Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கடிதம்

டாக்டர்.கலைஞர் அவர்களுக்கு
அறிவழகன் கைவல்யம்


(அண்ணன் பேரறிவாளன் விடுதலை வேண்டி, தமிழ் இளைஞர்களின் சார்பாக, குருதியால் எழுதப்பட்டு தமிழக முதல்வர் கலைஞர் அவர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் நகல் இது, உங்களால் இயன்ற வரையில் இந்தக் கடிதம் தமிழ் மக்களைச் சென்றடையச் செய்வீர்களேயானால் அது ஒரு குற்றமற்ற மனிதன் என்று முறையிடுகின்ற மனிதனின் குற்றச்சாட்டுகளை மறுசீராய்வு செய்ய வழிவகுக்கும், செய்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்.......)

Perarivalan மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய தமிழின் தலைமகனாகிய, வாழுகிற தமிழின் கடைசித் தலைவர் என்று நாங்கள் நம்புகிற, தமிழகத்தின் முதல்வரும், இந்திய அரசுகளின் செயல்பாடுகளை வழிநடத்துகிற ஆற்றல் மிக்க ஐயா டாக்டர்.கலைஞர் அவர்களுக்கு,

திராவிட முன்னேற்றக் கழகம் என்கிற ஒரு மிகப்பெரிய சக்தியை, அதன் கொடியின் நிறத்தை நீங்கள் எப்படி உங்கள் குருதியால் உருவாக்கினீர்களோ, அதே வழிவந்த உங்கள் தமிழ்ப் பேரனின் குருதியில் தான் இந்தக் கடிதம் எழுதப்படுகிறது. அன்று அண்ணாவுக்காக, நீங்கள் எழுதிய இரங்கற்பாவைப் போல, நீதி மறுக்கப்பட்ட இன்னொரு அண்ணனுக்காக எழுதப்படுகிற கண்ணீர்க் கடிதம். விலைமதிக்க முடியாத மனித உரிமைகளின் மறுப்பையும், மீறலையும் சந்தித்த அண்ணனின் அடக்க முடியாத உணர்வுகளால் உந்தப்பட்டு எழுதப்படும் மன்றாடல் கடிதம்.

மறுக்கவும் மறைக்கவும் முடியாத துன்பம்தான் மறைந்த முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் மரணம். அவரது மறைவுக்காக, அவர் கொல்லப்பட்ட விதத்துக்காக மனித நேயம்மிக்க மனிதர்களாகிய நாம் அனைவரும் கலங்கிப் போனோம், கண்ணீர் விட்டோம். அவரைக் கொன்றவர்கள் யாராக இருப்பினும் தண்டனைக்குரியவர்கள், குற்றவாளிகள் என்பதில் நமக்கு ஒருபோதும் மாற்றுக் கருத்துக் கிடையாது.

ஆனால் சட்டத்திற்குப் புறம்பாகக் கொடுமையான மன நெருக்கடிகளுக்கும், கடும் தாக்குதல்களுக்கும் ஆளாக்கப்பட்டு ஒரு பொய்யான ஒப்புதல் வாக்குமூலத்தின் மூலம், இன்று தூக்குக் கயிறுகளின் இறுக்கத்தில் இருந்து நீதி கேட்டுக் கடிதம் எழுதிய அண்ணன் பேரறிவாளனுக்கு நீதிகேட்டு, உள்ளக் குமுறல்களில் இருக்கும் தமிழ்த்தம்பிகளின் சார்பில் எங்கள் குடும்பத்தின் மூத்த தலைவரிடத்தில் முறையிடும் கடிதம்.

தூக்குக் கயிறுகளுக்கு அஞ்சி நடுங்கும் வழிவந்த இனமல்ல இந்தத் தமிழினம் என்பது எங்களை விட உங்களுக்கு நன்றாகவே தெரியும், விடுதலைக்கு முன்னரே வெள்ளையரின் அடக்குமுறைகளுக்கு இரையாகி மகிழ்வோடு தூக்கு மேடைகளின் கயிறுகளை முத்தமிட்டு மாலையாக்கி மகிழ்ந்தவர் பட்டியல் நம்மிடம் உண்டு.

தன் தமிழினம் அழியாமல் இருக்கப் போராடும், அதன் விடுதலையை வென்றெடுக்கப் பாடுபடும் போராளிகளை இளங்கன்றாய், பயமறியாது, மனதளவில் ஆதரித்த குற்றம்தான் அண்ணன் பேரறிவாளன் செய்துவிட்ட மாபெரும் குற்றம். சட்டங்கள் அறியாது, விதிமுறைகள் தெரியாத பத்தொன்பது வயதில் விடுதலைப் புலிகளை அதன் தலைவர்களை உணர்வுள்ள எல்லாத் தமிழ் இளைஞர்களையும் போல மனதில் இருத்தியது ஒன்றுதான் அண்ணன் பேரறிவாளன் செய்த அழிக்க முடியாத குற்றம்.

நீதிமன்றங்களும், நீதிஅரசர்களும் ஒருபுறம் இருக்கட்டும் ஐயா, தமிழினத்தின் தலைவரே, முறையீடு இப்போது எங்கள் இறுதித் தலைவராக நாங்கள் எண்ணுகிற உங்கள் கைகளில் வந்துவிட்டது. விட்டுப் போன விடுதலைக் காற்றும், மறுதலிக்கப்பட்ட மனுக்களின் பாரத்தையும் மறுசீராய்வுகளாய் நீங்கள் மனம் திறந்து படிக்கவேண்டும். குற்றங்கள் புலப்பட்டால் சட்டங்கள் பாயட்டும். குற்றவாளி இல்லை என்று சட்டங்கள் சொல்லி விட்டால், கடைத்தேற்ற முடியாத, துடைக்கவும் முடியாத ஒரு தாயின் பதினாறு ஆண்டு காலக் கண்ணீர்ப் பயணத்தை நீங்கள் பரிவோடு பார்க்க வேண்டும். திருமணத்தைக் கூட தவிர்த்துவிட்டுத் தன் சகோதரனுக்காய் வாடிக் கொண்டிருக்கும் ஒரு தமிழ்ச் சகோதரியின் வாழ்வை வளமாக்குவதற்கு உங்களைத் தவிர இவ்வுலகில் யாராலும் இயலாது ஐயா.

தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளின் சாரத்தை அறிவதற்கே அவனுக்குப் பத்து ஆண்டுகள் ஆகிவிட்டது. முறையீடுகளைச் செவிமடுக்காத மறுக்கப்பட்ட நீதிகளோடு மரணத்தை நோக்கி நிற்கின்ற அண்ணன் உயிர்ப்பிச்சை கேட்டுக் கடிதம் எழுதவில்லை. நீதி மறுக்கப்பட்டது என்கிற மனவேதனையோடு கடிதம் எழுதுகிறான். செய்யாத குற்றத்துக்காய், வெங்கொடுமைச் சாக்காட்டில் கதிரவனைக் கூடக் காணக்கிடைக்காத கொடுஞ்சிறை வாசம் என் அண்ணனுக்கு நிகழ்ந்ததென்றால் அதனைக் கண்டும் காணாமல் வாழ நினைக்கிற வெற்றுத் தம்பிகள் அல்லவே நாங்கள். தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் வார்த்துக் கொடுத்த தம்பியின் ஆட்சியில் வாழும், தமிழ்த் தம்பிகள் தானே நாங்கள்.

தமிழினத்தைக் காக்கின்ற அல்லது காப்பதாக நம்புகின்ற ஒரு போராளிக் குழுவின் தலைவரை மானசீகமாக ஏற்றுக் கொண்டது மட்டும் தான் அவன் செய்த மாபெரும் குற்றம் என்றால், அவனை இப்போதே தூக்கில் இட்டு விடுங்கள் ஐயா. செய்யாத குற்றத்துக்காய் சிறை வாழும் தமிழன் என்று எந்தக்கணமும் உங்கள் எண்ணத்தில் வருமென்றால், எங்களுக்கு இன்னுமும் நம்பிக்கை இருக்கிறது ஐயா, அண்ணாவின் தம்பி ஆட்சிக் காலத்தில் அவன் வெளியில் வந்து உதயசூரியனின் கதிர்களை உள்வாங்குவான் என்று.

வீதிகளையும், மக்களையும் மட்டுமன்றி தனக்கான வழக்குரைஞர்களையும், கனவுகளோடு பெற்றெடுத்த பெற்றோரையும் காண்பதற்குக் கூட ஏங்கி நிற்கிற ஒரு அண்ணனின் விடுதலைக்காய் எழுதப்படும் இந்தக் கடிதம் உங்கள் மனதை வென்று விடுமேயானால் அது தமிழின் வெற்றி மட்டுமில்லை, ஒட்டு மொத்தத் தமிழினத்தின் உயர்வான வெற்றி ஐயா.

முகம் தெரியாத அண்ணனின் விடுதலைக்காக
தமிழ்த் தம்பிகளின் சார்பாக
கை.அறிவழகன்
பெங்களூரில் இருந்து.

- அறிவழகன் கைவல்யம்([email protected])

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com