Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கட்டுரை

நேபாளத்தின் அழையா விருந்தாளிக்கு கோவையின் விருந்தோம்பல்
பஷீர்

"நேபாளத்தின் உள்நாட்டு விவகாரங்களில் உலகின் எந்த பகுதியிலிருந்தும் யாரும் தலையிடுவதை எமது கட்சி பொறுத்துக்கொள்ளாது. இந்தியா கருத்தொற்றுமை அரசியலை தகர்க்கிறது. ராணுவ தளபதி விவகாரத்தில் இந்தியாவின் பங்களிப்பு ஆக்கப்பூர்வமாக இல்லை என இங்குள்ள மக்கள் கருதுகின்றனர். வெளிநாட்டு தலையீட்டை நான் எதிர்க்கின்றேன்.”

Prachanda - புஷ்ப கமல் தஹால் பிரசண்டா
தலைவர்,
நேபாள ஒன்றுபட்ட பொதுவுடைமை கட்சி (மாவோ),
முன்னாள் நேபாள
தலைமையமைச்சர்

நம் அண்டை நாடான நேபாளத்தில் கடந்த சில நாட்களாக நிலவி வரும் ராணுவத்தளபதி விவகாரத்தில்தான் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இவ்வாறு கோபம் கொப்புளிக்க பேட்டியளித்துள்ளார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நேபாள மாவோயிஸ்டுகள் தலைமையிலான அரசின் விருப்பத்தையும், உத்தரவையும் மீதி நேபாள ராணுவ தளபதி ஜெனரல் ருங்மங்கத் கடாவல் கீழ்க்கண்ட வரம்பு மீறல்களைச் செய்தார்:

 ஏற்கனவே நடைமுறையிலுள்ள அமைதி ஒபப்ந்தத்தின்படி மாவோக்களின் "மக்கள் விடுதலைப்படையை" அரசபடையில் இணைத்து விடுவதை பகிரங்கமாக எதிர்த்தார்.

 ராணுவத்தை சனநாயகமயப்படுத்துவதையும் தீவிரமாக எதிர்த்துள்ளார் ராணுவத் தளபதி.

 மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முடிவையும் மீறி 8 உயர் ராணுவ அலுவலர்களின் பதவியையும் நீட்டித்துள்ளார்.

இது போன்ற அரசுக்கெதிரான அவரின் தொடர் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளினால் தலைமையமைச்சர் பிரசண்டா, ராணுவ தளபதி ருங்மங்கத்தை பதவியிலிருந்து நீக்கினார். உடனேயே நேபாள நாட்டின் அதிபர் ராம்பரண் யாதவ், பதவி நீக்கப்பட்ட ராணுவதளபதி ருங்மத்தை மீண்டும் பதவியில் அமர்த்தினார்.

நேபாள நாட்டின் அதிபர் என்பவர் படைகளின் தலைமைத்தளபதியாக இருந்த போதிலும் அமைச்சரவையின் வழிகாட்டுதலின்படியே செயல்படக் கடமைப்பட்டவர். அவரும் ராணுவத் தளபதியின் அரசுக்கெதிரான கலக நடவடிக்கையை வழிமொழிந்துள்ள செயலானது, ஜனநாயகம், குடியரசில் நம்பிக்கை உள்ள அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பெரியண்ணன் இந்தியா கொடுத்த தைரியம்

மக்கள் விரோத, சுரண்டும் அதிகார வெறிபிடித்த முடியாட்சியை மிகக்குறைந்த சேதாரம் மூலம் தூக்கியெறிந்து விட்டு வெளிநாட்டு சதிவலைகளை அறுத்தெறிந்து விட்டு மகத்தான மக்களாட்சியை மலரச்செய்தவர்கள் நேபாள ஒன்றுபட்ட பொதுவுடைமைக்கட்சியினர். தூக்கியெறியப்பட்ட பழைய சுரண்டல் முடியாட்சியின் பேராளர்களாக நின்று மாவோக்களுக்கு எதிரான நிலப்பிரபுத்துவ வன்மத்தை சுமந்ததினால் மட்டும் மாவோக்களின் மக்களாட்சிக்கு எதிராக நிற்கவில்லை அதிபர் ராம்பரண் யாதவும் ராணுவதளபதி ருக்மங்கத் கடாவலும்.

அல்லும் பகலும் தாங்கிப் பிடித்தும் நேபாள மன்னராட்சியை காப்பாற்றவியலாத பெரியண்ணன் இந்தியா புழக்கடையில் ஒளிந்து கொண்டு காட்டிய சமிக்ஞைகள்தான் அவர்களுக்கு இந்த தெம்பைக் கொடுத்திருக்கின்றன.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நேபாள அரசுக்கும், அந்நாட்டு ராணுவத்தளபதிக்குமிடையேயான மோதல் நிலை கடந்த ஒரு மாத காலமாகவே நீடித்து வந்திருக்கின்றது. இதில் தளபதியின் சார்பாக தலையிடும் போக்கை இந்திய அலுவலர்கள் உறுதி செய்துள்ளனர். மாவோயிஸ்டுகளை எதிர்க்கும்படி நேபாள பேராயக்கட்சியையும், ஒன்றுபட்ட மார்க்னிய - லெனினிய கட்சியினரையும் நோக்கி தெளிவான கெடுதல் சமிக்கைளை தெரிவித்திருக்கின்றது புதுதில்லி.

நேபாளத்தில் தனது தலையீட்டிற்கு இந்திய அலுவலர்கள் சொல்லும் காரணம் என்னவென்றால், "ராணுவத்தளபதி நீக்கம் தொடர்பாக ஆளும் கூட்டணி இடையே கருத்தொற்றுமை இல்லாததின் காரணமாக தளபதியை நீக்கும் முடிவை மாற்ற வேண்டியதாயிற்று. மாவோயிஸ்டுகள் நேபாள ராணுவத்தைக் கைப்பற்றி அதன் மூலம் நேபாளத்தை ஒரு கட்சி ஆட்சியின் கீழ் கொண்டு வர முயற்சிக்கின்றனர்" என புதுதில்லி சவுத்பிளாக்கில் உள்ள இந்திய கொள்கை வகுப்பாளர்கள் திருவாய் மலர்ந்தருளியுள்ளனர்.

முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு குடியாட்சிக்கு கீழ்ப்படிய மறுக்கின்ற ராணுவத்தை நேபாளம் பெற வேண்டும் என இந்தியா விரும்புகிறது. மாவோயிஸ்டுகளை ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற குறுகிய மனநிறைவிற்காக நேபாளின் நீண்டகால ஜனநாயக உறுதிப்பாட்டை இந்தியா பலி கொடுத்துள்ளது.

நம் அண்டை நாடான நேபாள விஷயத்தில் தற்போது நடுவத்தில் ஆளும் பேராய (காங்கிரஸ்) அரசு மட்டுமல்ல, கடந்த கால பா.ஜ.க. அரசும் பெரியண்ணன் பாணியிலான விரிவாதிக்கப் போக்கையே கடைப்பிடித்து வந்துள்ளது. நேபாளத்தில் தூக்கியெறியப்பட்ட ஞானேந்திராவின் மன்னராட்சியை அசோக் ஸிங்கால், கொலைக்குற்றவாளி ஐயேந்திர சரஸ்வதி போன்ற பாஸிஸக் குஞ்சுகள், "உலகத்திலுள்ள ஒரே ஹிந்து ஆட்சி" என உச்சி முகர்ந்து ஆடினர்.

இந்தியாவில் தாங்கள் அமைக்கப்போகும் ஹிந்து ராஷ்டிரத்தின் முன்னோடியாகவும் கனவு கண்டனர். நடுவண் அரசை வழிநடத்தும் எக்கட்சியினராக இருந்தாலும் சரி, அவை அண்டை அயலில் இந்தியாவின் விரிவாதிக்க பேட்டை போக்கிரித்தனத்தை விடாது கடைப்பிடித்தே வந்துள்ளன. அது நேபாளத்தில் மட்டுமல்ல இலங்கை, மாலத்தீவு, பங்களாதேஷ் என்ற அண்டை நாடுகளில் பல்வேறு காலகட்டங்களில், பல்வேறு வடிவங்களில் வெளிப்பட்டே வந்திருக்கின்றது.

"தேமே"வென்றிருந்த இலங்கையில் இனச்சிக்கல் சங்கை ஊதிக்கெடுத்த இந்தியா, ராஜீவ் கொலை மூலம் நன்றாகவே மூக்கறுபட்டு நிற்கிறது. பாக்கிஸ்தானின் கிழக்கு பிராந்தியமான வங்காளத்தில் மூக்கை நுழைத்து அதை வன்முறை மூலம் தனிநாடாக்கிய அடாவடித்தனத்திற்கு இன்று வரை இந்தியா விலை கொடுக்க வேண்டியிருக்கின்றது.

"அக்கடா" என இமயமலைச்சாரலில் அமைதியாக தவழ்ந்து கொண்டிருக்கும் ஒரு தேசத்தின் உள் விவகாரங்களில் தலையிட்டு குழப்படி செய்யும் இந்தியா தனது எதிரிகள் பட்டியலில் மேலும் ஒன்றை சேர்த்த புண்ணியத்தை செய்திருக்கின்றது.

இந்தியா தடுத்தாலும் சரி, அமெரிக்கா மறித்தாலும் சரி நேபாள மக்கள் விரும்பும் மாவோக்களே ஆட்சியில் அமரப்போவது திண்ணம். பேட்டைரவுடிகளின் விரிவாதிக்க கனவுகளில் மண் விழுவது உறுதி. இந்நிலையில் மீண்டும் ஆட்சிக்கு வரும் மாவோயிஸ அரசு இந்தியாவுக்கு நன்றிக்கடனை திருப்பிச் செய்தால் இந்தியா தாங்குமா?

எடுத்துக்காட்டாக, ஆந்திரா தொடங்கி நேபாள எல்லையில் அமைந்திருக்கும் பீஹார் வரை செம்பாதை அமைத்திருக்கும் மாவோ லெனினிய பொதுவுடைமை போராளிக் குழுக்களுக்கு நேபாள ஆளும் அரசு தார்மீக, ஆயுத, பொருளுதவி செய்தால் என்னவாகும்? இது ஒன்றும் சாத்தியமில்லாத விஷயமில்லை என்பதை இலங்கை இன அழித்தொழிப்பின் எதிரொலி கோவை இந்திய பட்டாளத்தின் வண்டித்தொடர் மீது கேட்டதை இங்குள்ள ஆளும் வர்க்கங்கள் நினைவிலிறுத்திக் கொள்வது நல்லது.

இலங்கை, நேபாளம் என மண்ணாசை பிடித்து குருதி சிந்தும் கலகமூட்டும் இந்தியாவின் ஆயுதத்திமிருக்கு கோயம்புத்தூர் போராளிகள் சரியான தீர்வு திசைவழியைக் காட்டியுள்ளனர்.

- பஷீர் ([email protected])


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com