Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruLiteratureArticle
கட்டுரை

பொய்யர்தம் ‘மெய்’யும் அஞ்சேன் - திருவாசக மோசடி
ஞாநி


தமிழ் நாட்டு பத்திரிகை, தொலைகாட்சி, மீடியாக்களின் புனிதப் பசுக்களில் ஒருவர் இளையராஜா.

அவர் இசை அமைத்திருக்கிற திருவாசக இசைக் கோலத்தை வேறு யார் செய்திருந்தாலும் மீடியா ஒன்று கிழித்திருக்கும் அல்லது கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டிருக்கும். ஆனால் இளையராஜாவின் திருவாசகத்துக்கு கிடைத்திருக்கும் விளம்பரம் பிரும்மாண்டமானது. கருணாநிதியும் , ஜெயலலிதாவும் அறிக்கை விட்டுப் பாராட்ட வேண்டியது மட்டுமே பாக்கி. இளையராஜாவால் கொஞ்சம் ஓட்டு கிடைக்கும் வாய்ப்பு உண்டென்றால் அதுவும் நடந்து விடும்.

ஆனால் இசை‘ஞானி’யோ ஓட்டு அரசியல், சமூகம், சாதியம் இதற்கெல்லாம் அப்பாற்பட்டவர். ஆபாசப் பாட்டு பாடுகிறவன்கள், கர்ண கடூரமான இசைக்கு சொந்தக்காரர்கள் என்றெல்லாம் இங்கே சனாதனிகளால் பழிக்கப்படுகிற ராக் கலைஞர்கள் எல்லாம் ஜி-8 பணக்கார நாடுகள் ஆப்பிரிக்க நாடுகளின் கடனை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் உலகெங்கும் இசைப் போராட்டம் நடத்துகிற வேளையில் , இளையராஜா தனக்கு ஈசன் கொடுத்திருக்கும் பிறப்புகளில் இதுவே கடைசியான ஏழாவது பிறப்பு என்று உண்ர்ந்துவிட்ட உச்சமான ஆன்மிக நிலையில் சஞ்சரிப்பவர். அதனால்தான் தனது முந்தைய அவதார கால சகோதரர்களுக்கு திண்ணியத்தில் மலம் ஊட்டப்பட்டால், அவர் சலனப்படுவதில்லை. அநேகமாக இது அவர்களுடைய மூன்றாவது ஜன்மமாக இருக்கலாம். ஏழாவது பிறப்பை அடைகிறபோது அவர்களுக்கும் ஈசன் தனக்கருளியது போல இம்மையிலும் மறுமையிலும் பேரானந்த வாழ்க்கையை அருளக் கூடும்.

Illaiyaraja with Richard and laslo இப்படிப்பட்ட ஆன்மிக மனம் ஈசன் கட்டளையால் ஒரு கருவியாகி ஒரு கோடியே பத்து லட்சம் ரூபாய் செலவில் அமைத்திருக்கிற திருவாசக இசை பற்றி பார்ப்போம். திருவாசகத்துக்கு அவர் இசை அமைத்திருப்பதாக சொல்லியிருப்பது முதல் பொய். அதை அவரே தன்னையறியாமல் உடைக்கிறார். இசைத் தகடின் கடைசியான ஆறாவது பாடல் ‘புற்றில் வாழ் அரவும் அஞ்சேன், பொய்யர்தம் மெய்யும் அஞ்சேன்’.

முதலில் சிம்பனி குழு ஒரு மெட்டை இசைக்கிறது. உடனே இளையராஜாவின் குரல் : “அடடே என்ன இது. இதுதான் சிம்பனி ஆர்க்கெஸ்ட்ராவா? ஆங். அடேயப்பா.” மறுபடியும் மெட்டு. இளையராஜா: “ஆஹா, ரொம்ப நல்லா இருக்கே , இதோட நம்ம மாணிக்க வாசகரைப் பாடினா எப்படி இருக்கும். எப்படி இந்த டியூன்?” மறுபடியும் மெட்டு. இளையராஜா உரக்க சிந்திக்கிறார்: “சரி இதுக்கு எந்தப் பாட்டு சரியா வரும்? ஆங். இதைப் பார்ப்போம்...” பாடுகிறார் : “முக்தி நெறி அறியாத மூர்க்கரை... அய்யோ பிரிச்சு பிரிச்சு வருதே வார்த்தையெல்லாம். இது சரியா இருக்கும்.” மறுபடியும் பாடுகிறார். “புற்றில் வாழ் அரவும் அஞ்சேன்”. அப்படியே தொடர்கிறார். மெட்டில் பாட்டு உட்கார்ந்துவிட்டது.

அதாவது பாட்டுக்கு மெட்டு அல்ல. சினிமா மாதிரியே மெட்டுக்குதான் பாட்டு. இளையராஜா ஏற்கனவே போட்டு வைத்திருந்த மெட்டுக்கு எந்தெந்த திருவாசக வரிகள் இயைந்து வருமோ அதை நிரப்பிப் போட்டிருக்கிறார். இதனால் அருட்திரு கஸ்பாருக்கு ஏற்படும் தர்ம சங்கடம் பற்றிக் கடைசியில் பார்ப்போம்.

ஆக இசைஞானி திருவாசகத்துக்கு இசை அமைக்கவில்லை. இசைக்கு திருவாசகத்தை அமைத்திருக்கிறார். அப்படி இல்லை என்றால் ஏன் அப்படி சொல்ல வேண்டும்? இது என்ன பொய்யர் தம் மெய்யா? மெய்யர் தம் பொய்யா? பொய்யர் தம் பொய்யேவா? எல்லாம் சும்மா ஒரு மார்க்கெட்டிங்தான் என்றால் அதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. திருவாசகம் நீண்ட நாட்கள் முன்பே மார்க்கெட்டிங் ஸ்லோகனுடந்தான் வலம் வந்திருக்கிறது. “திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார்” என்பது தமிழ் மரபில் பழமையான ஒரு மார்க்கெட்டிங் ஸ்லோகன் அல்லவா?

மெட்டுக்குப் பாட்டோ, பாட்டுக்கு மெட்டோ, எப்படியோ இருந்துவிட்டு போகட்டும். எப்படி இருக்கிறது இந்த சிம்பனி ? இல்லை இது சிம்பனி இல்லை; சிம்பனி ஆர்க்கெஸ்ட்ரா வாசித்தது என்று ராஜாவே சொல்லியதாக சுஜாதா இந்த சி.டி யின் மீடியா பார்ட்னரான விகடனில் எழுதியிருக்கிறார். (மீடியா பார்ட்னர் என்றால் தனியே விளம்பரப் பக்கம் தவிர, எடிட்டோரியல் பக்கத்திலேயே விளம்பரம் செய்து உதவுபவர் என்று அர்த்தம்).

இது ஆரட்டோரியோ. (oratorio: musical work for orchestra and voices on a sacred theme என்றும் சுஜாதா விளக்கியிருக்கிறார்.) புனிதமான ஒரு கருத்தை இசைக்குழுவும் குரல்களும் இசைப்பதற்க்கு இயற்றினால் அது ஆரட்டோரியோ என்ற இந்த விளக்கப்படி எல்.ஆர். ஈஸ்வரி, வீரமணி வகையறாக்களின் அம்மன், அய்யப்பன், பிள்ளையார், நாகூர் ஹனீபாவின் கையேந்தல் எல்லாமே ஆரட்டோரியோ என்றுதான் என் பகுத்தறிவு மண்டைக்குத் தோன்றுகிறது. அப்படியானால் இசைஞானியின் தனித்துவ சாதனை இதில் என்ன ? சி.டி உறையில் கிளாசிக்கல் க்ராஸ் ஓவர் என்று போட்டிருக்கிறது.

அண்மைக்கால வர்த்தக கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் சினிமாக்களில் க்ராஸ் ஓவர் படம் என்றால் இரண்டு அர்த்தம். இதுவரை மசாலா படம் எடுத்த இயக்குநர் இப்போது கலைப்படம் எடுக்கிறார். இன்னொரு அர்த்தம் வெளி நாட்டு வாழ்க்கையில் இருக்கும் இந்தியர்கள் பற்றிய கதையை எடுக்கிறார்.

இசையில் கிளாசிகல் கிராஸ் ஓவர் என்றால் என்ன பொருள்? இந்த ஊரின் சாஸ்த்ரீய சங்கீதமும் மேலை நாட்டு சாஸ்திரீய சங்கீதமும் ஒன்றொடொன்று குறுக்கிட்டுக் கலப்பதாகும். இந்த மாதிரி கலப்புகளையும் ஏற்கனவே பலர் செய்திருக்கிறார்கள். அவர்கள் யாரும் திருவாசகத்தை எடுக்கவில்லை. ராஜா அதில் கையை வெச்சிட்டாரு. அதுதான் வித்தியாசம்.

இந்திய செவ்வியல் மரபில் மெலடி எனப்படும் மெட்டுக்கு முக்கியத்துவம் உள்ளது. மேற்கத்திய செவ்வியல் மரபில் ஹார்மனி எனப்படும் ஒத்திசைவுக்கு முக்கியத்துவம் தருகிறார்கள். இரண்டையும் இணைப்பதாகக் கொள்ளலாம். இதையும் பலர் முன்பே செய்திருக்கிறார்கள். அதில் முக்கியமானவர் மறைந்த இசைமேதை எம்.பி.சீனிவாசன். இவர் ராஜாவின் அண்ணன் பாவலர் வரதராசனின் தோழர். இசைக் கலைஞர்களின் உரிமைக்காகவும் சினிமா தொழிலாளர்களின் உரிமைக்காகவும் தொழிற்சங்கம் அமைத்து பெப்சியை உருவாக்கிய முன்னோடி. அவர் என்ன செய்தார் என்பதை பின்னால் பார்க்கலாம்.

ராஜாவின் ஆறு திருவாசகப் பாடல்களில் கேட்க இனிமையாக இருப்பவை இரண்டுதான். ‘முத்து நற்றாமம்’ என்ற ஐந்தாம் பாட்டும், ‘புற்றில் வாழ்’ என்ற ஆறாம் பாட்டும்தான். முதல் பாட்டு ‘பூவார் சென்னி மன்ன’னுக்கு மூன்றாவது இடம் தரலாம். மீதி மூன்றும் மெலடி, ஹார்மனி இரண்டும் தடம் புரண்டவை. பொதுவாகவே எல்லா பாடல்களிலும் மிக்சிங் எனப்படும் குரல் - இசைக் கலப்பு மோசமாக இருக்கிறது. ஏற்கனவே புரியக் கடினமான சொற்களை அழுத்தும் விதத்தில் இசையின் இரைச்சல் அதிகம்.

சுஜாதா பரிந்துரைத்தபடிதான் காசு கொடுத்து சிடி வாங்கி, நல்ல சிஸ்டத்தில், தனிமையில், இரவில், இரண்டு நாள் கழித்து மறுபடியும், பாடலகளைக் கேட்டேன். இந்த சி.டியை எப்படிக் கேட்டாலும், மனசாட்சிப்படி உண்மையை சொல்ல விரும்பும் யாரும் சொல்லுவார்கள். இதை விட அருமையான இசையை, மெட்டை, பாடல்களை இளையராஜா சினிமாவில் ஏற்கனவே வழங்கியிருக்கிறார். இதுவரை அவர் சினிமாவில் செய்த எந்த இசைச்சாதனையையும் இது கடந்து விடவும் இல்லை. கடக்கப்போவதும் இல்லை. நூறாண்டுகள் கழித்து இது நிலைக்கும் என்பதெல்லாம் சுத்த புருடா.

கிளாசிக்கல் கிராஸ் ஒவராக இருவர் செய்திருக்கும் இரண்டு மட்டும் இங்கே பார்க்கலாம். எம்.பி. சீனிவாசன் உருவாக்கிய நூற்றுக்கணக்கான சேர்திசைப் பாடல்கள் எல்லாமே மெலடியும் ஹார்மனியும் இயைந்தவைதான். சுத்த தன்யாசி ராகத்தில் சேர்ந்திசைக் குழு பாடியிருக்கும் சொற்களற்ற மெட்டும், பாரதிதாசன் பாடலான ‘அம்மா உந்தன் கைவளையாய்’ என்ற கவிதையை சேர்ந்திசையில் கருவிகளே இல்லாமல் முற்றிலும் மனிதக் குரல்களைக் கொண்டே எம்.பி.எஸ். அமைத்திருக்கும் இசைக் கோலமும் கேட்டார் பிணிக்கும் தகையவை. கர்நாடக சங்கீதத்தில் அமைந்த கிருதிகளை மேலை ஆர்க்கெஸ்ட்டிரா முறையில் வயலின், டபிள் பாஸ், செல்லோ உதவியுடன் ‘ரெசோனன்ஸ்’ என்ற தலைப்பில் வி.எஸ். நரசிம்மன் அமைத்திருக்கும் இசைக்கோலம் இன்னொரு சாதனை.

இசைப் புலமையும், அறிவுக்கூர்மையும் உடையவரான இளையராஜவுக்கே நிச்சயமாக தன்னுடைய திருவாசக இசைக் கோலம் சாதாரணமானது என்பது தெரிந்திருக்காமல் இருக்க வாய்ப்பில்லை. திருவாசகத்தை இசைக்க ஒரு சிம்பனி ஆர்க்கெஸ்ட்ரா தேவையில்லை. சென்னையில் சினிமாவுக்கு வாசிக்கும் திறமையான இசைக் கலைஞர்களே போதும் என்பதும் தெரிந்திருக்கும். ஆனால் ஹங்கேரியின் சிம்பனி ஆர்க்கெஸ்ட்டிராவைப் பயன்படுத்தி ஒரு கோடிக்கு மேல் செலவு செய்து இப்படி ஒரு சாதாரண விஷயத்தை செய்ய வேண்டிய அவசியம் என்ன?

அவருடைய ஈகோதான். சினிமா இசைத்துறை தன்னைக் கடந்து போய்விட்டதை அவரால் ஜீரணிக்க முடியவில்லை. அதில் அவர் கோலோச்சிய காலத்திலும் அவரது ஈகோ மற்ற திறமையாளர்களை அங்கீகரித்ததில்லை. ஹவ் டு நேம் இட் ஆல்பத்தில் அவருடைய அருமையான இசைக் கோர்வையை பல மடங்கு சிறப்பாக்கியதில் அதை வயலினில் வாசித்த வி.எஸ்.நரசிம்மனின் பங்கு முக்கியமானது. ஆனால் நரசிம்மனை அவர் பகிரங்கமாக அதற்காக பாராட்டிப் பேசியதில்லை. புன்னகை மன்னன் படத்தில் காதல் தீம் இசையை இளையராஜா இயற்ற அதை கம்ப்யூட்டர் சீக்வென்ஸர் முறையை முதன் முதலாக பயன்படுத்தி வாசித்த கலைஞர் திலீப் என்கிற ஏ.ஆர். ரஹ்மான் என்று செய்திகள் வெளியானபோதும் ராஜா அதை மறுத்ததும் இல்லை. ஏற்றதும் இல்லை. இப்படிப்பட்ட விஷயங்களைப் பற்றி அவர் பொது வெளியில் பேசுவதில்லை.

ஏ.ஆர் ரஹ்மான் இசையமைப்பாளரானதும் முதல் பட கேசட் உறையிலேயே கோரஸ் பாடகர்கள் பெயர் முதல், புல்லாங்குழல், டிரம்ஸ், கிடார் என்று முக்கிய கருவிக் கலைஞர்கள் பெயர்கள் வரை வெளியிட தொடங்கினார். பல ஆண்டுகள் கழித்துதான் ராஜாவின் கேசட் உறையில் வேறு வழியில்லாமல் இந்த மாற்றம் வந்தது. ஏராளமான புகழ் வந்த பிறகும் ஈகோவை கை விட முடியாமல் இருக்கும் மன நிலைதான் சாமியார் இமேஜை உருவாக்கி, ஆன்மீகம் என்ற பெயரில் தத்துவ உளறல்களைப் புத்தகமாக்கி, ராஜாவைப் புதுப் புது உத்திகளை நோக்கி அலைய வைக்கிறது. சினிமா இசையில் ராமநாதனை விஸ்வநாதனும், விஸ்வநாதனை இளையராஜாவும், இளையராஜாவை ரஹ்மானும் கடந்து போய்க்கொண்டே இருக்கிறார்கள் என்பது சரித்திர உண்மை. கால ஓட்டத்தில் இது இயல்பானது என்பதை விஸ்வநாதன் உணர்ந்து ஏற்றதுபோல ராஜாவால் முடியவில்லை என்பதற்கு தொடர்ந்து பல அடையாளங்கள் இருக்கின்றன. அதில் இன்னொன்று இந்த திருவாசகம்.

மீடியா இப்போதும் கேட்க மறந்த, தயங்குகிற கேள்வி இங்கே முக்கியமானது. இளையராஜாவுக்கு மேஸ்ட்ரோ பட்டம் வரக் காரணமாயிருந்த அவர் இயற்றிய சிம்பனி இசை பத்தாண்டுகளுக்கு மேலாகியும் ஏன் இன்னமும் வெளியிடப்படாமலே இருக்கிறது? நிஜமாகவே அது இந்த திருவாசகத்தை விட சிறப்பான இசை முயற்சியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். ஏனென்றால் அது படைப்பாற்றலின் உச்சத்தில் இருந்தபோது அவர் செய்த பணி. சினிமா துறை கை நழுவிப் போனபிறகு ஈகோவின் தள்ளாட்டத்தில் செய்த திருவாசகம் அல்ல.

இப்போது இந்த திருவாசக இசைக் கோவையின் நோக்கம்தான் என்ன? பக்தியைப் பரப்புவதா? ஓதுவோரின் எளிய இசையில் கேட்கும்போது கிடைக்கும் உருக்கம் கூட இதில் இல்லை. கடினமான் வரிகளை இசை இன்னமும் கடினமாக்குகிறது. பக்தி நோக்கம் அல்ல என்றால் வேறு எதற்காக திருவாசகம் ? இலக்கிய மாகவா? அப்படியானால் பொழிப்புரையையும் எளிய தமிழில் கூடவே எழுதி இசையமைக்க வேண்டும்.

“புற்றில் வாழ் அரவும் அஞ்சேன்” என்ற மெட்டுக்கு, “என்னில் நீ உறையும் அன்பே” என்று ஏதோ ஒரு பாட்டு எழுதிப் போட்டாலும் விற்கும்தானே?

விற்பதற்கான உத்திகளில் , விற்பனைக்கான கவன ஈர்ப்புக்கான உத்திகளில் திருவாசகம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. உலகளாவிய தமிழர்களில் இன்று தமிழ்ப் புத்தகங்கள், சினிமா சி.டிக்கள் இவற்றின் விற்பனையில் கணிசமான பணம் கிடைப்பது புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களிடமிருந்துதான் அவர்கள் மத்தியில் ஆழமாக வேரூன்றியிருக்கும் சைவப் பற்றை வியாபாரத்துக்கு பயன்படுத்த திருவாசகம் சிறந்த வழி என்பதில் சந்தேகம் இல்லை. திருவாசகத்துக்கு வைகோ கூட உருகியதும் ஈழத்தின் மீதுள்ள அன்பா? ஈசனின் மீதுள்ள அன்பா என்று ஆராயலாம்.

சைவ பக்தி , வியாபாரம் இரண்டிலும் ஆர்வம் அற்றவர்களாக இருக்க வேண்டும் என்று பொதுவாக எதிர்பார்க்கக்கூடிய கத்தோலிக்க கிறித்துவ பாதிரியார்கள் ஏன் இந்த திருவாசக இசையை வெளியிடுவதில் தீவிரப் பங்கேற்றார்கள்? கத்தோலிக்கப் பாதிரியும் தமிழ் மைய அமைப்பாளருமான அருட்திரு ஜெகத் கஸ்பார் ‘புதிய பார்வை’ இதழுக்கு அளித்த பேட்டியில் சொல்லுகிறார்: “திருவாசகம் ஓர் அற்புதமான பக்திப் பனுவல். நான் மாணவனாக இருந்தபோதே படித்துப் படித்து உருகிப் போயிருக்கிறேன். அதன் தத்துவ தரிசனைத்தை சிறு பிராயத்திலேயே உணர்ந்தவன். ஏகன்/அநேகன், அன்பே உண்மையான் வழிபாடு என்பன போன்ற மாணிக்க வாசகரின் தத்துவ வெளிப்பாடுகள் மதங்களை கடந்து நேசிக்கப்படுபவை. எனக்கு மிகவும் பிடித்த மறையாக திருவாசகத்தை பார்க்கிறேன்” என்று சொல்லியிருக்கிறார்.

அதெல்லாம் கஸ்பார் அறிந்துணர்ந்த திருவாசகம் நம்க்கு கேட்கக் கிடத்திருக்கும் திருவாசகத்தில் என்ன இருக்கிறது என்று பார்ப்போமா?

அதில் ஆறாவது பாட்டிலே ஆரம்பத்திலேயே மாணிக்க வாசகர் சொல்லுகிறார்: “கற்றை வார் சடை எம் அண்ணல் கண்ணுதல் பாத நண்ணி , மற்றும் ஓர் தெய்வம் தன்னை உண்டென நினைந்தெம் பெம்மாற் கற்றில்லாதவரைக் கண்டால், அம்ம! நாம் அஞ்சும் ஆறே!”

அதாவது சிவனை தலை முதல் பாதம் வரை கண்டபின்னும் இன்னொரு தெயவம் உண்டென்று சொல்லுகிற அறிவில்லாதவனைப் பார்த்தால் நிச்சயம் பயப்பட வேண்டும். பாம்புக்கு பயப்பட வேண்டாம். பொய்யர் சொல்லும் மெய்க்கும் பயப்பட வேண்டாம் எண்கிறது இந்தப் பாடல்.

சிவனை அடி முதல் நுனி வரை இன்னும் காணாதவர்கள்தான் ஏசுவைத் தொழுது கொண்டிருக்க முடியும் என்றுதானே இதற்கு பொருள். கண்டபின்னும் தொழுதால் முட்டாள்களல்லவோ. மதங்களின் இயல்பே , ஒன்றை மற்றொன்று பழித்து அவரவர் அடியார் கூட்டத்துக்கு வெறியூட்டுவதுதான். மாணிக்கவாசகரும் அப்படித்தான் பாடியிருக்கிறார். அவருக்கு கடவுள் ஒருவர்தான். ஆனால் அவர் சிவன்தான்.

முன்னரே பாடல் வரிகளை கவனித்திருந்தால் இளையராஜாவும் அதை தவிர்த்திருப்பாராய் இருக்கும். ஆனால் அதுவும் முடியாது. மெட்டுக்குப் பொருந்தி வரும் வரிகளைத்தானெ அவர் எடுத்துக் கொண்டிருக்கிறார்.

“கத்தோலிக்க நண்பர்கள் மையத்தையும் பாஷை தெரியாத பில்ஹார்மனிக் குழுவையும், நியூயார்க் குரல்களையும் மாணிக்கவாசகர் என்னும் மேதையையும் ஒருங்கிணைத்தது” யார்?

ஈசன் தான் என்கிறார் இளையராஜா. பொய்யர்தம் மெய்களில் இதுவும் ஒன்று. காசேதான் கடவுளடா.

இந்த கடவுள் திருப்பணிக்கு காசு அருளியிருப்போரில் முக்கியமானவர்கள் அப்பாவிப் பொதுமக்களாகிய நாம்தான். பொதுத் துறை அரசு நிறுவனமான ஓ.என்.ஜி.சி, ஆயில் அண்ட் நேச்சுரல் காஸ் கமிஷன் தான் இந்த இசை வெளியீட்டுக்கு ஸ்பான்சர் என்று போட்டிருக்கிறது. எத்தனை லட்சம் கொடுத்தார்கள் என்று பகிரங்கப் படுத்தவில்லை.

எதற்காக அரசுப் பணத்தை இந்த திருவாசக வியாபாரத்துக்கு தர வேண்டும்? இதே போல இஸ்லாம், கிறித்துவ பக்திப்பாடல்கள் வெளியிடவும், பெரியார், அம்பேத்கார் பற்றி பாட்டு ஆல்பம் போடவும் தருவார்களா?

திருவாசக மோசடிகளில் இப்படி அரசுப் பணம் வீணாக்கப்படுவது ஒன்றும் ஆச்சரியமில்லை. திருவாசகத்தை அருளிய மாணிக்கவாசகரே அரசுப் பணத்தை மோசடி செய்தவர்தான். அவர் அமைச்சராக இருந்தபோது ராணுவத்துக்கு குதிரை வாங்கத் தந்த காசை கடவுள் பணிக்கு செலவிட்டுவிட்டு சிக்கிக் கொண்டார். ஊழலுக்கு உடந்தையாக இருந்தான் ஈசன். அரசன் கண்ணுக்கு நரிகள் எல்லாம் குதிரைகளாகத் தெரிய செய்தான்.

இளையராஜாவும் சிம்பனி குழுவைக் கொண்டு செய்த நரிப் பாட்டை பரிப் பாட்டாக நமக்குக் காட்டுகிறார். ஆனால் ஈசன் காப்பாற்ற வரவில்லை. வரமாட்டான்.

‘மெய்’ எந்த ரூபத்தில் வந்தாலும் சரி. திருவாசகம், நாலாயிர திவ்யப்பிரபந்தம், சிலப்பதிகாரம் (அதற்க்கெல்லாம் யாராவது கோடிக்கணக்கில் இளையராஜாவுக்குக் கொடுத்து உதவ வேண்டுமென்று சுஜாதா வேண்டுகோள் விடுத்திருக்கிறார்!)

பொய்யர் தம் ‘மெய்’யை அஞ்சோம்.(இது தீம்தரிகிட - ஜூலை 15-ல் வெளியான கட்டுரை) 
நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by india intellect
Best viewed in Windows 2000/XP