Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கட்டுரை

கவிதையின்மீது நடத்தப்படும் வன்முறை......
பிச்சினிக்காடு இளங்கோ

எது கவிதை? எப்படி இருக்கும் கவிதை? என்ற கேள்விகளுக்கு எத்தனையோ பதில்கள் இருக்கின்றன. கவிதையை இனங்காணுவது இன்றைக்கு எளிதாக இல்லை. ஏனெனில், வடிவத்தை வைத்தோ, கற்பனையை வைத்தோ, உணர்ச்சி வெளிப்பாட்டை வைத்தோ முடிவுசெய்ய முடியாது.

ஒரு காலத்தில் செய்யுளாக இருந்து, பின் நகர்ந்து செய்யுள் கவிதையாகிப், பின், அதையும் இழந்து வடிவற்ற நிலைக்கு வந்து விட்டது கவிதை ஒடித்துப் போட்டால்தான் கவிதை என்ற நிலையில் தேங்கித் திணறிக் கொண்டிருந்த கவிதை இப்பொழுது அதையும் இழந்து தட்டையாகிவிட்டது.

தட்டையாகிவிட்டதினாலேயே அது கவிதை இல்லை என்று சொல்லமுடியாது. தட்டையாக எழுதினாலும் உயிருள்ள சொல்லாலும், சொல்லும் அழகாலும், அது கவிதையென்று தன்னை இனங்காட்டும்.

" விளைந்த நன்செய் நிறத்தினிலே என் விழியை நிறுத்தினாள்.
என் நெஞ்சத்தில் குடியேறி மகிழ்ச்சி செய்தாள்...பசையுள்ள பொருளிலெல்லாம் பசையவள்காண்.
பழமையினால் சாகாத இளையவள்காண்...நசையோடு நோக்கடா எங்கும் உள்ளாள். நல்லழகு வசப்பட்டால் துன்பமில்லை" என்று தட்டையாக எழுதிச்சென்றாலும்" நிறத்தினிலே என்விழியை நிறுத்தினாள்" என்ற சொற்றொடரிலும்

"பழைமையினால் சாகாத இளையவள்காண்" என்ற சொற்றொடரிலும் கவிதை கண்சிமிட்டுவதை உணர்கிறோம்.

இந்தச்சொற்றொடர்களைச் சொல்லும்போதும்; சொல்லிப்பார்க்கும்போதும் தட்டையான அதாவது சமநிலை உணர்வை மனத்தளவில் பெறமுடியாது.

ஓர் உணர்வும் சுவையும் வியப்பும் சேர்ந்துவிடுகிறது. உச்சரிக்கும்போதே அதன் ஓசை உரைநடையிலிருந்து ஓங்கி ஒலிக்கிறது. உணர்வும் சுவையும் வியப்பும் கலந்து இவை வெறும் தட்டை வாக்கியமல்ல,உரைநடை அல்ல, ஏதோ ஒரு வித்தியாசமானது என்பதை உணர்த்துகிறது. அந்த வித்தியாசம்தான்; அந்த உணர்ச்சி இடைவெளியைத்தான் உரைநடையிலிருந்து உயர்ந்தது என்கிறோம். இது உரைநடையுமில்லை வசனமுமில்லை என்ற முடிவுக்கு வருகிறோம். ஆம் இது கவிதை என்று முடிவெடுக்கிறோம்.

ஒடித்துப்போட்டாலும், வளைத்துப்போட்டாலும், தட்டையாக்கினாலும் கவிதையின் வண்ணம்; லட்சணம் தெரிந்துவிடும். தன்மையோடும் உணர்வோடும் இடம்பெறும் சொற்கள் சொல்லிவிடும். தட்டையாய் எழுதவேண்டியதை கவிதை வடிவத்தில் எழுதிக்காட்டுவதால் கவிதையாகிவிடாது. கவிதையைத் தட்டையாக எழுதினாலும் அது உரைநடையாகிவிடாது. ஆனால், தட்டையாக எழுதி தட்டையாக வெளியிட்டால் அது கவிதையாகிவிடும் என்று எண்ணுவது தவறு. இங்கே இப்படி நான் குறிப்பிடக்காரணம் அண்மையில் தீராநதியில் தட்டைவடிவத்திலேயே கவிதை என்ற பெயரில் வெளியிட்டிருந்தார்கள்.

எப்படித் தட்டையாக வடிவம் தாங்கி வருகிறதோ அப்படியே அது தரும் உணர்வும்; அதனிடமிருக்கும் சொற்களும் தட்டையாகவே சோகைப்பிடித்திருப்பதால் அது எப்படி கவிதையாக முடியும்.

"தொடர்ந்து
சீராக வருடிச்செல்லும் காற்று
நல்ல உறக்கம் தருகிறது.
நன்றாக சாப்பிட்டபின்
வெளிச்சம் என்றாலும்
உறக்கம் வருகிறது.
புணர்ச்சியோ அல்லது
புணர்ச்சிமாதிரியோ
ஏதொ ஒன்றுக்குப்பிறகு
உறக்கம் வருகிறது.
புத்தக வாசிப்பும் இசைகேட்பதும்
உறக்கத்தை துவக்குகிறது.
சமயா சமயங்களில் இதுபோல
எதுவுமில்லாமலும் உறக்கம் வருகிறது.

இதுபோல எதுவுமில்லாமலும் உறக்கம் வரும்போது
உண்மையில் எதுவும் இருந்ததில்லையா என மனது கேட்கிறது."

தட்டையாக வெளியிட்டிருந்ததை நான் கவிதை மாதிரி தட்டச்சு செய்திருக்கிறேன். கடைசி வரியில் எதுவும் இருந்ததில்லையா என்ற கேள்வியில் கொஞ்சம் சிந்தனையிருக்கிறது. இது சாதாரணமாக உட்கார்ந்து உரையாடுகையில் நாமே கேட்டுக்கொள்ளும் கேள்வியே ஒழிய கவிதையின் அடையாளம் அல்ல.நான் கவிதைபோல தட்டச்சு செய்தும் கவிதையாக இல்லாத ஒன்றை வெறும் தட்டையாக வெளியிட்டு கவிதை என்று சொன்னால் எப்படி ஏற்க முடியும்?

கவிதை என்ற பெயரில் அதைக்கண்டதும் எங்கே கவிதை? எது கவிதை? எங்கே மறைந்திருக்கிறது கவிதை? என்று தேடத்தொடங்குகிறோம்.

தேடித்தேடிச் சலித்து விடுகிறோம். இப்படி எழுதுவதும் எழுதி வெளியிடுவதும் கவிதைமீது நடத்தும் வன்முறை என்று உணர்கிறேன். கவிதையைச் சாகடிக்கும் முயற்சியே என்ற முடிவுக்கும் வருகிறேன். பேராசிரியர் மறைமலை சொல்வதுபோல்"இது திட்டமிட்ட சதி" என்று சொல்ல வேண்டியிருக்கிறது. இதை கவிதையென்று என்னால் ஏற்கமுடியாது. கவிதையென்று நான் ஏற்க முடியாமல் போகலாம்.

தமிழ்ச் சமுகத்திற்கு நான் ஒரு பொருட்டல்ல. ஆனால் கவிதை மொழியின் சொத்து.படைப்பாளியின் முகவரி.கவிதை நிச்சயமாக உரைநடையில்லை.

உரைநடை வடிவத்தில் கவிதையை எழுதினாலும் உரைநடையை கவிதை வடிவத்தில் எழுதினாலும் கவிதை தன்னை தன்சொற்களால் அடையாளம் காட்டும்.கவிதை எப்படியும் நம்மைப் பார்த்து கண்சிமிட்டிவிடும். இந்த இடத்தில் கோவை. பொன்மணி தீராநதியில் எதிர்முகத்தில் தெரிவித்த "கவிதையின் கலைநிலை உரைநடையைவிட உணர்ச்சிகரமானது. உள் உணர்வுப்பூர்வமானது. திட்ட இயலைவிட வித்தியாசமான இயக்க நிலையில் குவிக்கப்படுகிறது. அழகியல் போக்கில் கூர்மையானது." அது மட்டுமல்ல "கவிதை என்பது அப்படியே கலையின் வயமாகி நிற்பது" என்று வழிகாட்டுகிறார்.

இயல்பூக்கம் இயல்பாகப் பெற்றவர்கள் எழுதுவது கவிதையாகிவிடுகிறது. ஊக்கம், உணர்வு இன்னும் எதுவும் இல்லாதவர்கள் கவிதை என்று எழுதினாலும் அது சவலையாகிவிடுகிறது. ஏன்? அது கவலையாகவும் ஆகிவிடுகிறது. இறுதியாக எழுதி எழுதித் தன்னைக் கரைத்துக் கொள்ளும் ஜெயமோகன் சொன்னதைப் பார்வைக்கு வைக்கிறேன்: "கவிதையின் அடிப்படை அழகு சொல். மற்ற மொழிவடிவங்கள் சொற்றொடராக எழுதப்படுகின்றன. வாசிக்கப்படுகின்றன. கவிதை சொற்களாக நிகழ்வது. சொற்களுக்கு நடுவேதான் அதன் வாசக் இடைவெளிகள் உள்ளன. நவீன கவிதை மட்டுமல்ல சங்கக்கவிதையில் கூட "இப்போதாவது கவிதை எது என்ற ஐயம்போகுமா?

- பிச்சினிக்காடு இளங்கோ ([email protected])

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com