Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கட்டுரை

அழுவதற்கு இனி கண்ணீர் இல்லை
டி.அருள் எழிலன்


ஒப்பனைகளோடு வாழ்வதும் ஒரு விதமான சௌகரியத்தைக் கொடுக்கும். கூடிக் கோஷமிடுதலும் அப்படித்தான். சட்டத்திற்கு உட்பட்டு, யார் மனமும் புண்படாமல் எப்படி போராட வேண்டும் என்று யாராவது கற்றுக் கொள்ள வேண்டுமென்றால் தமிழகத்தில் ஈழ மக்களுக்கு ஆதரவாக போராடுகிற சிலரிடமிருந்து நீங்கள் அதைக் கற்றுக் கொள்ளலாம். பிரபாகரனையும், புலிகளையும் பற்றிப் பேசுவதில் நமக்கு சட்ட ரீதியான சிக்கல்கள் இருக்கலாம். ஆனால் ராஜபக்ஷேவைப் பற்றிப் பேசினால் அது இலங்கை அரசின் மனதை புண்படுத்தும் அல்லது இலங்கையின் தூதுவதராக சென்னையில் இருக்கும் அம்சாவின் மனதை நோகடிக்கும் என்று வெறுமனே, ஈழத்தில் போரை நிறுத்து. அப்பாவி மக்களைக் கொல்லாதே...( எவ்வளவு தந்திரமான மிடில்கிளாஸ் கோஷம் பாருங்கள்) என்று சத்தமிடுவதை எப்படி எடுத்துக் கொள்வதென்று தெரியவில்லை. ஆனாலும் நீங்கள் சட்டத்திற்கு உட்பட்டு சொல்கிற போரை நிறுத்தும் கோரிக்கை மீதான அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? சட்டத்திற்கு உட்பட்டு அடுத்து என்ன செய்யலாம். உங்களை எல்லாம் மத்திய காங்கிரஸ் அரசு ஒரு வகையாகக் கூட மதிக்கவில்லையே? சரி கிடக்கட்டும்..

Glass ‘‘எந்த ஒரு அயல்நாட்டின் உள்விவாகரத்திலும் இந்தியா தலையிடாது’’ என்று கைவிரிக்கிற இந்தியா உண்மையில் எந்த ஒரு அயல்நாட்டுப் பிரச்சனையிலும் தலையிட்டதே இல்லையா? ஈழத்தில் தலையிட்டு போர் நிறுத்தம் கொண்டு வந்ததே இல்லையா? இலங்கை ஒரு அண்டை நாடு என்றால் இலங்கை அரசுக்கு ஆயுதங்களும் பயிர்ச்சியும் மட்டும் கொடுக்கிறீர்களே? இதுதான் உங்கள் தலையிடாக் கொள்கையின் லட்சணமா? என்று கொதிக்கிறார்கள் தமிழக மக்கள். கடைசியில் கோரிக்கைகள் நிபந்தனைகள் எல்லாம் கைவிடப்பட்டு வெறும் நிவாரணப் பொருட்களைத் திரட்டி ஈழ மக்களுக்காக இலங்கை அரசிடம் ஒப்படைக்க தயாராகிக் கொண்டிருக்கிறது தமிழக அரசு. டில்லிக்குப் போய் பிரதமரைச் சந்திக்கிற முதல்வரின் சந்திப்பை மத்திய காங்கிரஸ் அரசு மலினமாக்கி கடாசி விட்டது. உண்மையிலேயே இலங்கையின் உள்விவாகரத்தில் இந்தியா தலையிட்டதே இல்லையா? என்றால் இந்தக் கேள்வியின் சங்கிலி 1983 ஜுலைக் கலவரத்தில் இருந்து தொடங்குகிறது. கரிசனத்தின் பேரில் துவங்கப்பட்ட சமாதான முயற்சி மாபெரும் சூதாட்டமாக மாறிய கதை இது,

சுற்றுலா, தேயிலை இந்த இரண்டையும் தவிர வேறெந்த முக்கியத்துவமும் இல்லாத இலங்கையின் மீது இன்று உலக நாடுகள் கண் வைத்திருக்கின்றன. அமெரிக்காவுக்கு ஆசியாவின் பங்காளியான சீனாவும் இலங்கைக்கு ஆயுதம் கொடுக்கிறது. இந்தியாவின் பகை நாடு என்று சொல்லப்படும் பாகிஸ்தானும் ஆயுதக் கப்பலை அனுப்பி வைக்கிறது. ஈழத்தோடு அறுபடாத தொப்புள் கொடியாய் நீளும் தமிழகத்தைச் சுமந்திருக்கும் இந்தியாவும் ஆயுதம் கொடுக்கிறது என்றால் இலங்கைத் தீவின் அமைவிடம் அப்படி. முப்பாதாண்டுகளைக் கடந்தும் தொடரும் யுத்தம் முடிவுக்கு வராமல் இழுபட இந்து மகா சமுத்திரம் சுமந்திருக்கும் சர்வதேச அரசியலும் ஒரு காரணம்.

இலங்கையில் அப்படி என்னதான் பிரச்சனை? இந்தியாவால் இதை தீர்த்து வைக்க முடியாதா என்றால். இலங்கை அரசின் இனவெறியின் கடந்த கால கருப்பு வரலாற்றை கொஞ்சம் திரும்பிப் பார்க்க வேண்டும். இந்தியாவின் காலுக்குக் கீழே விழுந்த கண்ணீர்த்துளி நாடான இலங்கையில் கடந்த ஐம்பதாண்டுகளாக எரிகிற நெருப்பு நம்மையும் சுடுகிறது. எட்டி நின்று வேடிக்கை மட்டுமே பார்த்துச் செல்ல முடியாதபடி உணர்வுகளால் பிணைக்கப்பட்டிருக்கிறது.

போர்த்துக்கீசியரின் பிடியில் கி.பி 1505 முதல் 1658 வரையும் பின்னர் டச்சுக்காரகளால் கி.பி 1658 முதல் 1796 வரையும் அவர்களிடமிருந்து பிர்ட்டீஷாரால் கைப்பற்றபட்டு 1796&முதல் கி.பி 1850 வரையிலும் இருந்த இலங்கை எனப்படும் ஸ்ரீலங்காவின் இனப்பிளவு இவர்களில் இருந்தே துவங்குகிறது. அந்நிய ஆட்சி முறை ஆசிய மக்களிடையே குறிப்பாக இந்திய, இலங்கை மக்களிடையே ஏற்படுத்திய பிளவு என்பது இன,கலாசார, பொருளாதார, ஆன்மீக ரீதியிலானதும் கூட. அடிமை வணிகத்தின் தோற்றமும் மன்னராட்சிகளின் பிற்போக்குத்தனமும் மக்களிடையே நிலவிய சமூக முரணும் அந்நிய ஆக்ரமிப்பாளர்களுக்கு எப்போதும் போலவே வசதியாக இருந்தது. மக்களிடையே இருந்த கலாசார வேறுபாடுகளை தங்களின் ஆட்சியதிகாரத்தை பாதுகாப்பதற்காக ஊட்டி வளர்த்தது இவர்கள்தான். இன்று இத்தீவில் வதியும் இரு பெரும் தேசிய இனங்களான சிங்களப் பெருந்தேசீய இனமும் தமிழ்ச் சிறும்பான்மை தேசிய இனமும் முரண்பட்டு நிற்பதற்கான காரணிகளை வளர்த்தெடுத்து சிங்கள ஆட்சியாளர்களிடம் கையளித்து விட்டுப் போனவர்கள் இவர்களே...

பிரிட்டீஷாரால் கையளிக்கப்பட்ட இலங்கையின் சுதந்திரக் கொடியை வடிவமைப்பதில் இருந்து தொடங்குகிறது சுதந்திரத்துக்குப் பிந்தைய இன முரண்பாடு. மாட்சிமைதாங்கிய பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தின் கொடி இறக்கப்பட்டு 1948 ல் முதல் இலங்கை சுதந்திர சமத்துவக் குடியரசின் கொடி ஏற்றப்படும் போது அந்தக் கொடி சிங்கள பெரும்பான்மை தேசியத்தின் ஆண்மையையும் அதிகாரத்தையும் செல்வாக்கையும் மற்றெல்லா சமூகங்களைக் காட்டிலும் உள்ள உயர் அந்தஸ்த்தையும் காட்ட வேண்டும் என அதன் முதல் பிரதமராக பதவியேற்ற டி.எஸ் சேனநாயகாவும், ஜெயவர்த்தனாவும், ஏ.ஈ.குணசிங்க போன்ற சிங்களத் தலைவர்களும் திட்டமிட்டனர். ஆனால் சிறுபான்மை இனமும் தொன்மைச் சமூகமுமான தமிழ் மக்களையும் சிங்கள மக்களையும் பிரதிநித்துவம் செய்யும்படியான தேசியக் கொடியைத்தான் நாம் ஏற்ற வேண்டும் என தமிழ்த் தலைவர்களான் எஸ்.ஜே.வி செல்வநாயகம், ஜி.ஜி.பொன்னம்பலம். சி.வன்னியசிங்கம், சி.சுந்தரலிங்கம் போன்ற தமிழ்த் தலைவர்கள் கோரினார்கள்.

இது பற்றி நடந்த பாராளுமன்ற விவாதத்தில் பேசிய தமிழர் தந்தை செல்வநாயகம், ‘‘ இலங்கையின் தேசியக் கொடி, சிங்களவர்களின் சிங்கக் கொடியையும், தமிழரின் நந்திக் கொடியையும், முஸ்லீம்களின் பிறை நட்சத்திரக் கொடியையும் கொண்டதாக அமைய வேண்டும்’’ என்றார்.

ஜி.ஜி பொன்னம்பலம், வன்னியசிங்கம் போன்ற தமிழ்த் தலைவர்களும் கொடியின் மீதான தமிழ் மக்களின் மனக் கசப்பை வெளிப்படுத்தினார்கள். கடைசியில் விவாதத்தின் மீது பேசிய டி.எஸ்.சேனநாயகா, ‘‘நான் சிங்கக் கொடி ஏற்றப்பட வேண்டும் என விரும்புவதற்கான பிரதான காரணம் என்னவெனில், நாம் எமது தேசத்தைத் தோற்று, மக்கள் இங்கிலாந்தின் அரசரதைத் தமது அரசராக ஏற்றுக் கொண்ட சமயத்தில், இறுதிக் கண்டியரசன் சிம்மாசனத்திலிருந்து அகற்றப்பட்டு, அவனது சிங்கக் கொடி கீழே இறக்கப்பட்டது. இப்போது நாட்டின் ஆட்சியதிகாரத்தை மீளளிக்கையில் அதனுடன் கூடவே அந்தக் கொடியையும் இங்கிலாந்து மீளளிக்க வேண்டுமென நான் விரும்புகிறேன். நாம் சுதந்திர தினத்தன்று சிங்கக் கொடியை ஏற்ற எண்ணுவதற்கு இதுவே பிரதான காரணமாகும்’’ என்றவர். ‘‘இந்தக் கொடியை ஏற்றிய பின் இதில் மாற்றம் செய்யப்பட வேண்டும் என விரும்புவர்களின் விருப்பத்திற்கேற்ப பொருத்தமானதொரு கொடியை ஏற்றலாம்’’ என்றும் சொல்ல அப்படியே சிங்கக் கொடி ஏற்றப்பட்டது.

பின்னர் நாடாளுமன்றக் குழு ஒன்றை அமைத்து மாற்றி அமைக்கப்பட்ட கொடி பீதாம்பரச் சிவப்புப் பின்னணியில் பொன்னிறச் சிங்கம் கொடியில் அப்படியே இருக்க சிவப்புப் பின்னணியில் நான்கு மூலைகளிலும் இருந்த முனைகள் அகற்றப்பட்டு அவற்றுக்குப் பதிலாக நான்கு பொன்னிற அரச இலைகள் இடம் பெறும் ஒரே அளவிலான இரண்டு செங்குத்தான கோடுகள் ஒன்று செம்மஞ்சளாகவும் இன்னொன்று பச்சை நிறத்திலும், தமிழர் முஸ்லீம் ஆகிய இரண்டு சிறுபான்மை இனத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் கொடியின் அளவு 1:5 என்ற விகிதாசார அளவில் இடம் பெற்றது.

ஆண்மை மிக்க சிங்களத் தேசியத்தின் பால் நின்று சிறுபான்மை மக்களை அந்த சிங்கள பரப்பிற்குள் அடங்கி நடக்கும்படியான ஒரு செய்தியை டி.எஸ். சேனநாயகாவும், ஜெயவர்த்தனாவும், ஆ.டி.பண்டாரநாயகாவும் செய்தார்கள். பெரும்பான்மை என்னும் பாசிச கருத்தியல் இன்று உலகெங்குலும் பயங்கரவாத்தை கட்டவிழ்த்து விடுகிறது. செப்டம்பர் 11 ஆம் தேதி அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பின் பெரும்பான்மை என்னும் சொல்லுக்கு அதிகாரமானதும் பாசிசபூர்வமானதுமான விளக்கம் இன்று எழுதப்படுகிறது. உலகம் முழுக்க இஸ்லாமிய மக்களுக்கு எதிரான கிறிஸ்தவ பயங்கரவாதம் கட்டி எழுப்பப்பட்டது. அது இந்தியாவில் இந்து பாசிசமாகவும் இலங்கையில் பௌத்த மேலாண்மைகொண்ட சிங்களப் பாசிசமாகவும் இருக்கிறது. துவக்ககாலத்தில் பயங்கரவாதிகள் என்ற சொல் உலக நாடுகளிடம் இல்லை. இன்று உலகிற்கு எழுந்துள்ள புதிய சூழலில் பயங்கரவாதம் என்ற சொல்லை சிங்களப் பேரினவாதிகள் பயன்படுத்துவது கொடுமைதான் இல்லையா?

ஆனால் சிங்கள மேலாண்மை பெற்ற தேசீயக் கொடியை அவர்கள் ஏற்றும் போதே இலங்கைத் தீவில் வசிக்கும் ஒட்டு மொத்த பூர்வீகத் தமிழர்களுக்கும், தமிழ் பேசும் முஸ்லீம்களுக்கும், இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கும் ஒரு செய்தியை அவர்கள் சொன்னார்கள். அது இத்தீவில் ஆளப் பிறந்த இனம் சிங்களர்கள் என்றும் எல்லா காலத்திலும் சிங்களர்களின் நம்பிக்கையைப் பெற்ற சிங்கள இறைமையையின் மீது தீரா நம்பிக்கையும் மாறாப் பற்றும் கொண்ட ஒரு இனமாக மட்டுமே இத்தீவில் சிறுபான்மையோர் வாழ முடியும் என்பதை அந்தக் கொடியை ஏற்றி வைத்த போதே சொல்லாமல் சொல்லிவிட்டார்கள். துரோகமானதும் வஞ்சகமானதுமான இக்காரியம் சிங்கள தலைவர்களின் கைச் சாதுர்யத்தாலும் சில தமிழ்த் தலைவர்களின் துரோகத்தாலும் விளைந்தது என்றால் அதில் உண்மையும் யதார்த்தமும் இல்லாமல் இல்லை.

ஆனால் சுதந்திரத்துக்குப் பின் வரப்போகிற அடுத்தடுத்த சிங்கள இனவெறிச் சட்டங்களை தமிழ்த் தலைவர்கள் புரிந்து கொள்ளவில்லை. ஏனென்றால் டி.எஸ்.சேனநாயகா வம்சாவளிகள் தொடர்பான பிரஜா உரிமைச் சட்டத்தை வெள்ளையர் வெளியேரும் வரை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. சகல தரப்ப்பு மக்களையும் சமாதானப்படுத்தும் ஒரு நாடகத்தோடு பிரிட்டீஷாரை திருப்திப்படுத்தி இலங்கையை விட்டு வெளியேற்றிய பின்பே சிறுபான்மை மக்களின் வாழ்வாதாரத்தை வேறோடு சாய்க்கும் கோரமுகங்கள் சிங்கள ஆட்சியாளர்களிடம் இருந்து வெளிப்பட்டது. ஆனால் மோசமாக துவங்கபட்ட அந்த நாடகத்தின் போக்கு தமிழ் இளைஞர்களால் மாற்றி எழுதப்படும் என்பதை சிங்களர்கள் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள்.

தொடரும்...

- டி.அருள் எழிலன் ([email protected])

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com