Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கட்டுரை

ஊடகச் சுதந்திரத்தை நசுக்கும் இலங்கை அரசிற்கு எதிரான கண்டன அறிக்கை!
ஒடுக்குமுறைக்கு எதிரான பத்திரிகையாளர் மன்றம்


Rajapakse with srilankan army இலங்கையில் எழுந்துள்ள போர்ச்சூழல் என்பது அங்கு வாழும் தமிழ் மக்களின் சிவில் சமூக வாழ்வை முற்றிலுமாக சீர்குலைத்திருப்பது நீங்கள் அறிந்ததே!

இலங்கையை ஒரு ஜனநாயக நாடாக சர்வதேச சமூகம் அங்கீகரித்திருக்கும் சூழலில் இலங்கையின் போர் வெறி மிக மோசமான அளவுக்கு பரவி வருகிறது. மனித உரிமை ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள், செஞ்சிலுவைச் சங்கத்தினர் போன்றோர் கூட யுத்த பூமிக்குள் எப்பக்க சார்பும் அற்று பணி செய்ய முடியாத சூழல். ஒட்டு மொத்தமாக இந்தப் பிரிவினர் அனைவரும் இலங்கை அரசால் அச்சுறுத்தப்படுகிறார்கள். இம்மாதிரி மனித உரிமையாளர்களையும் சமூகப் பணியாளர்களையும் அச்சுறுத்த சட்டவிரோதக் குழுக்களை இலங்கை அரசு உருவாக்கி வைத்திருக்கிறது. வெள்ளை வேன் எனப்படும் சட்ட விரோத ஆயுதக் குழுவால் அரசியல் பணியாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் என பல தரப்பினரும் கடத்திக் கொலை செய்யப்பட்டு வருக்கின்றனர்.

இலங்கை, பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பற்ற ஒரு நாடாக மாறிவிட்டது. போருக்கு முகம் கொடுத்து வாழ்ந்து கொண்டே அரசியல் கருத்துக்களை வெகு மக்களிடையே பகிர்ந்து கொள்ள நினைக்கும் பத்திரிகையாளர்கள் மிகக் கோரமாக கொல்லப்படுகிறார்கள். 2006-ம் ஆண்டிலிருந்து 2008-ம் ஆண்டு வரை இருபதுக்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் இலங்கை அரசாங்கத்தால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் இலங்கை அரசின் இனவாதப் போக்கை சுட்டிக் காட்டியும் விமர்சித்தும் எழுதியவர்களே!

இன்று கிளிநொச்சி கைப்பற்றப்பட்டு முல்லைத்தீவுக்குள் இலங்கை ராணுவம் நுழைந்திருக்கும் சூழலில் பெரும் ராணுவ அடக்குமுறை இலங்கையில் உள்ள சிங்கள, தமிழ் பத்திரிகையாளர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. நீண்டகால கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளை நெறிக்கப்படுவதன் அடையாளமாக அய்யாத்துரை நடேசன், மயில்வாகனம் நிமலராஜன், ரிச்சர்ட்டி டி சொய்சா, தேவிஸ் குருகே, தர்மரத்தினம் சிவராம், ரேலங்கி செல்வராஜா, நடராஜா அற்புதராஜா ஐ. சண்முகலிங்கம், சுப்ரமணியம் சுகிர்தராஜன், சின்னத்தம்பி சிவமகாராஜா, சம்பத் லக்மால் சில்வா, இசைவிழி செம்பியன், ரி.தர்மலிங்கம், சுரேஸ், கேதீஸ் லோகநாதன், சந்திரபோஸ்,புண்ணியமூர்த்தி சத்தியமூத்தி எனப் பலரும் படுகொலையாகி வீழ்ந்திருக்கிறார்கள். அறம் சார்ந்து எழுத நினைக்கும் ஒரு படைப்பாளி இன்று இலங்கை அரசின் பேரினவாதத்திற்கு பலியாகும் சூழல் உருவாகி இருக்கிறது.

இந்த வருடத்தின் துவக்கத்தில் ஜனவரி மாதம் 8&ம் தேதி புகழ்பெற்ற சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியரும் வழக்கறிஞருமான லசந்தே விகரமதுங்க கொழும்பில் வைத்து மர்மமான முறையில் கொல்லப்பட்டார். சமீபத்தில் அவரது மனைவி சோனாலி சமரசிங்க தனது மூன்று குழந்தைகளுடனும் இலங்கைத் தீவை விட்டு வெளியேறி உள்ளார். ‘இதுவரை தன் கணவரின் கொலைக்கான விசாரணையை இலங்கை அரசு தொடங்கவில்லை’ என்று குற்றம் சுமத்தியும் இருக்கிறார். பாதுகாப்புக் காரணங்களுக்காக எப்படி சோனாலி சமரசிங்க வெளியேறினாரோ அதுபோல சிங்கள, தமிழ் ஊடகவியலாளர்கள் அரசியல் தஞ்சம் கேட்டு தலைமறைவாக இலங்கையில் இருந்து வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். இலங்கையின் புகழ்பெற்ற பத்திரிகையாளாரான இக்பால் அக்தாஸ் கூட இலங்கயில் வாழ முடியாமல் வெளியேறி இருக்கிறார்.

இந்நிலையில் கடந்த 26-2-2009 வியாழன் அன்று யாழ்பாணத்திலிருந்து வெளிவரும் ‘உதயன்’ பத்திரிகையின் ஆசிரியரும் கொழும்பில் இருந்து வெளிவரும் ‘சுடரொளி’ பத்திரிகையில் ஆசிரியருமான நடேசபிள்ளை வித்தியாதரன் (58) கடத்திச் செல்லப்பட்டுள்ளார். மூன்று வெள்ளை வேன்களில் வந்த ஆயுததாரிகளும், காவல்துறை சீருடையில் வந்தவர்களும் இவரை கல்கிசையில் வைத்து பொதுமக்கள் முன்னிலையிலேயே கடத்தியதாக தெரியவந்துள்ளது. இலங்கை அரசு நடத்தும் யுத்தம் பற்றியும், பாதிக்கப்படும் மக்கள் பற்றியும் செய்திகளை வெளிக்கொண்டு வருவதில் சுடரொளியும், உதயனும் மிக முக்கிய ஊடகப்பங்களிப்பை ஆற்றி வந்தன. இந்த நிலையில்தான் இந்த ஜனநாயக விரோத நிகழ்வு நடந்திருக்கிறது. இந்நிலையில் விதயாதரன் கடத்தப்படவில்லை கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டிருக்கிறார் என்று இலங்கையின் ஊடகப் பேச்சாளர் றஞ்சித் குணசேகர தெரிவித்திருக்கிறார்.

இலங்கைக்குள் வாழும் சிங்கள தமிழ் பத்திரிகையாளர்கள் மட்டுமல்லாது, தமிழகத்திலும் துணைத்தூதர் அம்சாவின் நடவடிக்கைகள் ஊடகச் சுதந்திரத்துக்கு எதிரான ஒன்றாக மாறிவருகிறது. அக்கிரமான போரில் மடிந்து வரும் தமிழ் மக்கள் சார்ந்து செய்தி வெளியிட்ட நக்கீரனை மிரட்டும் வகையிலான அம்சாவின் அறிவிக்கையை நாம் வன்மையாக கண்டிக்கிறோம். மக்கள் தொலைக்காட்சியை ஒளிபரப்பு செய்ய விடாமல் அச்சுறுத்தும் இலங்கை அரசு ஊடகங்களை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும்.

ஒரு ஊடகவியலாளரை அரசே கடத்திக் கைது செய்து விசாரிக்கும் விசாரணை முறைகளை வன்மையாக கண்டிக்கிறோம். சந்தேகிக்கப்படும் நபர்களை விசாரணைக்குட்படுத்தவென்று நீதிமன்ற நடைமுறைகள் இருக்கும் போது இவ்விதமான நடவடிக்கைகள் அச்சமூட்டுகிற ஒன்றாக இலங்கையில் வளர்ந்து வருவது கவலையளிக்கிறது. இலங்கை அரசின் இவ்விதமான ஊடக ஒடுக்குமுறைகளை, பத்திரிகையாளர்களின் படுகொலைகளை ‘ஒடுக்குமுறைக்கு எதிரான பத்திரிகையாளர் மன்றம்’ வன்மையாக கண்டிக்கிறது. தமிழகத்தில் உள்ள ஊடகவியலாளர்கள் என்ற முறையில் ந.வித்தியாதரனின் கைது அல்லது கடத்தல் குறித்து மிகுந்த கவலை அடைகிறோம்.

மனித உரிமைகள் மீறப்பட்டு பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்பட்டு வரும் சுழலில், இந்தக் கைதும் இலங்கை அரசின் போர் வெறியை நமக்கு உணர்த்துகிறது. ஏனைய பத்திரிகையாளர்களுக்கு நேர்ந்த கதி வித்தியாதரனுக்கும் நடந்துவிடுமோ என்று அச்சப்படுகிறோம். அச்சுறுத்தப்படும் ஊடகவியலாளர்களை பாதுகாக்க வேண்டிய கடமை சர்வதேச சமூகங்களுக்கு உண்டு. ஜனநாயகப் படுகொலைகளைச் செய்யும் இலங்கை அரசை கண்டிப்பான முறையில் சர்வதேச சமூகங்கள் அணுக வேண்டும். உடனடியாக ந.வித்தியாதரன் விடுதலை செய்யப்பட வேண்டும். வித்தியாதரன் மற்றும் அவரது உறவினர்களின் பாதுகாப்பை சர்வதேச சமூகங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். பொதுவாக இலங்கையில் வாழும் ஊடகவியலாளர்களின் பாதுகாப்புக்கும் சுதந்திரத்துக்கும் சர்வதேச சமூகங்கள் ஒரு உறுதிப்பாட்டை வழங்க வேண்டும் என கோருகிறோம்.

இலங்கை அரசின் இனப்படுகொலைகளுக்கு எதிராக நாம் பேசுவோம்! எழுத்துரிமைக்காக குரல் கொடுப்போம்!

ஒருங்கிணைப்பாளர்கள்:

டி.அருள் எழிலன்
சரவணன்
ஒடுக்குமுறைக்கு எதிரான பத்திரிகையாளர் மன்றம்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com