Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கட்டுரை

மலரட்டும் தமிழீழம், அதில் மலரட்டும் மனிதநேயம்
அறிவழகன் கைவல்யம்


உலகம் எங்கும் புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் மக்கள் திளைத்து வருகிறார்கள், வாழ்த்துக்களை வழங்கி மகிழ்கிறார்கள், பரிசுகளைக் குவிக்கிறார்கள், நம்பிக்கையோடு வருகிற புதிய புத்தாண்டை வரவேற்கத் தயாராக இருக்கும் மக்கள் கூட்டத்தின் நடுவே நாம் மட்டும் அமைதியாய் எந்த ஆராவராமும் இன்றி வழமையான மனக் கவலைகளுக்கிடையில் விழுந்து கிடக்கிறோம். எம்மால் எந்தக் கொண்டாட்டங்களிலும் பங்கு கொள்ள இயலாது; எம்மால் எந்த ஒரு உலகின் மகிழ்வையும் பகிர இயலாது; உலகின் மூத்த குடி என்கிற பெருமைக்குரிய எமது இனம் மட்டும் உலகில் கடும் இருளில், கட்டாயமாகத் திணிக்கப்பட்ட ஒரு போரின் மரண வாயிலில் நின்று கொண்டிருக்கிறது.

eelam_death எமது மக்கள் சொல்லொணாத் துயரில் நித்தம் விழுந்து துடிக்கிறார்கள்; சொந்த வீடுகளை இழந்து, சொந்த பந்தங்களை இழந்து, விடுதலைக் காற்றின் குளுமையை இழந்து எமது இனம் கடந்த அறுபது ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடிக் கொண்டே இருக்கிறது; உலகின் எல்லா இனத்து இளைஞர்களைப் போலவே எங்கள் இளைஞர்களும் வாழ்வின் இன்ப துன்பங்களை, காதலின் மேன்மையை, கவிதையின் சுவையை, கல்வியின் பயனை, அறுசுவை உணவுகளை நுகரவே விரும்புகிறார்கள். ஆனால் அவற்றில் ஒன்றும் கைகூடாமல் கானகங்களில் ஒரு விடுதலைப் போரின் வரலாற்றை தங்கள் குருதியால் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

உலகின் எல்லாப் பெண்களையும் போலவே தங்கள் மணமகனைப் பற்றிய கனவுகளிலும், வசந்தமான வாழ்வின் இளமைப் பக்கங்களையும் பற்றிய நினைவுகளிலும் வாழ வேண்டிய எங்கள் பெண்கள் உயிர் பிழைத்து வாழ்வதைப் பற்றியும், தங்கள் கணவன்மார் உயிரோடு திரும்புவார்களா என்கிற மிதமிஞ்சிய அச்சத்தோடும் கனன்று கொண்டிருக்கிறார்கள். தாய்மையின் மேன்மையை இந்த உலகுக்கு அள்ளி வழங்கிய எங்கள் தாய்மார் உடுத்துவதற்கு சரியான உடையும், சரிவிகித உணவும் இன்றி வாடுகிறார்கள்.

மழலைக் கனவுகளோடு உலகக் குழந்தைகள் எல்லோரும் பள்ளிகளுக்குச் சென்று கொண்டிருக்கும் வேளைகளில், எம் குழந்தைகள் தூக்குக் கயிற்றில் உயிரோடு தொங்கவிடப்படுகிறார்கள்; தார் சாலைகளில் தலை உடைத்துக் கொல்லப்படுகிறார்கள்; வானூர்தித் தாக்குதலில் எந்தச் சலனமும் இன்றி மடிந்து போகிறார்கள்; துப்பாக்கி முனைகளால் பிறப்புறுப்புகளில் காயப்படுத்தப்பட்டு கிழித்தெறியப்படுகிறார்கள்.

இவற்றை எல்லாம் பார்த்துக் கொண்டு இதயத்தின் ஓரத்தில் கசியும் எங்கள் வலியைச் சுமந்து கொண்டு தான் நாம் ஒவ்வொரு ஆண்டையும் கடந்து வந்திருக்கிறோம். எங்கள் குழந்தைகளை, எங்கள் தாய்மாரை, நடக்க முடியாத எங்கள் முதியவர்களை, பால் மனம் மாறாத எங்கள் பச்சிளம் குழந்தைகளை அவர்கள் படுகின்ற சொல்லொணாத துயரத்தை உலகம் செவி கொடுத்துக் கேட்க மறுக்கிறது. உலகின் வலிமை பொருந்திய நாடுகள் இந்தக் கொடுமையான நிகழ்வை வேடிக்கை பார்க்கின்றன. இன்னும் மேலேறி ஆயுதங்களை வழங்குகின்றன; மனித நேயம் மிக்க எங்கள் இனத்தை அழிக்க மறைமுகமாகப் போர் தொடுக்கின்றன.

எங்கள் இனத்து இளைஞர்களின் விடுதலைப் போரை, தங்கள் உரிமைகளைக் காக்கவும், தங்கள் மீது திணிக்கப்படும் கொடுமைகளை எதிர்கொள்ளவும் ஆயுதம் ஏந்துவதற்கான சூழலில் தள்ளப்பட்ட எமது வீரத்தை ஊடகங்கள் தீவிரவாதம் என்றும், பயங்கரவாதம் என்றும் கொச்சைப்படுத்துகின்றன, ஆனால், எங்களுக்குத் தெரியும் உலகம் ஒருநாள் திரும்பிப் பார்க்கும் அளவிற்கு வலிமையான - மற்றவர்களுக்கு முன்னோடியான ஒரு சமூகமாக நாங்கள் மாறுவோம் என்று. அதற்கான ஆற்றலும், அறிவும் எங்கள் தமிழினத்திற்கு நிறையவே இருக்கிறது.

கருத்தியல் ரீதியான ஒரு விழிப்புணர்வை உருவாக்கவே தமிழர்களாகிய நாங்கள் இத்தனை கடுமையான நெருக்கடிகளுக்கு ஆளாகிறோம் என்றால், அடர்ந்த கானகங்களில் வாழும் எமது வீர மறவர்களின் போராட்டம் எத்துனை சிக்கல் மிகுந்ததாக இருக்கும் என்பதை எத்தனை தூரத்தில் இருந்தாலும் நாங்கள் உணர்கிறோம். அவர்களின் வலியில் நாங்கள் வெம்பித் துடிக்கிறோம். வழமை போலவே சில கல்நெஞ்சக்காரர்கள் பல்வேறு காரணிகளை எடுத்துக் கொண்டு எங்கள் வாதங்களைச் சிதறடித்து விடலாமா என்று கனவு காண்கிறார்கள். கடைசித் தமிழ் இளைஞன் இருக்கும் வரையில் அவர்களால் எமது விடுதலைப் போராட்ட வடிவைத் துடைக்க முடியாது. செத்து மடியும் ஒவ்வொரு தமிழ் மறவனும், பத்துப் போராளியாய் வீறு கொண்டு எழுவான்.

தங்கள் அடங்காத வெறியால் இன்று எம்மை மீளாத துரத்தில் ஆழ்த்தி இருக்கும் சிங்கள பேரினவாத அரசுகள் ஒரு போதும் எங்கள் இளைஞர்களை வெற்றி கொள்ள முடியாது. ஏனென்றால் உயிருக்குப் பயந்து ஓடி ஒளியும் ஈனர்கள் அல்ல எங்கள் இளைஞர்கள். தலைமுறைகளை வாழ வைக்க தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்யும் தயாராக இருக்கும் எண்ணற்ற தமிழ் இளைஞர்கள் உருவாகிக் கொண்டே இருக்கிறார்கள்; இன்னும் வருவார்கள். இலங்கையின் நிலப்பரப்பில் மட்டும் நடக்கும் இந்த விடுதலைப் போராட்டத்தை உலகின் தமிழர் வாழும் பகுதிக்கெல்லாம் மடை மாற்றும் நிலைக்கு நாங்கள் போவதற்குள், அமைதியை, சமாதானத்தை விரும்பும் எம் மக்களுக்கு அமைதியை வழங்கி விடுங்கள்.

இந்தப் புத்தாண்டை உலகெங்கும் வாழும், தமிழர்கள் தமிழீழம் மலரப் போகும் நல்லாண்டாய் எதிர் நோக்குவோம், சூளுரைப்போம். இது எங்கள் ஆண்டென்று, என்ன விலை கொடுத்தாலும் எங்கள் விடுதலையை வென்றெடுப்போம்.

மலரட்டும் தமிழீழம், அதில் பூக்கட்டும் மனித நேயம்.

- அறிவழகன் கைவல்யம்([email protected])

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com