Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கட்டுரை

கைதுகளால் மட்டும் நிலைநிறுத்தப்படும் ‘இந்தி’யத் தேசிய ஒருமைப்பாடு
க.அருணபாரதி


ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்காக உலகத் தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட்டு குரல் கொடுத்து வரும் இந்த சமயத்தில் தேவையில்லாமல் சில கைது நடவடிக்கைகளில் கலைஞர் தலைமையிலான தமிழக அரசு ஈடுபட்டிருப்பதற்குத் துண்டுதலாக செயல்பட்ட கும்பல் யார் என்பதனை நாடறியும். அந்தக் கும்பலை அம்பலப்படுத்தி எழுதினால் அது சாதீயவாதமாக சிலருக்குத் தென்படுகிறது. என்ன செய்ய? "குற்றமுள்ள நெஞ்சு தானே குறுகுறுக்கும்."

Vaiko Arrest ‘இந்தி’ய ஒருமைப்பாட்டிற்கு எதிராகப் பேசியதாக ம.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் வைகோ, அதன் அவைத் தலைவர் எம்.கண்ணப்பன் ஆகியோர் முதலில் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர். அதன் பின்னர், இராமேசுவரத்தில சிங்கள இனவெறி அரசிற்கு ஆயதங்கள் வழங்கும் ‘இந்தி’ய அரசைக் கண்டித்து திரைக் கலைஞர்கள் நடத்தியப் பொதுக் கூட்டத்தில், பிரிவினையைத் தூண்டிப் பேசியதாக இயக்குநர்கள் சீமான, அமீர் ஆகியோர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

தமிழகக் காவல்துறை இவர்கள் மீது (‘இந்தி’ய) தேசத் துரோகக் குற்றத்தின் மிகப் பிரபலமான 123(பி) பிரிவின்படி வழக்குப் பதிவு செய்துள்ளது. அந்த பிரிவில் இவர்கள் மீது குற்றம் நிரூபிக்கப்படாமல் போய்விட்டால் என்ன செய்வது என்ற திட்டத்துடன் சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் (Unlawful Activities Act -1967) சிலப் பிரிவுகளின்படியும் வழக்குப் பதிவு செய்துள்ளது.

இவர்கள் செய்த குற்றம் தான் என்ன? எவ்வகையில் இவர்கள் பிரிவினைக்குத் தூண்டினார்கள்? இவர்களைப் பிரிவினைக்குத் தூண்டியது எது? கைது செய்யப்பட்டவர்கள் தனிநபர்கள் அல்ல. தமிழ்த் தேசிய இன மக்களின் கருத்துக்களை பிரதிபலிக்கும் தலைவர்கள், கலைஞர்கள். குற்றங்களை செய்தவர்களை விட அதனைச் செய்யத் தூண்டுபவர்களுக்குத் தான் அதிக தண்டனையாம். சட்டம் கூறுகிறது. அப்படியெனில் இவர்களை "இக்குற்றச் செயலுக்கு" தூண்டியது எது என்று ஆராய்வோம்.

இந்தியா ஒரு தேசமல்ல. தனக்கென தனிப்பண்பாடு, மொழி, பொருளியல் என பல்வேறு தேசிய இனங்கள் வாழ்கின்ற ஒரு துணைக் கண்டமே ஆகும். இப்படி வாழ்ந்த பல்வேறு நாடுகள் அடக்குமுறையாலும் மக்களின் அனுமதியின்றும் ஒருங்கிணைக்கப்பட்டு இந்தியா என்ற ஒற்றைத் தேசமாகக் கட்டமைக்கப்பட்டது. இப்படிப்பட்ட துணைக்கண்டங்களில் ஒற்றையாட்சி (Unitary) எனப்படும் அரசியலமைப்பு, தேசிய இனங்கள் ஒவ்வொன்றும் ஒன்றன் மீது ஒன்று ஆதிக்கம் செலுத்தி சில தேசிய இனங்கள் கொழுக்கவும் சில தேசிய இனங்கள் மிகவும் பின்தங்கிய நிலைக்குச் செல்லவும் வழிவகுக்கும். இதற்கு மாற்றாக கூட்டாட்சியையும் சிலர் முன்மொழிவர். அந்த கூட்டாட்சியும் ஒவ்வொரு தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமைகளை அங்கீகரிப்பதாக அமைய வேண்டுமே தவிர ஒரு தேசிய இனத்தின் ஒற்றைச் சார்பு தலைமையில் அமையக்கூடாது. இந்த உண்மைகளைப் புரிந்து கொள்ளாமல் கட்டமைக்கப்பட்டது தான் ‘இந்தி’ய அரசியலமைப்புச் சட்டம்.

இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம், பல்வேறு தேசிய இனங்களின் மீதும் ‘இந்தி’ மொழி ஆதிக்கம் செலுத்தவும், ‘இந்தி’ பேசும் மக்கள் பெரும்பான்மையாக இருப்பதால் மற்ற அயல் தேசிய இனங்கள் மீது அவர்கள் அரசியல் ரீதியாகவும் பொருளியல் ரீதியாகவும் ஆதிக்கம் செலுத்தவும் வழிவகுத்திருக்கிறது. அப்படி தான் செயல்படுத்தப்பட்டும் வருகின்றது.

1965-ல் தமிழகத்தில் இந்தியைத் திணிக்க முயன்ற ‘இந்தி’ய அரசை எதிர்த்துப் போராடி மறத்தமிழர்கள் 300க்கும் மேற்பட்டவர்களை ‘இந்தி’ய தேசிய இராணுவம் சுட்டுக் கொன்றதை எந்தத் தமிழனால் மறக்க இயலும்?

இப்படிப்பட்ட இந்திய அரசக் கட்டமைப்பில் சிக்குண்ட பல தேசிய இனங்கள் ஒன்றோடு ஒன்றோடு மோதும் போது அவற்றிற்கு நடுவராக இருந்து தீர்க்க வேண்டிய இந்திய அரசு இதுவரை என்ன செய்திருக்கிறது, வேடிக்கைப் பார்ப்பதை வாடிக்கையாகக் கொண்டதைத் தவிர? இதற்குக் காரணம் அதன் ஒற்றைச் சார்புத் தன்மை தான் என்பதை எவரால் மறுக்க இயலும்?

காவிரிச் சிக்கலில் கர்நாடகம் தமிழக நீர் உரிமையை மறுத்து இந்திய அரசின் உச்சநீதிமன்றத்தையும் மதிக்கத் தவறியது. தமிழர்கள் கன்னட வெறியர்களால் தாக்கப்பட்டார்கள். இந்திய அரசு என்ன செய்திருக்க வேண்டும்? உடனடியாக பிரச்சினையைத் தீர்க்க ஏதேனும் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை. வேடிக்கைப் பார்த்தது ‘இந்தி’யா. இதே நிலை தான் மற்றப் பிரச்சினைகளிலும் தொடாகின்றது.

இந்தியா என்ற கட்டமைப்பை மறுத்து கர்நாடகம் செய்த அராஜகங்களை இந்திய அரசு வேடிக்கைப் பார்க்கும். ஆனால் தமிழன் செய்தால் அவன் மீது தேச விரோத முத்திரை குத்தும். ஒவ்வொருத்தருக்கும் ஒரு வகைப்பட்ட நீதி. இது தானே பார்ப்பனியம். இப்படித் தானே இந்திய அரசு செயல்பட்டது. செயல்பட்டுக் கொண்டும் இருக்கிறது.

மலையாளிகள் முல்லைப் பெரியாறுப் பிரச்சினையிலும் கன்னடர்கள் காவிரி நீர் சிக்கலிலும் தமிழகத்தின் நியாயமான உரிமைகளை மறுத்தும் இந்திய அரசின் உச்சபட்ட நீதிமன்றமான உச்சநீதிமன்றத்தை எதிர்த்தும் பேசலாம், செயல்படலாம். என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம். இந்திய தேசியக் கட்சிகளும், இந்தியத் தேசியவாதிகளுக்கும் அதைத் தடுக்க வக்கில்லை. பேசுவதற்குத் துப்பில்லை. ஆனால் தமிழகம் தனது நீண்ட காலக் கனவான சேது சமுத்திரத் திட்டம் தடுக்கப்படுவதைக் கண்டித்து பந்த் நடத்தினால் மட்டும் இந்திய அரசின் உச்சிகுடுமி மன்றம் ஞாயிற்றுக் கிழமை விடுப்பு என்றாலும் அவசர அவசரமாகக் கூடிக் கண்டிக்கும். இது தான் இந்திய தேசியமா..?

இவற்றிக்கு எல்லாம் மேலாக ‘இந்தி’ய அரசு ஈழப்பிரச்சினைத் தொடர்பில் என்ன செய்து கொண்டிருக்கிறது? ‘இந்தி’ய அரசு தனது ஆரிய இனவெறித் தன்மையுடன் சிங்கள அரசிற்கு மறைமுகமாகவும் நேரடியாகவும் இராணுவ உதவிகளையும் இன்ன பிற உதவிகளையும் திட்டமிட்டு பல வருடங்களாக செய்து வருவது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்? இதனைப் பல்வேறு சமயங்களில் தமிழகத்தில் உள்ள பல்வேறு தமிழ்த் தேசிய அமைப்புகள் வெளிப்படுத்தியும் அதனை தமிழக அரசோ ‘இந்தி’ய அரசோ கண்டுகொள்ளாமல் இருந்தன. அண்மையில் தான் இவ்வுதவிகள் அம்பலப்படுத்தப்பட்டதோடு அதனை இந்த நிமிடம் வரை ‘இந்தி’ய அரசு மறுக்கவில்லை என்பதனை நினைவில் கொள்ள வேண்டும்.

‘இந்தி’ய அரசு சிங்களனுக்கு உதவ வேண்டிய அவசியம் என்ன? அவனுக்கு உதவினால் இந்தியாவிற்கு கிடைக்கும் லாபம் தான் என்ன? பாகிஸ்தான், சீனம், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் சிங்களனுக்கு ஆயுதங்களை வெளிப்படையாகக் கொடுப்பது உலகில் அனைவருக்கும் தெரியும். இது இந்திய அரசுக்கும் அதன் பாதுகாப்புத் துறைக்கும் தெரியாதா? தெரியும். இருந்த போதும் அவாகள் அமைதி காத்தார்கள். தம் இன எதிரிகளான தமிழர்கள் தானே அழிகிறார்கள் என்பதால் அமைதி காத்தார்கள். ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்ட போது சில புன்முறுவல்களையும் தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டபோது வாய்விட்டு சிரித்து மகிழ்ந்திருப்பார்கள், இந்த ‘இந்தி’யத் தேசிய வாதிகள்.

அண்டை நாடு ஆயுதங்கள் வாங்கிக் குவிப்பதால் நம் நாட்டிற்கு ஏதாவது ஆபத்து ஏற்படுமோ என்ற எண்ணம் ‘இந்தி’ய பாதுகாப்புத் துறைக்கு ஏன் ஏற்படவில்லை? ஏன் தமது அடிமையான தமிழக மீனவனை சிங்களப் படைகள் சுட்டுக் கொன்ற போது கூட அவன் மீதும் ‘இந்தி’யன் என்ற முத்திரைக் குத்தியுள்ளோமே என்ற எண்ணம் கூட அவர்களுக்கில்லை. உயிரைப் பணயம் வைத்து தமிழக மீனவர்கள் பிடித்து வரும் மீன்களுக்கு அந்நிய செலாவணி வரி கேட்டு பிச்சை எடுக்க மட்டும் வந்துவிடுவார்கள் இந்த ‘இந்தி’ய வரிப் பொறுக்கிகள். இதுவே பாகிஸ்தான் தனது படைகளை எல்லையில் குவித்தாலோ சீனா படைகளை குவித்தாலோ இந்திய அமைதியாக இருந்திருக்குமா? அப்படியெனில் சிங்களன் ஆயுதங்கள் குவித்த போது இந்திய அரசு அமைதியாக இருந்ததோடு மட்டுமல்லாமல் தானும் ஆயுதங்களை வழங்கியது எதற்காக?

ஏற்கெனவே நீர்ச்சிக்கல்களால் அயல் தேசிய இன மாநிலங்கள் ‘இந்தி’ய கட்டமைப்பை மதிக்காமல் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது என்னடா ‘இந்தி’யத் தேசியம் என்று பல முணுமுணுப்புகள் தமிழகத்தில் எழுந்திருந்ததை எவராலும் மறுக்க முடியாது. மின்வெட்டால் தமிழகம் தத்தளித்துக் கொண்டிருக்கும் பொழுதுகூட நம் தமிழ் மண்ணில் உள்ள நெய்வேலி மண்ணிலிருந்து மின்சாரத்தைப் பிடுங்கி, நீர் தரமாட்டோம் என்று அடம்பிடிக்கும் அடாவடி அயல் தேசிய இனத்தவருக்கு பகிர்ந்தளிக்கிறது ‘இந்தி’ய அரசு. இவை எல்லாவற்றிற்கும் மேலாக, நமது நாடு என்று நாம் ‘இந்தி’யாவை நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அதன் தலைமையோ நம் தொப்புள் கொடி உறவுகளை கொன்று குவிக்க ஆயுதங்கள் வழங்கி உதவி புரிகிறதே என்ற வலி தமிழக மக்களுக்கு ஏற்பட்டுள்ளது உண்மையா இல்லையா? இந்த உண்மையை எவ்வளவு நாள் நாம் பொத்திப் பொத்தி வைக்க இயலும்?

பிரிவினைக்குத் தூண்டியது கைது செய்யப்பட்டவர்கள் அல்ல. அவர்களை அவ்வாறு பேச வைத்த அயல் தேசிய இனங்களும் அதைக் கண்டு கொள்ளாமல் கள்ள மவுனம் சாதிக்கும் ‘இந்தி’ய அரசுமே ஆகும். இதனை முதலில் ‘இந்தி’யத் தேசிய வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும். விடுதலைப் புலிகளை ஆதரிப்பவர்களை கைது செய்ய வேண்டும் என்று பார்ப்பன இந்தியத் தேசியக் கும்பல் கூச்சல் போடுகின்றது. அப்படியெனில் முதலில் ஆனந்த விகடன் கருத்துக் கணிப்பிலும் தி நியு இந்தியன் எக்ஸ்பிரஸ் கருத்துக் கணிப்பிலும் விடுதலைப் புலிகளை ஆதரித்த பெரும்பான்மை தமிழக மக்களை சிறையில் தள்ளுவார்களா ‘இந்தி’யத் தேசியவாதிகள்? தமிழ் மக்களின் கோப நெருப்பே உங்களைப் சுட்டுப் பொசுக்கிவிடும். கைது செய்யப்படுவது மனிதர்கள் தானே தவிர மக்கள் மனதில் உள்ள கருத்துக்கள் அல்ல!

- க.அருணபாரதி ([email protected])

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com