Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கட்டுரை

அண்ணன் அறிவுமதிக்கு ஒரு திறந்த மடல்
அதி அசுரன்

சென்னையில் ஆழி பதிப்பகத்தின் நூல் வெளியீட்டு (06.01.2008) விழாவில் நடந்த சம்பவங்களை அனைவரும் அறிந்திருப்பீர்கள். அதில் குஷ்பு அவர்கள் தோழர் திருமாவளவன் அவர்களுக்கு வணக்கம் சொல்லவில்லை என்பதை சாக்காக வைத்து தன் மனதிலுள்ள நஞ்சைக் கக்கியுள்ள அண்ணன் அறிவுமதி அவர்களுக்கு ஒரு திறந்த மடல்.

திரைத்துறையில் பார்ப்பன ஆதிக்கத்தை கேள்விக்குள்ளாக்கும் விதத்தில் பல இளைஞர்களை நல்ல இயக்குநர்களாக தமிழ் திரையுலகிற்குத் தந்துள்ளீர்கள். எண்ணற்ற திரைத்துறைக் கவிஞர்கள், இயக்குநர்கள், துணை இயக்குநர்கள் உங்களை அவர்களின் ஆண்தாயாக எண்ணிப் பெருமைப்படுவதையும் அறிந்திருக்கிறோம்.

நான் நிறைய தமிழ் திரைப்படங்கள் பார்ப்பவன். நீங்கள் பணியாற்றிய, பாடல்கள் எழுதிய படங்களையும் நிறைய பார்த்தவன். ஆனால் நீங்கள் ஒரு நல்ல கவிஞர், திரைப்பட இயக்குனர் என்ற அடையாளங்களிலல்லாமல் ஒரு பெரியார் தொண்டர் என்ற முறையில் தான் எம் போன்ற தோழர்களுக்கு முக்கியமான நபராக மாறினீர்கள்.

நீங்கள் எழுதிய நட்புக்காலத்தை நூற்றுக்கணக்கில் வாங்கி எமது நண்பர்களுக்கு வழங்கியிருக்கிறோம். சாதி மறுப்புத்திருமணங்களை வலியுறுத்தும் உங்களது பல கவிதைகளை - பெண்விடுதலை நோக்கிய உங்கள் கவிதைகளை ஆயிரக்கணக்கில் அச்சிட்டு காதலர்தினங்களிலும், மகளிர் தினங்களிலும் தென்மாவட்டங்களின் பேருந்து நிலையங்களிலும், இரயில் நிலையங்களிலும் பிரச்சாரம் செய்திருக்கிறோம்.

ஒட்டன்சத்திரத்தில் நாங்கள் நடத்திய காதலர் தின விழாவிலும் உங்களைப் பேசவைத்தோம்.

அந்த உரிமையில் எழுதுகிறேன்.

என்னதான் பெரியாரைப் பேசினாலும், பெரியார் தொண்டர்களோடு பழகினாலும் உங்களின் அடிமனத்திலுள்ள நச்சுக்கருத்துக்களை அவ்வப்போது வெளிப்படுத்தி விடுகிறீர்கள். திராவிடர் கழக, பெரியார் திராவிடர் கழகத் தலைவர்களையும், அவ்வமைப்பின் தோழர்களையும் நெருங்கிய நண்பர்களாக, உறவுகள் எனவும் அழைத்துக்கொண்டாலும் முருகனடிப்பொடி போல எங்கு போனாலும் முருகக்கடவுள் பிரச்சாரத்தை விட மறுக்கிறீர்கள்.

அய்யப்பசாமிக்கு மாலை போட்டுவிட்டு டாஸ்மாக்கில் தனிக்கிளாசில் தண்ணியடிக்கும் அய்யப்ப பக்தனுக்கும், கறுப்புச் சட்டைபோட்டுக்கொண்டு முருக வழிபாட்டை பிரச்சாரம் செய்யும் உங்களுக்கும் வேறு பாடு என்ன? உங்கள் தனிப்பட்ட , சொந்த விசயமாக வைத்துக் கொண்டால்கூடப் பரவாயில்லை. தலைவர் பிரபாகரனைப் பாடும் போதுகூட அந்த முருகனுக்கே நிகரானவன் எனப் பாடல் எழுதுவது தேவையா? பக்தி விசயத்தில் என்னத்தையோ சொல்லிவிட்டுப்போங்கள். ஆனால் சாதி ஒழிப்பு, பெண்விடுதலை போன்றவை தொடர்பாகக் கருத்துச்சொல்லும் பொழுது கொஞ்சம் யோசித்துப் பேசுங்கள். ஏனென்றால் அந்த இரண்டிலும் சரியாக இருப்பீர்கள் என நம்பித்தான் எம் போன்ற பல இளைஞர்கள் உங்களை எங்கள் இயக்க நிகழ்வுகளுக்கு அழைத்துக்கொண்டிருக்கிறோம்.

தி.க, பெரியார் தி.க என நாங்கள் பிளவுபட்டிருந்தாலும் இரு அமைப்புத் தோழர்களுமே உங்களை மதிப்பதற்குக் காரணம் சாதி ஒழிப்பு, பெண்விடுதலை பேசுபவர் என்பதால்தான்.

ஆனால் அண்மையில் ஆழி பதிப்பக விழாவில் போராளி குஷ்பு அவர்களை நோக்கி நீங்கள் பேசிய பேச்சு எங்கள் உள்ளங்களில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. உங்களைக் கோபப்படுத்தும் அளவுக்கு அவர் பேசியது..

''தோழர் திருமாவளவன் வந்தபோது நான் வணக்கம் வைக்கவில்லை.

வணக்கம் வைக்கவில்லை என்பதற்காக அவரது தோழர்கள் அதற்கொரு வழக்குப் போட்டாலும் போட்டுவிடுவார்கள்.

அதற்காக அவருக்கு ஒரு வணக்கம் வைத்துவிடுகிறேன்.''

என்று சொல்லி, அவர்பக்கம் திரும்பி வணக்கம் வைப்பதாக இரு கைகளையும் கூப்பி...


''தோழர் திருமா.. வணக்கம்''
இதிலென்ன தவறு இருக்கிறது. இப்படி அவர் சொல்லாமல் இருந்திருந்தால் அவர் மீது வழக்கு போட்டிருக்கமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? இப்படி மலிவான விசயங்களுக்கெல்லாம் வழக்குப் போட்டவன்தானே தமிழன். வல்லமைதாராயோ படவிழாவில் கால்மேல் கால் போட்டு அமர்ந்திருந்தார் என்பதற்காக - அது மிகப்பெரும் தவறு என்ற உயர்ந்த இலட்சியத்திற்காக வழக்குப் போட்டவர்கள்தானே உங்கள் உறவுகள், இரத்தங்கள்? உங்கள் தம்பியின் மனைவி என்ற உரிமையில்... என்று பித்தலாட்ட வசனம் வேறு சொல்கிறீர்கள். அந்த உரிமையில் தம்பி வீட்டிற்கே சென்று சண்டைபோட்டிருக்கலாம். அந்த தவறை முறையாக புரியவைத்து குஷ்பு மூலம் அந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவிக்க வைத்திருக்கலாம். ஒரு பெரியார் தொண்டன் அவ்வாறுதான் செய்திருப்பான். ஆனால் திட்டமிட்டு ஒரு கலகத்தை உருவாக்கவேண்டும், எப்படியாவது குஷ்பு அவர்களைப் பணியவைக்கவேண்டும், தம்பி தங்கர்பச்சான் மனம் குளிரவைக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு வந்துள்ளீர்கள். அதனால்தான் குஷ்புவின் பேச்சை திருமாவளவன் அவர்களே கண்டுகொள்ளாதபோது நீங்கள் அவசர அவசரமாக மேடையேறி, கிடைத்தவாய்ப்பை நழுவவிடக்கூடாது என்ற வேகத்தில் மைக்கைப் பிடுங்கி,

இரண்டாயிரம் ஆண்டுகளாக வாழ்க்கை மறுக்கப்பட்ட மக்களின் தலைவர் திருமாவளவன். மலமும் சிறுநீரும் கொடுத்து அவமானப்படுத்தப்பட்ட மக்களுக்கு அரசியல் கொடுக்க வந்த தலைவர் திருமாவளவன். ஒவ்வொரு நிமிடமும், பல பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாகும் அவலநிலையை அதட்டிக் கேட்க வந்த தலைவர் திருமாவளவன்என முழங்கியுள்ளீர்கள்.

உங்கள் தம்பி சீமானின் பாஞ்சாலங்குறிச்சி படத்தில் ஒரு காட்சிவரும்.

மக்காச்சோளக்காட்டில் வடிவேலு அவர்களுடன் வரும் அவரது நண்பர் சோளக்கதிர்களைத் திருடுவார். தோட்டஉரிமையாளர் பார்த்துவிடுவார். திருடியவன் காதுசவ்வு கிழியும்வகையில் ஒரு அடி விழும். அடி வாங்கியன் தோட்ட உரிமையாளரைப் பார்த்து, யோவ் என்னய அடிச்சுட்டீல்ல… முடிஞ்சா எங்க அண்ணன் சிங்கத்தைத் தொட்டுப்பாருய்யா தெரியும் என வடிவேலுவை நோக்கி கையை நீட்டுவார்.

அப்படித்தான் அண்ணன் திருமா அவர்களை வைத்து நீங்கள் விளையாடி யிருக்கிறீர்கள். மலமும் சிறுநீரும் கொடுத்து அவமானப்படுத்தப்பட்ட மக்களின் தலைவர் என சொன்னீர்கள்.

திருச்சி திண்ணியத்தில் மலம் தின்ன வைக்கப்பட்ட மக்களுக்காக திருமாவளவன் அவர்கள் செய்ததென்ன? ஒரு பேரணி நடந்தது. அதன் பிறகு மலம் தின்ன வைத்தவன் வீட்டிலேயே விடுதலைச்சிறுத்தைகளுக்கு விருந்தும் நடந்தது. மறுக்கமுடியுமா? அந்த வழக்கில் வாதாடிய வழக்கறிஞர் தோழர் இரத்தினம் பல செய்திகளைச் சொல்லியுள்ளார். உங்களுக்கும் தெரியும். வெளிப்படையாக அதை நீங்கள் கண்டிக்கத்தயாரா?

திண்டுக்கல் மாவட்டம் பள்ளபட்டி அருகேயுள்ள கவுண்டன்பட்டியில் சிறுநீர்குடிக்க வைக்கப்பட்ட கொடுமைக்கு விடுதலைச்சிறுத்தைகளின் எதிர்வினை என்ன? சொல்ல முடியுமா?

சரி, அதெல்லாம் போகட்டும். கைநாட்டு மரபிலிருந்து கையெழுத்து மரபிற்கு எம்மை வளர்த்தது திராவிடஇயக்கம் என அடிக்கடி சொல்லிக்கொள்கிறீர்கள். அந்த இயக்கத்தின் தலைவர் பெரியார். அந்தப் பெரியார் தாழ்த்தப்பட்ட மக்களின் விரோதி என திருமா அவர்கள் ஆசிரியராக இருக்கும் தாய்மண் இதழில் தற்போது உங்களின் பாசமிகு தம்பியாக மாறியிருக்கும் இரவிக்குமார் அவர்கள் தொடர்ந்து எழுதினாரே! அப்போது உங்கள் வெளிப்படையான எதிர்வினை என்ன?

மதுரையில் பெரியார் தாழ்த்தப்பட்டமக்களின் விரோதியா? என்ற தலைப்பில் தோழர் இரஜினி அவர்கள் ஒரு கருத்தரங்கம் ஏற்பாடு செய்திருந்தார். அதில் எனக்கு முதலில் பெரியாரைத் தான் தெரியும். அவர் மூலம் தான் அம்பேத்கரைத் தெரியும் என்றும் பெரியார் தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர் மட்டுமே என முழங்குபவர் ஆதித்தமிழர் பேரவையின் தலைவர் தோழர் அதியமான். உண்மையாகவே இந்து மத வர்ணாசிரமக் கொடுமையால், சாதிக்கொடுமைகளால் மிக அதிகமாகத் துன்பங்களை அனுபவிக்கும் அருந்ததியர் நிரம்பிய அமைப்பு ஆதித்தமிழர் பேரவை. சுமூகத்தில் எவனும் செய்யத்தயங்கும், யோசிக்கவே தயங்கும் மலமள்ளும் பணியை, சாக்கடை சுத்தப்படுத்தும் பணிகளை இன்றளவும் விடமுடியாமல் செய்து வரும் தோழர்களின் அமைப்பு.

இரட்டைக்குவளை, இரட்டை இருக்கை, தெருவில் நடக்க இயலாமை, செருப்புபோட்டு நடக்க இயலாமை, கல்வி வேலைவாய்ப்புகளில் பங்குபெற இயலாமை போன்ற பல கொடுமைகளைச் சகித்துக்கொண்டு மீள வழியில்லாமல் உழைப்பவர்களின் அமைப்பு ஆதித்தமிழர் பேரவை. அதன் தலைவர் அதியமான். அவரை அந்தக் கருத்தரங்க மேடையிலேயே கொலைவெறியில் தாக்கவந்தார்கள் சிறுத்தைகள். சோடா பாட்டில்களால் அவரைக் குத்தவும் முயன்றனர். அங்கிருந்த ஆதித்தமிழர் பேரவை மற்றும் பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் மேடையைச் சுற்றி நின்று காவல்துறை துறை உதவியுடன் தோழர் அதியமான் காப்பாற்றப்பட்டார். இறுதிவரை அவரைப் பேச விடவில்லை. மிகுந்த கூச்சல்குழப்பங்களுடன் மிரட்டல்களுடன் பெ.தி.க தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் மட்டும் உரையாற்றினார்.

பேசிவிட்டு தோழர்கள் புடைசூழ காவல்துறை அதைச்சுற்றி வளையம் அமைத்து அதன் பின்தான் தோழர் அதியமான் அவர்களும், உங்களை உயிராக மதிக்கும் அண்ணன் கொளத்தூர் மணி அவர்களும் மதுரையைவிட்டு வெளியேற முடிந்தது. அனைத்தும் வீடியோவில் பதிவாக உள்ளது. நீங்களும் பார்த்திருப்பீர்கள். உங்களுக்கும் வீடியோவை அனுப்பினோம். இச்சம்பவங்களுக்கு நீங்கள் செய்த வெளிப்படையான எதிர்வினை என்ன?

இச்சம்பவங்களுக்கு தோழர் திருமா காரணமில்லை என வாதத்திற்கு வைத்துக்கொண்டாலும், முழுக்காரணமான சட்டமன்ற உறுப்பினர் இரவிக்குமார் அவர்களையாவது கண்டித்தீர்களா? எங்காவது அவர் பேசும் போது போய் மைக்கை புடுங்கியிருக்கியிருக்கிறீர்களா?

இப்போதும் தமிழ்நாட்டில் கரடிச்சித்தூரில், கோவையில், திருச்சியில், விருதுநகர் மாவட்டத்தில் இன்னும் பல இடங்களில் ஆதித் தமிழர் பேரவைத் தோழர்கள் விடுதலைச்சிறுத்தைகளால் வெட்டப்பட்டுள்ளனர். சிறுத்தைகளால் பாலியல் வன்முறைக்கு ஆளாகியுள்ளனர். ஆதித் தமிழர் பேரவையின் கூட்டத்திற்கான சுவரொட்டியை விடுதலைச்சிறுத்தைகள் வசிக்கும் இடங்களில் ஒட்டியது மாபெரும் குற்றமாம். அதற்காக அருந்ததியர் சமுதாயத்தினர் வெட்டப்பட்டுள்ளனர். இதற்கெல்லாம் நீங்கள் தோழர் திருமா அவர்களை விமர்சனம் செய்ததுண்டா? எங்காவது ஒரு மேடையில் அவர் பேசும்போது மைக்கைப் பிடுங்கும் துணிச்சல் உண்டா?

(இப்போது திருமா அவர்களும் அண்ணன் கொளத்தூர் மணி அவர்களும் ஒரே மேடையில் தாழ்த்தப்பட்டோர் விடுதலைப் போராட்டங்களில் ஒன்றாக முழங்குகிறார்கள். வரவேற்க வேண்டிய மாற்றங்கள்தான்.)

உங்கள் தலைவர் திருமா அவர்கள் எந்தக்கூட்டத்திற்குப் போனாலும் தாமதமாகவும் முக்கியமானவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதும் சுமார் நூறு தோழர்களுடன் நுழைந்து அந்த அரங்கங்களில் அதுவரை இருந்த இயல்பான சூழலை மாற்றி, யாரையும் பேசவிடாமல், யாரையும் கேட்கவும் விடாமல் திருமா அசைந்தாலும், மீசையை முறுக்கினாலும், தாடியைத் தடவினாலும் வாழ்க வாழ்க என முழக்கமிட்டு நிகழ்ச்சிகளைக் கெடுத்து வருகிறாரே உரிமையுடன் அதைத் திருத்தலாமே? எழவு வீட்டிற்குப் போனாலும் வாழ்க வாழ்க என முழங்கியதை வீடியோவில் பதிவுசெய்து வைத்துள்ளேன். பலநூற்றுக்கணக்கான கூட்டங்களுக்கு அவர் செல்லும் போது நடப்பது இதுதான். ஆதாரப்பூர்வமாக சொல்லஇயலும். உங்களை விமர்சனம் செய்யத் தொடங்கி அது தோழர் திருமா அவர்களை விமர்சிக்கும் மடலாக மாறிவிடக்கூடாது என்பதற்காக அந்தப் பட்டியலை இங்கு கூற விருப்பமில்லை. எந்த நிகழ்ச்சிக்குப் போவதாக இருந்தாலும் கூட்டம் தொடங்க குறித்த நேரத்தில் போகவேண்டும் என்ற நல்லபழக்கத்தை அவர் கடைபிடித்திருந்தால் ஆழிபதிப்பக விழாவில் இந்த சண்டையே வந்திருக்காது. குஷ்பு அவர்களை வம்பிழுக்க உங்களுக்கு வாய்ப்பும் கிடைத்திருக்காது.

மேலும் நக்கீரன் இதழில்,
ஆடை அவிழ்ப்பவர்கள் எல்லாம் கற்பு பற்றி பேசும் கேடான நிலை வந்துவிட்டது எனவும் மலேசியாவில் தமிழன் கொடுமைப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் அங்கு போய் குத்தாட்டம் போட்டு வந்துள்ளீர்கள் எனவும் குஷ்பு மீது குற்றஞ்சாட்டியுள்ளீர்கள்.

பஞ்சாபிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்து தமிழர்களிடம் ஆடை அவிழ்த்துக் காட்டியே ஆக வேண்டும் என்னும் வெறியுடன் குஷ்பு வந்ததைப் போலல்லவா கூறுகிறீர்கள்? திரைத்துறையில் இருக்கும் நீங்கள் அதைச் சொல்லலாமா? இது நேர்மையற்ற குற்றச்சாட்டு என உங்களுக்கே தெரியாதா? உங்கள் தம்பி சீமானின் தம்பி பட விழாவில் சிங்கள நடிகை பூஜா ஒரு திருக்குறளைச் சொன்னாரே, பூஜா அவிழ்க்காத ஆடையா? நீயெல்லாம் திருக்குறளைச் சொல்லலாமா என அந்த மேடையில் மைக்கைப் பிடுங்க வேண்டியதுதானே?

மேலும் திரைப்படங்களில் நடிகைகளின் ஆடைகளை மக்கள் விரும்புகிறார்கள் என்ற சாக்கில் அவிழ்ப்பவர்கள் தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் தானே? குஷ்புவோ வேறு எந்த நடிகையுமோ இதற்கு எப்படிப் பொறுப்பாவர்கள்? சரி குஷ்பு ஆடை அவிழ்க்க சம்மதிக்கவில்லை என்றால் அப்படிப்பட்ட பாடல் காட்சிகள் ஆடையுடன்தான் வந்திருக்குமா? அவர் திரைத்துறையில் முன்னேற அவரது ஆடையைத் தான் அவிழ்த்தார். உங்களைப் போன்ற பாடலாசிரியர்கள், இயக்குநர்கள் அடுத்தவர் ஆடையையல்லவா அவிழ்க்கிறீர்கள்.

நீங்கள் பணியாற்றிய சிறைச்சாலையில் நடிகை தபு வின் உடலுக்கு முத்தத்தாலே சேலை நெய்யவில்லையா? நாணத்தாலோர் ஆடை சூடிக்கொள்ள வில்லையா? ஆற்றுநீரில் மோகன்லால் முழு ஆடையுடனும், தபு மட்டும் முக்கால் நிர்வாணத்துடனும் பாடும் காட்சி உங்கள் ஒத்துழைப்புடன்தானே படமாக்கப்பட்டது. அதற்கு திரைக்கதை வசனம் நீங்கள் தானே? ஊட்டி என்றால் குளிர்தான் உடனே மூளைக்கு எட்டும். உங்கள் பாடல் மூலம் தானே ஊட்டி சூடேற்றும் என்பதை உணர்ந்து கொண்டோம். இன்னும் எவ்வளவோ எடுத்துக்காட்டுக்களைக் கூறலாம். இப்படிப்பட்ட நீங்களெல்லாம் கற்பு பற்றி பேசலாம், குஷ்பு பேசக்கூடாதா?
உங்களைப் போன்ற பாடலாசிரியர்களை விட, இயக்குநர்களை விட பலமடங்கு தகுதி போராளி குஷ்புவுக்கே உண்டு.

மலேசியாவில் தமிழர்கள் கொடுமைப்படுத்தப்படும் பொழுது குத்தாட்டம் ஆடினீர்கள் எனச் சொல்லியுள்ளீர்கள். குஷ்பு மட்டும் போய் தனியாக ஆடினாரா? உங்கள் இளைய திலகம் பிரபும் தான் ஆடினார் என செய்திகள் உள்ளனவே? வாழ்த்துக்கள் பாடல் வெளியீட்டு விழாவில் அவரையும் கண்டித்திருக்கலாமே. ஏன் கண்டிக்கவில்லை?

மலேசியாவில் தமிழர் கொடுமைப்படுத்தப்படுகிறார்களா? இல்லையா என்பது விவாதத்திற்குரியது. ஆனால் ஈழத்தில் - தமிழன் வாழவே முடியாத நிலை என்பதை நீங்களோ மனித உணர்வுள்ள எவனுமோ மறுக்க மாட்டான். அந்த ஈழப்பகுதிக்குச் சென்று வாழ்த்துக்கள் திரைப்படத்தின் பாடல் காட்சிகளை எடுத்துத்திரும்பினாரே சீமான், அவரைக் கேட்கவேண்டியது தானே. திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்திய உண்ணாநோன்பில் இருவரும் கலந்து கொண்டு பேசினீர்களே அப்போது சீமானிடம் இவ்வளவு கொடுமைகள் நடந்து கொண்டிருக்கும் இடத்திற்குச் சென்று காதல் காட்சிகளை படம்பிடிக்கிறாயே? நீயெல்லாம் ஈழத்தமிழர்களைப் பற்றிப் பேசலாமா? எனக் கேட்டு மைக்கை பிடுங்கியிருக்கவேண்டியது தானே?
அதே விழாவில், குஷ்புவைப் பார்த்து, தங்கர்பச்சானை இழிவு படுத்தினாய். அவர் என் இனம். என் இரத்தம் என இரத்தபாசத்தைக் காட்டியுள்ளீர்கள். ஜெயா டி.வி நேர்காணலில் தங்கர் பச்சானைப் பற்றிக் கேட்டபோது, யார் அவன்? என குஷ்பு பதில் தந்தாராம். அதற்காக உங்கள் இரத்தம் கொதித்திருக்கிறது. நக்கீரன் இதழின் இணையப் பதிப்பில் மாறவர்மன் என்பவர் அது இரத்தபாசம் மட்டுமல்ல சாதிப்பாசமும்கூட. இருவரும் ஒரு சாதி என எழுதியுள்ளார்.

அப்படியெல்லாம் உங்களை நாங்கள் நினைக்கவில்லை. அதே சமயம் உங்கள் தங்கர்பச்சான் ஒருமுறை குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் பெரியாரை விட நான் அதிகம் சிந்திப்பவன் என திமிராகப் பேட்டி கொடுத்தானே மறந்துவிட்டீர்களா? பேட்டி கொடுத்து அடுத்த நாளே திருச்சியில் தமிழ்பாதுகாப்பு மாநாட்டில் நீங்களும் அவரும் இணைந்து பேசினீர்களே நினைவிருக்கிறதா? ஒரு பெரியார் தொண்டராக அந்த மேடையில் தம்பி என்ற உரிமையில் ஒரே அடியில் தங்கரின் காது சவ்வைக் கழித்திருக்க வேண்டும். ஏன் செய்யவில்லை?
தங்கர் பச்சானை நோக்கி, யார் அவன்? எனக்கேட்ட ஒரே காரணத்திற்காகத் தான் குஷ்பு அவர்களை நாங்கள் போராளி குஷ்பு என்கிறோம்.

பெரியாரை எவன் வேண்டுமானாலும் கண்டபடி பேசலாம், பெரியார் கொள்கைகளை யார் வேண்டுமானாலும் வாய்க்குவந்தபடி விமர்சனம் செய்யலாம், யாருக்காகப் பெரியார் இறுதிவரை உழைத்தாரோ அந்த இனத்தையே பெரியாருக்கு எதிராகத் திசைதிருப்பி பார்ப்பான் காரியத்தை நிறைவேற்றலாம். பெரியார் கொள்கைகளுக்காக வாழ்நாள் முழுதும் உழைத்துக்கொண்டிருக்கும் தலைவர்களை மேடையிலேயே யார் வேண்டுமானாலும் தாக்கலாம், மோதிப்பார்ப்போம் என சவால் விடலாம், நேரடியாக மோத முடியாத பார்ப்பானெல்லாம் நம் தோழர்களைப் பயன்படுத்தி மோதிப்பார்க்கலாம்.

அப்போதெல்லாம் நீங்கள் வாயையும் கையையும் அடக்கிக்கொண்டு இருப்பீர்கள். பெரியார் கருத்தை ஆதரித்து குஷ்பு பேசினால் மட்டும் மேடையில் ஏறி மைக்கைப் பிடுங்கி வசனம் பேசுவீர்கள் என்றால் நீங்கள் பெரியாரைப் பேசுவதில், பெண்ணுரிமை பேசுவதில், சாதி ஒழிப்புப் பேசுவதில் ஏதோ உள்நோக்கம் - தவறான - இந்த இனத்திற்குக் கேடான உள்நோக்கம் இருப்பதாகத்தான் எமக்குத் தோன்றுகிறது.

பெண்ணுரிமை குறித்து உங்களைப் பேச அழைத்த தோழர்களெல்லாம், இயக்கம் கடந்த மகளிரெல்லாம் உங்களை நோக்கி இதைவிடக் கடுமையான விமர்சனங்களை வைக்கத் தயாராக உள்ளனர். இனிமேல் அவர் பங்கேற்கும் விழாக்களுக்கு அது யார் நடத்தும் விழாவாக இருந்தாலும் எங்களை அழைக்காதீர்கள் என எம் வீட்டுப் பெண்கள் உறுதியாக இருக்கின்றனர். பதில் சொல்வதோ, இவனெல்லாம் யார் என்னைக் கேட்க என எம் கேள்விகளைப் புறந்தள்ளுவதோ உங்கள் விருப்பம்.

இப்படிக்கு,
வெளிப்படையாக பதிலை எதிர்நோக்கும் தோழர்களில் ஒருவன்
அதி அசுரன்

- அதி அசுரன் ([email protected])

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com