Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கட்டுரை

1935: அமரர் ம. சிங்காரவேலு ஆசிரியரான ‘புது உலகம்’ இதழ்
தேவமைந்தன்

‘அடிமை இந்தியாவின் சமதர்மத் தந்தை’ என்று போற்றப்படும் அமரர் ம. சிங்காரவேலு அவர்களை ஆசிரியராகக் கொண்டு ‘புது உலகம்’ மாத இதழ் 1935ஆம் ஆண்டு மேதினம் அன்று சென்னையிலிருந்து வெளிவரத் தொடங்கிற்று. ஓராண்டுக் காலமே வெளிவந்த அதன் பத்து இதழ்களிலும் இடம்பெற்ற பனிரண்டு கட்டுரைகளைத் தொகுத்து ‘விடியலை நோக்கி’ என்ற தலைப்பில் தோழர் எம்.ஏ. பழனியப்பன் பத்தாண்டுகளுக்கு முன் வெளியிட்டார். அக்கட்டுரைகளின் சில கருத்துகளை இங்கே வைப்பதன்மூலம் சென்ற நூற்றாண்டின் முதற்பகுதியிலேயே சமூக விழிப்புணர்வும் சர்வதேச அரசியல் குறித்த முற்போக்குச் சிந்தனையும் எந்த அளவு மலர்ந்திருந்தன என்பது குறித்தும், இன்றைக்குப்போல் அல்லாத வகையில் கொள்கையின் பால் விசுவாசமும் தளராப்பிடிப்பும் ‘புது உலகம்’ இதழுக்கு நிலவியமையும் நமக்குத் தெரியவரும். இதழின் கொள்கைக்கு மாறான சமரசங்களைச் செய்துகொள்ளாதாலேயே இவ்விதழ் “நீண்ட காலம் நீடித்து வெளிவரவில்லை.”[எம்.ஏ. பழனியப்பன், என்னுரை]

-------------------------
சாமி. சிதம்பரனார், முற்போக்கா? பிற்போக்கா? (திசம்பர் 1935- மார்ச் 1936 இதழ்)

“பேச்சளவில் பழமையைப் பாராட்டலாம்; அதன் பெருமையைச் சரமாரியாகப் பொழியலாம்; அதைவிட்டால் மோசம் வந்துவிடும் என்று சொல்லலாம். ஆனால் செயலில் பழமையை அனுசரிக்கும் மனிதர்கள் யாரேனும் உண்டா?....... கம்பஞ்சோற்றை உண்பவன், சோளக்கூழைக் குடிக்கிறவன், கேழ்வரகுக்கூழ் சாப்பிடுகிறவன், அரிசிச் சோற்றையே மேலாகக் கருதுகிறான்! மற்றவைகளைக் காட்டிலும் அரிசிச்சோறு மேலான குணம் உடையதாக இல்லையாயினும், அதை விரும்புவதற்குக் காரணம் புதுமையில் உள்ள ஆசை.....

பழமையைப் புறக்கணித்து மேலும் மேலும் புதியதன் மேற் கருத்தைச் செலுத்துதலே மக்கள் இயல்பு...... பழமைப் பித்தர்களே எந்த நாட்டிலும் அவதார புருஷர்களாக விளங்குகின்றனர். உண்மையில் நோக்கினால், இப்படிப்பட்ட பழமை விரும்பிகளால்தான், மனித சமூகத்தில் முற்போக்கு அடிக்கடி தடைப்பட்டுத் தேங்கித் தேங்கிப் பின்தங்கி மெதுவாய்ச் சென்று கொண்டிருக்கிறது......

அறிவுடைய மக்கள் சிந்திக்க ஆரம்பித்தபின், கடவுளுக்கும் மதத்துக்கும் ஆட்டங்கண்டு விட்டது. இது வரையில் உலகில் நடந்த கொடுமைகளுக்கு அல்லது நன்மைகளுக்கு எந்தக் கடவுள், எந்த மதம் தடையாக இருந்தது? அல்லது உதவியாக இருந்தது?.............
உலகில் மனித சமூகத்தில் நடக்கும் காரியங்கள் எல்லாம் மனித அறிவால் - மனிதன் ஏற்படுத்திய சட்ட திட்டங்களாக நன்மையாகவோ தீமையாகவோ நடக்கின்றனவென்பதை யார் மறுக்க முடியும்? உலகம் இன்னும் சமாதானத்துடன் வாழத்தக்க சட்டங்கள் ஏற்படவில்லை. ஏற்படுத்தப்படவுமில்லை...பிற்போக்கு அதாவது பழமை அழிவுபட, அழிவுபட, இதுவும் ஏற்பட்டுவிடும் என்பதில் ஐயமில்லை.
ஆதலால், மாறுதலைக் கண்டு யாரும் அஞ்ச வேண்டிய அவசியமில்லை. மாறுதல்கள் முழுவதும் முற்போக்காகவே இருக்கும். ஏனெனில், அறிவில்லாத நிலையில் மாறுதல் உண்டாவதில்லை.....அறிவு வளர்ச்சிக்குப் பின் தோன்றும் மாறுதல்கள் நன்மையானதாக இருக்குமேயன்றித் தீங்கானதாக இருக்க முடியாது.”

------------------------------------
ஆசிரியர் பெயர் இல்லை, இனி நமது சந்ததியாருக்கு பிதுரார்ஜிதமென்ன? (1935 அக்டோபர் இதழ்)

“.....இல்லாத கடவுள்களை பிதுரார்ஜிதமாக வைக்கின்றோம். பயமும் திகிலும் பிதுரார்ஜிதமாக வைக்கின்றோம். வறுமையாலும், இல்லாமையாலும் நேரிடும் திருட்டு, கொலை, களவு முதலிய பஞ்சமாபாதகங்களையும் பிதுரார்ஜிதமாக வைக்கின்றோம்........
இன்னுமொரு பெரிய பிதுரார்ஜிதமுண்டு. அதாவது தேசீயமென்ற பிதுரார்ஜிதம். இந்தப் பிதுரார்ஜிதத்தால் விளையும் தீமைக்கு அளவே இல்லை. மகாயுத்தங்கள்,...நாடுகளைத் தாக்குதல், பல்லாயிரம் பேரைக் கொடும்போருக்குக் காவு கொடுத்தல், The dogs of war என்று வழங்கும் யுத்தத்தின் நாய்களான பசி, பஞ்சம், கொள்ளைநோய் முதலிய பீடைகள் ஆகியவற்றை நம் சந்ததியார்கள் அடைந்து வருகிறார்கள்........
நமது முன்னோர்கள் தெரியாமல் நமக்கு வைத்த கொடிய பிதுரார்ஜியங்களையா, நமது சந்ததியினருக்கு நாம் வைக்க வேண்டும்?”

--------------------------

இமாலயதவசி, நமது முன்னோர்களுக்கு நமது கடமை (1935 ஆகஸ்ட் இதழ்)

“...அவர்கள் இறந்த நாளைக் குறிப்பிட்டு திதி, தர்ப்பணம் முதலியவைகளைச் செய்கிறோம்......தண்ணீரை வாரி இறைத்தால் அவர்கள் மோட்சம் போவார்களென்றால், தண்ணீரில் அனுதினம் வாழும் மீன்களும், தவளைகளும் மோட்சத்திற்கு அருகராவார்களன்றோ? இது ஆபாசமான காரியம்.

அவர்கள், அதாவது நமது முன்னோர்கள், நமது நாகரீகத்தை உண்டாக்கியவர்கள். தழைகளைப் போர்த்திக் கொண்டு நாடோடிகளாகச் சென்றவர்கள். பஞ்சாடையும், கம்பளங்களையும் உடுத்தச் செய்தனர். தினம் ஒன்றுக்கு மூன்று மைல் நடக்க முடியாதவர்கள், மணி ஒன்றுக்கு முப்பது மைல் போகும்படி செய்தனர். அழகான கட்டடங்களையும், சிற்ப வேலைகளையும், நாடு நகரங்களையும் உண்டாக்கியவர்கள். கொடூர மிருகங்கள் வாயில் நாம் அகப்பட்டுக் கொள்ளாமல் இருக்க அம்பையும், வில்லையும், துப்பாக்கிகளையும் கண்டுபிடித்தவர்கள் அவர்களே!.....
இன்றிருக்கும் உலகை ஒருபடி உயர வைக்க வேண்டியதே நமது முன்னோர்களுக்கு நாம் செய்ய வேண்டிய கைம்மாறாகும்.”

------------------------

இன்னும் இதில் ‘கிரிட்டிக்’ என்ற புனைபெயரில் ஆசிரியரோ, கெளரவ ஆசிரியர் டி.என்.ராமச்சந்திரன் அவர்களோ 1935 ஜூலை இதழில் எழுதிய ‘சோதிட ஆபாசம்’ என்ற அருமையான கட்டுரையும், ஆசிரியர் ம. சிங்காரவேலு அவர்கள் 1935 ஜூன் இதழில் எழுதிய ‘அடிமையில் மோகம்’ (இதில் உளவியல் முன்னோடி பிராய்(ட்)-இன் கருத்தைப் பயன்படுத்தியுள்ள முறை சிறப்பாகவுள்ளது. எழுதப்பட்ட ஆண்டைக்கவனிக்க வேண்டும்..) என்ற சீர்திருத்தக் கட்டுரையும், ‘சமதர்மி’ என்ற புனைபெயரில் 1935 நவம்பர் இதழில் எழுதப்பட்ட ‘மதம் மாறுதலால் பயனுண்டா?’ என்ற அறிவுருவாக்கக் கட்டுரையும், சென்னை கே.எஸ். நாதன் அவர்கள் 1935 அக்டோபர் இதழில் எழுதிய ‘இயற்கையும் மூடநம்பிக்கையும்’ என்ற வித்தியாசமான சிந்தனைக் கட்டுரையும் நண்பர்கள் வாசிக்கத் தக்கவை. எழுபத்தோராண்டுகளுக்குமுன் இப்படிப்பட்ட கட்டுரைகள் கொள்கைப்பிடிப்புடன் வெளியிடப்பெற்றதன் சூழலையும் இன்று ‘டவுன்லோடு’(download) எழுத்தாளர்கள் எழுதிக்குவிப்பவை வியாபார நோக்குடன் வெளியிடப்பட்டுக் கொறிக்கும் வாசகர்களிடை அவை புகழடையும் சூழலையும் ஒப்பிட்டுப்பார்த்தால் தமிழர்களிடையில் மட்டும் காலம் பின்னோக்கிப் பாய்வதையும் ஆராய்ச்சி செய்ய ரிச்சர்ட் டாக்கின்ஸ்தான் வரவேண்டும்.********************************************

புத்தகத்தின் விவரம்:

விடியலை நோக்கி!
ராஜகுமாரி பப்ளிகேஷன்ஸ்,
4/19, முகப்பேரு கிழக்கு,
டாக்டர் ஜெ.ஜெ.நகர்,
சென்னை - 600 050.
தொகுப்பாசிரியர்;
எம்.ஏ. பழனியப்பன்.
முதற்பதிப்பு: ஏப்ரல் 1996.
பக்.:64.
விலை: ரூ. 15-00
*********************

- தேவமைந்தன் [email protected]
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com