Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கட்டுரை

புஷ்...ஷூ...

எஸ். அர்ஷியா

ஷூவைப் பற்றிய ஞானம் முதல்முதலாக ஏற்பட்டபோது, நான் ஆறாவது வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். காக்கி டவுசரும் வெள்ளையில் பழுப்பு ஏறிப்போன சட்டையும் தான் யூனிபார்ம். செருப்பையே பார்த்திராத கால்கள். கிட்டத்தட்ட எல்லா மாணவர்களின் நிலையும் அப்போது, அதுதான். இங்கிலிஷ் மீடியத்தில் கொஞ்சம் வசதியான வீட்டுப் பையன்கள் படித்தனர். அதில், ஒரு சிலரின் கால்களில் பிளாட்பாரக் கடைகளில் வாங்கிய செருப்புகளும் இருந்தன. அதுவே அப்போது, பெரிய கெளரவம்!

bush ஒருநாள், கெளதம் எனும் மாணவன் வெள்ளையாக ஒரு ஷூ போட்டுக் கொண்டு வந்தான். ஷூ போட்டுக்கொண்டு வந்ததால், அன்று அவன் ஹீரோ ஆகியிருந்தான். நடக்கும்போது, ஏழுதேசத்து ராஜாபோல கொஞ்சம் மெனக்கெட்டு கஷ்டப்பட்டுத்தான் நடந்தான். இங்கிலிஷ் மீடியம், தமிழ் மீடியம் என்று பாகுபாடு இல்லாமல், எல்லா மாணவர்களும் அவன் காலையே பார்த்துக் கொண்டிருந்தோம். பலர் கண்களில் ஷூ ஏக்கம் இருந்தது. அன்று மாலை அவனிடம், 'அது எவ்வளவு?' என்று கேட்டேன். 'ட்வெண்டி ரூபீஸ்' என்றான். அப்போது ஆறாம் வகுப்புக்கான முழுஆண்டு படிப்புக் கட்டணமே, நோட்டுப் புத்தகங்கள் எல்லாம் உட்பட பதினைந்து ரூபாய்தான். அதையே கட்ட முடியாமல், பாதிநாள் வகுப்புவாசலில் நின்றிருக்கிறேன்.

டவுன் ஹால் ரோட்டிலிருக்கும் பாட்டா செருப்புக் கடையைக் கடக்கும்போது, கண்ணாடி கேஸ்களில் அடுக்கப்பட்டிருக்கும் ஷூக்களை பார்த்தபடியே கடந்துபோவேன். கல்லூரியில் படிக்கும் காலத்தில், புதிதாக ஷூ வாங்கியிருந்த என் நண்பனொருவன், வீட்டுக்கு வந்ததும் அதைக் கழற்றி, பழைய பனியன் துணிவைத்து அழுந்தத் துடைத்து புத்தம் புதிதாக ஆக்கிவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பான். அந்த ஷூ, அணிந்து அணிந்து தேய்ந்து போயிருந்தாலும், கடைசிவரை புதிதாகவே இருந்தது.

என்றபோதும், எனக்கே எனக்காக ஷூ வாங்கி மாட்டியது, என் திருமணத்தின் போதுதான். அது ரொம்ப சாதாரண ஷூ. விலை ரூ. 999.95. அதைக் காட்டிலும் 'காஸ்ட்லி ஷூ இருப்பதாக' கடையிலிருப்பவர் சொன்னார். இப்போது ஷூக்களின் விலை, தினமும் செய்தித் தாள்களில் விளம்பரங்களுடனே வெளியாகி விடுகின்றன. லிபர்டி, அடிடாஸ், ரிபோக், ஸ்பைக் என்று விலங்குகளின் தோலினால் ஆன ஷூக்களை தயாரிக்கும் நிறுவனங்கள் நிறையவே இருக்கின்றன. பளபளப்பாகத் தயாரித்து விற்கும் அவற்றின் விலை, ஆறாயிரத்திலிருந்து துவங்குவதாக சமீபத்தில் ஒரு விளம்பரம் வந்திருந்தது.

இராக்கில் டேரா போட்டு, அந்த நாட்டின் இறையாண்மையை ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக சீர்குலைத்துவரும் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் டபிள்யூ. புஷ், தன் பதவிக்காலம் முடிவடைய சிலநாட்களே உள்ளதால், ஆக்கிரமிப்பு செய்த நாடுகளுக்கு ரகசியப் பயணம் மேற்கொண்டு வருகிறார். அப்படி அவர் மேற்கொண்ட ரகசியப் பயணத்தின்போது, இராக்கில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அச்சந்திப்பின் இடையே, கிளீன்போல்டுக்கு வீசப்படும் கிரிக்கெட் பந்துபோல இரண்டு ஷூக்கள் அடுத்தடுத்து, அவரைநோக்கி வீசப்பட்டன. ஆனால் அவை, அவர் மீது படாமலேயே பறந்துபோய்க் கீழே விழுந்துவிட்டன. வைடு பால்ஸ் போல அவை வைடு ஷூஸ். இதையடுத்து, வீசியவரின் கிளீன்போல்ட் திறமையின்மையும், புஷ்ஷின் தப்பித்துக் கொள்ளும் சூதானமும் ஒரேநேரத்தில் உலகம் முழுவதுக்கும் தெரிந்துவிட்டது. அதைத் தொலைக்காட்சிகளும், தனிநபர்களின் YOU TUBEகளும் திரும்பத் திரும்ப மறுஒளிபரப்பு செய்து, பார்த்துக் கொண்டிருப்பவரின் மனதில் பசுமரத்தாணியாய் அறைந்து, சனியனாய் அதை பதிய வைத்துவிட்டன.

புஷ்மீது வீசப்பட்ட அந்த ஷூக்கள் கனமாகவும், தரம் மிகுந்தவைகளாகத் தெரிந்தன. இந்திய விலையில், அது எப்படியும் பத்தாயிரம் ரூபாய்... அல்லது பதினோராயிரம் ரூபாயாகக் கூட இருக்கலாம். காஸ்ட்லிதான். மத்தியத் தர வர்க்கத்தின் ஒரு மாதத்துக்கான வீட்டுச்செலவு, அது. ரிலையன்ஸ் பிரஷ் கடைகளிலும்கூட இதுபோன்ற காஸ்ட்லி ஷூக்கள் தற்போது விற்கப்படுகின்றன. அத்தனை விலையுயர்ந்த ஷூக்கள் வீசப்படுவதற்கு ஜார்ஜ் டபிள்யூ. புஷ் தகுதியான நபர்தானா என்பது தெரியவில்லை. என்றாலும் அதை வீசிய அல் - பாக்தாதியா தொலைக்காட்சி செய்தியாளர் முதாண்டர் அல்- சைதிக்கு பரந்த மனசு. கோழிவிரட்ட காதுகுழைகளை கழற்றி வீசிய தமிழ்ப் பெண்ணுக்கு அப்புறம், புஷ்மீது ஷூ வீசிய அந்த நபர்தான் அதிகமாகப் புகழப்படுகிறார். அதிர்ஷ்டத்தில், இது பேரதிர்ஷ்டம். எல்லோருக்கும் இந்தக் கொடுப்பினை கிடைக்குமா என்று தெரியவில்லை!

bush நம்ம ஊரில் நாய்களை விரட்ட 'சூ...ச்சூ...'சொல்வார்கள். ரொம்ப கோபமாக இருந்தால், தேய்ந்துபோன... பிய்ந்த... பழைய செருப்புகளை தேடி யெடுத்து வீசுவதும் உண்டு. அவ்வளவுதான். நாய் ஓடிவிடும். சில நாய்கள் எதிரே நின்று கோபமாகக் குரைக்கும். வேறு சிலநாய்கள் அதன் மொழியில் ஏதோ முனங்கும். அந்த முனகல், எதிராளியிடம் ஏதோ சொல்வதுபோலவே இருக்கும்.

இதுவரை உலகநாடுகளை, தான் மட்டுமே குண்டுபோட்டும், பொருளாதார நிர்பந்தங்கள் கொடுத்தும் மிரட்டிவந்த ஜார்ஜ் டபிள்யூ. புஷ், முதல் முறையாக தன்னை நோக்கி எறியப்பட்ட ஷூ வீச்சின்போது மிரண்டு, பேயறைந்தவர்போல ஆகிவிட்டார். எப்போதும் இரத்த ஓட்டம் தெரியும் அவரது சிவந்த முகம், சொட்டு நீலம்போட்ட துணிபோல வெளுத்துப்போயிருந்தது. என்றாலும், அந்த ஷூ வீச்சு தன்னை பாதிக்கவில்லை என்பது போல, சூழலை சகஜமாக்கிக்கொள்ள முயன்று, "if you want the facts, it was a size 10 shoe that he threw!" என்று சொல்லி, அவர் மொழியில் மகிழ்ந்திருக்கிறார்.

இந்த இடத்தில் 10 என்று அவர் வலிந்து சொன்னதில், 10 எனும் அந்த எண், பல்வேறு அர்த்தங்களுக்குள் இழுத்துச் செல்கிறது. No.10 என்றதும் நெடுநாட்களாக அடிமைப்பட்டுக் கிடந்த நமக்கு, 'சட்' டென்று நினைவுக்கு வருவது, No.10. டெளனிங் ஸ்ட்¡£ட் தான். அது பிரிட்டிஷ் பிரதமரின் இல்ல எண்! 'என்னை நோக்கி வீசப்பட்ட ஷூக்கள், அவர் மீதும் வீசப்பட்டதாக பொருள் கொள்கிறேன்' என்று புஷ் சொன்னதுபோல எடுத்துக் கொள்ளவும் நிறைய வாய்ப்பு உண்டு. அமெரிக்காவுடன் கைகோர்த்துக்கொண்டு இராக்கை அழித்ததில், பிரிட்டிஷ் படைக்கும் பெரும் பங்குண்டு. அதனால், 'தான் மட்டும் எதற்கு ஷூ எறி வாங்கவேண்டும்' என்றுகூட புஷ் கருதியிருக்கலாம். அதுபோலத்தான் NO.10. ஜன்பத் சாலையும் தேவையில்லாமல் நினைவுக்கு வந்து தொலைக்கிறது. NO.10 வலியுறுத்திய புஷ்ஷூக்கும், தான் பெற்ற இன்பத்தை பிறருக்கும் வாரி வழங்கும் பரந்த மனசுதான்!

ஷூ வீசிய முதாண்டர் அல் - சைதி, பத்திரிகையாளர் சந்திப்புக்கு வந்தபோது, என்ன மனநிலையில் இருந்தார் என்பது யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றபோதும் புஷ்ஷின் பராக்கிரம வாசகங்கள், அவரைக் கடுப்பேற்றி இருக்கலாம். புஷ் அப்படி என்னதான் சொல்லிவிட்டார் என்று பார்த்தால், "அமெரிக்க - இராக் ஒப்பந்தம், இராக் மக்கள் சுதந்திரமாக வாழ உதவும். அமெரிக்காவின் பாதுகாப்பு, இராக்கின் நம்பிக்கை, உலக அமைதிக்கு இந்த ஒப்பந்தம் மிகவும் அவசியமானது" என்றுதான் சொல்லியிருக்கிறார்.

ஒரு பெரிய அண்ணன் எப்போதும் சொல்வதுபோலான குதர்க்கமான வாசகங்கள்தான், இவை. இதைவிட 'அச்சுப்பிச்சு' வாசகங்களையெல்லாம் புஷ் உளறிக் கொட்டியிருக்கிறார். அப்போதெல்லாம் இதுபோல எதுவும் நடந்ததில்லை என்று சொல்லிக் கொள்கிறார்கள். அப்படிச் சொல்வதெல்லாம், இதுபோல நடக்காமல்போய்விட்டதே எனும் வருத்தம் தொடர்புள்ளதாகவே நமக்குப் படுகிறது. அல்லது முன்னதாகவே இதுபோன்ற சம்பவங்கள் நடந்திருக்க வேண்டும் என்று சங்கடப்பட்டுக் கொள்வதாகவும் இருக்கலாம்.

கிட்டத்தட்ட இருபது லட்சம்பேர்வரை உயிரிழந்தும், அதே எண்ணிக்கைக்கும் அதிகமான பெண்கள் விதவைகளாக்கப்பட்டும், பல லட்சம் குழந்தைகள் அனாதைகளாக்கப்பட்டுவிட்ட நிலையில், "இந்த ஒப்பந்தம், இராக் மக்கள் சுதந்திரமாக வாழ உதவும்" என்று சொன்னால், அதுவும் உயிர்குடிக்கும் ஓநாய் ஒன்று, புஷ் எனும் மனித உருக்கொண்டு சொன்னால், புழுவுக்கும் கோபம் வரத்தான் செய்யும் என்று நினைக்க வேண்டியிருக்கிறது. அழிச்சாட்டியம் செய்த மண்ணில் போய் நின்றுகொண்டு, தெனாவட்டாகப் பேசினால்... இப்படித்தான் நடக்கும்போல. என்ன இருந்தாலும் வீசப்பட்டது, காஸ்ட்லி ஷூ தான்!

வீசப்பட்ட ஷூக்கள் மிரட்சியைத் தந்திருந்தாலும், புஷ் தனக்கு கொஞ்சம் ஹாஸ்யமும் வரும் என்று உலக மக்களை நம்பவைக்க, நம்ம ஊர் தமிழறிஞர்கள் போல, மொழி ஆராய்ச்சிக்குப் போயிருக்கிறார். இராக்கிய மொழியில் ஷூவுக்கு பூ எனப் பொருள் என்று கோனார், மினர்வா நோட்ஸ்களுக்கு போட்டியாக தனது மொழி அறிவை இன்ஸ்டன்ட்டாக நிரூபித்திருக்கிறார். அது அவருக்கு உடனடியாகக் கைவந்திருக்கிறது. சட்டையில் விழுந்துவிட்ட காக்கா எச்சத்தைத் துடைத்துவிட்டு, அசடாய் சிரிப்போமே அது போலத்தான் இதுவும். ஷூ வீச்சுக்கு உள்ளானவர்கள் யாரும் இனிமேல் வருத்தம் கொள்ள மாட்டார்கள். ஏனென்றால் வந்துவிழும் ஷூக்களை அவர்கள், தங்கள் மேல் விழுந்த பூக்களாக புஷ்ஷைப் போலவே நினைத்துக் கொள்வார்கள்.

ஆனால் முதாண்டர் அல் - சைதி கோபமாக ஷீவை எறிந்து பேசிய வார்த்தைகளான, "it is the farewell kiss, you dog"க்கு என்ன பொருள் கொள்வதென்று புது ஆராய்ச்சியில் புஷ் இறங்கலாம். 2009 ஜனவரி 20ம் தேதிக்குப் பிறகு அவர், மேலும் மேலும் புதுப்புது அர்த்தங்களை கண்டுபிடித்து உலகுக்கு வழங்க நேரம் இருக்கும் என்று அவர் மீது நம்பிக்கையும் வைக்கலாம். என்றபோதும், "ஷூ வீச்சு, இராக்கிலிருக்கும் சுதந்திரத்துக்கு எடுத்துக்காட்டு" என்று நரியின் தந்திரத்தோடு கூறியிருக்கிறார்.

முதல் ஷூ, புஷ்ஷை நோக்கிப் பறப்பதற்கு முன்பே முதாண்டர் அல் - சைதி, தனது கண்டனக் குரலை எழுப்பியிருக்க வேண்டும். அந்தக் குரல் கேட்டு, பத்திரிக்கையாளர் பகுதியின் இரண்டாம் வரிசையில் உட்கார்ந்திருந்த ஒரு ஓங்குதாங்கு நபர், அவசரமாகத் திரும்பிப் பார்க்கிறார். அடுத்து, இரண்டாவது ஷூ பறக்கத் துவங்குமுன்பே சைதியை உட்கார்ந்தபடியே அவர் தடுக்க முயலுகிறார். அதையும் தாண்டி ஷூ பறக்கிறது. இந்த இரண்டு ஷூக்களுமே புஷ்ஷை தொடவில்லை என்பது கண்கூடு. ஒன்று, தலைகுனிந்த புஷ்ஷைத் தாண்டி, பின்புறம் நட்டுவைத்திருந்த இராக்கிய - அமெரிக்கக் கொடிகளுக்கிடையில் விழுந்துவிட்டது. மற்றொன்றும், மறு தலைகுனிவுக்கு உள்ளான புஷ்ஷைத் தாண்டி, பின்புறமே போய் விழுந்தது.

ஆனால் அதை வீசிய முதாண்டர் அல் - சைதி, ஓங்குதாங்கு நபர் உள்ளிட்ட பாதுகாப்புப் படையினரால் கோழி அமுக்காக அமுக்கப்படுகிறார். படையினரால் அமுக்கப்பட்ட முதாண்டர் அல் - சைதி, கழுத்தறுபட்ட கோழிபோலவும் கத்துகிறார். அவர், எங்கு கொண்டு செல்லப்பட்டார் என்பது ரகசியமாகவே இருக்கிறது. ஆளுக்கு ஒரு தகவல் சொல்லி, வழக்கம்போலவே உலகத்தை மகிழ்விக்கிறார்கள்.

குறிபார்த்து எறியத் தெரியாமல், அப்போதுதான் வீசி எறிந்து பழகிய ஒருவருக்கு, அப்படி வீச இராக்கில் சுதந்திரம் இல்லை என்பதைத்தானே இந்தக் கோழி அமுக்கு காட்டுகிறது? அங்கே சுதந்திரம் இல்லையென்றுதானே பாதுகாப்பு நிறைந்திருந்த... உலகத் தரத்திலான ஒண்ணாம் நம்பர் பாதுகாப்பைப் பெறும் புஷ்ஷை நோக்கி, ஷூ பறந்திருக்கிறது. அப்புறமெப்படி... இராக்கில், சுதந்திரம் இருப்பதாக புஷ் சொல்கிறார்? கத்திரிக்காய்!.

ஷூவை சுதந்திரத்துடன் ஒப்பீடு செய்த அவர், அங்கிருந்து ஆப்கானிஸ்தான் போய்விட்டார். அங்கும் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. நல்ல வேளை, அங்கு முதாண்டர் அல் - சைதிகள் யாருமில்லை! என்றபோதும் ஷூக்கள் குறித்தப் பார்வை, கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த புஷ் மீதான ஷூ வீச்சுக்கு பின்பு, உலகம் முழுவதும் மறுபரிசீலனைக்கு உள்ளாகியிருக்கிறது. முன்பெல்லாம் அழுகல் நோய்க்காரர்கள் தான் ஷூக்களை அணிந்திருப்பார்கள். அப்புறம் பிரபுக்கள். அடுத்து பணக்காரர்கள் என்று ஒரு பட்டியல் இருந்தது. இப்போது உலக மயமாக்கலுக்குப்பின், எல்லோரும் ஷூ வாங்கி அணியத் துவங்கிவிட்டார்கள்.

உலக மயமாக்கலுக்கு வித்திட்ட அமெரிக்காவுக்கு எதிராக... அதிபர் புஷ்ஷூக்கு எதிராக... தான் அணிந்திருந்த ஷூவைக் கழற்றி வீசிய பெரிய மனசுக்காரர் முதாண்டர் அல் - சைதியின் செயல், உலக நாடுகளிடையே பலத்த வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அவர், புஷ் மீது வீசியெறிந்த ஷூவை கோடிக்கணக்கில் கொடுத்து வாங்க, அபூர்வ பொருள் சேகரிப்பாளர்கள் முன்வந்துள்ளனர். திருவிளையாடல் படத்தில் வரும் தருமிபோல "ஐயோ... ஐயோ... அந்த ஷூ என்ட்ட இல்லையே!" என்று புலம்பலாம்போல தோன்றுகிறது. ஷூ தயாரிக்கும் நிறுவனங்கள் புஷ் மீது வீசப்பட்டது தங்கள் நிறுவனத்தின் ஷூ தான் என்று போட்டி போட்டுக்கொண்டு விளம்பரங்கள் செய்கின்றன.

ஷூ தயாரிக்கும் நிறுவனங்களுக்கும், சைதி ஆதர்சமாகியிருக்கிறார். பிடிக்காதவர்கள் மீது வீசியெறிவதற்கு வாகான ஷூக்கள் என்ற விளம்பரம் ஒன்று, உடனடியாக முளைத்து, வாசக நெஞ்சங்களை சுண்டியிழுத்துள்ளது. விலைக்குறைப்பு அறிவித்து, வேறொரு நிறுவனம் மக்களை மகிழ்வூட்டியுள்ளது. மற்றொரு நிறுவனம் வீசியெறிய மாதந்திரத் தவணையில் ஷூ தருவதாகவும் சொல்லியிருக்கிறது. சைதி வீசியெறிந்த ஷூ, புஷ் மீது சரியாகப்படாததால், இனி ஷூ வீச விரும்புபவர்களுக்கு, குறிபார்த்து வீசக் கற்றுக்கொடுப்பதாகவும் புஷ் ஈசலாக... மன்னிக்கவும்... புற்றீசலாக நாலைந்து நிறுவனங்கள் முளைவிட்டுள்ளன.

சூப்பர் மேன், ஸ்பைடர் மேன், போகி மேன் ஆகிய விளையாட்டுகளை மட்டுமே தெரிந்திருந்த உலகக் குழந்தைகளின் விளையாட்டு ரிமோட்டில், 'புஷ், தி ஷூ மேன்' விளையாட்டும் புதிதாகச் சேர்ந்துள்ளது. தன் மீது மோதவரும் ஷூக்களை சாமர்த்தியமாக எப்படி அவர் தவிர்க்கிறார் என்பதுதான் விளையாட்டு. குழந்தைகளின் மனதில், இந்த விளையாட்டு முக்கிய இடம் பிடித்துவிட்டது. இருமுறை வீசப்பட்ட ஷூக்களிலிருந்து ducking முறையில் குனிந்து தப்பித்த புஷ், இதில் மற்ற சூப்பர் மேன், ஸ்பைடர் மேன், போகி மேன்களைக் காட்டிலும் அதிக சாகசத்துடன் வளைந்து, நெளிந்து, பராக்கிரமம் காட்டுவது, பார்க்கப் பரவசமாகவே உள்ளது.

ஆப்கானியக் கலைக் குழுவான "Zang-i-Khatar" (Alert Bell) புஷ் மீதான ஷூ வீச்சை, பரவச நாடகம் ஆக்கியுள்ளது. அதன் தயாரிப்பாளரான Hanif Ham gaam , "இந்த நிகழ்ச்சியின் நோக்கம், மக்களை சிரிக்க வைப்பது மட்டுமல்ல. இதன் மூலம் மக்களிடமும், இராக்கிய பத்திரிகையாளர்களிடமும் ஒற்றுமையை ஏற்படுத்துவதுதான்" என்று சங்கல்பமே ஏற்றுக்கொண்டுள்ளார். ஒற்றுமை குறித்த அவரது பேட்டியை AFP பரபரப்பாகவும், பரவசமாகவும் உலகம் முழுவதும் ஒளிபரப்பியது.

ஊடகத் துறையில் பணிபுரிய சற்றே பரபரப்பான ஆசாமிகளைத்தான் நிறுவனங்கள் விரும்புவதுண்டு. அந்த வகையில், லெபனானிய டிவி நிறுவனமான NTV மிகப்பெரிய offer முதாண்டர் அல் - சைதிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது. தனது அறிவிப்பில் அது, 'இந்த வேலையை சைதி ஏற்றுக் கொண்டால், முதல் ஷூவை விட்டெறிந்த நொடியிலிருந்து, அவருக்கு சம்பளம் வழங்கப்படும்' என்று சொல்லி திக்குமுக்காடியிருக்கிறது.

இது, உலக அளவில் பலரின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டுள்ளது. பார்த்த வேலைக்கு காசுவாங்க முடியாமல் நிறுவனங்களின் முதலாளிவீ ட்டு வாசல்வரை சென்றுவரும் உலகம் முழுவதுமுள்ள பிற ஊடகச் செய்தியாளர்கள், முதாண்டர் அல் - சைதி மீது இந்த அறிவிப்பால் பொறாமை கொண்டுள்ளனர். அத்துடன் ஷூக்களை குறிபார்த்து வீசி எறிந்து பழகியும் வருகின்றனர். தினமும் என்னை சந்திக்கும் ஊடக நண்பன், "பழைய ஷூ இருந்தா குடுறா... வீசி எறிஞ்சு பழகணும்!" என்று பாவமாகக் கேட்டுவிட்டுப் போயிருக்கிறான். அதைத் தேடி எடுக்கவேண்டும். இங்கே யார் மீது வீசப் போகின்றானோ?

இந்நிலையில், Sunsentinal.com எனும் ஊடக நிறுவனம், அதன் நேயர்களுக்கு மிக அற்புதமான போட்டியொன்றை அறிவித்துள்ளது. அந்தப் போட்டி இதுதான். "உங்களிடம் ஒரு ஷூ கொடுத்தால், அதை யார் மீது வீசி எறிவீர்கள்?" என்று கேள்விகேட்டு, பத்து பரிந்துரைகளையும் செய்துள்ளது. அம்மா, அப்பா, கணவன், மனைவி, காதலன்/காதலி, வருங்கால கணவன்/மனைவி, முதலாளி, நண்பன், புஷ், மற்றவர்கள் என்று அது பட்டியலிட்டுள்ளது. இந்த விளையாட்டுப் போட்டி ஆரம்பித்த கொஞ்ச நேரத்தில், 503 வாக்குகள் பதிவாகியிருந்தன. அதில் 15 சதவீதம் புஷ்ஷூக்கு!

இதுபோல under wire, print maister, x enterprise, head zup, monty python, nonewsbs.com., inquislitr.com.,போன்ற ஊடக நிறுவனங்கள் ஷூ விளையாட்டை விதவிதமாக அறிவித்துள்ளன. உலகின் முக்கியமான 20 தொலைக்காட்சிகளில் பதிமூன்றில் ஷூ வீச்சே முக்கிய இடம் பிடித்திருந்தது. முதல் ஒரு மணிநேரத்தில் 209 பேர் தங்கள் you tubeகளில் இச் செய்தியை வீடியோ படத்துடன் அரங்கேற்றிக் கொண்டனர். 18ம் தேதி நள்ளிரவு வரையில் 1 கோடியே 81 லட்சத்து 45 ஆயிரம்பேர் இந்த ஷூ வீச்சை ரசித்திருந்தனர்.

எகிப்திலிருந்து வெளியாகும் நாளிதழான Al - Badeel, தனது முதல் பக்கத்தில் அமெரிக்கக் கொடியை பிரசுரித்திருந்தது. அதில் நட்சத்திரங்கள் நிறைந்திருக்கும் இடத்தில், ஷூ படத்தை வெளியிட்டிருந்தது. பாக்தாத் பள்ளிக்கூடம் ஒன்றின் பூகோள ஆசிரியை, தனது மாணவர்களிடம், "இராக்கின் ஆண் மகன் முதாண்டர் அல் - சைதியால் தேசம் தலைநிமிர்ந்திருக்கிறது. வரலாறு அவரை மறக்காது" என்று சொல்லி வகுப்பு நடத்தியிருக்கிறார்.

ஷூ வீச்சின்போது அங்கு வந்துசேர்ந்த வெள்ளை மாளிகையின் செய்தித்துறை செயலாளர் டானா பெரினோ, வெள்ளை மாளிகையின் மற்ற ஆண் அதிகாரிகளின் இடிபாடுகளில் சிக்கியபோது, அங்கிருந்த மைக்ரோ போனில் இடித்துக் கொண்டார். அதில் கண்ணுக்குக் கீழே காயம் ஏற்படுத்திக்கொண்டார். மைக்ரோ அளவிலான இந்தக்காயத்தைத் தவிர மற்றபடி, புஷ்ஷூக்கோ அவரது ஆட்களுக்கோ வேறுகாயம் எதுவுமில்லைதான்.

இந்தியக் குழந்தைகளின் விளையாட்டுப் பட்டியலில், புஷ் மீது ஷூ வீசி விளையாடும் புது ஆட்டமும் முக்கிய இடம்பிடித்துவிட்டது. இந்த ஷூ விளையாட்டில் கலந்து கொள்ள முடியாமல் தவித்துப் போயிருப்பவர், இராக்கிய பிரதமர் நூரி அல் - மாலிக்கி மட்டுந்தான்! புஷ்ஷூடன் நின்றிருந்த அவர், புஷ் இருமுறை தலைகுனிந்தபோதும் எதுவும் புரிபடாமல், அசையாமல் மலைபோல் நின்றிருந்தார். அப்படி பயமோ... பதற்றமோ எதுவுமில்லாமல், நிலைகுலையாது களத்தில் நின்றிருந்தது, இராக்கிய வீரம்தான் என்றாலும், அவர் புஷ்ஷின் அடிவருடியாக அல்லவா இருக்கிறார்.

முதாண்டர் அல் - சைதி தொலைதொடர்பு துறையில் பட்டம் பெற்றவர். தொலைகாட்சி நிறுவனத்தில் பணி செய்துவந்த அவரை, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, துப்பாக்கி முனையில் ஒரு கும்பல் கடத்திச்சென்றது. பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார். கடத்திச் சென்றது அல் - கொய்தா என்று கூறப்பட்டாலும் அதிகாரப் பூர்வமாக அது உறுதி செய்யப்படவில்லை. அப்போது ஏதும் மூளைச்சலவை செய்யப்பட்டாரா... அல்லது விலைக்கு வாங்கப்பட்டாரா... எனும் கோணத்தில் இப்போது புலனாய்வுகள் துவங்கியுள்ளன. கடந்த ஆண்டும் அமெரிக்கப் படையினரால் பிடித்துச் செல்லப்பட்ட அவர், அடுத்த நாள் விடுவிக்கப்பட்டார்.

முதாண்டர் அல் - சைதியின் கை உடைக்கப்பட்டது; விலா எலும்பு நொறுக்கப்பட்டது; குற்றம் நிரூபிக்கட்டால் 15 ஆண்டு தண்டனை என்பதும், இருநூறுக்கும் அதிகமான வழக்கறிஞர்கள் சைதிக்கு வாதாட முன்வந்துள்ளனர் என்பதும், கெய்ரோவிலும், பாலஸ்தீனிலும் சைதிக்கு ஆதரவுக் குரல்கள் எழுந்துள்ளன என்பதும், ஷூ வீசுவது முஸ்லீம்கள் வட்டாரத்தில் கெட்ட சொல்லுக்கு சமம் என்பதெல்லாம் கூடுதல் தகவல்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் என்ன பீரோ அது...ஆங், பொலிட் பிரோ... அதன் உறுப்பினர் சீதாராம் யெச்சூரி, 'புஷ்மீது வீசப்பட்ட ஷூ, இந்தியா மீது வீசப்பட்டதாக' கூறியிருக்கிறார். இது மிகக் கூடுதலான தகவல்.

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, சகல தரப்பிலும் ஷூக்களுக்கான மதிப்பு, முதாண்டர் அல் - சைதியால் கூடிப்போய்விட்டது. தனக்குப் பிடிக்காத நபர் எதிரே வந்தால், அவர் கால்களைப் பார்க்கும் புது வழக்கத்தை துவக்கி வைத்திருக்கிறார், அவர். ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொருவிதமான பொருளுக்கு மதிப்பு கூடும். இப்போது, புஷ்மீது வீசப்பட்டதால், ஷூக்களுக்கு மதிப்பு உயர்ந்திருக்கிறது.

ஐயோ... அங்கே யாரோ கீழே குனிகிறார்கள்...

- எஸ். அர்ஷியா ([email protected])

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com