Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
முதலைக் கண்ணீர்

கிருஷ்ணகுமார்


கணக்கு போட்டால் மூளை வளரும் என்று "எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்" கூறினாலும் கூறினார்கள். சிறு வயது முதலே கணக்கு படுத்தும் பாடு தாங்க முடியவில்லை.

Calculation "நீ ஜென்மத்திற்கும் நூற்றுக்கு நூறு வாங்க மாட்டாய்!" : இது என் கணிதம் என் மூளையைக் குறித்து வரைந்த கணக்கு. நானும் சிரமேற்கொண்டு ஒரு தப்பு பண்ணி 98 வாங்குவேன்.

படிப்படியாகக் குறைந்து அது சில சமயம் 70-80 களில் முடியும்.

ஆனாலும் இந்தக் கணக்கு பாருங்கள், நம்மிடையே ஒட்டிக் கொள்கிறது.

கணக்கு பண்ணி தான் திருமணம் புரிந்தேன். நாம் எம்.ஏ. என்றால் மனைவி பி.ஏ.. பிறகு அவள் எம்.பி.ஏ. ஆகிவிட்டாள். நான் எம்.ஏ. ஆகவே இருந்தேன். என் கணக்கு தப்பாகிவிட்டது.

"சாதி இரண்டொழிய வேறில்லை!" கேட்டாலும் பிறகு கணக்கு போட்டுதான் கை பிடித்தேன். கணக்கு போட்டு தான் வோட்டு போட்டேன்.

சுமார் நாற்பது வருடங்கள் வேலை பார்த்து நரை வந்துவிட்டது. ஒவ்வொரு வருடமும் கணக்கு எழுதி கை தேய்ந்து, மார்ச் மாதம் இன்கம்டாக்ஸ் கட்டி கணக்கு பார்த்து, கூட்டி குறைத்து, உடலும் உள்ளமும் கூட்டி குறையத் தொடங்கியாயிற்று. ஆனால், கணக்கு உயிர் விடும் வரை போகாது போலிருக்கு.

பேருந்தில் ஏறினால் "எல்லாம் கணக்கு சரி பாருப்பா! சில்லரை குறைய்தில்ல?"

மளிகைக் கடையில் "என்னப்பா தாறுமாறாய் கணக்கு போடறே, வெள்ளைக் காகிதத்தில் சரியா 250 கிராம் எழுதியிருக்கே, ஆனால் ஒரு கிலோ விலை போட்டிருக்கே?"

சினிமாவில் "கூட்டம் ஜாஸ்தி! கலெக்ஷன் சூப்பர்! தலை! தலை தான்! 15 கோடியாமே சம்பளம்!" விரும்பிய நடிகரைப் பற்றிச் சிலாகித்தேன்.

ஆட்டோவில் "மீட்டரைப் பற்ற வைக்காதே! கிலோமீட்டருக்கு 3.50 இருந்தால் என் வீட்டிற்கு 35 தாண் ஆகணும்! பத்து கிலோமீட்டர் தள்ளி இருக்கு வீடு!".

கையில் வாட்சைப் பார்த்தேன். நேரத்தில் வீட்டுக்குப் போகணும். போனால் தான், வீட்டில் மனைவி கண்ணை அயர்வதற்குள் நாம் அவளை "ஒரு கை" வைக்கலாம், (மன்னிக்கவும் ) பார்க்கலாம்" என்று மனக்கணக்கு பார்த்தேன். இல்லை "நாம் பட்டினி தான்!" இன்னும் பத்து கிலோமீட்டர் 30 நிமிடத்தில் போகணும். அப்ப ஆட்டோ இந்த கிலோமீட்டர் ஸ்பீட் ( விரைவு) போகணுமென்று கணக்கிடலானேன்.

காலையில் வீட்டில் துயில் எழுந்தேன்.

"ஏங்க, சக்கரை ஒரு ஸ்பூன் கூட இல்லை, கொஞ்சம் வாங்கிட்டு வரீங்களா?"

பல் தேய்த்து காபி கூட குடிக்க வக்கில்லாமல் உள்ளம் தொய்ய 1 கிமீ தொலைவில் உள்ள கடைக்குப் போனேன்.

"கிலோமீட்டர் கணக்கு எவ்வளவு சொல்லிக் கொடுத்தாலும் தேற மாட்டாய்" பல்லை "நற நறவென்று" கடித்த படி என் எலும்புகளை பிரம்பினால் எண்ண ஆரம்பித்தார் கணக்கு வாத்தியார்.

"ஒரு படி உப்பு வாங்கத் துப்பில்லை! என்ன தான் படிக்கிறாயோ!" அம்மா அலுத்துக் கொண்டாள்.

"எல்லாம் ஏட்டுச் சுரைக்காய்! கறிக்கு உதவாது" என்று காய்கறியினை தட்டில் பரிமாறிக்கொண்டே அப்பா அதட்டினார்.

1/2 கிலோ சக்கரை வாங்கிக் கொண்டு திரும்பினேன். என் உடம்பில் வேறு 234 சக்கரை இருந்தது.

வயதானவுடன் 35,000 ரூபாய்க்கு ஒரு மோட்டார் சைக்கிள் தவணையில் வாங்கி இவ்வளவு வட்டி, இவ்வளவு சதவீதம் என்று நான் பேசும் போது என் அம்மா வாய் பிளந்தபடி கேட்டு நின்றக் காட்சி மனதில் வந்து போனது.

"ஆகா படிச்சவண்டா!" என்று அக்கம் பக்கம் அங்கலாய்க்க காலரைத் தூக்கி விட்டுக் கொண்டு கடன் கட்ட ஸ்டேட் பாங்கிற்க்குப் போனேன். டோக்கன் "420" என்று சிவப்பில் மின்ன வேட்டி பதற கையில் பையுடன், காஷ் கவுண்டரில் பணம் கட்டி ரசீது பெற விரைந்தேன்.

"ஒன்று, இரண்டு...." என்று காசாளர் (கேசியர் என்று சொன்னால் தான் தெரியுமென்று நினைக்கின்றேன்!) எண்ணினார்.

"ஒன்று யாவர்க்கும் தலை ஒன்று!"

"இரண்டு யாவர்க்கும் கண் இரண்டு"

ஒன்றாம் வகுப்பு கணக்கு டீச்சரின் முகம் மங்கலாகத் தெரிந்தது.

ஆட்டோக்காரன் சில்லரை இல்லாததால் நூறு ரூபாய் வாங்க மறுத்து விட்டான். அவனுக்காக ஒரு பக்தி கேசட் ரூ 35க்கு வாங்கினேன் (மனைவி கிட்டே கேசட் பத்தி விளக்கம் சொல்ல வேண்டும்!). "நாலாயிரம் திவ்யப் பிரபந்தம்". வாங்கியதால் 100-35= 65 தான் இருந்தது. இதில் 35 ஆட்டோக்கு குடுக்க வேண்டும். கணக்கு போட்டேன்.

சரி 13B பஸ் பிடித்தால் 1 ரூயில் திருவல்லிக்கேணி போய் விடலாம். ஏறினேன். ஸ்டாண்டீஸ் - 25 பேர் நிற்கலாம் என்று எழுதியிருந்தது. எண்ணிப் பார்த்தேன். 75 பேர் வந்தது. எண்ணிடலங்கா கிருமிகளுடன், பயணம் செய்து "பொத்" தென்று பாரதி சாலையில் இறங்கினேன்.

"ஒரு டீ இரண்டு பன் குடுப்பா" காதில் விழுந்தது. நாயர் கடையில் கணக்கு பார்ப்பதால் ஒரே டம்ளரில் நூறு பெயருக்கு சுடு தண்ணீர் ஊற்றிக் கழுவி டீ கொடுப்பான். கணக்கில் கில்லாடி அவன்.

சாலையில் இரண்டு ஈ, காக்கா கூட இல்லை.

மணி மண்டையைக் குடைய மணி பார்த்தேன். மணி நண்பகல் 12.

அமெரிக்காவில் மகன் 10.30 மணிக்கு இரவு வீட்டில் தான் இருப்பான். போன் வரும்.

"அப்பா செளக்யமா? $300 அனுப்புகிறேன்! ஒரு $க்கு 45.56 ரூபாய் கொடுப்பான் வாங்கி வை. 44 கொடுத்தால் வாங்காதே! என்று கணக்கு சொல்லிக் கொடுப்பான்.

"ஒன்று யாவர்க்கும் தலை ஒன்று!"

ஒன்றாம் வகுப்பு கணக்கு டீச்சரின் முகம் மங்கலாகத் தெரிந்தது.

மார் வலிக்க ஈ.ஸி.ஜி எடுக்க ஆரம்பித்தார்கள். டாக்டரிடம் போனால் அது வேறு. சக்கரை 234. பிரஷர் 160. கேன்சர் 23. பற்கள் 32 க்கு 18 என்று பயமுறுத்துவான். நர்ஸ் வேறு பல்ஸ் என்று நரம்பினைப் பிடித்து எண்ணுவாள். நர்ஸிங் ஹோமில் படுத்தால் போதும் நம்மைக் கணக்கிட (பர்ஸையும் சேர்த்து தான்) நமக்கு பக்கத்தில் பத்து மீட்டர்கள் பொருத்திப் பார்க்க ஆரம்பிப்பார்கள்.

"பணத்தைப் பற்றி கவலைப் படாதீர்கள்! நான் இருக்கிறேன்!" மகன் தகவல் தெரியப்படுத்தினான்.

ஆபரேஷன் பண்ணனும். இரண்டு லட்சத்து 32 ஆயிரம் ஆகும். ரிடையர் நாற்பது ஆண்டுகள் கழித்து ஆகும்போது வந்த மொத்த பென்ஷனே 1 லட்சத்து 21 ஆயிரம் தான்.

கணக்கில் மிதந்த இதயமாதலால், ஆபரேஷன் செலவு இப்படி.

கேட்டவுடன் இதயமும், "லப் டப் லப் டப்" நிமிடக் கணக்கு குறைந்து உடம்பு சில்லிட்டு,

பத்து, ஒன்பது, எட்டு, ஏழு, ஆறு, (சன் டிவி டாப் டென் கவுண்டன் போலிருக்குதே!), ஐந்து, நான்கு, மூன்று . . .

இரண்டு

"இரண்டு யாவர்க்கும் கண் இரண்டு"

. . .

ஒன்று

"ஒன்றே குலம். ஒருவனே தேவன்"

என் கணக்கு நின்றது.

- கிருஷ்ணகுமார்([email protected])

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com