Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கட்டுரை

பிறக்காத பெண்களும் பிறக்கப்போகும் சிக்கலும்
மு.குருமூர்த்தி


பல வருடங்களுக்கு முன்னால் நம்முடைய கிராமங்களில் செயற்கைக் கருவூட்டல் மூலம் பசுக்களை கருத்தரிக்கச் செய்யும் முறை அறிமுகம் செய்யப்பட்டது.

இதற்குத்தேவையான விந்தணு வெளிநாட்டுக்காளைகளில் இருந்து பெறப்பட்டதால் ஈனப்பட்ட காளைகளும், கிடேரிகளும் இந்தியபாரம்பரியத்தில் இருந்து வேறுபட்டிருந்தன.

கால்நடைத்துறையைச் சார்ந்த கணக்கெடுப்பாளர்கள் இந்த மேல்நாட்டு இன காளை-கிடேரி கன்றுகளை எண்ணிப்பார்த்தபோது அவற்றில் ஆண்- பெண் விகிதம் ஏறக்குறைய பாதிக்கு பாதி என்ற கணக்கில் இருந்தது.

செயற்கை கருவூட்டல் முறையாக இருந்தபோதும்கூட ஆண் பெண் விகிதம் சம அளவில் இருந்தது இயற்கையின் விந்தைகளுள் ஒன்றாக கருதப்பட்டது.

சில மாதங்கள் கழித்து மீண்டும் கணக்கெடுப்பு நடத்தியபோது காளைக்கன்றுகளின் எண்ணிக்கையில் குறைவுஏற்பட்டது. வெளிநாட்டு இனத்தைச்சேர்ந்த காளைக்கன்றுகளை நாம் வண்டியிலும் பூட்டமுடியாது.....உழவு ஏரிலும் பூட்டமுடியாது.

அதனால் நம்முடைய ஆட்கள் கேரளத்து கசாப்புக்கடைக்காரர்களுக்கு வந்தவிலைக்கு விற்றுவிட்ட விஷயம் தெரியவந்தது.

நமக்குப்பயனில்லை என்றால் ஒழித்துக்கட்டுவது நம்முடைய குணம்.


இது கால்நடைகளுக்கு மட்டுமல்ல.....மனிதக்குழந்தைகளுக்கும் பொருந்துவதுதான் காலத்தின் கோலம்.........

சாதாரணமாக ஆண் பெண் விகிதாசாரம் என்பது பின்வருமாறு கணக்கிடப்படுகிறது.

100 பெண்குழந்தைகளுக்கு 106 ஆண்குழந்தைகள் என்பது இயல்பானது, அதாவது மொத்தம் 206 குழந்தைகள் பிறந்தால் 106 ஆண்குழந்தைகள் இருக்கும். இது 51.5 சதவீதம் ஆகும்

2001 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பில் ஆண்குழந்தைகளைவிட பெண்குழந்தைகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக காணப்பட்டது.

அமார்த்திய சென் என்ற அறிஞர் தொலைந்துபோன பெண்கள் என்று பிறக்காத பெண் சிசுக்களை குறிப்பிடுகிறார்.

கனடாவின் டொரண்டோநகரில் இயங்கும் உலகளாவிய சுகாதார ஆய்வுமையம் இந்தியாவில் பெண்குழந்தைகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதற்கான காரணத்தை கனடா இந்தியா கூட்டுக்குழு மூலம் ஆராய்ந்தது.

“மனித இனத்தில் இயற்கையின் போக்கில் இனப்பெருக்கம் நடைபெற்று இருக்குமேயானால் உலகில் உள்ள பெண்களின் எண்ணிக்கை தற்போது உள்ளதைவிட பத்துகோடி அதிகமாக இருக்கும். ஆண்களின் எண்ணிக்கையும் அதற்கேற்ப சற்று கூடுதலாக இருந்திருக்கும்.” என்கிறார் பிரபாத் ஜா என்கிற பேராசிரியர்.

இவர் டொரண்டோ பல்கலைக்கழகத்தின் உடல்நலத்துறைப் பேராசிரியர்.

பெண்சிசுக்களின் எண்ணிக்கை குறைந்து போனதற்கு ஹார்மோன் மாற்றமும் குழந்தைப்பருவ நோய்களும் காரணமாக இருக்கலாம் என்று ஆரம்பத்தில் கருதப்பட்டது.

ஆனால் இந்திய-கனடா ஆராய்ச்சியாளர்களின் கூட்டுக்குழு பெண்சிசுக்களை இனம்கண்டு கருவிலேயே அழித்துவிடும் உண்மையை வெளிச்சம்போட்டு காட்டியுள்ளது.

பத்துலட்சம் குடும்பங்களில் 1997ல் நடைபெற்ற பிரசவங்களின் பின்னணியை ஆய்வு செய்தபோது.........

குறிப்பாக இரண்டாவது பிரசவங்களில் ஆண் பெண் குழந்தைகளை கணக்கெடுத்தபோது பெண்குழந்தைகளின் எண்ணிக்கையில் 30 சதவீதம் குறைவு காணப்பட்டது.

அதாவது முதல் பிரசவத்தில் பெண்குழந்தையைப் பெற்ற குடும்பங்களில் இரண்டாவதும் பெண் பிறக்காமல் பார்த்துக் கொண்டார்கள். இந்தியாவின் அனைத்து வீடுகளிலும் ஒரு ஆண் குழந்தையாவது இருக்குமாறு பார்த்துக் கொண்டார்கள்.

முதல் குழந்தை ஆணாக இல்லாமல் போனால் இரண்டாவது குழந்தைக்கு அல்ட்ரா சவுண்ட் முறையை பயன்படுத்தினர். amniocentesis, chorion villi biopsy, foetoscopy, material serum analysis போன்ற முறைகளும் கையாளப்பட்டன.

இவ்வாறு பெண்குழந்தைகள் குறைந்துபோவது இந்தியா முழுவதும் பரவலாக இருந்தது.

பஞ்சாப், ஹரியானா, டெல்லி முதலிய மாநிலங்களில் பாதிப்பு மிகவும் மோசமாக இருந்தது. பொதுவாக வடக்கு, வடகிழக்கு மாநிலங்கள் கோதுமை சாகுபடியை மேற்கொள்வதும், கோதுமை சாகுபடியில் பெண்களின் முக்கியத்துவம் குறைவு என்பதும் கூட ஒரு காரணமாக கொள்ளலாம்.

வட இந்தியகிராமங்களில் பாடப்படும் சிலநாட்டுப்பாடல்களின் மையக்கருத்தைப் பாருங்கள்:

“சூரியகிரகணம் பகலில் வருகிறது....சந்திரகிரகணம் இரவில் வருகிறது.....பெண்பிறந்தாள் என்ற கிரகணம் வாழ்க்கை முழுவதும் வருகிறது.......”

“இவள் பெண்ணென்று தெரிந்திருந்தால் அப்போதே மிளகாயை அரைத்துக்குடித்திருப்பேன்.....”

“பெண் பிறந்துவிட்டாளென்று மாமனாரிடம் சொல்லுங்கள்...... இனிமேல் தலைப்பாகையை கழட்டிப்போடச் சொல்லுங்கள்.......”

நெல்சாகுபடி செய்யும் தென்னிந்தியாவில் சாகுபடிவேலைக்கு பெண்கள் அதிக உதவியாக இருப்பதால் இங்கு பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறோம் என்றும்கூட கருதலாம்.

முன்னேறிய மாநிலமாக கருதப்பட்ட கேரளாவில்கூட மோசமான பாதிப்பு இருந்தது.

கேரளத்தில் மருமக்கள்தாயம் கடைபிடிக்கப்பட்டாலும்கூட பெண்குழந்தைகளை வெறுத்தது வியப்பான செய்தி இல்லையா.......

இதைவிட ஒரு வியப்பான செய்தி என்னவென்றால், இரண்டாவது பெண்பிறப்பு எண்ணிக்கை படிக்காதவர் வீடுகளில் 30 சதவீதம் என்றால் பத்தாம் வகுப்புக்குமேல் படித்த குடும்பங்களில் 60 சதவீதமாக இருந்தது.

பெண்குழந்தைகள் பிறப்பதை தடுக்கும்போக்கு படித்தகுடும்பங்களில் அதிகமாக இருப்பது என்பது வெட்கப்படவேண்டிய செய்தி ஆகும்.

முதல் இரண்டு குழந்தைகளும் பெண்குழந்தைகளாக இருப்பவர்களின் குடும்பங்கள் தீவிரமாக செயல்பட்டு பெண்பிறப்பதை தடுக்கமுயற்சி செய்கின்றன. இதன் காரணமாக அந்தகுடும்பங்களில் மூன்றாவது பிரசவத்தில் பிறக்கவேண்டிய பெண்குழந்தைகளின் எண்ணிக்கை 40 சதவீதம் குறைந்து போய்விடுகிறது.

முதல் குழந்தை ஆணாக பிறந்துவிட்ட குடும்பங்களில் இரண்டாவது பிரசவங்கள் சம அளவில் இருப்பதையும் நாம் கவனிக்கவேண்டும்.

அடுத்த ஒரு முக்கியமான விஷயம் இரண்டாவது பிரசவங்களில் பெண்குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைவது என்பது இந்தியாவில் உள்ள இந்து, முஸ்லிம், கிறிஸ்துவ குடும்பங்களில் சம அளவில் காணப்படுவதுதான்.

குடும்பத்தின் வாரிசாக ஆண் கருதப்படுவது இதற்கு காரணமாக இருக்கலாம்.

பிரசவத்தை எதிர்நோக்கும் பெண்களில் 13 சதவீதம் பேர் அல்ட்ராசவுண்ட் முறையை பயன்படுத்தி பிறக்கப்போகும் குழந்தையின் பாலினத்தை முன்னதாகவே தெரிந்து கொள்கின்றனர்.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் இரண்டுகோடியே எண்பது லட்சம் பிரசவங்களில் 38 லட்சம் பெண்கள் அல்ட்ரா சவுண்ட் சோதனை செய்து கொள்கிறார்கள். இந்த எண்ணிக்கை குறைவு என்று கருத இடமிருக்கிறது. ஏனெனில் அல்ட்ராசவுண்ட் சோதனை செய்துகொண்டோம் என்பதை வெளிப்படுத்தாதவர்களும் இருக்கலாம்.

இந்தியக்குடும்பங்களில் பெண்சிசுவிற்கு இடம் உண்டா இல்லையா என்பது முதல் குழந்தை ஆணா பெண்ணா என்பதைப் பொறுத்திருக்கிறது.

திட்டமிட்ட கருச்சிதைவு நகர்ப்புறங்களிலும் படித்த குடும்பங்களிலும் அதிகமாக உள்ளது. படித்த பெண்கள் உள்ள குடும்பங்களில் திட்டமிட்ட கருக்கலைப்பு அதிகமாக இருப்பதற்கான காரணம் அவர்களுக்கு இருக்கக்கூடிய பணவசதி மற்றும் எட்டும்தொலைவில் டாக்டர்கள் இருப்பது காரணமாக இருக்கலாம்.

1994 ம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட சட்டத்தின்படி திட்டமிட்ட கருக்கலைப்பு குற்றமாகும்.

டாக்டர்கள் கட்டைவிரலை நிமிர்த்தியோ கவிழ்த்தோ காட்டுவது, மவுனத்தின் மூலம் பெண்சிசுவைக் குறிப்பிடுவது, மிட்டாய் கொடுப்பது போன்ற செயல்களினால் அல்ட்ராசவுண்ட் முடிவுகளை வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பு உள்ளது.

இந்தியாவைப் போன்றே சீனாவிலும் இதே பிரச்சினை காணப்படுகிறது. சீனாவில் நான்குகோடி ஆண்கள் திருமணமாகாமலும் இந்தியாவில் ஒருகோடி பெண்சிசுக்கள் பிறக்கும் முன்பே அழிக்கப்படுவதும் விந்தையான செய்திகள்.

இந்தியாவைப் போன்று சீனாவில் முறையான ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை. ஆரம்பத்தில் பெண்சிசுக்கொலையோ அல்லது திட்டமிட்ட கருக்கலைப்போ பின்பற்றப்பட்டிருக்கலாம். தற்காலத்தில் அங்கு அல்ட்ராசவுண்ட் முறை பின்பற்றப்படுகிறது. அகில இந்திய அளவில் 1980க்கும் 1990க்கும் இடையில் ஆண்களின் எண்ணிக்கை 24.31% அதிகரித்தது. பெண்களின் எண்ணிக்கை 23.35% அதிகரித்தது.

1990க்கும் 2000க்கும் இடையில் ஆண்களின் எண்ணிக்கை 20.95% அதிகரித்தது. பெண்களின் எண்ணிக்கை 21.78% அதிகரித்தது அதாவது பத்தாண்டுகளில் ஆண்களைவிட அதிகமான பெண்கள் பிறந்ததாக புள்ளிவிவரம் காட்டுகிறது. இத்தனைக்கும் அந்த பத்தாண்டுகளில் 20 லட்சம் பெண்குழந்தைகள் பெண்கருக்கலைப்பு காரணமாக பிறப்பது தடைசெய்யப்பட்டிருந்தது. ஆண்களின் அகால மரணம் காரணமாக பெண்குழந்தைகளின் பிறப்பு அதிகரித்ததுபோன்ற ஒரு மாயத்தோற்றத்தை இந்த புள்ளிவிவரம் நமக்கு காட்டுகிறது.

THE LANCET ஆகஸ்ட் 2003 இதழில் வெளியான ஆய்வு அறிக்கையின்படி ஒவ்வொரு ஆண்டும் 7 லட்சம் ஆண்கள் புகைபிடித்தல் சார்பான நோய்களால் மரணமடைவதாகவும், வாழும் காலம் 20 ஆண்டுகள் குறைந்துபோவதாகவும் தெரியவருகிறது. அதிலும் இறந்துபோனவர்களில் பெரும்பாலோர் நடுவயதினர் என்பதும் அதிர்ச்சியான செய்தி. இந்த விவரங்களின் அடிப்படையில் 2011ஆம் ஆண்டில் 1000 ஆண்களுக்கு 955 பெண்கள் என்ற விகிதத்தில் இருக்கக்கூடும்.

ஒருபுறம் பெண்கருக்கொலை, பெண்சிசுக்கொலை என்ற தாக்குதலும் மறுபுறம் நடுவயது ஆண்களின் அகால மரணம் என்ற தாக்குதலும் நம்முடைய நாட்டின் ஆண் பெண் விகிதாச்சாரத்தை அபாயவிளிம்பிற்கு கொண்டு செல்கின்றன.

இந்தப்பிரச்சினையை தற்போது கவனத்தில் எடுத்துக்கொண்டிருக்கும் இந்திய அரசு மூன்று கோணங்களில் இதை அணுகவேண்டும்.

1997க்குப் பிறகு பாலினவிகிதம் குறைந்துகொண்டுவருவதையும் அல்ட்ரா சவுண்ட் கருவிகளின் உபயோகம் அதிகரித்திருப்பதையும் அரசு கண்காணிக்கவேண்டும்.

இரண்டாவதாக தற்போதைய விதிமுறைகளை கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். புகைபிடித்தல், மதுப்பழக்கம் ஆகியனவற்றிற்கு எதிரான இயக்கங்கள் ஆக்கபூர்வமாக செயல்படவேண்டும்.

பெண் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள முன்வரும் தாய்மார்களுக்கு அரசு உதவிக்கரம் நீட்டவேண்டும்.

முதல் இரண்டு பெண்குழந்தைகளை உடைய தாய்மார்கள் மீது சிறப்பான கவனத்தை அரசு செலுத்தவேண்டும். சில மாநிலங்களில் இந்த தாய்மார்களுக்கு ரொக்கமாக பண உதவி வழங்கப்படுகிறது.

- மு.குருமூர்த்தி ([email protected])

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com