அண்ணா நூற்றாண்டு
வெற்றியின் வேர்களும் - விடை தேடும் கேள்விகளும்
சு.பொ.அகத்தியலிங்கம்
காஞ்சிபுரத்தில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த சி.என். அண்ணாதுரை, தமிழகமே வியந்து போற்றுகின்ற தலைவர் அண்ணாவாக வளர்ந்ததும்; ஒரு அரசியல் கட்சியைத் துவக்கி பதினெட்டே ஆண்டுகளில் ஆட்சியைப் பிடித்ததும், வரலாற்றில் அடிக்கோடிட்டுக் காட்ட வேண்டிய முக்கிய நிகழ்வுகளே.
அண்ணா நூற்றாண்டு விழா கொண்டாடுகின்ற இந்த நேரத்தில் கடந்தகால வரலாற்றை அசைபோடுவது தேவையானது. அவர் மிகச்சிறந்த பேச்சாளர், எழுத்தாளர் என்பது மட்டுமல்ல, மக்களின் நாடித் துடிப்புகளையும், நாட்டின் நடப்புகளையும் மிகச் சரியாக கணித்து சரியான நேரத்தில் சரியான கோஷங்களை முன்வைத்து வெற்றிப் பாதையில் தமது இயக்கத்தை பயணிக்கச் செய்த தலைவருமாவார்.
அவர் பிறந்த நேரம் இந்தியா அடிமைப்பட்டிருந்த காலம். விடுதலைப் போராட்டம் வீறுடன் கிளர்ந்தெழுந்த காலம். அவர் வாலிப வயதை அடைகிற போது, தமிழகத்தில் பெரியாரின் சுயமரியாதை இயக்கம் முளைவிடத் துவங்கியது. அண்ணாவின் முதல் சிறுகதை ஆனந்த விகடனில் வெளியாகியிருந்தது. அண்ணாவை பெரியாரின் சுயமரியாதை கருத்துக்கள் சிக்கென கவ்விப்பிடித்துக் கொண்டது. இது குறித்து அவரே எழுதுகிறார்:
"எனக்கு பெரியாரோடு தொடர்பு ஏற்பட்டது 1934ம் ஆண்டில்தான். அப்போது நான் பி.ஏ. (ஆனர்ஸ்) தேர்வு எழுதியிருந்தேன். தேர்வு முடிவு தெரியாத நேரம் அது. அப்போது கோவைக்கு அடுத்த திருப்பூரில் ஒரு வாலிபர் மாநாடு நடந்தது. அங்கேதான் பெரியாரும் நானும் முதன் முதலில் சந்தித்துக் கொண்டோம். அவர் மீது எனக்கு பற்றும் பாசமும் ஏற்பட்டன. அவருடைய சீர்திருத்தக் கருத்துக்கள் எனக்கு மிகவும் பிடித்தன. பெரியார் என்னைப் பார்த்து `என்ன செய்கிறாய்’ என்று கேட்டார் `படிக்கிறேன்' என்றேன். `உத்யோகம் பார்க்கப் போகிறாயா?' என்றார். `இல்லை', உத்யோகம் பார்க்க விருப்பம் இல்லை. பொது வாழ்வில் ஈடுபட விருப்பம் என்று பதிலளித்தேன். அன்று முதல் அவர் என் தலைவரானார். நான் அவருக்கு சுவீகாரபுத்திரனாக ஆகிவிட்டேன்"
இப்படி பெரியாரை தந்தையாக சுவீகரித்துக் கொண்ட அண்ணா, பின்னர் அவரோடு முரண்பட்டதும், தனிக் கட்சி தொடங்கியதும் ஏன்? அண்ணா, பெரியாரோடு பழக ஆரம்பித்த பிறகு, நீதிக் கட்சி திராவிடர் கழகமானது; அண்ணா சேனைத்தளபதி ஆனார். பெரியார் விரும்புகிற மாதிரி இவருடைய பேச்சும் எழுத்தும் அமைந்தன. அண்ணாவின் புதிய பேச்சு பாணியும் எழுத்து பாணியும் ஒரு பெரிய இளைஞர் பட்டாளத்தை சுண்டி இழுத்தது.
சிந்தனைச் சிற்பி சிங்கார வேலர் இதைப்பற்றி கூறுகிறபோது, "அரசியல் துறையில் நுழையும்காலை இவர்களை (சுயமரியாதை இயக்க தலைவர்களை) வெல்வார் யார்? சொற்பொழிவாற்றும் திறமை உங்கள் இயக்கத்தில் தோன்றியுள்ளதுபோல் வேறு எந்த இயக்கத்திலும் காண்பதரிது. உங்கள் இயக்கத்திற்கு ஒரு மகத்தான வருங்காலம் இருக்கிறது," என்று கணித்தது உயர்வு நவிற்சி அல்ல என்பதை வரலாறு நிரூபித்தது.
பெரியாரின் சீடராக இருந்தாலும் அவரது பல முடிவுகளோடு அண்ணாவால் உடன்பட முடியவில்லை. குறிப்பாக 1947 ஆகஸ்ட் 15 சுதந்திரதினத்தை பெரியார் துக்க தினம் என்று அறிவித்தபோது, அண்ணா அதை இன்ப தினம் என்று அறிவித்தார். அதேபோல பெரியார் எல்லோரையும் கட்டாயமாக கருப்புச் சட்டை போடச் சொன்னபோது, அதனை ஏற்க மறுத்தார். பெரியார் திராவிடர் கழகம் அரசியலில் ஈடுபடக் கூடாது என்று கருதியபோது, மாறாக அரசியலில் ஈடுபட வேண்டும், ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்கிற கருத்து அண்ணாவிடம் மேலோங்கியது.
பெரியார் பாணியிலான நாத்திகப் பிரச்சாரத்தில் அண்ணா மாறுபட்டார். ஆரம்பத்தில் `சந்திரோதயம்' `சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்' போன்ற நாடகங்களில் தூக்கலாக இருந்த பார்ப்பன எதிர்ப்பு அடுத்து வந்த `ஓர் இரவு' `வேலைக்காரி', நல்லதம்பி நாடகங்களில் முன்னிலைப்படுத்தப்படவில்லை. ஒருமுறை அண்ணா குறிப்பிட்டார். `பிள்ளையாரை உடைக்கும் போதே நாம் நம்மோடு நாளா வட்டத்தில் வந்து சேர வேண்டியவர்களை வீணாக வெறுப்படையச் செய்து விடும் என்றதனால்தான் ஒதுங்கியிருந்தோம்,' என நாத்திகப் பிரச்சாரத்திலும் வேகத்தைக் குறைத்தார்.
பெரியாரோடு கருத்து மோதல்கள் வலுப்பெற்றது ஒரு புறம். மறுபுறம் இந்தியா விடுதலையடைந்து எல்லோருக்கும் வாக்குரிமை கிடைத்து அரசியல் அரங்கில் வாய்ப்புகள் விரிந்தன. அவற்றைப் பயன்படுத்த அண்ணா விளைந்தார். அந்த விருப்பத்திற்குத் துணை செய்கிற மாதிரி பெரியாரின் திருமணம் அமைந்தது. அந்த சந்தர்ப்பத்தை முழுமையாக பயன்படுத்திக் கொண்டு வெளியேறி புதிய கட்சி கண்டார். "திராவிடர் கழகம் ஒழிந்தால் ஒழிய இவர்கள் தேர்தலில் நிற்க முடியாது. இவர்கள் சொந்த வாழ்வு மரியாதையாய் நடைபெறாது. இதற்காகத்தான் இவ்வளவுப் பெரிய `புண்ணியகாரியம்' செய்கிறார்கள்," என்று பெரியார் இது பற்றி `விடுதலை'-யில் எழுதியது சரிதான் என்பதை வரலாறும் மெய்ப்பித்துவிட்டது.
திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்தாலும் தன் கட்சிக்கு இன வழியில் திராவிடர் முன்னேற்ற கழகம் என்று வைக்காமல் நில வழியாக திராவிட முன்னேற்ற கழகம் என்று அண்ணா பெயர் சூடடியது மிகுந்த நுட்பமானது. "திராவிடர் முன்னேற்ற கழகம் என்று கூறும்போது, அது திராவிடர்கள் மட்டுமே அங்கம் பெறலாம் என்று அரண் எழுப்புவதாக அமைந்து விடுகிறது. இப்போதுள்ள உலகச் சூழ்நிலைக்கு காலப்போக்குக்கு இது உகந்ததாக எனக்குப் படவில்லை," எனத் துவங்கி "இங்கே திராவிடமும் வாழலாம், ஆரியமும் வாழலாம்," என விளக்கம் சொன்னார்.
"கடவுள் இல்லை" என்கிற பெரியாரின் கொள்கையை அப்படியே முன்னெடுத்துச் செல்லாமல் மக்களின் மன உணர்வுகளை உள்வாங்கி "ஒன்றே குலம் ஒருவனே தேவன்," என திருமூலரின் வாக்கியத்தை முழக்கமாக்கினார். கட்சியின் துவக்கத்தில் திராவிட நாடு கோரிக்கைக்காக மிக உறுதியாக குரல் கொடுத்த போதும், அது பயனற்றது. மொழி வழி மாநிலங்கள்தான் சாத்தியமானது என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்தார் அண்ணா. எனவேதான் தக்க நேரம், எதிர்பார்த்திருந்தார். இந்திய - சீன எல்லைச் சண்டையின்போது பிரிவினை கட்சிக்கு தடைவிதிக்கும் சட்டம் வருவது அறிந்து தேசிய ஒருமைப்பாட்டை முன்னிறுத்தி திராவிட நாடு கோரிக்கையை கை விட்டார். அதன் பிறகு அதைத் தொடவே இல்லை.
`சோறா, மானமா' என்ற காரசாரமான பட்டிமன்றங்கள் நடத்தியபோதும்; மெல்ல மெல்ல மக்கள் உணர்வை உணர்ந்து அன்று இந்தியாவை - தமிழகத்தை உலுக்கிய அரிசிப் பஞ்சத்தை சாதுரியமாக கையில் எடுத்தார். ஏற்கெனவே இந்தித் திணிப்பிற்கு எதிராக ஆவேசமாக தெருவுக்கு வந்த இளைஞர் படையின் இதயங்களை கொள்ளை கொண்ட அண்ணா, அரிசிப் பிரச்சனை மூலம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் தன் வசமாக்கினார்.
கட்சி துவங்கியபோது தேர்தலில் நிற்கமாட்டோம் என்று அறிவித்தவர், அடுத்து சில வருடங்களிலேயே பொதுக்குழுவின் ஒப்புதலோடு தேர்தல் களத்தில் குதித்தார். தொழிலாளி வர்க்க, விவசாயிகள் வர்க்க போராட்டங்கள், ஜனநாயக உரிமைக்கான போராட்டங்கள் இவற்றை ஆதரித்தார். தான்தான் தமிழகத்தின் உண்மையான கம்யூனிஸ்ட் என்று கூட கூறினார்.
இந்தியா முழுவதும் காங்கிரசுக்கு எதிரான அலையடித்தது. மேற்கு வங்கத்தின் வரலாற்றை எடுத்துப் பார்த்தாலும், அரிசிக்காகவும், காவல்துறை அடக்குமுறைக்கு எதிராகவும், உழைக்கும் வர்க்க நலன்களுக்காகவும் அங்கு கம்யூனிஸ்ட்டுகளும், ஜோதிபாசுவும் தொடர்ச்சியாக நடத்திய போராட்டத்தின் தொடர் விளைவுதான் அங்கே கம்யூனிஸ்ட் ஆட்சி. அதுவும் சரியான ஐக்கிய முன்னணி தந்திரத்தைப் பிரயோகித்ததால் கிடைத்த வெற்றி. பல மாநிலங்களிலும் காங்கிரசுக்கு எதிரான ஆவேசம் இருந்தாலும் எட்டு மாநிலங்களில் மட்டுமே 1967ல் காங்கிரஸ் தோற்கடிக்கப்பட்டது. எங்கெல்லாம் சரியான ஐக்கிய முன்னணி உருவாக்கப்பட்டதோ அங்கெல்லாம் அது சாத்தியமானது. இங்கே தமிழகத்தில் அதனை அண்ணா மிக நுட்பமாக செய்து வெற்றி பெற்றார், ஆட்சியைக் கைப்பற்றினார்.
`கத்தியைத் தீட்டாதே புத்தியை தீட்டு', `மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு மனம் உண்டு' என்றெல்லாம் ஒரு ஜனநாயகத் தன்மையை பேச்சிலும், எழுத்திலும், செயலிலும் கொண்டு வந்தார். அண்ணாவின் வெற்றிக்கு பின்னால் தமிழர்களின் பண்பாடு, சுயமரியாதை இவற்றிற்காக நடந்த நெடிய போராட்டத்தின் தொடர்ச்சி உண்டு. மொழிக்காக நடந்த உரிமைப் போர் உண்டு. "வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது," என்ற மாநில வளர்ச்சியின் (பலன் முதலாளிகளுக்கே என்றாலும்) முழக்கம் உண்டு. சமூக நீதிக்கான இடைவிடாத போராட்டமும், இயக்கமும் அவருடைய வெற்றியின் வேர்களில் உண்டு. சமூக சீர்திருத்த கருத்துப் பிரச்சாரமும், சுயமரியாதை பிரச்சாரமும் ஒரு புதிய ஆவேசத்தை நம்பிக்கையை இளைஞர்களிடையே விதைத்திருந்தது. அதன் வளமான மண்ணில்தான் அண்ணாவின் வெற்றிப் பயிர் வளர்ந்தது.
இப்படி தமிழகத்தின் நாடித்துடிப்புகளையும், இந்தியாவின் அரசியல் நிலவரங்களையும் உன்னிப்பாக கூர்ந்து கவனித்து அதற்கேற்ப சரியான முழக்கங்களையும் உத்திகளையும் முன் வைத்து அண்ணா வெற்றி பெற்றார். சென்னை ராஜதானி என்ற பெயரை தமிழ்நாடு என மாற்ற வேண்டும் என விருதுநகர் சங்கரலிங்கனார் உண்ணா நோன்பிருந்து உயிர்த் தியாகம் செய்தார். அண்ணா முதல்வரான பிறகு சென்னை ராஜதானி என்ற பெயரை தமிழ்நாடு என மாற்றி உத்தரவிட்டார்.
திராவிட இயக்கத்தின் நீண்ட நாள் கோரிக்கையான சுயமரியாதை திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அந்தஸ்து என்பதும் அண்ணா முதல்வரான பிறகே நிறைவேறியது. ஆட்சிப் பொறுப்பேற்றதும் அவர் கையெழுத்திட்ட முதல் அரசாணையும் இதுதான். முதல்வரான பிறகு மாநிலங்களின் உரிமைக்குப் போராடுவதே முக்கியம் என்பதை தன் கடைசிக் கடிதத்தில் குறிப்பிட்டார். குறுகிய காலமே முதலமைச்சராக இருந்தார் என்றாலும் மக்கள் மனதில் இடம்பிடித்தார். வெண்மணி அவர் ஆட்சியில் நடந்த கொடூரம். அதற்காக அவர் வருந்தினார்.
அவருடைய மறைவுக்குப் பிறகு கழகம் உடைந்தது. அதிமுக உருவானது. பின்னர் மதிமுக உருவானது. எல்லோரும் அண்ணாவைப் புகழ்கின்றனர். ஆனால் அண்ணா உயர்த்திப் பிடித்த சுயமரியாதை எங்கே? சமூக சீர்திருத்தக் கருத்துகள் எங்கே? இந்துத்துவ ஆதிக்க எதிர்ப்பு எங்கே? சாதிய எதிர்ப்பு எங்கே? தாய் மொழி உரிமை எங்கே? மாநில உரிமைக்கான போராட்டம் எங்கே? ஜனநாயக உரிமைக்கான போராட்டம் எங்கே? அண்ணாவால் தமிழகத்திலிருந்து துரத்தப்பட்ட காங்கிரசை மீண்டும் மீண்டும் மாறிமாறி அரவணைப்பது ஏன்?
அண்ணா விட்ட இடத்திலிருந்து அதை விட உயர்ந்த செழுமையான தடத்துக்கு தமிழக அரசியலை, தமிழ் சமூகத்தை அவர்கள் தம்பிமார்கள் கொண்டு போனார்களா? தவற விட்டார்களா? தவறு நடந்தது எங்கே? யோசிக்க இந்த நூற்றாண்டுத் தொடக்கம் பயன்படட்டும்.
- சு.பொ.அகத்தியலிங்கம் ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|