ணீர்' படமாக்கப்பட்டபோது இதற்குமுன் கே.பி.சுந்தராம்பாள் வாங்கிய ஒருலட்ச ரூபாயைவிட தனக்கு 25 ஆயிரம் ரூபாய் அதிகம் தர வேண்டும் என்று கேட்டு வாங்கினார் ராதா. பண விஷயத்தில் அவர் கறார் பேர்வழி. சினிமாவை அவர், ஒரு பணம் காய்க்கும் மரமாகத்தான் பார்த்தார். அதனால்தான் எந்தப் படமானாலும், தனது கேரக்டர் என்ன என்றுகூட கேட்காமல் சம்பளம் என்ன என்றுதான் கேட்பார். ஆனால், நாடக உலகில் அவர் அப்படியில்லை. 1978ல் 'தூக்குமேடை' நாடகத்தைப் பார்த்த கலைஞர், ராதாவின் நடிப்பைப் பற்றி, ''நடிப்பை, தலைமுடியின் ஆட்டத்திலேயே காட்டிய நடிகர் ஒருவர் இந்த நாட்டில் உண்டென்றால் அது ராதாதான்'' என்று பேசினார். அத்தகைய நடிப்பின் உச்சத்தைத் தொட்ட ராதாவை இந்திய அரசு பெரிய அளவில் கௌரவிக்கவில்லை. தமிழக அரசு 'கலைசிகாமணி' என்ற விருதை மட்டும் வழங்கியது. அது இப்போது 'கலைமாமணி' விருதாக பெயர் மாற்றப்பட்டு கொடுக்கப்பட்டு வருகிறது.

நடிகர் திலகம் சிவாஜிகணேசனே தான் ராதாவைப் பார்த்துதான் நடிக்கக் கற்றுக்கொண்டதாக ஒருமுறை அவரது மகன் ராதாரவியிடம் கூறியிருக்கிறார். நடிப்பின் இமாலயமாக திகழ்ந்த நடிகவேள் எம்.ஆர்.ராதா, பெரியாரோடு 40 ஆண்டுகாலம் இருந்த ராதா, அவரது 101-வது பிறந்தநாளான 1979 செப்டம்பர் 17 அன்று தனது நடிப்பை பாதியிலேயே நிறுத்திக்கொண்டார். தமிழ் சினிமா ஒரு பொக்கிஷத்தை இழந்துவிட்டது. ராதாவின் நூற்றாண்டு விழா நடந்து கொண்டிருக்கும் இந்நேரத்தில் அவரை நினைவில் கொள்வோம்.

(செப்டம்பர் - 17 நடிகவேள் எம்.ஆர்.ராதா நினைவு நாள்)

- இலாகுபாரதி ([email protected])

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com