Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கட்டுரை

தமிழகத்தில் தலைதூக்கும் மதசார்பின்மை?!
க.அருணபாரதி


இந்துத்வ பண்பாடு என்ன என்பதனை மக்களுக்கு வெட்டவெளிச்சமாகிக் கொண்டிருக்கிறன, தற்போதைய அரசியல் நிலவரங்கள். 'மதம் ஒரு அபின்' என்ற மார்க்சின் கூற்றுக்கு ஏற்ப மதத்தையே மூலதனமாக்கிக் கொண்டு அந்த அபினின் மூலம் வரும் போதையை தனக்கு சாதகமாக்கிக் கொள்ள விழையும் மதவெறி சக்திகள் தற்பொழுது அதனை செய்து கொண்டிருக்கின்றன. அன்பையும் பண்பையும் போதிக்க வந்தவை மதங்கள் என இனியும் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது. மாற்றுக் கருத்து சொன்னவரின் தலையையும், நாக்கையும் துண்டு துண்டாக வெட்டுவதும், அவரது உறவினர் வீட்டைத் தாக்குவதும், பேருந்துக்களை எரிப்பதும் தான் அந்த மதம் சொல்லிக் கொடுத்த "பண்புகள்" போலும். குஜராத் மாநிலத்தில் குழந்தைகளை கூட விட்டுவைக்காமல் கொன்று குவித்த "இந்து" மத பண்பைப் பார்த்து உலகமே காறி உழிந்தது போதாதென்று மீண்டும் ஒரு கலவரத்திற்கு வழிவகுக்கின்றன இந்து வெறி பாசிச சக(க்)திகள்.

பெரியாரின் மண்ணில் பார்ப்பன பாசிசசக்திகளான பா.ச.க அண்ட் கோவிற்கு பதவிக்காக காவடித்தூக்கிய திராவிட கட்சிகள் இன்று மாறி மாறி எதிர்க்கின்றன. ஆதரிக்கின்றன. அண்மையில் இறந்த மனித உரிமைப் போராளி வழக்கறிஞர் பி.வி.பக்தவச்சலம் அவர்களின் நினைவேந்தல் கூட்டத்தில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர்.பெ.மணியரசன் இதற்கொரு நல்ல உவமையை வழங்கினார். "'பாம்புக்கு பால் ஊற்றிவிட்டு படமெடுக்குதே என்று ஆடுவதைப் போல, பதவி சுகத்திற்காக நாட்டையே வடநாட்டு பார்ப்பன சக்திகளிடம் விற்றுவிட்டு பின்பு தன் தலைக்கு ஆபத்து என்றவுடன் உளறினால் என்ன அர்த்தம்? தமிழ்த் தேசத்தை கூறு போட்டு தில்லியார் வாங்கிவிட்டார்கள். பின்பு வாங்கியவன் இடி என்னும் போது குத்துதே என்பதா?"

தமிழ் தேசத்தின் நிலைமை அப்படித் தான் இருக்கிறது. ஏற்கனவே பாபர் மசூதி இடிப்பு மற்றும் குஜராத் கலவரங்களில் தங்கள் மதம் போதித்த "அன்பும் பண்பும்" எத்தகையது என்பதனை உலகுக்கு வெளிப்படுத்திய தீவிர மதவெறியர் கட்சியான பாரதீய சனதாவுடன் பதவி சுகத்திற்காக காலில் விழுந்த "தன்மான" சிங்கங்களான தி.மு.க தற்பொழுது 'அது மதவெறியர் கட்சி' என்று அறைகூவல் விடுப்பதிலிருந்தே அவர்களுக்கு எங்கு குடைகின்றது என்பதை சொல்லாமல் சொல்கின்றது. இதுவே அ.தி.மு.க ஆட்சியிருந்து தி.மு.க ஆட்சியில் இல்லாமல் இருந்தால், அ.தி.மு.க பா.ச.கவை மதவெறி சக்தி என வர்ணித்திருக்கும், தி.மு.கவோ அ.திமு.க ஆட்சியை கலைக்க தில்லிக்கும், ஆளுனர் மாளிகைக்கும் படையெடுத்திருக்கும். காங்கிரஸ் எப்பொழுதும் போல கோஷ்ட்டிக்கு ஒரு அறிக்கை விட்டு குழம்பியிருக்கும். இனி, அடுத்து வரம் மாதங்களில் திடீரென அரசியல் தத்துவங்கள் புதிது புதிதாக பிறந்து தி.மு.கவும் பா.சகவும் கூட்டணி வைத்து கூட தேர்தலை சந்திக்கும். பிறகு பிரியும் பின் சேரும். அரசியல் அசிங்கங்களான தேர்தல் கட்சிகளால் ஒரு நல்ல திட்டம் எப்படி சூழ்நிலைக்கு ஏற்ப மதவாதம், கூட்டணி தர்மம் என பந்தாடப்படுகின்றது என்பதற்கு சேது சழுத்திரத் திட்டம் ஓர் நல்ல உதாரணம்.

சேது சமுத்திரத் திட்டத்தினால் தமிழகத்தின் தூத்துக்குடி நல்ல முக்கியத்துவம் பெறும். தமிழ் ஈழம் மலர்ந்த பின், ஈழத்தின் தலைநகராகும் தகுதியுடைய திரிகோணமலையும் பயன் பெறும். தமிழர் வாணிபம் சிறந்திட வழிவகுக்கும். இத்திட்டத்தினால் உண்மையிலேயே இல்லாத இராமர் கட்டிய புரூடா பாலம் இடிபடுகிறது என்ற ஆர்.எஸ்.எஸ்சின் மதவாத கூச்சலுக்கு முட்டுக் கட்டை இட வேண்டும். இல்லாமல் போனால், பின்னர் தெருக் குழாய் போட சாலையை இடித்தால் கூட "அது கிருஷ்ணர் போட்ட ரோடு" என்று ஒப்பாரி வைத்தாலும் வைப்பர்.

பா.ச.க அலுவலகத்தை தி.மு.கவினர் தாக்கியதும், ஆங்காங்கு நடைபெறும் தலைவர்களின் உருவ பொம்மை எரிப்புகள் ஆகியன தேர்தலுக்காக நடைபெறும் ஒத்திகைக் காட்சிகளே அன்றி வேறில்லை. பா.ச.கவை எதிர்த்து தி.மு.கவினர் செயல்படுவதால் தி.மு.க ஏதோ மதசார்பற்ற கட்சி என்று யாரும் எண்ணிவிட வேண்டாம். தேர்தலின் போது பூசணிக்காய் உடைத்து பிரச்சாரம் தொடங்கி அக்கழகத்தினரே அந்த சந்தேகத்தை தீர்த்து வைப்பர். "ஆரியமாயை" எழுதி பார்ப்பன திருட்டுத் தனங்களுக்கு சவுக்கடிக் கொடுத்த அண்ணாவின் பெயரால் கட்சிநடத்தும் அம்மையார், விநாயகர் சதுர்த்திக்கு அறிக்கை விடுகிறார்.

"நாங்கள் தான் உண்மையில் மதசார்பற்ற கட்சி"யென காங்கிரஸ்காரர்களும், விடுதலை சிறுத்தைகளும் நோன்பு கஞ்சிக் குடிக்கின்றனர். "அவிங்கலாம் சும்மா வேசம் போடறாங்க" என விபூதி பட்டையுடன் நாள் நட்சத்திரம் பார்த்து கட்சித் தொடங்கிய நடிகர் (கம்) அரசியல்வாதி விசயகாந்த் அறிக்கை விடுகிறார். ராகுகாலம் வந்தவிட்டதால் வீட்டிற்குள் சென்று தனியறையில் கதவை தாழிட்டுக் கொண்டு யாருடனும் பேச மாட்டென் என்று அறிவியல் பூர்வமாக யோசிக்கும் விசய டி.ராஜேந்தர் ஒருபுறம். சாதியற்ற சமுதாயம் மலரச் செய்வோம் என சபதமேற்று ஒரு சாதியினருக்காகவே கட்சித் தொடங்கியிருக்கும் சமத்துவக் கட்சி மற்றொருபுறம். அப்பப்பா தமிழகத்தின் அரசியலில் நகைச்சுவைக்கு பஞ்சமே இல்லை...

ஆக, தி.மு.க, அ.தி.மு.க, ம.தி.மு.க, தே.மு.தி.க, ல.தி.மு.க(அப்பாடா...!) உள்ளிட்ட அனைத்து திராவிட கட்சிகள் மற்றும் உள்ள சமத்துவ கட்சி, பா.ம.க உள்ளிட்ட மற்ற கட்சிகள் எதற்கம் மதசார்பின்மை எதுவென்று தெரியவில்லை. இந்து மதக் கூட்டத்தில் முஸ்லிம்களை திட்டுவது, முஸ்லிம் மதக்கூட்டத்தில் இந்துக்களை திட்டுவது என அரசியல்வியாதிகள் பதவிக்காக எல்லா அய்யோக்கியத்தனங்களையும் செய்வார்கள் தாம். ஏனெனில் அது அவர்களது தொழில் தர்மம். ஆனால் அப்பாவி மக்கள் மத்தின் பெயரால் அரசியல்வியாதிகளிடம் ஏமாறமல் இருக்க வேண்டும் என்பதே நமது விருப்பம். அவரவர் அவரவர் மதத்தை வீட்டிற்குள் வைத்து கொண்டாடுங்கள், வழிபடுங்கள். யார் வேண்டாமென்று தடுத்தது? ஆனால் மாற்றுக் கருத்துக்களை சொல்லுபவர்களின் கேள்விகளையம் பரிசீலிக்க வேண்டும். "இராமன் எந்த பொறியியல் கல்லூரியில் படித்தார்?" என்ற கேள்வி ஒருபுறம் இருக்க, மனிதனே உருவாகாத அந்த காலத்தில் இராமனும் அவர்களது பரிவாரங்களும் பாலம் எப்படி கட்ட முடியும் என்பதனை அறிவியல் பூர்வமாக சிந்திக்க வேண்டும். சிந்திக்க மறுத்துவிட்டு பழமையை போற்றி வாழ்வதும் சிந்தித்து செயல்படுவதும் நமது கைகளில் தான் இருக்க வேண்டும். அடுத்தவர் கைகளில் அல்ல...
-----------------------------------------------------------
"பாதையை தேடாதே.. உருவாக்கு"
- புரட்சியாளர் லெனின் -
-----------------------------------------------------------
தோழமையுடன்

- க.அருணபாரதி ([email protected])

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com