Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கட்டுரை

இஸ்ரேலும் தீவிரவாதமும்!
விடாது கறுப்பு


லெபனான் என்ற குட்டியூண்டு நாட்டை இஸ்ரேல் என்ற போக்கிரி நாடு (நன்றி: ஜார்ஜ் புஷ்) அமெரிக்கா மற்றும் பிரிட்டன் போன்ற காட்டுமிராண்டி நாடுகளின் துணை கொண்டு தாக்கி அழித்து வருவது கண்டிக்கத் தக்கது. ஹிஸ்புல்லா எனும் தீவிரவாத அமைப்பினர் பிடித்து வைத்துள்ள இரண்டே இரண்டு போர் வீரர்களுக்காகத் தான் இவ்வளவு வெறித்தனங்களும்! பொது மக்கள் மீது தாக்குதல் நடத்தும் அமைப்புகள் மட்டும் தீவிரவாத இயக்கங்கள் என்றால் இஸ்ரேல் என்ற நாடு நடத்தும் வெறித் தாக்குதலை நாம் என்னவென்று அழைப்பது?

ஹிஸ்புல்லாவை அழிக்கிறேன் பேர்வழி என்று கிளம்பி அப்பாவிப் பொதுமக்களையும் குழந்தைகளையும் தன் கொடுங்கரங்களால் கொன்று குவித்து வருகிறது. இது குறித்து மருதநாயகம், அசுரன், சசி போன்றவர்கள் பதிவு போட்டு இருக்கிறார்கள். இஸ்ரேலியர்கள் எங்கள் பூர்வஜென்ம பந்தம் என்றும் நான் ஒரு இஸ்ரேலிய ஆதரவாளன் என்றும் கொக்கரிக்கும் கேவலமான பார்ப்பனர்களும் வழக்கம் போல இஸ்ரேலிய ஆதரவு ஜல்லியடித்துள்ளனர். இஸ்ரேலியர்கள் கும்பிடுவது மகர நெடுங்குழைகாதன் அல்ல ஏசுபிரான் என்பதுகூட அறியாத மூடர்கள் அவர்கள்.

இஸ்ரேல் லெபனானைத் தாக்கி அதன் பகுதிகளைக் கைப்பற்றி இருந்தபோது அதனை மீட்க லெபனானின் இளைஞர்கள் 1980ன் பிற்பாதியில் ஏற்படுத்திய அமைப்பே ஹிஸ்புல்லா. இஸ்ரேலியப் படைகளைக் கடுமையாகத் தாக்கி அதனை லெபனானை விட்டு ஓடஓட விரட்டிய பெருமை ஹிஸ்புல்லாவுக்கே சேரும்.

இன்றைக்கு அதன் வளர்ச்சிக்கு லெபனானிய மக்களே பெரிதும் காரணமாக இருக்கின்றனர். அதற்கு முக்கிய காரணம் லெபனானிய ராணுவத்தினை விட சக்தி வாய்ந்தது ஹிஸ்புல்லா. தவிர ஹிஸ்புல்லாவின் ஆதரவு இல்லாமல் லெபனானிய அரசாங்கமே இல்லை. மக்களைக் காப்பதில் அரசு ராணுவத்தை விட ஹிஸ்புல்லா அமைப்பே முனைப்பாக செயல்படுகிறது! விமானப்படை, கப்பற்படை போன்றவை இல்லா லெபனானிய நாட்டுக்கு ஹிஸ்புல்லாவின் ஆதரவு கண்டிப்பாக தேவையே. சந்தனக் கடத்தல் வீரப்பன் போல அந்த நாட்டில் புகழ்பெற்ற ஹிஸ்புல்லா பொதுமக்களுக்கு பல உதவிகளையும் சேவைகளையும் செய்து வருகிறது. இதனால் அதற்கு அங்கே பொதுமக்கள் மத்தியில் நல்ல செல்வாக்கு.

ஹிஸ்புல்லா இயக்கத்திற்கு சிரியா மற்றும் ஈரான் ஆகிவற்றிடம் இருந்து வெடிப்பொருட்கள், ஆயுதங்கள் மற்ற உதவிகள் ரகசியமாக வருவதாக சொல்லப்படுகிறது. இது உண்மையாக இருக்கலாம்.

இஸ்ரேலின் கொலைவெறித் தாக்குதலை நியாயப்படுத்தி அமெரிக்காவும் பிரிட்டனும் இன்னமும் பேசிக் கொண்டிருக்கின்றன. இப்படி அவை ஆதரித்துக் கொண்டிருப்பதால் போர் இன்னும் மோசமான நிலையை அடையும். சிரியா, ஈரான் போன்றவை வெளிப்படையாகவே ஆதரவு அளித்து வருகின்றன. ஈரானிய மாணவர் படை ஒன்று லெபனானுக்கு ஆதரவாக போருக்குக் கிளம்பிச் சென்றுள்ளது. மலேசியா, சவுதிஆரேபியா போன்றவை கூட ஆதரவுக் குரல் கொடுத்துவிட்டன. போர் இன்னும் முடிவடையாமல் தொடர்ந்து கொண்டே இருந்தால் இஸ்லாமிய நாடுகள் வெளிப்படையாக ஆதரவு அளிப்பதோடு போருக்காக படைகளையும் அனுப்பி வைத்துவிடும். அவ்வாறான சூழ்நிலை ஏற்பட்டால் அமெரிக்கா, பிரிட்டன் போன்றவை களத்தில் குதிக்கும். பின்னர் என்ன உலகப்போர்தான். அதற்குத்தான் அமெரிக்காவும் பிரிட்டனும் ஆசைப்படுகின்றனவா?

ஒரு திரில் கலந்த சண்டை படத்தின் கதைபோல இருக்கிறது இது. ஒரு வீரரை ஹமாஸ் தீவிரவாதிகள் கடத்தி விடுகின்றனர். அதற்குப் பதிலடியாக காசா மீது ஆக்கிரமிப்பும் போர் தொடுப்பும் செய்கிறது இஸ்ரேல். கோபமுற்ற ஹிஸ்புல்லா இஸ்ரேலின் இரண்டு வீரர்களைக் கடத்தி விடுகிறது. சினம் கொண்ட இஸ்ரேல் பாலஸ்தீனத்தை மட்டுமல்லாது லெபனானையும் குண்டுமழை பொழிந்து தரைமட்டமாக்குகிறது. அமெரிக்காவில் குண்டுபோட்ட பின்லேடனை தீவிரவாதி என்று சொல்லும் இந்த போக்கிரி நாடுகள் இப்போது தாம் செய்து கொண்டிருப்பது என்னவென்று நினைக்கின்றன? தமது இரு ராணுவ வீரர்களையும் விடுவிக்கும் வரை ஓயமாட்டேன் என்கிறது இஸ்ரேல். இவ்வளவு நாள் போட்ட குண்டுகளில் அந்த இரு வீரர்களும் சேர்ந்து மாண்டிருக்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?

எனக்குத் தெரிந்து பன்னெடுங்காலமாக பாலஸ்தீனத்தை மூர்க்கமாகத் தாக்கிவரும் நாடு இஸ்ரேல். தன்னைக் காக்க இஸ்ரேல் போராடுகிறது என்று சொல்லும் அறிவிலிகள் அதன் ஆரம்பகால நடவடிக்கைகள் தெரியாதவர்கள் என்றுதான் சொல்வேன்.

உலகின் அனைத்து நாடுகளும் அணுவாயுதம் கலைந்து அமைதிப் பேச்சு வார்த்தைகளின் மூலம் சாதிக்க வேண்டும் என்று சொல்லி வரும் அமெரிக்காவும் பிரிட்டனும், இஸ்ரேல் என்ற கொடூர நாட்டுக்கு ஆதரவு அளிப்பது வெட்கக் கேடான விஷயம். இதுவரை இஸ்ரேலியத் தாக்குதலினால் 350க்கும் மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்களும் 50க்கும் மேற்பட்ட ஒன்று மறியா அப்பாவிக் குழந்தைகளும் கொல்லப்பட்டுள்ளனர். ஹிஸ்புல்லாவின் பதில் தாக்குதலில் 50க்கும் மேற்பட்ட இஸ்ரேலிய மக்கள் கொல்லப்பட்டதாக செய்தி ஊடகங்கள் சொல்கின்றன. ஆனால் உண்மையில் உயிருடற் சேதம் அதிகமென்றும் இஸ்ரேல் அதனை மூடி மறைப்பதாகவும் சொல்லப்படுகிறது.

எளியவனை வலியவன் தாக்கி அழிப்பது என்பது ஒன்றும் பெரிய வீரமாகாது. நம்மைவிட பெரியவனை மோதி மிதிப்பது தான் சிறந்த வீரனுக்கு அழகு. ஆனால் இப்படிப்பட்ட ஒரு கோழைத்தனமான போரை நடத்துவது என்பது இஸ்ரேல் மற்றும் அதன் நேச நாடான அமெரிக்காவுக்கு கைவந்த கலை. ஈராக், ஆப்கானிஸ்தான் என எல்லாவற்றையும் மிரட்டிப் பார்த்த அமெரிக்காவால் வட கொரியாவை ஒன்றும் செய்ய இயலவில்லை. வட கொரியாவைத் தாக்கினால் அது திருப்பித் தாக்கும். வடகொரியாவுக்கு ஆதரவாக உலகிலேயே பெரிய ராணுவத்தினைக் கொண்டிருக்கும் சீனா களத்தில் குதிக்கும். அமெரிக்கா முற்றாக உலக வரைபடத்தில் இருந்து துடைத் தொழிக்கப்படும் என்று தெரிந்தே தான் வடகொரியா பிரச்னையில் அடக்கி வாசிக்கிறது! ஈரான் நாடுகூட வலிமையான அணுவாயுதம் வைத்திருப்பதாக நம்பப்படுகிறது. எனவே ஈரானுடன் மோதுவதற்குக் கூட அமெரிக்கா பயப்படுகிறது என்று சொன்னால் அதுவும் உண்மையே.

லெபனானைப் பார்வையிடச் சென்ற ஐக்கிய நாட்டு அதிகாரிகளையும் கொன்று பெரும்பாவம் சேர்த்து இருக்கிறது இஸ்ரேல். இது வேண்டுமென்றே நடத்தப்பட்ட தாக்குதலாக எடுப்பார் கைப்பிள்ளை கோபி அன்னான் கூறியுள்ளார். கொல்லப்பட்டவர்களில் ஒருவர் சீனாவைச் சேர்ந்த அதிகாரி என்பதால் சீனா கடுங்கோபம் கொண்டுள்ளது. கோபி மேல் எனக்கு பயங்கர கோபம் என்றால் அது உண்மையே.

இதுவரைக்கும் இருந்த தலைமைச் செயலாளர்கள் போல் அல்லாமல் கோபி அதிகமாகவே அமெரிக்காவுக்குப் பயந்து கொண்டு அதன் முந்தானையைப் பிடித்துக் கொண்டு அலைவதாகவே எனக்குப் படுகிறது. ஈராக் விஷயத்தில் அவரின் குழந்தைத்தனமான நடவடிக்கைகளைப் பார்த்து எனக்கே சலிப்பாகிவிட்டது. கோபியின் பையன் எண்ணெயில் ஊழல் செய்தான் என்று அவர் மேலேயே ஒரு குற்றச் சாட்டைச் சுமத்தி அமெரிக்கா அவரின் பல்லைப் பிடுங்கியதால் அமைதியாகி இருக்கிறார் என்று நினைக்கிறேன்.

ஐநா, உலக நாடுகளின் பிரதமர்களைக் கூட்டி அமெரிக்காவுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுத்தால் நிலைமை சீராகிவிடும். உலக நாடுகளின் உதவியின்றி அமெரிக்கா எத்தனை நாட்கள் உயிர் வழும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

அப்பாவிப் பொது மக்களின் உயிரைக் காவுகொள்ளாமல், ஹிஸ்புல்லாவும் இஸ்ரேலும் நேருக்கு நேர் நின்று போர் புரிவதை நான் வரவேற்கிறேன். அதேசமயம், ஹிஸ்புல்லாவின் நடவடிக்கையை தீவிரவாதம் என்று சொன்னால் இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கையும் கண்டிப்பாக தீவிரவாதம் என்ற வகையில்தான் சேரும்.

- விடாது கறுப்பு ([email protected])

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com