கட்டுரை
அலைவாய்க்கரையில் இளமையின் எழுச்சி (சுனாமி நிவாரணப்பணிகளில் வாலிபர் சங்கம்)
ஒரு பதிவு
கண்ணன் திருவேட்டை
ரமேஷ்பாபு
செந்தில்
ச. தமிழ்ச்செல்வன்
முந்தைய அத்தியாயம்
6. நிவாரணப்பணிகளில் அடுத்தகட்டமாக...
1. மண்டபங்களில் இருந்த மக்களை மீண்டும் அவரவர் கிராமங்களை நோக்கித் திரும்பச் செய்யும் முக்கிய பணி காத்திருந்தது.
2. யார் யாருக்கு எவ்வளவு இழப்பு யாருக்கு நிவாரணம் கிடைத்தது, கிடைக்கவில்லை. என்ன கிடைத்தது என்ன தேவை என்று சரியான கணக்கெடுப்பு (சர்வே) எடுத்து அரசுக்கு எடுத்துச் சொல்லி நிர்ப்பந்தம் கொடுக்க வேண்டியிருந்தது. நேரடியாக நம்முடைய உதவிகள் சென்று சேரவும் கணக்கெடுப்பு அவசியமாக இருந்தது.
3. குழந்தைகளின் கல்வி தொடர பள்ளிகளைத் திறக்க வேண்டியிருந்தது. அதற்கு முன்பாக பள்ளிக்கல்விக்கு உதவியாகவும் மாற்றுக்கல்வியாகவும் இரவுப் பாடசாலைகள் துவக்க வேண்டியிருந்தது.
4. குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் தனித்தனியாக மனமாற்றத்துக்கான விளையாட்டுகள், கலை நிகழ்ச்சிகள் யோகா, கவுன்சலிங் போன்றவற்றுக்கு ஏற்பாடு செய்ய வேண்டியிருந்தது.
5. கிராமங்களுக்குத் திரும்பும் மக்களுக்கு அவர்கள் சகஜ வாழ்வு தொடங்கும் வரை தடையின்றி நிவாரணப் பொருட்கள் கிடைத்திட ஏற்பாடு தேவைப்பட்டது.
6. நிரந்தரக் குடியிருப்புகள் கட்டித் தர நிர்ப்பந்தம் ஏற்படுத்த வேண்டியிருந்தது.
7. எல்லாவற்றுக்கும் மேலாக படகுகளைச் சரி செய்தோ புதிதாக வாங்கியோ மக்களை கடலுக்கு மீண்டும் மீன் பிடிக்க அனுப்ப வேண்டிய்¢ருந்தது.
மண்டபங்களைவிட்டு கிராமங்களுக்குத் திரும்ப மக்களிடம் அச்சம் இருந்தது. பல குழந்தைகள் கடல் பக்கம் முகம் திருப்பிப் பார்க்கவே அஞ்சினர். மீண்டும் அங்கேயா என்கிற பயம் எல்லோர் முகத்திலும் இருந்தது. இன்னொரு பக்கம் மண்டபத்தை விட்டுப் போய் விட்டால் அரசு ஒரு உதவியும் செய்யாமல் விட்டு விடும். படகுகளும் இல்லாமல் மீன் பிடிக்கவும் போக முடியாது. உடனடியாகப் பட்டினியைச் சந்திக்க நேரும் என்கிற நியாயமான அச்சம் எல்லோரிடமும் இருந்தது.
முதல் கல் சின்னங்குடி கிராமத்தில் உருண்டது. சின்னங்குடி கிராமத்தில் டிசம்பர் 26 மதியத்திலிருந்தே வாலிபர் சங்கத் தோழர்கள் மக்களோடு நின்று பிணங்களை அகற்றுவதில் துவங்கி அத்தனை பணிகளும் ஆற்றி வந்தனர். மண்டபத்திலும் நின்று அத்தனை உதவிகளும் தினசரி செய்து வந்தனர். அவ்வூர் மக்கள் வாலிபர் சங்கத்தினரைத் தங்கள் சொந்த சகோதரர்களைப் போல பாவித்து வந்தனர்.
ஆகவே ஆறாவது நாள் சின்னாங்குடி மக்களைக் கூட்டி மண்டபத்தில் கூட்டம் நடத்தப்பட்டது. 30க்கு மேற்பட்ட வாலிபர் சங்கத் தோழர்கள் அக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். மக்கள் கேட்ட கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் தோழர்கள் பொறுமையாகவும் நிதானமாகவும் நடைமுறைரீதியாகவும் பதில் அளித்தனர். நீண்ட விவாதங்களுக்குப் பிறகு ஊருக்குத் திரும்புவது என்று அக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அவ்வூர் மக்களும் வாலிபர் சங்கத்தினரும் சேர்ந்து 600 பேருக்கு மேல் ஒன்றாக ஊர்வலமாகக் கிளம்பி சின்னாங்குடி போய்ச் சேர்ந்தனர். மனதில் நடுக்கமும் அதை மறைக்கும் பேச்சுகளும் பலர் முகங்களில் 26ஆம் தேதிய நினைவுகளால் உண்டான இறுக்கமுமாக அந்த ஊர்வலம் நகர்ந்து கொண்டிருந்தது. அது மறக்க முடியாத அனுபவமாகவும் காட்சியாகவும் இருந்தது.
சின்னாங்குடி போய்ச்சேர்ந்ததும் மீண்டும் அங்கே ஊர்க்கூட்டம் நடத்தப்பட்டது. புனர் நிர்மாணப்பணிகளுக்காக 20 பெண்களும் 30 ஆண்களும் கொண்ட ஊர் அமைப்பு உருவாக்கப்பட்டது. 70 இளைஞர்களைக் கொண்ட இளைஞர் குழுவும் அமைக்கப்பட்டது. வாலிபர் சங்கத் தோழர்கள் 30 பேர் அதில் இணைந்து கொண்டனர். இரண்டே நாட்களில் ஊர் சுத்தம் செய்யபட்டு மக்கள் வீடுகளுக்குள் புகுந்தனர். அந்த ஊர் நாட்டாமை இப்போதும் சொல்கிறார் “வாலிபர் சங்கப் பையன்கள் மட்டும் அன்னைக்கு வந்து கூப்பிடலேன்னா இன்னும் ஒரு மாசமாவது முகாமிலேயேதான் நாங்க இருந்திருப்போம்”
சின்னங்குடி அனுபவம் சிதம்பரத்தை அடுத்த பொன்னந்திட்டிலும் அப்புறம் அடுத்தடுத்த கிராமங்களிலும் தொடர்ந்தது. மக்கள் வீடு திரும்பத் தொடங்கினர்.
வாலிபர், மாணவர், மாதர் சங்கக் குழுக்கள் அறிவியல் இயக்கத்தினர் மற்றும் எய்ட் இந்தியா சார்பாக பல்வேறு நிறுவனங்களிலிருந்து வந்த குழுக்கள் என ஒவ்வொரு முகாமில் தொண்டர்கள் எண்ணிக்கை பெருகியது. படிவங்கள் அச்சிடப்பட்டு வீடுவீடாக-ஊர் ஊராக சர்வே எடுக்கும் பணி தீவிரமாக நடந்தது. கிராமங்கள் தோறும் இரவுப்பள்ளிகள் துவக்கப்பட்டன. அந்தந்த ஊர்களைச் சேர்ந்த படித்த பெண்கள், பையன்களைத் தொண்டராகக் கொண்டு அப்பள்ளிகள் இயங்கத் துவங்கின. ஏற்கனவே கடலூரில் துவங்கி பல மாவட்டங்களில் கடந்த இரண்டாண்டுகளாக வாலிபர் சங்கம் இரவுப்பாடசாலைகள் நடத்தி நல்ல அனுபவங்களோடு இருப்பதால் சுனாமி பாதித்த பகுதிகளில் பாடசாலைகளைத் துவக்குவதில் பெரிய சிரமம் இருக்கவில்லை. அவற்றைத் தொடர்ந்து நடத்துவதும் தொண்டர்களுக்கு இடைவிடாத பயிற்சி அளிப்பதும் தேவையான வாசிப்பு மற்றும் கற்பிக்கும் உபகரணங்களை அளிப்பதும்தான் சவாலாக இருக்கின்றன.
மனரீதியான ஆறுதல் படுத்தலும் சுனாமி பாதித்த கிரம மக்களுக்குத் தேவையாக இருக்கிறது. கடல் பற்றிய அச்சம் மட்டுமல்ல. வாழ்க்கை குறித்த நிச்சயமற்ற மனநிலை. சொந்த உறவுகளின் இழப்பால் ஏற்பட்டுள்ள விரக்தி மனப்பான்மை. வாழ்க்கையின் மீது ஒருவித பிடிப்பற்ற தன்மை-இவை பரவலாக எல்லோரிடத்தும் படிந்து விட்ட மனநிலைகள். ஆனால் இன்னும் சிலருக்கு மனப்பிறழ்வை நெருங்கிய மனநிலை ஏற்பட்டுள்ளது. அவர்களைத் தனியாக ஆறுதல் படுத்த வேண்டும்.
வாலிபர் சங்கத் தொண்டர்களுக்கு மன ஆற்றுதல் (கவுன்சலிங்) தொடர்பான பயிற்சிகள் அளிக்கப்படுள்ளன. முதலில் இரண்டு நாட்களும் பின்னர் ஐந்து நாட்களும் என தகுதிவாய்ந்த மனநல மருத்துவர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்பட்டது. பல்வேறு கிராமங்களில் அக்குழுக்கள் பலநூறு பேருக்கு மன ஆற்றுதல் செய்து வருகின்றனர். பாண்டிச்சேரி அறிவியல் இயக்கத்தின் முனைவர் திரு.பார்த்தசாரதி தலைமையில் இப்பணி இன்றும் தொடர்ந்து நடந்து வருகிறது.
- ச. தமிழ்ச்செல்வன்([email protected])
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|