Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கட்டுரை

இவர்களில் யார் தேசத் தந்தை: டாக்டர்.அம்பேத்கரா? காந்தியாரா?
அறிவழகன் கைவல்யம்


"தேசத்தந்தை" என்று அழைக்கப்படுவதற்கு உண்மையில் இந்த இருவரில் யாருக்கு அதிகத் தகுதிகள் இருக்கிறது என்கிற என்னுடைய கேள்விக்கு விடை கிடைக்க ஏறத்தாழ பத்து ஆண்டுகள் தேவைப்பட்டது. அதுவும், இந்த நன்னாளில் அதற்கான விடையை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் இரட்டிப்பு மகிழ்ச்சி.

Ambedkar இன்று இந்தியா முழுவதும், " தேசப் பிதா" என்கிற காந்தியாரின் மீதான ஒரு போலியான உருவகம் பள்ளிக்கூடங்களில் இருந்தே தொடர்ச்சியாக செய்யப்பட்டு வருகிறது. வழக்கம் போலவே பார்ப்பனீய ஊடகங்களின் வாயிலாக நிலை நிறுத்தப்படும் இந்த " போலிப் பிம்பம்", தொடர்ச்சியான நமது அடுத்த தலைமுறையை அடையக்கூடாது என்ற நோக்கத்தில் நான் உறுதியாக இருக்கிறேன்.

சரி, நண்பர்களே, ஒரு நாட்டின் தந்தை என்று அழைக்கப்படுவதற்கு என்ன தகுதிகள் வேண்டும்?

"நீங்கள் அந்த நாட்டின் ஆதரவற்ற மக்களுக்கு, அவர்களின் உண்மையான விடுதலைக்குப் போராடி, அதில் ஓரளவுக்கு வெற்றியும் பெற்றிருக்க வேண்டும்" அப்படியென்றால், காந்தியார் இதனைச் செய்யவில்லையா என்கிற உங்கள் கேள்விக்கான பதில் "இல்லை" என்று பல்வேறு ஊடக, அரசுக் கட்டமைப்புகளின் உடைந்த சிதிலங்களில் இருந்து ஒரு மெல்லிய இழையாய் வெளியே வரும்.

"வெறும் நிலப்பரப்பு நோக்கிய விடுதலைப் போராட்டம்" மற்றும் "அடிப்படை அடிமைத் தளைகளில் இருந்து வெளியேறும் சமூக, அரசியல் அதிகாரம் நோக்கிய விடுதலைப் போராட்டம்" என்றும் இரு கூறுகளாகப் பிரிந்து கிடக்கும் தேசத்தந்தை ஆவதற்கான தகுதிச் சான்றுகளில் காந்தியாரிடம் இருந்தது முந்தையது.

Gandhi ஆனால், தேசியம் சார்ந்த விடுதலைப் போராட்டத்தின் ஊடாக ஒடுக்கப்பட்டு, வாழ்விழந்து கிடந்த அடிமை மக்களின் விடுதலையை நோக்கி எந்தநேரமும் சிந்தனை செய்த டாக்டர்.அம்பேத்கர் இன்றைக்கு பார்ப்பனீயத்தின் பித்தலாட்டங்களுக்கு இரையாகி ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர் என்கிற அளவில் குறுக்கப்பட்டு விட்டார். சாதீயத்தின் மீதான அவரது கடுமையான நிலைப்பாடும், இந்துமதம் என்கிற சாக்கடையின் மீதான முழுமையான வெறுப்புணர்வும் அவரது உண்மையான "தேசத் தந்தை" உருவகத்தை பார்ப்பன வடிவங்களில் சிதைக்க முனைந்தன. ஒருவேளை அவர் இந்து மதத்தின் உயர் பீடங்களை தொழுகை செய்யும் முன்னாள், இந்நாள் குடியரசுத் தலைவர்களை முன்பற்றியிருந்தால் "தேசத் தந்தை" ஆகி இருக்கலாமோ என்னவோ?

வெறும் அரசியல் அதிகாரங்களுக்கான பார்ப்பனப் போட்டியில் ஆங்கில அரசுடனனான அரசியல் தரகராக இருந்த காந்தியார் இந்தியாவின் விடுதலை என்கிற நோக்கை விடவும் ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக விடுதலையை எதிர்ப்பதில் முதன்மையாக இருந்தார் என்பதை வரலாற்றின் பக்கங்களை நடுவு நிலை தவறாமல் புரட்டுபவர்களுக்கு நன்றாகவே புரியும்.

மாறாக ஒரு தேசத்தின் பெரும்பான்மை மக்களுக்கான சமூக, அரசியல் மற்றும் கல்வியை நோக்கிய உண்மையான விடுதலைப் போராட்டத்தில் மட்டுமன்றி, தேசிய விடுதலையிலும், தொழிற்சங்க அமைப்புகளின் உரிமைகளுக்கும் உரக்கக் குரல் எழுப்பிய, வாழ்வின் எந்த ஒரு பகுதியிலும் தனி மனித ஒழுக்கம் தவறாத போராளியாக வாழ்ந்த "டாக்டர்.அம்பேத்கர் தான் இந்த தேசத்தின் உண்மையான தந்தை".

பல்வேறு காலகட்டங்களில், வரலாற்றின் பக்கங்களில் அவரே வெளிப்படுத்தி இருக்கும் கருத்துக்கள் அவரை இந்த உயர்ந்த நிலையை நோக்கி தானியக்கமாக எடுத்துச் செல்லும். 1929 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் நாள், ரத்னகிரி மாகாண உழவர் மாநாட்டில், சிப்லம் என்னும் ஊரில் உரையாற்றும் போது பின்வருமாறு கூறுகிறார்,

" ஒடுக்கப்பட்ட மக்களின் மீதான வன்முறைகளும், அடக்குமுறைகளும், கோத்தி முறையும் ஒழிக்கப் பட வேண்டும் என்றால், சட்ட மன்றங்களுக்கு நீங்கள் சரியான மனிதர்களை அனுப்பும் கடமையை சரியாகச் செய்ய வேண்டும்" மேற்சொன்ன இந்த தேசத்தந்தையின் வார்த்தைகளை இன்று வரை நாம் கடைபிடிக்க இயலாமல் போனதற்கு ஒரு வகையில் இரட்டை வாக்குரிமை முறையை எதிர்த்து உண்ணா நோன்பிருந்து பயமுறுத்திய போலி தேசத்தந்தை காந்தியாரும் ஒரு காரணம்.

1930 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் நாள் புனேயில் நடைபெற்ற " சாந்த சமாஜ்" என்னும் அமைப்பின் கூட்டத்தில் உரையாற்றிய அண்ணல், "சம உரிமைகளைப் பெற வேண்டுமென்றால், சமூக உரிமைகளை மீட்டெடுக்க வேண்டுமென்றால், இப்போதைய் விடவும் அதிகமாகப் போராடுங்கள், நன்கு இணைந்து செயல்படுங்கள்" என்று முழங்கினார்.

1933 ஆம் ஆண்டு பிப்ரவரி 18 ஆம் நாள் தானேயில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில், “ஒரு போதும் விதியை நம்பாதீர்கள், உங்கள் வலிமையை நம்புங்கள்" என்றார். இவை எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு எளிமையான அழகான வழியைச் சொன்னார், அது வேறொன்றுமில்லை, "இந்து மதம் என்கிற சாக்கடையை புறக்கணியுங்கள்" என்பது தான். இந்த ஒரு காரணமே போதும் அவரை நாம் இந்த தேசத்தின் தந்தையாகக் கொண்டாடுவதற்கு. ஏனென்றால், இன்று ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக, பொருளாதார, கல்வி மற்றும் அரசியல் அடிமைத் தனங்கள் துவங்குகிற மைய ஊற்று இந்துமதம் என்கிற சாக்கடை தான்.

இப்படித் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் இரவுபகலாய் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கு மட்டுமன்றி ஒட்டுமொத்த மனிதகுலம் தழைப்பதற்கும், இந்தியக் குடியரசின் சட்ட முன்வடிவங்களை செதுக்கியதற்கும் "டாக்டர்.அம்பேத்கர் அவர்களைத் தான் நாம் தேசத் தந்தை என்று குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும்", காந்தியார் வேண்டுமானால் டாக்டர்.அம்பேத்கர் என்கிற அந்த உண்மையான தேசத் தந்தையின் பின்னால் ஒரு தேசக் குழந்தையாகவோ, மற்ற உறவாகவோ இருந்து விட்டுப் போகட்டும்.

ஒரு மாமேதையின் நினைவு நாளில், அவரது கனவுகளை மெய்ப்பிக்க ஒன்றிணையும் உறுதி கொள்வோம், நம் சகோதரச் சண்டைகளை விடுத்து உண்மையான விடுதலை நோக்கி விரைவோம்.

- அறிவழகன் கைவல்யம்([email protected])

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com