Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கழிந்த பின் மனமே துயரம் கொள்ளாதே!

கிருஷ்ணகுமார் வெங்கட்ராமா

பேப்பரோ! தண்ணீரோ! கண்ணீர் விட வேண்டாம்!

கழிப்பிடக் கவலைகளையும், பயத்தைப் பற்றியும் நடுங்கிக் கொண்டே எப்படித் எழுதுவது என்று தயக்கத்துடன் சிந்திக்கலானேன். இதைப் பற்றி திடீரென்று எனக்கு கழிப்பறையில் கவலைகள் பல தோன்றின. இரவு குடித்து வயிற்றினை அஜீரணப் படுத்தியதால் வந்த வினை. நாமும் தினமும் கழிப்பறைக்கு தவறாமல் போகிறோம். படுக்கையறைக்கடுத்து அதன் முக்கியத்துவம் பொது ஜனங்கள் அறிந்ததே!

கழியவில்லையென்றால் வேதனை. மாத்திரை, ஆயிண்ட்மெண்ட், டாக்டர் என்று அலைகிறோம். வயிற்றைப் பிசைகிறோம். குப்புறப் படுத்துப் பார்க்கிறோம். எழுந்து உட்கார்கிறோம். எவ்வளவு வேதனை மற்றும் சாதன மற்றும் இன்ப வேதனைகள் நமக்கு. பின்னால் எரிச்சலானால் நமக்குத் தெரியும்

நாம் படும் வேதனை சாம்பார், குழம்பு, ஆவக்காய் ஊறுகாய் சாப்பிடுபவனுக்குத் தான் தெரியும். சாண்ட்விச், சப்வே சாண்ட்ட்விச், இலை, தழை, வெள்ளரிக்காய் சாப்பிடுபவனுக்கு நம்ம கஷ்டம் தெரியுமா?. சட்டியில் அகப்பட்டால் தான் ஆப்பையில் வருமென்ற பழமொழி வேறு ஞாபகம் வந்து தொலைக்கின்றது. மலமிளக்கிகளைத் தேடும் ஆத்மாக்கள் மற்றும், மூல நோயினால் கீறப்பட்ட பாவப்பட்ட ஜென்மங்களைப் பற்றி நினைத்து முதலைக் கண்ணீர் விட ஆரம்பித்தேன்.

கண்ணீர் முட்ட, வயிறு பிசைய இதைப் பற்றிக் கழிந்தே தீருவது என்று கணிணியினைத் தட்ட ஆரம்பித்தேன்.

“குழந்தை ஐந்து நாட்களாய் போகவில்லை.” வருத்தப்பட்டாள் அம்மா.

“நீ போகுமிடமெல்லாம் நானும் வருவேன் போ! போ! “ என்று எனக்கென்று எழுதப்பட்ட பாடல் என்று எனக்குத் தோன்றியது. அவ்வளவு பயம் கழியும் போது. கழிப்பறைகள் வேறு பயமுறுத்தும். கொல்லைப்புறம் பக்கம் பேய் ஒதுங்கும் மாளிகையாய் ஒட்டடையோடு, பல்லி, கரப்பான்களோடு ஒடுங்கித் தனியே ஒற்றைத் தகரக் கதவு கொண்ட சந்திரமுகி வேட்டையன் பங்களா போன்று பயமுறுத்தும் கழிப்பறை பயம் என் நாடியையே ஒடுக்கி விடும்.

தனியே தகரக் கொட்டை மேலே! அதன் வழியே தெரியும் சிறிய சூரியக் கீற்று! அல்லது அவ்வப்போது தெரியும் நிலவு! கீழே அதலப் பாதாளம் என்று பயமுறுத்தும் பலக் கழிப்பறைகளைக் கண்டால் குழந்தைகள் அலறும். அம்மா அல்லது அப்பா பக்கத்தில் மூக்கினைப் பொத்தியபடி நிற்க, குழந்தைகள் படும் அவஸ்தை அப்பப்பா!

இந்தப் பயத்தினால், ஐந்து நாள் கழிப்பறைப் பக்கம் போகாமல் தேமேயென்று இருக்க, ஜுரம் வரும், வயிறு கிழிந்து விடும். கத்தி கொண்டு கீறணும் என்று பயமுறுத்தி வைப்பார்கள் பெரியவர்கள். ஏதுடா வம்பாப் போச்சு! என்று பயத்துடனே ஆறாவது நாள் கழிப்பறை நோக்கி படையெடுக்க பெரும் பாடு பட்டு, முக்கி, முனகி உடம்பின் சக்கைகளை வெளியேற்றினால் வரும் வேதனையும், வலியும் சொல்லிலடங்காது! வேதனையிலும் தமிழ் அருவியெனக் கொட்டுவதைக் கவனியுங்கள்!

இவனுக்குத் திராட்சை கொடுக்க வேண்டும் என்பாள் ஒருத்தி. மற்றொரு மாது, இல்லை நிறைய நார்ச் சத்துக்கள் வேண்டும். வெண்ணை, நெய் கூடாது. பீட்சா ( இப்போதெல்லாம் குழந்தைகள் பிறந்த நாளுக்கு அதில்லாமல் கழிப்பறை கூடப் போவதில்லையாம்!) அறவே கூடாது என்ற அறிவுரையும் கிட்டும். எதைத் தின்றால் என் பித்தம் தெளியுமென்று நான் “சிவனே!” என்று உட்கார்ந்திருப்பேன்.

முதல் ஆறு வருடத்தில் பயத்தில் தண்ணீர் விட்டு கூடக் கழுவாமல், எங்கள் வீட்டுக் கண்கண்ட தெய்வமான ஆயாவினைக் கூப்பிட்டு கழுவச் சொல்வேன். கை வைத்து கழுவிச் செல்லும் ஆயாவிற்கு/அம்மாவிற்கும் மணக்கும் அரிசிச் சோறு அன்று பரிசு!

பயந்து கொண்டே நான் போகும் பாங்கினைப் பார்த்து “பக பக”வென்று ஆயா சிரித்து வைக்கும். “ஆயா, சிரிக்காதே!” என்று முறைப்பேன். அம்மாவானால் உள்ளே தள்ளி விடுவார்கள். முதல் இரவிற்குப் பெண்ணைத் தள்ளி விடுவதைப் போன்று. வெளியே வந்து “அவர் மிக நல்லவர்” என்று சொல்லும் புது மணப்பெண் போன்றில்லாமல், நான் மீண்டும் புக பயந்து கொண்டு நடுங்கிக் கொண்டு டிராயரைக் கையில் வைத்துக் கொண்டு மெதுவே வெளியே வருவேன்.

கொஞ்சம் பெரிய ஆளான பிறகு அப்புறம் தைரியம் வந்து, உள்ளே கழிப்பறைக்குள் காலை வைப்பேன். உடைந்த போர்சலைன் பீங்காவினால் ஆன கால வைக்குமிடம் தாறு மாறாக இருக்கும். கஷ்டப்பட்டுக் கொண்டு ஒரு மாதிரியாக உட்கார்ந்து பக்கத்தில் குழாயினைத் திருகினால் “புஸ் புஸ்” என்று காற்று வரும். மறுபடியும் “ஆயா!” என்று வீறிட்டலறுவேன். ஆயா பதறிக்கொண்டு வருவாள். எனக்காக இரும்பு வாளியைத் தூக்கிக் கொண்டு வருவாள். “பாடையில வைக்க இந்தச் சின்ன சனியினை!” என்று மனதில் திட்டினாலும். வெளிக் காட்டாமால், வாளியினைத் “தொம்” மென்று வைப்பாள்.

சிதிலமடைந்த பீங்கான் காலைக் கீறும். சில சமயம் அதிலிருந்து இரண்டு கரப்பான் பூச்சிகள் தங்கள் கொடுக்குகளை இப்படியும் அப்படியும் ஆட்டிக் கொண்டு கிளம்பும். “அம்மா!” வீறிட்டலற, என்னால் கடுப்படைந்த அம்மா, வயதான என் அக்கா ( என்னை விட மூன்று வயது தான் பெரியவள்!)வினை என்னைப் பார்த்துக் கொள்ளச் சொன்னாள். என் கையினைப் பிடித்துக் கொண்டு “என்னை வைது கொண்டே” நிற்பாள். இதற்காகவே என்னை நீ வாழ் நாள் முழுவதும் தாங்க வேண்டும் என்று ஒரு “பெரும் பொறுப்பினைச்” சுமற்றிக் கிலியேற்றுவாள்.

ஒரு திருமணத்தின் போது பயங்கரக் கதை ஒன்று ஒரு பெரிய பெண் சொல்லி விட்டுப் போக, அன்று முழுவதும் மண்டபத்தில் இருந்த கழிப்பறைப் பக்கம் கூட நான் போகவில்லை. அக்கழிப்பறையே பேய் அறை மாதிரி தென்பட்டது ஒரு காரணம். அங்கிருந்த ஜீரோ வாட்ஸ் பல்ப் மற்றொரு காரணம். தகரக் கதவைனைத் திறந்தால் வந்த கர்ண கடூரச் சப்தம் குலை நடுங்க வைத்தது. (ஆண்களுக்கு குலை என்றால் என்ன? என்று எனக்கு இன்னும் தெரியவில்லை! “குரலை” யாக இருக்குமோ?). மனதில் பயத்தைத் தேக்கி வைத்ததால், கழிவும் உடம்பிலேயே தங்கலாயிற்று. ஜுரமும் வந்தது. பேயைக் கண்டிருப்பான் என்று பெரியவர்கள் பேசிக் கொண்டனர். டாகடர் ஒன்றும் பேசாமல் விளக்கெண்ணெய் குடிக்கச் சொன்னார்.

“கண்ணீர் விட்டே வளர்த்தோம்!” என்று எங்கள் வீட்டுக்காரர்கள் என்னைக் குறித்துப் பாட்டு பாடினால் ஆச்சரியமில்லை!

பள்ளியில் படிக்கும் போது நான் மிகவும் பயப்பட்ட இடம் கழிவறை என்றாகப்பட்ட “கக்கூஸ்”. கழிவறை என்றால் நாகரீகமாக உள்ளது. ஆனால் எங்கள் பள்ளியின் கழிவறைக்கு அந்த மரியாதை கூடக் கொடுக்கக் கூடாது.

சுத்தம் சுகாதாரம்! என்று அறிவியல் ஆசிரியை பாடம் நடத்தினார்.

அன்று மதியம் பள்ளிக் கழிவறைக்குச் சென்றால் ஆயிரம் மாணவர்கள் 15 x 15 அடி கொண்ட இரு பாலும் சாக்கடை போன்று கட்டப்பட்ட கான்கிரீட் கழிவறையில் ஒருவர் பெய்த மழையில் மற்றொருவர் நின்று கொண்டு காலில் செருப்பில்லாத எங்கள் அப்பாவிக் கால்களை ஈரப்படுத்திக் கொண்டு, இயற்கை அழைப்பினை செயற்கையாக எவ்வளவு அசிங்கமாகப் பண்ண முடியுமோ அவ்வளவாக நிறைவேற்றிவிட்டு வெளியே வந்து மணலில் காலைப் புரட்டி எடுப்போம். கையினை டிராயரில் உள்ளே தடவிக் கொள்வோம்.

அரசாங்க அதிகாரிகள் இன்ஸ்பெக்ஷன் வந்தால், பிளீச்சிங் பவுடர் வாசனையுடன் எங்கள் பள்ளிக் கழிவறை மதியம் 2 மணி வரை இருக்கும். அப்புறம் “பழைய குருடி கதவைத் திறடி!”.

கழிப்பறைக் கையினால் அம்மா கொடுத்த மாவடுவினை கையினால் தொட்டு ஆசையுடன் கடிப்போம். எல்லாம் உப்பு தானே! பள்ளிக் கழிவறை கொடுத்த பயத்தில் அடுத்த நாள் உள்ளே செல்லாமல் வெளியே சுவர் மீது சித்திரங்கள் வரைந்தோம். சுவரில்லாத சித்திரங்கள் பலவும் மண்ணில் வரைவோம்.

அவர்களும் திருந்தவில்லை. நாங்களும் 12 ஆம் வகுப்பு வரை திருந்தவில்லை.

ஆனால் பின்னால் கடல் கடந்து வெளி நாடுகளில் பல்வேறு மாடல்களில் வீடுகளில், லாட்ஜ்களில், ஹோட்டல்களில் கழிப்பறையைப் பார்க்க நேரிட்ட போது நம் ஊர் பணக்காரர்களின் படுக்கை அறை போன்று சுத்தமாக இருக்கக் கண்டு பிரமிப்படைந்தேன். சிலக் கழிப்பறைகளில் நனைந்த கையை காய்வதற்கு சூடாக காற்றடிக்கும் டிரையர் இயந்திரங்களை (ப்ளோயர்ஸ்) வைத்திருந்தனர். கையைக் கழுவதற்கு ஆண்டி பாக்டீரியா சோப் நீரை பாட்டில்களில் வைத்திருந்தனர். கையக் கழுவிக் கொள்ள வேண்டியது. பிறகு பேப்பர் டவல்களை வைத்துத் துடைத்துக் கொள்வது! இன்னும் சில இடங்களில் கைய நீட்ட வேண்டியது “சர்ர்ர்ர்ர்”ரென்று கையின் அசைவினால் முயக்கப்பட்ட இயந்திரம் பேப்பரை வெளியே தள்ளியது.

இது என்ன பெரிசு! சில சமயம் நான் வயக்காட்டினில் உட்கார்ந்து எழும் போது அருகே செடி கொடிகள் இருந்தால் “டபக்” கென்று இலைகளைப் பறித்துக் கொள்ளலாமே?.

ரயில்வே டிராக்கில் உட்காரும் சுகம் தெரியுமா? அருகே ரயில் வரும்போது எழுந்தும், எழாமலௌம் தாவி பக்கத்தில் மரியாதையுடன் எழுந்து “உள்ளேன் ஐய்யா!” சொல்லி விட்டு மீண்டும் உட்காரும் கஷ்டம் யாருக்குத் தெரியும்?

கடற்கரையில் எருமைகள் குளிக்கும் இடத்தில், பக்கத்தில் காலையில் பீடி வளித்துக் கொண்டு மண்ணைத் தொட்டுச் செல்லும் இடத்தில் அலைகள் பட உட்காரும் சுகமே தனி தான்!

அருகே குளத்தில் தெளிந்த நீரினைக் குடத்தில் எடுக்க பெண்மணிகள் மெதுவாக “போய் வா குள அலையே!” என்று செல்லமாக விரல்களால் தள்ளி, மெதுவாக குடத்தில் அள்ள, பத்தடியில் அதே குளத்தில் உட்கார்ந்து அதே “தெளிந்த நீரினை” மெதுவாக வலது கையினால் அள்ளி சுத்தப்படுத்தினால் நம்ம மனதும், உடம்பும் ஒருங்கே சுத்தப்படுகின்றது. தெரியுமா? மற்றவர்களைப் பற்றி நமக்கென்ன கவலை? அருகே ஒரு யோகியார் குளித்து, அதே தண்ணீரை இரு கைகளால் எடுத்து “சர்வம் கிருஷ்ணார்ப்பணம்! “ என்று கிருஷ்ணருக்கே அர்ப்பணம் என்று பாவிப்பது கண்டு சிரித்துக் கொள்கிறேன்.

இப்படி தான் பம்பையில், ஐயப்பமார்கள் விடிய விடிய பேருந்தில் வந்து விட்டு விடியற்காலையில் அழுக்கு மூட்டைகளையும், அனைத்தியும் துடைக்க ஒரே இடத்தில் 200 பேருக்கு மேலே முழுங்கி! சாமியே! என்று பாரத்தைப் போட்டு விட்டு முழ்கி எழுந்திருக்கின்றார்கள்! கழுவல்களால் கழுவப்பட்ட பாவ ஜென்மங்கள்!

கும்பமேளாவில் லட்சக்கணக்கானோர் ஒரே இடத்தில் குந்திவிட்டு எழுந்திருக்கும் காட்சியும் மனதில் வந்து போனது. இயற்கையை இப்படி உரமாக அனுபவிப்பவர்கள் நாம்!

அதனால், வெளிநாடு போகும் போது என்னைப் போய்த் தண்ணீர் உபயோகிக்காமல், பேப்பர் உபயோகிக்கச் சொன்னால்?.

அந்தப் பழக்கத்திற்குப் பழக சில காலம் பிடித்தது. பீக்கர், வாளியிலாத ஊரில் குவளையைத் தேடினேன். பேப்பர் கிழிந்தது. எரிச்சல் வந்தது. கீழே சிந்தியது. ஒரு “பீக்கர்” எடுத்தோமா, அடித்து ஊற்றினோமா என்றில்லாமல், பார்த்து பார்த்து செய்ய நேரிட்டது. கொஞ்சம் சிந்தினாலும் கீழீ சுழித்து ஓடுவதற்கு சாக்கடை இல்லாததால் பளிங்கு கற்களை பதம் பார்த்து மற்றவர்கள் சிரிக்க நேரிடுமோ என்று பயம் ஏற்பட்டது.

சிறு வயதில் ஒரு பயம்!.

பெரியவனானதும் வேறு விதமான பயம்!

எப்படி பாருங்கள்!

பயமொன்றுமில்லை என்று சப்பு கட்டுவதற்காக இதோ!:

“காடுகளைச் செவ்வனே அழித்து, பேப்பர்களை இவ்வாறு அழித்தொழிக்க மனதிற்குப் பிடிக்கவில்லை. பாத்ரூம் டிஸ்யூஸ் ( பேப்பர் டவல்களைத் தான் சொல்லுகின்றேன்!) மேல் பேனா கொண்டு சிறுகதை கூட எழுதிட முடியும். “

கழிவறையில் எங்கள் ஊர் வத்தலகுண்டுவில் பேப்பர் உபயோகித்தால் அவ்வளவு தான். தெருவே அடைத்துக் கொண்டு விடும். சாக்கடை நீர் ஓடாது. ஓடாத தண்ணீர் என்றால் கொசுக்களுக்கு வேறு கொண்டாட்டம். 1 பில்லியன் மக்கள் பேப்பர்களைக் கட்டு கட்டாக உபயோகித்தால் அழிக்க மரங்களுக்கு எங்கே போவதாம்?. அதற்குப் பதிலாக வெறும் தண்ணீரை உபயோகித்துக் கழிவுகளைக் கழுவினால் போதும்.

வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுகள் போகும் பைப்களைப் பாருங்கள். அதில் சுருட்டிய பேப்பர் எளிதில் அடைத்துக் கொண்டு விடும். பம்பாயில் இருக்கும் அடுக்கு மாடி கட்டிடத்தில் அடைத்துக் கொண்டால், அவ்வளவு தான்! 1,2,3 முதல் 24 மாடி வரை அனைத்தும் அடைத்துக் கொண்டு விட 24 வது மாடிக்காரர் அவசரத்திற்கு கீழே பதைபதைப்ப்புடன் ஓடி வரும் காட்சியும் நம் கண் முன்னே வந்து ஆட்டம் போடுகிறது.

சென்னையில் எங்கள் மேல் மாடி போர்ஷனில் இருக்கும் அபார்ட்மெண்டில் சிமெண்ட் குழாய் ஓட்டை ஏற்பட்டு அடைப்படைக்க ஆரம்பித்தது. பேப்பர் கழிவறையில் உபயோகப்படுத்தினாரோ என்னவோ?. மாறாக எங்களுடன் சண்டை போடும் போது, நாங்கள் அடைக்கும் போடி போவதாகச் சத்தமிட்டார். அவர் கழிவறையில் உபயோகித்த பேப்பர் மிக மலிவான மக்கிய பள்ளி நோட்டுக்கு உறை போடத் தக்க பிரவுன் பேப்பராகும். அதைப் பின்னால் கண்டுபிடித்து சிரி சிரியென்று சிரித்தோம்!

அப்போது நானும், என் நண்பனும் தண்ணீருக்கும், பேப்பருக்குமிடையில் மன்றாடி, வாக்கு வாதம் பண்ணலானோம்.

“தண்ணீரை வெட்டி செலவு செய்து விரயம் செய்ய்றியே?”

“தண்ணீர் விட்டே வளர்ந்தோம்! சர்வேசா! என்று உன்னைப் பார்த்தால் பாடத் தோன்றுகின்றது.”

“பேப்பர் வைத்து இப்படி ஊதாரித்தனம் பண்றியே?”

“எங்கள் சாம்பார் சாப்பிட்டால் உனக்குத் தண்ணீர் தான் தேவைப்படும் மச்சி!”

“சாண்ட்விச் மட்டும் சாப்பிடு! கட்டியாக வரும் கழிவினைத் துடைக்க பேப்பர் தான் லாயக்கு!”

“உடம்பின் உள் பகுதிகளில் கை படச் சுத்தம் செய்யறதுக்கு, பேப்பர் பரவாயில்லை இல்லையா?”

“ஆனால் பேப்பருடன்,சோப் போட வேண்டியிருக்கு, நாங்கள் வெறும் குழாய் கீழே கை காண்பிப்போம், அவ்வளவு தான்! முடிந்தது!”

“குழாய் உடைந்து கசியும்! சில சமயம் திறந்தால் காற்று புஸ்ஸ்ஸ்ஸ்ஸென்று சென்னைக் கடலோரக் காற்றாக வீசும்!”

“பேப்பரோ, தண்ணீரோ எதுவானாலும், “யூஸ்” (பயன் படுத்தி) பண்ண பிறகு பிறகு நம்மக் கையைக் கழுவ வேண்டும். “

“ஜப்பானிலும், அமெரிக்காவிலும் 77 வயது வரை வாழ்கிறார்களாமே? எல்லாரும் கை கழுவார்களா?”

“மனைவியைக் கை கழுவி விட்டதால் அல்லது கணவனைக் கை கழுவி விட்டதால் அப்படி அதிகம் உயிர் வாழ்வாங்க?”

“கையைக் கழுவுங்கள். இன்னும் அதிகமாக உயிர் வாழ்வீர்கள்! என்று டாக்டர் சொல்வாங்களே?”

“ அவர், தயிர் சாதம் பிசைந்து சாப்பிட வேண்டுமல்லவா?.”

“கீழே போடும் பேப்பரில் இன்னும் பத்தாயிரம் குழந்தைகள் படிக்கலாமே?”

“கீழே போகும் தண்ணீரில் இன்னும் பத்து மாதங்கள் வறண்ட ஆண்டினில் லாரிகள் பின்னால் குடத்துடன் அலையாமல் இருக்கலாமே?”

“எனக்கு கையில் ஃபோர்க் பிடித்து தான் சாப்பிட்டு பழக்கம். ஆதலால் பேப்பர் தான் எனக்குப் பிடிக்கும்”

“ஃபோர்க்கானாலும், கையானாலும் தண்ணீருக்கோ, பேப்பருக்கோ வரவேண்டும் தான்”

“கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டாமல் போகும் சோக நிலையில் பலர் இன்னும் இருக்கின்றார்கள்!”

“ 1 பில்லியன் மக்களுக்கு பிளாஸ்டிக் ஃபோர்க் தயாரித்தால் என்னாவது?”

“நாட்டின் சுற்றுபுறத்திற்கேற்ப யோசி!”

வெட்டிப் பேச்சு அதிகம் பேசிய விமலாத்தித்தர்களாகிய நாங்கள் கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தோம்.

நான் பேப்பரை விரயம் பண்ணவும், என் நண்பன் தண்ணீரை விரயம் பண்ணவும் முடிவு செய்தோம்.

பேப்பரும், தண்ணீரும் ஒண்ணு! (ஒன்று!) அறியாதவன் வாயில் மண்ணு! (மண்)!

மன்னிக்கவும்!

சாப்பிடும் “வாயில்” இல்லை! இது ஆசன வாயில்!

இதைக் கவனியுங்கள்!

1. சார்! பேப்பர்! மக்கிய காகிதத்தினை சுருட்டி வீட்டு வெராண்டாவில் விட்டு எறிந்தான் பேப்பர் பையன்.

2. அம்மா! தண்ணி லாரி வருது! குடத்தைத் தூக்கி ஓடிக் கொண்டே போனாள் சிறு பெண்.

3. செடி இலைகள் அசைந்தாட, “இதோ என்னை எடுத்துக் கொள்” என்றூ கூவுகின்றன.

இப்போது சொல்லுங்கள்,

நீங்கள் பேப்பர் கட்சியா?

தண்ணீர் கட்சியா?

அல்லது இலை, செடி/கொடி என்று இயற்கை கட்சியா?

- கிருஷ்ணகுமார்([email protected])

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com