Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கட்டுரை

திரைவழியே இலக்கிய வெடிப்பு
புகாரி

கம்பன்போல் வள்ளுவன்போல் இளங்கோபோல் என்று அதிசயித்த பாரதி அவர்களின் தோளின் மீது ஏறிநின்று எழுதினான். கம்பன் தெய்வம் மனிதனாய் வாழ்ந்த காவியம் எழுதினான் இளங்கோ மனிதன் தெய்வமாய் உயர்ந்த காவியம் எழுதினான் வள்ளுவன் ஒட்டுமொத்த உலகத்துக்கும் நீதி சொன்னான்

பாரதி இவற்றைத் தாண்டி புதுமை செய்தான். புதியவர்கள் எப்போதும் புதுமை செய்யவேண்டும். அரைந்த மாவை அரைப்பது தமிழின் தரத்தைக் குறைப்பது. பாரதி, சொல்புதிது பொருள் புதிது என்று வீரியம் மிக்க கவிதைகள் எழுதினான். அப்படி நவீனத்துக்குள் இறங்கியபோதும் பழைய இலக்கியச் செழுமைகளைத் தூக்கி எறிந்துவிடவில்லை.

ஒரு கொள்கை வைத்து அதை அடைய கவிதையின் பணி எத்தனை உயர்வானது என்பதை முதன்முதலில் நடைமுறைப்படுத்திக் காட்டியவன் அவன்தான். அதைத் தொடர்ந்து பாரதிதாசன் வந்தார். தன் கொள்கைப் பிடிப்பில் தான் நேசித்த கவிஞனைப்போல் உறுதியாய் இருந்தார். அதே சமயம் சினிமாவுக்குள்ளும் நுழைந்தார். சினிமாவின் பலநிலைகளிலும் கால் பதித்தார். பின், கண்ணதாசன் வந்தார். எளிமையாக புரியும்படி எழுதவேண்டும் என்று தடம்போட்டுக்கொடுத்த பாரதியின் வழியில், உண்மையான எளிமை என்றால் கவிதையில் என்ன என்று எளிமையாகக் காட்டிய முதல் கவிஞர் அவர்தான்.

அவர்காலத்தில், பல நல்ல கவிஞர்கள், எளிமையாகவே எழுதினார்கள் அருமையாகவே எழுதினார்கள். கவிதை வானமாய் விரிந்து பரந்து பட்டிதொட்டிகளிலெல்லாம் கேட்கத் துவங்கியது. மூலை முடுக்குகளிலெல்லாம் கவியரங்கங்கள் மக்களை ஈர்த்தன. சினிமாவில், சினிமாவால் வாழ்ந்த கவிஞன் என்ற தனிப்பெயர் பெற்றார். கவிஞனின் ஏழ்மையை ஒழித்துக் காட்டிய முதல் கவிஞர் இவர்தான்.

இசையைப் பொருட்படுத்தாத புதுக்கவிதைகள் இதற்குள் தன் வெற்றி நாற்காலியில் அமர்ந்துவிட்டது. அப்துல் ரகுமான், மு. மேத்தா, நா காமராசு, சிற்பி போன்ற ஏராளமான பேராசிரியர்கள், மரபுக்கவிஞர்கள் புதுக்கவிதைகளில் ஓர் உயரத்தைத் தொட்டனர். வைரமுத்து இளையவர். தன் கல்லூரி நாட்களில் மரபுக்கவிதைகள் எழுதினார். அந்த மரபுக்கவிதைக்குள் புதுக்கவிதைகளின் செழுமையையும் வீரியத்தையும் கற்பனை வளத்தையும் ஏற்றி வைத்தார். கண்ணதாசனின் பாராட்டுகளைப் பெற்றார். பின் அப்துல் ரகுமான், மேத்தா போன்றவர்களின் வழியில் புதுக்கவிதைக்குள் குதித்தார். அவரின் முதல் புதுக்கவிதைத் தொகுப்பே அருமையாய் இருந்தது. அந்தக் கவிதை நூல்தான் திரைப்பட வாய்ப்பை இழுத்துவந்தது அவருக்கு.

கவிஞன் என்பவன் ஒரு கலவை. வைரமுத்துவும் ஒரு கலவையே. அவரின் உணர்வு உச்சங்களும், மரபு அறிவும், திடமான சிந்தனையும், அற்புதமான தமிழும், இசைக்குள் உருகி நிற்கும் மனமும், வளமான புதுக்கவிதைகளைத் தந்தன. ஆக வைரமுத்து என்பவர் பாரம்பரியத்திலிருந்து வந்தவர். தமிழின் மிகப்பெரிய பாரம்பரியத்தின் ஒரு குழந்தை. இங்கே முளைக்கும் அத்தனைக் கவிஞர்களும் அவர்போல் பாரம்பரியத்தின் விதைகள்தாம்.

இதில் இவரைப் போல் எழுதுகிறாய் அவரைப் போல் எழுதுகிறாய் என்று எவரைப் பார்த்தும் சொல்வதில் பொருள் இல்லை. கம்பனின் சொல்லழகும் கற்பனையழகும் இல்லாமல் இன்று எவருமே கவிதை எழுதிவிடமுடியாது. பாரதியின் புரட்சியும் வேகமும் இல்லாமல் எந்தக் கவிதையும் வெற்றிபெற்றுவிட முடியாது. இதேபோல், இளங்கோ, வள்ளுவர், ஔவை என்று எல்லோரையும் தொட்டுத்தொட்டுதான் இன்றும் கவிதைகள் கொட்டுகின்றன.

தமிழ்ப் பாரம்பரிய வழி வருவோர் ஒருபுறமிருக்க, அயல்நாட்டுக் கவிதைகளை ரசித்தவர்களும், அந்த இலக்கியத்தில் ஆர்வம் கொண்டவர்களும், இன்னொரு திசையிலிருந்து புறப்பட்டு வந்தார்கள்

அப்படி வந்த முதல் ஆள், மரபுப் பாலை ஒரு சொட்டும் சிந்தாமல் மடக் மடக்கென்று குடித்திருந்த பாரதிதான். அவனுடைய பிறமொழி அறிவு அவற்றின் நுண்ணிய விசயங்களைத் தமிழுக்குள் கொண்டுவந்தது. இசையைத் தாண்டியும் கவிதைபாட அவனைத் தூண்டியது. வசன கவிதை பாடினான். ஹைக்கூக்களைப் பற்றியெல்லாம்கூட குறிப்பு எழுதி இருக்கிறான்.

இதனோடு மொழிபெயர்ப்புக் கவிதைகளின் வளர்ச்சியும் நிகழ்ந்தது. மொழிபெயர்ப்புகள் பிறமொழி இலக்கியங்களை அறிய மிகச் சிறந்த வழி. ஆனால் இதன் ஆபத்து

என்னவென்றால், புரியாததை அரைகுறையாய்ப் புரிந்துகொண்டு, வெறும் ஆர்வத்தால் மட்டுமே அவற்றை மொழிபெயர்த்து புரியாத புதிராக எழுதிவைப்பது. பின் அதையே வழக்கமாக்கிக் கொண்டுவிடுவது தமிழில் சிந்தித்து தமிழ்க்கவிதை வடிப்பது ஒன்று. வேற்று மொழியில் சிந்தித்துத் தமிழ்க்கவிதை வைடிப்பது இன்னொன்று. தமிழிலக்கிய மரபு
இல்லாதபோது, தமிழ்நடை நொண்டிக்கொண்டு வருவது இயற்கைதானே சூட்சுமமாக எழுதுவதுதான் நவீனம் என்று சிலர் சொல்கிறார்கள். அதற்கு முன்னேறிவிட்டதாகவும் சொல்கிறார்கள். அப்படியான சூட்சும வரிகள் வேறு எந்தமொழியைக் காட்டிலும் தமிழில்தான் அதிகம். சங்ககாலக் கவிதைகளில் அவை ஏராளமாய் உண்டு. ஆனால் எந்த சூட்சுமக் கவிதைக்கும் தெளிவான பொருள் கூறுவர். அப்படிக் கூறமுடியாதவை சூட்சுமக் கவிதைகள் அல்ல சுத்தப் பேத்தல்கள்.

இன்றளவில் வெற்றிபெற்ற கவிதைகளைப் பாருங்கள். அவை ஓர் அழுத்தமான கருவை மிகச் சரியாகக் கொண்டிருக்கும்.

யாதும் ஊரே யாவரும் கேளிர் - மரபுக்கவிதை

ஒரு கவிதையின் ஒற்றை வரியே பின் முழுக்கவிதையாயும் எப்படி ஆகிப்போனது? இது சொல்கிறது, கவிதைகள் சுருக்கமாக் இருத்தல் வேண்டும் என்று.

இரவில் வாங்கினோம் விடியவே இல்லை - புதுக்கவிதை

இரவல் தந்தவன் கேட்கின்றான் அதை
இல்லையென்றால் அவன் விடுவானா - திரைக்கவிதை

இப்படி நிறையவே சொல்லிப் போகலாம். இவை அணைத்தும் திடீர் என்று கட்டாந்தரையில் முளைத்துவிட்டவையல்ல. பாரம்பரியம் தந்த பரிசுகள். இதுகாறும் வந்த கவிஞர்களுள் எந்த மரபுமே ஒட்டியிராத தனித்த ஒரு கவிஞனை எவராலும் அடையாளம் காட்ட முடியுமா?

உலகின் ஒட்டுமொத்த மக்களையும் கவர்ந்திழுத்து வைத்திருக்கும் திரைப்படம் கேவலமானதல்ல. அந்தத் திரைப்படத்துக்குள் அசிங்கம் செய்பவர்களே கேவலமானவர்கள். நல்ல திரைப்படம் என்பதும் ஓர் இலக்கியம்தான். இயல் இசை நாடகம் இல்லாத திரைப்படம் ஏது.

பாரதியின் பாடல்கள் திரை இசைக்குள் வந்தபின் சென்றடைந்த செவிகளின் எண்ணிக்கையைக் கணக்கிடமுடியாது. காந்தி ஐயா போராடி பெற்ற சுதந்திர நாட்டில் பிறந்தவர்களுள் பலர், அவரின் முழு சரிதையையும் காந்தி படம் பார்த்துத்தான் தெரிந்துகொண்டார் இங்கும் அங்குமாய்ப் படித்திருந்தாலும் கேட்டிருந்தாலும். ஒரு திரைப்படம்தான் அதை மனதில் நங்கூரமாக இறக்கியது. பள்ளி கல்லூரி மாணவர்களையெல்லாம் அதைப் பார்க்கச் செய்த இந்திய அரசின் எண்ணம் தெளிவு.

சமீபத்தில் காமராஜ் பார்த்து அசந்துபோகாதவர்கள் இருக்கமுடியாது. வீரபாண்டிய கட்டபொம்பன், பாரதி, திருவிளையாடல், என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

திரைப்படம் கடந்த நூற்றாண்டின் இலக்கிய வெடிப்பு
-
- புகாரி ([email protected])

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்

நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com