Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கட்டுரை

ஜெயமோகனின் சிறுகதை மீதான விமர்சனம்: இட்லருக்கும் இரங்க வேண்டுமோ?
க. முருகேசன்


பாசிசம் மற்றும் பிற்போக்கின் நவீன இலக்கிய அவதாரம்தான் ஜெயமோகன் என்பதை 1991லேயே அடையாளம் காட்டிய விமர்சனக் கட்டுரை.

சுபமங்களா எனும் பத்திரிக்கையின் ஏப்ரல் 1991 இதழில் ஜெயமோகன் என்பவர் எழுதிய ஒரு சிறுகதை வெளியாகியிருக்கிறது. அதன் சுருக்கம் வருமாறு:

பல்கலைக் கழக விஞ்ஞான கருத்தரங்கில் நுழைய முனைந்த ஒரு வயதான நம்பூதிரியை நெட்டித் தள்ளுகிறான் வாயிற்காவலன். தடுமாறிக் கீழே விழுந்தபோதிலும் ஏதும் நடவாதது போல எழுந்து நடந்த அந்த நம்பூதிரியின் கம்பீரத்தில் மனதைப் பறிகொடுத்து அவரிடம் பேச்சுக் கொடுக்கிறார் ஜெயமோகன்.

விஞ்ஞானிகள் எனப்படுவோர் தன்னையும் தன் தத்துவத்தையும் உதாசீனம் செய்வதாகவும், அதற்குக் காரணம் அவர்களுக்கெல்லாம் மூளை இல்லை என்றும், பரிசுத்தமான ஆரிய மூளையை மனிதகுலம் இழந்து வருவதுதான் இதற்கெல்லாம் அடிப்படை என்றும் கூறுகிறார் நம்பூதிரி. இந்த உண்மையை உணர்ந்து இனக்கலப்பை எதிர்த்த இட்லரைக் கொன்று விட்டார்களே என்று வருத்தப்படுகிறார். பிறகு தனது தத்துவத்தை விளக்குகிறார்.

“பிரபஞ்ச செயல்கள் அனைத்துமே குறிப்பிட்ட கால இடைவெளியில் மீண்டும் மீண்டும் நிகழ்கின்றன. அந்தக் கால இடைவெளியானது மாறாதது... இதை நமது முன்னோர்கள் ‘ஏகம்’ என்றும் ‘பிரணவம்’ என்றும் அழைத்தனர். காலப் பெருவெளியில் நமது பிரக்ஞை மட்டும் சுழன்று சுழன்று வருகிறது. பழைய ஞாபகங்கள் நம் அடிமனதில் தேங்கியுள்ளன. தியானத்தால் அதை மீட்க முடியும். நீட்சேக்கு நிகழ்ந்ததும் அதுதான்.”

இந்தச் சுழற்சித் தத்துவம் தவறு என்று ஐன்ஸ்டீனை ஆதாரம் காட்டி நம்பூதிரியிடம் வாதாடுகிறார் ஜெயமோகன். “பிரம்ம சங்கியாவை (சுழற்சித் தத்துவத்தை) தவறு என்று சொல்ல நீ யாரடா? உன் ஐன்ஸ்டீன் என் மயிருக்குச் சமம். பார்க்கிறேன் அதையும்” என்று சவால் விட்டுவிட்டுப் போகிறார் நம்பூதிரி. ஒரே மாதத்தில் ஐன்ஸ்டீனைப் படித்து முடித்துவிட்டு மீண்டும் வருகிறார். ஐன்ஸ்டீனின் தத்துவமும் சுழற்சித் தத்துவமும் ஒன்று தான் என்றும் ஐன்ஸ்டீனும் ஆரிய இனத்தைச் சேர்ந்தவனாகத்தான் இருக்க வேண்டும் என்றும் விளக்குகிறார்.

எரிச்சலடைந்த ஜெயமோகன் அணுக் கொள்கையை விளக்கி மீண்டும் நம்பூதிரியை மறுக்கிறார். ஒரே மாதத்தில் அதையும் முடித்துவிட்டு வந்து அதுவும் சுழற்சித் தத்துவத்தில் அடங்குவதாக மகிழ்ச்சியுடன் விளக்குகிறார் நம்பூதிரி. ஆத்திரம் கொண்ட ஜெயமோகன் அவரை நெட்டித் தள்ளித் திட்டி அனுப்புகிறார்.

இதன்பிறகுதான் துவங்குகிறது ஜெயமோகனின் உள்மனப் போராட்டம். “என் தந்தைக்கு நிகரான வயோதிகரைப் புரட்டித் தள்ளியிருக்கிறேன். ஒரு வகையில் கபடு சூதற்ற குழந்தை அவர். மாபெரும் அறிவாளி... நான் ஏன் அவரிடம் இரக்கமே காட்டவில்லை? ஒரு சிறு திசை திரும்பல் மூலம் என்னுடைய லட்சியங்கள் கோட்பாடுகள் அனைத்தும் பைத்தியக்காரத்தனமாக ஆகிவிடலாம் என்ற அச்சம்தான் காரணமோ?” என்று அலைபாய்கிறார். பிறகு நீண்ட நாட்களுக்குப் பின் மருந்தும் மலமும் நாறும் ஆஸ்பத்திரியல் கிழிந்த பாயில் கிடக்கும் நம்பூதிரியைக் கண்டு இரங்குகிறார். அவரது தத்துவம் சரியானதென்று நிரூபிக்கப்பட்டு விட்டதாகவும் தான் அவரது சீடனாகிவிட்டதாகவும் பொய்சொல்லி அவரைத் தேற்ற முனைகிறார். ஆனால் எதையும் காதில் வாங்கும் நிலையில் இல்லாத நம்பூதிரி தன் வாழ்வே வீணாகிவிட்டதாகப் பிரலாபிக்கிறார்.

பழமைக்கெதிரான போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் சக்திகளையெல்லாம் தார்மீக ரீதியாக வலுவிழக்கச் செய்து கோழைகளாக்குகிறது இந்தச் சிறுகதை. வேறெந்தப் பத்திரிக்கையிலும் இச்சிறுகதை வெளியாகியிருந்தால் கதை வேறு. கோமல் சாமிநாதன் குறிவைக்கும் ‘அறிவு ஜீவி’ வாசகர்களைக் கொஞ்சநஞ்சம் மிச்சமிருக்கும் நம்பிக்கையையும் கைவிட்டு ‘சுழற்சி’த் தத்துவத்தில் சிக்கவைக்கும் பொறிதான் இக்கதை.

நீட்சேயும், சங்கரனும் ஒருபுறமும் ஐன்ஸ்டீனும், மார்க்ஸிசமும் ஒருபுறமுமாக நின்று தத்துவ விவாதம் நடத்தியிருந்தால், அல்லது ஜெயமோகனும் நம்பூதிரியும் தத்துவ விவாதம் மட்டும் நடத்தியிருந்தால், ‘தத்துவத்தின் மதியீனம்’ என்று நம்பூதிரியின் கோட்பாட்டை வாசகர்கள் புறந்தள்ளி விட முடியும்.

ஆனால், அந்தத் தத்துவத்தைத் தாங்கி வருபவர் ஒரு வயதான நம்பூதிரியாக இருக்கும்போது, இடைவிடாது முயன்ற நம்பூதிரியின் வீழ்ச்சிக்காக ஜெயமோகனுடன் சேர்ந்து வாசகரும் அனுதாபப்படுவதைத் தவிர வேறுவழி?

ஆனால், ஜெயமோகன் அவர்களே... தத்துவம் என்பது சூத்திரங்களாகவும் கோட்பாடுகளாகவும் நின்று வானவெளியில் மோதிக் கொண்டதாக ஏதாவது வரலாறு இருக்கிறதா? எதிரியின் தத்துவம் தூக்கி வளர்த்த தாயாக, ஆளாக்கிய தந்தையாக, ஒரே தட்டில் அமர்ந்துண்ட நண்பனாக, அறிவொளி தந்த ஆசிரியராக அல்லது நெஞ்சில் நிறைந்த காதலியாகத்தானே வந்திருக்கின்றது? வந்து கொண்டுமிருக்கின்றது? பல சந்தர்ப்பங்களில் கிழிந்த பாயில் கிடக்கும் நம்பூதிரியை விட அவல நிலையில் கிடந்தும் இவர்கள் தம் போராட்டத்தை நிறுத்துவதில்லையே. சொல்லப்போனால், நம்பூதிரி அளவுக்கு அறிவாற்றலும் இல்லாத இவர்களின் வாழ்க்கை அவலத்தின் வலிமை இன்னமும் கூடுதலாயிற்றே!

என்ன செய்வது? ஹிட்லரின் அவலத்திற்காகக் கண்ணீர் சிந்துவோமா? நம்பூதிரி ஹிட்லர் இல்லை என்பதுதானே ஜெயமோகனின் வலிமை? தனக்குத்தானே தீ வைத்துக் கொள்ளும் ‘இது நம்ம ஆளு’ பார்ப்பனத் தந்தைக்காகவும், மண்டல் எதிர்ப்பு ராஜீவ் கோஸ்வாமிக்காகவும் கண்ணீர் சிந்தச் சொல்கிறார் ஜெயமோகன். பிழைத்து எழுந்த ராஜீவ் கோஸ்வாமியின் பேட்டியை ஜெயமோகன் படித்துப் பார்க்கட்டும். ஒருவேளை நம்பூதிரி பிழைத்து எழுந்தாலும் நடக்கக் கூடியது அதுதானே!

தாக்குதலில் குரூரம், பின்வாங்குதலில் நயவஞ்சகம், தோல்வியில் அவலம் இவைதானே நிரந்தரமாக ஆளும் வர்க்கங்கள் கையாளும் உத்திகள்!

தத்துவம் என்ற மட்டத்தில் மட்டும் செயல்பட்டு வாழ்வில் வர்க்கம் கடந்த மனிதாபிமானியாக யாராவது இருந்ததாகத் தகவல் உண்டா ஆதிசங்கரன் உட்பட? தனது தத்துவத்திற்கே நேர்மையற்று, “பிரபஞ்சமே மாயை, ஆனால், எனது சோறும் துணியும் மட்டும் வியவகாரிக சத்யம்” (வியவகாரிக சத்யம்: நடைமுறை உண்மை) என்று தொந்தியைத் தடவிய கூட்டத்தின் வாரிசு தானே ஜெயமோகனின் நம்பூதிரியும்?

பல்கலைக்கழக வாயிற்காவலனோ, ஜெயமோகனோ தள்ளியவுடனே சரிந்துவிடவில்லை நம்பூதிரி. தோற்றுத் தோற்று, வயது முதிர்ந்து, உடல் தளர்ந்த பின்னர்தான் படுக்கையில் விழுந்தார். ஆனால், ஜெயமோகனோ படுக்கையில் விழுந்த நம்பூதிரியைப் பார்த்த மாத்திரத்திலேயே விழுந்து விட்டார்; வாசகர்களையும் காலை இடறிவிடுகிறார்.

ஆனால், நம்பூதிரியும் அவரது சுழற்சித் தத்துவமும் படுக்கையில் விழுந்துவிடவில்லை; எல்லா தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.

நன்றி: புதிய கலாச்சாரம்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com