Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கட்டுரை

லஞ்சலீலா தரங்கிணி
மு.குருமூர்த்தி

காலையில் காபிகுடிக்கும் நேரத்திலேயே வாசல் கேட்டில் நண்பரின் தலை தெரிந்தது. தலை வழுக்கையின் பரப்பளவு முன்பைவிட அதிகமாக இருந்தது. புயலில் அடிபட்டவர் போலிருந்தார். காரணம்....... தெரிந்ததுதான். சிமெண்ட், மணல், கம்பி, ஆள்கூலி என்கிற புயல்களில் சிக்கிச் சீரழிந்து வீடு கட்டிக்கொண்டிருக்கிறார். நாலைந்து நாட்களில் கிரஹப்பிரவேசம் வைத்திருக்கிறார். காபி கொடுத்து உபசரித்தபிறகுதான் விடிந்தும் விடியாததுமான அந்த காலைப்பொழுதில் அவருடைய விஜயத்தின் நோக்கம் புரிந்தது.

எத்தனையோ பிரச்சினைகளைத் தாண்டி வந்த மனிதருக்கு ஒரு தாண்டமுடியாத பிரச்சினை. புதுவீட்டுக்கு முனிசிபாலிட்டி ஆபீஸில் குடிநீர் இணைப்பு வாங்கவேண்டுமாம். செலவானாலும் பரவாயில்லை என்று மனிதர் என்னிடம் சொன்னார். சொல்ல வேண்டிய இடம் முனிசிபல் ஆபீஸ். சொன்ன இடமோ என் வீட்டுத்திண்ணை. எனவே பிரச்சினையை நான் ஏற்றுவாங்கிக்கொண்டேன்.

காலை பத்துமணிக்குப்போனால் ஆபீசில் ஈ காக்காய் இருக்காது என்பது பள்ளிக்கூட பிள்ளைகளுக்குக் கூட தெரியும். டீ குடிப்பதற்காகவே ஆபீஸுக்கு வருகிறவர்கள் போல் டீ நேரத்தில் நிச்சயமாக எல்லோரும் ஆபீசில் இருப்பார்கள். அவர்களுடைய நாற்காலியில் அல்ல. சுற்றியுள்ள டீக்கடைகளில்.

நான் ஆபீசுக்குள் நுழைந்து வராண்டாவில் உட்கார்ந்திருந்தவரிடம் வந்த காரணத்தை சொன்னபோது அவர் சுட்டிக்காட்டிய அறைக்குள் நுழைந்தேன். அங்கே அதிர்ச்சியடைவதற்கு ஒன்றுமில்லை. கல்யாணமண்டபத்தில் பந்திபோடுவதுபோல் மேசைகளின் வரிசை அமைப்பு. நான் தான் இங்கே தலைவன் என்கிறமாதிரி ஒரு மேசையும் நாற்காலியும் அதற்குப்பின்னால் 'கண்காணிப்பாளர்' என்ற சரிந்து கிடந்த மங்கலான பெயர்ப்பலகையும், அந்த பலகைக்கு மரியாதை கொடுப்பதுபோல் சரிந்து உட்கார்ந்திருந்த கண்காணிப்பாளரும் ஒரு பறவையின் பார்வையில் எனக்குப் பதிவானது.

கண்காணிப்பாளரை நான் அணுகியதும் அவரோடு அதுவரை சிரித்துப் பேசிக்கொண்டிருந்த பெண் பணியாளர் தன்னுடைய மேசைக்குபோய், விட்ட பணியைத் தொடர்ந்தார். அதாவது பூ கட்டிக் ச்ச்கொண்டிருந்தார். மேசைமேல் குவித்து வைத்திருந்த கனகாம்பரப்பூவை கட்டும்பணியைத் தொடர்ந்துசெய்ததை ஓரக்கண்ணால் பார்த்தவாறே வந்த விவரத்தையும் எனக்கு உடனடியாக குடிநீர் இணைப்பு வேண்டுமென்ற கோரிக்கையையும் கண்காணிப்பாளரிடம் சொல்லத் தொடங்கினேன். கேட்கக்கூடாத வார்த்தையை கேட்டுவிட்ட போலீஸ்காரர் தோரணையில், "இல்லை சார். புதிய இணைப்பெல்லாம் இப்போது இல்லை. கோடைகாலம் முடியட்டும். அப்புறமாக வந்து பாருங்கள்" என்றார் கண்காணிப்பாளர்.

கோடைகாலம் முடிந்த பிறகு மழைக்காலம் வந்துவிடும். மழைக்காலத்தில் நண்பருக்கு குடிநீர் இணைப்பு அனாவசியம். அவர் வீடுகட்டியிருப்பதே மழைநீர் புரண்டோடும் வாய்க்காலில்தான்.

நான் பொறுமையாக என்னுடைய சட்டையின் மேல்பாக்கெட்டை தடவியபடி, "குடிநீர் இணைப்பு இப்போதே அவசியமாக இருக்கிறது. எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை," என்று சொன்னவாறே அவர் நிமிர்ந்துபார்க்கும் வரையில் சட்டையின் மேல்பாக்கெட்டை தடவிக் கொண்டிருந்தேன். அதற்குள் ஒரு ஐநூறு ரூபாய் நோட்டு என்கிற ஆயுதம் இருப்பது எனக்குத்தெரியும். அதைமறைக்கும்கெட்டிக்காரத்தனம் அந்த சட்டைத்துணிக்கு இல்லை என்பதும் எனக்குத்தெரியும்.

அடுத்து நடந்ததெல்லாம் ஸ்விட்ச் போட்டதும் பல்பு எரிகிற வேலை. "மேடம், அந்த நாற்காலியை இப்படி நகர்த்துங்க." பூ கட்டிக்கொண்டிருந்த மேடம், அந்தப்பணியை நிறுத்திவிட்டு எனக்கென நாற்காலியை நகர்த்திப்போட்டதும், நான் உட்கார்ந்ததும், பிளம்பர் வடிவேலுவை அங்கே வரச்சொன்னதும், என்னை அவரிடம் அறிமுகம் செய்து கூட்டிப்போகச்சொன்னதும் ஐந்து நிமிடத்திற்குள் நடந்து முடிந்தது.

பிளம்பர் வடிவேலு என்னை வராந்தாவிற்கு அழைத்து வந்து அங்கிருந்த பலகையில் உட்காரவைத்தார். நான் தயாராக கொண்டுபோன பேப்பரையும் பேனாவையும் பிளம்பர் வடிவேலு கையில் கொடுத்து சொன்னேன்.

"நாளை காலையில் வீட்டில் தண்ணீர் பிடிக்கவேண்டும். என்ன செலவாகும். எழுதுங்கள்" என்றேன். பிளம்பர் வடிவேலு நேர்மையானவர். ஐந்தாறு இனங்களில் செலவுகளை எழுதி கூட்டிப்போட்டார்.

இதெற்கெல்லாம் பில் உண்டு.......இதற்கெல்லாம் பில் இல்லை என்று தமிழ்நாட்டுக் குடிமகனுக்கு புரியும்படி சொன்னார். நான் பணத்தை எண்ணிக்கொடுத்தேன். அப்போது அவர்செய்த காரியம் என்னை புல்லரிக்க வைத்தது.

எழுந்து நின்று பணத்தை கும்பிட்டு வாங்கிக் கொண்டார். அன்று மாலையில் இனிமேல் கண்தெரியாது என்ற இருட்டில் வடிவேலுவும் இன்னும் இரண்டு ஆட்களும் என் நண்பரின் வீட்டில் குடிநீர் இணைப்பு கொடுத்தனர்.

அரசாங்க அலுவலகங்களில் வேலை ஆகவில்லை என்று குறைபட்டுக் கொள்வதில் பிரயோஜனமில்லை. உங்கள் வீட்டுப்பிள்ளை ஆபீசுக்கு சும்மா போய்விட்டுவந்தால் நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பீர்களா? உழைப்பது காசுக்காகத்தானே?..... பெண் கேட்கும்போதே கேட்கிறார்களில்லையா?...... மாப்பிள்ளைக்கு மேல்வரும்படி உண்டா என்று......

நிர்வாகம் என்பது கும்மிருட்டு! அதில்
லஞ்சம் என்பது அகல் விளக்கு!

ஒரு பிளான் அப்ரூவல் தேவைப்பட்டது. விண்ணப்பம் செய்தேன். சம்பந்தப்பட்ட எழுத்தர் நல்லவர். என்னுடைய அப்பா வயது. என்னை நிறைய தடவைகள் அலையவிட்டார். ஒவ்வொருமுறை நான் போகும்போதும் வெறும் ஐந்து ரூபாய்தான் வாங்குவார். முற்பகலில் அவருடைய நாற்காலியில் இருக்கமாட்டார். ஐந்து ரூபாய் கிடைத்ததும் பக்கத்து சினிமா தியேட்டரில் காலைக்காட்சி பார்க்கப்போய்விடுவார். அது கண்கவர் மலையாளப்படம் மட்டும் போடும் தியேட்டர்........ பாவம் . அவருடைய வீட்டில் இரண்டு முதிர்கன்னிகள் திருமணத்திற்காக காத்து இருக்கிறார்களாம். விபரம் கேட்டதும் நான் இந்தப்பிறவியில் சொந்த வீடுகட்டவேண்டாம் என்று முடிவு செய்தேன். நான் இன்னும் வாடகை வீட்டில் இருப்பதன் ப்ளாஷ் பாக் இதுதான்.

அவருடைய மேலதிகாரியின் கதை வேறுமாதிரி. ஸ்ரீரங்கத்துக்காரர் அவர். அரை மணிக்கு ஒரு பஸ் ஸ்ரீரங்கத்திற்கு இருக்கிறது. இருந்தாலும் அவருக்கு மூன்று மணி பஸ்தான் ரொம்பப்பிடிக்கும். சரியாக மூன்றுமணிக்கு பஸ் ஸ்டாண்டில் அவரைப்பார்த்து லஞ்சப்பணத்தை கொடுத்து விடவேண்டும். அவருடைய லஞ்ச கவுண்டர் மூன்று மணிக்கு திறக்கும். அரசாங்க பங்குபத்திரங்கள் விற்கும் கவுண்டர் மாதிரி சில நிமிடங்களுக்குள் மூடப்படும் என்பது தான் நடைமுறை. தாமதிப்பவர்கள் வாய்ப்பை இழப்பார்கள்.

சில அதிகாரிகள் படுத்துப் புரள்கிற மாதிரி பெரிய மேசை போட்டிருப்பார்கள். லஞ்சப்பணம் கருமக்காசு என்பது அவர்கள் அபிப்ராயம். அதனால்தான் அவர்கள் கையால் அதைத் தொடுவதில்லை. பெரிய மேசையின் டிராயர் அனிச்சையாக திறந்துகொள்ளும். தபாலில் கடிதம் சேர்க்கிறமாதிரி நாம் காணிக்கையை டிராயருக்குள் செலுத்திவிடவேண்டும்.

வேறு சிலருக்கு பயம். எதிரே 'துணிவே துணை' என்று எழுதிவைத்திருப்பதன் மர்மம் அதுதான். நம்மை பக்கத்தில் உள்ள டீக்கடைக்கு அழைத்துச்சென்று அவர்கள் செலவில் டீயும் வடையும் வாங்கிக்கொடுத்து லஞ்சத்தை வாங்கிக்கொள்வார்கள். இங்கே டீயும் வடையும் நமக்குக் கிடைக்கும் தள்ளுபடி.

ஒரு அதிகாரியின் பயணப்படி பட்டியல் மேல் அலுவலகத்தில் தேங்கிக்கிடப்பதாக வைத்துக் கொள்வோம். அதை நகர்த்துவதற்கு நிரம்ப சாமர்த்தியம் வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரியின் பியூன் ஒரு பலாப்பழத்தையோ, பத்து இருபது தேங்காயையோ, ஐந்தாறு மரக்கால் நிலக்கடலையையோ எடுத்துக்கொண்டு ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை நேரத்தில் பயணப்படி பட்டியலின் தலைவிதியை நிர்ணயம் செய்யும் எழுத்தர் வீட்டுக்குப்போய் வாசல் கதவைத்தட்டுவார். அங்கிருக்கும் மனைவி குழந்தைகளின் கண்களில் படும்படி குசேல சன்மானங்களை வைத்துவிட்டு, வீட்டம்மாள் கொடுக்கும் காப்பியையும் குடித்துவிட்டு எந்த ஐயா கொடுத்தனுப்பினார் என்கிற விபரத்தையும் மறக்காமல் சொல்லிவிட்டுவருவார் அந்த பியூன்.

அத்தோடு வந்த பியூனின் டிரான்ஸ்பர் விஷயமும் அங்கே பேசப்படும். பலாப்பழத்தையும், நிலக்கடலையையும் திருப்பியனுப்பிவிட்டால் குழந்தைகளின் கையில் எழுத்தர் நார் நார் தான். இங்கே கவனிக்க வேண்டியது பள்ளிக்கூட விடுமுறைநாளில் போகவேண்டுமென்பது.

லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் எண்ணெய் போன்றவர்கள். லஞ்சம் வாங்காத அதிகாரிகள் வெறும் தண்ணீருக்கு சமமானவர்கள். நிர்வாகம் என்ற விளக்கு எரிவது தண்ணீர் மேல் மிதக்கும் எண்ணெயினால்தான்.

இப்போதெல்லாம் பத்திரிக்கைகளில் லஞ்சம் வாங்கிய அதிகாரி கையும் களவுமாக பிடிபட்ட செய்தியை அடிக்கடி போடுகிறார்கள். அத்தோடு போனஸ் செய்தியாக அவருடைய மாளிகைவீட்டின் படத்தையும், துண்டால் முகத்தை மூடிக்கொண்டு அந்த அதிகாரி நிற்கிற அல்லது ஓடிக்கொண்டிருக்கிற படத்தையும் போட்டு 'தனக்குக் கிடைக்கவில்லையே' என்கிற எரிச்சலை தணித்துக்கொள்கிறார்கள். பலவருடங்களுக்கு முன்னால் பத்திரிக்கைகளில் "லஞ்சம் வாங்கிய அதிகாரியை 'லபக்' என்று பிடித்ததாக செய்திவரும். இப்போதெல்லாம் யாரும் 'லபக்' கென்று பிடிப்பதில்லை. பொறிவைத்துப் பிடிக்கிறார்கள்.

செல்போன் காமிரா, ஒலிப்பதிவு என்ற நவீன தொழில் நுட்பங்களைப் பார்த்து எந்த அதிகாரியும், எந்த அரசியல் வாதியும் பயப்படுவதில்லை. பினாமிகளின் பெயரில் டிராஃப்ட் அப்புறம் சூட்கேஸ் என்று அந்தப்பக்கமும் தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது.

காரியத்தை செய்து கொடுத்தபிறகு லஞ்சம் வாங்குவது என்பது சங்ககால நடைமுறை. ஒரு பத்திரப்பதிவு அலுவலகத்தில் பத்திரப்பதிவெல்லாம் முடிந்தபிறகு முண்டாசு கட்டிய பியூன் வராந்தாவரை வந்து மிராசுதாரை வழியனுப்பி வைப்பார். ஒரு ஐந்து ரூபாய் நோட்டை எப்போது அந்த மிராசுதார் கையில் வைத்தார் என்பதும் எப்போது அந்த பியூன் வாங்கிக் கொண்டார் என்பதும் தெரியாது. இப்போதெல்லாம் பதிவு செய்யப்போகும் பத்திரத்திற்குள்ளேயே ரூபாய்நோட்டு இருக்கவேண்டுமென்று கேள்வி.

லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளுக்கு பயந்து கொண்டு லஞ்சம் வாங்காமல் இருப்பதில்லை. லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளின் கைகளுக்குள் சிக்காமல் லஞ்சம் வாங்க வேண்டுமென்பதில் தான் கவனமெல்லாம்.

லஞ்சப்பணத்தை வாயில் போட்டு மென்று லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளுக்கு 'பெப்பப்பே' காட்ட முயற்சி செய்து மென்னியைப்பிடித்த சம்பவங்களும் உண்டு. லஞ்சப்பணத்தை சன்னலுக்கு வெளியே வீசி 'தண்ணி' காட்ட முயன்றவர்களும் உண்டு. லஞ்சப்பணத்தை தூக்கியெறிந்து விட்டு சந்நியாசிக்கோலத்தில் அலுவலகத்தைவிட்டு ஓடியகதைகளும் உண்டு.

சில அலுவலகங்களில் லஞ்சம் எழுதப்படாத சட்டமாகவே இருக்கும். லஞ்ச கலெக்க்ஷன் முழுவதும் ஒரே கவுண்டரில் நடைபெறுவதால் வாடிக்கையாளரின் சிரமம் குறையும். குறிப்பிட்ட தினங்களில் அது தரம் வாரியாக நேர்மையான முறையில் பிரித்துக் கொள்ளப்படும்.

அரசியல் நாகரிகம் முதிர்ச்சி அடையும் போதெல்லாம் லஞ்ச நாகரிகமும் முதிர்ச்சி அடைகிறது. ஒரு லட்ச ரூபாய் காண்ட்ராக்ட் என்று வைத்துக்கொண்டால், இருபது சதவீதத்தை முன்பே கொடுத்துவிட்டுதான் காண்ட்ராக்டைப்பெறமுடியும் என்பது நாகரிகத்தின் முதிர்ச்சிதானே!

வகுப்பறையில் சதவீதக்கணக்கை சரியாகப் போடாமல் குட்டுவாங்கிய பையன்கள் எல்லாம் அரசியலுக்கு வந்தபின் சதவீதக்கணக்கில் புலியாக இருப்பது தான் ஆச்சரியம்.

அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் ஒரு வர்க்கப்போராட்டம் மெளனமாக நடைபெற்றுக் கொண்டு வருகிறது. அதாவது அரசியல்வாதிகள் லஞ்சம் வாங்குவதால் அதிகாரிகள் லஞ்சம் வாங்குகிறார்களா?

அல்லது அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதால் அரசியல்வாதிகள் லஞ்சம் வாங்குகிறார்களா? என்பதுதான் அந்த கோடி ரூபாய் விலையுள்ள கேள்வி.

இந்த கேள்விக்கு விடை கண்டுபிடிப்பதற்காக இந்த நாட்டின் ஏழைபாழைகளும் பஞ்சை பராரிகளும் முடியைப் பிய்த்துக் கொண்டிருக்கும் இந்த சமயத்தில் சத்தம்போடாமல் நமக்கு வரும் சூட்கேஸை வாங்கிக்கொள்வோம் வேகமாக வாருங்கள்......!

- மு.குருமூர்த்தி ([email protected])

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com