Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
விமர்சனம்

சதாரண சினிமாவா? சாதனை சினிமாவா?
தா. சந்தரன்

அமீர் அண்ணனுக்கு வணக்கங்க,

உங்க பருத்திவீரன் படத்த ரெண்டு நாளைக்கு முன்னாலதான் பாத்தேனுங்க. ஊரே பாராட்டி முடிஞ்சு, கிட்டத்தட்ட நீங்களே அதை மறக்கற இந்த நேரத்துல தானுங்க உங்கபடம் எங்க ஊருக்கு வந்துச்சு. உங்காளுங்க சொல்ற மாதிரி ‘சி’ சென்டருங்க நம்மூரு தியேட்டரு. அதான் கொஞ்சம் லேட்டாயிருச்சு. பத்திரிகைக, டீவிக, சினிமாக் காரங்க, அதுல இருக்குற அறிவுஜீவிங்க அல்லாரும் ஒங்கள பாராட்டிட்டாங்க. ஒலகத்தரத்துல ஒங்க படம் இருக்கறதாவும் பாராட்டியிருக்காங்க. யதார்த்தமா படம் எடக்கறீங்கன்னும் சொல்றாங்க. ‘காதல்’ ‘வெயில்’ டைரக்டருங்களும், நீங்களும் புதுசா எதாச்சும் பண்ற எளரத்தம்னு மலையாள டைரக்டர் ஒருத்தரு வேறெ பாராட்டறாருங்க.

இந்த நேரத்துல வழக்கமான தமிழ்சினிமா மாதிரி இல்லாம இருக்றதுக்காகவும் வழக்கத்தைவிட மோசமா இருக்கறதுக்காகவும் உங்க படத்தைப் பத்தி உங்க மூலமா எல்லாருக்கும் தெரியற மாதிரி ஒரு கடுதாசி எழுதணும்னு தோணித்தானுங்க இத எழுதுறேன்.

நல்லா ஓடுற சினிமாவை திட்டி எழுதியே பெரிய மனுஷனா காட்டிக்கறானுக சிலபேருனு ஒரு கெட்ட பேரு சினிமாவப் பத்தி எழுதுறவங்களுக்கு உங்காளுக குடுக்குற பட்டமுங்க. இப்ப கிட்டத்தட்ட படம் ஓடி முடிஞ்சப்ப இத எழுதுறதால அப்படியெல்லாம் நீங்க சொல்ல மாட்டீங்கன்னு எனக்குப் படுதுங்க.

பருத்திவீரனுக்கு முன்னால நீங்க எடுத்த மத்த ரெண்டு படத்தப் பத்தி கொஞ்சம் சொல்லிட்டு அப்புறமா இதப் பத்தி பேசலாமுனு தோணுச்சு. மொதல்ல நீங்க “மெளனம் பேசியதே”னு ஒரு படம் பண்ணினீங்க. உலகம் பொறந்த காலத்துல இருந்து ஒருவேளை அழிஞ்சு போகும்னா அது வரைக்கும் இருக்கற காலதப் பத்தி படம் எடுத்திருந்தீங்க. ஆனா எல்லாரும் சொல்ற மாதிரி சொல்லாம கொஞ்சம் வித்தியாசமா சொல்லியிருந்தீங்க. அதனாலதான் உங்களப்பத்தி அங்கங்க பேசுனாங்க. அந்தப் படத்துல எத்தனையோ சீன்ல ஹீரோவையும், ஹீரோயினையும் வெச்சு ரவுண்டு கட்டி அடிக்கறுதுக்கு சான்ஸ் இருந்தும் அடக்கி வாசிச்சிருந்தீங்க. அதனாலதாங்க அந்தப் படம் மத்தவங்கள்ல இருந்து உங்கள வித்தியாசமா காட்டுச்சு. ஒரு மொரட்டுத்தனமா காதலவே புடிக்காதவனுக்கு காதல் வருதுங்கற சமாச்சாரந்தாங்க படத்துல சென்டர் பாயிண்ட். இப்படி எதுரெதுரா இருக்கற சமாச்சாரத்தப் பக்கத்துல வெச்சுப் பார்த்தாலே படம் பாக்கறவங்களுங்களுக்கு ஒரு இண்ட்ரஸ்ட் வந்துருமுங்க. இந்த டெக்னிக்தானுங்க சென்டிமெண்டா போட்டுத் தாக்கற எல்லா டைரக்டருங்களும் புடிச்சு வெச்சிருக்கற மாயாஜாலமாய்மால டெக்னிக்குங்க. நாட்டக் காப்பாத்தறது, பொம்பளைங்க கற்பக் காப்பாத்தறது, மொரடனைத் திருத்தறது, மொண்ணையா இருந்தவன் புலியா மாறதுன்னு இப்படி ஒண்ணுக்கொண்ணு விரோதமா இருக்கறத எடத்த மாத்திப் போட்டா ஈஸியா ஜனங்களுக்குப் புடிச்சுப் போகுமுங்க. இப்படி கதை இருக்கும் போது பாத்தீங்கன்னா சீனுக்கு சீன் ஊடுகட்டி அடிக்கலாமுங்க. இந்த டெக்னிக்கூட டெக்னாலஜி கலந்து அடிச்சா சும்மா ஒலகத்தரத்துக்கு சுலபமா போயரலாங்க.

கொழந்தைகள உட்டு பெருசுங்க சமாச்சாரத்த பேச வெக்கற மணி அண்ணன்ல இருந்து அடுத்தவங்க காசுன்னா கோடிக் கணக்குல செலவு பண்ணவெச்சுட்டு, அவுரு படம்னா செலவே இல்லாம படமெடுக்குற சங்கர் அண்ணன் வரைக்கும் எல்லாருமே இந்த டெக்னிக்கதானுங்ணா வெச்சுட்டு இருக்காங்க. ஆனா மெளனம் பேசியதே படத்துல ஊடுகட்டி அடிக்காம அடக்கி வாசிச்சதால அந்தப் படம் பாத்த மனசு லேசான மாதிரி இருந்துச்சுங்க.

அதுக்கப்புறம் ‘ராம்’னு ஒரு படம் பண்ணீங்க பாருங்க அதுல கொஞ்சம் கனமான விசயத்த கதையா எடுத்துட்டீங்க. அதாவது அடடே இப்டியுமா இருக்கும் அப்படீனு அசந்து போறாப்புல, “அய்யயோ இப்புடி ஆயிடுச்சே” அப்படீனு சங்கடப்பறாப்புல, “அதானே பாத்தேன் நம்மாளு அசத்திருவான்ல” அப்படீனு சந்தோசப்படறாப்புல ஏகப்பட்ட சீன் படத்துல வர்ற மாதிரி கதையா பாத்து எடுத்துகிட்டீங்க. இப்பிடி எல்லாம் இல்லாம சாதாரணமா ஒரு கதய எடுத்துட்டு, சாதாரணமா நடக்கற விசயங்கள காட்டி நமக்கு மனசுக்குள்ளாற இருந்து, சங்கடமோ, சந்தோசமோ வர்றமாதிரி, நம்ம கூட இந்த மாதிரி எங்கியோ ஒரு நா இப்படித்தான் இருந்தமே அப்படீனு நெனைக்கற மாதிரி படம் எடுக்கறது இருக்குது பாத்தீங்களா அதானுங்க யதார்த்தமான படம். உலகத்தரமான படம்.

ஆனா படத்துல எதாவது ஒரு சீன்ல யதார்த்தத்த காட்டிட்டு, படம் சென்டிமெண்ட்டா போட்டுத் தாக்கறவங்கள நம்மூர்ல யதார்த்தமான சினிமா எடுக்கற ஆளா பாராட்டுறாங்க. ஆனாலும் பாருங்க ‘ராம்’ படத்துலயும் நீங்க ஆர்ப்பாட்டமா இருக்க வேண்டிய சீன்ல எல்லாம் கொஞ்சம் அடக்கியே வாசிச்சுட்டீங்க. இங்கதாங்க எனக்கு உங்கமேல பிரியமுங்க. மத்தவங்கள மாதிரி பாக்கறவங்கள குஷிப்படுத்தி பாக்கலாமுனு நெனைக்காம நீங்க என்ன நெனெக்கறீங்களோ அத பாக்கறவங்களும் நெனச்சுப் பாக்கனுமுன்னு படம் எடுத்தீங்க. அதனாலதான் நீங்க ஒரு பேட்டில சொன்னீங்க “மெளனம் பேசியதே” படத்துல விஜயோ, அஜீத்தோ பண்ணியிருந்தா படம் நல்லா ஓடியிருக்கும், ‘ராம்’ படத்துல சூர்யவோ, விக்ரமோ பண்ணியிருந்தா இன்னமும் நல்லா ஓடியிருக்கும், ஆனா அதுல எனக்கு ஏனோ இஷ்டமில்லீனு சொன்னீங்க.
ஆனா ‘பருத்திவீரன்’ படத்துலதாங்க நீங்க சிலிப் ஆயிட்டீங்களோனு எனக்கு படுது. ராம் படத்தவிட ரொம்ப கனமான ஒரு விசயத்த கதயா எடுத்துட்டீங்க.

ஆருக்கும் அடங்காத ஊருக்குள்ளார ரகள பண்ணிட்டுத் திரியற ஒரு ஆளப் பத்தி படம் எடுத்தா எந்தளவுக்கு பாக்கறவங்கள கட்டிப் போடற மாதிரி சீன் எல்லாம் வெக்கலாமுனு சினிமாப் பத்தி சாதாரணமா தெரிஞ்வங்களுக்குக் கூடத் தெரியுமுங்க. அப்படியிருக்கும் போது நீங்கபோய் இப்பிடி ஒரு கதய படமா எடுக்க நெனச்சத பாத்தா கஷ்டப்படாம படம் எடுக்க முடிவு பண்ணீட்டீங்களோனு தோணுது.

சின்னப்பயலா இருக்கும்போதே மொறப் பொண்ணுக்கு முத்தங்கொடுத்துட்டு, அப்பிடித்தான்னு அடாவடியாப் பய்யன் பேசுறத மொதல்லயே காட்டிட்டீங்க. கிளைமாக்ஸ்ல ஆரம்பிச்சுட்டீங்க, சூப்பர் கிளைமாக்ஸ்ல முடிக்கனுங்கற கட்டாயம் ஆகிப்போச்சு உங்களுக்கு. மணி அண்ணங்கூட அஞ்சலி படத்துல இப்பிடித்தாங் கொழந்தைகள காட்டியிருப்பாரு, நீங்களும் அப்பிடி ஆரம்பிச்சுட்டீங்களோன்னு நெனக்கும்போது கஷ்டமா இருக்குதுங்க.

அப்பிடியிருந்தாலும் ஒரு விசயம் கொஞ்சம் ஆறுதலா இருந்துச்சுங்ணா. ரவுடிப்பயபுள்ளையாலரொம்ப ரத்தஞ்சிந்த வெக்காம வெளையாட்டா கொண்டு போனீங்க பாருங்க அந்தளவுக்கு ரொம்ப சந்தோசமுங்க. ஆனாலும் படம் பூரா சிந்த வேண்டிய ரத்தத கடசி சீன்ல சிந்தி செவப்பாக்கிட்டீங்களேண்ணா நியாமுங்களா?

இந்த எடத்துலதான் சிலிப் ஆயிட்டீங்களோனு தோணுச்சுங்க. அந்தப் பய்யன் பண்ண தப்புக்கு அந்தப் பொண்ணுக்கு நீங்க தண்டன குடுத்தீங்க. அதுகூட படத்துக்கு ஒரு எபெக்ட் குடுக்கறதுக்குனு வெச்சுட்டாலுங்கூட அவ்வளவு தூரம் விளக்கமா அந்தக் கஷ்டத்தக் காட்டிட்டீங்களே. ஏனுங்க அப்பிடி பண்ணீங்க. படத்த ஒரு கெத்துல கதாநாயகத் தோள்ல ஏத்தி கொண்டாந்துட்டீங்க திடீர்னு முடிக்கற மாதிரி ஆகிப் போச்சு. சாதாரணமா முடிச்சா எதாவது ஆயிருமோனு பயந்துட்டீங்ணா. அதான் ரொம்ப கொடூரமா முடிச்சா எபெக்ட் சும்மா சூப்பரா இருக்கும்னு முடிவு பண்ணிட்டீங்க.

இந்த எடத்துலதானுங்க எனக்கு ஒரு சந்தோகமுங்க படத்துல எதாவது மெசேஜ் சொல்ல வந்தீங்களா இல்ல ரவுடிப் பயலப் பத்தி கலாட்டாவா காட்டி படத்த ஓட்டிரலாமுன பாத்தீங்களானு? எந்த மெசேஜும் சொல்ல வரலீனு நீங்க சொல்ல முடியாதுங்கண்ணா. ஏன்னா கடசீல அந்தப் பொண்ணு “உன்னைத்தவிர யாருக்கும் இந்த ஒடம்பக் காட்ட மாட்டேன்னு இருந்தாளே, இப்பிடி ஆயிடுச்சேனு ரொம்ப வருத்தப்பட்டு சாகறமாதிரி பண்ணிட்டீங்க. உடனே உங்காளு அறுவாள எடுத்து “ அந்தப் பொண்ண கண்டந்துண்டமா வெட்டி அந்தப் பொண்ணுக்கு நடந்த கொடுமய மறச்சு அந்தப் பொண்ணு மானத்தக் காப்பாத்திட்டானுங்க”.

இந்த எடத்துலதானுங்க நீங்க ஒரு மெசேஜ் குடுத்துட்டீங்க மானம் போனத ஊருல யாருக்கும் தெரியாம காப்பாத்திரனும்னு ஒரு மெசேஜ் குடுக்கறீங்க. அதாவது உசுர உட்டாவது, இல்லீனா உசுர உட்ட பின்னாடியாவது மானத்தக் காப்பாத்திரனுமுன்னு ஒரு மெசேஜ் குடுக்கறீங்க நியாயமுங்களாணா. 25 வருசத்துக்கு முன்னாடியே “பொண்ணுங்கள யாராவது கற்பழிச்சுட்டாங்கண்ணா அந்தப் பொண்ண தப்பா பாக்கக்கூடாது பண்ணுன அயோக்கியனுங்களோட தப்பத்தான் பாக்கனும், அதுக்காக அந்தப் பொண்ணு வாழ்க்கை பாதிக்கக்கூடாது அதப் பெருசா எடுத்துக்காம சகஜமா வாழணும்” அப்படீங்கற மெசேஜ் தமிழ் சினிமாவுல கொடுத்துட்டாங்களே நீங்க பாக்கலீங்களாணா? 25 வருஷத்துக்கு முன்னாடி இந்த மானம், கற்பு ஒழுக்கத்தப் பத்தி எல்லாம் எவ்வளவு இருக்கமா நம்மாளுங்க இருந்தாங்க. அப்பவே அப்டிப் படம் எடுத்தாங்களே, நீங்க என்னடான்னா இப்பப் போய் எவனோ செஞ்ச தப்புக்கு நியாயம் கூடக் கேட்க நெனக்காம கற்பு, மானத்த எல்லாம் காப்பாத்தனும்னு கௌம்பியிருக்கீங்க. இது காலத்த பின்னால இழுக்கற வேலையா உங்களுக்கு தெரியலீங்களாணா. கொஞ்சம் நீங்க யோசிக்கனுங்க.

இந்தத் தப்பு எங்கிருந்து ஆரம்பிக்குதுன்னு நீங்க பாக்கணுங்க. சின்னப் பசங்களா இருக்கீல சொன்ன ஒரு விசயத்துக்காக பெருசாகி, படிச்சு, வளந்தாலும் உடாம அந்த விசயத்தப் புடுச்சுத் தொங்கற ஒரு நெனப்புல இருந்துதாங்க கதை தொடங்குது. ஏன்னா ஆசை வெக்கறதுக்கு அறுவா, ரத்தமெல்லாந் தேவைப்டாதுங்கண்ணா. ஆனா நீங்க மேலோட்டமா ஒரு காரணத்த வெச்சுட்டதுனால தானுங்க கற்பப் போய் கட்டிப்புடிச்சு, அத அருவாளால காப்பாத்தப் பாத்திருக்கீங்க.

உடனே நீங்க கேட்கறது எனக்கும் கேட்குதுங்கண்ணா. “அப்பிடி கற்ப, மானத்த காப்பாத்தற ஒரு பொண்ணா என்னோட கதாநாயகிய காட்டுனதுல என்ன தப்புன்னு தான கேக்கறிங்க” சரிதானுங்க ஆனா அந்த ஒத்த ஊட்டுப் பக்கமும், மோட்டார் ரூம்பக்கமும் ஒதுங்கறாங்கனு காட்டீருந்தீங்களே அந்தப் பொண்ணுகளோட கற்பப்பத்தி, மானத்தப்பத்தி எல்லாம் ஏனுங்கணா யோசிக்காம உட்டுட்டீங்க. இவ்வளவுக்குப் பின்னாடிமு ஒரு விசயத்துல உங்களப் பாராட்டத் தோணுதுங்கணா நம்ம கமல் அண்ணாத்த மாதிரி வீரத்த மொத்தக் குத்தகைக்கு ஒரே சாதிக்குக் குடுக்காம, பிரிச்சு குடுத்திருகீங்க பாருங்க, அதுல எனக்கும் கொஞ்சம் சந்தோசமுங்க.

இதெல்லாம் நான் ஏன் சொல்றேன்னா ரொம்ப சாதாரணமான, அருவாளெல்லாம் எடுக்காத ஆளங்களப் பத்தி அருமையான படம் எடுக்க யோசிக்காட்டாலும் பரவால்லீங்ணா, ரவுடி, அருவா, ரத்தம், மானம் இதயெல்லாம் காமிச்சா ஒலகத்தரம்னு மத்தவங்க சொல்றத நம்பிராதீங்கனு சொல்றதுக்குத்தானுங்க.
ஊர்ல நல்லபடியா வாழமுடியாத, வாழப் புடிக்காத சனங்கள்ல ஒருத்தனப் பத்திப் படம் எடுத்துதுக்கு பாராட்டோனுமுன்னு தோனுதுங்க. ஆனா அப்படிப்பட்ட ஆளுங்களப் பத்தி நம்மூர்ல ரோட்டோரத்துல பொழைக்கற ஆளுங்களப் பத்தி நெசமா ஏதுன, யதார்த்தம்னா என்னனு எழுத்துல சொன்ன ஜி.நாகராஜன்னு ஒருத்தரப் பத்தியும் அவுரு எழுதுன “நாளை மற்றுமொரு நாளே”, “குறத்தி முடுக்கு” அப்படிங்கற கதைகளப் பத்தி எல்லாம் சொல்லித்தான் ஆகனுமுங்க. அதயெல்லாம் படிச்சுப் பார்க்கும்போது உங்காளு பருத்திவீரனப் பாராட்ட முடியலீங்கணா. என்ன மாதிரி ஆளுங்க பாராட்டனும்னு அவசியமில்லீன்னு நீங்க நெனெச்சாலும் பரவால்லீங்ணா. நாங்கெல்லாம் கவலைப்படற மாதிரிப் படம் எடுத்தராதீங்ணா.

அன்புடன்
தமிழ் சினிமாவோட கடசி ரசிகன்.
தா.சந்தரன்நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com