Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
போலி தேசியங்களும் புதைபடும் உண்மைகளும்

ஏ.அழகியநம்பி


rajapakse_soniya உலகெங்கிலும் நடக்கும் உள்நாட்டு மற்றும் நாடுகளுக்கிடையேயான போர்களின் காரணம் பிரிவினை கோரல் அல்லும்; அண்டைநாட்டின் நிலப்பரப்பின்மீது உரிமைகோரல் என்பதாகத்தான் இருக்கும். பயங்கரவாத ஒழிப்பு அல்லது மக்களாட்சி நிறுவல் போன்ற அமெரிக்க ஒற்றையதிகாரத்தின் அண்மைக்கால நாடகம் எல்லாம் இயற்கைவள அபகரிப்பு மற்றும் புதிய காலனியாக்க முயற்சிகளே.

நாடுபிரித்தல் மற்றும் எல்லை விரிவாக்க முயற்சியில் முடியாட்சி காலந்தொட்டு இன்றுவரை எவ்வளவு இழப்புகள். தேசம் என்ற போர்வையில் எத்தனை உயிர்ச் சேதங்கள். அது சார்ந்த துயரங்கள். உண்மையில் புவியில் பிறந்த அனைவரும் இயற்கையாய் சாவுநேரும் வரை அடிப்படை மனித இன்பத்துன்பங்களை அனுபவிக்க விதிக்கப்பட்டவர்களே. அவர்களில் ஒரு சாராரை மட்டும் தேசியம் என்ற பெயரால் பலியிடுவதன் அநியாயம் குறித்த கருத்துக்களை உண்மை நோக்கி எடுத்துரைப்பது வறண்டுபோயிருக்கும் தேசியவாதிகளின் சிந்தனையை செம்மைப்படுத்துவதோடு, வலிந்து உருவாக்கப்படும் கற்பிதங்களின் கூட்டு இருக்கும் உண்மையின்மேல் தொடுக்கும் தாக்குதல் மற்றும் அதனால் ஏற்படும் சேதம் குறித்த சிந்தையையும் நமக்குத் தரும்.

சமூகக் குழுக்கள் வசதியாகவும், பாதுகாப்பாகவும் வாழவேண்டி உறுப்பினர்களைக்கொண்டு தம்மைத்தாமே நிர்வகிக்க ஆரம்பித்ததோடு நாடு என்ற கருத்தியலமைந்த நவீன அரசியல் கோட்பாடு தொடங்குகிறது. கூடி ஒத்துழைத்தால் முன்னேறலாம் என்ற எண்ணமே ஒரு நாட்டிற்கு அடிப்படை. இங்கு மக்களுக்குள் இவன் நம்மவன் என்ற உணர்வு இருப்பதில்லை. ஏனெனில், ஒரு நாட்டில் வாழ்பவன் ஒரே இனம், மொழி, பண்பாடு கொண்டவனாக இருக்கவேண்டிய அவசியமில்லை. முன்னாள் சோவியத் யூனியன், அமெரிக்கா, இந்தியா, இலங்கை போன்றவை நாட்டிற்கான எடுத்துக்காட்டுகள். ஒரு சமூகக்குழு நம்மை ஒரு தேசமாக உணர மேற்சொன்ன இனம், மொழி மற்றும் பண்பாட்டுக்காரணிகள் ஒன்றிக இருக்க வேண்டும் அவ்வகையில் மேற்சொன்;ன அனைத்தும் பல தேசியங்களைக் கொண்ட நாடுகள். அமெரிக்காவை விட இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இது மிகவும் பொருந்தும். இதுதான் உண்மை. இந்தியாவில் இதைச் சொல்பவர்கள் தேசத்துரோகிகள். இலங்கையில் அதிபயங்கரவாதிகள்.

பல தேசிய இனங்களின் நிலப்பரப்புக்கள் இணைந்து ஒரு பிரதேசமாக, நாடாக இருப்பதில் தவறொன்றுமில்லை. எந்தவொரு தேசிய இனமும் மற்றதைச் சுரண்டாத வரையில். ஆனால் தெளிவற்றதும், சுரண்டலுக்கு வழிவகுப்பதுமான இந்திய மற்றும் இலங்கை அரசியலமைப்புச் சட்டங்கள் நலிந்த தேசிய இனத்தின்மேல் வலிமையான ஒன்று அதிகாரமும் ஆக்கிரமிப்பும் செய்ய வழிவகுக்கின்றன. இந்திய அரசமைப்புச் சட்டம், இந்திய நாடு பல தேசிய இனங்களைக் கொண்ட பரப்புகளின் கூட்டமைப்பு என்ற பச்சை உண்மையை மூடி மறைப்பதோடு, தன்னை ஒரு குடியாட்சியாகவும் பிரகடனப் படுத்துகிறது. காசுமீர் தவிர நாட்டின் எந்தப் பகுதியிலும் யார் வேண்டுமானாலும் அசையாச்சொத்துக்கள் வாங்கலாம் எனச் சொத்துரிமையை அளிக்கிறது. நாட்டின் ஆட்சிமொழியாக இந்தியை அறிவித்து பிற தேசிய இனங்களின் மொழியை இரண்டாந்தரமாக்கியது. இவையனைத்தும் இந்தியா பல தேசியங்களாலானது என்ற உண்மையை வசதியாக மறைத்து செய்யப்பட்டவை. இதன் விளைவே இன்று மராட்டித்தில் வட இந்தியார்களுக்கு எதிராக எழுந்துள்ள வெறுப்பும் எதிர்காலத்தில் இந்திய நாடு சந்திக்கப்போகும் அத்தகைய நிகழ்வுகளும். தமிழகம் போன்ற வந்தாரை ஆளவைக்கும் மாநிலங்களில் அயல்மொழி மற்றும் இனத்தாரின் ஆதிக்கத்தை இங்கே நினைவிற் கொள்ளவும்.

இந்திய அரசமைப்புச் சட்டமாவது திறமையுள்ளவர்கள் சுரண்ட சமமாய் வாய்ப்பளிக்கின்றது. இலங்கை ஒரு படி மேலேபோய் அந்நாட்டின் சிறுபான்மை தேசிய இனமான தமிழினத்தை அழிக்கும் முயற்சியில் வெளிப்படையாய் ஈடுபடுகிறது. உலகின் எந்த நாகரிக சமூகமும் செய்யத் துணியாத சிறுபான்மை தேசிய இனத்தின்மீதான அத்துமீறலை தான் சுதந்திரம் அடைந்த முதல் நாளிலிருந்தே செய்யத் தொடங்கியது. பிறரால் தான் ஆளப்பட்டவரை அடங்கிக் கிடந்த பேரின உணர்வு, ஆட்சியதிகாரம் கைக்குவந்தவுடன் பீறிட ஆரம்பித்தது. பெரும்பான்மை சிங்கள மக்களிடம் அவ்வுணர்வைத் தூண்டி போட்டி போட்டுக்கொண்டு அரசியல் ஆதாயம் தேட முயலும் இரண்டாந்தர சிங்கள அரசியல் வாதிகள் உலகின் சமகால அநாகரிக அரசியல் நிகழ்வுகளைப் புறந்தள்ளுமளவிற்குச் செயல்படத் துவங்கினர். சிறுபான்மையினரின் உணர்வுகள் மற்றும் உரிமைகள் குறித்த பிரக்ஞையற்றவர்களாய் அவர்கள் இயற்றிய சட்டங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளையுடைய எந்த நாட்டிலும் நடக்கவியலாத ஒன்றிகும். நமக்கெல்லாம் அரசியல் பயிற்றுவித்த ஐரோப்பிய நாடுகள் சிறுபான்மை தேசிய இனங்களின் நலன் காக்க மகத்தான சட்டங்களை இயற்றிவைத்துள்ளன.

உண்மையை மறுப்பவனும், மறைப்பவனும் அயோக்கியன். தனி மனிதனுக்கு மட்டுமல்ல நாடடிற்கும் இது பொருந்தும். இலங்கை தேசியங்களின் கூட்டமைப்பு என்பது மறுக்கமுடியாக உண்மை. இந்த உண்மையை மறைப்பது அவர்கள் பேசும் போலி ஒற்றை தேசியமும், பேரின இருமாப்புணர்வுந்தான். எண்ணிக்கையில் குறைவாக இருப்பதேலேயே ஒரு இனம் தனக்கான தேசியத்தைப் பேசக்கூடாது என்பது கடைமடம். எண்ணிக்கையில் அதிகமாக இருப்பதால் ஒரு இனம் மற்றொரு இனத்தை விழுங்க நினைப்பதோடல்லாமல் அதன் தொன்றுதொட்ட இருப்பிடத்தையும் அபகரிக்க நினைப்பது வரலாற்று அசிங்கம்.

தேசியம் ஒரு வரலாற்று உண்மை. இனம், மொழி, பண்பாடு கடந்து மனிதகுலம் மானுடம் சார்ந்து ஐக்கியமாகும்வரை அவ்வுண்மை நிலைத்திருக்கும். தேசியத்தை உருவாக்கவியலாது. அபத்தத்திலும் அபத்தம் இந்தியாவை உருவாகிகொண்டிருக்கும் ஒரு தேசம் என்பது. இனங்களை, மொழிகளை, பண்பாடுகளை அழித்துத் தட்டையாக்காமல் அது சாத்தியப்படாது. திண்ணியமும், கயர்லாஞ்சையும் தொடர்கதையாகிப்போன இந்தியச் சூழலில் தேசியக் காரணிகளின் சமரசம் என்பது என்றுமே நனவாகா கொடுங்கனவுதான். வெள்ளைக்காரனிடமிருந்து பிச்சைபெற்று அறுபது ஆண்டுகட்கு மேலாகியும் பெரும்பான்மை மக்களை மகுடிக்கேற்ப நடமாடும் பாம்பாய் வைத்திருக்கும் மனசாட்சியற்ற அரசியல்வாதிகளுக்கு மட்டுமே இது சாத்தியம். தன்நலன் மீறி மனசாட்சியோடு பேசத்துணிந்த அரசியலவாதிகள் இங்கு மிகச்சொற்பமே..

இந்தியா ஒரு கூட்டுக் கொள்ளையர்களின் நாடு. கொள்ளைத் தலைகீழ் முக்கோணத்தில் உச்சியிலிருப்பவர்கள் அரசியல்வாதிகள். காசோடு அதிகாரமும் அவர்கள் வசம். அவர்கள் வகுத்ததே எல்லாம் . அடுத்து பெரு முதலாளிகள் கூட்டம். முதலாமானவர்கள் நிழலில் வளரும் சாருண்ணிகள். அரசியல்வாதிகள் போலல்லாமல் மாறித அதிகாரத்தையும், சுகத்தையும் அனுபவிக்கும் கலையில் கைதேர்ந்தவர்கள். ஆள்பவன் இராமனாக இருந்தாலும், இராவணனாக இருந்தாலும் இவர்களுக்கு கவலையில்லை. சீதையும், சூர்ப்பணகையும் இவர்கள் சொற்படி கேட்பார்கள். இவ்விரண்டு அசகாய சூரர்கள் கீழ்இருப்பது அரசு அதிகாரிகள் வர்க்கம். இவர்கள் ஏதாவது ஒரு விதத்தில் அரசியல்வாதிகளுக்கும், பெருமுதலாளிகளுக்கும் அரிக்காதா என ஏங்குபர்கள். சொரிந்துவிட்டுச் சுகம்பெறும் இவர்கள் ஏராளமான மக்களைப் பஞ்சப் பணாரிகளாய் வைத்திருப்பதில் பெரும்பங்கு ஆற்;றுபவர்கள். இம்மூவரின் அசுரப்பிடியில் சிக்கித்தவிக்கும் சாமானியர்கள் பாவம்.

இவர்களே இல்;லாத ஒன்றை மக்கள் மனதில் திணிக்கப் பாடாய்படுபவர்கள் இறையாண்மை என்னும் ஏட்டுச்சுரக்காயைச் சமைத்து பட்டினிக்கிடக்கும் அப்பாவிமக்களுக்கு தேசியக் கறி சமைத்து பரிமாறுபவர்கள். அறுபது ஆண்டுகளாய் இம்மோசக்காரர்களின் சிந்தனை வறட்சியில் சிக்கித்தவித்த மக்கள் ஒரு ரு்பாய்க்கு அரிசியும் வேலைசெய்யாமல் காசும் கொடுத்தால் போதும் என இன்னும் அரசியல்வாதிகளுக்கு சுவரொட்டி ஒட்டுவும், ஆட்டக்காரர்களுக்கு மன்றம் அமைத்து கூலிக்கு கோஷம் போடவும் அணிதிரள்கின்றனர். இவர்களுக்கு உண்மை தேசியம் குறித்த உணர்வு வருவதற்குள் இந்தியா என்ற நாட்டின் பல மாநிலங்கள் வட இந்தியர்களின் காலணியாகிவிடும். மிகுவெள்ளைதோளுக்கு ஆசைப்படும் அரசியல் சீமான்கள் வெளிநாட்டு சீமாட்டிகளை மணந்து பெரும்பான்மை இடங்களில் அன்னையாக்கி ஆளவிடுவார்கள்.

கருத்துரிமையும், வாழ்வுரிமையும் ஜனநாயகத்தின் இரு கண்கள். போலி தேசியங்கள் அனைத்திலும் இவ்விரண்டும் வரையறுக்கப்பட்டு மக்கள்முன் படைக்கப்படுகின்றன. உண்மை வரலாறுகள் மறைக்கப்பட்டு போலி தேசியங்களுக்காண கற்பிதங்கள் இறையாண்மை என்ற பெயரால் அனைவர்மீதும் திணிக்கப்படுகின்றன. இங்கு அரசமைப்புச் சட்டம் சொல்லும் மொழியே அனைவரது ஆட்சி மொழியும். குரங்குகளையும், கழுதைகளையும் கொண்ட ஒரு மாநிலத்தவனுக்குக்கூட தான் பார்த்திராத மயிலும் புலியும்தான் தேசியப் பறவையும், விலங்கும். அரைக்குறைப் புரிதலுடனும், தான் என்ற மமதையிலும் திரியும் அதிகார வர்கத்தின் அங்கத்தினர்கள் இந்த அபத்தம் குறித்து பேசுபவர்களுக்கு அளிக்கும் பட்டம் தேசவிரோதி. வலியுறுத்தி உண்மையுரைப்பவர்களுக்குக் காத்திருப்பதோ துரோகி பட்டமும் சிறைவாசமும்.

இவ்வகை தேசியத்தால் மக்கள்பெற்ற பலன்தான் என்ன? விடுதலை என்ற ஒன்றைப்பெற்று அறுபது ஆண்டுகட்கு மேலாகியும் இன்னும் அம்மணமாய் ஆடும் சாதி, மதம் மற்றும் பிரதேசம் சார்ந்த சச்சரவுகள். கல்வியின்மை, வேலையின்மை மற்றும் போதிய உணவின்மை எனும் இ.ன்மைகள.; பெரும்பான்மை மக்களின் வாழ்வாதாரமான விவசாயம் முற்றிய்ப் புறக்கணிக்கப்பட்டு அவர்களின் நிலத்தை தொழில்மயமாக்கல் என்ற பெயரில் பெருமுதலாளிகளுக்கு குறைந்தபட்ச கரிசணம்கூட இல்லாமல் கூறுபோடும் அவலம், வலிந்தவன் மெலிந்தவனை காவுகொள்ளும் கற்கால மனிதப்போக்கையொத்து நிகழும் பொருளியல் சுரண்டல்கள், போலி தேசியக்காரணிகளின் உருவாக்கம் பொருட்டு அழிக்கப்படும் மொழி, பண்பாடு போன்ற உணர்வுசார் காரணிகள் என பட்டியல் நீளும்.

உலகில் உண்மை தேசியங்கள் ஒரு பத்தாணடில் சாதித்த எதையுமே அரைநூற்றிண்டுக்கு மேலாகியும் இப்போலிதேசியங்கள் சாதிக்கவில்லை. மொத்த மக்கள்தொகையில் முக்கால் வாசிபேருக்கு மேல் ஓட்டிற்கு காசுவாங்க காத்திருக்க வைத்ததும், இலவசங்களுக்காக எதிர்பார்க்க வைத்ததும், ஏழைக் குடியானவர்களை கடன் தொல்லையால் கயிற்றை ஏந்த வைத்ததுமே இத்தேசியத்தைக் கட்டிக்காக்கும் வித்தகர்கள் சாதித்தது. பசித்த வயிற்றிற்கு பருக்கையை விட இவர்கள் உருவாக்கிய தேசியமே முக்கியம். ஏனெனில், இவ்வகை தேசிய கற்பிதம் மாயை என்று தெரியவரும் நிலையில் தின்றுக் கொழுத்த எலியாய்த் திரியும் நபர்கள் வலைக்குள்ளேயே புகைபோட்டுக் கொல்லப்படுவார்கள் என்ற எச்சரிக்யையுணர்வே இதற்குக் காரணம்.

நீடிக்கும் இந்நிலைக்குப் பிறகும் இந்தியா ஒரு தேசம் எனப் பேசும் போலிதேசியவாதிகள் கீழ்கண்டகேள்விகளுக்குப் பதில் அளிக்கட்டும்.

அ) வெள்ளையர்கள் தின்ற பழத்தின் கொட்டையான இந்தியா தேசியம் குறித்த நவீன அரசியலறிவியல் வரையறைக்கு உட்பட்டதா?

ஆ) நாம் என்ற உணர்வே தேசியம். அவ்வுணர்வு இந்தியநாட்டில் வசிக்கும் எத்துனை பேருக்கு உள்ளது. (இவ்வுணர்வு இல்லாததற்குக் காரணம் இந்தியா ஒரு தேசியம் இல்லை என்பதே.)

இ) தேசியத்தின் தலையாய பண்பு மகிழ்வுடன் பகிர்ந்தளிப்பது. இயற்கைவளம் முதல் எல்லைவரை எண்ணிலா சிக்கல்களில் சிக்கித்தவிக்கும் இந்திய நாட்டின் மாநில மற்றும் அதன் மக்களின் மனநிலையில் பகிர்ந்தளிக்கும் பண்பு மருந்துக்கேணும் காணப்படுகிறதா?

ஈ) ஒரு தேசத்தில் தேசியக்கட்சிகள் மட்டுமே இருப்பது சாத்தியம். ஆனால், இந்திய நாட்டில்மட்டும் வேடிக்கையாக தேசியக்கட்சிகள், மாநிலக்கட்சிகள், தேசிய-மாநிலக்கட்சிகள் என பல உள்ளன. இந்த உள் - முரணே இந்திய தேசியத்தின் இன்மையை அம்பலப்படுத்துகிறது. அதற்கும் மேலாய், இருவேறு மாநிலங்களை ஆளும் ஒரே தேசியக் கட்சிகளிடம் கூட ஒரு சிக்கல்குறித்த பொதுக்கருத்து இல்லை. காவிரி ஆற்றுநீர் சிக்கலில் காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதா கட்சியின் நிலைப்பாடு (நாடறிந்த ஒன்று) என்ன?

உ) தேசம் ஒரு பரந்துப்பட்ட குடும்பம். குடும்ப உறுப்பினர் ஒருவரின் வலி அனைவராலும் உணரப்படும். ஆனால் பல மாநிலங்களைக் கொண்ட இந்திய நாட்டில் ஒரு மாநிலத்தவனின் வலி இன்னொரு மாநிலத்தவனுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இலங்கை நிகழ்வுகள் குறித்து தமிழகம் கவலையடையும் அதேவேளை பிற மாநிலத்தவருக்கு அது ஒரு சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. இவ்வகை அவலங்கள் மற்றும் முரண்கள் உண்மை தேசியத்தில் சாத்தியமா?

தேசியம் குறித்த எந்த கருத்தியலுக்குள்ளும் இந்தியா என்ற நாட்டை கொண்டுவர இயலாது. மட்டைப்பந்தும், பாகிஸ்தான் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புமே இந்நாட்டின் தேசிய உணர்வு ஊக்கிகள். அந்த வரிசையில் இலங்கை அரசுடனான இந்;திய நாட்டின் நட்பும் இப்போது சேர்ந்துள்ளது. இல்லாத தேசியமே இங்குள்ள சுரண்டல்காரர்களின் உயிர். அதைக்காக்க ஐம்பதுகோடி மக்களை பட்டினிப்போடுவார்கள். நாட்டின் வருமானத்தில் பெரும்பகுதியை முப்படைகளின் பெருக்கத்திற்கும் அணுஆயுதம் செய்யவும் செலவிடுவார்கள். இரு தலைமுறைக்கும் மேலாய் மக்கள்தொகையின் மூன்றில் ஒரு பங்கினரை கல்லாதவராய், அறிவிலியாய் வைத்திருப்பார்கள். விவசாயிகளைக் கடன்காரனாக்கி கொலைசெய்வார்கள். பிரதேச ஏற்றத்தாழ்வுகளைக் கலைய உழைப்பவனிடமிருந்து எடுத்து இல்லாதவர்களுக்கு வாரிவழங்குவார்கள். ஒரு படி மேலேபோய் அண்டை நாட்டில் கொடுங்கோண்மையை எதிர்த்து விடுதலைக்காகப் போராடும் ஒரு தேசிய இனத்தை அடிக்கவும், அழிக்கவும் ஆயுதம் கொடுப்பார்கள்.

போலி இந்திய தேசியத்தால் மறைக்கப்படும், மறுக்கப்படும் பேருண்மை ஈழத்தமிழ் தேசியமும் அதன் விளைவான தமிழீழமும். தெளிவின்மையின் மொத்த உருவான இந்திய நாட்டின் ஒரு பகுதியாக தமிழகம் இல்லாதிருந்திருக்குமேயோனால், ஈழத்தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு என்றோ தீர்வு கிடைத்திருக்கும். உலகில் எந்த ஒரு தேசிய இனமும் விடுதலை பெற இவ்வளவு இழந்ததில்லை. தன் அங்கத்தினரான ஒரு இனத்தின் சொந்தகளுக்கு உதவும் நோக்கில் இந்தியா என்றுமே செயல்பட்டதில்லை. இன்றுவரை இந்தியத் தலையீட்டில் அசிங்கமாய் துருத்திக்கொண்டு நிற்பது தன்னலனே. அல்லல்படும் மக்களை பகடைக்காயாக்கி பிரதேச பாதுகாப்பையும் (இல்லாத) தேசியம் மற்றும் இறையான்மையையும் கட்டமைக்க நினைக்கும் இந்தியாவின் கயமைத்தனம் வரலாற்றில் அம்பலப்படுத்தப்படும்.

இதுவரை ஈழமண்ணில் பயங்கரவாத ஒழிப்பு என்ற பெயரால் கொன்று குவிக்கப்படும் போராளிகள் மற்றும் அப்பாவி மக்களின் துன்பங்களுக்கு இந்தியாவின் வெற்று தேசியமே பொறுப்பு. உண்மையை நசுக்க போலிகள் கூட்டு சேரலாம். தற்காலிகமாய் அதில் வெற்றியும் பெறலாம். ஆனால் பிற்பகல் தாமே வரும் என்ற பொய்யாப்புலவனின் வாக்கிற்கு போலிகள் இறையாகும். உண்மை உட்பட அனைத்துமே அபத்தம் என்ற ஆல்பர்ட் கேம்யூவின் கூற்று அபத்தமாயிருந்தாலொழிய.

ஏ.அழகியநம்பி([email protected])


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com