Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
அனுபவக் கட்டுரை

கடைசி சிகரெட்டின் கல்லறை
ஜெயபாஸ்கரன்

ஒரு காலத்தில் நான் புகைப்பிடிக்கும் பழக்கம் உடையவனாக இருந்தேன். என்னையறிந்த பலருக்கு இது கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருக்கும். தாங்கிக் கொண்டு மேலே படிக்குமாறு அவர்களைப் போன்றவர்களையும் வாசகர்களையும் கேட்டுக் கொள்கிறேன். 1990களின் தொடக்கத்தில் எனக்கு ஏற்பட்ட இந்தப் பழக்கம் ஏறக்குறைய பதினைந்து ஆண்டுகளுக்கு மேல் நீடித்தது. ஒரு நண்பரிடமிருந்து விளையாட்டாகத் தொடங்கிய இந்தப் பழக்கம் பிறகு கௌரவத்திற்குரிய ஒரு செயல் என்ற தவறான புரிதலில் வளர்ந்தது. சுற்றியிருந்த நெருக்கமான சில நண்பர்கள் புகைக்கும் பழக்கம் உடையவர்களாக இருந்ததால் எந்த நேரமும் பெட்டிக்கடையை நோக்கியே நாங்கள் நடந்து கொண்டிருந்தோம். எனினும் என் உள்ளுணர்வு இது மிகவும் இழிவான ஒரு பழக்கம் என்று என்னை எச்சரித்துக் கொண்டேயிருந்தது.

Cigarette வாய்த்துர்நாற்றம், பொருளாதார இழப்பு, உடல்நலக்கேடு, பேருந்து நிறுத்தத்தில் பெண்களின் முகச்சுளிப்பு, பேருந்து வந்துவிட்டதே என்று சிகரெட்டைப் போட்டு மிதித்தல், இப்போதுதானே பற்ற வைத்தோம் என்று பேருந்தைப் போகவிடுதல், சொந்த ஊருக்குப் போனால் ஒளிந்து ஒளிந்து புகைத்தல், யார் கண்ணிலும் படாமல் சிகரெட்டை மறைத்து வைத்தல் என்பன போன்ற எண்ணற்ற அவலங்கள் நேரினும் என்னால் புகைப் பழக்கத்தை விடவே முடியவில்லை. புகைப்பழக்கத்தினால் ஏற்படும் பல்வேறு தீமைகளைப் பக்கம் பக்கமாகத் தொடர்ந்து படித்துக் கொண்டே அதைச் செய்கிறோமே என்கிற உணர்வு என்னைப் பாடாய்ப்படுத்தியது.

இந்நிலையில் 1994ஆம் ஆண்டின் ஏதோவொரு மாதத்தில் அப்போது தினமணி கதிர் பொறுப்பாசிரியராக இருந்த திரு.திருப்பூர் கிருஷ்ணன் போதைப் பழக்க எதிர்ப்பு இதழாக ஒருவார தினமணி கதிரைத் தயாரித்தார். அதற்கு என்னிடமும் ஒரு கட்டுரை கேட்டார். நானே ஒரு புகைப்போக்கி என்பது அப்போதும் அவருக்குத் தெரியாது. ஆனால் அதையே ஒரு நல்வாய்ப்பாக எடுத்துக் கொண்டு, புகைப்பழக்கத்திற்கு எதிராக ஒரு கட்டுரை எழுதுவதென்றும் அந்தக் கட்டுரை வெளியாகிற நாளில் இருந்து சிகரெட்டைத் தொடக்கூடாது என்றும் எனக்கு நானே சபதம் செய்து கொண்டு “புகைப்பழக்கம் விடமுடியாத புலிவால் அல்ல” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதினேன். உண்மையிலேயே அந்தக் கட்டுரை மிகச் செறிவானதொரு உளவியல் கட்டுரையாக அமைந்தது. அந்தக் கட்டுரையைத் தாங்கி ஞாயிற்றுக் கிழமை காலை தினமணி கதிர் வெளிவந்து வந்துவிடுமேயானால் அதற்குபிறகு சிகரெட் பிடிக்க முடியாது, பிடிக்கவும் கூடாது என்று கருதி சனிக்கிழமை இரவே நிறைய சிகரெட்டுகளை ஊதித் தள்ளினேன்.

ஞாயிற்றுக்கிழமை தினமணிக்கதிர் என் கட்டுரையோடு வந்தது. பல நண்பர்கள் கேலியும் குத்தலுமாகப் பேசினர், பார்த்தனர். இனிமேல் நான் சிகரெட்டைத் தொடமாட்டேன் என்பதற்கான அச்சு ஆவணமே இந்தக் கட்டுரை என்று அவர்கள் அனைவரையும் நான் நம்பவைத்தேன். என் சபதம் ஒரு வார காலமே நடைமுறையில் இருந்தது. அடுத்த வார தினமணி கதிரை புகைத்தபடியேதான் பிரித்துப் படித்தேன். அதற்குப் பிறகு, பல்வேறு சந்தர்ப்பங்ககளில் பல்லைக் கடித்துக் கொண்டு ஒரு வாரம் பத்து நாள் எனும் கணக்கில் மட்டுமே என்னால் புகைக்காமல் இருக்க முடிந்தது. ஆனால் ஒவ்வொரு முறையும் புகைக்கும் போது நீ பலவீனமானவன், உறுதியற்றவன், பொய்ச் சபதக்காரன் என்று சொல்லிக் கொண்டே சிகரெட் புகை என்னிலிருந்து மேலெழுவது போல் நான் உணர்ந்தேன்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை ஒரு முன்னிரவு நேரத்தில் எனது பெரிய மகன் ஜெ.ஆ.ஜெயசூர்யா, பெட்டிக்கடைக்கு ஒடி வந்து “சிகரெட் புடிக்காதீங்கப்பா... சிகரெட் புடிச்சா மூக்குல ரத்தம் வரும்பா” என்று சொல்லி அழுதான். அவனுக்கு பின்னாலேயே ஒடிவந்த என் இளைய மகன் ஜெ.ஆ.மாமல்லன் தன் அண்ணன் அழுவதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் “டேய் சூர்யா நீ அழுவாதடா அவரு சிகரெட் புடிச்சா அவரு மூக்குலதான ரத்தம் வரும்? நீ ஏன்டா அழுவற!” என்று சொல்லி தானும் அழுதுகொண்டே தன் அண்ணனை அழைத்துக் கொண்டு போனான். இந்த நிகழ்வு என் மனதைக் கசக்கிப் பிழிந்து உலுக்கியது. எனினும் என்னால் அந்த இழிவை விட முடியவில்லை.

மக்கள் தொலைக்காட்சி தொடங்குவதற்காகத் திட்டமிட்டுக் கொண்டிருந்த வேளையில் அதன் நிறுவனர் மருத்துவர் அய்யா திரு.ச.இராமதாசு அவர்களுடன் அமர்ந்து பலமுறை அது குறித்துப் பேசவேண்டியிருந்தது. அவரைச் சந்திப்பதற்கு முன்பாகவே புகைத்துவிட்டு வாயைக் கழுவிக் கொண்டு ஏதாவது ஒரு மிட்டாயையும் மென்று விழுங்கி அவரை நெருங்காமல் சற்றுத் தள்ளியே அமர்ந்து உரையாடுவதற்கு நான் பட்டபாடு கொஞ்ச நஞ்சமல்ல. புகைப்பழக்கத்திற்கும் மதுப்பழக்கத்திற்கும் எதிராக நின்று முழு மூச்சோடும் முழு ஈடுபாட்டோடும் போராடிக் கொண்டிருக்கிற ஒரு மாபெரும் தலைவருடன் நெருக்கமாகப் பழக நேர்ந்ததற்குப் பின்னரும் சிகரெட் புகைத்துக் கொண்டிருப்பதை மிகப்பெரிய வெட்கக் கேடாகவே நான் உணர்ந்தேன். “வெண்சுருட்டு விளம்பரங்கள் நமது தெலைக்காட்சியில் இடம் பெறவே கூடாது” என்று அவர் ஒருமுறை என் முன்னிலையில் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குனருக்குக் கட்டளையிட்டார். அதே சூட்டோடு என்னைப் பார்த்து “நிகழ்ச்சிகளிலும் வெண்சுருட்டு புகைப்பது போன்ற காட்சிகள் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று சொன்னார்.

எனக்கு எங்கேயோ குத்துவது போலிருந்தது. அவர் பொதுவாகத்தான் சொல்லியிருப்பார் என்று நினைத்து அன்று இரவு முழுவதும் புகைந்து புகைந்து குமைந்து சமாதானமடைந்தேன். யாரோ அவரிடம் “செய்தியைப் பற்றவைத்துவிட்டார்கள்” என்கிற ஐயமும் எனக்கு இன்னொரு பக்கம் இருந்தது. நான் பெற்ற பிள்ளைகள், எனது உடல்நலம், எனது பொருளாதார இழப்பு, எனது உன்னதமான நண்பர்கள், நான் நேசிக்கும் ஒரு தலைவர் என் அன்பு மனைவி ஆரோக்கியமேரி அவர்களின் வருத்தம் இதற்கெல்லாம் அப்பாற்பட்ட வலிமை கொண்ட விஸ்வரூபமா நீ என்று என் கையிலிருந்த சிகரெட்டைப் பார்த்து ஒருமுறை கேட்டேன். ஆம் என்பது போல் அமைதியாக இருந்தது அது. மீள இயலாதவொரு பலவீனனாகி அதையும் பற்றவைத்தேன்.

இந்தச் சூழ்நிலையில் கோவை ஈசா யோக மையத்தில் பணியற்றும் என் இனிய நண்பர் பாலச்சந்தர் அவர்களின் வாயிலாக கோயம்புத்தூர் மாவட்டம் வெள்ளியங்கிரி மலைச்சாரலில் அமைந்துள்ள ஈசா யோகமையத்திற்கு நான் ஒரு நிகழ்ச்சிக்காக அழைக்கப்பட்டிருந்தேன். அதாவது, ஈசா உறைவிடப்பள்ளியில் பயிலும் பிள்ளைகளுக்குக் கவிதைகள் குறித்த மூன்று நாள் பயிலரங்கை நான் நடத்த வேண்டும் என்பதாக ஓர் ஏற்பாடு. தொடர் வண்டிக்கான பயணச்சீட்டு கிடைத்துவிட்டதா எனத் தொலைபேசியில் கேட்டுத் தெரிந்து கொண்ட ஈசா யோகமையச் சகோதரிகள், தங்களது விசாரணையின் தொடர்ச்சியாக “அண்ணா நீங்கள் வருவது எங்களுக்குப் பெருமை சேர்க்கிற ஒரு நிகழ்வு... அப்புறம் அண்ணா தவறாக நினைக்க வேண்டாம் இங்கே நீங்கள் தங்குகிற அந்த மூன்று நாட்களும் உங்களுக்குப் பழக்கமிருக்குமெனில் புகை, மது, புலால் மூன்றையும் எங்களுக்காகத் தயவு செய்து தவிர்த்துவிடுங்கள் அண்ணா” என்று நான் கூசிப் போகிற அளவுக்கு ஒரு கோரிக்கையை முன்வைத்தார்கள்.

வேறு வழியில்லாமல் மூன்று நாள்தானே என்று அதற்கு ஒப்புக் கொண்டேன். புகைப்பது மட்டுமே அந்த மூன்று நாளும் நான் தவிர்க்க வேண்டிய, தவிர்க்க முடியுமா? என்கிற ஐயத்திற்கு உட்பட்ட சிக்கலாக இருந்தது. இருந்தாலும் அதற்கு நான் ஒப்புக் கொண்டேன். அதன்படி 2007-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8-ஆம் நாள் இரவு சேரன் விரைவு வண்டியில் கோவைக்குப் புறப்பட்டேன். மறுநாள் விடிந்து தொடர்வண்டியைவிட்டு இறங்கியவுடன் நான் ஈசாயோக மையத்தின் கட்டுப்பாட்டிற்கு உட்படுத்தப்பட்டுவிடுவேன். இந்து நாளிதழில் பணியாற்றிக் கொண்டிருந்த போது என்னோடு சேர்ந்து “ஊதித்தள்ளிய” நண்பர் பாலச்சந்தர் என்னை இப்படி வளைத்து மடக்குவார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. எனவே, மழை பொழிந்து கொண்டிருந்த அந்த அதிகாலைப் பொழுதில் கோவையின் புறநகர்ப்பகுதிக்கும் முன்பான என்னால் அறிய முடியாத ஏதோவொரு இருட்டுப் பகுதியில் இரைச்சலிட்டவாறு ஊர்ந்து கொண்டிருந்த தொடர்வண்டியின் கழிவறைத் தனிமையில் ஒரு சிகரெட்டைப் புகைத்துப் போட்டேன். இதுவே நமது கடைசிப் புகையாக இருக்க வேண்டும் என்றும் எண்ணிக் கொண்டேன்.

மூன்று நாளும் அவ்வாறே கழிந்து சென்னைக்குத் திரும்பினேன். ஒரு வாரம் (பல்லைக் கடித்துக் கொண்டு) கழிந்த நிலையில், வெளிநாட்டுப் பயணம் முடிந்து திரும்பி வந்து நட்சத்திர விடுதியொன்றில் தங்கியிருந்த என் அன்பு நண்பர் சி.தீனதயாளபாண்டியன் அவர்களை சந்திக்க நேர்ந்தது. சந்திப்பு முடிந்து புறப்படும்போது பரிசுப் பொருட்களோடு சேர்த்து ஒரு பார்சலை என்னிடம் கொடுத்து “இது ரொம்ப மைல்டா இருக்கும் இனிமே இந்த பிராண்டையே யூஸ் பண்ணுங்க.... இது ஓரளவுக்குச் சுமாரான கெடுதல்” என்று சொல்லிக் கண் சிமிட்டினார். பார்சலைப் பிரித்துப் பார்த்தேன். பென்சன் அண்டு ஹெட்ஜஸ் என்கிற விலை உயர்ந்த சிகரெட். மொத்தம் இருபது பாக்கெட்டுக்கள் கொண்ட இருநூறு சிகரெட்கள் அடங்கிய பண்டல்.

என் மன உறுதிக்கான சோதனை. ஒரு வெளிநாட்டு விமானத்தின் முதல் வகுப்பில் வந்து நட்சத்திர விடுதியில் அறை எடுத்துத் தங்கியிருப்பதாக உணர்ந்து நொந்து போனேன். சிகரெட் புகைப்பதை விட்டுவிட்டதாக அவரிடம் நான் சொல்லவில்லை. ஏனெனில் பலமுறை அவரிடம் அப்படிச் சொல்லியிருக்கிறேன். இப்போதும் சொன்னால் அது அவருக்கு நான் சொல்லும் நகைச்சுவையாகவே இருக்கும். எனவே சிகரெட் பண்டலோடு வீட்டிற்குத் திரும்பினேன். அதைப் பார்த்ததும் என் மனைவி என் இரு பிள்ளைகள் உள்ளிட்ட எனது சிறிய குடும்பம் அரண்டு போனது. என்னப்பா இது? என்று வியந்தான் என் பெரிய மகன். முதல் வேலையாக அந்த சிகரெட் பண்டலின் முகப்பை செலோடேப் என்றழைக்கப்படுகிற ஒட்டுப்பட்டையைக் கொண்டு அழகாக ஒட்டி என் மேசையின் கீழ் அறையில் வைத்துக் கொண்டேன். “அப்பா அது உங்க மேஜை டிராயர்லயே இருந்தா உங்களுக்கு எடுத்துப் பிடிக்கணும்னு தோணும்பா.... அத உங்க கண் எதிரிலேயே வச்சிருக்காதீங்க... இப்பவே எடுத்து யாருக்காவது கொடுத்துடுங்கப்பா” என்றான் என் பெரிய மகன்.

“இருக்கட்டும்டா அது என்னைக் கூப்பிட்டுக்கிட்டே இருக்கணும். ஆனா நான் அதுகிட்ட போகமாட்டேன் எத்தனையோமுறை அதைத் தேடித் தேடி ஒடி மூடப்பட்டுவிட்ட கடையைக்கூட கெஞ்சித் திறந்து அதை நான் வாங்கி வந்திருக்கேன். இப்ப அதநான் பழிவாங்கியாகணும். என்னைத் தேடி அது என் மேசைக்கே வந்திருக்கு அதை நான் இப்ப தொடவே மாட்டேன். கொஞ்ச நாளைக்கப்புறம் அதை அப்படியே கொண்டுபோய் தீனன் மாமாகிட்டயே கொடுத்து அவரை நிமிர்ந்து பார்க்க வைக்கணும்” என்று சொன்னேன். அதற்குப்பிறகு எனது மூன்று மாதங்கள் புகையின்றிக் கழிந்தது. புகைப்பிடிப்பதை விட்டுவிட்டேன் என்று என்னை ஆசிரியராகக் கொண்டு நடத்தப்பட்டு வருகிற தி தமிழ் டைம்ஸ் என்கிற அமெரிக்கத் தமிழர்களுக்கான மாத இதழின் வெளியீட்டாளரும், பாரத் மேட்ரிமோனி.காம் நிறுவனத்தின் அதிபருமான திரு.முருகவேல்ஜானகிராமன் அவர்களிடம் சொன்னேன்.

மகிழ்ந்து போன அவர் அதற்கடுத்து நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் பங்கேற்ற மாதாந்திரக் கூட்டத்தில் “நமது தமிழ் டைம்ஸ் ஆசிரியர் கவிஞர் ஜெயபாஸ்கரன் ஸ்மோக் பண்றத விட்டுட்டார்” என்று அறிவித்ததும் மிகப்பெரிய அளவில் கரவொலி எழுந்து அடங்கியது. அதற்குப் பிறகு அங்கு கூடியிருந்த அனைவரது முன்னிலையிலும் ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை எனக்கு வழங்கினார். (புகைப்பிடிப்பதை நிறுத்திவிடும் பணியாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கி ஊக்கப்படுத்துவதை அந்நிறுவனம் வழக்கமாகக் கொண்டிருக்கிறது) அதன் தொடர்ச்சியாக என் வாழ்க்கை புகைச்சலின்றி வீறுநடைபோட ஆரம்பித்தது. ஆறுமாத காலத்திற்குப்பிறகு நண்பர் தீனதயாளபாண்டியன் அவர்களை மீண்டும் லீ மெரிடியனில் சந்தித்தேன்.

“நான் சிகரெட் புகைப்பதை விட்டுவிட்டேன் என்பதை உறுதி செய்து கொள்ளும் விதமாகவே இந்த பண்டலை உங்களிடமிருந்து பெற்றுச் சென்றேன். நான் புகைப்பதில்லை என்பது இப்போது என்னளவில் உறுதியாகிவிட்டது. அதை மேலும், உறுதி செய்யும் விதமாக நீங்கள் இதைத் திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும்” என்று கூறி அவர் கொடுத்த சிகரெட் பண்டலை அப்படியே அவரிடம் கொடுத்தேன். கண்கள் விரிய என்னைப் பார்த்து இருகைகளேந்தி அதைப் பெற்றுக் கொண்ட அவர் குட்... குட்.... வெரிகுட் என்று நீண்ட நேரம் சொல்லிக் கொண்டேயிருந்தார்.

இப்போது என் வாழ்க்கை புகைச்சல் ஏதுமற்று மிகத் தெளிவாக இருக்கிறது. என் எதிரே புகைத்துக் கொண்டிருக்கிற ஒவ்வொருவரும் நீ வலிமையானவன் என்று என்னைப் பார்த்துச் சொல்வதாக உணர்கிறேன். கோவையின் புறநகருக்கு முன்பான ஏதோவொரு அத்துவானக் காட்டின் ரயில் பாதையோரத்தில் எவர் கண்ணிலும் படாமல் இருக்கவே கூடும் என் கடைசி சிகரெட்டின் கல்லறை.


- ஜெயபாஸ்கரன் ( [email protected])

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com