Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கட்டுரை

மோடியின் மோடிவித்தைக்கும் அத்வானியின் அரசியல் நடவடிக்கைக்கும் தற்போது ராமர் அவசியம் தேவை!
அக்னிப்புத்திரன்


தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும் மாபெரும் திட்டமான சேது சமுத்திரத் திட்டத்தைக் குறுகியகால அரசியல் இலாபத்திற்காக முடக்கிப்போட நினைக்கிறார்கள். இத்திட்டத்தின்படி தமிழகத்தின் தென்பகுதியில் வங்கக் கடலுக்கும் அரபிக் கடலுக்கும் இடையே கடலுக்குள் மாபெரும் கால்வாய் உருவாக்கப்படும். தமிழகத்துக்கும் இலங்கைக்கும் இடையிலான கடல் பகுதியில் ஆழம் குறைவு என்பதால் பெரிய கொள்கலன்களைச் சுமந்து செல்லும் கப்பல்கள் இவ்வழியே செல்ல முடிவதில்லை. இலங்கையைச் சுற்றித்தான் செல்லவேண்டும்.

இப்போது உருவாக்கப்படும் இந்தக் கடல் கால்வாய்க் காரணமாக, கப்பல்கள் இலங்கையைச் சுற்றிக் கொண்டு செல்வது தவிர்க்கப்படும். சூயஸ் கால்வாய், பானாமா கால்வாய் போல இந்தக் கால்வாயும் பலவிதமான நேரடி, மறைமுக பலன்களை நாட்டுக்கு வழங்கும். தென் மாவட்டங்களில் வேலைவாய்ப்பைப் பெருக்கும். கடல் வாணிபம் தழைத்தோங்கும். குறிப்பாகத் தூத்துக்குடி துறைமுகத்தில் சரக்குகள் கையாளும் திறன் அதிகரிக்கப்படும். பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

அரசியல் ஆதாயத்திற்காக தமிழர்களின் இந்த வளர்ச்சித் திட்டத்தை முடக்கிவிட முயல்கின்றன சில மதவாத அரசியல் சக்திகள்! தங்களின் குறுகிய அரசியல் இலாபத்திற்காகத் தமிழர்களின் 150 ஆண்டுகால கனவுத்திட்டத்தைத் சீர்குலைத்து, தமிழர்களின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை போடத் துடியாய்த் துடிக்கிறார்கள் பொதுநலத்தை மறந்த ஒருசில சுயநலவாதிகள். கற்பனையில் கூட எண்ண இயலாத கட்டுக்கதைகளை வண்டி வண்டியாய் வாரிக்கொட்டி வாய்ஜலாம் காட்டி வசைமாரி பொழிகின்றனர்.

எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்கள் இந்த நாட்டிலே... சொந்த நாட்டிலே என்ற பட்டுக்கோட்டையின் பாடல் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது.

முன்பு வடக்கே உத்தரப்பிரதேசத்தில் பாபர் மசூதி பிரச்சினையை முன்னிறுத்தி ஆட்சியைப் பிடித்தவர்கள் இப்போது தெற்கே சேது சமுத்திரத்திட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு ஆட்சிக்கனவு காண ஆரம்பித்திருக்கிறார்கள். அறிக்கைகள், ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் என்று வரிசை வரிசையாக வலம் வருகின்றன. அத்வானி முதல் அடிமட்ட(மான) சாமியர்கள் வரை பல்வேறு கோஷங்களை நீட்டி முழக்கி ஆரவார அரசியலில் ஈடுபட்டு வருகிறார்கள். தேர்தல் வரும்போது எல்லாம் பாவம் இராமர் இவர்களின் கைகளில் சிக்கிப் படாதபாடுபடுகிறார். ஆட்சி அதிகாரம் கைகளில் கிடைத்துவிட்டால் போதும் ஒரு ஐந்து வருடங்களுக்குப் பாபருக்கும் விடுமுறை! இராமருக்கும் விடுதலை! சேது, பரமசாதுவாக மாறி பெட்டிக்குள் பதுங்கிவிடும். அண்மைக் காலங்களில் நாடாளுமன்றத்துக்கு விரைவில் தேர்தல் வரும் என்ற அரசியல் ஆருடம் வலம் வருவது குறிப்பிடத்தக்கது.

நீதிமன்றம் வழியாகவும் மற்றும் பல்வேறு வகையில் தொடர்ந்து இத்திட்டத்திற்கு இடையூறு விளைவித்த மதவாதிகளின் செயலால் மனம் வருந்திய தமிழக முதல்வர் கலைஞர், ஆண்டாண்டுக் காலமாக இதுபோலவே தமிழர்களை வாழவும் வளரவும் விட மறுக்கிறார்களே என்ற ஆதங்கத்தில் ஒருசில கருத்துகளை எடுத்துக்கூறினார். உடனே ஆகாயத்திற்கும் பூமிக்கும் தாவிக்குதித்து அனுமன் அவதாரம் எடுத்துவிட்டனர் இந்த அறிவு ஜீவிகள். அறிவியலுக்குச் சற்றும் ஒவ்வாத கருத்துகளை அள்ளிவிட்டு அமளியில் ஈடுபடுகிறார்கள். சும்மா இருந்தவன் கையில் சொறிச்சிரங்கு பிடித்தது போல “வறட் வறட்” என்று சொரிய ஆரம்பித்துவிட்டனர். கலைஞரின் மகள் வீட்டில் வெடிகுண்டு வீச்சு, பேருந்து எரிப்பு என்று வன்முறை அரசியலை கையில் எடுத்துக்கொண்டு ஆர்ப்பரிக்கின்றனர்.

எல்லாவற்றுக்கும் மேலாக மூத்த திராவிட இயக்கத் தலைவர் கலைஞரின் தலைக்கே விலை வைக்குமளவிற்கு மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு ஆண்டிப்பண்டாரம் உளறலின் உச்சத்திற்கே சென்று இருக்கிறான். அந்தப்பண்டார பரதேசிக்கு எப்படிப்பட்ட வாய்க்கொழுப்பு? எதைப் பேசுகிறோம் என்ற உணர்வே இல்லாத அந்தப் போதைக்கிறுக்கன் ஒரு முன்னாள் பா.ஜ.க நாடாளுமன்ற உறுப்பினன். திராவிட இயக்கத்தை வம்புச்சண்டைக்கு இழுத்து நாட்டையே அமளிக்காடாக ஆக்க முயலுவதுதான் இந்த வஞ்சகர்களின் நெஞ்சம் நிறைந்த திட்டம்.

ஆட்சியைப் பிடிக்க வேண்டுமென்றால் மக்களிடையே மத உணர்வைத் தூண்டிவிட்டு அதில் அரசியல் ஆதாயம் தேட வேண்டிய கட்டாயத்தில் தற்போது பா.ஜ.கவின் நிலை உள்ளது. அண்மையில் எடுக்கப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பில் தற்போது நாடாளுமன்றத்தேர்தல் நடந்தால், இப்போது இருக்கும் எம்.பிகள் அளவில் பாதிக்கூட பா.ஜ.கவினரின் எண்ணிக்கையில் தேறாது எனத் தெளிவாகத் தெரிய வந்துள்ளது. பா.ஜ.கவில் தற்போது இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களைவிட குறைவானவர்களே வெற்றிபெற வாய்ப்புள்ளது என்று பல்வேறு கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. மேலும் குஜராத் மாநில தேர்தலில் மோடியின் மோடிவித்தைக்கும், ராமர் அவசியம் தேவைப்படுகிறார். மதவாத அரசியல் நடத்தி நாட்டைப் பிடிக்கலாம் என்ற எண்ணத்தில் இருப்பவர்களுக்கு வேறு எந்த ஒரு காரணமும் கிடைக்காத காரணத்தால் கற்பனைப்பாலத்தைப் பலமாகப் பிடித்துக்கொண்டு தொங்குகிறார்கள்.

இதற்கிடையே தமிழக அரசியலில் தமது அடையாளத்திற்காக அம்மையாரின் கட்சி அல்லாடி வருகின்றது. நான் தேய்ந்து கரைந்துகொண்டே போகின்றேன் மம்மி... என்ற நிலையில் அதிமுக அவலத்தில் சிக்கித் தவிக்கிறது. அதிமுகவை நடிகர் விஜயகாந்த் ‘ஓவர் டேக்’ பண்ணிவிடுவார் போல் உள்ளது. அதனால், உப்புச்சப்பில்லாத அரசியல் நடவடிக்கையில் அதாவது குப்பையை அகற்றவில்லை என்றும், சாக்கடை ஏன் நாற்றமடிக்கிறது என்றும் ஏதேதோ குப்பைப்போராட்டத்தை நடத்தி வருகின்ற அதிமுவினருக்கு அல்வா கிடைத்தது போல இராமர் பால விவகாரம் கிடைத்துள்ளது. அவர்களும் எட்டு மாநிலத்தில்(?) கலைஞருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருக்கிறார்கள். இதன் வழியாக மதவாத பா.ஜ.கவினருடன் கைகோர்க்க அதிமுக தயாராகிவிட்டது. கொள்கைக்குன்று சேது சமுத்திர வீரர் வை.கோபலசாமியின் நிலைதான் பரிதாபம்! இப்பிரச்சினையில் புரட்சிப்புயல் சுழன்று அடிக்குமா அல்லது வழக்கம்போல வாலைச் சுருட்டிக்கொள்ளுமா என்பது தேர்தல் வரைக்கும் யாருக்குமே தெரிவதற்கு வாய்ப்பில்லை.

தென் மாவட்டத்தின் வளர்ச்சிக்கும் அம்மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்வதற்கும் வராது வந்த மாமணியாய் 150 ஆண்டுகள் கனவுத்திட்டமான சேது சமுத்திரத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கு ஒருமித்த குரல் கொடுக்க இவர்களுக்கு மனமில்லை. இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் திமுகவிற்கு நல்ல பெயர் கிடைத்துவிடுமே என்ற நினைப்பில் தமிழர்களின் நலனுக்கு எதிராக இத்திட்டத்தை முடக்கிப்போடும் முயற்சிகளில் அதிமுகவின் அண்மைய கால நடவடிக்கைகள் அமைந்துள்ளன.

நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் இந்தத் திட்டத்தின் பாதைக்கு பா.ஜ.க. ஆட்சியிலேயேதான் ஒப்புதலே அளிக்கப்பட்டது. ஆனால், தற்போது தேர்தலில் வெற்றி பெறவேண்டும் என்ற குறுகிய நோக்கத்திற்காக இந்தப் பிரச்னையை பா.ஜ.க. உள்ளிட்ட மதவாதக்கட்சிகள் பெரிதுபடுத்துகின்றன. இதன் மூலம் நாட்டில் மதக் கலவரத்தைத் தூண்டவும் பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் முயற்சிக்கின்றன.

கலைஞர் அவர்களும் இராமர் பாலம் என்று கூறப்படும் மணற்திட்டை அகற்றியோ அகற்றாமலோ அல்லது மாற்று வழியிலோ எந்த ஒரு வகையிலாவது இத்திட்டத்தை நிறைவேற்றட்டும். அதில் எங்களுக்கு எந்த ஒரு சங்கடமும் இல்லை என்று அறிவித்திருக்கிறார். எங்களுக்குத் இத்திட்டம் நிறைவேற வேண்டும் அவ்வளவுதான், இத்திட்டம் நிறைவுபெற்றால் பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவே முன்னேறுவதற்கு மிகவும் பேருதவியாக அமையும் என்றும் அறிவித்திருக்கிறார். ஒரு பக்கம் நாட்டு நலன், மக்கள் நலன் முன்னிறுத்தப்படுகிறது. மற்றொரு பக்கமோ மதவெறியைத் தூண்டிவிட்டு ஆட்சிக்கட்டிலில் அமரத்துடிக்கும் சுயநலவாதிகளின் கூட்டம், கூடி நின்று கும்மாளம் அடிக்கின்றது.

தமிழர்களின் வளர்ச்சிக்கு வேட்டு வைக்கும் வகையில் செயல்படும் நயவஞ்சக செயல்களுக்கு தமிழகம் மீண்டும் சரியான பாடம் கற்பிக்க வேண்டும். நாட்டு நலனில் அக்கறையுள்ள தலைவர்கள் கருத்து வேறுபாடுகள், மனமாச்சரியங்களையெல்லாம் அறவே மறந்துவிட்டு மதவாதத்திற்கு எதிராக ஒரே அணியில் திரள வேண்டும். மொழியால் இனத்தால் ஒரே குடும்பமாக வாழும் இங்கே மதவாத அரசியல்வாதிகளின் குள்ளநரித்தனம் எடுபடாது என்று உலகுக்கு உரக்க உரைக்க வேண்டும்.

தமிழர்களே... அருமையான தமிழர்களே சற்றுச் சிந்தியுங்கள்! மொழியால் இனத்தால் ஒன்றுபட்டு நாட்டு நலனுக்கு விரோதமான மதவாதச்சக்திகளை விரட்டி அடியுங்கள். இது அறிவுலக மேதை அய்யா பெரியார் பிறந்த பூமி என்பதைத் தரணிக்கு தட்டிச்சொல்லுங்கள். சூழ்ச்சிக்குப் பலியாகி விடாமல் எழுச்சியுடன் எழுந்து நில்லுங்கள்! எப்போது தேர்தல் வந்தாலும் சரி மதவாதச்சக்திகளுக்கு இங்கு இடமில்லை என்பதைச் செயலில் காட்டுவதற்குச் சற்றும் தயங்காதீர்கள். அப்போதுதான் தமிழகத்திற்கு வளர்ச்சியும் நம் நாட்டிற்கு நன்மையும் ஏற்படும்.

- அக்னிப்புத்திரன் ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com