Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
சஞ்சீவி மலை
கி.ராஜநாராயணன்

நண்பர் திரு பாவாடை ராமமூர்த்தியிம் கேட்டால் கோவில்பட்டிக்கு, தான் மாறுதலாகி வந்தது பாக்கியம் என்று சொல்லுவார். எங்களிடம் கேட்டால் அது கோவில்பட்டியின் பாரத ஸ்டேட் வங்கிக் கிளைக்கும் எங்களுக்கும் பாக்கியம் என்போம். சொல்லப் போனால் அது யாருடைய விருப்பமும் இல்லை. அந்த “SBI” வங்கிகளில் எந்த இடத்திலாவது ஒரு “கசமுசா” நடந்தாலும் கூப்பிடு பாவாடையை அனுப்பு உடனே” என்று அவரைக் கேட்காமலேயே தள்ளிவிட்டு விடுவார்கள். ரொம்பவும் அது அலப்பரை பிடிச்ச வேலை. அப்படியான சிக்கல் பிடிச்ச வேலைகளை இவரும் ஒரு சவாலாக ஏற்று வெற்றி ஈட்டித் தருவார் அந்த நிறுவனத்துக்கு.

கோவில்பட்டி கிளையில் ஒரு இருபது லட்ச ரூபாய்ச் “செக்” காணாமல் போய்விட்டது. எவ்வளவு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. என்ன ஆச்சி எங்கெ போச்சி என்று கண்டுபிடிக்கவே முடியலை. தேடித் தேடி சோர்ந்து போய்விட்டார்கள். மேலிடம் கூடி யோசித்தது. இருக்கவே இருக்கார் பாவாடை அவரை அனுப்புவோம் என்று அனுப்பி வைத்தார்கள். ஒரு நாள் காலையில், கையில் ஒரு சின்னப் பெட்டியுடன் பாவாடையார் வந்து கோவில்பட்டி ரயில்க்கெடியில் இறங்கினார்; உச்சி வகுடு எடுத்த சுருட்டைத் தலையுடனும் மொட்டைத் தாடியுடனும், வங்கியினுள் நுழைந்ததும் எல்லா அதிகாரங்களையும் கையில் எடுத்துக்கொண்டு, பணிப் பொறுப்பில் இருந்த கிளை மேலாளரை எழுப்பி தனது பக்கத்திலேயே ஒரு நாற்காலி போட்டு உட்கார வைத்துவிட்டார்.

சொடக்குப் போடுகிற நேரத்துக்குள் வங்கியே சுறுசுறுப்பாகிவிட்டது. அவர் அங்கேவந்த ஒரு மாசத்துக்கெல்லாம் இடைசெவலுக்கு வந்து என்னோடு பழகி, கோவில்பட்டிக்கு வந்தா பேங்குக்கு வாங்க என்று பலமுறை கூப்பிட்டு விட்டார். நானும் அந்த வங்கியின் ஒரு வாடிக்கையாளன்தான். ஆடிக்கொருக்க அம்மாசிக்கொருக்க இந்தப் பத்திரிகைக்காரர்களிடமிருந்து வரும் காசோலைகளை என் கணக்கில் போடப் போறதுண்டு.

அங்கே எனக்குத் தெரிந்த இலக்கிய நண்பர்களும் உண்டு. ஒரு நாள், அந்தப் பகுதிப் பக்கம் போகவேண்டிய ஒரு அலுவல் ஏற்பட்டது. சரி; அப்படியே போய் பாவாடையையும் எட்டிப் பார்த்து விடலாமே என்று போனேன். அவருடைய அறைக்கு முன்னால் காவலாளி நின்று கொண்டிருந்தார். தெரிந்தவர்தானே என்று அவரைக் கடந்து மேலாளர் அறையைப் பார்த்துப்போன போது கையை நீட்டித் தடுத்தார். “இருங்க இருங்க; முன்னெமாதிரி இல்லெ. இப்ப வந்த மானேஜர் ஒரு குரங்கன்” என்றார்! மூஞ்சியும் மேலெல்லாம் முடி இருப்பதை வைத்துச் சொல்றாரோ என்று நினைத்தேன். (ஒரு கராலான ஆசாமிக்கு தந்த பட்டத்தைப் பார்தீர்களா!!) நாளது தேதி வரையில் நானும் இந்தப் “பட்டத்தை” அவரிடம் சொல்லவில்லை! சொன்னால் இப்பொ ரசித்துச் சிரிப்பார்.

காவலாளியின் கண்டிப்பும் சரிதாம்; அலுவல் நேரத்தில் சும்மா வந்து கதை அளப்பதெல்லாம் கூடாதுதானெ. நண்பர்கள் இருந்த பக்கமாய் நகர்ந்து போனேன். எல்லோரும் அவரவர் வேலை கவனத்தில் கருக்கடையாய் மூழ்கி இருந்தார்கள். சரி; இன்னொரு சமயம் வந்து பார்ப்போம் என்று வந்துவிட்டேன். பின்னொருநாள் ஒரு சனிக்கிழமையில் சாய்ந்திரம் அந்தப் பக்கம் போக வேண்டியிருந்தது. எட்டிப் பார்த்தேன். வங்கி அலுவல்கள் முடிந்து எல்லோரும் போன பிறகும் அவர் இருக்கிறார் என்றார். அதே காவலாளி! போனேன். பின்பக்கம் இருப்பதாகச் சொன்னார். அங்கே என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று போய்ப் பார்த்தால் ... ஏகப்பட்ட பழைய டியூப்லைட் பல்புகளை நொறுக்கிக் குவித்துக் கொண்டிருந்தார்.

ஏம் இப்படி நொறுக்கணும்; தீய்ந்து போனவைகளைத் தூரப் போட்டுவிட வேண்டியதுதானே? என்று கேட்டேன். அப்படிச் செய்யாமல் இங்கே சேர்த்து வைப்பதினால் இவைகளைச் சாக்கிட்டு நல்ல பல்புகளும் காணாமல்ப் போய்கொண்டிருக்கின்ற “கதை”யைச் சொன்னார். ஓஹோ இதுல இப்படியும் ஒன்ணு இருக்கா; சர்தாம் சர்தாம். சமர்த்தர்கள்தான்!

மற்ற மேலாளர்களெல்லாம் இப்படி நுணுகிக் கவனிப்பார்களா தெரியாது. “ஊர் நட்டம் ஊரோடெ, தேர் நட்டம் தெருவோடெ” என்றுதான் இருப்பார்கள். இவர் வந்து கொஞ்ச நாளைக்குள் வங்கியின் “டப்பா”வையே தலைகீழாகத் தட்டி, ராவெல்லாம் தூங்காமல் சலித்து எடுத்துக் கண்டுபிடித்துவிட்டார் அந்தச் “செக்” விஷயத்தை. மறாநாளே அந்தப் “பார்ட்டி”யை வரவழைத்தார். அந்தக் கிளை மேலாளரையும் பக்கத்தில் வைத்துக்கொண்டு, வரீசையாகச் சொன்னார். செக் பிறந்த தேதியிலிருந்து அது பயணப்பட்டு எங்கெல்லாம் சுற்றிவந்து எங்கே எப்படி திருப்பப்பட்டு எப்படிக் “காணாமல்” போயிற்று என்று.

வழி இல்லாமல் பார்ட்டி ஒப்புக்கொண்டார். அவர் கௌரவமான ஒரு தொழில் குடும்பத்தைச் சேர்ந்தவர். உடனே தனக்குச் சொந்தமான ஒரு லாட்ஜ். அதோடு இந்தப் பணத்தில் வாங்கிய ஒரு புதூ பஸ் இதுகளை வங்கியிடம் ஒப்படைத்தார். இதுவரை இந்த வங்கிக்கு ஒரு முக்கியமான பெரும் பணப் புழக்கமுள்ள வாடிக்கையாளராக இருந்து வந்திருக்கிறார். துணியும் கிழியாமல் முள்ளும் முறியாமல் பிரித்தெடுத்து போல வங்கி அவரிடம் நடந்துகொண்டது. ஒரு மூணேமுக்கால் நாழிகைக்குள் அந்தப் பார்ட்டியும் குடும்பமும் கலங்கிப் போய் இருந்தது. அந்தக் கலக்கத்தையே தண்டணையாக ஆக்கினார் பாவடையார்.

அவர் வந்த “கடுவா வேட்டை” முடிந்தது. என்றாலும் அதன்பிறகும் அவரை நீட்டித்தது மேலாவ் (மேலிடம்) கோவில்பட்டியில் இருக்க அவருக்கும் சந்தோசம்தாம். அந்த நாட்களை இவர் தனது வாழ்க்கையின் பொன்னாட்கள் என்று இப்பவும் சொல்லுகிறார். அவருடைய அதிசயமெல்லாம், கோவில்பட்டியிலும் அதைச் சுற்றிலும் எப்படி இத்தனை எழுத்தாளர்கள் எழுந்தார்கள் என்பது! செழுமையும் பசுமையும் கொண்ட தஞ்சையிலும் நெல்லையிலும்தான் எழுத்தாளர்கள் கவிஞர்கள் என்று உண்டு; அங்கே காவிரியும் பொருநையும் உண்டு. இங்கே என்ன உண்டு?

இந்தக் கேள்விக்கு ஒரு எதிர்க் கேள்வியாகக் கவிஞர். அப்துல் ரகுமான் கேட்டார்; அரேபியாவிலும் அதைச் சுற்றிலும் பாலைவனம்தான். அங்கே எப்படிக் கவிஞர்களும் புகழ்பெற்ற இலக்கியங்களும் தோன்றின? இங்கே உள்ள அத்தனை இலக்கியக்காரர்களோடும் பாவாடைக்கு நேசம் ஏற்பட்டது. ஒருநாள், படிக்க ஒரு புத்தகம் கொடுங்க என்றார். எழுத்தாளர் ப. சிங்காரம் எழுதிய அவரது இரண்டாம் நாவலான “புயலிலே ஒரு தோணி” தந்தேன். வாசித்துவிட்டு தமிழில் இப்படியும் படைப்பு வந்திருக்கா; என்னமா எழுதுறார் அடேயப்பா. யாரு இவரு எந்த ஊர்க்காரர்? என்று கேட்டார். சொன்னேன்.

இப்போ எங்கே இருக்கார் என்று விசாரித்தார்.

சொன்னேன்.

அடுத்தமுறை வரும்போது ப. சிங்காரத்தைப் போய்ப் பார்த்தேன் என்றார். ஆச்சரியம் எனக்கு. மதுரைக்குப் போகும்போதெல்லாம் நினைக்கிறதுதான். இந்தத் தடவை சிங்காரத்தைப் பார்த்துறணும் என்று. தட்டிப் போய்கொண்டே இருந்தது. அதை இவர் செய்துவிட்டார். கடைசி வரை நான் சிங்காரத்தைப் பார்த்துப் பேச முடியாமலே போய்விட்டது. என்ன பேசினீங்க என்ன சொன்னார் என்று கேட்டேன். எந்த ஒரு எழுத்தாளரும் தன்னை வந்து பார்த்ததில்லை என்றாராம். ரொம்பநாளைக்கு முன்னால் கி.ரா. ஒரு கார்டு எழுதியிருந்தார் என்னைப் பாராட்டி என்றாராம். கி.ரா.தான் உங்க முகவரியையும் தந்தார் என்று சொன்னாராம் இவர். ஒரு கூடை நிறை “சப்பட்டை” மாம்பழம் வாங்கிக்கொண்டு போனேன். ரொம்ப சந்தோசம் அவருக்கு என்றார். நல்ல காரியம் செய்தீங்க என்று சொன்னேன். செயலாற்றுவதில் மன்னன் இந்தப் பாவாடை. அவர் ரத்தத்தில் நூறு விழுக்காடு சுறுசுறுப்பு கலந்திருந்திருக்கிறது.

அதிகாலை நாலு மணிக்கே எழுந்து விடுவாராம். வெள்ளையில் அரைக் கால்ச்சட்டை வெள்ளை பனியன், சாக்ஸ், வெள்ளைக் கேன்வாஸ் காலணியோடு பிடிப்பாராம் ஒரு லொங்கோட்டம் (ஜாக்கிங்) நேராக இடைசெவலைப் பார்த்து பத்துக் கிலோமீட்டர்! காலையில் தலைவாசல் தெளிக்க கதவைத் திறந்தால் படிவாசலில் உட்கார்ந்துகொண்டிருக்கும் பாவாடை, எழுந்து அம்மாவுக்குக் காலைவணக்கம் சொல்லும்.

நான் எழுந்து வெளியே வரும்போது எங்கள் வீட்டுக் கறிவேப்பிலை மரத்தடியில் பாவாடை பிரம்புநாற்காலில் உட்கார்ந்து கொண்டிருப்பார். எனக்குக் காபியும் அவருக்கு அவர் விருப்பப்படி நீத்துப் பாகமும் வரும். இருவரும் உட்கார்ந்து கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருப்போம். பிறகு அவர் சீக்கிரமே போய் பஸ்ஸைப் பிடித்து கோவில்பட்டி போய்விடுவார். ஒருநாள் கேட்டேன்; ஏம் இப்படி தினோமும் பத்துக் கிலோ மீட்டர் ஓடிவரணும் லொங்கோட்டமாக, சிரமாமா இருக்காதா?

பழக்கம்தாம்; சென்னைக் கடற்கரைச் சாலையில் தினோமும் இப்படி ஓடுவேன் என்றார். நேரம் ஒங்களுக்கு முக்கியம் இல்லையா; பத்துக் கிலோமீட்டர் ஓடிவந்து, பஸ்ஸைப் பிடித்து கோவில்பட்டி திரும்புறது? பேசாமெ நூறு தோப்புக்காரணம் போட்டா கொஞ்ச நேரத்துல முடிஞ்சிருமெ என்றேன்.

போட்டுப் பாருங்க பிறகு தெரியும் என்றேன்.

எதோ சிரிக்கிறதுக்காக கி.ரா. சொல்லுகிறார் என்று நினைத்து அவரும் சிரித்தார்.

அதுக்குப் பிறகு அவரை ஒரு மூணுநாளைக்கு ஆளைக்காணோம். சரி; ஏதோ சோலி இருக்கலாம். குடும்பத்தைப் பார்க்க ஊருக்குப் போயிருக்கலாம் என்று நினைத்துக்கொண்டேன். ரெண்டு மூணு நாள் கழித்து கோவில்பட்டி போக வேண்டியிருந்தது. பஸ்ஸை விட்டு இறங்கியதும் அவர் தங்கியிருந்த லாட்ஜ்ஜுக்குப் போய் அவர் வந்துவிட்டாரா என்று விசாரித்தேன். இங்கதான் இருக்கார். அவர் எங்கயும் போகலையே இங்கதான் இருக்கார் என்று சொன்னார்கள். சரி; வங்கிப்பக்கம் போய் எட்டிப் பார்ப்போம் என்று போனேன். என்னைப் பார்த்ததும் பலமாகச் சிரித்துக்கொண்டே நீங்க சும்மாதான் சொல்கிறீர்களாக்கும் என்று நினைத்து விட்டேன்; தோப்புக்கரணத்துக்கு இவ்வளவு சக்தி இருக்கும்ணு நினைச்சே பார்க்கலை என்றார்.

மதியவேளைச் சாப்பாட்டுக்கு உட்கார்ந்தோம். அந்தத் தோப்புக்கரண மகாத்மியத்தை ஒரு கதைபோல வர்ணித்தார். எப்பவும் அவரிடம் காட்சி விவரணை அருமையாக இருக்கும். வழக்கம்போல் காலையில் நாலுமணிக்கு எழுந்திருந்தாராம். இன்றைக்குத் தோப்புக்கரணம் போட்டுப் பார்ப்போம் என்று அறைக் கதவைப் பூட்டிக்கொண்டு லாட்ஜின் மொட்டை மாடிக்குப் படியேறிப் போனாராம். ஒரு 25 தோப்புக்கரணம் வேகமாகப் போட்டாராம். அதுக்குமேலே, மேட்டில் சைக்கிள்விடத் திணறுவதுபோல சிரமப்பட வேண்டியதிருந்ததாம். எப்படியோ நாப்பது வரை வந்துவிட்டார். கொஞ்சம் ஓய்வு எடுத்துக்கொண்டு தொடரலாமே என்று தோன்றியதாம். சேச்சே; அது கூடாது. என்ன ஆனாலும் சரிதான் என்று தொடர்ந்தாராம். உடம்பு மறுப்புத் தெரிவித்து; இயங்க மறுத்தது. அப்படியா; நீ சொல்லி நாங் கேக்கவா ரொம்ப லெச்சணந்தாம் என்று வீம்பு வந்துட்டதாம். நீயாச்சி நானாச்சி பாத்துறலாம் என்று ஒரு தம் பிடித்து எழுபது வரை வந்துவிட்டாராம். ‘எழுபத்தஞ்சி எழுத்தஞ்சி’ என்று சொல்லிக்கொண்டே இருந்தாராம்!

திரும்பவும் ஒரு தம் பிடித்து ‘எம்பழது எம்பழது’ என்று சொல்லிக்கொண்டே அதிலிருந்து தொண்ணூறு வரை வந்துவிட்டாராம். இனி ‘பத்துதானெ பத்துதானெ’. மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்குதாம். சாமீ என்னெ விட்டூர்ரா என்கிறதாம் உடம்பு. விடப்புடுமா வக்காளி; இவ்வளவுக்கு வந்தூட்டு விட்டுர்றதா. “பனை ஏறியும் பாளை தொடலை”ன்னா எப்படி. இது என்ன வங்கியா கிடுகிடுன்னு நோட்டு எண்ணி முடிக்க. விடலை... ஒரு மட்டுக்கும் செஞ்சுரி அடிச்சாச்சி! அடிச்சாச்சா... அம்புட்டுத்தாம் அம்புட்டுத்தாம். மொட்டை மாடியின் கைபிடிச் சுவரில் தரையில் உக்கார்ந்தபடியே சாய்ந்தார். சாயந்தாரா... அப்படியே சறுக்கி மட்டமல்லாக்கக் கால்களும் கைகளும் அகலித்து மேமூச்சுசீமூச்சு வாங்க, மூச்சுவிடும் பிணமாகக் கிடந்தாராம், ரொம்பநேரம், பிறகுதாம் தெரிந்தது பொட்டியாருக்கு; இதுக்கு மேல் கால்களை அசைக்கவே முடியாது என்று! கடவுள் பேரில் நம்பிக்கையே இல்லாத பெரியார். இப்படியாப்பட்ட ஒரு நேரத்தில்தான் வாய்தவறிச் சொன்னராம். “அட ராமா!” என்று அந்த நினைப்பு வந்து உள்ளுக்குள் சிரித்துக் கொண்டாராம்.

அந்நேரம் அந்த மொட்டை மாடியில் ஒரு சுடுகுஞ்சுகூடக் கிடையாது. ஒரு மடக்குத் தண்ணீர் கிடைத்தால்த் தேவைலை பாவாடை சொல்லுகிறார்: நடக்க முடியலை தவழ்ந்து கொண்டே மாடிப்படி இருக்கும் இடத்துக்கு வந்தேம். கால்கள் இயங்காததால் எப்படி இறங்க. அப்படியே அங்கேயே கிடந்து ஒய்வு எடுத்துக்கொண்டு, மத்தியில் கீழே பார்த்துக் குரல் தந்தேன். ஹலோ ஹலோ என்று (அப்படிப் பெயர் உடையவர் யாருமில்லாததால் காதில்விழ வில்லையோ!) ஒரு ஈக்குஞ்சியும் வரவில்லை. நேரம் நகர்ந்துகொண்டடே போனது. அவர் உடம்புக்கு அவரே பண்டுகம் செய்துகொண்டு (கால் கைகளைப் பிடித்து விட்டுக்கொண்டும் தேய்த்துவிட்டுக் கொண்டும்) படிகளில் கால் வைத்து இறங்கத் தயாரானார். எல்லாரும் சிகரத்தில் கஷ்டப்பட்டு ஏறுவார்களே அதுபோல இவர் ஏணிப்படிகளில் மிகவும் கஷ்டப்பட்டு இறங்கினார்.

தக்கிமுக்கி எப்படியோ வந்து தன்னுடைய கட்டிலில் விழுந்தார்.

அதன்பிறகு நடந்தையெல்லாம் நம்மால் யூகிக்க முடியும். வேலை நாட்களில் லீவு போடாத மனுசன் அன்றைக்கு லீவு போட்டார். வென்னீரில் குளிக்கப் பிரியப்படாதவர் சூடாக வென்னீர் ஏற்பாடு செய்து தொடைகள் கால்கள் என்றுவிட்டுக்கொண்டார். வரவழைத்து உண்டியைப் படுக்கையிலேயே உட்கார்ந்து சாப்பிட்டார். அன்று முழுவதும் அப்படியே கிடை ஓய்வு (பெட் ரெஸ்ட்) எடுத்துக்கொண்டார்.

மறாநாள் கொஞ்சம் பரவாயில்லை. முதல்நாள் போலவே உண்டியை வரவழைத்து சாப்பிட்டுமுடித்து, வலி நிவாரணி மாத்திரைகளைப் போட்டுக்கொண்டு டாக்ஸியில் ஏறி வங்கிக்கு வந்து சேர்ந்தாராம். அப்போது அவர் தனக்குள் கேட்டுக்கொண்டே கேள்வி.

‘தோப்புக்கரணம் என்கிறது இவ்வளவுக்குச் சக்திவாய்ந்ததா’.

அதனால்தான் காதுகள் ரெண்டையும் தொட்டதோ தொடலையோ என்று விரல்களால் ஒட்ட வைத்துக்கொண்டு பேருக்கு புட்டத்தை மட்டும் மூணுதரம் ஆட்டிவிட்டு நகர்ந்து விடுகிறான்கள்! (அதைப் பார்த்துப் பிள்ளையார் சிரித்துக்கொள்வாராம்)

நான் சொன்னேன்: ஒரே தடவையில் இப்படி நீங்க நூறு போடுவீங்கன்னு தெரிஞ்சிரிந்தா தடுத்திருப்பேம்; ஒரு நாளைக்குப் பத்து, மராநா பதினைஞ்சி, இப்படி அஞ்சி அஞ்சா கூட்டிக்கிட்டேபோகனும். இப்படிப் பேராசை கூடாது என்று சிரித்தேன். அதன்பிறகு அவர் வங்கிப் பணி முடிந்த மாலை வேளைகளில் மற்றும் விடுமுறைகளில் இடை செவல்வந்து என்னோடு ரொம்ப நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டுப் போவார்.

அப்படிப் பேசிக்கொண்டிருந்தபோது ஒருநாள், “நீங்க ஏம் ஒரு டிராக்டர் வைத்துக்கிடக் கூடாது” என்று கேட்டார். வச்சிக்கிடலாந்தாம்; எனக்கென்னவோ அதிலெல்லாம் அப்படி ஒரு ஈடுபாடு இல்லை.

வங்கியிலிருந்து நாங்க கடனாகத் தர்றோம். இனாமாகத் தந்தாலும் டிராக்டர் வேண்டாம் அது ஒரு பெரிய்ய அலப்பரை. அதோடு நான் கடன் என்று வாங்கக்கூடாது என்றே ஒரு கொள்கை வைத்திருக்கிறேன்.

இதுக்கு அவர் சொன்னார்; மூலதனம் என்பது கண்டெடுப்பதில்லை. சேர்த்து வைத்துக்கொண்டுதான் தொழிலில் இறங்க வேண்டும் என்றால் அதுக்குள் காலம் வீணாகிவிடும். மூலதனத்தைப் போலவே காலமும் முக்கியம். அதோடு நீங்கள் சேர்த்து வைத்துக்கொண்டே வரும் மூலதனத்துக்கு வட்டி யார் தருவார்கள்? கிணறு தோண்டித் தண்ணீர் எடுத்தபிறகுதான் குளிப்பேன் என்று சொல்லுகிறது போல இருக்கு நீங்க சொல்றது.

சரியான வாதம் என்பது வேறெ; நடைமுறை என்பது வேறெ என்று சொல்லி அவர் பேச்சை மறுத்துவிட்டேன். பாவாடைக்கு மனசு சமாதானம் ஆகவில்லை. ஏதாவது நான் செய்யணும் உங்களுக்கு; என்ன செய்யணும் சொல்லுங்க் என்று கேட்டார்.

நான் ஒன்றும் சொல்லவில்லை. யோசிங்க என்று சொல்லி விடை பெற்றார் அன்றைக்கு.

பாவாடை ஒரு ஊருக்குள் நுழைந்தார் என்றால், நமது கண்ணில், நினைப்பில் படாததெல்லாம் அவர் கண்களில் பட்டுவிடும். இன்றைய நாளைய விசயங்களை எல்லாம் எண்ணிப் பேசுவார். தூத்துக்குடியும் கோவில்பட்டியும் தொழில் நகரங்கள். அதனால்த்தான் இவை வளர்ந்து விரிவடைந்து கொண்டே வருகிறது. இதே மாவட்டத்துக்குள் இருக்கும் வட்டத் தலைநகரங்களைக் கவனியுங்கள். சிறீவைகுண்டம் நாங்குனேரி தென்காசி சங்கரன்கோவில் இப்படி. தேங்கிப்போய் நிற்கின்றன. தென்காசிப் பார்லிமெண்ட் தொகுதி எம்.பி. தொடர்ந்து மூன்று முறை ஜெயித்து மத்திய அரசில் தொழில் மந்தியாக இருந்திருக்கிறார். அவர் நினைத்திருந்தால் தென்காசியையும் சுற்றுப்புறத்தையம் ஒரு தொழில் நகரம் ஆக்கி இருக்கலாம் என்று பேசிக்கொள்வோம்.

கோவில்பட்டிக்கு இவர்வந்து வங்கி நிர்வாகத்தை எடுத்த இரண்டே வாரங்களுக்குள், தமது வங்கியுடன் தொடர்புடைய அத்தனைத் தொழில் நிறுவனங்களையும் நேரில் போய் சரிபார்த்தார். எது என்ன ஏது என்று கேள்விகள் கேட்டுத் தெரிந்து குறிப்புகள் எடுத்துக் கொண்டார். நன்றாக இயங்கும் தொழிற்சாலைகளை உற்சாகப்படுத்துவார். ஒழுங்காக கடனைத் திருப்பிச் செலுத்தும் அமைப்புகளுக்கு அட்டியில்லாமல் மீண்டும் கடன் உதவுவார். அவர் வந்தபோது கோவில்பட்டியில் என்ன என்ன தொழில்கள் இல்லை என்பதை நெடியில் தெரிந்துகொண்டார்.

டூ வீலர்கள் என்ற ஸ்கூட்டர் மோட்டார் சைக்கிள் போன்றவைகளின் சக்கர டயர் தேய்மானத்துக்குப் பதிலாக “ரீ பட்டன்” ஓட்டுப்போடும் கடைகள் இல்லை; இப்பொ இதைத் தொடங்கிறவர்களுக்கு நல்ல காசு கிடைக்கும். அடுத்து, பெரிய மார்க்கெட்டுக்கு அருகே இருக்கும்படியாக ஒரு கிட்டங்கியை ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்குப் பிடித்து அதை முழூவதுமாக ஏ.சி (குளூரூட்டி) செய்து வைத்துக்கொண்டால் மார்க்கெட்டில் அன்றாடம் மிச்சம் விழுகிற புலவு, மீன் வகைகள், காய்கறிகள், பழங்கள் இவைகளை எடைக்குத் தகுந்தபடி, மணி நாட்கள் என்று வைத்துத் தந்தால் நல்ல வருமானம் வரும் என்பார். இப்படியான ஏதாவது ஒரு தொழிலைச் செய்யும்படி அவர் என்னைத் தூண்டிக்கொண்டே இருப்பார். வாழை மட்டையில் எங்கேயாவது தீப்பற்றுமா! என்றாலும் அவர் ஓயமாட்டார்.

அந்த லாட்ஜும் பஸ்ஸும், விற்பனைக்கு வந்தபோது பஸ்ஸை வாங்கி நடத்தச் சொன்னார். வழித்தடங்களுக்கான அனுமதி கிடைப்பது கஷ்டம் என்று சொன்னார். (தப்பிக்க!) யாரும் எடுக்காத வழித்தடம் இருக்கு “கோவில்பட்டி to கோவில்பட்டி” என்று புதுசாகச் சொன்னார். (துரிதமாகவும் நுட்பமாகவும் வேலை செய்யும் அவருடைய மூளை!)

யார் கண்டார்கள்; அவர் சொல்ப்படி கேட்டிருந்தால் கி.ரா. ஒரு பஸ் கம்பெனி ஓனராகக்கூட ஆகியிருக்கலாம்!! அவர் பேச்சு எதுக்கும் நான் அசையவில்லை. சரியான ஒரு சோம்பேறி நான்; உடம்பிலும் மூளையிலும், சோம்பல் என்பது ஒருவகை போதை. இதிலுள்ள “கிக்” மதுவில் கூட கிடையாது.

பின்னொருநாள். எங்கள் குடும்பத்தில் எல்லோரும் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம். சிவகிரியிலிருந்து திவாகரின் குடும்பமும் வந்திருந்தது. அப்பொ அங்கெதான் அவன் வேலையில் இருந்தான். அன்று பார்த்து பாவடையும் வந்திருந்தார். எங்களுக்கு ஒரு நீண்ட “லெக்சர்” கொடுத்தார்.

அதன் சாரம் :

என்றைக்கிருந்தாலும் இந்த விவசாயம் உங்களைக் காலைவாரிவிட்டுரும். இதில் உங்களுக்கு எதிர்காலம் கிடையாது. இவர் எழுதியும் தொடர்ந்து சம்பாதிக்க முடியாது. பிறகு “தார்க்குச்சி” யும் பயன்படாது; எழுதுகோலும் பயன்தராது. எழுத்து இவருக்கு ஓங்கிய புகழ் மட்டுமே தரும். வாய்ப்பு வந்து ஏற்படும்போது தொழில் மட்டுமே கைகொடுக்கும். உங்கள் வீட்டின் மரப் பெட்டிக்குள் பயன்தராமல் கிடக்கும் நிலப்பத்திரங்கள், வீட்டின் பத்திரம், வாங்கிய மனை இடப்பத்திரங்கள், பம்ப் செட் தோட்டத்தின் பத்திரம், அம்மாவின் நகைகள் இவைகளைக்கொண்டு வாருங்கள். வங்கி இவைகளைச் சரிபார்த்து வாங்கி வைத்துக்கொண்டு உங்களுக்கு ஒரு டூரிஸ்ட் வேன் வாங்கிக் கொடுக்கும். அதன் மூலம சம்பாதிக்கலாம்.

முதலில், திவாகருக்கு சரீ என்று பட்டுவிட்டது. அடுத்து அம்மாக்கமாருக்கும்! வேறவழியில்லை; நானும் கையைத் தூக்கிவிட்டேன். இப்படித்தான் எங்கள் வீட்டுக்குமுன் வந்து “பவுடர்புளூ” கலரில் புத்தம் புதூ டூரிஸ்ட்வேன் வந்து நின்றது. வந்து நின்றது என்று மட்டும் சொன்னால்ப் போதுமா; அந்த வயனங்களை வங்கியின் நடைமுறைச் சம்பிரதாயங்களை கொஞ்சம் சொல்ல வேண்டாமா?

அவர் லெக்சர் கொடுத்துவிட்டுப் போன மறாநாளே அவர் சொன்ன அத்தனை இத்யாதிகளையும் எடுத்துக்கொண்டு, “டாண்” என்று காலை பத்துமணிக்கே போய் வங்கியின் வாசலில் நின்றுவிட்டோம். (இனி, நின்றுவாங்கிய கடனை ஓட்டிக் கழிக்கணும். அசல்வாகம் “உக்காந்து தந்த கடனை நடத்துதாம் வாங்கணும்” என்பது)

தனது பக்கத்தில் நாற்கலிபோட்டு உட்காரவைத்திருந்த இருப்பு மேலாளரை எங்களுக்கு அறிமுகப்படுத்தினார் பாவாடை. நாங்கள் வந்த விசயம் சொல்லப்பட்டது. கொண்டுவந்த இத்தியாதிகளைத் தந்தோம். எல்லாச் சடங்குகளும் முடிந்து “செக்” தரும் நாள் தெரிவிக்கப்பட்டது. அதுக்கு முன்னால் எங்கள் வீடு, மனை, இடம் இவைகளை சரிபார்க்க ஒரு வங்கி அதிகாரியை அனுப்பினார்கள்.

இந்த அதிகாரி எங்கள் வீட்டுக்கு வந்ததும் அவருடைய நெற்றியைப் பார்த்ததுமே வைணவர் என்று தெரிந்தது. நாங்கள் சின்னப் பையன்களாக இருந்தகாலத்தில் எங்கள் வீட்டுக்கு நிறைய்யவே அய்யங்கார் சுவாமிகள் வந்ததுண்டு. நாங்கள் அவர்களைக் கேலிசெய்து வந்ததுண்டு. நாங்கள் அவர்களைக் கேலிசெய்து பாட்டுப் பாடியதில் எங்கள் தகப்பனார் என்னை பல முறை அடித்திருக்கிறார்.

(“ஆட்டுக்கும் மாட்டுக்கும் ரெண்டு கொம்பு - நம்ம அய்யங்காருக்கு மூணுகொம்பு” என்கிற பாட்டு) ஆனால் இப்போ வந்த அய்யங்கார் சுவாமிகளுக்கு ஒற்றைக் கொம்பு மட்டுந்தான். அவர் எங்கள் வீட்டை சுற்றிப் பார்க்கும்போது வீட்டின் தலைவாயில் நிலையின் பார்வைச் சில்லு என்ற “பார்வைக்கண்ணாடி“”யில் சங்கு சக்கரத்துடன் கூடிய திருநாமத்தைக் கண்டார். எங்கள் வீட்டின் ஒழுக்கரைப்பெட்டி என்ற இரும்புப் பெட்டியிலுங்கூட திருநாமும் சங்கு சக்கரத்தையும் கண்டு மகிழ்ந்தார்.

என் உடன்பிறந்த சகோர சகோதரிகளின் பெயர்களை கேட்டு ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி அடைந்தார். இப்படி பெயர்களைக் கேட்டும் அதைச் சொல்லியும் அந்த ஒலிப்பில் ஒரு சுகம் காணுகிறார்கள். அட்வகேட் கே.எஸ் ராதாகிருஷ்ணன் ஒரு நாள் என்னிடம் சொன்னார். வானமாமலை ஜீயர் சுவாமிகள், இவரைப் பார்க்கும் போதெல்லாம், என்னுடைய முழூ நீளமான பெயரைச் சொல்லி, அவர் ஷேமமாக இருக்கிறாரா என்று விசாரிப்பாராம்! இதுக்கும் என்னை அந்த ஜீயர் பார்த்ததுகூட கிடையாது. பெயர் செய்யும் மாயம் எல்லாம்!!

வந்திருந்த வங்கி அதிகாரியை வீட்டின் வெளிமுற்றத்தில் ஈஸிச்சேரில் உட்கார வைத்தேன். வசதியாகச் சாய்ந்து வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தவருக்கு ஒரு அதிசயம் காத்துக் கொண்டிருந்தது! பளிச்சென்று எழுந்து நின்று எதோ ஒரு சுலோகத்தை சொல்லி கன்னத்தில்ப் போட்டுக்கொண்டு கைகளையும் விரித்துப் பரவசமானார். பிறகு என்னைப் பார்த்து இன்று வியாழக்கிழமையல்லவா; கருட தரிசனம் ரொம்ப விசேடம்அதிலும் ரெட்டை கருட தரிசனம் ரொம்ப விசேடம் என்றார். மேலே பார்த்தேன். பாருங்கள் அதோ மூன்று கருடன்கள் என்றேன். ஆமா ஆமா என் வாழ்க்கையில் இப்படிப் பார்த்ததே இல்லை என்று ரொம்ப உணர்ச்சிவசப்பட்டுவிட்டார்.

வியாழன் தோறும் இடைசெவல் வந்துவிடலாம் போலிருக்கே என்றார். வந்துவிடலாந்தான்; தரிசனம் கிடைக்கணுமே இப்படி என்றேன். அது உண்மை, அது உண்மை என்றார். கருடப் பட்சியை வரவழைக்க, அதை வட்டமடிக்க வைக்க எல்லாம் சுலபமான வழி இருக்கு என்பது இவர்களுக்குத் தெரியாது! (சொன்னால் சிரிப்புத்தான் வரும்)

ஒரு வியாழக்கிழமை அன்று நானும் காவல் ரெங்கசாமி நாயக்கரும் கோவில்பட்டி போயிருந்தோம். அப்போதெல்லாம் செண்பகவல்லி அம்மன் கோயில் முன்புறமுள்ள பழைய நந்தவன முக்கில் பாதி காய்ந்து போன ஒரு வாகை மரம் அய்யோ என்று நிற்கும். சுற்றிலும் மனுசாட்கள் வேட்டியை வழித்துக்கொண்டு உட்கார்ந்திருப்பார்கள். அந்த மரத்துக்குப் பக்கத்தில்தான் மனிதக் கழிப்புகளுக்கான மேடு பள்ளங்கள் நிறைந்த பாறையடிகள் பரந்துகிடந்தன. அந்த வழியாகத்தான் மேட்டு ஆஸ்பத்ரிக்குப் போய் வரணும். வியாழக்கிழமைகளில் மட்டும் அந்த வாகை மரத்தைப் பார்த்துக்கொண்டே தடித்த புட்டங்கள் கொண்ட நாலைந்து மனிதர்கள் மேவேட்டியை (அங்கவஸ்திரம்) இடுப்பில் கட்டிக்கொண்டு நின்று கொண்டே இருப்பார்கள். ஏன் என்று கவனித்த போதுதான் தெரிந்தது; அந்த மரத்தின் ஒரு கிளையில் ஒரு கருடப்பட்சி, “தேமே” என்று உட்காந்துகொண்டிருந்து.

சாமி கும்பிட நல்ல இடந்தாம் என்று காவல் நாயக்கரிடம் சொல்லிச் சிரித்தேன். அப்பொ அவர்தான் சொன்னார்: “கோட்டிக்காரங்கள் என்னத்துக்கு இங்கே பீநாத்தத்துல வந்து காத்துக்கிடக்கணும்; வீட்டுல நாட்டுக் கோழி நாலைஞ்சி வளத்தாப் போதும். கோழிக் குஞ்செத் தூக்கீட்டுப்போக வானத்துலவந்து ரவுண்டு அடிப்பார் “கிட்ணசாமி நாய்க்கரு”; விழுந்துவிழுந்து கும்பிடலாமெ! என்றார்.

இந்த கருட தரிசனம் பற்றிய பேச்சு இங்கெ ஏம் வந்தது என்றால் வந்த அதிகாரி ஒன்று கிடைத்தால் ஒன்று விட்டுப்போய் விடும் என்கிற சொலவடையின்படி, வந்த வேலை முடிந்துவிட்டது என்பதுபோலப் புறப்பட்டுப் போய்விட்டார். அவரை நான் வழியனுப்பப் போகும்போது ஞாபகப்படுத்தியபோது கூட அவர் சொன்னது: “மானேஜர் ராமமூர்த்தி எது செய்தாலும் சரியாகவே இருக்கும்”

டூரிஸ்ட் வேன் தந்த வருமானத்தை பைசா செலவழிக்காமல் அப்படியே வங்கியில் கொண்டுபோய் வட்டியும் அசலையும் கட்டிக்கொண்டே வந்ததில் இரண்டே ஆண்டுகளில் கடன் பூராவும் தீர்ந்து, பத்திரங்களையும் நகைகளையும் திருப்பிவிட்டோம். மூன்றாவது ஆண்டில். ஒரு லட்சம் சொச்சத்துக்கு வாங்கிய அந்த வேனை எண்பதினாயிரம் ரூபாய்க்கு விற்றோம்.

சும்மா வீட்டில் கிடந்த பத்திரங்களும் நகைகளும் எண்பதினாயிரம் சம்பாதித்துக் கொடுத்தது பாவாடையின் புண்ணியத்தில். அடுத்து, அன்பர் திரு. பாவாடை அவர்கள் எங்களுடைய இரண்டாவது மகனான பிரபிக்கு ஒரு நல்லது செய்ய நினைத்தார். அப்போது அவர் கோவில்பட்டியிலிருந்து சென்னை தாம்பரம் கிளைக்கு மாற்றலாகிப் போய்விட்டார். அங்கே குரோம் பேட்டையிலுள்ள தோல் தொழிற் சாலைகளின் பண நிர்வாகம் யாவும் இவர் மேலாளராக இருந்த தாம்பரம் கிளையில்த்தான் இருந்தது.

ஒரு லீவுநாளில் பாவாடை அவர்கள் திடீரென்று இடைசெவல் வந்து இறங்கினார். இப்பவே நீங்கள் குடும்பத்துடன் சென்னை புறப்படுகிறீர்கள் என்றார். குடும்பம் என்பது அப்போது நான், கணவதி, பிரபி மூன்று போர் மற்றும் பால்மாடுகள் கன்றுக்குட்டிகள், பத்துப் பதினைந்து கோழிகள் இவ்வளவுதான். விவசாயத்தையெல்லாம் (உழவுமாடுகள் மற்றும் இவை சம்பந்தமான கோப்புசங்கள் எல்லாத்தையும்) எப்பவோ ஏறக்கட்டி விட்டோம்.

திடீரென்று குடிகிளம்பி அதும் சென்னை நகரத்துக்குக்குடி போவதென்பது அவ்வளவு லேசா!

இப்பமே பொட்டணத்தைக் கட்டுங்கள் என்கிறார். அவருடைய நெருக்கதலிலிருந்து தப்ப முடியவில்லை.

அங்கே எங்களுக்குத் தங்க கே. கே.நகரில் வீடு எல்லாம் ஏற்பாடு பண்ணியாச்சி.

ஒரு விளையாட்டுப் போல சிரித்துக்கொண்டே கிளம்பினோம்; இங்கே வீட்டைப் பார்த்துக்கொள்ள தம்பிமார்களிடம் சொல்லிவிட்டு வரப்போனோம். அவர்களுக்கு முக்கியமாக நடுவுள்ள தம்பிக்கு ஒரே திகைப்பு; அவனுடைய மனைவி கண்ணீர்விட்டாள். சமாதானம் சொல்லிவிட்டு கிளம்பினோம். அங்கே போய் உட்கார்ந்த பிறகுதான் தோன்றியது; என்னெ இப்படி வந்துவிட்டோமே என்று. (புதுவையில் போய் நிரந்தரமாகக் குடியேற இது ஒரு முன்னோட்டம் என்று அப்போது தெரியவில்லை எனக்கு!)

பிரபியை குரோம்பேட்டையில் ஒரு ரூம் எடுத்து அங்கெ தங்க வைத்தாகிவிட்டது. அங்கேயே ஒரு சாப்பாட்டுக் கடையில் சாப்பிட்டுக்கொள்ள வேண்டியது; புலவு உணவே அவனுக்குப் பிரியம். ஞாயிறு லீவில் இங்கே வந்து எங்களுடன் சாப்பிடுவான். எங்களைவிட பாவாடைதான் பிரபியை நேரடியாகப் போய் பார்த்துக்கொள்வார். குரோம்பேட்டையில் அவனுக்கான வேலைப் பயிற்சி நடந்து கொண்டிருந்தது.

அவன் பயிற்சி எடுத்துக்கொண்டிருந்த இயந்திரத்தின் பெயர்: “ஷேவிங் மெஷின்” என்பதாகும்! அதன் அப்போதைய விலை ஒரு லட்சம் (1987ல்) ஆகும். அதிலுள்ள பிளைடு (சவரக்கத்தி)யின் விலையே முப்பதினாயிரம் ரூபாய். ஜெர்மன் நாட்டிலிருந்து வரவழைக்கப்பட்டது. அந்த எந்திரத்தில் இது ஒன்றுதான் வெளிநாட்டு உறுப்பு. மற்ற வடிவமைப்பு உட்பட யாவும் நம்முடைய நாட்டுடையதெ.

அந்தக் கத்தியின் நீளம் சுமார் ஒருபாகம் இருக்கும். எந்திரத்தில் அது பொருத்தப்பட்ட விதம் அதன் செயல்பாடு இவைகளை நாம் நேரில்க் கண்டால் ஒழிய விளக்கிச் சொல்வதும் புரிந்துகொள்வதும் கடினம் என்றாலும் சொல்லுகிறேன். முள்ச் செடிகளில் இண்டஞ்செடியின் முள் மட்டும் வித்தியாசமாகக் கீழ்நோக்கி அமைந்திருக்கும். புதராக அடர்ந்திருக்கும் அந்தச் செடியினுள் தவறி ஒரு மோதிரம் விழுந்துவிட்டது என்று வைத்துக்கொள்ளுங்கள். அதை எடுக்க கையை நுழைக்கும்போது சுலபமாக வழிவிட்ட அந்த முள்ச்செடி கையை எடுக்கும்போது “எங்கெவேய் ! அந்த சோலிய இங்க வச்சிக்கிடாதிரும்” என்று சொல்லாது; செய்யும். மீன் விழுங்கும்போது உள்ளே போன தூண்டில்முள் வெளிவரமுடியுமா. அதுபோலத்தான். பாடம் செய்யப்பட்ட ஆட்டின் முழூத்தோலும் எந்திரத்தினுள் போகும். போகும் தோலைப் பற்றி இழுத்தால், தோல் மட்டுமே வரும்; அதில் அடர்த்தியாக இருந்த ரோமங்கள் இருக்காது; பத்துநாள் தாடியை சவரக் கத்தியால் மழித்தது போல ஆகிவிடும். திரும்பவும் கொடுத்து இழுக்கலாம்.

இப்படி சுத்தம் செய்யப்பட்ட ஒரு “பீஸ்”க்கு அப்போது அய்ம்பது பைசா கிடைக்கும். ஒரே சிப்பத்தில் ஆயிரம் பீஸ்கள் இருக்கும். எட்டுமணி நேரத்தில் முடித்து 500 ரூபாய் பெறலாம். ஒரு நாளில் மூன்று ஷிப்ட் என்றால் ஒரு நாளைக்கு ஆயிரத்தி அய்னூறு ரூபாய் கிடைக்கும். ஒரு யூனிட் என்பது இப்படியான இரண்டு எந்திரங்களைக்கொண்டது. நாமே நின்று வேலைசெய்து கொண்டு மற்றவருக்கும் வேலை தரலாம். செலவு, கூலி, தேய்மானம் இன்னபிற இவைகளைக் கழித்து கணக்குப் பார்த்தால் மாதம் எவ்வளவு கிடைக்கும்!

தோல்த் தொழில் என்பது லாபம் கொட்டும் தொழில்; தோலின் எந்தப் பகுதியைத் தொட்டாலும் சரிதான். அப்படி மழிக்கப்பட்ட தோலை மறுபாடம் பண்ணி விழுந்ததை எடுத்துப்பார்த்தால் அதைத் தோல் என்றுசொன்னால்த்தான் தெரியும். அசல்ப் பட்டினால் நெய்யப்பட்ட கனமான துணிபோல இருக்கும். இப்படிப் பட்டுத்துணிபோல் தோல் செய்யப்படுகிறது என்பது சென்னைவாசிகளுக்கே தெரியாது! அப்படியே வெளிநாட்டுக்குப் போய்விடும்.

பணம் கொழிக்கும் தொழில்களிலெல்லாம் பலத்த போட்டி இருப்பது போல இதிலும் கடும் போட்டிதான். யாரும் சுலபமாய்ப் போய் நுழைந்துவிட முடியாது. இன்னொரு நம்ப முடியாத அதிசயம்; அப்படி மற்றவர்களை நுழைய முடியாமல், படு ஒற்றுமையாக இருப்பவர்கள் யார் என்று நினைக்கிறீர்கள். அய்யர்வாள்களும் முசல்மான்களும்தான் நம்பமுடிகிறதா?

நீண்டுகொண்டே போகும் இக்கட்டுரையை நேரம்காலம் கருதி முடிக்கவேண்டியதிருக்கிறது மனசில்லாமல்.

பிரபியை எங்களால் சமாதானம் செய்யமுடியலை. தோற்றுப் போனோம். அவனிடம் “மனுசப்பய இருப்பானா இந்த மெட்ராஸ் ஊர்லெ?” என்று பைசல் செய்துவிட்டான்! மூன்று மாதம் கே.கே.நகரில் குப்பை கொட்டியதுதான் மிச்சம். நல்லதொரு வாய்ப்பை இழந்துவிட்டோம். எங்கள் எல்லோரையும்விட பாவாடை ராமமூர்த்திக்குத்தான் தாங்கமுடியாத வருத்தம்

அறுபத்தி அய்ந்து ஆண்டுகள் என்பது ரொம்பச் சின்னதாகவேபடுகிறது எனக்கு. சன்னாவூரில் தஞ்சை மாவட்டம் பிறந்த பாவாடை தன்னைப் பற்றி பல விசயங்களைப் புத்தகங்களாகப் பதிவு செய்திருக்கிறார். இவருடைய வாழ்க்கை அனுபவங்கள் கடல்போல விஸ்தாரமானது; படித்துத் தெரிந்து கொள்கிறவர்களுக்குப் பயனுடையது. ‘எம் கடன் பிறர்க்குதவுவதே’ என்பதையே லட்சியமாகக் கொண்டிருக்கிறார். இவரால் ஆன லட்சாதிபதிகள் கோடீஸ்வரர்கள் பட்டியல் நீளமானது. ஆனால், இவருக்கு அவைகளினால் ஒன்றுமில்லை.

பிறரின் நோய் போக்குவதற்காகவே முளைத்துத் தோன்றுகிறது பச்சிலைச்செடி. இதனால் அச்செடிக்கு ஏதேனும் பயன் உண்டா?

பாவாடை ஒரு சஞ்சீவிமலை;

நாம் வாழ, அவர் வாழ.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com