Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கட்டுரை

பார்ப்பன வாத்தியார்கள்
பாவலர் அறிவுமதி


ஞாநி இப்போது தமிழ்ச்சமுகத்தின் பாலியல் வாத்தியாராகப் பதவி உயர்வு பெற்றுவிட்டார். அதனால்தான் ஆனந்த விகடனில் 'அறிந்தும் அறியாமலும்' எழுதுகிறார்.

மூன்று வயது ஆண்குறி விறைப்பது குறித்தும், மூன்று வயது பெண்குறி பிசுபிசுப்பது குறித்தும் எழுதி எழுதி... முதன் முதலாக எப்போது நீங்கள் அதைத் தொட்டது.. முதன் முதலாக எப்போது நீங்கள் இதைப் பார்த்தது என்று கேள்விகள் கேட்டு வந்த பத்திரிகையாளர் ஞாநி... கடைசியாக ஆண் - பெண் உறுப்புகளின் படங்கள் வரைந்து பாகங்கள் குறித்து விலாவாரியாக எழுதலாமா என்று கேட்டு.. ஆறுகோடித் தமிழர்களும் அதற்கு அங்கீகாரம் அளித்து விட்டதாகவும்.. இனி துணிந்து பாலியல் குறித்துப் பக்கம் பக்கமாக ஆனந்த விகடனில் எழுதப் போவதாகவும் ஏகப்பட்ட குஷியில் அறிவித்திருக்கிறார்.

அரசியல் விமர்சனங்கள் எழுத பத்திரிகையாளர் ஞாநிக்குத் தகுதியுண்டு. பாலியல் சார்ந்த சிறுகதைகள், புதினங்கள் எழுதவும் தகுதியுண்டு. ஆனால், மருத்துவர்களாகிய பெற்றோர்களின் மகன் மகப்பேறு பார்த்தது எவ்விதம் பிழையோ அவ்விதமே பாலியல் கல்வி குறித்தத் தொடர் எழுதுதல் ஞாநிக்குப் பிழை என்பதை ஞாநியும் உணர வேண்டும். நாமும் உணர வேண்டும்.

ஞாநி அடிப்படையில் பாலியல் மருத்துவம் படித்த வல்லுநரன்று. பாலியல் நூல்களைப் படித்து அல்லது பாலியல் மருத்துவர்களிடம் கேட்டுக் கேட்டு எழுதப் போகிற தொடர்தான் இந்தப் பாலியல் மருத்துவத் தொடர். இந்தத் தொடரில் அவரது பணி, மொழி பெயர்ப்பாளர் அல்லது நேர்காணல் செய்பவர் என்கிற அளவில் மட்டுமே பயன்படப் போகிறது. அப்படியானால் இந்தப் பாலியல் தெளிவுகளுக்கான அறிவுக்குச் சொந்தக்காரர்கள் வேறு நபர்கள்.

இப்படி அடுத்தவர் உழைப்பை, அடுத்தவர் அறிவைத் திருடிப் பிழைக்கும் வகையறாக்களே ஞாநியின் வகையறாக்கள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இப்படிப்பட்ட ஈனப் பிழைப்பை நடத்தி வருகிறவர்கள்தாம் இவர்கள். ஏரோட்டியவர்களின் கால்களில் கட்டிய சலங்கை பத்மா சுப்ரமணியத்திற்குப் பல பட்டங்களைப் பெற்றுக் கொடுத்த உண்மையை... நாற்று நட்ட தாய்கள் பாடிய இராகங்கள் பாம்பே ஜெயஸ்ரீக்குப் பட்டம் பெற்றுக் கொடுத்த உண்மையை... உணர்ந்தவர்களுக்குத் தான் நான் சொல்கிற உண்மை புரியும்.

அன்று இசையை, நடனத்தைத் திருடியவர்கள் இன்று அடுத்தவர்களின் அறிவியல் உழைப்பையும் திருடிப் பிழைப்பு நடத்துவதின் அடையாளமே ஞாநியின் அறிந்தும் அறியாமலும், சுஜாதாவின் கற்றதும் பெற்றதும், மதனின் ஹாய் மதனும்!

இந்த வகையறாக்களின் கைகளில் இருக்கும் அறிவுக் குழந்தைகளின் அப்பா அம்மாக்கள் யார் யாரோ. இவர்கள் பல நூலகங்களில் திருடி வந்த குழந்தைகளை விற்கும் அசிங்கத் திருடர்கள், அருவருப்புத் திருடர்கள்.

இவர்களுடைய பணி இந்தத் திருட்டு வேலைகளோடு நின்றுவிடவில்லை. இவர்களுடைய இந்த எழுத்துகளைப் படிக்கும் தமிழர்களிடையே இவர்கள் மிகச் சிறந்த பத்திரிகையாளர்களாக, பாராட்டுக்குரிய அறிவியல் அறிஞர்களாக, "இவர்கள் சொன்னால் அது சரியாகத்தான் இருக்கும் என்கிற கருத்துருவாக்க மனிதர்களாக...." இவர்கள் மாறுகிற இடத்தில்தான் தமிழகத்திற்கான ஆபத்துகள் தொடங்குகின்றன. தேர்தல் நேரத்தில் கால்மேல் கால் போட்டுக் கொண்டு தொலைக்காட்சிகளில் அமர்வது போன்ற ஆபத்துகள்.

சுஜாதாவின் எழுத்துகளையும், கேள்வி பதில்களையும் படித்துப் படித்து வியப்புற்ற தமிழர்கள் சுஜாதாவின் மீது மிகுந்த மரியாதை வைத்தார்கள். சங்க இலக்கியங்களான புறநானூறு, குறுந்தொகைக்கெல்லாம் உரையெழுதியதைப் பார்த்து மிகச் சிறந்த தமிழ்மேதையென்று மதிப்பும் வைத்தார்கள் (புறநானூறுக்கு அவர் எழுதிய உரையில் இருந்த அடிப்படையான தவறுகளை ஆதாரத்துடன் 'இந்தியா டுடே' இதழ் மூலம் பேராசிரியர்கள் இருவர் சுட்டிக் காட்டியும், இன்றுவரை அதற்கு எந்த விடையும் சொல்லாமல் பதுங்கிக் கொண்டது வேறு விசயம்.)

புறநானூற்றுக்கு உரையெழுதிய இந்த தமிழ்மேதைதான் 'சிவாஜி’' படத்திற்கு வசனகர்த்தா! அந்தப் படத்தில் ஒரு காட்சி எழுதிக் கொடுத்திருக்கிறார் இந்த மேதை! அங்கவை, சங்கவை பாரி மகளிராக அறியப்பட்ட பெயர்கள். இந்தப் பெயர்கள் கொண்ட, இயல்பாக இருக்கிற தமிழ்ப் பெண்களின் முகங்களில், ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில் மணிரத்னம் போரளிகள் முகத்தில் பூசிவிட்டதைப் போல... இராமாயணத்தில் அரக்கர்கள் என்றது போல, கரியைப் பூசி தமிழ் படித்த கேணையன் சாலமன் பாப்பையா வாயால்... "வாங்க எங்கிட்ட ரெண்டு பொண்ணுங்க இருக்காங்க, வந்து பழகுங்க.. புடிச்சிருந்தா கட்டிக்கிங்க.. புடிக்கலன்னா பிரண்ட்சா வச்சிக்கிங்க" என்று பேச வைத்திருக்கிறார். ஒரு தமிழ்ப் பேராசிரியரை வைத்தே தமிழ்ப் பெண்களை இவ்வளவு கேவலப்படுத்திருக்கிறார் சுஜாதா!

நல்ல தமிழ்ப் பெண்கள் எங்கே கிடைப்பார்கள் என்பதற்கு, ‘எல்லா தமிழ்ப் பெண்களும் கால்சென்டருக்குப் போய்விட்டார்கள். ஒண்ணு ரெண்டு கோயில்ல இல்லன்னா.... யாழ்ப்பாணத்துல...’ என்றும் எழுதியிருக்கிறார் சுஜாதா. வேலைக்குப் போகிற பெண்களெல்லாம் விபச்சாரிகள் என்று பெரியவாள் சொன்ன குரலை சுஜாதாவின் குரல் அப்படியே எதிரொலிக்கிறதா இல்லையா? படித்த தமிழ்ப் பெண்களையெல்லாம் இப்படிக் கேவலப்படுத்தி எழுதியுள்ள சுஜாதாவைப் பற்றி... இந்த உரையாடலைப் பயன்படுத்திய இயக்குநரைப் பற்றி, நடிகர்களைப் பற்றி எந்தக் கேள்வியும் கேட்காமல் ஆயிரம் ரெண்டாயிரம் கொடுத்து விட்டு வருகிற தமிழர்களைப் பற்றி என்ன சொல்வது!

Sujatha 'யாழ்ப்பாணம்' என்ற சொல்லை முன்பொருமுறை மணிரத்னம் தனது படத்திலும் பயன்படுத்தியிருந்தார். வருகிற ஒருவரை எங்கிருந்து வர்ற என்று கேட்க, தெற்கே என்று சொல்ல... யாழ்ப்பாணத்திலிருந்தா.. என்று கேட்பான், தமிழ்நாட்டில் நடக்கும் கதையில்! இந்தப் படத்திலும் அப்படியே.. ஊறுகாய் போல 'யாழ்ப்பாணம்' பயன்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்து எம்தமிழ் உறவுகள் படுகிற வேதனை குறித்து இந்த சுஜாதாவிற்கு என்ன கவலை இருக்கப் போகிறது? அங்கே வயதுக்கு வந்த பெண்களை... பையன்களை வைத்துக் கொண்டிருக்கிற தாய்களின் வலிகுறித்து இந்த ஆளுக்குத் தெரியுமா? வெள்ளை வண்டி சோகம் புரியுமா? 'யாழ்ப்பாணம்' என்ற சொல்லைப் பயன்படுத்தி புலம்பெயர்ந்த தமிழர்களின் கடின உழைப்பு ஊதியத்தை ஏமாற்றிப் பிடுங்க மட்டுமே இவர்களுக்குத் தெரியும். (சிங்களவர்களை விட தம் வாழ்விற்கு இவர்கள் மிக மோசமான எதிரிகள் என்கிற உண்மையை உணராமல், எம் புலம் பெயர்ந்த தமிழ் உறவுகள் தமிழர்களுக்கும், தமிழ்க் கலாச்சாரத்திற்கும் எதிராக எடுக்கப்பட்டுள்ள இந்த மிக மோசமான படத்தைப் பார்க்கிறார்கள் என்பதைக் கேள்விப்பட்டு வலிக்கிறது. ஆனாலும், சுவிசின் துர்க்கா வாழ் தமிழ் உறவுகள் ஒட்டுமொத்தமாக இதனை நிராகரித்திருப்பது ஆறுதலாக இருக்கிறது).

அப்புறம்... 'வாங்க வந்து வடைய தட்டுங்க...' என்று தொலைக்காட்சி புகழ் உமாவிற்கு வசனம் கொடுத்திருக்கிறார் சுஜாதா. அறிவுள்ள அந்தப் பெண் இந்த உரையாடலைக் கூச்சமின்றி பேசிக் கொடுத்திருக்கிறார்!

'ஆதி' என்று சொல்லி இன்னொரு சொல்லைச் சொல்லப் போக, விவேக்கின் வாயை ரஜினி மூட, கபோதி என்று சொல்ல வந்தேன் என்று வசனம் எழுதியிருக்கிறார் சுஜாதா! இதையே இந்தியன் படத்திலும் 'ரெண்டெழுத்துக் கொழுப்பு’ என்றும் 'கேணக்கூ'....என்றும் எழுதி ஒரு பெரிய நடிகரின் வாயால் உச்சரிக்க வைத்தவர்தான் இந்த சுஜாதா!

அந்த உறுப்பு வழியாகத்தானே சுஜாதா அவரது மரியாதைக்குரிய அம்மாவின் வயிற்றிலிருந்து உலகிற்கு வந்தார்! இந்த உரையாடலை எழுதியவர்.... வாயை அடைத்தவர்... இயக்கியவர் இவர்களும் இதன் வழியாகத்தானே உலகிற்கு வந்தார்கள்! அந்த உறுப்பு அவ்வளவு கேவலமானதா? கேலிக்குரியதா? கிண்டலுக்குரியதா?

ரவுண்டு ரவுண்டா நா ஒண்ணுக்கு உடுறேம்பாரு... அப்படி நீ உடுவியா என்று ஒரு சிறுவன் சிறுமியிடம் கேட்பதாக எழுதிய சுஜாதாதான் இன்று ஆனந்த விகடனில் கற்றதும் பெற்றதும் எழுதுகிற அறிவியல் மேதை! குங்குமம் இதழில் இவர் கூறுகிறார்... தமிழர்கள் கடல்வணிகம் செய்தவர்கள் இல்லையென்று! 'கட்டுமரம்' என்கிற சொல்லையே - உலகத்திற்குக் கொடுத்த தமிழர்களுக்குக் கடல் வணிகம் தெரியாதாம்!

இன்னொரு அறிவியல் மேதை ஹாய் மதனிடம்... மல்லிகை மன்னன், மதுரை-17 என்ற நபரிடமிருந்து ஒரு கேள்வி...

ஆண்களுக்கு மட்டும் காம உணர்சி கடைசி வரையிலும் குறையாமல் இருப்பதன் மர்மம் என்ன? இப்படிக் காமம் தொடர்பான கேள்விகளுக்குக் கிளுகிளுப்பான பதில்களாக நூலகங்களில் திருடித் திருடி எழுதுகிற மதன்... ஒருமுறை இறையன்பு கேட்ட. "வந்தார்கள் வென்றார்கள் எழுதியது போல சோழப் பேரரசுவின் பின்புலத்தில் ஒரு வரலாற்று நாவல் எழுதினால் என்ன?" என்ற கேள்விக்கு, "தமிழர்களுக்கென்று ஏதடா வரலாறு...?" என்று எகத்தாளமாகப் பதில் சொன்னவர்.

நாடற்ற வந்தேறியாகிய இவரிடம் மிகப்பெரும் தமிழுணர்வாளரே தமிழர்களின் கருத்துருவாக்கச் சிந்தனையாளனாய் ஏற்றுக்கொண்டு கேட்ட கேள்விக்குக் கிடைத்த மரியாதையிது. தன் இனமக்களை ஊருக்குத் தள்ளிய புறம்போக்குச் சேரிகளில் வாழவைத்துவிட்டு எங்கிருந்தோ ஏய்க்க வந்த நாய்களையெல்லாம் வரவேற்று அழகழகாய் மாடமாளிகைகள் கட்டிக் கொடுத்து பிரம்மதேயங்களாய் ஆயிரமாயிரம் காணி நிலங்களை எழுதிக் கொடுத்து உழைக்கத் தேவையில்லையென்று உட்கார வைத்தே சாப்பிட வைத்த சோழ மன்னர்களுக்கு இவர்கள் காட்டுகிற நன்றியைப் பார்த்தீர்களா? ஆனால் இதற்காக மதனுக்குக் கிடைத்த மரியாதையை varalaru.com கண்டு மகிழ்க...

சுஜாதாவாக இருந்தாலும் மதனாக இருந்தாலும் ஞாநியாக இருந்தாலும்.. இவர்களை பயன்படுத்திக் கொண்டு ஆனந்த விகடன் தமிழர்களிடம் வணிகம் செய்து வயிறு கழுவுகிறதே தவிர, சமூகப் பொறுப்புணர்வோடு தமிழர்களுக்கென்று எந்த ஒரு நல்ல நோக்கத்திலும் பயன்பட நினைக்கவில்லை.

இவர்களைத் தமிழர்களிடம் நம்பகத்தனமான அறிவாளிகளாகக் காட்டி... அதன் வாயிலாகத் தமிழர்களின் பண்பாட்டை, வரலாற்றை, விழுமியத்தை, அரசியலை அழிப்பதே.. இடறி விடுவதே.. ஆனந்த விகடனின் சூழ்ச்சிப் பணியாக இருந்து வருகிறது. கம்பராமயணத்தை.. மகாபாரதத்தை அழகுத் தமிழில் வாலியை விட்டுத் தொடர்களாக எழுதி மகிழ்ந்த ஆனந்த விகடன் திருக்குறளை மட்டும் சென்னைத் தமிழில் எழுதி இழிவுபடுத்தியது (இதையே பகவத் கீதையை நகர தலித் மொழியில் நாம் எழுதியிருந்தால் என்ன துள்ளு துள்ளியிருப்பார்கள்!)

நகைச்சுவை என்கிற பெயரில் தமிழர்களின் புறநானூற்றை 'முறநானூறு' என்று எழுதி மகிழ்கிறது ஆனந்த விகடன். மன்னர்கால நகைச்சுவைத் துணுக்குகள் என்கிற பெயரில் தமிழர்களின் மூளைகளில் இவர்கள் செய்ய நினைக்கிற தொழிற்பாடுகளும்.. தமிழர்களின் வீரமரபை இழிவு செய்கிற செயலும்...புரியாமலில்லை.

எனவே, தமிழினம் மேம்படக் கூடாது என்கிற உள்நோக்கில் செயல்படும் ஆனந்த விகடன் பார்ப்பனர்களைப் பாதுகாப்பதில் மட்டும் விழிப்புணர்வோடு இருக்கிறது என்பதில் எனக்கு நேர்ந்த அனுபவமே சாட்சி.

ஹாய் மதன் கேள்விபதில் பகுதியில் இது கேள்வி...

பாரதியார் காதலித்திருக்கிறாராமே?

இதற்கு மதனின் பதில்...

மனைவியோடு வாழ்வதற்கே நேரமில்லாத பாரதிக்குக் காதலியா? எல்லாம் பொய்.

இந்தப் பதிலைப் பார்த்ததும் அதிர்ந்து போனேன். பாரதியார் தம் சுயசரிதையிலேயே தம் பிள்ளைப் பிராயத்துக் காதலைப் பற்றி உணர்வுப் பூர்வமாக எழுதியிருக்கிறரர். அவரது வரிகளையே ஆதாரமாகக் கொண்டு இந்தத் தவறான பதிலை மதனிடம் கூறி திருத்தி வெளிடுங்கள். ஒரு மகாகவியின் வரலாற்றில் பல இலட்சம் வாசகர்களுக்கு ஒரு பிழையைப் பதிவு செய்வது தவறு என்று மடல் எழுதி அனுப்பினேன்.

ஆனந்த விகடன் அந்தப் பிழையைத் திருத்த முன் வரவில்லை. அடுத்த வாரம் மதனுக்குத் தொலைபேசி செய்து "பதினோரு வயது பாரதி ஒன்பது வயது பெண்ணைக் காதலித்திருப்பதாக சுயசரிதையில் கூறியுள்ளார். எனவே, தங்கள் தவறான பதிலுக்குத் திருத்தம் வெளியிடுங்கள். அதுதான் நாகரிகம்" என்றேன்.

"வயசுக்கு வராத பெண்ணை பாரதி காதலித்திருக்கிறானா?" இதுதான் மதன் என்னிடம் கேட்ட கேள்வி. மதன் கேள்வி பதில் ஆனந்த விகடனின் வியாபாரத்திற்கான ஒரு பகுதி. மதனின் மீதான வாசகர்களின் நம்பகத்தன்மை குறைதல் கூடாது என்பதற்காகவே ஒரு மகாகவியின் வாழ்க்கை வரலாற்றை மறைக்கத் துடிக்கிறது ஆனந்த விகடன்!

இந்த ஆனந்த விகடனில்தான் ஞாநி அறிந்தும் அறியாமலும் என்ற பாலியல் மருத்துவ அறிவியல் தொடரை எழுதுகிறார். இந்தத் தொடரை வெளியிடும் தகுதி ஆனந்த விகடனுக்கு இல்லை என்பது எம் கருத்து. நோயுற்ற பெண்ணுக்கு மருத்துவம் பார்க்க வேண்டுமென்றால் மருத்துவரிடம் போகவேண்டுமே தவிர விபச்சாரத் தரகனிடம் அழைத்துப் போக வேண்டிய அவசியமில்லை. ஆனந்த விகடன் தமிழ்ச் சமுகத்தைச் சீரழிக்கத் துடிக்கிற விபச்சாரத் தரகுவேலையை பார்க்கிறது என்பதற்கு இதோ இந்தக் குறுங்கதையே எடுத்துக்காட்டு. 27.6.2007 ஆனந்த விகடனில் வந்தது.

"வா" என்றான் அவன்.

"ஊகூம்" என்றாள் அவள்.

"வா" என்றான் மீண்டும்.

"இல்ல" என்றாள்.

"வா" என்றான் திரும்பவும்.

"தப்பு" என்று முறைத்தாள்.

அதன் பிறகும் "வா" என்று இழுத்தான்,

"போடா" என்று அவன் தலையில் ஒரு குட்டு வைத்தாள்.

‘வ’ பக்கத்துல ‘¡’ போட்டிருந்தா தான் ‘வா’ன்னு இழுக்கணும், இது 'வ' என்று பொறுமையாக அந்த சிறுவனுக்குத் தமிழ்ப் பாடத்தைத் தொடர்ந்து நடத்தினாள் அந்த மிஸ்! ஒரு சிறுவனுக்கு ஒரு தமிழாசிரியை தமிழ் சொல்லிக் கொடுக்கும் காட்சியை வைத்தே இவ்வளவு வக்கிரமாக காம இச்சையைத் தூண்டி தமிழர்களிடம் காசு பார்க்கத் துடிக்கிற ஆனந்த விகடனா தமிழ்ச் சிறுவர்களுக்குப் பாலியல் கல்வியை நடத்தும் காகிதப் பள்ளிக் கூடமாக விளங்கப்
போகிறது. நம்புகிறீர்களா தமிழர்களே?

ஆனந்த விகடன் நமக்கு.. நம் தமிழர்களுக்கு ஏதேனும் செய்யுமென்று நம்புகிறீர்களா? இதோ 9.06.2007இல் ஆனந்த விகடனில் வந்த நகைச்சுவைகளைப் படியுங்கள்.

"என் கணவர் பெரிய கலா ரசிகர்னு எனக்கு நேத்துதான் தெரிஞ்சது"

“தெரிஞ்சதும் என்ன பண்ணினே?”

"கலாவை வேலைய விட்டு நிறுத்திட்டேன்".


"நம்மோட கள்ளத் தொடர்பு தெரிஞ்சுட்டதால். உன்னை வேலையைவிட்டு நிறுத்தப் போறா என் மனைவி!"

"கவலைப்படாதீங்க எஜமான். உங்களுக்கு வெளியில இருந்து ஆதரவு தர்றேன்!"

ஆனந்த விகடன் ஆசிரியர் அவர்களே! பத்திரிகையாளர் ஞாநி அவர்களே! உங்கள் வீட்டிற்கு வந்து பண்டம் பாத்திரம் கழுவி, உங்கள் அழுக்குத் துணிகளைத் துவைத்து. உங்கள் அழுக்குத் துணிகளைத் துவைத்து. உங்கள் அறைகளைக் கூட்டிப் பெருக்கி - அதிலிருந்து வருகிற வருமானத்தில் தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்கிறார்களே, அந்தப் பிள்ளைகளுக்கு அவர்களின் அம்மாக்களைப் பற்றி இவ்வளவு கேவலமாக அறிமுகப்படுத்துகிற ஆனந்த விகடனிலா எங்கள் பிள்ளைகள் பாலியல் அறிவைக் கற்றுக் கொள்ள வேண்டும்?

Vikatan photo தந்தை பெரியாரும் அண்ணல் அம்பேத்கரும் எங்களையெல்லாம் படியுங்கள் படியுங்கள் என்று போராடிப் படிக்க வைத்ததெல்லாம் இப்படி நீங்கள் எங்கள் தாய்மார்களைப் பற்றி கேவலமாக எழுவதைப் படிக்கத் தானா ஞாநி!

ஊருக்கெல்லாம் உபதேசம் சொல்லி ஓ போட வைக்கிற ஞாநியே! இப்படி சமூக பொறுப்பற்ற முறையில் பெண்களைக் கேவலப்படுத்தி பெண்களின் அரை நிர்வாணப் படங்களைப் போட்டு, படிக்கும் தமிழர்களின் காம இச்சையை வக்கிரமாகத் தூண்டிவிட்டு பணம் பறிக்கும் ஆனந்த விகடன் விற்பனையை அதிகப்படுத்துவதற்கான பச்சை மன்னிக்கவும். நீல வியாபாரத் தந்திரமே உங்களின் இந்தப் பாலியல் அறிவியல் மருத்துவத் தொடர்.

"ஒரு மருத்துவர், மருத்துவத்துக்கான கல்வித் தகுதி இல்லாத ஒருவரை, அதுவும் சிறுவனை.. அறுவை சிகிச்சை செய்யவோ, அதற்கு உதவியாக இருக்கவோ அனுமதிப்பது எந்த விதத்திலும் நியாயமாகாது. அது மருத்துவத் துறையின் அற நெறிகளுக்கு மட்டுமல்ல... மானுட அறநெறிகளுக்கும் விரோதமானது."

இப்படி... 4.7.2007 ஆனந்த விகடனில் சொல்லியிருப்பது வேறு யாருமென்று.. பத்திரிகையாளர் ஞாநி அவர்களே. ஞாநி அவர்களே! இதே கருத்து தங்களுக்கும் பொருந்தும் இல்லையா! பாலியல் அறிவியல் தொடர் எழுதுவதற்கான மருத்துவக் கல்வியைத் தாங்கள் எந்த மருத்துவக் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றுள்ளீர்கள்?

தாங்கள் எழுதும் பாலியல் அறிவியல் கருத்துகளில் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால்.. மருத்துவப் பட்டம் பெறாத தாங்கள் சொல்வதை நம்பி எப்படி தெளிவு பெறுவது? மருத்துவத் துறையின் அறநெறிகளுக்கும் மானுட அறநெறிகளுக்கும் இது மட்டும் விரோதமாகாதா? ஆனந்த விகடன் போன்ற பத்திரிகைகளும்.. ஞாநி போன்ற பத்திரிகையாளர்களும்.. திரைப்பட, தொலைக்காட்சி ஊடகங்கள் அனைத்தும் தமிழர்களிடம் மட்டும்.. பாலியல் சார்ந்த காமத்தை வக்கிர உணர்ச்சியாக வைத்து வணிகம் செய்வதற்கான காரணம் என்ன?

Rajini ஒரே காரணம்தான்...

கணவனும் மனைவியும்.. தனித்துப் படுக்க ஒரு வீடு கிடைக்காத, ஓர் அறை கிடைக்காத குந்தக் குடிசையில்லாத.. புறம்போக்குகளாய்ப் பெரும்பகுதித் தமிழர்கள் வாழவேண்டியிருப்பதன் சோகம்தான் இதற்கு அடிப்படைக் காரணம். இதற்கான அரசியல் விழிப்புணர்வு பெற்று எம் தமிழ் இளைஞர்கள் சமூகப் போராளிகளாக மாறிவிடக்கூடாது.. என்றும் இவர்கள் இரசிகர் மன்ற உறுப்பினர்களாகவே இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்.. இவர்கள் இந்த மூன்றாம் பால் வியாபாரத்தை நம்மிடம் மும்முரமாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இல்லையென்றால்.... ரஜினி குறித்து எழுதுகிற ஆனந்த விகடன், ‘சினிமா ஓகே. அரசியல்?’ என்று எழுதுமா?(4.06.2007)

ஏன் தமிழ்நாட்டை தமிழர்களே ஆளக்கூடாதா? நீங்கள்தான் அதிகார மய்யமாக இருக்க வேண்டும், இல்லையென்றால் நடிகர்கள்தான் ஆளவேண்டுமா? அரசியலுக்கு ரஜினியை அழைக்கிற ஆனந்த விகடனே.. பல்கலைக் கழகம் கட்டி... பள்ளிகள் கட்டி.. ஏழைகளுக்கு இலவசக் கல்வி கொடுக்க.. எடுக்கப்பட்ட சிவாஜி படத்தில் நடித்த ரஜினி அவர்களின் பணத்தில் (அதாவது அவரது உயிருக்குயிரான எம் தமிழ்ச் செல்வங்கள் கொடுத்த பணத்தில்) கட்டப்பட்ட.. 'ஆஸ்ரம்’ பள்ளியில் இலவசக் கல்விபெறும் மாணவர்களின் பட்டியலை.. அல்லது எந்தெந்த ரஜினி ரசிகர் மன்ற பிள்ளைகள் படிக்கிறார்கள் என்கிற பட்டியலை.. அல்லது ஒரு குழந்தைக்கான ஓர் ஆண்டு கட்டணம் எவ்வளவு என்கிற பட்டியலையாவது ஆனந்த விகடன் கேட்டு வெளியிட்டுவிட்டு .. அவரை அரசியலுக்கு அழைக்குமா? இது என்ன ஆனந்த விகடன் ஆசையா? இல்லை அக்ரகாரத்து ஆசையா? இரண்டாயிரம் ஆண்டுகளாக எங்களை ஏமாற்றிப் பிழைத்தது போதாதா?

விடுங்கடா சாமி.

(நன்றி: நமது தமிழ்மண், சூலை 2007 இதழ்)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com