Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கடித இலக்கியம்

கு.அழகிரிசாமி கடிதங்கள்
கி.ராஜநாராயணன்

கு. அழகிரிசாமி கடிதங்கள் கி. ராஜநாராயணக்கு எழுதியவை என்ற தலைப்பில் 1987ல் ஒரு புத்தகம் “அன்னம்” கொண்டுவந்தது. அதில் அழகரிசாமியின் கடிதங்கள் 1971944லிருந்து 2081948 வரையிலுள்ள 27 கடிதங்கள் வெளிவந்திருந்தன.

இப்போது 1944லிருந்து 1948 வரையிலான மொத்தம் 41. முழுமையான கடிதங்கள் கி.ராவுக்கு எழுதியவை கிடைத்திருக்கின்றன! இவைபோக அதேகால கட்டங்களில் “கு.அ. கி.ரா.”வுக்கு எழுதிய அரைகுறைக் கடிதங்கள் தேதி இல்லாமல் பக்கங்கள் குலைந்தும் கிடைத்துள்ளன. மொத்தத்தில் ஒரு புதையல் கிடைத்திருக்கிறது.

சீர்வில்லிபுத்தூர் (ஸ்ரீ வில்லிபுத்தூர்) பென்னிங்டன் நூலகத்துக்கு ஒரு பகுதி நூல்கள் தருவதாக ஒப்புக் கொண்டிருந்தேன். அதோடு எனது கையெழுத்துப் பிரதிகளையும், தந்து விடுவதாகச் சொல்லியிருந்தேன். அதற்காக இங்கே “குப்பை”களை ஒதுங்க வைக்கும் போது, ஒரு பழைய பெயர் தெரியாத அமெரிக்கப் ஆங்கிலேயப் பத்திரிகை (படஇதழ்) யின் மடங்கலுக்குள் இவை சிக்கியிருந்தன.

“குப்பையில் கிடக்கும் மாணிக்கம்” என்று சொல்லத்தான் கேட்டிருக்கிறோம்; இப்பொ நிசமாகிவிட்டது.

முதலில் இதைப் பார்த்தவர் சுப.கோ. நாராயணசாமி. அடுத்தது பேராசிரியர். பஞ்சாங்கம் அவர்கள் “எப்படிய்யா அறுபத்தி நாலு ஆண்டுகளுக்கும் மேலாக இப்படி “பதுக்கி” வைத்திருந்தீர்கள் என்று வியந்து போனார்கள்.

இடைசெவலில் இருந்த போது இரண்டு முறைகள் போலீஸ் வந்து சோதனைகள் என்ற பெயரில் புத்தகங்களையும் நண்பர்களின் கடிதங்களை வாரிக் கொண்டு போனார்கள். அவைகளெல்லாம் போனவை போனவைதான். இவைகளெல்லாம் அந்தக் கறுப்புக் கைகளிலிருந்து எப்படியோ தப்பி இருந்திருக்கின்றன என்பதும் ஒரு புண்ணியம்தான்.

அதோடு, பாண்டிச்சேரியில் ஆறுமுறைகள் வீடு மாறியிருக்கிறேன். புத்தகங்களையும் கையெழுத்துப் பிரதிகளையும் பாதுகாக்கக் கொண்டு வந்து சேர்ப்பதே ஒரு பாடுதான்.

வயசானவர்கள் சாகும் போது பிள்ளைகளை விட்டுவிட்டு சாகிறோமே என்ற வருத்தப்படுவார்களாம். நமக்கு இவைகள்தான் பிள்ளைகள். பொறுப்பானவர்களிடம் இவைகளைத் தந்துவிட்டுப் போகணுமே என்கிற பெருங்கவலை வந்து விட்டது.தீவிர விசாரிப்பிற்கு பிறகு பென்னிங்டன் நூலகம் நம்பிக்கையாகப் பட்டது. அதன் புண்ணியத்தில் தான் இந்தக் கடிதங்களும் கிடைத்தன.

ஏற்கனவே தோழர், ஜனநேசன், அன்பர், கழனியூரன் இருப்பவர்களிடம், கி.ரா.வுக்கு வந்து கடிதங்கள் என்று ஒரு சாக்குப் பொட்டலம் கட்டிக் கொடுத்து விட்டேன் என்னமும் செய்து கொள்ளுங்கள் என்று.

இப்போது அவைகளிலிருந்து தான் “கடித இலக்கியம்” என்று சிற்றிலக்கிய ஏடுகளில் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன என்பதை அறிவீர்கள். அவைகள் பல தொகுப்புகளாகி புத்தக வடிவங்களாகவும் வர இருக்கின்றன.

கு. அழகிரிசாமியின் இந்த வெளிவராத கடிதங்களை பெரிய அளவில் “கதைசொல்லி” யிலேயே சீக்கிரமாகக் கொண்டு வந்துவிட வேண்டும். சில கடிதங்கள் வாசிக்கச் சுவாரஸ்யமாக இருக்காதுதான்; என்றாலும் அவைகள் சில தகவல்கள் தரும். பல சேதிகளைத் தெரிந்து கொள்ளலாம். இவைகளும் ஒரு வகையில் இலக்கியப் பதிவுகள்தான்.

கிடைத்த கு.அ. கடிதங்களை நல்ல முறையில் ஜெராக்ஸ் பண்ணி (இந்தப் புண்ணியத்தைப் புதுவை இளவேனில் செய்து தந்தார்). ஒழுங்காக வரிசைப்படுத்தி ஒரு கோப்புசம் ஆக்கி, அடிக்குறிப்புகள் தந்து, முன்பு புத்தகத்தில் வந்த கடிதங்களின் தேதிகளையும் (அவை மொத்தம் 27; இவை மொத்தம் 41. ஆக மொத்தம் அறுபத்தி எட்டுக் கடிதங்கள்). இப்போது கிடைத்த கடிதங்களையும் வருசம் மாசம் தேதி பார்த்து அதன்படிக்கு கோப்பில் கோர்த்து, ஒரு சிறிய முன்னுரையும் எழுதிச் சேர்க்க, இத்தனை நாட்கள் ஆகிவிட்டது.

கடிதங்கள் நம்மை அந்தக் காலத்துக்கே கொண்டு போய்விடுகிறது. ஒரு படைப்பாளியின் ஆரம்பகாலம் எப்படிப்பட்டதாக இருந்திருக்கிறது, எத்தகைய ஆசைக் கனவுகள், சோகங்கள் கொண்டதாக இருந்திருக்கிறது என்று தெரிந்து கொள்ள முடிகிறது.

வெளி இலக்கிய உலகத்துக்குத் தெரியாத கி.ராவின் ஒருபக்க வளர்ச்சி எப்படி இருந்தது என்பதைக் கி.ரா.வும் உணர்ந்து கொள்ள முடிந்திருக்கிறது.

ஒரு கடிதத்தின் இடையே, புதுமைப்பித்தனின் அந்திமகாலத்தை (கடிதம் 16548) கு.அ. சொல்லுகிறான். “இறந்துபோய் விடுவேன்” என்று சொல்லி அவர் அழுததாக. தமிழிசை எங்களை என்ன பாடுபடுத்தியிருக்கிறது என்று மீண்டும் அறிந்துகொள்ள முடிகிறது.

இந்தக் கடிதங்களெல்லாம் ஒருவகையில் கு.அ.வின் அந்தரங்க நாட்குறிப்புகள் போலவே அமைந்திருக்கின்றன. மொத்தத்தில், கிடைத்த கடிதங்களை விட தொலைந்த கடிதங்களே அதிகம்.

இன்னொரு முக்கிய தகவலும் கு.அ.வின் 301048 தேதிய கடிதத்தில் தெரிந்து கொள்ள முடியும்; முன்பு இடைசெவல் கிராமத்தில் வாழ்ந்ததாக நாங்கள் கேள்விபட்டிருந்த பழநியாண்டிச் சேர்வை என்ற கவிராயர் பற்றி இந்தக் கடிதங்களை நீங்கள் படித்து முடித்தபிறகு, இவைகளை உங்கள் விருப்பப்படியே “சுகனில்”யில் வெளியிட்டாலுஞ்சரி, நீங்கள் தயாரித்து வெளியிடப் போகும் “கதை சொல்லி”யில் வெளியிட்டாலுஞ்சரி. புத்தகத்தில் வெளியான 27 கடிதங்களையும் இத் தொகுப்பிலுள்ள 41 கடிதங்களையும் சேர்த்து ஒரே புத்தகமாகக் கொண்டு வந்துவிட்டால் எனக்கு ஒரு நிறைவாக இருக்கும்.

அசல் கடிதங்களில் தேர்ந்த கடிதங்களை எவ்வளவு சீக்கிரம் கதை சொல்லியிலும் மற்ற நீங்கள் விரும்பும் இதழ்களிலும் கொண்டுவந்து விடுங்கள்.

-கி.ரா.

இனி கடிதங்கள்:

சென்னை
3.3.45

நண்பா,

உன் 26.2.45 தேதி கடிதம் கிடைத்தது. கடிதத்தைப் பார்த்த பிறகுதான் உன் புத்திசாலித்தனம் கொழுந்து விட்டிருப்பது தெரியவந்தது. நான் முந்திய கடிதங்களில் கேட்ட விபரங்களுக்கு ஒரு பதிலும் காணப்படவில்லை. அனாவசியமாக என்ன என்னவோ எழுதி வீணா 1.5 அணா செலவு செய்து போட்டிருக்கிறாய்.

1. நீயும் ஸ்ரீ சுவாமியவர்களும் நாகர்கோவில் போன விஷயம் என்னவாயிற்று?

2. நீ தேசிய விநாயகம்பிள்ளையை நாம் முன்னால் பார்த்து வந்த ஞாபகம் இருந்ததா?

3. நடராஜனுக்கு என்னுடைய சரியான விலாசத்தை சீக்கிரம் தெரிவி. அவன் தப்பிதமாக எழுதுகிறான். சௌராஷ்டிர நகருக்கு சௌகார்பேட்டை என்று எழுதிக்கொண்டேயிருக்கிறான். ஆயத்து. மேற்படி இரண்டு இடங்களும் ஒன்றுக்கொன்று 8 மைல் துரத்தில் உள்ளன. நான் தற்போது சென்னையிலிருப்பதை ஸ்ரீ இசைச் செல்வருக்கும் நீ தெரிவித்தாயா?

4. நீயும் சுவாமியவர்களும் சென்னைக்கு எப்போது வரலாம் எனத் திட்டம் செய்திருக்கீறீர்கள்?

5. ராமசாமியின் விலாசத்தை ஏன் எழுதியனுப்பவில்லை?

6. அவனுடைய வீட்டில் அதற்கப்புறம் போய் புஸ்தகங்களைத் தேடினாயா? பேசாமல் இருந்துவிட்டாயா?

7. அவனுக்கு புஸ்தக விஷயமாக இனியாவது கண்டிப்பான கடிதம் எழுதினால் என்ன?

8. ஒரு வேளை அவனுடைய வீட்டில் நீ புஸ்தகங்களை வாங்கி வந்திருந்தாலும் என்னென்ன புஸ்தகங்கள் கிடைத்தன? (இன்றாவது அவன் வீட்டுக்குப் போய் புஸ்தகங்களை வாங்கி வரவும்)

9. நான் சுமார் ஒருவாரத்துக்கு முன் எங்கள் வீட்டுக்கு எழுதிய கடிதத்தில் உனக்கும் ஒரு கடிதம் வைத்தனுப்பியிருந்தேன். அது கிடைத்தது? (இல்லாவிட்டால் வீட்டிற்குப் போயாவது வாங்கிக் கொள்ளவும்)

10. அண்ணாமலை ரெட்டியார் விஷயமாக என்ன முயற்சி நடக்கிறது?

11. வேறு விசேஷங்கள் உண்டா?

மேற்கண்ட விபரங்களுக்கு உன் அவசரமான பதிலை எதிர் பார்க்கிறேன். சில சங்கடமான நிலைகளையும் சகித்துக் கொண்டு அபூர்வமாகக் கிடைத்த ஒரு சந்தர்ப்பத்தில் கஷ்டப்பட்டு இக்கடிதத்தை உனக்கு எழுதினேன். இதன் அருமை தெரிந்து உன் பதில் வந்தால் நல்லது. இப்போது என்னைப் பொறுத்தமட்டில் மிகவும் கஷ்டமான சந்தர்ப்பம், சீக்கிரம் “சூரியோதயம்” ஆகலாம் என நம்புகிறேன். என்ன செய்யலாம்?

உன் கட்டுரை ஆபிசுக்கு வந்து சேர்ந்தது. மற்றப் பத்திரிக்கைகளுக்கும் எழுது. பாட்டுகளை மட்டும் பிரசுரிக்கு முன் எனக்காவது, ஸ்ரீ முத்துசாமி ஷண்முகசுந்தரம் ஆகியோருக்கு அனுப்பியாவது திருத்தம் செய்துகொள். கண்களின் தொல்லை வழக்கம் போலவே இருக்கிறது. அதைப்பற்றி நீ ஒன்றும் இனி கவலைப்பட வேண்டாம். என் கண்களைப் பாதுகாக்க எனக்கு அக்கறை இராதா? அதிலும் இப்போதுள்ள சங்கடங்களில் கண் தொல்லை அவ்வளவு பிரமாதமில்லை. உன் அன்பு கூர்ந்த கடிதத்தை விரைவில் எதிர்பார்க்கும்

அன்பன்
கு. அ

**************************

சென்னை
20.4.45

என் அன்பன் ராஜநாராயணணுக்கு,

உன் 16.4.45 தேதியிட்ட கடிதம் கிடைத்தது. நான் புது வருடப்பிறப்பன்று எழுதிய கடிதம் உனக்குக் கிடைத்திருக்கலாம். அதற்கும் இந்தக் கடிதத்துக்கும் சேர்த்தே பதில் எழுதுகிறேன். பிரயாண விஷயமாக நண்பர் முத்துசாமிக்கு நான் விரைவில் கடிதம் எழுதுகிறேன் நீயும் எழுது.

நடராஜன் எழுதிய கடிதம் எனக்குச் சாந்தியையும் சந்தோஷத்தையும் கொடுத்தது என்பதை உனக்குத் தெரிவித்துக்கொள்ளுகிறேன். உன் மருந்து விஷயமாக சுமார் முப்பது கடைகள் அலைந்து பார்த்தேன். இனி பிரமாண்டமான 2 வெள்ளைக்காரக் கம்பெனிகளே பாக்கி. அங்கும் விசாரித்து திங்கட்கிழமை எழுகிறேன். கிடைக்காது என்றே பெரிய பெரிய வியாபாரிகள் எல்லாம் கூறுகிறார்கள்.

நைனியப்ப நாயக்கன் தெரு, ராசப்ப செட்டி தெரு, மவுண்டு ரோடு, இங்குள்ள அரண்மனைகள் போன்ற பெரிய கடைகளில் கூட இந்த மருந்துகளின் இருப்பு காலியாகி 4 வருஷங்களாகின்றன என்கிறார்கள். பம்பாயில் கூடக் கிடையாதாம். இருந்தால் அங்கிருந்தாவது வரவழைக்கலாம். நிற்க.

(Tablets) வில்லைகள் இருக்கின்றன எனக் குறிப்பிட்டேன் அல்லவா? அதாவது Padutin வில்லைகள் இருக்கின்றன. மற்ற மருந்தின் வில்லைகள் பம்பாயிலிருந்து வரவழைத்துத் தருவதாகச் சொல்லுகிறார்கள். சண்டைக்கு முந்திய விலையைவிட 4 மடங்கு அதிகம். ஒவ்வொன்றிலும் 20 வில்லைகள் கொண்ட ஒரு டப்பியாகவே வாங்கவேண்டும். ஒவ்வொரு மருந்தின் டப்பியும் விலை ரூ 20/ ஆகவே இரண்டு மருந்துக்கும் ரூ. 40 ஆகும். டாக்டருக்கு எழுதி எப்படியும் இந்த மருந்துகள் அவசியம்தானா என்று கேட்டு எழுதவும். வீணாகப் பணத்தைச் செலவழிப்பானேன்?

அப்பா! இந்த மருந்துக்குப்பட்ட பாடு... நான் அலுத்துப் போய்ச் சொல்லவில்லை. ஒரு நண்பனுக்காக வெயில், மழை முதலியவற்றைப் பொருட்படுத்தாமல் 400 மைல்களுக்கு அப்பால் உள்ள ஒரு ஊரில் தெருத் தெருவாக அலைவதில் என்ன சுகம் இருக்கிறது, தெரியுமா? ஆஹா!

உடனே மேற்படி விஷயமாகப் பதில் எழுது.

(இதோ, சாப்பிடப் போகிறேன். சாப்பிட்டுவிட்டு வந்து கடிதத்தைத் தொடங்குகிறேன்)

சாப்பிட்டாய்விட்டது...!

நம் ஊர் ‘லைப்ரரிக்கு’ அருமையான புத்தகங்கள்தான் வந்திருக்கின்றன. நீ குறிப்பிடாத புத்தகங்களையும் குறிப்பிட்டு எழுது. தாகூர் நூல்கள் என்னென்ன வந்திருக்கின்றன என்றும் அவசியம் எழுது.

ஸ்ரீ.ஜி.கே. கடித விஷயமாக உனக்கு நான் எழுதியிருந்த போது “பிரசண்டவிகடன்” தலையங்கம் ஒன்றைக் குறிப்பிட்டிருந்தேன். அதை நீயாவது மற்ற நண்பர்களாவது படித்தீர்களா?

குறுந்தொகை, கம்பராமாயணம் முதலியவற்றை நண்பர் ல.ச.விடம் தெளிவாகப் பாடம் கேட்டுக்கொள்ளவும். இதோடு வைத்துள்ள கடிதத்தை அவர் வசம் சேர்ப்பிக்கவும்.

புது வருஷ நிகழ்ச்சிகளை எழுதும்படிக் கேட்டிருந்தேன் நடராஜனிடம். அதற்கு அவர் எழுதிய பதிலில் இளநீர் சாப்பிட்டதுட்பட எல்லா சமாச்சாரங்களையும் எழுதிவிட்டு, “விளம்பரங்களும் வேடிக்கையுமாக எத்தனைபேர் காட்சிகள். வரிசையாக மின்சார விளக்குகளால் மிளிர்ந்த இவ்வூர் (கோவில்பட்டி) அன்று தேவலோகமாவே காட்சியளித்தது”என்று குறிப்பிட்டிருக்கிறார். நீயும், அண்ணாவும், நானும் அந்தநாளை இன்பகரமாகக் கழித்ததையும் குறிப்பிட்டுள்ளார்.

ஆகா! என்னே உங்கள் பாக்கியம்! நண்பர்கள் ஓரிடத்தில் இருந்து ஒரு புது நாளை வரவேற்கும் சந்தோஷத்துக்கு எல்லை ஏது?

நீங்கள் இங்கு இல்லாத குறையொன்றைத் தவிர்த்து, மற்றப்படி என்புது வருஷக் கொண்டாட்டத்தின் சிறப்பை எழுதி முடியாது. உங்கள் கோவில்பட்டி மின்சார விளக்குகளையும், தெருக்களையும் விட எங்கள் சென்னைப் பட்டணத்து விளக்குகளும், தெருக்களும் குறைந்ததா? புதுவருஷத்தைவிட 15.4.45 ஞாயிற்றுக்கிழமையில் நான் இன்பகரமாக இருந்ததைப் போல் என் வாழ்க்கையில் இருந்திருப்பேனா என்பது சந்தேகமே. அன்று சென்னையில் புதுப்புது இடங்களுக்கெல்லாம் போனோம். இப்படிப்பட்ட இடங்களும் சென்னையில் இருக்கின்றனவா என வியந்தேன். அதை விரிவாகவே எழுத வேண்டும். யாருக்கு சீட்டு விழுகிறதோ? உனக்கோ நடராஜனுக்கோ? நியாயப்படி தன் புது வருஷ அனுபவத்தை எழுதிய நடராஜனுக்குத்தான் எழுதவேண்டும். எப்படியும் அந்தக் கடிதத்தை நீங்கள் எல்லோரும் படிக்க வேண்டும். சென்னைக்கு சீக்கீரம் வரவும் வேண்டும்.

நீ எதிர்பார்க்கிறபடி இனி அழகு அழகாக எழுதித்தள்ளுகிறேன். ஒவ்வொரு கடிதமும் உன்னால் சுமக்க முடியாத ஒரு இன்பச் சுமையாகவே இனிவரும்.

பின்குறிப்பு: நீங்கள் கோடைகாலம் பிரயாணம் செய்யத் திட்டம் போட்டிருக்கிறீர்களாமே! ஐயோ, எனக்கு அந்தச் சந்தர்ப்பம் உங்களோடு பிரயாணம் செய்யும், சந்தர்ப்பம் வாய்க்கவில்லையே!

உன்னை ஏற்கெனவே சென்னைக்கு வரவழைக்க யோசனை செய்துகொண்டிருந்தேன். உடல் நிலை சரியானதும் அழைக்க உத்தேசித்தேன். ஆனால் நடராஜன் மகாபலிபுரம் வர என்ன செலவாகும் என்று கேட்டு எழுதி இருக்கிறான். மகாபலிபுரத்தக்கு வந்தால் சென்னைக்கு வரவேண்டும். இரண்டும் பக்கம் பக்கமாக இருக்கிறது. குறைந்தபக்ஷம் சென்னையில் மட்டும் ஒரு வாரம் தங்காவிட்டால் பிரயோஜனமில்லை. ஆகவே நடராஜன் 10 நாள் லீவாவது எடுத்தால் நலம். ஒரு ஆளுக்கு ரூ35/ செலவாகும்.

சென்னைக்கு மட்டும் வந்து 1வாரம் இருந்து செல்ல ரூ 25/ ஆகும். மற்றவர்களின் சக்தியின்மையை நினைத்து உன்னை மட்டுமாவது வரவழைக்க நினைத்தேன். இப்போது நீங்கள் எல்லோரும் வருவீர்கள் என எப்படியோ எனக்கு நம்பிக்கை விழுந்துவிட்டது. ஒரு முறை நண்பர்கள் எல்லாம் வந்து பாருங்களேன்! அப்புறம் சம்சாரசாகரத்தில் மூழ்கிவிட்டால் இங்கு வருவது சந்தேகமே!

வேறெரு விசேஷமும் இல்லை இருந்தாலும் கவர் பேரிங்காகி வந்துவிடக்கூடாதே! உன் பதில் எதிர்பார்க்கிறேன்.

அன்புடன்
கு. அ


இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com