Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கட்டுரை

கனவின் சொற்களால் விளைந்த துயரம்
தீபச்செல்வன்

கடந்த 13.06.2009 அன்று கனடாவில் ‘சுடருள் இருள்’ இலக்கிய நிகழ்வு நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் ‘பதுங்குகுழியில் பிறந்த குழந்தை’ சில பகிர்தல்களில் க.நவம், தர்ஷன் முதலியோர் விமர்சனங்களை நிகழ்த்தியிருந்தனர். இறுதியாக இந்த உரை வாசிக்கப்பட்டது. உரையை சுதன் வாசித்திருந்தார்.

அன்பிற்குரிய நண்பர்களுக்கு வணக்கம்,

நீங்கள் இப்படியொரு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதன் பின்பிருக்கிற கையறுநிலையை என்னால் மிகவும் உணர முடிகிறது. இந்த கவிதைகள் பற்றிய விவாதமும் விமர்சனமும் உங்களுக்குரியவை. அவை தொடர்பான உங்கள் கருத்துக்களை நான் ஏற்றுக்கொள்ளுகிறேன். வடிவத்தின் நேர்த்திக்கு அப்பால் நான் இன்று வாழ்ந்து கொண்டிருக்கிற வாழ்க்கையை இங்கு நிகழுகிற பெருந்துயரங்களை பதிவு செய்ய வேண்டும் என்ற கவனம் இருக்கிறது. இங்கு மிகத்துயரமான வாழ்க்கை நடந்துகொண்டிருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள்.

விடுதலைப் புலிகள் எல்லா இயக்கங்களையும் வெட்டி சாய்த்து தங்களை நிறுத்த முற்பட்டார்கள். அவர்களது பிழைத்த செயற்பாடுகளால் தமிழ்மக்கள் இன்று சூன்யமான அரசியல் இருள்வெளியில் கதியற்று நிற்கிறார்கள். கடைசிச்சமரில் இதுவரை எண்ணிக்கை அறியப்படாத பெருந்தொகை மக்கள் பலியாகியுள்ளனர். யுத்தம் முடிந்துவிட்டது. ஆனால் யுத்தத்தில் சிக்கி தவித்த மக்கள் இன்னும் அதன் வடுவில், அதன் நீட்சியில் மாட்டுண்டு தவிக்கிறார்கள். இலங்கை அரசாங்கம் நாளும் பொழுதும் வெற்றிகளை கொண்டாடிக்கொண்டிருக்கிறது. மீளமீள தோல்வியையும் வீழ்ச்சியையும் கொண்டாடி, முடிந்த யுத்தத்தை ஞாபகப்படுத்தி எங்கள் எல்லோரையும் துயரத்திற்குள்ளாக்கிறது.

LTTE இப்பொழுது எங்களுக்கேற்பட்டிருக்கிற கதி அதுதான். புலிகளது தோல்வியை தமிழர்களின் தோல்வியாகவும் அவர்களின் கனவின் தோல்வியாகவும் மகிந்தராஜபக்ஷவினால் சிங்ளவருக்கு வழங்கப்படுகிறது. புலிகளுக்கும் படையினருக்குமான சமர்கள் ஓய்ந்த போதும் இங்கு ஏதோ ஒரு சமர் நிகழ்ந்தபடிதானிருக்கிறது. யாழ்ப்பாணத்திலும் சோதனைக் கெடுபிடிகள் சந்தேகங்கள் இன்னும் அதிகரிக்கிறது. மிகவும் கஸ்டமாக இருக்கிறது. தப்பிவந்த புலிகளாக எல்லாரும் பார்க்கப்படுகிறார்கள். புலிகளது நடத்தைகளில் எங்கள் பலருக்கு விமர்சனம் இருந்தபோதும் சிங்கள உலகம் புலிகளின் வீழ்ச்சியை தலைதூக்க முடியாத தமிழர்களின் நிலையாக கருதுகிறது. வீழ்ச்சியின் பிறகான அடக்குமுறைகளையும் மெல்ல நிகழ்த்தத்தொடங்கிவிட்டது.

நானும் இந்த நாட்டை விட்டு வெளியேறிவிடலாம் என நினைக்கிறன். அம்மாவும் தங்கச்சியும் கடைசிச்சமரில்தான் உயிர் தப்பி வவுனியா வந்து சேர்ந்தார்கள். வருவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு விடுதலைப் புலிகள் 14வயதான எனது தங்கச்சியை பிடித்துச்சென்று கட்டாயமாக தங்கள் அமைப்பில் சேர்த்து களத்தில் விட்டார்கள். அவளது முடியை முழுமையாக வெட்டி விட்டார்கள். அவள் தப்பி வந்திருக்கிறாள். மொட்டைத்தலையாக இருப்பதால் கவலைப்படுவதாக அம்மா சொன்னார். இப்பொழுது அவர்கள் எனக்கு உயிருடன் கிடைத்திருப்பது பெரிய ஆறுதலைத் தருகிறது.

நீங்கள் நாடு திரும்பலாம் அதற்கொரு காலம் வரும் என்று காத்திருந்திருப்பீர்கள். ஆனால் இங்கிருந்து வெளியேறிவிடுகிற சூழ்நிலைதான் மேலும் தொடருகிறது. நீங்கள் எல்லா சூழ்நிலைகளையும் நெருக்கடிகளையும் அறிவீர்கள் என நினைக்கிறேன். தினமும் துவக்கால் அச்சுறுத்தப்படுகிற என்னால் ஓர் இரவில் வெளியில் ஒரு வீட்டில் தங்கியிருப்பதை நினைத்துப்பார்கக முடியவில்லை. வீதிகளில் பயமும் மரணமும் பின்தொடருவதைப்போல இருக்கின்றன. ஆனால் பலர் இங்கு மௌனிகளாக இருக்கிறார்கள். இங்கிருக்கிற நமது சில படைப்பாளிகளே என்னை சந்திக்க விரும்ப மாட்டார்கள். இந்த அரசியற் சூழல் என்னை எனது சமூகத்தலிருந்து தேசத்திலிருந்து அந்நியமாக்கிறது.

மரணம் காத்திருக்கிற ஓர் உயிராக என்னை விட்டிருக்கிறது எனலாம். சொற்களாலும் கனவினாலும் இப்படி துயரம் விளைந்து விட்டது. “எல்லாம் கைவிட்டு ஒழுங்காக இருந்தால் வாழலாம்” என்ற தீர்வை என்னால் பின்தொடர முடியவில்லை. அதற்கிடையிலான போராட்டமாக நாட்கள் போகின்றன. இவை எதையும் அம்மாவிடம் சொல்லவில்லை. அவருக்கு இப்படியொரு நிலையை அறிவது மேலும் துயரத்தை வழங்கிவிடும். அம்மாவையும் தங்கச்சியையும் சேருகிற பார்க்கிற நாட்களுக்காக காத்திருக்கிறேன்.

ஒரு குருட்டுத்தனமான பயங்கர வெளியில் இந்த சனங்கள் வாழுகின்றனர். ஈழம் பற்றிய கனவு எனக்கு என்றைக்கும் இருக்கும். புலிகளின் தோல்வி அந்தக் கனவை குலைத்துவிடவில்லை. அதற்கான சாத்தியங்கள் எதுவும் இங்கு இல்லாமலிருக்கிறது. இப்பொழுது இராணுவத்தின் அணுகுமுறைகளும் பார்வைகளும் அதிகாரங்களும் இருந்ததைவிட அதிகரித்து வருகின்றன. இவற்றிற்கு இடையில் எதிர்ப்பும் கசப்பும் காட்டிக்கொடுப்பும் நிகழ அச்சம் தருகிற பொழுதுகளாக வாழ்வு கழிகின்றன. விடுதலைப் புலிகள் தங்களை விமாசனத்திற்கும் மனிதநேயத்திற்கும் உட்படுத்தியிருந்தால் எங்களால் வாழக்கூடிய சூழ்நிலை தோன்றியிருக்கும்.

என்றைக்கும் தாங்க முடியாத பிரிவாகவும் இழப்பாகவும் கிளிநொச்சியின் வீழ்ச்சி நிகழ்ந்தேறிவிட்டது. கிளிநொச்சியில் மிகவும் பிரியம் கொண்டு வாழ்ந்திருந்தேன். இரவுகளில் அதன் தெருக்களை இரசித்தபடி சைக்கிளில் செல்லுகிற ஞாபகங்கள் மீள வரப்போவதில்லை என்கிறபோது மிகத்துக்கமாக இருக்கிறது. உடைய உடைய நாங்கள் கட்டிய சிறிய குடிசை அங்கு தகர்ந்துபோயிருக்கும். இனி அதை எழுப்பி வாழத்தொடங்குவது எப்படி முடியப்போகிறது, அங்கு இனி எப்படியான வாழ்க்கை நடக்கப்போகிறது என்று கேள்விகள் எழுகின்றன. எங்கு அலைவது எங்கு ஒளிவது என்றெல்லாம் தெரியவில்லை.

எப்பொழுதும் சரிந்துவிடலாம் என்ற வாழ்வில் சொற்களை விட்டுச் செல்லுவது பயனுடையதாக இருக்கும் என நினைக்கிறேன். அச்சுறுத்தலுக்குள்ளும் சவாலாக வாழவேண்டும் போலிருக்கிறது. என்னை என்னால் அடக்கவும் மௌனியாக்கவும் முடியவில்லை. துவக்கு என்றைக்கும் வாய் பிளந்தபடியிருந்தபோதும் சொற்களற்று எதிர்ப்பற்று இருக்க முடியவில்லை. இம்முறை வன்னியின் துயரங்களை நான் நேரடியாக அனுபவிக்கவில்லை. அம்மா எப்போதாவது பேசுகிறபோது அந்த வாழ்க்கையின் பெருந்துயர்களை கூறிக்கொண்டிருப்பார். ஆனால் கனவுகள் அந்த யுத்த பூமியில் வாழ்வதாகவே நிகழ்ந்து கொண்டிருந்தன. கொடுங்கனவுகளைக் கண்டு அம்மாவையும் தங்கச்சியையும் நித்தம் பறிகொடுத்து அலைந்து, தூக்கம் கலைந்த பிறகும் அழுதுகொண்டிருப்பேன்.

நாங்கள் இங்கு எங்கள் அடையாளத்திற்காகவும் எங்கள்மீது திணிக்கப்படுகிற அதிகாரத்திற்கு எதிராகவும் எதாவது செய்து கொண்டிருப்போம். நீங்களும் செய்து கொண்டே இருங்கள். இருப்பை வைத்திருப்பது மிக முக்கியமானது. வீதிகள் இன்னும் மூடப்பட்டுத்தானிருக்கிறது. போர் பயிற்சிகள் நடக்கும் சத்தமும் கேட்டபடிதானிருக்கிறது. இராணுவம் அதே உசார் நிலையில் அதே பதற்றத்தில் தெருக்களிலிருந்து மக்களை ஒதுக்குகின்றது. அவர்களிடம் இந்த யுத்தநோய் தீரப்போவதில்லை. துவக்குகள் இங்கு தூங்கும் நாள் ஒன்று வரும் என நினைக்கவில்லை. மறைவாக அழிப்பு நடக்கிறது. பிரபாகரன் இறக்கவில்லை என வாதாடியவர் பிறகு துண்டுதுண்டாக வெட்டி கொலை செய்யப்பட்டிருந்தார் என்கிறார்.

என்னுடன் படிக்கிற சில நண்பர்கள் மிக ஆதரவாக ஆறுதலாக கவனமாக பார்த்துக்கொள்ளுகிறார்கள், சேர்ந்திருக்கிறார்கள். நெடுக எனக்கு மின்னஞ்சல் வாயிலாக ஆறுதல் தருகிறவர்களாக ஹரிகரசர்மா, பிரதீபா, தமிழ்நதி, றஞ்சனி போன்றவர்கள் இருக்கிறார்கள். மாதுமை எனக்கான எல்லா செலவுகளையும் செய்து மிகவும் அன்புடன் பார்த்துக்கொள்ளகிறார். பக்கத்தில் இருப்பவர்களைவிட தூரத்திலிருந்து மனதால் நெருங்கியிருக்கிற அந்த நண்பர்களை நெடுக நினைவு கூறுகிறேன்.

எழுதுவதை எந்த சூழ்நிலையிலும் கைவிட்டதில்லை. எழுவதற்கு மனம் சரியில்லை என்றதை ஒருநாளும் உணர்ந்ததில்லை. நெருக்கடியிலும் துயரத்திலும் பேசாமல் எழுதுவதைத்தவிர எதுவும் எனக்கு ஆறுதலாக இருக்கவில்லை. உங்கள் கருத்துக்களின் பதிவை எனக்கு அனுப்பி வையுங்கள். அவை எனக்கு எல்லாவித்திலும் ஆறுதலாகவும் உந்துதலாகவும் இருக்கும். நம்பிக்கை முற்றாய் இழந்துபோயிருக்கிற என்னால் அதே நிலையில் இருக்கிற உங்களுக்கு நம்பிக்கை எதுவும்கூற முடியவில்லை., நம்பிக்கை என்பது எங்களிடம் வெறும் வார்த்தையாகிவிட்டது. உங்களுடன் இந்த சொற்களைப் பகிருவதில் ஆறுதலாக இருப்பதை உணருகிறேன். இந்த நிகழ்வை ஒழுங்கு செய்த நண்பர்களுக்கும் பங்கு கொண்ட நண்பர்களுக்கும் தகவல் தந்த நிவேதாவுக்கும் நன்றிகள்.

மிக்க அன்புடன்

- தீபச்செல்வன் ([email protected])

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com