Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கட்டுரை

அலைவாய்க்கரையில் இளமையின் எழுச்சி
(சுனாமி நிவாரணப்பணிகளில் வாலிபர் சங்கம்)
ஒரு பதிவு

கண்ணன்
திருவேட்டை
ரமேஷ்பாபு
செந்தில்
ச. தமிழ்ச்செல்வன்


4. இளைஞர் படை செய்து முடித்த முதற்கட்டப் பணிகள்

களத்தில் நின்று பணியாற்றிய ஒவ்வொரு தோழருக்கும் சொல்லுவதற்கு ஏராளமான அனுபவங்கள் இருக்கும். மக்கள் துயரத்தைத் தம்முடைய துயரமாகவே உணர்ந்து கவலையோடும் கண்ணீரோடும் அக்கறையோடும் அவர்களோடு நின்ற போது பெற்ற படிப்பினைகளும் ஏராளமாக இருக்கும். பல்லாயிரக்கணக்கான பக்கங்களில் எழுதப்பட வேண்டிய ஆவணம்தான் அதுவெல்லாம். இங்கே சிலவற்றை மட்டும் தொகுத்துத்தான் தர முடிகிறது.

Tsunami relief work 27ஆம் தேதி களமிறங்கிய தோழர்கள் முதல் கட்டமாக இரண்டு இடங்களில் தங்கள் கவனத்தைக் குவிக்க வேண்டியிருந்தது. ஒன்று கடல் தாக்கிய கிராமங்கள். இரண்டு உயிர் தப்பிய மக்கள் தங்கியிருந்த முகாம்கள்.

கிராமங்களில் முதல் ஒரு வாரகாலம் சடலங்களைத் தேடி பதிவு செய்து அடக்கம் செய்யும் கடினமான பணி மேற்கொள்ளப்பட்டது. தமிழகத்திலேயே அதிகமான பாதிப்புக்குள்ளான நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை மற்றும் கீச்சாங்குப்பம் கிராமங்களில் 30ஆம் தேதி வரை அரசு எந்திரம் எட்டிக்கூடப் பார்க்காத நிலையில் வாலிபர் சங்கத் தோழர்கள்தான் முதலில் களமிறங்கி முன்னணியில் நின்று நூற்றுக்கணக்கான சடலங்களை அப்புறப்படுத்தினர். ஊருக்குள் செல்லப் பயன்படும் பாலத்தின் மீது இருந்த தடைகளை உடைத்துத் தகர்த்துப் பாதையை ஏற்படுத்தியதே நம்முடைய வாலிபத் தோழர்கள்தான் என்பதை இன்றைக்கும் அவ்வூர் மக்கள் கண்களில் ஈரம் கசிய நன்றியோடு நினைவு கூறுகிறார்கள். ராணுவம் செல்லத் தயங்கிய முட்புதர்களுக்குள்ளேகூட நம்முடைய தோழர்கள் சென்று சடலங்களை இழுத்து வந்ததை ராணுவ வீரர்களே பாராட்டினர். ஆனாலும் எடுத்த சடலங்களை எரிக்க டீசலோ மண்ணெண்ணெயோ கூட அரசு ஏற்படு செய்து தரவில்லை. கடல் கொண்டுவந்து கரையில் ஒதுக்கிய கேன்களில் இருந்த டீசலை வைத்தே தோழர்கள் பிணங்களை எரித்தனர். அரசனாகப் பிறந்து சுடலையில் பிணம் எரிக்க நேர்ந்த அரிச்சந்திரனைப்பற்றி “ஆதியிலும் பறையனல்ல சாதியிலும் பறையனல்ல..” என்று காலமெல்லாம் காவியம் பாடும் நம் கவிமரபு வாலிபர் சங்கத் தோழர்கள் இத்தனை வசதிக் குறைவுகளோடு பிணங்களைத் தாங்களே தேடிக் கண்டு பிடித்துத் தாங்களே எரித்தது பற்றி எத்தனை காவியங்கள் படைக்கப் போகிறதோ தெரியவில்லை..

அடுத்த பத்துத் தினங்கள் கலைந்து கிடந்த ஊர்களை திருத்தியமைக்கும் பணி. தாறுமாறாகத் திரும்பிக் கிடந்தன ஊர்கள். அவற்றை ஒரு வடிவத்துக்குக் கொண்டு வருவதென்பது கடும் உழைப்பைக் கோரும் பணியாக இருந்தது. அசரவில்லை நமது படை.

காலையில் போய் இறங்கினால் இரவுவரை சிதிலங்களை அப்புறப்படுத்தி - ஊருக்குள் குட்டைகளாகத் தேங்கி நின்ற கடல்நீரை வெளியேற்றி வீடுகளுக்குள் ஏறியிருந்த மணல் மற்றும் ஏராளமான குப்பை கூளங்களை வாரி வெளியே போட்டு வீடுகளைக் கழுவிச் சுத்தம் செய்து அதற்காகக் குடம் குடமாகத் தண்ணீர் சுமந்து கிராமத்தின் தண்ணீர் டாங்க்குகளைச் சுத்தம் செய்து வேண்டாதவற்றைக் குவித்து எரித்து சுகாதாரக் கேடுகளைத் தவிர்த்து மணல் மேடுகளாகவும் பள்ளங்களாகவும் மாறிப்போயிருந்த தெருக்களை அவற்றின் பழைய வடிவத்துக்குக் கொண்டுவரப் போராடி - என பட்டியலிட்டால் நீண்டு கொண்டே போகும் பணிகளை செய்து முடித்து இரவில் முகாமுக்குத் திரும்புவார்கள். இரவில் அன்றைய பணிகள் பற்றிய அனுபவப் பகிர்வும் பரிசீலனையும் நடைபெறும்.

இத்தனை பணிகளையும் செய்வதற்கு உரிய உபகரணங்களோ கருவிகளோ பாதுகாப்புக் கவசங்களோ ஏதுமில்லாமல் கிடைத்த மண்வெட்டிகளையும் கூடைகளையும் வைத்துக் கொண்டுதான் தோழர்கள் பணியாற்றினார்கள் என்பதுதான் மிக முக்கியமானது. கையுறைகள் கூட இல்லாமல் நம் இளைஞர்கள் பிணங்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபடுவதைப் பார்த்த திருமலை கெமிக்கல்ஸ் நிறுவனத்தினர் மனம் பதைத்து தங்கள் செலவில் கையுறைகளும் பாதுகாப்பு உடைகளும் வாங்கித்தந்தனர். பிணங்களைத் தூக்கிய தோழர்கள் இக்கதியில் பணியாற்றிக்கொண்டிருக்க பார்வையிட (புகைப்படக்காரர்களோடு) வந்து சேர்ந்த அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் ஆள் தவறாமல் தடுப்பூசி போட்டுக்கொண்டு மூக்குக்கும் வாயுக்கும் சேர்த்து வெள்ளை உறை மாட்டி ஆளே அடையாளம் தெரியாமல் வந்து போனது நம் தோழர்களுக்குப் பெரும் சிரிப்பை வரவழைத்த காட்சியாக இருந்தது. கடும் பணி ஆற்றிய தோழர்களுக்கு கொஞ்சம் நகைச்சுவையும் வேண்டுமல்லவா என்று தலைவர்கள் நினைத்தார்கள் போலும்.

மண்டபங்களிலும் பள்ளிக்கூடங்களிலும் தங்க வைக்கப்பட்டிருந்த மக்களுக்கு அங்கே எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை. ஆயிரம் பேருக்கு இரண்டு கழிப்பறைகள் கூட இல்லாத நிலை நீடித்தது. பல இடங்களில் இருந்த ஒன்றிரண்டு கழிப்பறைகளும் அடைபட்டுக் கிடந்தன. நிவாரணப்பொருட்கள் லாரிகளில் வந்த வண்ணம் இருந்தன. அவற்றை வழங்குவதில் பெரும் குழப்பம் நிலவியது. முந்தியவர்களுக்கும் பலசாலிகளுக்கும் நிறையக் கிடைத்தது. சமமாகக் கிடைக்கவில்லை. லாரிகள் வந்த போதெல்லாம் கூச்சலும் அடிதடி சண்டையுமாக இருந்தது. எந்தெந்த ஊர் மக்கள் எந்த முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்பது யாருக்கும் தெரியவில்லை. அரசு அலுவலர்களிடம் அரைகுறையான தகவல்கள் மட்டுமே இருந்தன. கடல்கொண்டு போனதா காணாமல் போயினரா என்று அறியாமல் தங்கள் சொந்தங்களைத் தேடி மண்டபம் மண்டபமாக அலைந்து மக்கள் காணாமல் போனவர் பேர்களைச் சொல்லிக் கூவிக் கூவி அழைத்தபடி திரிந்தது பார்க்கும் எவரையும் கதறி அழவைக்கும் காட்சியாக இருந்தது. 1947இல் தேசப்பிரிவினையின்போது கானாமல் போனவர்களைத் தேடி முகாம்களில் அலைந்த மக்கள் பற்றிப் படித்திருக்கிறோம். ஆனால் இப்போது நேரிலேயே அந்த வலியை உள்வாங்கினோம்.

வாலிபர்சங்கம் ஒவ்வொரு மண்டபத்துக்கும் நாலு அல்லது ஐந்து தோழர்களைப் பொறுப்பாகப் போட்டு ஊர்வாரியாகப் பட்டியல் எடுத்து ஆஜர்பட்டியல் போலத் தயார் செய்து நிவாரணப் பொருட்கள் வந்தால் ஊர்வாரியாகப் பேர் வாசித்து மக்களை வரிசையில் நிற்க வைத்து எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும்படி ஏற்பாடு செய்தது. இந்த ஏற்பாடு செய்யாத நாட்களில் வந்த லாரிகளின் நிவாரணப் பொருட்களில் மக்களுக்குக் கிடைத்தது பாதி சிந்திச் சிதறியது பாதி என்கிற நிலைதான் இருந்தது. வாலிபர் சங்கம் அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தது. வந்த பொருட்களே மீண்டும் மீண்டும் வருவதைத் தவிர்த்து மக்களுக்குத் தேவையான பொருட்களை வரவழைக்கும் ஏற்பாட்டையும் வாலிபர் சங்கம் செய்தது. தற்காலிக ரேஷன் கார்டுகளும் ஒவ்வொரு நோயாளிக்கும் ஒரு சுகாதார அட்டையும் அச்சிட்டுக் கொடுத்தோம். குழப்பமான நேரங்களில் உறுதியான நடவடிக்கைகள் எத்தனை மனப்பாரத்தைக் குறைக்கும் என்பதை வாலிபர் சங்கத் தோழர்கள் செயல்முறையில் நடத்திக் காட்டினர்.

எங்கெங்கோ இருந்து வந்து கொண்டே இருந்த மருத்துவ உதவிக் குழுக்களை முறைப்படுத்தி தேவையான இடங்களுக்கு அனுப்ப முடிந்தது. கேரளத்திலிருந்து ஒரு பஸ் நிறைய 20 டாக்டர்களுடன் மருத்துவக் குழுவை இந்திய மாணவர் சங்கம் அனுப்பி வைத்திருந்தது. மேற்கு வங்கத்திலிருந்து 4 டாக்டர்கள் வந்து தங்கினர். தமிழகத்திலிருந்து டாக்டர்கள் பகட்சிங், லட்சுமி நரசிம்மன், ஆந்திராவிலிருந்து டாக்டர் மது போன்றோர் பத்து நாட்களுக்கு மேல் தங்கியிருந்து பல கிராமங்களுக்குச் சென்று பணியாற்றினர். மும்பையைச் சேர்ந்த டாக்டர் ராஜீவ் சுகாதார இயக்கத்தைக் கவனித்துக்கொண்டார்.

Tsunami victims பலநாட்கள் வரை பெண்களின் பிரத்யேகப் பிரச்னைகள் மற்றும் தேவைகள் பற்றிய பிரக்ஞையே இல்லாமலிருந்த நிலையில் மாணவர் சங்கம் மற்றும் வாலிபர், மாதர் சங்கப் பெண் தோழர்கள் பெங்களூர் இன்போசிஸ் நிறுவனத்திலிருந்து அனிஷா தலைமையில் வந்த பெண் தொண்டர்களுடன் களமிறங்கிப் பெண்களோடு பேசிய பிறகே பெண்களுக்கான உள்ளாடைகளும் சானிடரி நாப்கின்களும் எங்கிருந்தும் வரவில்லை என்பது உறைத்தது. பெண்மருத்துவர் இல்லாத காரணத்தால் பல பெண்கள் தங்கள் காயங்களைக் கூட காட்டிச் சிகிச்சை பெறாமலிருப்பதும் தெரிய வந்தது. மனம் பதறிய வாலிபர் சங்கம் உடனடியாகப் பெண்களின் தேவைகளைக் கணக்கில் கொண்டு பொருட்களையும் பெண் டாக்டர்களையும் வரவழைத்தது. கிள்ளை முகாமில் இருந்த தோழர்கள் மண்டபங்களில் தற்காலிகக் கழிப்பறைகள் கட்டிக்கொடுத்ததும் பல முகாம்களில் நம் தோழர்கள் கழிப்பறைகளைச் சுத்தம் செய்யும் பணியை மனமுவந்து செய்ததும் குறிக்கத்தக்க செயல்கள். அதன் பிறகு பெண்களின் மீது நமது முழுக்கவனம் திரும்பியது.

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய இன்னொரு பணி களவுபோன நகைகள், பணங்களை மக்களுக்கு வாலிபர்கள் மீட்டுக்கொடுத்தது. சுனாமி பாதித்த ஆளில்லாத கிராமங்களில் பக்கத்து ஊர்களைச் சேர்ந்த சில விஷமிகள் புகுந்து வீடுகளுக்குள் கிடந்த பொருட்களைக் கொள்ளையடித்தனர். பல இடங்களில் வாலிபர் சங்கத் தோழர்கள் அவர்களைக் கையும் களவுமாகப் பிடித்து காவல்து¨றையிடம் ஒப்படைத்தனர். பொருட்களை மண்டபங்களில் தங்கியிருந்த மக்களை அடையாளம் கண்டு ஒப்படைத்தனர். மக்கள் வாலிபர்களைக் கையெடுத்துக் கும்பிட்ட காட்சிகள் எல்லா முகாம்களிலும் நடந்தது. உதாரணத்துக்கு ஒன்று சொல்ல வேண்டுமெனில் பாப்பாகோவில் கிராமத்தில் உயிர்ச்சேதம் ஏதுமில்லை. ஆனால் கடல் கொண்டுவந்து போட்ட பிணங்கள் ஊரெங்கும் வயல் வெளியெங்கும் சிதறிக்கிடந்தது. சடலங்களை அகற்றப்போன வாலிபர்களுக்கு பாப்பாகோவிலைச் சேர்ந்த சில இளைஞர்கள் பிணங்கள் கிடக்கும் இடங்களைச் சரியாக அடையாளம் காட்டி உதவினர். அவர்கள் அடையாளம் காட்டிய பிணம் ஒன்றின்மீதும் நகைகளே இல்லாததைக் கண்ட வாலிபர் சங்கத்தினர் சந்தேகப்பட்டு அடையாளம் காட்ட வந்த அவர்களைப் பிடித்து உதைத்துக் கேட்ட போது முந்தினநாள் வந்து அவர்கள் திருடிச்சென்ற உண்மையும் நகைகளும் தன்னாலே வந்து சேர்ந்தன. அவ்வூர் மக்களே அவர்களை மேலும் உதைத்து காவல் துறையிடம் ஒப்படைத்தனர். இதுபோல எல்லா மாவட்டங்களிலும் சம்பவங்கள் உண்டு. உதவிக்கரங்கள் நம்மை உற்சாகப்படுத்தியதென்றால் இத்தகைய களவுக்கரங்கள் மனிதம் சீரழிந்து கிடப்பதை நமக்குச் சுட்டிக்காட்டி எதிர்காலம் பற்றிய கவலையை உண்டாக்கின.

பிணங்களை அகற்றி ஊரைச் சுத்தம் செய்ததும் மண்டபங்களில் நிவாரணங்களை முறைப்படுத்தியதும் முதற்கட்டப் பணிகள்தான். வாரத்துக்கு வாரம் பணிகளின் தன்மை மாறிக்கொண்டே வந்தது. தேவைகளும் மாறிக்கொண்டே வந்தது. அத்தனைக்கும் வாலிபர் சங்கம் ஈடு கொடுத்து நின்றது.

முந்தைய அத்தியாயம்அடுத்த அத்தியாயம்

- ச. தமிழ்ச்செல்வன்([email protected])


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com