Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
குளிர் விட்டுப் போச்சு!

கிருஷ்ணகுமார்


அய்! தமிழ் ஐஸ்!

ஐஸ்வர்யா ராயைப் பற்றியோ அல்லது ஐஸ் குச்சியைப் பற்றியோ சொல்லப் போவதில்லை. இந்தக் கோன் ஐஸ், குச்சி ஐஸ், பால் ஐஸ் மாதிரி நான் கொடுக்கப் போவது தமிழ் ஐஸ்.

குளிர்காலத்தில் இந்த ஐஸ் அதாவது பனியைப் பற்றி, பனிக் கட்டி நம்மைப் பாடுபடுத்துவதைப் நினைத்தாலே பற்கள் நடுக்கத்தில் "கட கடவென்று" அடிக்க, குளிர் நரம்பினைத் தாக்கும்.

நான் போர்வையை இழுத்துக் கொண்டு படுத்துக் கொண்டேன். இன்னும் கொஞ்சம் தூங்கினால் தேவலை.

நூறு, எண்பது என்று வெப்பமிருக்கும் சென்னைக்காரனுக்கு "ஐஸை"ப் பற்றி, பனியினைப் பற்றி என்ன கவலை? என்று நினைக்கின்றீர்களா?.

வெயிலில் விருதுநகரில் வாடிக்கிடக்கும் மாணவனாகவோ, மதுரையில் மாலை வெயில் காயும் வரைக்கும் சுற்றி விட்டு, வடை டீ சாப்பிட்டுவிட்டு சினிமா தியேட்டர்கள் அருகே தவமிருக்கும் இளைஞனாகவோ என்னைக் கற்பனை பண்ண வேண்டாம்.

(என்னை இளைஞன் என்று கற்பனை பண்ணினாலே போதும்!)

"நான் என்ன வெப்பத்தில் வாடிக்கிடக்கும் பரிதாபமானவன் என்று நினைப்பா?"

நாங்களெல்லாம், ஊர் விட்டு ஊர் வந்து பணத்தினை எண்ணி வாழ்க்கை விட்டு வாழ்க்கை வந்து குளிரில் நடுங்கி, வெயிலில் புரண்டு, மழையில் நனைந்து கடுமையாக உழைக்கிறோம் என்று சொல்ல ஆசை!

ஆனால் வசதியான மேற்கு நாடுகளின் பனிப் பொழிவில் இதமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கும் பனித் தமிழர்களில் ஒருவன்.

நிறைய விஷயத்தில் உறைந்து போனவன். பனித் தமிழன், நான் தானென்றால் "குளிர் விட்டு போனவன்! குளிரில் உறைந்துக் கிடப்பவன்" என்று எடுத்துக் கொள்ளலாம். கனடாவில் இருக்கிறேன் நான். பனியில் கிளவுஸ் மாட்டிக் கொண்டு மலையருகே வீட்டைக் கட்டிக்கொண்டு இருப்பவனும் நான் தான்.

தஞ்சாவூரில் பிறந்த வாழ்க்கை ஞாபகம் வந்தாலும் கனடாவில் 20-30 ஆண்டுகளாக உறை பனியினைப் பார்த்து மனதைப் பறி கொடுத்தவன்.

மனதில் தமிழ், வீட்டில் "கத கதவென்று" எரியும் தணலைப் போன்று உறை கொண்டு உலாவும். நான் தரித்திரமானவன் என்று எடுத்துக் கொள்ள வேண்டாம்.

பர்மாவினில் நாடு கொண்டு சிறந்த வியாபாரம் நடத்தியவன். பர்மா தேக்கு கொண்டு குரோம்பேட்டையில் பங்களா கட்டிக் கொண்டு வாழ்ந்து இறந்து போனவன்.

பிறகு சிங்கப்பூரில் சிறப்போடு வாழ்ந்தவன். அங்கெல்லாம் பனியில்லை. வியர்த்தாலும் உழைப்பவன் நான். சீனர்களுக்கும், ஆங்கிலேயர்களுக்கும் சலாம் போட்டு முன்னுக்கு வந்தாலும் உழைப்பை முன்னிறுத்தி ஓயாமல் பணம் தேடி வாழ்க்கையைத் தேனியினும் சிறப்பாகப் "பட படத்து" சிறகடித்தவன். சிறகடித்து ஓடிச் சேர்த்த பணத்தைக் கொண்டு தாம்பரத்தில் பத்து கிரவுண்டு நிலம் வாங்கி, தனிப் பங்களா கட்டுக் கொண்டு வாழ்ந்து பிறகு கண்ணை மூடியவன்.

நானாவது உறைவதாவது?

நார்வேயில் குளிரில் அகதியாக வாழ்க்கை நடத்தினாலும், என் உழைப்பினால் முன்னுக்கு வருபவனும் நான் தான். இரண்டு அடி பனி தெருவினில் கொட்டியிருந்தாலும் பனியினை நீக்க உப்புத் தூவும் லாரிகளை ஓட்டிக் கொண்டு, தமிழ் பாட்டுக்களை உள்ளே காசெட்டில் போட்டுக் கேட்ட வண்ணமிருப்பேன். என்னிக்காவது தாயகம் இலங்கையோ, தமிழகமோ திரும்பிவேன் என்று நம்பிக்கையோடு காலம் தள்ளுவேன். தள்ளிக்கொண்டே ஒரு நாள் உறைந்து போவேன்.

"ஜெர்மனியில் செந்தேன் மலரே!" என்று பாட்டுப் பாடி காதல் வாழ்க்கை புரிந்த பலரில் ஒருவன் நான்.

ஆட்டோ பானில் விர்ரென்று 140 கிமீ வேகத்தில் ஓட்டினாலும், "மச்சான் பாரு மதுர!" என்று விஜய்யின் பாட்டினைக் கேட்ட படி தாளமிட்ட படி ஓட்டி வாழ்பவனும் நான் தான்.

நான் ஜெர்மனி பேசுவேன். ஆங்கிலம் பேசுவேன். ஹிந்தி மட்டும் பேச மாட்டேன். தமிழும் ஒப்புக்கு பேசுவேன்.

வீடியோ இங்கிலாந்திலிருந்து ஐங்கரன் வீடியோ மூலம் வாங்கி டிவிடி பிளேயரில் நான் பார்க்க வேண்டும்.

திருமணம் செய்ய திருச்சியிலிருந்து காவேரி நதிக் கரையிலிருந்து ஒரு பெண்ணைக் கொண்டு வர வேண்டும். அவளும் ரைன் நதிக் கரையினைப் பார்த்து உள்ளத்தில் காவேரியினைத் தேக்கி வைத்து அம்மாவுடன் சமயபுரத்திற்கு மொட்டை போடச் சென்ற காட்சியினை "பிளாஷ் பாக்" பார்த்து உள்ளத்தில் உறைந்து பனிப் பூ போன்று அகமலர்வாள்.

"பனி விழும் மலர் வனம், உன் பார்வை ஒரு வரம்!" என்று இளையராஜாவின் இசையை "ஹம்" செய்து கொண்டு விஸ்கியினை உள்ளே தள்ளி சிக்கன் - 65 ஐயினைக் குளிரில் தேடிக் கண்டிபிடித்து ஒரு கை வெள்ளிக் கிழமை இரவு பார்ப்பவனும் "மறத்" தமிழனான நான் தான்!.

அப்போது தான் உறையாமல் இருப்பேன்.

வாஷிங்டன் டி.சி.யில் பனியில் கால் பொதிய காரிலிருந்து இறங்கி, அஜித் படத்திற்கு டிக்கெட் வாங்க தியேட்டருக்கு குளிரில் இரவு 9.00 மணிக்கு இறங்குகிறேன். உறையவில்லையே!

"தல" பார்க்கும் வரைக்கும் உறையக் கூடாது.

கார் பனியில் அகப்பட்டாலும் மனம் தளராது காரினை ரிப்பேர் செய்து கொண்டு, ஆபிஸிற்கு "டாண்" ணென்று 8 மணிக்குச் சென்று 6 மணி வரை வீட்டுக்குத் திரும்பாமல் வேலை செய்வேன்.

சென்னையில் மழையில் சைக்கிள் அகப்பட்டால் கார்ப்பரேஷனை ஆயிரம் வசைவு செய்து கொண்டே அனைவரையும் சபித்துக் கொண்டிருப்பேன்.

காலைப் பனியில் எழுந்து கார் மீது கொட்டியிருக்கும் பனியினை "வரக் வரக்" கென்று வருடி சுரண்டி எடுத்து, கையில் கிளவுஸ் போட்டுக் கொள்ளாமல், உறைந்து கையினை மறத்துப் போகும் படி செய்பவனும் நான் தான். கிளவுஸ் விலை $2. ஆனால் அதை வாங்காமல் கை செத்துப் போகும்வரை உழைக்கும் வர்க்கம் நான்.

பீச்சுக்குப் பனி காலத்தில் வந்து குடும்பத்தோடு வந்து செல்பவனும், அடியேன் தான்.

கோடை காலத்தில் "•புல் ஹாண்டு" ஷர்ட் போட்டு, முழு நீளக்கை, பாண்ட் போட்டு, டை அணிந்து, கோர்ட் போட்டு, ஷ¤ போட்டு பீச்சுக்குச் செல்லும் அப்பிராணி நான் ஒருவனாக மட்டுமே முடியும்.

நிறைய இடங்களில் எனக்கு உறைக்காது.

வெள்ளைக்காரன் இளப்பமாகப் பல இடங்களில் பார்த்ததுண்டு. தப்பாக நினைத்ததுண்டு. "ஹி! ஹி! இல்லீங்க அது நானில்லைங்க! ஆனால் எங்க ஊர் காரர்கள் அப்படி தாங்க" என்றெல்லாம் போட்டுக் கொடுத்ததுண்டு.

"நம்ம ஊர் காரர். அவருக்கு உதவி பண்ணிட்டா அவன் வளர்ந்து நாம மட்டு பட்டுவிடுவோமோ?" என்று நினைக்கத் தோன்று. "அவன் நம்மள கால வாறி விட்டா? எதுக்கு வம்பு?"

இன்னொரு தமிழனைப் பார்த்தால் தமிழில் பேசலாமா, ஆங்கிலத்தில் பேசிப் பார்க்கலாமா என்று பயத்துடன் தயக்கத்துடன் "என்னங்க தமிழா? " என்று மெலியத் தமிழில் பேசிப்பார்ப்பது. தமிழ் தான் என்றவுடன் தைரியத்துடன் தமிழிலோ அல்லது இளப்பமாக ஆங்கிலத்திலோ தொடர்வது, என்பது எவ்வளவு பனி பெய்தாலும் உறைக்காது.

குளிர் காலங்களில் வரும் உறைய வைக்கும் பயங்கரப் படங்கள் பல பார்த்து பெட்டிப் பாம்பாய் உறைந்தவன் நான்.

இம்மாதிரி பலக்காட்சிகள் குளிர் பிரதேசங்களில் காணக்கிடக்கும்! ஐயா!

அனைத்தும், சென்னைக்கு வந்தவுடன் மாயமாய் மறைந்து போயிற்று!

நமிதாவைப் பார்த்தேன்! சற்று தெம்பு வந்தவுடன் குளிர் விட்டுப் போச்சு.

அது!

- கிருஷ்ணகுமார்([email protected])

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com