Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கட்டுரை

கலைஞரைத் திருத்தவே முடியாது

இளவேனில்

“கருணாநிதியைத் திருத்தவே முடியாது!’’ - இது இந்துமுன்னணி இராமகோபாலனின் தீர்க்கமான விமர்சனம். “எந்தச் சூழலிலும் என்றைக்கும் பெரியார் பாதையிலிருந்து கலைஞரைத் திருப்பமுடியாது’’ என்கிற வெறுப்பிலும் தகிப்பிலும் அந்தச் சனாதனி வழங்கிய சாபம் இது. கலைஞருக்குப் பெருமை சேர்க்கும் பல பட்டங்களில் மதிப்பு வாய்ந்த பாராட்டுப் பத்திரம் இது. கலைஞரைத் திருத்தவே முடியாது என்கிற பட்டயச் சொல் மறுபடியும் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது.

Ramagopalan “தி.மு.க. கூட்டணி உடைகிறது’’

“தி.மு.க அணியில் சலசலப்பு’’

“வெள்ளத்தில் நொறுங்குகிறது கூட்டணிப் பாலம்’’

“காலை வாருவாரா வைகோ?’’

“இராமதாஸ் இரகசியப் பேரம்.’’

“குஷ்பு விவகாரத்தில் கம்யூனிஸ்ட்டுகளின் கருத்து கூட்டணிக்கு எதிரானது - இராமதாஸ் குற்றச்சாட்டு.’’

“குஷ்பு விவகாரத்தில் கூட்டணிக்குள் ஒருமித்த கருத்து வேண்டும் என்பவர்கள் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்கு விற்பது குறித்தும், அமெரிக்க நிர்ப்பந்தங்கள் குறித்தும் நாங்கள் தெரிவிக்கும் கருத்துக்கு மௌனம் சாதிப்பது ஏன்? - கம்யூனிஸ்ட்டுகள் கொதிப்பு’’

இவ்வாறு ஆதிக்க சக்திகளின் ஏடுகளும் எழுத்தாளர்களும் எழுதி எழுதித் தமது ஆசைகளையும் ஆற்றாமைகளையும் வெளிப்படுத்தாத நாளில்லை. இந்து முன்னணி இராமகோபாலனை, மாத்திரமல்ல திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீரமணியையும்கூட தி.மு.க. கூட்டணிக்கு எதிராகப் பேச வைப்பதில் இந்த ஏடுகள் சாமர்த்தியம் காட்டுகின்றன. இதன் தொடர்ச்சியாக, தி.மு.க.வும் சங்கராச்சாரியும் தேர்தல் கூட்டணி என்றும் பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றன.

‘கருணாநிதியைத் திருத்தவே முடியாது’ என்று சபிக்கிறவர்கள் மத்தியிலிருந்து இப்படியொரு பிரச்சாரத்தை எப்படித் தொடங்க முடிகிறது? நமக்குத் தெரியும் - வயிற்றுக்குள்ளிருக்கும் அக்கிரகாரத்துக் குழந்தையின் கருவும்கூட - பேச முடியுமானால்- ‘கருணாநிதி ஒழிக’ என்றே கத்தித் தீர்க்கும். இந்த நிலைமையில் இப்படியொரு செய்தியைப் பரப்புவது ஏன்?

இந்தப் புனைவுக்கு இரண்டு நோக்கங்கள் உண்டு. ஒன்று - சங்கராச்சாரி தமிழ்நாட்டில் தமிழ் மக்களின் மத்தியில் பேராதரவு பெற்ற மாபெரும் சக்தி. அவருடைய ஆதரவு இல்லாமல் இங்கே எந்த ஓர் அரசியல் கட்சியும் வெற்றி பெறமுடியாது. ‘ஆல்பாவும் ஓமேகாவும்’ - ஆதியும் அந்தமும் - சங்கர மடம்தான் என்பது மாதிரி ஒரு பொய்த் தோற்றத்தை உருவாக்குவது.

Karunanidhi மற்றொன்று: நாத்திகம், பகுத்தறிவு, சமூக நீதி, தமிழ், பாச எதிர்ப்பு எல்லாம் தேர்தல் சூறாவளியில் மறந்து விடும். சங்கரமடத்தைச் சரணடைவதைத் தவிர இங்கே அரசியல் கட்சிகளுக்கு வேறு நாதியில்லை என்கிற கருத்தை உருவாக்குவது. இவ்வாறான கருத்து பரவுமானால் கலைஞருக்கு முந்தி நாம் ஏன் சங்கரனைச் சரணடையக் கூடாது என்று பிறகட்சிகள் - குறிப்பாக, தி.மு.க. கூட்டணிக் கட்சிகளில் ஏதாவதொன்று - பிய்த்துக் கொண்டு போகாதா என்கிற நப்பாசை.

பெரியகுடி அகத்தீஸ்வரர் கோயிலில் லிங்கத்துக்கு அடியில் புதைத்து வைத்திருந்த ஆபரணக்கற்களை ஏற்கனவே கொலை வழக்கில் சிக்கியுள்ள சங்கராச்சாரி திருடிவிட்டார் என்று ஒரு திருட்டு வழக்கும் அவர்மீது போடப்பட்டிருக்கிறது. இந்தத் திருட்டுவழக்கில் சங்கராச்சாரிக்குப் பார்ப்பனர்கள் கூட ‘ஜாமீன்’ தர முன்வராத சூழலில் தி.மு.க. வைச் சேர்ந்த கோட்டூர் ராஜசேகரனும் நடராஜனும் சங்கராச்சாரிக்கு ‘ஜாமீன்’ கையெழுத்துப் போட்டார்களாம். இதைத்தான் தமிழ் நாட்டில் பெரும் அரசியல் பிரளயம் வரப்போவது போல விகடன் குட்டி முகப்புச் செய்தியாக்கி பரபரப்பு ஏற்படுத்துகிறது.

மன்னார்குடிக்கு வந்த சங்கராச்சாரியே ராஜசேகரனை அழைத்துப் பேசியிருக்கிறார். ஆதரவற்ற நிலையில் கைபிசைந்து கலங்கி நிற்பவன் எதிரியே ஆனாலும் உதவி செய்வது யாருக்கும் இயல்பானதுதான். இது மாத்திரமல்லாது தி.மு.க.வில் இருப்பவர்கள் எல்லோருமே நாத்திகர்கள் அல்ல. மத நம்பிக்கையுள்ள ஒருவரிடம் மதத்தலைவர் உதவி கேட்டுக் கெஞ்சும்போது இரக்கப்பட்டுவிட்டார் ராஜசேகரன்.

இந்த ராஜசேகரன் யார் என்று தி.முக.வினருக்கே தெரியாது. அப்படிப்பட்ட ஒருவரின் சறுக்கலைத்தான் பெரிதுபடுத்திக் கலைஞரின் முகத்தைக் கோரப்படுத்த நினைத்தது குட்டி விகடன். சட்டென்று இந்தப் பிரச்னைக்கு முற்றுப் புள்ளி வைத்து, அக்கிரகாரத்து விஷமத்தனத்துக்கு அடி கொடுத்துவிட்டார் கலைஞர். சங்கராச்சாரிக்கு ‘ஜாமீன்’ தந்த கோட்டூர் ராஜசேகரன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுவிட்டார். இராமகோபாலன் மொழியில் சொல்வதானால் “கலைஞரைத் திருத்தவே முடியாதுதான்!’’

புத்தியுள்ளவர்கள் புரிந்து கொள்ளட்டும்.

(நன்றி: தமிழ்ச் சான்றோர் பேரவை செய்தி மடல்)

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com