Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கட்டுரை

ஈழச்சிக்கலில் தமிழுணர்வு - ஒரு பார்வை
அறிவழகன் கைவல்யம்


Prabakaran தமிழ்த்தேசிய முழக்கங்கள் எல்லாம், சிறைக் கம்பிகளின் அழுத்தத்திற்குப் பயந்து இந்திய இறையாண்மை பற்றிப் பேசியது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானபோது ஒரு பக்கம் அழுவதா இல்லை சிரிப்பதா என்கிற இனம் புரியாத ஒரு கலவையான உணர்வு எனக்குள் உருவாகியது. கட்டுரையின் சாரத்திற்குள் நுழைவதற்கு முன்னர், நாம் வாழுகின்ற ஒரு நிலப்பரப்பின் அரசியல் உணர்வையும், புரிந்துணர்வையும் நமது இளைஞர்களுக்குள் உருவாக்க வேண்டிய கடமை உணர்வுடன் இந்தக் கட்டுரையை வடிக்கிறேன். ஊடகங்களில் எழுதும் நண்பர்களுக்கும் இதே வேண்டுகோளை விடுக்கிறேன்.

விரும்பியோ, திணிக்கப்பட்டோ, இந்திய தேசியம் என்கிற அமைவுக்குள், அதன் சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்பட்டு வாழும் ஒரு நிலவியல் அமைப்பிலும், அது சார்ந்த அரசியல் இயங்கியலுக்கு இடையிலும் நாம் அனைவரும் ஒருங்கிணைக்கப்பட்டிருக்கிறோம், மக்களாட்சித் தத்துவம் என்கிற ஒரு வலுவான அரசியல் அமைப்பில்தான் நாம் வாழ்கிறோம், கம்யூனிச, சோஷலிஷ நாடுகளில், அதன் இயங்கியலில் கிடைக்கப் பெறாத பல்வேறு உரிமைகளை மக்களாட்சி என்கிற ஒரு உயரிய அரசியல் இயங்கியலின் மூலம் நம்மால் பெறமுடியும் என்பது ஒரு அசைக்கமுடியாத உண்மை.

நிறை, குறைகளற்ற எந்த ஒரு அறிவியல் இயங்கியலும் உலக வரலாற்றில் மட்டுமன்றி இந்தப் பேரண்டத்தின் மீதும் செயல்பட்டதுமில்லை, இனி செயலாக்கம் பெறுவதற்கான வாய்ப்புகளும் இல்லை. மிகப்பெரும் போராட்டங்களில் மக்கள் புரட்சியில் பெறப்பட்ட கம்யூனிசத் தத்துவங்களால் உருவாக்கப்பட்ட அரசியல் இயங்கியல் "சோவியத் யூனியன்" என்கிற மிகப்பெரிய நிலப்பரப்பில் தோல்வியுற்ற போது அந்த இயங்கியலில் குறைகள் மட்டும் வெளிவரவில்லை, உலகின் சமநிலை என்பது கிடைக்கப்பெறாத ஒரு நிலைப்பாடு என்பதும் நமக்குப் புரிந்தது. அதனை 1999 இல் "சோவியத் யூனியன்" என்கிற அமைப்பைக் கலைத்து உரையாற்றிய "மிகேஅல் கோர்பசேவ்" பின்வருமாறு விளக்கினார்,

"The reason could already be seen: The society was suffocating in the vise of the command-bureaucratic system, doomed to serve ideology and bear the terrible burden of the arms race. It had reached the limit of its possibilities. All attempts at partial reform, and there had been many, had suffered defeat, one after another. The country was losing perspective. We could not go on living like that. Everything had to be changed radically".

சமநிலையிலான வாழ்வியல் இயங்கியலை இயற்கை தன்னுடைய தேர்வாகக் கொள்ளவில்லை, அப்படி இயற்கை தன்னுடைய தேர்வைக் கொண்டிருக்குமானால், "சுழிய நிலை" (0 VALUE) என்கிற உயிர்ப்பற்ற ஒரு அறிவியல் கோட்பாட்டில் தான் நாம் அல்லது நம்மை உள்ளடக்கிய புவி இருந்திருக்க வேண்டும்.

சரி, இயற்கையின் இயங்கியலுக்கும் இந்தக் கட்டுரைக்கும் என்ன தொடர்பு என்று நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது. இருக்கிறது நண்பர்களே, "தகுதியானவை மட்டுமே எஞ்சி நிற்கும்" (THE FITTEST WILL SURVIVE - CHARLES DARWIN) என்கிற சார்லஸ் டார்வினின் கோட்பாடு தான் இயற்கை தனது தனது தேர்வாகக் கொண்டிருக்கிற ஒரு கோட்பாடாகும். இனமாகட்டும், உயிரினக் குழுக்கள் ஆகட்டும், மொழியாகட்டும் இல்லை, கோட்பாடுகளாகட்டும் தகுதியானவை மட்டுமே எஞ்சி நிற்கமுடியும் என்பது அறிவியல் ஆய்வுகளால் உறுதி செய்யப்பட்ட உண்மை.

இதன் அடிப்படையில், உலக அரசியலை கூற்றியலுக்கு உட்படுத்தினால் ஆசிய நிலப்பரப்புகளில், இந்திய தேசியம் என்கிற ஒரு கட்டமைப்பு உருவாக வேண்டிய கால கட்டாயமும், காரணிகளும் இருந்தன, விடுதலைக்கு முன்னர் நூறு ஆண்டுகள் பின்னோக்கிப் பயணித்தால் இந்தியா என்கிற தேசியக் கட்டமைப்புப் பற்றி நீங்கள் அப்போதைய நகைச்சுவைக் கதைகளில் கூட அறிந்து கொள்ள வாய்ப்பில்லை. நல்ல வேலையாக அவசர கோலத்தில் உருவாக்கப்பட்ட இந்தக் கட்டமைப்பு மக்களாட்சித் தத்துவங்களைப் பின்பற்றும் தலைவர்களை அந்த நேரத்தில் பெற்றிருந்தது, பல்வேறு இன, மொழி, கலாச்சார, கலை அடையாளங்கள் ஒரு குடையின் கீழ்க் கொண்டு வரப்பட்டன. பல்வேறு வளர்வு நிலைகளில் மக்களால் தேர்வு செய்யப்படும் உறுப்பினர்கள் இயற்றுகின்ற சட்ட முன்வடிவுகள், திருத்தங்கள் போன்ற துருப்புச் சீட்டுகள் இன்றும் இந்திய தேசியத்தில் மக்களிடம்தான் இருக்கிறது.

குறிப்பிட்ட சில இனக் குழுக்களின் அல்லது மொழியினரின் ஆதிக்கம் அன்றைய காலகட்டங்களில் செயல்பட்டத்தின் விளைவாக இந்தி எதிர்ப்புப் போராட்டம், நிலப் பகிர்வு, நீர்ப்பகிர்வு மற்றும் மொழிசார்ந்த சிறு சலசலப்புகள் இந்திய தேசியத்திற்குள் நுழைய வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தின, அவற்றை எல்லாம் நாம் வரலாற்றை ஆழமாகப் படிக்கும் போது உலகின் பல்வேறு பகுதிகளிலும் இதே போன்ற சிக்கல்களைச் சந்திக்கலாம்.

இலங்கைத் தமிழர்களும், அரசியல் இயங்கியலும்

இலங்கையில் வாழுகின்ற தமிழர்கள் ஒரு தனியான பேரினமாக இன்றைய இலங்கையின் வடகிழக்கில் வாழ்ந்து வந்தார்கள் என்பதும், லெமூரியா என்கிற இன்றைய தாய்த்தமிழக நிலப்பரப்புடன் சேர்ந்து தமிழின வரலாற்றின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்திருக்கும் வாய்ப்புகளும் உள்ளதை புவி அமைப்பியல் வரலாறும் மறுக்கவில்லை, இந்நிலையில் தொடர்ந்து தாய்த்தமிழக மக்களுடனான உறவும் நீடித்தே வந்திருக்கிறது என்றாலும், தற்கால அரசியல் இயங்கியல் சூழல்களில் நாம் இலங்கைத் தமிழர்களை நிலப்பரப்பு சாராத இன உறவுகளாக, அதாவது வேற்றுநாட்டில் வாழும், ஒரே இனமாக அடையாளம் காணலாம், ஆனால், நேரடியான அரசியல் குறுக்கீடுகளை, அவர்களின் அரசியல் சார்ந்த செயல்பாடுகளில் நம்மால் செய்ய இயலாது என்பது ஒரு அடிப்படை அரசியல் உண்மை. (கவனத்தில் கொள்ளவும், நேரடியான அரசியல் குறுக்கீடு)

தாய்த் தமிழக மக்களின் உணர்வும், நிலையும்.

உணர்வுப்பூர்வமாக இலங்கைத் தமிழ் மக்களின் நிலை குறித்தும், அவர்களின் இன விடுதலைப் போராட்டத்தின் உயிர்ப்புள்ள வீரம் குறித்தும் பல்வேறு கலவையான மனநிலை எனக்குள் ஊற்று எடுத்தாலும், ஒரு மனிதனாக சகமனிதனின் வலியை ஆற்றுப்படுத்தும் பகிர்வே இது.

மண்டலப் பகுதியின் பெரிய நாடு என்கிற நிலையிலும், நீண்ட நெடிய வரலாற்றுப் பாரம்பரிய தொடர்பு உள்ள தேசியம் என்கிற நிலையிலும் நம்மால் இலங்கை அரசியல் இயங்கியலை ஓரளவு சீரமைக்கவும், மக்களின் வாழ்வியல் அடிப்படை உரிமைகளைக் காப்பாற்றவும் சில கொள்கை வகுப்பாக்கங்களை உறுதியாகச் செய்ய முடியும்.

இந்திய தேசியத்தின் நாற்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்பது ஒரு கணிசமான கொள்கை வகுப்பாளர் எண்ணிக்கை என்றே கொள்ளலாம், வெளிநாடு வாழுகின்ற தமிழர்களின் வாழ்வில், உரிமைகள் கேள்விக்குள்ளாகும் போதும், ஒருங்கிணைந்த குரலை நாடாளுமன்றங்களில் பதிவு செய்யும் போதும், கடுமையான கண்டனங்களை மக்கள் அரங்குகளில் எதிரொலிக்கும் போதும், ஒரு தேசத்தின் வெளியுறவுக் கொள்கைகளில் கூட மாற்றங்களை நம்மால் செய்ய முடியும் என்பதை அருகாமை அரசியல் நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகின்றன, எனவே நமது இன்றைய தேவை ஒற்றுமை, ஒற்றுமை, ஒற்றுமை ஒன்று மட்டுமே. அரசியல் வேறுபாடுகளும், தலைவர்களின் தனிப்பட்ட காழ்ப்புணர்வுகளும் தான் ஒரு வண்ணமயமான ஊடக உள்வாங்கலையும், ரசிப்புத் தன்மையையும் கொடுத்தாலும், இது போன்ற மனித உரிமை சார்ந்த சிக்கல்களில் ஒருமித்த செயல்பாடுகளை நிகழ்த்த வேண்டும் என்பதே தமிழ் அடையாளம் என்றில்லை மனித நேயம் கொண்டிருக்கும் மனிதனின் விருப்பாக இருக்க முடியும்.

உலக வரலாற்றில், இயற்கையும், அதன் தாக்கங்களும் மட்டுமே உயிர்களின் நிலைப்பாட்டை உறுதி செய்கிற ஒரேகாரணியாக இருக்கிறது, இலங்கை மட்டும், அதற்கு விதிவிலக்கு அல்ல. அருகாமை ஆழிப்பேரலையின் சீற்றத்தின் விளைவாய் இலங்கை அரசும், விடுதலைப்புலிகளும் ஒன்றாகச் சேர்ந்து பணியாற்ற வேண்டிய நிலையை இயற்கை உருவாக்கியது, அதற்கு சரியான எடுத்துக்காட்டு.

இவை எல்லாவற்றையும் விடப் பசியாலும், பிணியாலும், ஒடுக்குமுறைகளாலும், போர் வெறியின் விளைவாலும், வெங்கொடுமைச் சாக்காட்டில் வீழுகின்ற இனம் தமிழினமாக மட்டுமில்லை, சிங்கள இனமாக இருப்பினும், இதயத்தின் ஓரத்தில் இருந்து கசிகிற எம்தமிழ் மக்களின் ஈரத்தை மட்டும் யாராலும் குறை சொல்லி விட முடியாது.

"யாதும் ஊரே, யாவரும் கேளிர்" என்கிற நாகரீகத்தின் மேலான கவிதை வரிகளை உலக நாகரீகத்திற்கு வழங்கிய ஒரு பேரினத்தை எத்தனை பண்டாரநாயக்கர்களும், ஜெயவர்தனேக்களும், ராஜபக்ஷேக்களும் முயன்றாலும் அழித்து விட முடியாது,

"ஏனென்றால் நாங்கள் மனிதத்தை நேசிக்கும் மனிதநேய அடைமொழியின் ஊற்றுக் கண்கள்".

"கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்த குடியினர் என்பதை மறக்கவும் முடியாது, மறுக்கவும் முடியாது"

அப்படி மறுப்பீர்களானால், நீங்கள் முதலில் மனிதர்கள் இல்லை, பிறகு, உறுதியாக, அறுதியிட்டுச் சொல்ல, உரக்கக் கூவ என்னால் முடியும்....

நீங்கள் " தமிழர்கள் இல்லை".

- அறிவழகன் கைவல்யம்([email protected])


இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com