Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கட்டுரை

ஞாநியின் பேனாவை பூணூல் தடுக்கிறதோ?
அதி அசுரன்

எழுத்தாளர் ஞாநி அவர்கள் தற்போது புதுக்குடித்தனம் போயிருக்கும் குமுதம் 9.4.2008 இதழில் சுபவீ அவர்களுக்கு ஒரு மடல் எழுதியிருக்கிறார். தமிழர்களை கொன்றுகுவிப்பதை அன்றாட வாழ்க்கை நடைமுறையாகக் கொண்டுள்ள சிங்கள அரசின் ஆதரவில் - ஆலோசனையில் பிரபாகரன் என்ற திரைப்படம் உருவாகி வருவதையும் அதன் தொழில் நுட்பப்பணிக்காக அப்படத்தின் இயக்குநர் துசாரா பெய்ரிஸ் சென்னை பிரசாத் கலைக்கூடத்தில் இருந்தபோது தோழர்கள் சுபவீ, சீமான், வன்னியரசு மற்றும் விடுதலைச் சிறுத்தைகள், பெரியார் திராவிடர் கழகம் ஆகிய அமைப்புத் தோழர்களால் தாக்கப்பட்டதையும் அறிவீர்கள். அந்த சிங்களன் தாக்கப்பட்டதற்காகத் தான் இந்த முற்போக்கு ஞாநி அவர்கள் சுபவீ அவர்களுக்கு மடல் எழுதியிருக்கிறார்.

கருத்தைக் கருத்தால் சந்திக்க வேண்டுமாம், இந்த வன்முறைத் தாக்குதல் ஒரு மோசமானமுன்னுதாரணமாம். இந்த வன்முறை இருபுறமும் வெட்டக்கூடிய கூரிய ஆயுதமாம். சிங்களன் அடிபட்டதற்காக துடித்துப்போய் நமக்கு அறிவுரைகளை அள்ளி வீசியுள்ளார்.

கண்ணகி சிலை கடற்கரையில் இருந்து அகற்றப்பட்டபோது அது தொடர்பாக ஞாநி அவர்கள் எழுதிய கடிதம் ஒன்று அவரது தீம்தரிகிட இதழில் வெளியானது. அதை முதலில் பாருங்கள்.

...அன்று இரவு திருவனந்தபுரம் மெயிலில் சென்னை திரும்புகையில், விடியற்காலை சுமார் இரண்டு மணிக்கு பெட்டிக்குள் இருந்த எதிர் வரிசை பெண்ணின் உரத்த குரல் என்னையும் பல சக பயணிகளையும் எழுப்பியது. அந்தப் பெண் பக்கத்து இருக்கையில் படுத்து இருந்த ஆணைக் கடுமையாக சாடிக் கொண்டிருந்தாள். அவன் தன்னை நோக்கிக் கையை நீட்டி சீண்டித் தொல்லை செய்ததை அவள் கண்டித்துக் கொண்டிருந்தாள். சக பயணிகளை தன் உதவிக்கு வரும்படி அந்தப் பெண் அழைக்கக் கூட இல்லை. வந்த உதவியை நிராகரிக்கவும் இல்லை.

முறைகேடாக நடந்து கொண்ட பயணியை நடுவழியில் இறக்கி விட்டுவிடலாம் என்று பெட்டியின் நடத்துநர் சொன்னதை அவள் ஏற்கவில்லை. அவனை உடனே போலீசிடம் ஒப்படைக்க வேண்டுமென்று வலியுறுத்தினாள். அப்போது சேலம் ரயிலடியில் வண்டி நின்றது. நடத்துநர் ஓடிச் சென்று ஒரு காவல் துறை துணை ஆய்வாளரை அழைத்து வந்தார். அந்தக் காவலரோ புகாரைப் பதிவு செய்ய வேண்டுமென்றால், இருவரும் அந்த ரயில் நிலையத்தில் இறங்க வேண்டும் என்றார். தன் முகவரி, முழு விவரங்களுடன் தான் எழுத்துப்பூர்வமாகப் புகார் கடிதம் தரும்போது, தானும் ஏன் பயணத்தை பாதியில் முறிக்கவேண்டும் என்று அந்தப் பெண் கேட்டதற்கு சரியான பதில் இல்லை. காவலர் மேல் நடவடிக்கை ஏதும் எடுக்காமல் இறங்கிப் போய்விட்டார்.

அந்தப் பெண் நடத்துநரிடமிருந்து தவறு செய்த பயணியின் பெயர் விவரத்தைப் பெற்று புகார் கடிதம் எழுதி நடத்துநரிடம் அளித்தாள். குற்றவாளி 18 வருட சர்வீஸ் உள்ள ராணுவ 'வீரர்'. (ரயிலில் ராணுவ சிப்பாய்கள் பெண்களிடம் அத்துமீறி இப்படி நடப்பது தனக்குத் தெரிந்தே நான்காவது முறை என்று அந்தப் பெண் தெரிவித்தாள்.) ரயில்வே நிர்வாகத்தின் மூலம் புகாரை ராணுவத் தலைமையகத்துக்கு அனுப்புவதாக நடத்துனர் உறுதியளித்தார். இதுவரை வாய் திறக்காமல் மௌனமாக இருந்த குற்றவாளி, வேறு சில பயணிகளின் யோசனையின்பேரில், சட்டென்று அந்தப் பெண்ணின் காலைத் தொட்டு வணங்கி தன்னை எதுவும் செய்துவிடவேண்டாம் என்றான்.

கோபமடந்த பெண், அருகிலிருந்த ஒரு செருப்பை எடுத்து அவன் தலையில் அடித்தாள். அவனிடம் எந்த சலனமும் இல்லை. கடைசி வர அந்தப் பெண் தன் புகாரைத் திரும்பப் பெறவில்லை. தமிழ்நாட்டில் கண்ணகியைக் காட்டிக் காட்டி நமது பெண்களை மூளைச் சலவை செய்து வந்ததன் விளைவாகத்தான், ரயில்களில், பஸ்களில், பொது இடங்களில் ஏன் வீட்டுக்குள்ளும்தான், எல்லா அவமானங்களையும் சீண்டல்களையும் மௌனமாக சகித்துக் கொள்கிற 'கல்ச்சர்' ஏற்பட்டிருக்றது. தனக்கு இழக்கப்படும் அநீதிகளைப் பொறுத்துக் கொண்டு மௌனமாக இருக்க வேண்டும். தன் வீட்டு ஆண்களுக்கு ஏற்படும் சிக்கல்களுக்கு மட்டும் தெருவில் வந்து போராடவேண்டும் என்று பெண்ணுக்கு போதிக்கிற கலாசாரம்தானே கண்ணகி கலாசாரம்?

கண்ணகி மட்டுமல்ல, சீதையும், நளாயினியும், கண்ணகியின் கற்பு, பண்பாடு பற்றி உருகுகிற இன்றைய அரசியல் தலைவர்கள், சமூகப் பிரமுகர்கள் பலரின் முதல் மனைவிகளும் என் தந்தையின் முதல் மனைவியும் கூட அவரவர் செருப்புகளை தம் கணவன்களுக்கெதிராகப் பயன்படுத்தியிருந்தால் அது ஒன்றும் குற்றமாகிவிடாது என்பதுதான் பெரியார் எனக்குக் கற்றுத் தந்த பார்வை.


இப்படி ஒரு மடலை 5.1.2002 நாளிட்டு எழுதி அது தீம்தரிகிட இதழில் வந்துள்ளது.

ஒரு பெண் இரயில் பயணத்தில் தன்னிடம் தவறாக சைகை செய்த ஒரு ஆணை செருப்பால் அடிக்கிறார். அவன் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்ட பின்பும் செருப்பால் அடிக்கிறார். தன்னிடம் அடிவாங்கியவன் மீது காவல்துறையில் புகாரும் கொடுக்கிறார். ஞாநி அந்தப் பெண்ணைப் பாராட்டுகிறார். பெண்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்கிறார். அந்தப் பெண்ணுக்காக சாட்சிக் கையெழுத்தும் போட்டுள்ளார். நாம் அந்தப் பெண்ணை மனமாரப் பாராட்டுகிறோம். அந்த சம்பவத்தில் ஞானியையும் பாராட்டுகிறோம்.

ஒரு பெண்ணிடம் தவறாக சைகை செய்தவன் அதே பெண்ணிடம் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டபின்னும் செருப்பால் அடிக்கப்படுகிறார். அது ஞானிக்கு நியாயமாம்.

ஆயிரக்கணக்கான தமிழச்சிகளை அவர்களது சகோதரன் முன்னிலையிலேயே, பெற்றோரின் முன்னிலையிலேயே, கணவனின் எதிரிலேயே காட்டுமிருகங்காக மாறிக் குதறிவிட்டு, மார்பகங்களை அறித்தெறிந்துவிடுவதும், மார்பில் சிறீ என்று குறி பதிவதும், கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றைக் கிழித்து அந்த சிசுவையும் உருத்தெறியாமல் சிதைப்பதையும் ஒருவன் பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்கவேண்டுமாம். இந்த காட்டுமிராண்டிகளைத் திருப்பித் தாக்க, தன் இனத்தைத் தற்காத்துக் கொள்ள மானமுள்ளவன் ஆயுதம் எடுத்தால் அது தவறாம். வன்முறையாம்.

இந்தத் தற்காப்பு தாக்குதலை வன்முறையாக சித்தரிப்பானாம். நாளை உயிரோடு இருப்போம் என யாருக்கும் உத்திரவாதமில்லாத நாட்டில், அந்த உறுதியை, உத்திரவாதத்தை தமிழனுக்குக் கொடுப்பதற்காக ஆயுதம் ஏந்தியவர்களை வன்முறையாளர்களாகச் சித்தரித்து ஒருவன் படம் எடுப்பானாம். அதை நாம் வேடிக்கை பார்த்துக்கொண்டுதான் இருக்க வேண்டுமாம். அந்தப் படத்தை ஓடவிட்டு அதற்குப் பதில் கொடுக்கும் விதமாக நாமும் ஒரு படம் எடுத்துத் தான் பதில் சொல்ல வேண்டுமாம்.

ஞாநி அவர்களே தமிழனின் மான உணர்வைக் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறீர்கள். உமது குலத்தினர் மாட்டுமூத்திரத்துக்கு தரும் மரியாதையின் அளவுக்காவது நீங்கள் எம் போன்ற தோழர்களின் உணர்வுகளுக்கு, நியாயங்களுக்கு மரியாதை கொடுப்பது அடிப்படை அவசியம். எந்த துணிச்சலில் இப்படி ஒரு கடிதத்தை எழுதுகிறீர்கள்? சுபவீ அவர்களுக்கு ஏன் மடல் எழுதுகிறீர்கள்? சுபவீ என்ற தனிப்பட்ட நபரா அடிக்கச் சென்றார்? கட்சிகளைக் கடந்து, இயக்கங்களைக் கடந்து தமிழர்கள் ஒன்றாகச் சென்று தாக்கியுள்ளனர்.

2006 டிசம்பரில் பெரியார் சிலைக்கு செருப்புமாலை போட்ட உடனே தமிழ்நாடெங்கும் பூணூல் அறுக்கப்பட்டது. பார்ப்பனர்கள் தாக்கப்பட்டனர். அயோத்தியா மண்டபம் தாக்கப்பட்டது. அதன் பிறகு தமிழ்ச்செல்வன் வீரமரணமடைந்த சமயத்தில் வாலாட்டிய ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கோபியில் விரட்டியடிக்கப்பட்டார். இப்போது சிங்களன் தாக்கப்பட்டுள்ளான். ஓகேனக்கல் குடிநீர் திட்ட எதிர்ப்புக்கு கன்னடர்கள் தமிழ்நாட்டு உடைமைகளைத் தாக்கியபோது சென்னையில் கன்னடர்களின் உடுப்பி ஓட்டல்களும், சங்கீதா ஓட்டல்களும் தாக்கப்படுகின்றன. எந்த இயக்கத் தலைவரும் அறிவிக்காமல் தமிழ்நாடு முழுவதும் அனைத்து இயக்கத் தோழர்களும் பதிலடியில் இறங்கியுள்ளனர். தமிழ்நாட்டில் இப்பதானய்யா அடிக்க ஆரம்பிச்சு இருக்கோம். இவ்வளவு நாளா வாங்கிக்கிட்டுத்தானே இருந்தோம்.

எமது எதிர்த்தாக்குதல் உங்களுக்கு மோசமான முன்னுதாரணமா? இருந்து விட்டுப் போகட்டும். இந்த நிலை வரவேண்டும் என்பதுதானே எமது நோக்கம். நீங்கள் வேண்டுமானால் ஐ.நா அவையின் அமைதிக்கான விருதையும், உலக அமைதிக்கான நோபல் விருதையும் வாங்கிக் கொள்ளுங்கள். எமக்கு ரவுடிப் பட்டம் தான் தேவை. காலங்காலமாக அடிவாங்கிய எங்களுக்கு ஏதாவது ஒரு சிறு நியாயமாவது கிடைக்க வேண்டுமென்றால் முதலில் அடி - பதிலடி அப்புறம்தான் பேச்சுவார்த்தை, விவாதம், கருத்துரிமை, கழுதையுரிமை எல்லாம்.

கருத்தைக் கருத்தால் சந்திக்கவும் நாங்கள் தயார்தான். நீங்கள்தான் கருத்துரிமைக் காவலர் ஆச்சே, நீங்கள் நிறுவனராக உள்ள ஒற்றைரீல் இயக்கத்தில் எமக்கு, எமது கருத்துக்களைச் சொல்வதற்கு ஒரு வாய்ப்பை வழங்குங்கள். நாங்கள் சிங்கள இயக்குநர் பெய்ரீசை அடித்தது சரிதான் என நிரூபிக்கும் வண்ணம் ஒரு ரீலை எடுத்துத் தருகிறோம். நாடெங்கும் ஒளிபரப்புங்கள். செய்வீர்களா? எனது நிறுவனத்தில் அதெல்லாம் செய்யமாட்டேன் என்கிறீர்களா? சரி, உங்களது இணை நிறுவனரான பிரமிட் சாய்மீராவில் பேசிச் சொல்லுங்கள். நீங்கள் விரும்பியபடியே இயக்குநர் சீமான் அவர்களை வைத்து பெய்ரிசை அடித்தது நியாயம் என்பதை விளக்கி திரைப்படம் எடுக்கிறோம். பதிலுக்குக் காத்திருக்கிறோம்.

மேலும், சிங்களனைக் கொல்ல விரும்பினால் வன்னியிலே போய் ஆயுதப் பயிற்சி எடுத்து புலிப்படையில் சேர்ந்து போராடுங்கள், அப்பாவி சிங்களனை அடிக்காதீர்கள் என்கிறார் ஞானி.

நிதானமாகத் தான் எழுதுகிறாரா எனத் தெரியவில்லை. ஓரிசாவில் மருத்துவப்பணி செய்து வந்த ஸ்டேன்ஸை உயிரோடு எரித்தார்களே, 1990 இல் ரத யாத்திரை நடத்தி 100க்கும் மேற்பட்ட முஸ்லீம்களைக் கொலை செய்தார்களே, பாபர் மசூதி இடிப்பு கலவத்தில், குஜராத்தில் மோடி நடத்திய கலவரத்தில் முஸ்லீம்களைக் கொன்று குவித்தார்களே, மும்பையில் முஸ்லீம்கள் வாழும் பகுதியில் இரயில் குண்டு வைத்தர்களே, அந்த காலிக்கும்பலிடம் - காவிக்கும்பலிடம் போய் இது போன்ற வாதத்தை வைப்பீர்களா?

திண்டுக்கல்லில் கஞ்சிக்கு வழியில்லாமல் சாலையில் படுத்துக் கிடந்த முஸ்லீம் பெரியவரை கொலை செய்கிறார்கள், தாராபுரத்தில் மசூதியில் பன்றி வாலைத் தூக்கி எறிகிறார்கள், அந்த அரைடவுசர் கும்பலிடம் போய், இங்கிருக்கும் மதம் மாறியவனை - இந்த நாட்டுக்குச் சொந்தமானவனை ஏன் அடிக்கிறாய்? துணிவிருந்தால் சுதர்ஸன்ஜி தலைமையில் எல்லோரும் பின்லேடனிடம் போய் சண்டை போடுங்கள். அல்கொய்தாவிடம் சண்டை போடுங்கள், ஆப்கானுக்குப் படை எடுங்கள், குறைந்த பட்சம் இராமகோபாலன் தலைமையில் காஷ்மீருக்குப் போய் சண்டையைத் தொடங்குங்கள் என்று சொல்ல வேண்டியது தானே?

திண்டுக்கல் மாவட்டம் வெள்ளோட்டில், பஞ்சம்பட்டி, கொசவபட்டியில், பெருமாள்கோவில்பட்டியில் பாஸ்கு திருவிழாக்களில் சப்பரம் (தேர்) இழுத்துவரும் கிறிஸ்தவர்களிடம் வெட்டு, குத்துக்குச் செல்லும் ஆஃப் டிராயர் சண்டியர்களிடம் போய், ரெண்டு மூணு தலைமுறைக்கு முன்னால் மதம் மாறிய உள்ளூர்க்காரனை ஏன் அடிக்கிறீர்கள்। புறப்படுங்கள் ரோம் நகருக்கு, போட்டுத் தள்ளுங்கள் மதம் மாற்றுபவர்களை என கீதாஉபதேசம் செய்யவேண்டியதுதானே? இதுவரை அப்படி எழுதாவிட்டாலும் பரவாயில்லை। இனிமேலாவது அப்படி எழுதுவீர்களா? பூணூல் பேனாவைத் தடுக்குமோ?

கடந்த 25 ஆண்டுகளாகத் தொடர்ந்து சிங்களக் கடற்படை தமிழர்களை, மீனவர்களைத் தாக்குகிறதே, உங்களது ஓ... பக்கங்களில் அந்த சிங்களப் படைகளைக் கண்டித்து, ஏன் அப்பாவி மீனவர்களைக் கொல்கிறீர்கள்? துணிவிருந்தால் இந்திய இராணுவத்துடன் நேரடியாக மோதுங்கள், குறைந்தபட்சம் எங்கள் கூடுதல் டி.ஜி.பி. விஜயகுமாரிடம் மோதிப் பாருங்கள் என சிங்கள இராணுவத்துக்கு பகிரங்கக் கடிதம் எழுத வேண்டியது தானே? ஏன் எழுதவில்லை?

மலேசியாவில் இரண்டு தமிழர்கள் கொடுமைப்படுத்தப்பட்டு கொல்லப்பட்ட போது அவர்களுக்கு, அந்த ஏழைத் தமிழர்களுக்கு தமிழக அரசு உதவவில்லை என மாவோயிஸ்ட்கள் ரேஞ்சுக்கு தீம்தரிகிட இதழில் எழுதினீர்கள். கார்கில் போர் நடந்தபோது களத்திற்கே சென்று ஆனந்த விகடனில் கட்டுரை எழுதினீர்கள். இங்கே பக்கத்திலே இராமேஸ்வரத்திலே 25 ஆண்டுகளாக மீனவர்களை கொன்று, சொத்துக்களைக் கொள்ளையடித்துச் செல்கிறதே சிங்களக் கடற்படை. அந்தச் சிங்களக் கடற்படைக் கொலைவெறிக் கூட்டத்தைக் கண்டித்து என்றாவது ஒருநாள் எழுதியது உண்டா? கடலுக்குச் சென்று நிலைமையைப் பார்த்ததுண்டா? காஷ்மீரில் அடிபடுபவன் பண்டிட் பார்ப்பான் - இங்கே அடிபடுபவன் தமிழன்.

சிங்களப்படை ஈழத்திலே தமிழனை அழிப்பதோடு, தமிழ்நாட்டுக் கடல் எல்லைக்குள் தமிழர்களையும் தாக்குகிறது. இலங்கைத் துணைத் தூதர் ஹம்சா தமிழ்நாட்டிலேயே உட்கார்ந்து கொண்டு தமிழ்நாட்டு முன்னாள் அமைச்சர்களைப் பிடித்து தமிழ்நாடு முழுவதும் நாற்பது ஊர்களில் புத்தர்கோவில் என்ற போர்வையில் சிங்களனுக்குக் களம் அமைக்கிறார். பெய்ரிசுகளைப் பிடித்து சிங்கள அரசின் கொள்கை விளக்கத்தை திரைப்படமாக எடுக்கிறார். உங்களைப் போன்ற ஊடகத்துறையில் உள்ள ஞாநிகள் மூலமாக அந்தத் திரைப்படத்திற்கு ஆதரவு திரட்டப்படுகிறது. இதற்கு இந்திய உளவுநிறுவனங்களின் ஒத்துழைப்பும் கிடைக்கிறது. இவ்வளவும் நடக்கும். நாங்கள் வெறும் கருத்துப்போர் நடத்திக்கொண்டிருக்க வேண்டும்! அந்த அக்கப்போரை என்னைப் போன்ற வேலைவெட்டி இல்லாதவன் பார்த்துக் கொள்வான். அதுவும் எங்களுக்குள் உள்ள மாறுபாடுகளுக்குத் தான் கருத்துப் போரெல்லாம். பார்ப்பானிடமும், சிங்களனிடமும் பதிலடிதான் முதலில்.

எங்களுக்குத் தெரியும். யார் பத்திரிக்கையில் எழுதிக்கொண்டிருக்க வேண்டும், யார் வன்னிக்குப் போகவேண்டும், யார் அயோத்தியா மண்டபத்துக்குப் போக வேண்டும், யார் இங்கே இருக்க வேண்டும், யார் இரட்டைக் குவளையை உடைக்க வேண்டும், யார் உடுப்பி ஓட்டலை நொறுக்க வேண்டும், யார் பெய்ரீசை உதைக்க வேண்டும் என்றெல்லாம். எந்தப் பார்ப்பன ஆலோசனைகளும் எமக்குத் தேவையில்லை.

ஈழப்பிரச்சனை மட்டுமல்ல, ஒகேனக்கல் சிக்கலில் திரைத்துறையினர் உண்ணாவிரதத்தில் இனமுரசு சத்தியராஜ் அவர்கள் பேசியதைக் கூட இமயம் தொலைக்காட்சியில் விமர்சனம் செய்தீர்கள்.

உணர்ச்சியைத் தூண்டும் வகையில், உணர்ச்சிவசப்பட்டு சிலர் பேசினார்கள். கமலஹாசன் தான் பக்குவமாகப் பேசினார்.

என்றீர்கள். பெங்களூரில் பார்ப்பனர்கள் அதிகம் வாழும் மல்லேஸ்வரம் பகுதியில் பார்ப்பனர்களுக்கு அடி விழுந்து மாமிகள் அடித்து விரட்டப்பட்டு தமிழக எல்லை நோக்கி ஓடிவந்திருந்தால் - பம்பாயில் மாதுங்கா பகுதியில் வாழும் பார்ப்பனர்கள் அடித்து விரட்டப்பட்டு தமிழ்நாடு நோக்கி வரவேண்டிய நிலை வந்திருந்தால் கமலஹாசனோ, நீங்களோ பக்குவமாகத் தான் பேசியிருப்பீர்களா? இல்லை இந்திய அரசாங்கம்தான் இப்படி அமைதியாக இருக்குமா? சத்தியராஜ் அப்படி பேசாவிட்டால்தான் அவர்மீது எங்களுக்கு சந்தேகம் வந்திருக்கும்.

திண்ணியத்தில், எறையூரில் தலித்துகள் இழிவுபடுத்தப்பட்ட போது சுபவீ அவர்களுக்கு ஏன் கோபம் வரவில்லை எனக் கேட்கிறார் ஞானி. ஓரே ஒரு இரட்டை டம்ளர் கடையையாவது சுபவீ தலைமையில் போய் உடைக்க முடியுமா எனவும் கேட்டுள்ளார்.

எதற்கெடுத்தாலும் இரட்டைக்குவளைகள் ஒழிப்பு, பாப்பாபட்டி, கீரிப்பட்டி பிரச்னைகளில் என்ன செய்தீர்கள் என்று அனைவரைப் பார்த்தும் கேட்கிறீர்களே? அப்படி இரட்டைக்குவளை ஒழிப்பிற்காக நீங்கள் என்னதான் செய்துவிட்டீர்கள்? ஆனந்த விகடனில் ஓரிரு வரிகள் எழுதினீர்கள். பாராட்டுகிறோம். நீங்கள் அடிக்கடி அனைவருக்கும் செக் வைப்பதாக நினைத்து கேள்வி கேட்கும் பிரச்சனைகளான இரட்டைக்குவளை உடைப்பு, கண்டதேவி தேரோட்டம், பாப்பாபட்டி - கீரிப்பட்டி உள்ளாட்சித் தேர்தல் போன்ற தீண்டாமைக் கொடுமைகள் பெரும்பாலானவற்றிலும் அவை தொடர்பான போராட்டங்களில் பங்கேற்ற - போராடிய இயக்கங்களில் பெரியார் திராவிடர் கழகமும் ஒன்று.

அரசுக்கு ஆறுமாத அவகாசம் கொடுத்து ஊர்வலமாகச் சென்று 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் இரட்டைக் குவளைகளை உடைத்த தோழர்களில் நானும் ஒருவன். அந்தப் போராட்டங்களில் எதிலுமே உங்களை நாங்கள் பார்த்ததில்லையே! பல்வேறு இயக்கங்கள், ஒரே ஒருவர் மட்டுமே இருக்கும் இயக்கங்கள் கூடப் பங்கேற்று இருக்கின்றன. எங்கேயும் உங்களைப் பார்த்ததில்லை. ஆனால் கொரலு மட்டும் அதிகமா இருக்கிறதே! அடுத்தவர்களைப் பார்த்து தீண்டாமை பற்றி கேள்வி கேட்பதற்கு முன்பாக முதலில் கண்ணாடி முன் நின்று உங்களையே கேட்டுப்பாருங்கள்.

எங்களுக்குத் தெரியும் சுபவீயின் பங்கு என்ன என்று. உங்களை விட அதிகமாக இரட்டைக்குவளை ஒழிப்பிற்கு உளமார்ந்த, மனமார்ந்த கவனம் செலுத்தி உழைப்பைக் கொடுத்தவர்களில் சுபவீரபாண்டியனும் ஒருவர். அவருடன் இணைந்து தொடர்ந்து அவ்வகைப் பணியில் ஈடுபட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். இரட்டைக்குவளைகளை உடைக்க சுபவீ அவர்கள் தயாரா எனக் கேட்பதிலிருந்தே உங்களுக்கு அதைப் பற்றி எதுவும் தெரியவில்லை என்பதும் இரட்டைக்குவளை ஒழிப்பு பற்றிப் பேசுவதில் வேறு நோக்கம் இருக்கிறது என்பதும் தெரிகிறது.

தீண்டாமை என்பது இரட்டை டம்ளரில் மட்டுமல்ல. கோவிலிலும் இருக்கிறதல்லவா? இந்து மதத்தில், சாஸ்திரங்களில், பார்ப்பனர்களிடத்தில் ஒட்டு மொத்தமாக இருக்கிறதல்லவா? இவற்றை எல்லாம் ஒழிக்கச் சொல்ல வேண்டியதுதானே?

ஞானி அவர்களே நீங்கள் எப்படிக் கேட்டிருக்க வேண்டுமென்றால், துசாரா பெய்ரீசை தாக்கிய சுபவீ, சாதிவெறிக்கு அடையாளமான பார்ப்பனர்களின் பூணூலை அறுப்பாரா? சங்கர மடத்திற்கு வெடிகுண்டு வைப்பாரா? சங்கராச்சாரியை வெட்டிக் கூறுபோடுவாரா? மனுநீதி நூலை ஊர்வலமாக எடுத்துச் சென்று எரிப்பாரா? இராமாயணத்தைச் வீட்டு வீட்டுக்குச் கொடுத்து செருப்பால் அடிக்கச் செய்வாரா?

இப்படி எல்லாம் ஒரு நாளும் ஞாநி யாரைப் பார்த்தும் கேட்டதில்லையே ஏன்? இரட்டைக்குவளை உடைப்பு என்ற தீண்டாமையோடு மட்டும் மோதத் சொல்கிறீர்களே, தீண்டாமைகளுக்கு அடிப்படையான சாதியோடும், மதத்தோடும், மதத் தலைர்களோடும், கடவுளோடும் போராடச் சொல்லாதது ஏன்?

எங்களுக்கு இரட்டைக்குவளைகளை உடைக்கவும் தெரியும், கண்டதேவியில் நாட்டார்களை எதிர்த்து தேரிழுக்கவும் தெரியும், எறையூரில் வன்னியர்களுக்கு எதிராக போராடவும் தெரியும், சிதம்பரத்தில் தீட்சிதர்களை எதிர்க்கவும் தெரியும், அனைவரும் ஒன்று சேர்ந்து பெய்ரீசுகளை உதைக்கவும் தெரியும். எல்லா இழிவுகளும் வன்னிக்காட்டுக்குப் போய் போராடினால் தீர்ந்துவிடும் என்ற நிலை வந்தால் அங்கு போய் போராடவும் தெரியும்.

- அதி அசுரன் ([email protected])

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com